வாதக் காய்ச்சலை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

வாதக் காய்ச்சலிலின் தன்மை பற்றிய அடிப்படை அறிவை பொதுமக்களுக்கு ஊட்டுவதுதான் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது. இந்த
விழிப்புணர்வின் மூலமாக தொடக்க நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சையை அளித்து குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம்
தொடர்புடைய பாதிப்புகளை ஓரளவுக்குத் தடுக்க முடியும்.
அதாவது தொண்டை அழற்சி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும் முதல் நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிந்து உரிய நேரத்தில்
தக்க மருத்துவ முறைகளை மேற்கொண்டால் குழந்தைகளின் மூட்டுகளும், இதயமும் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.வாதக் காய்ச்சல் நோயைத் தடுக்க தேசிய அளவில் நன்கு செயல்படக்கூடிய சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள, செவிலியர்கள கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்தக் குழுவின் மூலமாக இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பெரும்பாலும் பள்ளியில் படிக்கும் பருவத்தில்தான் குழந்தைகள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பள்ளிப் பருவக்
குழந்தைகளுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலமாக இதைப் பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
அதோடு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியையும் ஒரு சிறிய சுகாதார நிலையமாக (MINI PRIMARY CENTRE) மாற்ற வேண்டும்.
குறிப்பிட்ட பள்ளிப் பகுதியில் வாழும் மருத்துவர் அங்கு படிக்கும் குழந்தைகளின் சுகாரத் தேவைகளைக் கவனிக்க அந்தப் பள்ளியைத் தத்து
எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருத்துவர் வாரத்துக்கு ஒருநாள் பள்ளிக்குழந்தைகளைப் பரிசோதித்து நோயின் தொடக்கநிலையிலேயே
அதைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தக்க மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மேலை நாடுகளில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளின் அடிப்படை சுகாதாரத் தேவைகளைக் கவனித்துக் கொள்ள ஒரு செவிலியரை
(Nurse) முழு நேரப் பணியாளராக பள்ளி செவிலியர் (School Nurse) என்ற பெயரில் நியமிப்பார்கள். இதுபோன்ற முறையை நம் நாட்டில் உள்ள
பள்ளிகளிலும் பின்பற்றலாம். இன்னொரு முயற்சியையும் செய்து பார்க்கலாம். பொதுத் தொண்டில் ஆர்வம் உள்ள சில குறிப்பிட்ட ஆசிரியர்களை
ஒவ்வொரு பள்ளியிலும் தேர்ந்தெடுக்க வேண்டும். நோய் தடுக்கும் முறைகள் பற்றி அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளின் நோய் நிலையைப் பற்றி, பள்ளிக்கு வரும் மருத்துவருக்குத் தகவல்கள் அளிக்க வேண்டியது குறிப்பிட்ட ஆசிரியர்களின்
கடமை.இவ்வாறு மருத்துவர்களோடு ஆசிரியர்களும் இணைந்து செயல்பட்டு வாதக் காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான
போராட்டத்தில் இறங்க வேண்டும்.
மேற்சொன்ன அத்தனை முயற்சிகளும் செவ்வனே செயல்படுத்தப்படும்பட்சத்தில் வாதக் காய்ச்சல் என்ற கொடுமையான நோயின் பிடியில்
இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிவிட முடியும் என்பது என் நம்பிக்கை.

%d bloggers like this: