கிடைத்த வாழ்க்கையை…(பெர்னாட்ஷா)

அறிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் முலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க முடியவில்லை.

பெர்னாட்ஷா, சிறுவயதில் ஒரு அலுவலகத்தில் எடுபிடி வேலை பார்த்து வந்தார். அந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை. தனது வாழ்க்கை வீணாகி போகுமே என்ற அச்சம் ஏற்பட்டது. வேலையை விட்டு விலகி, தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “இறைவன் கொடுத்தது ஒரேயொரு வாழ்க்கை. அதையும் எடுபிடி வேலையில் சேர்ந்து வீணாக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டார்.

அதன்பிறகு வாழ்க்கை போராட்டத்தில் சலிப்பின்றி தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட்டார். உலகபுகழ் பெற்ற நாடக ஆசிரியரானார். இலக்கியத்திற்கான நோபல் பரிசும் பெற்றார்.

இந்த வெற்றி அவ்வளவு சுலபமாக அவருக்கு கிடைத்து விடவில்லை. நாவல்கள் பல எழுதித் தோல்வி கண்டார். சோதனைகளையும், வேதனைகளையும், தோல்விகளையும் அடுத்தடுத்து சந்தித்தார். ஆனால், துவளவில்லை. விடாமுயற்சிடன் தன் லட்சியத்தைத் தொடர்ந்தார். வாழ்வில் வெற்றி கண்டார்.

`ஒரே முறை கிடைத்த வாழ்க்கையை வீணாக்க மாட்டேன்’ என்ற அவருடைய லட்சியத்தில் அவர் கொண்ட மனஉறுதி தான் அவரை வெற்றி பெற வைத்தது.

பெர்னாட்ஷா புத்தக கடைக்குச் சென்றார். அப்போது அவர் எழுதிய புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. அதை எடுத்து பார்த்ததும் அதிர்ச்சியானார். அந்த புத்தகம், அவருடைய நெருங்கிய நண்பருக்கு பரிசாகக் கொடுத்தது.

உடனே பெர்னாட்ஷா, கடைக்காரரிடம் காசு கொடுத்து அந்த புத்தகத்தை விலைக்கு வாங்கினார். அந்த புத்தகத்தில், “மீண்டும் அன்பளிப்பாக அதே புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்” என்று எழுதி கையெழுத்து போட்டு அந்த நண்பருக்கு அனுப்பினார்.

அதை பெற்றுக் கொண்ட நண்பருக்கு குற்ற உணர்ச்சி எப்படி இருந்திருக்கும்?

பெர்னாட்ஷா நண்பருக்குத் திருப்பி அனுப்பியதில் ஒரு உள்நோக்கம் இருந்தது. தன்னுடைய படைப்பின் பெருமையை உணராத நண்பருக்கு அதை உணர்த்துவது ஒரு நோக்கம்.

நண்பர்கள் தங்கள் அன்பின் அடையாளமாக நமக்கு அளிக்கின்ற பொருளை போற்றி பாதுகாப்பது தான் நாம் அவர்களின் அன்பை பெற்றுக் கொண்டதற்கு அடையாளம் என்பதை உணர்த்துவது மற்றொரு நோக்கம். `நம்மை மதிப்பவர்களை நாமும் மதிக்க வேண்டும்’ என்பதைத் தான் இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது.

%d bloggers like this: