சிவப்பு துணியைக் கண்டால் மாடு மிரளுமா? உண்மையா?

இன்றைய சூழலில் சிலவிஷ யங்கள் தவறாகவே பொருள் கொள்ளபடுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் அதை நம்பவும் செய்கிறோம். இந்தமாதிரியான நம்பிக்கையை அதிக அளவில் திரைபடங்கள் தான் ஏற்படுத்துகின்றன. ஆனாலும் எது சரியானது என்பதை சரியாக தீர்மானிக்க வேண்டியது நாம் தான். அது பற்றிய ஒரு சிறப்பு பார்வை :

தவறான தகவல்: சிவப்பு துணியைக் கண்டால் மாடு மிரளும்.

உண்மை: பல சினிமாக்களில் மாட்டை நடிக்க வைத்து, இது உண்மை என்று நிருபித்து படம் எடுத்து இருக்கிறார்கள். அதாவது, மாடு யாரை முட்ட வேண்டுமோ அவரை சிவப்பு நிற ஆடையில் வர வைத்து, அதை பார்த்து மாடு மிரண்டு, அவரை முட்டுவதுபோல் படமாக்கி இருப்பார்கள். ஆனால், இது உண்மை அல்ல. சிவப்பு துணியைக் கண்டால் மாடு முட்டவே முட்டாது. அதை விசிறும்போதுதான் மாடு மிரளுகிறது. இதுதான் உண்மை.சிவப்பு துணியை விசிறினால் மட்டுமல்ல, பச்சை, நீலம், மஞ்சள்… என்று எந்த நிறத்தில் உள்ள துணியை விசிறினாலும் மாடு மிரளும்; முட்ட வரும். அதுவும், சம்பந்தபட்ட மாட்டின் முன்பு விசிறினால் தான் அது மிரளும். மற்றபடி, துணியின் நிறத்திற்கும், மாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும், மற்ற நிறங்களைக் காட்டிலும் வெள்ளை நிறம் மாட்டிற்கு இன்னும் தெளிவாகத் தெரியும்.

பொதுவாக, நாம் வீட்டில் வளர்க்கும் மாடு, பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு எல்லாக் காட்சிகளும் கறுப்பு, வெள்ளை போல்தான் தெரியும். அதாவது, பிளாக் அன்ட் ஒயிட் சினிமா போன்று! மற்ற நிறங்கள் மிருகங்களுக்கு தெரியாமல் போகக்காரணம், அவை இரவில் வேட்டையாடியதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதேநேரம், மனித இனத்தின் முன்னோர்களான குரங்கு இனங்களுக்கு மட்டும் எல்லா நிறங்களும் நன்றாகத் தெரியும். பூச்சி இனங்களில் தேனீக்கள் நிறங்களை சரியாக அடையாளம் கண்டு கொள்கின்றன. தேனீக்கு மட்டும் எப்படி நிறம் தெரிகிறது என்பதை அறிய ஒரு சோதனையும் நடத்தினார்கள். விஞ்ஞானிகள்.

அந்த சோதனையின்படி, தேனீக்களுக்கு பிடித்தமான நீல நிற அட்டையில் தேனை தடவியும், சிவப்பு நிற அட்டையில் தேன் இல்லாமலும் வைத்து அவற்றை சோதனை செய்து பார்த்தார்கள். நீல நிற அட்டையில் தேன் வைத்தாலும், வைக்காவிட்டாலும் அவற்றை மொய்த்தன தேனீக்கள். ஆனால், சிவப்பு நிறத்தை அவை கண்டுகொள்ளவே இல்லை. அந்த நிறத்தை ஒரு மாதிரியான பழுப்பு நிறத்தில் தேனீ பார்ப்பதாக கண்டறிந்தனர் விஞ்ஞானிகள். நம் கண்ணுக்கு தெரியாத புற ஊதா நிறம்கூட தேனீக்கு நன்றாக தெரிகிறதாம்.

தவறான தகவல்: நல்ல பாம்பை அடிக்கபோய், அது சாகாமல் தப்பித்துவிட்டால், திரும்பி வந்து பழி வாங்கும்.

உண்மை: உண்மையைச் சொல்லபோனால் பாம்பு இனங்களில் மிகவும் `நல்ல’ பாம்பு, இந்த நல்ல பாம்புதான். மற்ற பாம்புகளை அடித்தாலோ, அடிக்க முயற்சித்தாலோ உடனே சீறி வந்து கடித்து விடும். ஆனால், நல்ல பாம்பு மட்டும்தான், `என் அருகில் வராதே…’ என்று படமெடுத்து எச்சரிக்கை காட்டும். தொடர்ந்து, தன்னை தாக்க வருபவரை நோக்கி ஓரிரு முறை சீறி பயமுறுத்தும். இந்த எச்சரிக்கைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் அதை தாக்கினால்தான் அது நம்மை தீண்டும். மற்றபடி, அது நம்மை பார்த்தாலே, உனக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஓட்டம் பிடிக்கவே பார்க்கும்.

சரி… இனி விஷயத்துக்கு வருவோம். நல்ல பாம்பாக இருந்தாலும், எந்த பாம்பாக இருந்தாலும் மனிதனை பார்த்துவிட்டால் ஓடி ஒளிந்து, தன் உயிரைக் காப்பாற்றத்தான் முயற்சிக்கும். அதுமட்டுமின்றி, நாம் அடிக்கபோய் பாம்பின் உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் கூட, அதை எறும்பு போன்ற சிறு உயிரினங்கள் மொய்க்க ஆரம்பித்து விடும். அத்துடன், காயம் ஏற்பட்ட காரணத்தால் வேகமாக நகர முடியாமல் தவித்து உயிரையே விட்டுவிடும். அப்படி இருக்கும்போது, அது பழி வாங்க மீண்டும் வரும் என்பதெல்லாம் வெறும் கற்பனைக் கதையே!

மேலும், மகுடி ஊதினால் நல்ல பாம்பு படமெடுத்து ஆடும் என்பதை பல சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். இதுவும் தவறு. ஏனென்றால், எந்த பாம்புக்கும் காதே கிடையாது. அப்படி இருக்கும்போது எப்படி மகுடி சத்தத்திற்கு நல்ல பாம்பு மட்டும் ஆட முடிம்? அதற்கு காது என்பது `வைபரேஷன்’ (அதிர்வுகள்) தான். எதிரி ஓடி வருவதை நில அதிர்வு வழியாக உணரும் பாம்பு, சட்டென்று ஓட்டம் பிடிக்கிறது. இரை வருவதையும் அவ்வாறே உணரும் பாம்பு, சட்டென்று பதுங்கி அதை கவ்விக் கொள்கிறது.

அதுசரி… மகுடி ஊதும்போது நல்ல பாம்பு ஆடுகிறதே… அது எப்படி என்று கேட்கிறீர்களா? அதற்கு காது கேட்காது என்றாலும் பார்வை தெரியும் அல்லவா? நம் கையில் இருக்கும் மகுடியும் தெரிம் தானே? அந்த மகுடியை அங்கே இங்கே என்று ஆட்டும்போது, பாம்பும் பின்தொடர்ந்து தலையை அசைக்கிறது. அது, நமக்கு பாம்பு மகுடி ஓசைக்கு ஏற்ப ஆடுவது போன்று தெரிகிறது. அவ்வளவுதான். மகுடி மட்டுமல்ல, கையில் சிறு குச்சியை எடுத்து, அதன் முன்பு ஆட்டினாலும், அதற்கு ஏற்ப நல்ல பாம்பு தலையை அசைந்து கொடுக்கும்.

தவறான தகவல்: காணும் கனவுகளுக்கு ஏற்ப பலன்கள் ஏற்படும்.

உண்மை: நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன. இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதுபோலத்தான், கனவுகள் தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!

கட்டிலில் இருந்தோ அல்லது வேறு எங்கேயாவது இருந்தோ கீழே விழுவதுபோல் கனவு கண்டால், எதுவும் பிரச்சினை வந்து விடுமோ என்று பயப்பட தேவையில்லை. நம் முதாதையர்கள் மரங்களில் வாழ்ந்தவர்கள்தானே? மரத்தில் இருந்து கீழே விழுந்தால் ஆபத்து என்று அவர்களுக்கு இருந்த உள்ளுணர்வு நமக்கும் தொடர்வதுதான், கீழே விழுவது போன்ற கனவு வரக் காரணம் என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.

பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம்.   கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்: பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன. ஏன்… தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது. மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன.

ஒரு மறுமொழி

  1. brother this site is very useful and exellent.

%d bloggers like this: