3ஜி – தொலைதொடர்பில் இன்னொரு மைல்கல்

அதோ! இதோ! என்று இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருந்த 3ஜி மொபைல் சேவை ஏலம் முடிந்துவிட்டது. 34 நாட்களில் 183 சுற்றுகளில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. அரசுக்கு ஏலத்தொகையாக, எதிர்பார்த்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காக, ரூ.67,710 கோடி கிடைக்க உள்ளது.
அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்செல் தலா 13 மண்டலங்களுக்கு உரிமை பெற்றுள்ளன. அடுத்தபடியாக ஐடியா 11, டாட்டா மற்றும் வோடபோன் தலா 9 மண்டலங்களிலும், எஸ் டெல் 3 மண்டலங்களிலும் இயங்க உரிமை பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் இயங்க எந்த ஒரு நிறுவனமும் ஏலம் எடுக்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் பார்தி ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இந்த உரிமையைப் பெற்றுள்ளன. உரிமை பெற்றவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வரும் செப்டம்பரில் ஒதுக்கப்பட்டு, இந்த ஆண்டு தீபாவளிப் பரிசாக மக்களுக்கு 3ஜி பயன்பாடு கிடைக்கலாம்.
ஏற்கனவே பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள், 2008 ஆம் ஆண்டு முதல் 3ஜி சேவையினை வழங்கி வருகின்றன.
ஒவ்வொரு மண்டலத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டர்கள் இயங்கப் போவதால், இந்த மொபைல் சேவைப் பிரிவிலும், வாடிக்கையாளர் களே ராஜாவாக இருக்கப் போகின்றனர்.
அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் 3ஜி சேவை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவெங்கும் பரவும். முதலில் மும்பை மற்றும் டில்லி போன்ற வர்த்தக மெட்ரோ நகரங்களில் இது நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெற்று இயங்கும். அந்த நேரத்தில் மற்ற நகரங்களில் இந்த சேவை வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற வசதிகளுடன் கிடைக்கும்.
பின்னர் போகப் போக மல்ட்டிமீடியா சங்கதிகளான, ஆடியோ, வீடியோ, சினிமா, மொபைல் வழி பிராட்பேண்ட், டிஜிட்டல் கல்வி, மருத்துவம், வேளாண்மை என அனைத்து பிரிவுகளிலும் இந்த சேவை மக்களுக்குப் பயன்படும் விதத்திலும், பொழுது போக்கும் வகையிலும் கிடைக்க இருக்கும்

%d bloggers like this: