ஊர்வசியிடம் பிரியம் வைத்தவர் கதி? (ஆன்மிகம்)

“பகவான், உத்தவரின் பல கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார். என்னுடைய ஸ்வரூப ஞானத்துக்கு காரணமான இந்த மனுஷ்ய சரீரத்தைஅடைந்து, பக்தி யோகத்தை செய்து கொண்டிருப்பவன், தன்னிடத்திலேயே உள்ளவனும் ஆனந்த ஸ்வரூபியாயுமுள்ள என்னை அடைவான்.
அசத்துகளுடன் ஒரு போதும் சேரக்கூடாது. மனதையும், இந்திரியங்களையும் அடக்கி, வைராக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றார். மேலும், அவர் புரூரவஸ் என்ற சக்கரவர்த்தியைப் பற்றியும் சொன்னார். புரூரவஸ் என்ற சக்கரவர்த்தி, ஊர்வசியிடம் மிகுந்த பிரியம் வைத்திருந்தான். பின்னர், அக்னி தேவனால், ஊர்வசி லோகம் சென்று, அவளுடன் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்தான். அவனுக்கு உபதேசம் செய்தாள் ஊர்வசி. பிறகு, அவனுக்கு வைராக்கியம் ஏற்பட்டு, ஞானம் உண்டாயிற்று.
பகவான் சொல்கிறார்: ஆனதால் புத்தியுள்ளவன், துஷ்டர்களுடன் சேராமல், சாதுக்களுடன் சேர வேண்டும். சாதுக்கள், நல்ல வார்த்தைகளால், மனக்கவலையை நிவர்த்திப்பர். ஒன்றையும் விரும்பாதவர்களும், என்னிடத்திலேயே சித்தத்தை செலுத்தியவர்களும், எல்லாவற்றையும் சமமாக பார்ப்பவர்களும், அகங்காரமற்றவர்களும், சுக, துக்கமில்லாதவர்களும் சாதுக்களாவர். அவர்கள், என்னுடைய கதையை எப்போதும் கானம் செய்வதால், பரிசுத்தர்களாவர்.
என்னுடைய கதையை எவர் கேட்கின்றனரோ, எவர் கானம் செய்கின்றனரோ, எவர் ஆமோதிக்கின்றனரோ, அவர்களுக்கு என்னிடம் சிரத்தையும், பக்தியும் உண்டாகும். இப்படி என்னிடம் பக்தி செய்யும் சாதுவுக்கு எதுதான் கிடைக்காது? சாதுக்களை சேவிப்பவனுக்கு, சம்சார பயம் நிவர்த்தியாகி விடும்.
பிராணிகளை அன்னம் எப்படி காப்பாற்றுகிறதோ, உபத்திரவம் அடைந்தவர்களை நான் எப்படி காப்பாற்றுகிறேனோ, மரித்தவர்களை தர்மம் எப்படி காப்பாற்றுகிறதோ, அப்படி சம்சாரத்தில் மூழ்கி தத்தளிப்பவர்களை, சாதுக்கள் காப்பாற்றுகின்றனர். ஆதலால், சாதுக்களே தேவதைகள், பந்துக்கள், ஆத்மா, சாதுக்களே நான்… என்று சொல்லி, இந்த அத்தியாயத்தை முடிக்கிறார் பகவான்.
யோசித்துப் பாருங்கள்… நாம் எதில் புத்தியை செலுத்த வேண்டும்; எதில் ஆசை வைக்க வேண்டும் என்று புரியும்!

%d bloggers like this: