Daily Archives: ஜூன் 14th, 2010

உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடம்!

உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை, சமீபத்தில் துபாய் நகரில் உள்ள, “புர்ஜ் துபாய்’ என்ற கட்டடம் பெற்றுள்ளது. அதற்கு போட்டியாக, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில், மிக உயரமான ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய் கட்டடத்தை விட, உயரத்தில் இந்த ஓட்டல் 36 அடி மட்டுமே குறைவு. எனினும், இந்த ஓட்டலின் உச்சியில் வைக்கப்பட இருக்கும் கடிகாரம், உலகின் மிகப் பெரிய கடிகாரம் என்ற பெருமையைப் பெற உள்ளது.
“மெக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டலைச் சுற்றி, ஏழு உயரமான கட்டடங்கள் உள்ளன. லண்டன் பிக்பென் கடிகாரத்தை விட 4.7 மடங்கு பெரிய கடிகாரம், இந்த கட்டடத்தின் உச்சியில் வைக் கப்பட உள்ளது. இந்த ஓட்டலின் மொத்த உயரம் 1591 அடி. மொத்தம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப் பட்டுள்ளது. புனித நகரமான மெக்காவில் மிகவும் ஆடம்பர, அதிக கட்டணம் கொண்ட ஓட்டல் இதுதான். இந்த ஓட்டலில், 1005 அறைகள் உள்ளன. அதில் தங்கி இருப்பவர்கள் பயணிக்க, 76 லிப்ட்கள் உள்ளன.
இந்த ஓட்டலின் இன்னொரு பகுதியில், இரண்டு ராயல் ஓட்டல்கள், ஐந்து கோல்டன் ஓட்டல்கள் உருவாக உள்ளன. அந்த ஓட்டல்கள் மிகவும் ஆடம்பரமாக இருக்கும். அதில் உலக மகா கோடீஸ்வரர்கள், துபாய் ஷேக்குகள் மட்டுமே தங்க முடியும். அந்த ஓட்டல் அறைகள், கிட்டத்தட்ட அரண்மனை போல இருக்கும் என, இந்த ஓட்டல்களை நிர்வகிக்க இருக்கும் உலகப் பிரசித்தி பெற்ற, “பெயர்மன்ட்’ ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் ஓட்டல் திறக்கப் பட உள்ளது. ஜூலை மாதம் முதல், இந்த ஓட்டலின் உச்சியில் உள்ள கடிகாரம் இயங்கத் துவங்கும். ஜெர்மனி யில் தயாராகும் இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது. கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும், இந்த கடிகாரம் இருக்கும். “ஹஜ்’ நேரத்தில் மட்டும் மெக்காவிற்கு 40 லட்சம் பேர் வருகின்றனர்; மற்ற மாதங்களில் பல லட்சம் பேர் வருகின்றனர். எனவே, இந்த ஓட்டலுக்கு, எப்போதும் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
***

எப்போதும் முத்துப்பல்!’

புன்னகையே முகத்திற்கு அழகு. `பளிச்’ பற்கள் சிரிப்பிற்கு அழகு. பற்களை இழந்துவிட்டால் முகமே பொலிவிழந்துவிடும்.

இன்றைய சூழலில் சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லாத் தரப்பினருக்கும் பற்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு வெவ்வேறு சிகிச்சை முறைகளும் இருக்கின்றன. ஆனால் எதுவும் நிரந்தரமில்லை.

வாழ்நாள் முழுவதும் பல் பிரச்சினையே வராமல் இருக்க புதிய வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் செயற்கையாக பல்லை வளர்க்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப்பிரிவு விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் பல்லில் இருந்து ஒரு துண்டை எடுத்து அதை ஸ்டெம்செல் தொழில்நுட்பத்தில் வளர வைக்கிறார்கள். அதன்பிறகு டைட்டானியம் தாதுவால் உருவாக்கப்பட்ட திருகு கொண்டு தாடை எலும்புடன் பல்லை இணைக்கிறார்கள். தொடர்ந்து அதைச்சுற்றி ஈறு செல்களை வளர வைக்கிறார்கள்.

`இந்த முறையில் 9 வாரங்களில் பல்லை வளர வைக்க முடியும். இதனால் அடிக்கடி பல் பராமரிப்புக்கு செலவு செய்வது தடுக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் பல் பிரச்சினையே இல்லாமல் இருக்கலாம்’ என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பல்வேறு ஆய்வுக்கூடங்களில் வெவ்வெறு பல் மருத்துவ நிபுணர்கள் சோதித்துப் பார்த்து இது உறுதிசெய்யப்பட்டது. எனவே எதிர்காலத்தில் இந்த மருத்துவ முறை உலகம் முழுவதும் பிரபலம் அடையும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

உங்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் ரோபோ!

இன்றைய சூழலில் வேலை… வேலை… என்று எந்திர கதியில் இயங்கும் மனிதன் சீக்கிரமே களைப்படைந்து விடுகிறான். ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. சிக்கலான இத்தகைய நேரங்களில் உங்களுக்குப் பதிலாக (பினாமி போல) ஆஜர் ஆகப்போகிறது இந்த ரோபோ.

இதைப் பயன்படுத்தி உங்கள் வேலைகளைச் செய்ய வைக்கலாம். நீண்ட நேரம் நடக்கும் கூட்டங்களில் இந்த ரோபோவைக் கலந்து கொள்ளச் செய்து தேவையான விவரங்களைப் பெறலாம். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்து வீடியோ கான்பரன்ஸ் முறையில் உறவுகளிடம் நட்பு பரிமாறிக் கொள்ளலாம்.

நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த ரோபோவை இயக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. கலிபோர்னியாவின் சிலிகான் வேலி பகுதியில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. போப் கிறிஸ்டோபர் என்பவர் இதை உருவாக்கி இருக்கிறார். க்கி.பி. ரோபோ (Q.B. Robot) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பதற்காக இந்த ரோபோவில் பல சிறப்பு வசதிகள் இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கது இந்த ரோபோவின் உயரம். சாதாரணமாக 3 அடி உயரத்தில் இருக்கும் ரோபோ ஒரு வேலையைச் செய்யும்போது (தேவைப்பட்டால்) தன் உயரத்தை கழுத்தை நிமிர்த்துவதன் முலம் 5.7 அடியாக உயர்த்தி பணியை செய்து முடிக்கும்.

கண்கள் போல பார்க்கும் திறனுக்காக 5 எம்.பி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நெற்றி இருக்கும் இடத்தில் சிறு திரை உள்ளது. இதில் உங்கள் (உரிமையாளர்) படம் தெரியும். இதன் முலம் கான்பரன்ஸ் முறையில் பேச முடியும். காதுபோல கேட்கும் வேலையைச் செய்ய 3 மைக்ரோபோன்கள் உள்ளன.

வயரில்லா தொழில்நுட்பத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் வீட்டில் இருந்து செல்போன், கணினி முலம் தொடர்பு கொள்ளலாம். கான்பரன்சிங் முறையில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும், ஒரு வேலையை செய்ய வைக்கவும் முடியும்.

பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த ரோபோ வசதியாக இருக்கும். இதன் விலை சுமார் 7 லட்சம் ருபாய்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாசம் உண்டு!

“சே… என்ன நாற்றம் இது?’ என, மற்றவர்களிடமிருந்து வெளியேறும் வியர்வை நாற்றத்தை வெறுக்கிறோம்.
உங்கள் மீது நாற்றம் எடுக்கிறதா என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை எனில், உங்கள் தாயிடம் கேளுங்கள். அவர் தான், உண்மையான பதிலை சொல்வார்.
உடல் துர்நாற்றம், அது வெறுக்கத்தக்கதாக இருந்தாலும், வியர்வை வெளியேற்றுபவரை விட, அருகில் இருப்பவருக்கு தான் கஷ்டத்தைத் தரும்! நம் நாற்றம் நமக்குத் தெரியாத வகையில் தான், நம் மூக்கு பழக்கப்பட்டிருக்கிறது. நண்பர்கள், குடும்பத்தினர், காதலர்கள் என யாருமே, வெறுத்து ஓடச் செய்யும் சங்கடமான விஷயம் இது.
ஒவ்வொருவருக்கும் தனி வாசம் உண்டு. இந்த வாசம், தனித்துவம் வாய்ந்ததாக இருப்பதால், எளிதில் அடையாளம் காணலாம். வாசத்தை நுகர்வது, ஆதிமனிதன் முதலே இருக்கும் சுபாவம்.
கற்கால மனிதர்கள், இந்த வாசத்தை வைத்து தான், வழிப் போக்கர்கள், இரை, மூதாதையர்கள், விலங்குகளை அடையாளம் கண்டனர். நாகரிகம் வளர்ந்த பின், மனிதனின் வாசம் முக்கியத்துவத்தை இழந்தது. தற்போது, தனிப்பட்ட வாசம், அவசியமற்ற, கற்கால பழக்கம் என ஒதுக்கித் தள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது.
ஒரு சில நறுமணங்கள் அல்லது மிகவும் வெறுக்கத்தக்க வாசங்களை தான் நாம் இப்போது உணர்கிறோம்.
ஆனால், குழந்தைகள் வாசங்களைச் சட்டென கிரகித்துக் கொள்வர். பிறக்கும்போதே, தாயின் வாசம் அவற்றுக்கு மிக நன்றாகத் தெரிவதால் தான், தாய் வருவதை இருட்டிலும் உணர்ந்து கொள்வர்.
சிலர் உடல் வாசனை நன்றாக இருக்கும்; சிலர் வாசனை, அருவருக்கத்தக்கதாக இருக்கும். துவைக்காத துணியை அணிவது, நோய் வாய்பட்டிருப்பது, இயற்கையாகவே நாற்றத்தன்மை கொண்டிருப்பதால், இந்த நிலை.
உடல், வாய் துர்நாற்றத்தால், காதல், புகழ், நட்பு ஆகியவற்றை இழப்பது போல், பவுடர் மற்றும் வாசனை திரவியங்கள் குறித்த “டிவி’ விளம்பரங்களில் காட்டப்படுவது உண்மையே.
வியர்வை நாளங்களிலிருந்து தான் வாசனை கிளம்புகிறது. “எக்ரைன்’ என்ற நாளம், உடல் முழுவதும் உள்ளது. இது, உடல் வெப்பநிலையைச் சீராக வைக்க உதவுகிறது. “அபோக்ரைன்’ வியர்வை நாளம், தொடை இடுக்கு மற்றும் அக்குளில் காணப்படுகிறது. இவை, நிறமற்ற, வாசமற்ற நீரைத் தான் வெளியேற்றுகின்றன.
ஆனால், காற்றோட்டம் இல்லாத இந்த பகுதிகளில் பாக்டீரியாக்கள் வளர்வதால், அவையே நாற்றத்தை உண்டாக்குகின்றன. வியர்வையை உறிஞ்சாத உடைகள் அணிவதால் இந்த நாற்றம் ஏற்படுகிறது. வியர்வையை பாக்டீரியாக்கள் சிதைப்பதால், நாற்றம் உருவாகிறது.
செபாக்கஸ் கிளாண்டு என்றழைக்கப்படும், சரும மெழுகுச் சுரப்பிகள், உடல் முழுதும் பரவிக் கிடக்கின்றன. இவற்றிலிருந்து வெளியாகும் மெழுகையும், பாக்டீரியா பதம் பார்ப்பதாலும், இறந்த செல்கள், பாக்டீரியாக்களுக்கு உணவாகப் பயன்படுவதாலும், உடலில் நாற்றம் ஏற்படுகிறது.
நோய்வாய்ப்பட்டவர்கள் மருந்து உட்கொள்வதால், அவர்களின் உடல் துர்நாற்றம் தனியாகத் தெரியும். கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் பாதிப்பு, மனநோய், நீரிழிவு நோய், சிறுநீரக பாதையில் தொற்று, புற்றுநோய் உள்ளவர்கள் உடலில், வித்தியாசமான நாற்றம் ஏற்படும். ரசாயன பரிசோதனை முறை அறிமுகம் ஆகும் முன், இந்த நாற்றத்தை வைத்தே, எந்த நோய் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
குழந்தைகளிடம் வியர்வை நாற்றம் அதிகம் ஏற்படாது. ஆனால், தினமும் குளிக்கவில்லை எனில், அழுக்கு சார்ந்த நாற்றம் அவர்களிடம் ஏற்படும். மூக்கொழுகுதல், அடினாய்டு, டான்சிலைட்டிஸ், வாயால் மூச்சு விடுதல், பல்லில் தொற்று, காதில் தொற்று, மூக்கில், காதில், பிறப்புறுப்பில், கூழாங்கல், பெரிய கொட்டைகளைத் தெரியாமல் திணித்துக் கொள்வதால் கூட, குழந்தைகளிடம் துர்நாற்றம் ஏற்படும்.
சிகரெட் புகைப்பது, மது குடிப்பது ஆகிய பழக்கங்கள் கூட, ஒருவரின் வாசத்தை மாற்றியமைக்கின்றன. மூச்சு, தோல், ஆடை ஆகியவற்றில் இந்த வாசம் தெரியும். இந்த வாசத்திலிருந்து விடுபட, சிகிச்சை உண்டு.
சாதாரண துர்நாற்றம் வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமை, பல், ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் ஏற்படுகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில், “பிரஷ்’ செய்தால் இந்த துர்நாற்றம் இருக்காது.
தினமும் இரண்டு வேளை குளித்தால், உடல் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். குழந்தைகள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு இது மிகவும் அவசியம். சமையல் சோடாவை தண்ணீருடன் கலந்து வைத்து, நீக்கோ போன்ற “டிரைகுளோரெக்சிடைன்’ அடங்கிய, பாக்டீரியாவை அழிக்கக் கூடிய சோப்பை தேய்த்து குளிக்கலாம்.
சோப்பை நேராக உடலில் தேய்க்காமல், பீர்க்கங்காய் நாரில் சோப்பை தேய்த்து, நாரால் உடலை சுத்தம் செய்யலாம். உடலின் வியர்வை இறந்த செல்கள், “செபம்’ என்றழைக்கப்படும் மெழுகு ஆகியவற்றை நீக்கும்.
தொடை, அக்குள் போன்ற இடங்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும். இதன் மூலம், காற்றுபடாத இந்த இடங்களில் பாக்டீரியாக்கள் வளர்வதும், துர்நாற்றமும் குறையும்.
குளித்த பின், பாடி ஸ்பிரே பயன்படுத்தலாம். ரோல் ஆன் மற்றும் வியர்வை வெளியாவதைத் தடுக்கும் ஸ்பிரேக்கள், வியர்வை சுரப்பிகளை அடைத்து, தொற்றுக்களை ஏற்படுத்தும். பவுடர் பூசுவது சருமத்துக்கு நல்லதல்ல. இவையும் தொற்றை உருவாக்குபவை தான். சுத்தமான, துவைத்த பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. காய்ந்து போன வியர்வை கொண்ட, அழுக்கு துணிகளை அணிவது நல்லதல்ல. வெயில் காலங்களில், காலிலிருந்து வியர்வை நாற்றம் கிளம்பும். காட்டன் சாக்ஸ், அதிகம் மூடப்படாத செருப்பு ஆகியவற்றை அணிவதன் மூலம் இந்த துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

வாழையடி வாழை…வாழையின் மகத்துவம்

பாரத தேசத்தின் கலாச்சாரத்தில் வாழைக்கு முக்கிய பங்கு உண்டு. விழாக்களிலும் வாழை மர தோரணம்… வரவேற்பிலும் வாழைதான்… விருந்து உபசரிப்பிலும் வாழைதான்.

வாழையை நம் முன்னோர்கள் பெண்களாகவே எண்ணி வந்துள்ளனர். வாழையில்லாத வீடு பெண் இல்லாத வீட்டுக்கு சமம் என்று சொல்வார்கள். வாழையை வீட்டைக் காக்கும் பெண் தெய்வமாகவே பழக்காலத்தில் போற்றி வந்துள்ளனர். மங்கள நிகழ்ச்சியென்றால் வாழைக்குத்தான் அதிக பங்கு.

வாழையின் அனைத்து பாகங்களுமே மனித ஆரோக்கியத்தை முன்னிருத்தியிருக்கின்றன. இடி தாங்கியாகவும் வாழையே விளங்குகிறது.

வாழை அநேக மருத்துவப் பயன்களைக் கொண்டது. குறிப்பாக விஷப் பூச்சிகளின் தாக்குதலின்றி காக்கும் தன்மை வாழைக்கு உண்டு. இதனால்தான் சுபகாரியங்களில் வாழையை முதன்மையாக நட்டு வைக்கின்றனர்.

வாழை ஒரு கிருமி நாசினியாகும். வாழையின் ஒரு சிறிய கன்றை நட்டு வைத்தால் அதிக பட்ச கன்றுகளுடன் ஒரு குடும்பமாக காட்சி தரும். வாழையை அம்பணம், அரம்பை, ஓசை, கதலி, கவர், சேகலி, திரணபதி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

அடுக்கு வாழை, ரஸ்தாளி வாழை, பூவன் வாழை, கருவாழை, கொட்டை வாழை, செவ்வாழை, நவரை வாழை, நாட்டு வாழை, பசும் வாழை, பேயன் வாழை, மலை வாழை, மொந்தன் வாழை வேள் வாழை, பச்சை வாழை, மோரீஸ் வாழை, கற்பூர வாழை, நேந்திரம் வாழை, சந்தன வாழை, மட்டி வாழை, ரசக்கதலி, கதலிவாழை, மதுரவாழை, சிங்கன் வாழை, கல்வாழை என பல வகைகள் உள்ளன.

வாழையின் மருத்துவப் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் சில மருத்துவப் பயன்களை அறிவோம்.

வாழை இலை

வாழை இலையில் உணவு பரிமாறுவது நம் தென்னிந்திய விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

தீக்காயம் பட்டவர்களை வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும்.

வாழைப் பூ

100 கிராம் வாழைப்பூவில்

கால்சியம் – 32 மி.கி.

பாஸ்பரஸ் – 42 மி.கி.

புரதம் – 1.3 மி.கி.

நார்ச்சத்து – 1.3 மி.கி.

மற்றும் இரும்புச் சத்து, வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பூ துவர்ப்புத் தன்மை உள்ளதால் இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,.

வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைக்கும். இரத்தம் சுத்தமாகும். இரத்த ஓட்டம் சீராகும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வாழைப் பூ சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு கலந்து அருந்தினால் வெட்டை நோய், குருதி வெள்ளை, வயிற்றுக் கடுப்பு நீங்கும். மலச் சிக்கலைப் போக்கும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும். தாதுவை விருத்தி செய்யும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள்,

வாழைப்பூ – கால் பாங்கு

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

பூண்டுப்பல் – 4

இஞ்சி – 1 துண்டு

நல்ல மிளகு – 5 எடுத்து சூப் செய்து காலை உணவுக்குப்பின் அருந்தி வந்தால், சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும்.

வாழைப் பிஞ்சு

வாழைப் பிஞ்சு மருத்துவக் குணம் கொண்டது. இரத்தக் கொதிப்பை குணப்படுத்தும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதைக் குறைக்கும். மூலத்தில் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வாழைக்காய்

100 கிராம் வாழைக் காயில்

இரும்புச் சத்து 6.3 மி.கிராம்

ஃபோலிக் அமிலம் 16.0 மி.கி

மற்றும் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்கள் நிறைந்துள்ளது.

போலிக் அமிலப் பற்றாக்குறையால் கருவுற்ற தாய்க்கும், குழந்தைக்கும் உண்டாகும் ரத்தச் சோகையைப் போக்க வாழைக்காய் சிறந்த மருந்தாகும்.

அதிக ஊட்டச்சத்து கொண்ட இது வாயுவை அதிகரிக்கும் குணமுள்ளதால் உணவில் அளவோடு சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. வாழைக்காயை சமைக்கும்போது அதிகளவு பூண்டு, இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைப்பழம்

முக்கனிகளில் இதுவும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமாகும். வாழைப் பழத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும், உயிர்ச் சத்துக்களும் நிறைந்துள்ளன.

100 கிராம் வழைப்பழத்தில்

நீர்ச்சத்து – 66.4 கிராம்

நார்ச்சத்து – 0.5 கிராம்

கொழுப்பு – 0.3 கிராம்

புரதம் – 1.2 கிராம்

மாவுப்பொருள் – 28.0 கிராம்

சக்தி – 114.0 கலோரி

பாஸ்பரஸ் – 36.0 மி.கி.

இரும்புச்சத்து – 0.8 மி.கி.

சுண்ணாம்புச் சத்து – 16.0 மி.கி.

தையாமின் – 0.05 மி.கி.

கரோட்டின் – 0.78 மி.கி.

ரைபோஃபிளேவின் – 0.07 மி.கி

நியாசின் – 0.5 மி.கி.

வைட்டமின் ஏ – 12.01

வைட்டமின் பி – 0.5 மி.கி.

வைட்டமின் பி2 – 0.08 மி.கி.

வைட்டமின் சி – 0.02 மி.கி.

வைட்டமின் டி – 0.03 மி.கி

வைட்டமின் கே – 0.02 மி.கி

வாழைப்பழத்தின் மருத்துவக் குணங்கள்

· மலச்சிக்கலைப் போக்கும்

· உடல் தசைகளை வலுப்படுத்தும்.

· நரம்புத் தளர்ச்சி நீங்கி, நரம்புகள் புத்துணர்வு உண்டாக்கும்.

· இருதயம் பலப்படும்

· சீரண சக்தியைத் தூண்டும்

கை கால் நடுக்கம் உள்ளவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப் படி சாப்பிடலாம்.

வாழைத் தண்டு

வாழைத் தண்டில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஆகிய தாதுப் பொருட்கள், வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கல் அடைப்பைக் கரைக்கும்.

வாழைத் தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து அதனுடன் மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் சிறுநீரக கல் கரையும். வாழைத்தண்டு சாறை கொதிக்க வைக்காமல் அருந்துவது தவறு. விஷக்கடி பாதிப்பு உள்ளவர்கள் வாழைத் தண்டு சாறு எடுத்து குடித்தால் விஷ முறிவு உண்டாகும்.

வாழைத்தண்டு – 4 அங்குலம்

வெள்ளைப் பூண்டு – 3 இதழ்

சின்ன வெங்காயம் – 4

சீரகம் – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு எடுத்து ஒன்றாகச் சேர்த்து சூப் செய்து அருந்தினால் தேவையற்ற உப்பு, கொழுப்புகள் கரையும்.

கண் பார்வை நரம்புகளில் தேங்கி நிற்கும் உப்புப் படிவங்கள் நீக்கிப் பார்வையை தெளிவடையச் செய்யும். வாழைத்தண்டு சாறு நரம்பு மண்டலத்தைத் தூண்டி சுறுசுறுப்பு அடையச் செய்யும்.

பித்தத்தைக் குறைக்கும். மாதம் ஒருமுறை வாழைத்தண்டு சூப் செய்து அருந்துவது நல்லது.

வயது முதிர்ந்த ஆண் பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம், மூட்டு வலி வந்து கை கால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறு மிகுந்த பயனளிக்கும். இந்த மருத்தை அகத்தியர் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அற்புத மருந்து என்று ஆச்சரியம் 1500 நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

வாழை முட்டிக் கிழங்கு

வாழை முட்டியை இடித்து சாறு எடுத்து இலேசாக கொதிக்க வைத்து அருந்தினால் சிறுநீரகத்தை சீராக்கி சிறுநீரைப் பெருக்கும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகத்தைப் பலப்படுத்தும். மூல நரம்பு வியாதிகளுக்கு வாழை முட்டி சிறந்த மருந்தாகும்.

வாழையின் அரிய பயன்களை அறிந்து அவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோமாக..

எது உண்மை?-தத்துவ ஞானி ஓஸ்பென்ஸ்கி

ரஷ்யாவைச் சேர்ந்த தத்துவ ஞானி ஓஸ்பென்ஸ்கி. அவர் பல தத்துவ நுல்களை எழுதி புகழ் பெற்றவர். அவர் ஒருமுறை குர்ட் ஜெ என்ற பிரெஞ்சுத் துறவியை பார்க்கச் சென்றார். அந்தத் துறவியிடம், “நாம் இருவரும் நிறைய பேச வேண்டும்.” என்று கூறினார்.

உடனே, குட்ஜெ அவரிடம் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்து, “உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை ஒரு பட்டியலாகவும், தெரியாத விஷயங்களை இன்னொரு பட்டியலாகவும் எழுதுங்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களை பற்றி முதலில் பேசுவோம்.” என்றார்.

ஓஸ்பென்ஸ்கி காகிதத்தை எடுத்துக் கொண்டு ஒரு முலையில் போய் உட்கார்ந்தார். முதலில் கடவுள் பற்றி யோசித்து பார்த்தார். அவரை பற்றி தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஆன்மாவை பற்றி சிந்தித்தார். அதுபற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்பதை உணர்ந்து கொண்டார். பல விஷயங்களை பற்றி யோசித்து பார்த்து விட்டு தனக்கு எதுபற்றியும் முழுமையாகத் தெரியவில் லை என்ற முடிவுக்கு வந்தார்.

வெற்றுக் காகிதத் தைக் கொண்டு போய் குர்ட் ஜெபிடம் கொடுத்தார். “தெரி ந்த விஷயம் என்று பார்த்தால், எதை பற்றியும் எழுத முடியவில்லை.” என்றார் ஓஸ்பென்ஸ்கி. உடனே, அவர் “அப்படியானால், புகழ்பெற்ற தத்துவ நுல்கள் எல்லாம் எப்படி உங்களால் எழுத முடிந்தது?” என்றார். “அவை வேறொன்றுமில்லை. வார்த்தைகளைத் தோரணங்களாகக் கட்டுவதில் வல்லவனாக இருந்திருக்கிறேன். உண்மையைத் தேடுகிறபோது தான் எனக்கு அது அகப்படவில்லை.” என்றார்.

“உண்மையை உணரத்தான் முடியுமே தவிர, எடுத்துச் சொல்ல முடியாது.” என்றார் குர்ட்ஜெ.

நாம் கற்பவை யாவும் உண்மையின் விளக்கங்களாகி விட முடியாது. உணரப்படுபவை மட்டுமே உண்மை என்கிற தெளிவை நாம் பெற வேண்டும்.

பெண்களுக்கு கூச்சம் ஏன்?

கூச்சம் என்பது அறிமுகம் இல்லாதவரிடம் ஆறு முதல் எட்டு நிமிடங்கள் வரையிலும், அறிமுகமானவர்களிடம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்கிறது…

பிறக்கும்போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை. தங்களின் வசதிக்காக அவர்களே இந்தக் கூச்சக் குணத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.

உடல், சூழல் என்ற இரண்டு காரணங்களால் தான் அதிகமான கூச்ச உணர்வு ஏற்படுகிறது. முளையில் `செரட்டோனின்’ என்ற ரசாயனம் குறைம் போது தானாகவே பயம், பதட்டம், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனபான்மை, தயக்கம் போன்ற உணர்ச்சிகள் உருவாகின்றன. இதை மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையென்றால், கூச்சம் நம் குணமாகவே மாறிவிடும். இதைத் தான் `கூச்ச சுபாவம்’ என்கிறோம்.

கூச்சமின்றி தைரியமாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நேரத்தை சாதக மாக மாற்றத் தெரியாவிட்டால், அதுவே உங்கள் மனதுக்கு பாரமாகி விடும். உங்களின் கூச்சத் துக்கு நீங்கள் மட்டுமே காரணம்.

பெற்றோரின் அதிகபடியான பாதுகாப்பும், அக் கறையும் கூச்ச உணர்வை ஏற்படுத்தி விடும். எந்தக் காரியத்தையும் பிள்ளைகளை செய்ய அனுமதிக்காமல், பெற்றோர்களே செய்வதால் பிள்ளைகளுக்கு தைரியம் வராமல் போய் விடு கிறது. அதனால் அவர்கள் வளரும்போது கூச்ச சுபாவமும் சேர்ந்து வளர்ந்து விடுகிறது.

மற்றவர்கள் நம்மை பார்த்து பரிதாபப்பட வேண்டும், கருணையாக பார்க்க வேண்டும் என்று சிலர் உள்ளூர விருப்பம் கொள்கிறார்கள். இதனால் தான் கூச்ச சுபாவத்தை வளர்த்துக் கொள்கின்றனர். அதுவே நாளடைவில் அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக வந்து நிற்கிறது.
எதனால் இந்த கூச்சம்? கூச்ச சுபாவம் உள்ளவர்கள் எதிரில் இருப்பவர் `நம்மை விட சிறந்தவர்’ என்று கருதி விடுகிறார்கள். இதனால், தாழ்வு மனபான்மை வந்து விடுகிறது. சமுக சூழ்நிலைகளைக் கண்டு பயப்படுவது தான் `சோஷியல் போபியா’. இது போன்ற மனபதட்டம் சம்பந்தமான நோய்கள் இருந்தாலும் இந்த பிரச்சினை வரும். கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறி விடும். அப்போது நீங்கள் பயந்து ஒதுங்கும் போது மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அதனால் வெற்றி பெற முடியாமல் போய்விடுகிறது. கூச்சம் உள்ளுக்குள் இருக்கும் திறமையை நீங்கள் உணராதபடி செய்து விடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்று போக கூச்சம் தான் காரணம். உங்களிடம் எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்கள் முன்னேற்றத்திற்கு தடை போடும்.

நடராஜர் உருவான வரலாறு! (ஆன்மிகம்)ஜூன் 19 – ஆனி உத்திரம்!


சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறைக் கேளுங்கள்:
சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்; ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலை நீடித்தது. அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்ன செய்வீர்களோ தெரியாது… சிலை செய்தாக வேண்டும். அதுவும் இன்று மாலைக்குள் செய்தாக வேண்டும்; இல்லாவிட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்…’ என, எச்சரித்து விட்டு போய் விட்டான்.
அவர்கள் எவ்வளவோ முயற்சித்தனர்; சிலை செய்ய முடியவில்லை. தங்கள் வாழ்வு இறுதிக் கட்டத் திற்கு வந்துவிட்டது என்று பயந்து போயிருந்த நிலையில், ஒரு முதியவரும், மூதாட்டியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த பெரியவர்கள், அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர். எரிச்சலில் இருந்த சிற்பிகள், “குடியுங்கள்… நிறைய குடியுங்கள். நாங்கள் சாகப் போகிறோம்; போகும் போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்…’ என்று சொல்லி, ஒரு செம்பில், நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர்.
முதியவர்கள் அதை குடித்தனர். உடனே நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர். தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சிலை அமைந்த வரலாற்றை மன்னனுக்கு எடுத்துக் கூறினர். மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான்.
அந்நியர் படையெடுப்பின் போது, கோவில்களில் உள்ள சிலைகள் நொறுக்கப்பட்டன. அபூர்வமான நடராஜர் சிலை பாழ்பட்டு விடக் கூடாது என்பதால், தில்லை வாழ் அந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும் சிலையைஎடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றனர். கடைசியாக, மலையாள தேசத்துக்கு எடுத்துச் சென்று, ஒரு ஆலமரப்பொந்தில் ஒளித்து வைத்தனர். இதனால், அந்த ஊருக்கு, “ஆலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. அந்நியர்கள் சென்றதும், அந்தச் சிலையை அவ்வூரிலுள்ள அம்பலத்தில் (கோவிலில்) வைத்து பூஜை செய்தனர். அந்த இடத்துக்கு, “அம்பலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து, நடராஜர் சிலை உருவானது.
சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அதில், ஆனி உத்திர நாளும் ஒன்று. இந்த நன்னாளில், நடராஜப் பெருமானை வணங்கினால், பிறப்பற்ற நிலை கிடைக்கும்.