அழகுக்கு அழகூட்ட…

என்றும் இளமையுடனும் முகப் பொலிவுடனும், புத்துணர்ச்சியுடனும் வாழவே அனைவரும் விரும்புவோம். அழகை பராமரிக்க சிலர் பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர். அழகு நிலையங்கள், பல புதியதாக முளைத்துள்ளன. கவர்ச்சித் தரும் விளம்பரங்களுடன் அழகு கிரீம்கள், லோசன்கள் என எண்ணிலடங்கா அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றால் இயற்கையான அழகைப் பெறமுடியுமா என்றால் கேள்விக்குறிதான் . இவற்றால் 100 சதவிகிதம் இயற்கையான அழகை தரமுடிவதில்லை. மேலும் சிலருக்கு உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி முகத்தை கருமையாகிறது. சிலருக்கு முகம் சுருக்கம் அடைந்து விடுகிறது.

என்றும் இளமையுடன் வாழ மலச்சிக்கலும், மனச்சிக்கலும் இருக்கக்கூடாது என்பதுதான் சித்தர்களின் கூற்று. இந்த இரண்டு சிக்கல்தான் மனிதனை எளிதில் முதுமையடையச் செய்கிறது.

மலச்சிக்கலையும், மனச்சிக்கலையும் நீக்கினால் மனிதன் என்றும் இளமையுடனும், புத்துணர்வுடனும் வாழலாம்.

மேலும் முகத்தை இயற்கையான மூலிகைகள் கொண்டு பராமரித்தாலே நல்ல முகப் பொலிவைப் பெறலாம்.

முகம் பொலிவுற

கடலைமாவு – 5 கிராம்

மஞ்சள் தூள் – 5 கிராம்

எலுமிச்சை சாறு – 10 மி.லி.

பசும் பால் – 10. மிலி

எடுத்து நன்றாக குழைத்து முகதத்தில் பூசி 30 நிமிடங்கள் காயவைத்து பின் இளஞ்சூடான நீரில் முகம் கழுவி வர வேண்டும். இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் முகம் பொலிவு பெறும்.

முகப்பரு, வேணல் கட்டி மாற

சோற்றுக் கற்றாழையில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலை, முகம், உடல் முழுவதும் பூசி 10 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வந்தால், உடலின் வெப்பம் தணிந்து வெப்பத்தினால் உண்டாகும் சரும நோய்கள் நீங்கும்.

முகம் மிருதுவாக

ரோஜாப்பூ இதழ்களை அரைத்து அதனுடன் பயிற்றம் மாவு சேர்த்து பால் கலந்து நன்றாகக் குழைத்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவினால் முகம் மிருதுவாகி பளபளக்கும்.

முழங்கை, முழங்கால் சொரசொரப்பு நீங்க

சிலருக்கு முழங்கை, முழங்கால் சொர சொரப்பாகவும் கருத்தும் இருக்கும். இவர்கள் தேங்காய் எண்ணெய் 10 மிலி எடுத்து அதனுடன் 10 மிலி எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலக்கி இலேசாக சூடாக்கி வைத்துக்கொண்டு, முழங்கை, முழங்கால் மற்றும் சொரசொரப்பாக இருக்கும் பகுதிகளில் பூசினால் சொரசொரப்பு நீங்கி தோல் மென்மையாகும்.

உலர்ந்த எலுமிச்சை தோலை பொடியாக்கி அதனுடன் பாசிப் பயறு மாவு சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெய் விட்டு குழைத்து கை, கால், விரல்கள் மற்றும் சொரசொரப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும்.

%d bloggers like this: