புவி வெப்பமாதல்…

இயற்கையின் அருட்கொடையை நாம் அளவிட முடியாது. எந்த ஒரு சூழலிலும் அந்த சூழ்நிலைக்கேற்ப எல்லா உயிரிகளும் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரங்களை இயற்கை கொடுத்துள்ளது.

பஞ்ச பூதங்களே இயற்கையின் உயிர் நாடிகள், இயற்கை மலை, மழை, காடு, கடல், பனி சிகரங்கள், நல்ல நீர் ஊற்றுக்கள், வெந்நீர் ஊற்றுக்கள், என ஒவ்வொன்றும் வியக்கத்தக்கவைதான்.

இன்றைய நவீன விஞ்ஞானம் அனைத்தும் இயற்கையிலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் இயற்கை அதிகம் கொடுக்கிறதே என்பதற்காக இயற்கையையே நாசப்படுத்த மனிதன் விழைகிறான். 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி மற்றும் 6ம் தேதி இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய முரட்டுத்தனத்தால் ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசியது. இன்று அதாவது 68 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்பகுதியில் புல் பூண்டு ஏதும் முளைக்கவில்லை. அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவும், மனநலம் குன்றியும் பிறக்கின்றனர். இந்நிலை இப்படியென்றால், இங்கு மேற்கித்திய கலாச்சாரம் ஆடையில் மட்டுமின்றி, பழம் பெருமை வாய்ந்த இந்திய கலாச்சாரத்தை அழித்ததுடன், அதன் பெருமைவாய்ந்த இந்திய விவசாயத்தை வேரோடு அழிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக இந்திய தட்ப வெப்ப நிலையில் அரிய பல மூலிகைகள் வளரும் தன்மை கொண்டவை. இவை எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. தற்போது தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விளை நிலங்கள் அனைத்தும் தரிசு காடுகளாக மாறி வருகின்றன. இதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் சில உண்மைகள் புலப்படும்.

கலாச்சாரத்திற்கும், விருந்தோம்பலுக்கும் நீண்ட பாரம்பரியம் கொண்ட நம் தமிழகத்தின் 69 சதவீத நிலங்கள் இன்று தரிசாகவும், மனை நிலங்களாகவும் மாற்றப் பட்டுள்ளன.

கிராம மக்கள் தங்களின் பிழைப்பு தேடி நகரங்களுக்கு குடியேறி வருகின்றனர். காரணம் வறுமைதான். வானம் பார்த்த பூமியாக இருக்கும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஒரு போகம் நெல், அடுத்து தானிய வகைகள், என பயிரிட்டு முன்பு விவசாயம் செய்து வந்தனர். அவர்கள் வீட்டைச்“ சுற்றியும், கண்மாய், ஏரிக்கரையிலும் மரங்களை நட்டு வைத்தனர். நீர்த் தேக்கங்களை மக்களே தூர்வாரி சீராக்கினர்.

நீர் வரும் கால்வாய்களை நன்கு பராமரித்தனர். ஏரிகளின் மாவட்டமாக செங்கல்பட்டு முன்பு விளங்கியது. தற்போது ஆக்கிரமிப்பால் எதிர்காலத்தில் ஏரியில்லா மாவட்டமாக ஆகும் நிலையில் உள்ளது.

பின்தங்கிய இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களில் அதிகளவு ஏரி குளங்களை அக்காலத்தில் ஏற்படுத்தி மழை நீரை சேமித்தனர். ஆனால் இன்றோ ஏரிகள் அனைத்தும் தனியார்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி மனை நிலங்களாக மாறிவிட்டன. விளை நிலங்கள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துக்கொண்டன. இதனால் மழைநீர் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது. மரங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது வெறும் வாசகமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. மரத்தை இழந்ததால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.

இரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஆற்றுப் படுகைகள் உவர் நிலமாக மாறிவிட்டன. அரிய பல மூலிகைகள் பல அழிந்துவிட்டன. விவசாயத்தில் அதிகளவு ரசாயன உரங்கள், விஷமருந்துகள், களைக்கொல்லி போன்றவற்றால் விவசாய நிலங்கள் முற்றிலும் தரம் குன்றிவிட்டன. ஏற்கனவே வேலிக் கருவை, யூகலிப்டஸ் போன்றவற்றால் நிலத்தை மாசுபடுத்தி புவி வெப்பத்தை அதிகரித்தது போல், நிலங்கள் இந்த இரசாயன உரங்களால் புல் பூண்டு முளைக்காமல் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இடங்களைப் போல் மாறிவிட்டன.

இதனால் பசுமை படர்ந்த நிலங்களிலிருந்து உற்பத்தியான ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. காற்றில் கரியமில வாயு அதிகரித்து புவி வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு தமிழகத்தில் கோடைவெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் எங்கும் அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இன்று தமிழ்நாட்டில் காலூன்றி நிற்கின்றன. இவை வெளியிடும் புகை, நீரால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.

வீட்டின் முன்புறத்தில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் கோடையை கழித்தவர்கள் இன்று குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைகளில் வாழ்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்கள், மக்காத குப்பைகளை அதிகம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் கழிவுகளாக வெளியேற்றுகின்றன. இவை தமிழகத்தை வறட்சிப் பாதைக்கு இட்டுச் செல்கின்றன.

இந்நிலை மாற அரசு விளைநிலங்களை கடுமையான சட்டங்கள் இயற்றி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விவசாய நிலங்களை வாங்கிக் குவிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றாமல், மீண்டும் விவசாய நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரம் வளர்ப்பதற்கு பள்ளி முதல் கல்லூரி வரை அனைவருக்கும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி மரத்தை வளர்த்தால் புவி வெப்பத்தின் பாதிப்பிலிருந்து நாம் விடுபடலாம்.

ஆண்டுக்கொருமுறை நிலங்களை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து அவற்றின் தன்மையை அறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் விவசாய நிலங்கள் காப்பாற்றப்படும்.

%d bloggers like this: