Daily Archives: ஜூன் 7th, 2010

பாதுகாப்பான கூகுள் தேடல்

சர்ச் இஞ்சின் என்றாலே, அதிகமானோர் பயன்படுத்தும் தேடல் சாதனமாக கூகுள் இயங்கி வருகிறது. எனவே தான் கூகுள் நிறுவனமும் இதில் கூடுமானவரை விரைவான, பாதுகாப்பான தேடல் அனுபவத்தினைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
பாதுகாப்பினைத் தருவதில், அண்மையில், கூகுள் இன்னொரு அம்சத்தினை வழங்கியது. வழக்கமான கூகுள் தேடல் தளத்துடன், இன்னொரு பாதுகாப்பான தளத்தினை கூகுள் கொண்டு வந்துள்ளது. இதன் முகவரி https://www.google.com/. இது பாதுகாப்பான தளம் என்பது இதில் உள்ள https என்னும் முகவரிச் சொல்லைக் கொண்டு அறியலாம். இந்த தளத்தின் மூலம் தேடுகையில், தேடுதலை மேற்கொள்ளும் கம்ப்யூட்டருக்கும், கூகுள் சர்ச் தளத்திற்கும் இடையேயான தேடல் விபரங்கள் மாற்றிச் சுருக்கப்பட்டு (encryption) அனுப்பப்படுகின்றன. இதனால் இன்டநெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் போல உள்ளவற்றிற்கு, இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. குறிப்பாக பொது இன்டர்நெட் மையங்களில் தேடுதலை மேற்கொள்பவர்கள், இந்த பாதுகாப்பான கூகுள் தேடல் தளம் (https://www.google.com/.) மூலம் தங்கள் தேடல்களை மேற்கொள்ளலாம். இதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. வழக்கமான தளத்திற்கும், இந்த பாதுகாப்பு தரும் தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வேறுபாடுhttp யுடன் s சேர்க்க வேண்டும். அல்லது இதற்கான யூசர் ஸ்கிரிப்ட்டை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். டவுண்லோட் செய்திட http://userscripts.org/ scripts/show/5951 என்னும் முகவரிக்குச் செல்லவும். இன்னும் எளிய வழி, இந்த தளம் சென்று பின் அதனை ஒரு புக்மார்க்காக அமைத்து இயக்குவதுதான்.

போபால் விஷ வாயு வழக்கில் 26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை

சுமார் 15 ஆயிரம் உயிரை கொன்ற போபால் விஷ வாயு வழக்கில் சேர்க்கப்பட்ட 8 பேர் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இன்றைய தீர்ப்பை கேட்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் கோர்‌ட் முன்பாக கூடினர். தீர்ப்பு கடுமையாக வழங்கிட வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர். இதனையொட்டி கோர்ட் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கில் தொடர்புடைய 8 பேரும் குற்றவாளிகள் என காலையில் கோர்ட் அறிவித்தது.  மதியம் தண்டனை அறிவிக்கப்பட்டது.  அதிகம் பட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். நீதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ம் ஆண்டில், யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது குறித்த வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் உள்ள நிறுவன தலைவர் வழக்கில் இருந்து தப்பித்து விட்டார் . போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவில், அதன் பாதிப்பில் 15 ஆயிரம் பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது; 2 ஆயிரத்து 259 பேர் இறந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான கால்நடைகளும் விஷவாயு தாக்கி பலியாயின; 5 லட்சம் பேர் பல்வேறு உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். “மிக்’ எனப்படும் “மீதைல் ஐசோ சைனைடு ‘ என்ற நச்சு வாயு கசிவு, பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. கடந்த 26 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில், இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. போபால் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன் திவாரி தீர்ப்பு கூறினார்.

ஆண்டர்சன் தப்பினார் : இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது பேரில், இந்நிறுவனத்தின் துணை மேலாளர் ஆர்.பி.ராய் சவுத்ரி காலமாகிவிட்டார்.விஷவாயு சம்பவம் நடந்த பின், மத்தியக் குழுவினர் சென்று ஆலையை பார்வையிட்டனர். போதிய பராமரிப்பின்மை தான் விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இந்த ஆலையின் தலைவரும், அமெரிக்கருமான வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட மூன்று பேர், இவ்வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டர்சன் அமெரிக்காவில் பதுங்கி விட்டதாக போபால் செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது.

இன்று வழங்கப்பட்ட தீர்பை கேட்க கோர்ட்டில் ஏராளமனவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்; இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இவர்கள் ஏன் வழக்கில் சேர்க்கப்பட்டு தண்டனை வாங்கி கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். குற்றவாளிகளுக்கு அதிப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக பேசினர். முன்னதாக பூட்டிய அறைக்குள் நீதிபதி தீர்ப்பை அறிவித்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குற்றவாளிகள் யார் ? முழு விவரம் : இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் ( ஆர்.பி ராய்சவுத்ரி ) இறந்து விட்டார். ஏனையோர் விவரம் வருமாறு: பொறுப்புகள் அடைகுறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. கேசூப் மகிந்திரா ( யு.சி.எல்., சேர்மன்) , விஜய்கோகலே ( மானேஜிங் டைரக்டர்) , கிஷோர்கம்தார்( உதவி தலைவர்) , முகுந்த் ( வொர்க்ஸ் மானேஜர்) , எஸ்பி., சவுத்ரி( புரடக்ஷன் மானேஜர் ) , கே.வி., ஷெட்டி ( பிளான்ட் சூப்பிரண்டு ) எஸ்.ஐ., குரேஷி ( புரடக்ஷன் அசிஸ்டன்ட் ) . ஆகியோர் அடங்குவர்.

தீர்ப்பு விவரம் : குற்றவாளிகள் 8 பேருக்கு 2 ஆண்டு சிறைத்ண்டனையும் , தலா ரூ . ஒரு லட்சம் அபராதமும், யூனியன் கார்பைடுக்கு ரூ. 5 லட்சம் அபராதமும், விதிக்கப்பட்டுள்ளன. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் குற்றவாளிகள் ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பணம் செலுத்தி ஜாமீனில் விடுவித்தும் தீர்ப்பளித்தது.

தொல்லை தரும் வைரஸ் கிருமிகள்-இயற்கை வைத்தியம்

நமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அதற்கென சிறப்பாக வழங்கப்படும் நுண்கிருமி நாசினி பலனளித்தாலும், வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலுக்கு மட்டும் சிறப்பான நுண்கிருமி நாசினிகள் இல்லை. ஏனெனில் வீரியமற்ற நிலையில் காணப்படும் வைரஸ் கிருமிகள் உயிருள்ள செல்களின் உள்ளே நுழைந்ததும், மிகவும் வீரியமடைந்து தன் தோற்றத்தையும் தாக்குதலையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆகையால்தான் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் அல்லது தடுக்கும் மருந்துகள் சிறப்பாக செயல்
படுவதில்லை.
சளி, குருதி, குருதி படிந்த கருவிகள், உடல் திரவங்கள், இனப்பெருக்க திரவங்கள் ஆகியவற்றின் மூலம் வேகமாக பரவும் வைரஸ் கிருமிகள், குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து வீரியம் பெற்றதும், அத்தியாவசிய உறுப்புகளை தாக்கி, பலவித நோய்களை ஏற்படுத்துகின்றன. ஒரு வைரஸ் கிருமி உடல் செல்லை தாக்கி, அதற்கான நோய் குறிகுணங்களை முதன்முதலில் காட்டத் தொடங்கும் காலத்தில் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் வைரஸ் கிருமிகளை சரியாக எதிர்கொள்ள முடியும். இல்லையெனில் நோயின் தீவிரம் அதிகரித்து பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்திவிடும். வைரஸ் நுண்கிருமிகளை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு செல்கள் நம் உடலிலேயே போதுமான அளவு அமைந்துள்ளன. இவை வைரஸ் கிருமிகள் உள்ளே நுழைந்ததும் இம்யுனோ குளோபின்களை அதிகரித்து நோயை கட்டுப்படுத்துகின்றன. இந்த இம்யுனோ குளோபின்களின் அளவைக்கொண்டே நோயின் தீவிரம் கணக்கிடப்படுகிறது. ஏனெனில் டி.என்.ஏ. வரை தாக்குதலை ஏற்படுத்தும் மிக நுண்ணிய ஆற்றலுடையவை வைரஸ் கிருமிகள். உயிரற்ற செல்களில் இவை அழிந்துவிடுவதாலும், வீரியம் குறைவதாலும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகளைப் போல் மின் நுண்ணோக்கியில் பார்க்க இயலுவதில்லை.
வாய், உதடு, நாக்கு, தொண்டை, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மென்மையான தோல் பகுதிகள் ஆகியவையே வைரஸ் கிருமிகளின் இலக்காகும். இவற்றில் ஏற்படும் தாக்குதலே தொண்டை வலி, அம்மை, அக்கி, மரு, பாப்பிலோமா, நாய்முள், நாக்கு, வாய் மற்றும் பிறப்புறுப்பில் கடுமையான குழிப்புண்கள் ஆகியவற்றில் கொப்புளங்களாகவும், புண்களாகவும் வைரஸ் கிருமியின் தாக்குதலின் அடையாளமாக நாம் உணருகிறோம். இதனால் தோன்றும் சிறு சுரம், வலி ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கான இயற்கையின வழிமுறைகளாம். ஹெர்பஸ் வைரஸ், அடினோ வைரஸ், புளூ வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் கிருமி தாக்குதலை நீக்கி, நம்மை காக்கும் எளிய மூலிகை மயிற்கொன்றை.
செசல்பினியா பல்செரிமா என்ற தாவரவியல் பெயர் கொண்ட செசல்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலை மற்றும் பூக்களிலுள்ள பிளேவனாய்டு குர்சிட்டின் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உடையவை.
வைரஸ் கிருமித் தொற்றினால் தோன்றும் சுரம் மற்றும் தொண்டைவலி நீங்க மயிற்கொன்றை இலைகளை இடித்து, சாறெடுத்து 15 முதல் 30 மில்லியளவு வெந்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இதன் விதைகளை அரைத்த தடவ, இருமலினால் தோன்றும் மார்பு வலி நீங்கும். இலைச்சாற்றை தடவ, அக்கி தீவிரம் குறைந்து, தழும்பு மற்றும் அதனால் உண்டாகும் வலி மறையும்.
மயிற்கொன்றை இலை மற்றும் பூக்களை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 15 கிராம் இலைப்பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 125 மிலியாக சுண்டிய பின் வடிகட்டி குடிக்க சுரம் நீங்கும்.
– டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

காற்று வாங்கப் போகலாமா?

உலகம் இனிமையானது; அதனினும் இனிமையானது, வாழ்க்கை; வாழ்க்கை வாழ்வதேற்கே; வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய இன்பமே உலக இன்பம். நம்முடைய வாழ்க்கையை இன்பமுடையதாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு கலை. வாழும் கலையைக் கற்றவர் நீண்ட நாள் வாழ்கின்றனர். வாழ்க்கையில் பெறப்படுகின்ற இன்பத்தின் அளவே வாழ்க்கையில் கிடைக்கப் பெறுகின்ற வெற்றியின் அளவாகும்.
இன்பமில்லாத வாழ்க்கையை உடையவர், வாழ்க்கையின் வெற்றிகளைப் பெற முடியாது.
வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையை வகுத்திருப்பது, இயற்கை. இயற்கைக்கு மாறாக வாழ்வது வாழ்க்கையாகாது. இயற்கையுடன் இயைந்து வாழ்வதேக வாழ்க்கை. மனிதன் நெடுங்காலம் வாழ வேண்டுமானால், உடம்புக்குத் தேவையான உணவுப்பொருள்களைத் தருதல் வேண்டும். சமைப்பது மட்டுமே உணவாகாது.
சுவாசம் நின்றுவிட்டால், உயிர் போயிவிடும். உடம்பு இறந்துவிடும். காற்று இல்லாமல் மனிதன் வாழவே முடியாது. காற்று, உடம்புக்குத் தேவையான உணவுகளில் முதல் உணவு.
தண்ணீரோ, உண்ணும் உணவுகளோ இல்லாமல் பல நாள் இருக்கலாம். காற்று இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது.
உடம்புக்குத் தேவையான மூலப்பொருள்கள் அனைத்தும் காற்றில் இருக்கின்றன. காற்றை மட்டுமே உணவாக உட்கொண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்த சித்தர்கள், யோகிகள் இருந்ததுள்ளனர். அது அவர்கள் கற்ற, வாழும் கலை.
கல்வியோ, கற்கும் திறனோ இல்லாத நல்ல பாம்பு, இரை என எதுவும் தின்னாமல், காற்றை மட்டுமே உணவாக உட்கொண்டு, ஆறு மாதத்துக்கும் மேலாக உயிரோடிக்கிறது.
ஆனால், மனிதர்கள் காற்றின் சிறப்பையும், காற்று எந்த அளவுக்கு உடம்புக்கு இன்கறியமையாதது என்பதையும் அறிந்துகொள்ளாமல், வறுமையினால், பசிக்கொடுமையினால், இறந்துவிடுவதாகக் கூறுகிறார்கள்.
காற்றை சரியான முறையில் பயன்படுத்தத் தவறினால், நுரையீரல் நோய், மார்பு நோய், இருமல், செரியாமை போன்ற கொடிய நோய்கள் வருகின்றன. இந்நோயால் மாண்டுபோவோரின் எண்ணிக்கையோ, கோடிக்கும் மேல்.
தூய்மையான காற்றை முறையாகப் பயன்படுத்தி வந்தால் உடம்பு நீண்ட காலம் வாழ்ந்திருக்கும்.
உடம்புக்குத் தேவையான அளவு காற்றை உள்ளுக்கு இழுத்து வெளியே விடுகிறது நுரையீரல். வெளியில் இருக்கும் காற்று தூய்மையானதாக இருந்தால், நுரையீரல் முழு அளவு விரிந்து காற்றை இழுத்துக் கொள்ளும். காற்று தூய்மையில்லாமல், நச்சுத்தன்மை உடையதாக இருந்தால், நுரையீரல் விரிவதைக் குறைத்துக் கொள்ளும். அதனால், குறைவான காற்றே உள்ளுக்குள் செல்லும்.
தூய்மையான காற்றே இல்லாமல், நச்சுக் காற்று மட்டுமே கிடைக்கக் கூடிய பகுதிகளில் வாழுகின்ற மனிதர்கள், எந்த நேரமும் நச்சுக்காற்றையே உணவாக உட்கொள்வதனால், உடல் நலம் பாதிக்கிறது. உள்ளே சென்றுவிடும் நச்சுப் பொருள்கள் நோய்களை உற்பத்தி செய்கின்றன.
எனவே, வெளியிலிருந்து பெறப்படுகின்ற காற்று, மனித உடம்புக்கு அமிழ்தம் போன்றது என்பதை அறிய வேண்டும்.
ஒவ்வொரு பகுதிலும் வாழுகின்ற மனிதர்கள், தாங்கள் வாழும் பகுதியிலுள்ள காற்று தூய்மையானதா நஞ்சுடையதா என்பதைச் சிறிய சோதனையின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு படி தண்ணீரில் சிறிது சுண்ணாம்பைக் கரைத்து தெளிய வைத்தால், சுண்ணாம்பெல்லாம் தண்ணீரின் அடியில் தங்கிவிடும். மேலே நிற்கும் தெளிந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு. மூக்கிலிருந்து வெளிவரும் காற்றை ஒரு சிறு குழாயின் வழியாகப் பாத்திரலிருக்கும் சுண்ணாம்பு நீரின் மேல் படும்படிச் செய்தால், சுண்ணாம்புத் தண்ணீரின் மேல் பாலேடு படர்ந்துபோலச் சுண்ணம்பு கட்டும்.
இப்படியே ஒருவர் வெளிவிடும் மூச்சுக்காற்றை அத்தண்ணீரின் மேல் படும்படிச் செய்து கொண்டிருந்தால், சிறிது நேரத்தில் ஒரு கட்டிச் சுண்ணாம்பு எடுக்கும் அளவுக்குத் தோன்றும். இதன் மூலம், மூச்சு விட்டவர் சுவாசித்த காற்றில் நச்சுத்தன்மை கலந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒருவர் பல நாட்கள் நச்சுக்காற்றையே சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர் சுவாசிக்கும் காற்றிலுள்ள நஞ்சு, நுரையீரலைப் பாதித்து, ரத்தத்தில் கலந்து இதயத்தைப் பாதித்து, தீராத நோய்க்குள் தள்ளிவிடும்.
எனவே, மனிதர்கள் வாழுமிடங்களில் தூய்மையான காற்று கிடைக்குமாறு இருக்க வேண்டும். வீடுகளில், போதிய அளவு சன்னல்கள் இருக்க வேண்டும். சன்னல்கள் இல்லாத வீடுகளில் பலர் சேர்ந்து இருக்கும்போது, தூய்மையான காற்றை சில மணி நேரங்களில் அனைவரும் சுவாசித்து விடுவர். அதன் பின்னர், அவரவர் சுவாசித்து வெளிவிட்ட நச்சுக்காற்றையே மீண்டும் சுவாசிக்க வேண்டியிருக்கும்.
அவ்வாறு சுவாசிக்கும்போது, நச்சுக்காற்று ரத்தத்தில் கலந்துவிடும். நுரையீரல் சுருங்கிவிடும். மூளையின் வலிமை குன்றிவிடும். அறிவு மழுங்கிவிடும்.
மூச்சுக்காற்றின் ஓட்டம் குறைந்தால், ஈளை, எலும்புருக்கி, நீரிழிவு முதலான நோய்கள் உருவாகும்.
எனவே, சன்னல் இல்லாத வீடுகள் இருந்தாலும் அதில் மனிதர்கள் வசிக்கக் கூடாது.
சன்னல்கள் இல்லாத வீட்டிலோ அறையிலோ தங்குவது தன்னைத்தானே கொன்று விடுவது போன்றதாகும். ஒருவரை சன்னல் இல்லாத அறைக்குள் விட்டு கதவை அடைத்துப் பூட்டிவிட்டால். சில மணி நேரத்திலேயே அறையிலுள்ள தூய காற்றையெல்லாம் இழுத்து சுவாசித்து விடுவார். அதன் பிறகு அறைமுழுவதும் நச்சுக் காற்று நிறைந்துவிடும்.
நச்சுக்காற்று வெளியே செல்ல வழி இல்லாததால் அறைக்குள்ளேயே இருக்கும். அறையில் விடப்பட்டவர் நச்சுக்காற்றையே சுவாசிப்பார். நச்சுக்காற்றைச் சுவாசிக்க நேரும்போதெல்லாம் நுரையீரல் சுருங்கும். நச்சுக்காற்றை மட்டுமே சுவாசிக்கின்றவரின் நுரையீரல் சுரங்கி, செயல்படாமல் நின்றுவிடும். மூச்சுத் திணறும். இறந்துவிடுவார்.
இதற்குப் பெயர் தற்கொலை தானே?
தூய்மையான காற்றைச் சுவாசித்து வெளியே விடுகின்ற நச்சுக்காற்று, பகலை விட இரவில் மிகுதியாகப் பரவும். பகல் வேளையில் புல், பூண்டு, மரம், செடி, கொடி போன்றவை நச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு, தூய்மையான காற்றை வெளியே விடுகின்றன. இரவில், அவை தூய்மையான காற்றை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு நச்சுக்காற்றை வெளியே விடுகின்றன.
ஆனால், மனிதர்கள் பகலிலும் இரவிலும் ஒரே மாதிரியே சுவாசிக்கின்றனர். மரம், செடி, கொடிகள் நிறைந்த நிலத்தில் வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு இரவில் தூய்மையான காற்று கிடைப்பதே அரிதாகும்.
மரங்கள், செடி, கொடிகள், மனிதர்கள் என எல்லாமும் இரவில் நச்சுக்காற்றையே வெளியிடுவதால், நச்சுக்காற்றே எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.
இரவு நேரங்களில் மரங்களுக்குக் கீழே தங்குவதும் படுப்பதும் கூடாது. ஏனென்றால் மரத்தினது அடியில் தூய காற்று கிடைக்காது.
வீட்டைச் சுற்றி மரம் வளர்த்தால், பகலில் மட்டுமே பயன்படும். இரவு நேரத்தில் பயன்படாது. இரவு நேரத்தில் மரங்களின் கீழே படுப்பதும் நலம் தராது. துன்பும் தரும்.
இரவில் மரம் செடிகளிலிருந்து வெளிவருகின்ற நச்சுக் காற்று வீட்டுக்குள் நுழையும். ஆகையால், தூய்மையான காற்று வீட்டுக்குள் உலாவும்படி சன்னல்கள் இருக்க வேண்டும்.
அதேபோல், வீட்டுக்குள் நச்சுக்காற்றை அதிகப்படுத்துகின்ற பொருள்களை அகற்ற வேண்டும். உங்குவதற்கு முன், வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை நிறுத்த வேண்டும். விளக்குகள் எரிவதற்குத் தூய காற்று தேவை. தூய காற்றை உறிஞ்சி எரிகின்ற விளக்கு, நச்சுக்காற்றை வெளிப்படுத்தும்.
அதே போல், தலைமாட்டில் விளக்கு எரியக்கூடாது. மூச்சு, முகத்துக்கு அருகிலுள்ள காற்றை இழுக்கும். விளக்கு தலைமாட்டில் இருந்தால், தலைக்கு அருகில் நச்சுக்காற்றே இருக்கும்.
வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசுவது நல்லது. சுண்ணாம்பு நச்சுக்காற்றை உறிஞ்சிவிடும். சாக்கடைகளில் சுண்ணாம்பு நீரைத் தெளித்தால், அதிலிருந்து வெளியாகும் நச்சுக் காற்றைச் சுண்ணாம்பு நீர் உறிந்து கொள்ளும். நச்சுக்காற்று தரை மட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும். தூய்மையான காற்று தரை மட்டத்துக்கு மேலே உலவிக் கொண்டிருக்கும் என்பதனால், தரையில் படுத்து உறங்குவதை விடச் சாலச்சிறந்தது. கட்டிலின் மேல் படுப்பதாகும்.

உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’

இன்றைய நாகரிகம் வளர்ந்த உலகத்தில், பல கோடி உயிர்களை மாரடைப்பிலிருந்து காப்பாற்றி வரும் உயர்ந்த உன்னத மருந்து, “ஆஸ்பிரின்!’ நெஞ்சு வலி, வாயுக் கோளாறு, தலைசுற்றல், மயக்கம், சோர்வு, வியர்வை கண்டவுடன், இ.சி.ஜி., எடுத்து, கரையக் கூடிய ஆஸ்பிரினை (ASPRIN) தண்ணீரில் போட்டு குடிக்க வைப்பார். இது மாரடைப்புக்கு காரணமான, புதிய ரத்தக்கட்டி உறைவதை தடுக்கும். ஆனால், ஆண்டுக்கணக்கில் ஏற்பட்ட கொழுப்பு கட்டியை கரைக்காது.


கடந்த 1897ம் ஆண்டு, பிலிக்ஸ் ஆப்மென் (Flix Hoffman) என்ற டாக்டர், இசென் குஎன் (Echen Guen) என்பவரின் மேற்பார்வையில், “அசிட்டைல் சாலிசிலிக் ஆசிட்’ (அகுஅ) கண்டுபிடித்தார். ஆனால், எனிஸ்ரிச் டிரெசர் (Enisrich Dreser) என்பவர், கெட்ட நோக்கத் தோடு இந்த மருந்தை நிராகரித்து விட்டார். ஹெராயின் (Herion) என்ற போதை மருந்தை மனதில் வைத்து, இப்படி நிராகரித்தார். அதே ஆண்டு, “ஆஸ்பிரின்’ என்ற பெயரில் டாக்டர் சீட்டு இல்லாமல், உடல்வலி, ஜுரம், காய்ச்சல் முதலியவைகளுக்கு மருந்தாக, Bayer கம்பெனி அறிமுகப்படுத்தியது. இந்த மருந்து, இப்போது ஒவ்வொருவரின் கைப்பையிலும் இருக்கிறது. ரத்தக்கொதிப்பு என்ற நோயால், ரத்தக்குழாய் தடித்து விடுகிறது. குறிப்பாக, கால்களின் ரத்தக்குழாய், மூளையின் ரத்தக்குழாய், இதய ரத்தக்குழாய், வயிற்றிலுள்ள மகாதமனி என்ற பெரிய குழாயில் தடிப்பு ஏற்படுகிறது. ரத்தக் கொதிப் புள்ளவர்கள் 4,000 பேரிடம், ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களுக்கு, தொடர்ந்து எட்டு ஆண்டுகள், “ஆஸ்பிரின்’ கொடுத்ததில், 9 சதவீதத்தினருக்கு, வயிற்று எரிச்சல், ரத்தம் கொட்டுதல் ஏற்பட்டது. எனினும், மாரடைப்பை தடுப்பது, மூளையின் ரத்த நாளத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுப்பது, கால் ரத்தக் குழாயில் அடைப்பை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை இந்த மருந்து செய்தது.


பெண்களின் மார்பக புற்றுநோயை, “ஆஸ்பிரின்’ தடுக்குமா? ஆம்… ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில், இது கண்டறியப்பட்டுள்ளது. 30, 40, 50 வயதிலுள்ள பெண்கள், ஹார்மோன்கள் குறைவு, அதிக இடுப்பளவு, அதிக எடை, இவைகளால் மாரடைப்பு அதிகமாக வர வாய்ப்புள்ளது. எனக்கு தெரிந்த பெண் ஒருவர், 35 ஆண்டுகளாக, வாரம் ஒரு முறையாவது தலைவலிக்கு ஆஸ்பிரின் எடுத்து கொள்கிறார். இப்போது அவர் வயது 75. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், பெரிய இடுப்பு, அதிக எடை, தாறுமாறான சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் இவருக்கு உள்ளது. இவர் எப்படி இன்னும் மாரடைப்பு, வாதம் இல்லாமல் இருக்கிறார்? இது ஆஸ்பிரின் காரணமாக இருக்கிறது. இதேபோல், 80 வயதுக்கு மேலான என் உறவினர், 40 ஆண்டுகளாக என் பாதுகாப்பில் தான் மருந்து எடுத்து வருகிறார். இவர்களுக்கு திடீர் மாரடைப்பு, வாதம் என்று ஒன்றும் வரவில்லை. காரணம் ஆஸ்பிரின் தான். ரத்தத்தில் சிவப்பணு, வெள்ளை அணு மற்றும் “பிளேட்லெட்’ எனப்படும் தட்டை அணுக்கள் உள்ளன. இந்த தட்டை அணுக்கள், “மைக்ரோஸ்கோப்பில்’ பார்க்கும் போது, ஒரு ரூபாய் நாணயம் போல் காட்சியளிக்கும். இந்தத் தட்டை அணுக்கள் மீது, அராகிடோனிக் ஆசிட், சைக்கிளிக் ஏ.எம்.பி., ஆகியவை, பசை போல காணப்படும். ரத்தம் மிகவும் குறைந்த வேகத்தில் செல்லும் போதோ, ரத்த அடர்த்தி அதிகமாகும் போதோ, இந்த தட்டை அணுக்கள் ஒன்று மீது ஒன்று ஒட்டும். இதனுடன் ரத்தத்திலுள்ள பைப்ரோனோஜென் (Fibronogen) சேர்த்து, ரத்தக் கட்டை ஏற்படுத்தி, குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. தட்டை அணுக்களின் மேலுள்ள ரசாயன பொருட்களின் வேலையை, “ஆஸ்பிரின்’ செயலிழக்க செய்கிறது.


சூப்பர் ஆஸ்பிரின்: ஆஸ்பிரின் போல, குளோபிடிகிரால் என்ற சூப்பர் ஆஸ்பிரின் இன்று உபயோகிக்கப்படுகிறது. “பரசாகிரில்’ என்ற புது சூப்பர் ஆஸ்பிரின் வந்துள்ளது. வருமுன் காப்போம்: உங்கள் குடும்ப டாக்டரை கேட்டு, தினமும் ஒரு ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதால் தவறில்லை. உங்களுக்கு வயிற்றில் புண், வாயு இருந்தால், ஆஸ்பிரினை தவிர்க்கவும். நெஞ்சு வலி, வியர்வை என்று சந்தேகப்பட்டால், ஒரு, “ஆஸ்பிரின்,’ அதுவும் 75 மி.கி., போதுமானது. வாயுத் தொந்தரவு இருந்தால், இதோடு ஒரு, “பான்டப்ரசால்’ எடுத்து கொள்ளலாம். பிறகு மருத்துவமனை சென்று விடலாம். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்புள்ளவர்களுக்கு எப்போது ஸ்ட்ரோக், மாரடைப்பு வரும் என்று தெரியாது. ஆகையால், தவறாது மாதம் ஒருமுறை டாக்டரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. ஆறு மாதம், ஒரு வருடம் இப்படி பரிசோதனை செய்துக் கொண்டால், வியாதியின் தன்மை நன்கு கண்டுபிடிக்க முடியாது. திடீர் சிக்கல் வந்தால், மருத்துவமனை, ஐ.சி.யூ., என்று பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டி வரும். தினமும் ஆஸ்பிரின் (75 ட்ஞ்) உட்கொண்டு வந்தால், எதிர்காலத்தில் ஸ்ட்ரோக், மாரடைப்பை தடுக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரை பார்த்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

சுத்தம்… சுகாதாரம்…!

ஆரோக்கியமான உடல்நிலை ஒருவருக்கு வேண்டும் என்றால் அவர் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மட்டும் போதாது; சுத்தமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நோய்கள் நெருங்காது.

கை கழுவுவதில் இருந்து எல்லா விதத்திலும் சுத்தமாக இருந்தால் இந்த நோய்த் தொற்றுதலில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள்

டாக்டர்கள்.`ஸ்டெபிலோகாக்கஸ் ஆரியஸ்’ என்ற பாக்டீரியா தான் அசுத்தமான கைகளில் இருந்து கொண்டு நோயை பரப்புகிறது. நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராடும் சக்தி இந்த பாக்டீரியாவுக்கு இருக்கிறது. அதனால்தான், கையை சுத்தமாக வைத்துக்கொள்ளாதவர்கள் அந்த பாக்டீரியாவின் தாக்குதலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

இதில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிறுவனம் சில ஆலோசனைகளை உலக நாடுகளுக்கு கூறியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நோயாளிகளை பரிசோதித்த பிறகு தங்களது கைகளை கிருமி நாசினிக் கொண்டு கழுவ வேண்டும்.

மலம் கழித்த பிறகு கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

சாப்பிடப்போகும் முன்னரும் கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும் என்று கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

சிவப்பு துணியைக் கண்டால் மாடு மிரளுமா? உண்மையா?

இன்றைய சூழலில் சிலவிஷ யங்கள் தவறாகவே பொருள் கொள்ளபடுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் அதை நம்பவும் செய்கிறோம். இந்தமாதிரியான நம்பிக்கையை அதிக அளவில் திரைபடங்கள் தான் ஏற்படுத்துகின்றன. ஆனாலும் எது சரியானது என்பதை சரியாக தீர்மானிக்க வேண்டியது நாம் தான். அது பற்றிய ஒரு சிறப்பு பார்வை :

தவறான தகவல்: சிவப்பு துணியைக் கண்டால் மாடு மிரளும்.

உண்மை: பல சினிமாக்களில் மாட்டை நடிக்க வைத்து, இது உண்மை என்று நிருபித்து படம் எடுத்து இருக்கிறார்கள். அதாவது, மாடு யாரை முட்ட வேண்டுமோ அவரை சிவப்பு நிற ஆடையில் வர வைத்து, அதை பார்த்து மாடு மிரண்டு, அவரை முட்டுவதுபோல் படமாக்கி இருப்பார்கள். ஆனால், இது உண்மை அல்ல. சிவப்பு துணியைக் கண்டால் மாடு முட்டவே முட்டாது. அதை விசிறும்போதுதான் மாடு மிரளுகிறது. இதுதான் உண்மை.சிவப்பு துணியை விசிறினால் மட்டுமல்ல, பச்சை, நீலம், மஞ்சள்… என்று எந்த நிறத்தில் உள்ள துணியை விசிறினாலும் மாடு மிரளும்; முட்ட வரும். அதுவும், சம்பந்தபட்ட மாட்டின் முன்பு விசிறினால் தான் அது மிரளும். மற்றபடி, துணியின் நிறத்திற்கும், மாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும், மற்ற நிறங்களைக் காட்டிலும் வெள்ளை நிறம் மாட்டிற்கு இன்னும் தெளிவாகத் தெரியும்.

பொதுவாக, நாம் வீட்டில் வளர்க்கும் மாடு, பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு எல்லாக் காட்சிகளும் கறுப்பு, வெள்ளை போல்தான் தெரியும். அதாவது, பிளாக் அன்ட் ஒயிட் சினிமா போன்று! மற்ற நிறங்கள் மிருகங்களுக்கு தெரியாமல் போகக்காரணம், அவை இரவில் வேட்டையாடியதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதேநேரம், மனித இனத்தின் முன்னோர்களான குரங்கு இனங்களுக்கு மட்டும் எல்லா நிறங்களும் நன்றாகத் தெரியும். பூச்சி இனங்களில் தேனீக்கள் நிறங்களை சரியாக அடையாளம் கண்டு கொள்கின்றன. தேனீக்கு மட்டும் எப்படி நிறம் தெரிகிறது என்பதை அறிய ஒரு சோதனையும் நடத்தினார்கள். விஞ்ஞானிகள்.

அந்த சோதனையின்படி, தேனீக்களுக்கு பிடித்தமான நீல நிற அட்டையில் தேனை தடவியும், சிவப்பு நிற அட்டையில் தேன் இல்லாமலும் வைத்து அவற்றை சோதனை செய்து பார்த்தார்கள். நீல நிற அட்டையில் தேன் வைத்தாலும், வைக்காவிட்டாலும் அவற்றை மொய்த்தன தேனீக்கள். ஆனால், சிவப்பு நிறத்தை அவை கண்டுகொள்ளவே இல்லை. அந்த நிறத்தை ஒரு மாதிரியான பழுப்பு நிறத்தில் தேனீ பார்ப்பதாக கண்டறிந்தனர் விஞ்ஞானிகள். நம் கண்ணுக்கு தெரியாத புற ஊதா நிறம்கூட தேனீக்கு நன்றாக தெரிகிறதாம்.

தவறான தகவல்: நல்ல பாம்பை அடிக்கபோய், அது சாகாமல் தப்பித்துவிட்டால், திரும்பி வந்து பழி வாங்கும்.

உண்மை: உண்மையைச் சொல்லபோனால் பாம்பு இனங்களில் மிகவும் `நல்ல’ பாம்பு, இந்த நல்ல பாம்புதான். மற்ற பாம்புகளை அடித்தாலோ, அடிக்க முயற்சித்தாலோ உடனே சீறி வந்து கடித்து விடும். ஆனால், நல்ல பாம்பு மட்டும்தான், `என் அருகில் வராதே…’ என்று படமெடுத்து எச்சரிக்கை காட்டும். தொடர்ந்து, தன்னை தாக்க வருபவரை நோக்கி ஓரிரு முறை சீறி பயமுறுத்தும். இந்த எச்சரிக்கைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் அதை தாக்கினால்தான் அது நம்மை தீண்டும். மற்றபடி, அது நம்மை பார்த்தாலே, உனக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஓட்டம் பிடிக்கவே பார்க்கும்.

சரி… இனி விஷயத்துக்கு வருவோம். நல்ல பாம்பாக இருந்தாலும், எந்த பாம்பாக இருந்தாலும் மனிதனை பார்த்துவிட்டால் ஓடி ஒளிந்து, தன் உயிரைக் காப்பாற்றத்தான் முயற்சிக்கும். அதுமட்டுமின்றி, நாம் அடிக்கபோய் பாம்பின் உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் கூட, அதை எறும்பு போன்ற சிறு உயிரினங்கள் மொய்க்க ஆரம்பித்து விடும். அத்துடன், காயம் ஏற்பட்ட காரணத்தால் வேகமாக நகர முடியாமல் தவித்து உயிரையே விட்டுவிடும். அப்படி இருக்கும்போது, அது பழி வாங்க மீண்டும் வரும் என்பதெல்லாம் வெறும் கற்பனைக் கதையே!

மேலும், மகுடி ஊதினால் நல்ல பாம்பு படமெடுத்து ஆடும் என்பதை பல சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். இதுவும் தவறு. ஏனென்றால், எந்த பாம்புக்கும் காதே கிடையாது. அப்படி இருக்கும்போது எப்படி மகுடி சத்தத்திற்கு நல்ல பாம்பு மட்டும் ஆட முடிம்? அதற்கு காது என்பது `வைபரேஷன்’ (அதிர்வுகள்) தான். எதிரி ஓடி வருவதை நில அதிர்வு வழியாக உணரும் பாம்பு, சட்டென்று ஓட்டம் பிடிக்கிறது. இரை வருவதையும் அவ்வாறே உணரும் பாம்பு, சட்டென்று பதுங்கி அதை கவ்விக் கொள்கிறது.

அதுசரி… மகுடி ஊதும்போது நல்ல பாம்பு ஆடுகிறதே… அது எப்படி என்று கேட்கிறீர்களா? அதற்கு காது கேட்காது என்றாலும் பார்வை தெரியும் அல்லவா? நம் கையில் இருக்கும் மகுடியும் தெரிம் தானே? அந்த மகுடியை அங்கே இங்கே என்று ஆட்டும்போது, பாம்பும் பின்தொடர்ந்து தலையை அசைக்கிறது. அது, நமக்கு பாம்பு மகுடி ஓசைக்கு ஏற்ப ஆடுவது போன்று தெரிகிறது. அவ்வளவுதான். மகுடி மட்டுமல்ல, கையில் சிறு குச்சியை எடுத்து, அதன் முன்பு ஆட்டினாலும், அதற்கு ஏற்ப நல்ல பாம்பு தலையை அசைந்து கொடுக்கும்.

தவறான தகவல்: காணும் கனவுகளுக்கு ஏற்ப பலன்கள் ஏற்படும்.

உண்மை: நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன. இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதுபோலத்தான், கனவுகள் தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!

கட்டிலில் இருந்தோ அல்லது வேறு எங்கேயாவது இருந்தோ கீழே விழுவதுபோல் கனவு கண்டால், எதுவும் பிரச்சினை வந்து விடுமோ என்று பயப்பட தேவையில்லை. நம் முதாதையர்கள் மரங்களில் வாழ்ந்தவர்கள்தானே? மரத்தில் இருந்து கீழே விழுந்தால் ஆபத்து என்று அவர்களுக்கு இருந்த உள்ளுணர்வு நமக்கும் தொடர்வதுதான், கீழே விழுவது போன்ற கனவு வரக் காரணம் என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.

பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம்.   கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்: பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன. ஏன்… தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது. மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன.

ஊர்வசியிடம் பிரியம் வைத்தவர் கதி? (ஆன்மிகம்)

“பகவான், உத்தவரின் பல கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார். என்னுடைய ஸ்வரூப ஞானத்துக்கு காரணமான இந்த மனுஷ்ய சரீரத்தைஅடைந்து, பக்தி யோகத்தை செய்து கொண்டிருப்பவன், தன்னிடத்திலேயே உள்ளவனும் ஆனந்த ஸ்வரூபியாயுமுள்ள என்னை அடைவான்.
அசத்துகளுடன் ஒரு போதும் சேரக்கூடாது. மனதையும், இந்திரியங்களையும் அடக்கி, வைராக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றார். மேலும், அவர் புரூரவஸ் என்ற சக்கரவர்த்தியைப் பற்றியும் சொன்னார். புரூரவஸ் என்ற சக்கரவர்த்தி, ஊர்வசியிடம் மிகுந்த பிரியம் வைத்திருந்தான். பின்னர், அக்னி தேவனால், ஊர்வசி லோகம் சென்று, அவளுடன் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்தான். அவனுக்கு உபதேசம் செய்தாள் ஊர்வசி. பிறகு, அவனுக்கு வைராக்கியம் ஏற்பட்டு, ஞானம் உண்டாயிற்று.
பகவான் சொல்கிறார்: ஆனதால் புத்தியுள்ளவன், துஷ்டர்களுடன் சேராமல், சாதுக்களுடன் சேர வேண்டும். சாதுக்கள், நல்ல வார்த்தைகளால், மனக்கவலையை நிவர்த்திப்பர். ஒன்றையும் விரும்பாதவர்களும், என்னிடத்திலேயே சித்தத்தை செலுத்தியவர்களும், எல்லாவற்றையும் சமமாக பார்ப்பவர்களும், அகங்காரமற்றவர்களும், சுக, துக்கமில்லாதவர்களும் சாதுக்களாவர். அவர்கள், என்னுடைய கதையை எப்போதும் கானம் செய்வதால், பரிசுத்தர்களாவர்.
என்னுடைய கதையை எவர் கேட்கின்றனரோ, எவர் கானம் செய்கின்றனரோ, எவர் ஆமோதிக்கின்றனரோ, அவர்களுக்கு என்னிடம் சிரத்தையும், பக்தியும் உண்டாகும். இப்படி என்னிடம் பக்தி செய்யும் சாதுவுக்கு எதுதான் கிடைக்காது? சாதுக்களை சேவிப்பவனுக்கு, சம்சார பயம் நிவர்த்தியாகி விடும்.
பிராணிகளை அன்னம் எப்படி காப்பாற்றுகிறதோ, உபத்திரவம் அடைந்தவர்களை நான் எப்படி காப்பாற்றுகிறேனோ, மரித்தவர்களை தர்மம் எப்படி காப்பாற்றுகிறதோ, அப்படி சம்சாரத்தில் மூழ்கி தத்தளிப்பவர்களை, சாதுக்கள் காப்பாற்றுகின்றனர். ஆதலால், சாதுக்களே தேவதைகள், பந்துக்கள், ஆத்மா, சாதுக்களே நான்… என்று சொல்லி, இந்த அத்தியாயத்தை முடிக்கிறார் பகவான்.
யோசித்துப் பாருங்கள்… நாம் எதில் புத்தியை செலுத்த வேண்டும்; எதில் ஆசை வைக்க வேண்டும் என்று புரியும்!