வண்டு வடிவில் வடிவேலன்!

முருகப் பெருமான் பூலோகத்தில் நான்கு அவதாரம் எடுத்ததாக, பூந்துறைப்பூராணம் எனும் புராணத்தில் உள்ள குமாரசருக்கம் எனும் பகுதி தெரிவிக்கிறது.

ஒர சமயம் கைலாய மலையில் பரமசிவனும் பார்வதிதேவியும் ஏகாந்தமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர் பார்வதிக்கு தனிமையில் பிரணவோபதேசம் செய்தார். அச்சமயம் அங்கு வண்டுவடிவில் உருமாறி வந்த முருகப்பெருமான், அந்த பிரணவ தத்துவத்தை இருவருக்குமிடையில் இருந்து கேட்டார்.

அதனைக் கண்டுபிடித்து கோபம் கொண்ட பரமன் முருகப்பெருமானிடம், நாங்கள் பேசிய ரகசிய மந்திரோபதேசத்தை என் அனுமதி இன்றி நீ மறைந்திருந்து கேட்டதால், பூலோகத்திற்குச் சென்று அந்தணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற மனிதர்களின் வருணங்கள் நான்கிலும் ஒவ்வொரு பிறவி எடுத்து வாழ்ந்துபின் சாப விமோசனமடைந்ததும் இவ்வுலகம் சேர்வாயாக என்று சாபமிட்டாராம்.

அதன்படியே முருகப்பெருமான் மண்ணுலகில் நான்கு வருணங்களிலும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பின் சிவலோகம் சேர்ந்தார் என்கிறது அந்தப் புராணம்.

திருஞானசம்பந்தர்:

முதலாவதாக முருகன், சீர்காழியில் அந்தணர் குலத்தில் திருஞான சம்பந்தராக அவதரித்தார்.

உக்கிர குமார பாண்டியன்:

இரண்டாவதாக மதுரை மாநகரில் க்ஷத்ரியர் குலத்தில் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் உக்கிரகுமார பாண்டியனாக அவதாரம் செய்தார்.

சாமிநாதன்: மூன்றாவதாக சுவாமிமலையில் வைசியர் குலத்தில் ஓர் இல்லத்தில் சுவாமிநாதன் என்ற பெயரில் அவதரித்து சித்துகள் பல நடத்தினார்.

செல்வக்குமாரன்: நான்காவதாக கொங்கு நாட்டில் உள்ள முத்தூர் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்து செல்வக்குமாரன் எனப் பெயர் பெற்று பின்பு பூந்துறை தலத்திற்கு வந்து பசுக்கூட்டங்களை மேய்த்து சேமூரில் வாழ்ந்து மக்களின் துயர் நீக்கி பின்பு சிவத்தில் ஐக்கியமானார்.

இவ்வாறு கூறுகிறது பூந்துறைப் புராணம்.

%d bloggers like this: