செய்தி துணுக்குகள் 6.6.2010

தாமரை வடிவில் கேரளாவில் கோவில்!
கேரளாவில், தலைநகர் திருவனந்தபுரம் அருகே தாமரை பூ வடிவில் பிரமாண்ட கோவில் ஒன்று தயாராகி வருகிறது.
திருவனந்தபுரம் நகருக்கு வெளியே சாந்திகிரி என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தை உருவாக்கியவர் கருணாகர குரு. 1999ல் இவர் மரணமடைந்தார். ஆசிரமத்தில் தியானம் செய்த இடத்திலேயே, அவர் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தின் மேல், இந்த தாமரை வடிவ கோவில் தயாராகி வருகிறது.
மொத்தம் 91 அடி உயரம் கொண்ட இந்த தாமரை கோவில், வரும் செப்டம்பர் மாதம் தயாராகி விடும். அதே மாதத்தில் 12ம் தேதி கருணாகர குருவின் பிறந்த நாள். அன்று முதல் இந்த கோவில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படும்.
ராஜஸ்தானில் இருந்து, கொண்டு வரப்பட்ட வெள்ளை நிற மார்பிள் கற்கள் மூலம், 21 தாமரை இதழ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 12 இதழ்கள் மேல் நோக்கியும், ஒன்பது இதழ்கள் கீழ் நோக்கியும் உள்ளன. மார்பிள் தாமரையை தாங்கி நிற்கும் தூண் களுக்கான கிரானைட் கற்கள், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த கோவில் அமைக்க 30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி மற்ற வசதிகளை ஏற்படுத்த மேலும் 20 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
* * *
ஒநாய் மனிதன்!
மனிதர்களுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முடி வளர்ந்தால் எப்படி இருக்கும்? கரடி போல இருப்பரா அல்லது ஓநாய் போல இருப்பரா? ஓநாய் போல் தான் தோற்றம் அளிப்பர் என்கின்றனர் டாக்டர்கள்.
படத்தில் காணப்படும் இந்த நபரைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஓநாய் மனிதன் என்றே கிண்டல் செய்கின்றனர். இவர், நம் நாட்டைச் சேர்ந்தவர்தான். இவரது பெயர் பிருத்விராஜ் பட்டீல். வயது 20 தான் ஆகிறது. மும்பை நகரில் வசிக்கிறார். இவர் முகம் முழுவதும் முடி வளர்ந்து விட்டது. தினமும் இரண்டு முறை ஷேவ் செய்யா விட்டால், ஓநாய் முகம் போல் மாறி விடும். இது ஒரு வினோத நோய் என்கின்றனர் டாக்டர்கள். உலகம் முழுவதிலும் இவரைப் போல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 50 பேர் உள்ளனர்.
இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும்; ஆனால், அதற்கு அதிக செலவாகும். வலி கடுமையாக இருக்கும். லேசர் மூலம் சிகிச்சை அளித்து முடி வளர்வதை டாக்டர்கள் தடுப்பர். இப்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக டாக்டர்கள், புது ஊசி மருந்தை கண்டுபிடித்துள்ளனர். வழுக்கையை ஏற்படுத்தும் அந்த ஊசியை, இவரைப் போல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தினால், உடலில் முடி வளர்வது தடுக்கப்படும் என்கின்றனர்.
* * *
அதிசய குதிரை; எடை வெறும் 3 கிலோ!
மூன்று கிலோ எடை கூட இல்லாத மிகவும் குட்டியான குதிரை ஒன்று பிறந்துள்ளது.
மெரிக்காவில் நியூஹாம்ஷயர் நகருக்கு அருகே உள்ள பர்ன்ஸ்டட் என்ற ஊரில், ஒரு பண்ணையில் குதிரை ஒன்று சமீபத்தில் குட்டியை ஈன்றது. அந்த குட்டி, பிறக்கும் போது வெறும் ஆறு பவுண்ட் (2 கிலோ 700 கிராம்) தான் எடை இருந்தது. அதன் உயரம் வெறும்
14 அங்குலம் தான். பிறந்த குழந்தை போல் தோற்றம் அளித்த இந்த குதிரை, “பொம்மை குதிரை’ போல இருக்கிறது. இந்த குதிரைக்கு, “ஐன்ஸ்டீன்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில், “தம்பிலினா’ என்ற குதிரை, மிகக்குட்டி குதிரை என இடம் பெற்றுள்ளது. அந்த குதிரையின் எடை, மூன்று கிலோ 900 கிராம். “மனிதர்களில் குள்ளர்கள் பிறப்பதைப் போல், தம்பிலினா குதிரை குள்ளமாக பிறந்துள்ளது. ஆனால், ஐன்ஸ்டீன் குதிரையோ அப்படிப்பட்டதல்ல; அது குட்டி குதிரை…’ என்கின்றனர் குதிரை பண்ணையாளர்கள்; எது உண்மையோ…
“விரைவில் ஐன்ஸ்டீன் குதிரையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வைப்பேன்!’ என்கிறார் இந்த குதிரையின் உரிமையாளர் டாக்டர் ரசேல் வேக்னர்.

* * *
திருமண வரவேற்பில் வசூல்!
பணம் பண்ணுவதில் குறியாக இருப்பவர்கள் கிரிக்கெட் வீரர்கள். விளையாட்டு போட்டியின் போது அணிந்து இருக்கும் சர்ட், ஷூ, தொப்பி முதல் எல்லாவற்றிற்கும் விளம்பரதாரர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து விடுவர். இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் ÷ஷாயப் மாலிக்; இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர். சமீபத்தில், ஐதராபாத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமண வரவேற்பு லாகூர் நகரில் நடந்தது. அந்த வரவேற்பு நிகழ்ச்சிகளை தனியார், “டிவி’க்கள் ஒளிபரப்ப வேண்டும் என்றால், தனக்கு 3.5 கோடி ரூபாய் கட்டணம் தர வேண்டும் என, நிபந்தனை விதித்தார். மேலும், அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே, வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தார். அவரது ரசிகர்கள் சிலர், அழைப்பிதழ்களை பிளாக் மார்க் கெட்டில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினர். இன்னும் எது, எதற்கெல்லாம் பணம் வசூலிப்பரோ கிரிக்கெட் வீரர்கள்?
* * *
பி.டி., கத்தரி மட்டுமல்ல…
இயற்கையாக விளையும் காய்கறி, தானியங்களை, அதன் மரபணுவை மாற்றி விளைய வைப்பது தான் இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளின் அடுத்த குறி. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் விவசாயத்தை அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகள், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தான் இதன் உண்மையான நோக்கம்.
பி.டி., கத்தரி, விற்பனைக்கு விடப்படலாம் என்ற தகவல் வந்ததும், அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்ந்தது. கடைசியில் அரசு பணிய வேண்டியதாகி விட்டது. என்றாலும், பி.டி., கத்தரியை மட்டுமல்ல, பி.டி., தக்காளி, பி.டி., உருளை என்று மரபணு மாற்றப்பட்ட, மக்காச்சோளம், தினைப்பயிர், தர்பூசணி போன்றவற்றை உருவாக்கும் ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. வெளிநாடுகள் அளித்த ஆய்வுக் குறிப்பின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள விவசாய ஆராய்ச்சி பல்கலைகழகங்கள், மையங்களில் ஒத்திகை நடந்து கொண்டு தான் இருக்கிறது. எதிர்காலத்தில், மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், தானியங்கள் வரத்தான் போகின்றன என்பது மட்டும் உறுதி.
* * *
முதல் முதலாக…
தற்போது நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நாட்டில் 1881ல் மவுரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்த மவுரியர் ஆட்சி காலத்தில் தான் முதல் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது.
*முதல் முதலாக கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ரவிக்குளத்தில் தான் தேசிய பூங்கா துவங்கப்பட்டது. இதுதான் மாநிலத்திலேயே மிகப்பெரிய தேசிய பூங்காவாக இப்போதும் உள்ளது. இதன் பரப்பளவு 97 சதுர கி.மீ., இப்பூங்கா ஒன்று தான் வரையாடுகள் சரணாலயமாக உள்ளது.
* இந்தியாவில் முதல் முதலாக நோபல் பரிசு வென்ற பெண் மதர் தெரசா தான். சமாதானத்திற்கான நோபல் பரிசு அவருக்கு 1979ல் வழங்கப்பட்டது. உலகில் நோபல் பரிசு வென்ற முதல் பெண், மேரி கியூரி. இவருக்கு 1903ல் நோபல் பரிசு, இயற்பியல் துறைக்காக வழங்கப்பட்டது.
*முதல் முதலாக இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கியது இந்தியர் அல்ல. அவர் ஆங்கிலேயர் என்றால் நம்ப மறுப்பவர்கள் உண்டு; ஆனால், அது தான் உண்மை. அவர் பெயர் ஏ.ஓ.ஹியூம். அவர் பிரிட்டிஷ் – இந்தியா நிர்வாகத்தின் கீழ் ஊழியராக பணியாற்றியவர்.
*கேரளாவில் பதவி வகித்த முதல் அமைச்சர்களில் குறைந்த வயதில் முதல்வராக பணியாற்றியவர் தற்போதைய மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தான்.
*நவ., 21,1963ல் திருவனந்தபுரம் அருகே தும்பா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து முதல் முதலாக ராக்கெட் விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. நாட்டின் முதல் விண்வெளி ஆய்வு மையமான ஐ.எஸ்.ஆர்.ஓ. ஆக., 15, 1969ல் அமைக்கப்பட்டது.

%d bloggers like this: