பழகுவதில் `உஷார்’ வேண்டும்

வஞ்சகம் செய்பவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. அவர்களுடைய அறியாமையால் தான் அதைச் செய்து வருகிறார்கள். ஏசுநாதரை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்களுக்காக அவர் பிதாவிடம் பரிதபித்தார். “பிதாவே இவர்களை மன்னியும். அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்.” என்று அன்று அவர்சொன்ன வார்த்தைகள், இன்றும் பகைவர்களை மன்னிக்கும் தெய்வக்குரலாக இருந்து வருகிறது.

பெரிய புராணத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம்.

மெய்பொருள் நாயனார் எல்லோருக்கும் நல்லவர் தான். ஆனால், அவரை முத்திநாதன் எதிரியாக கருதினான். அவரை வென்று விட பல முறை முயன்றான். முடியவில்லை. இறுதியில் வஞ்சகமாக அவரை கொலை செய்ய எண்ணினான். உடல் முழுவதும் திருநீறு அணிந்து அடியவர் போல வேடம் போட்டான். ஒரு நீண்ட வாளை ஓலைச்சுவடியினுள் வைத்து சுற்றி மறைத்து வைத்துக் கொண்டு அவரை சந்திக்கச் சென்றான்.

“உங்களிடம் ஒரு நுலின் உண்மை பொருளை பற்றி கூற வந்துள்ளேன். அதனால், நாம் இருவரும் தனியான இடத்தில் அமர்ந்து பேசலாம்” என்று அவரை நயவஞ்சகமாக அழைத்தான்.

அவனது நயவஞ்சக பேச்சை உண்மையென்று நம்பி, நாயனாரும் அவனை தனியிடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவன் ஓலைச்சுவடியை அவிழ்ப்பது போல பாவனை செய்து, அதனுள் மறைத்து வைத்திருந்த வாளை உருவி அவரை வெட்டி வீழ்த்தினான்.

உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நாயனாரின் நிலையைக் கண்டு, ஆத்திரமடைந்த அவரது மெய்க்காப்பாளன் தத்தன் ஓடிவந்தான். அவன் முத்திநாதனைக் கொல்ல வாளை உருவும்போது, நாயனார் அந்த மரணத்தறுவாயிலும், “தத்தா, அவர் நமது உறவினர் தான். அவரைக் கொல்லாதே. அவருக்கு எந்த விதமான தீங்கும் நேராதவாறு பாதுகாப்பாக வெளியே கொண்டு போய் விட்டு விடு” என்று கூறி, தன் இன்னுயிரை நீத்தார்.

மன்னிக்கும் பக்குவம் எல்லாருக்கும் இருந்து விடுவதில்லை. தெய்வரீதியிலோ, மகான்கள் ரீதியிலோ தான் இப்படியான பக்குவநிலையை பார்க்கமுடிகிறது.

மனிதன் `கூடி வாழும் ஒரு சமுக விலங்கு’ என்று உளவியல் நிபுணர்கள் கூறுவதுண்டு. நாம் தினமும் தொழில்ரீதியாகவோ நட்பு ரீதியாகவோ எத்தனையோ மனிதர்களை சந்திக்க வேண்டியதாகிறது. ஒவ்வொவாருவரும் ஒவ்வொருவிதமான மனநிலையில் இருப்பவர்கள். இவர்களின் எண்ணங்களுக்கேற்ப நாம் அனுசரித்து நடக்கமுடியாத சூழ்நிலை பலநேரங்களில் நமக்கு ஏற்படும். ஆனாலும் வேறுவழியின்றி அவர்களை சகித்துக் கொள்கிறோம். ஆனாலும் இப்படிபட்டவர்களுடன் நம்மால் தொடர்ந்து சகிப்புத்தன்மைடன் இருக்க முடிவதில்லை. நமக்கென்று உள்ள நம் தனித்தன்மை இவர்களால் மறைந்தே போகும் என்கிற எச்சரிக்கை மணி தான் இவர்களிடம் இருந்து நம்மை பிரித்து விடுகிறது.

ஒருவிதத்தில் இந்த புரிதல்…அதனால் பிரிதல் நல்லது தான். பழக நேர்ந்தவர்களின் பாவ முட்டைகளையெல்லாம் நாம் சுமக்க நாமென்ன தேவ அவதாரமா?

%d bloggers like this: