Daily Archives: ஜூன் 20th, 2010

நடிகைகள்… காலணிகள்!

செலினா ஜெட்லி – 1,300 ஜோடி காலணிகள்

இந்தக் கணக்கெடுப்பில் முதலிடத்தில் வருபவர், செலினா ஜெட்லி. இவரிடம் இருபவை 1,300 ஜோடி காலணிகள்! இன்னும் இந்தக் கணக்கு கூடிக் கொண்டிருக்கிறது. தான் ஒரு காலணி பைத்தியம் என்று வெளிபடையாக ஒத்துக்கொள்கிறார் செலினா. தன்னிடம் 1,300 ஜோடி காலணிகள் இருக்கின்றன என்று சமீபத்தில் `டுவீட்டரிலும்’ எழுதியிருந்தார். “எனது காலணி மோகம் அளவற்றது. காலணிகளுக்கு நான் அடிமை” என்கிறார் செலினா.

டீன் ஏஜ் பருவத்திலேயே செலினாவிடம் எண்ணற்ற காலணிகள் இருந்தனவாம். “டீனேஜ் பருவத்தில் என்னிடம் 90 ஜோடி காலணிகள் இருந்தன. எனக்காக ஆடை வாங்கி காசை `வீணாக்க’ வேண்டாம், என்று நான் எங்கப்பாவிடம் கூறுவேன்” என்கிறார்.

இவர் வாங்கிய முதல் அடுக்குமாடி வீடு, உடனடியாக ஒரு காலணி கடையாக மாறிவிட்டதாம்.

“அங்கு குடியேறியதும் நான் செய்த முதல் விஷயம், ஒரு அறை முழுவதும் எனது செருபுகளுக்காக அலமாரிகள் அமைத்ததுதான்!” என்கிறார் அசராமல்.

தொடர்ந்து, “என்னிடம் 1,300 ஜோடி காலணிகள் இருந்தபோதும் நான் அடிக்கடி அணிவது 8 ஜோடி காலணிகளைத்தான்” என்றும் `அடக்கமாக’ கூறுகிறார் செலினா ஜெட்லி.

லாரா தத்தா – 400 ஜோடி காலணிகள்
செலினா ஜெட்லியின் `சாதனை’யை நெருங்க முடியாது என்றாலும், லாரா தத்தாவும் காலணி பிரியைதான். இவரிடம் உள்ள காலணிகளில் பெரும் பாலானவை குதிகால் உயர்ந்தவை. அந்தக் காலணிகளில் `கிறிஸ்டியன் லோபோட்டின்’, `ஜிம்மி சூ’ போல பிரபல பிராண்ட்களும் அடக்கம். `தான், குதிகால் உயர்ந்த காலணிகளை விரும்பு பவள்’ என்று கூறுகிறார் லாரா தத்தா.

பிரியங்கா சோப்ரா – 80 ஜோடி காலணிகள்

பிரியங்கா சோப்ராவிடம் 80 ஜோடி காலணிகள் இருக்கின்றன. பிரபல காலணி நிறுவனமான `சல்வாட்டோர் பெரகாமா’ இவரை கவுரவிக்கும் விதமாக ஸ்பெஷலாக காலணிகளை உருவாக்கிக் கொடுத்தது. இந்திய நடிகைகளிலேயே இந்தக் கவுரவம் பெற்றவர் இவர் மட்டும்தான். `பேஷன்’ நட்சத்திரம் மலைக்கா அரோரா கானிடம் 150 ஜோடி காலணிகள் இருக்கின்றன. அவற்றில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஜோடி எது என்று கேட்டால், “எனக்கு அவை எல்லாவற்றைமே பிடிக்கும்” என்கிறார். தீபிகா படுகோனே, ஒரு அலமாரி முழுக்க காலணிகளை அடுக்கியிருப்பதாகக் கூறினாலும், தன்னிடம் `அதிக’ எண்ணிக்கையிலான காலணிகள் இல்லை என்கிறார். “என்னிடம் எத்தனை ஜோடிகள் இருக்கின்றன என்று எண்ணியதில்லை. இனியும் எண்ண மாட்டேன்” என்று கூறுகிறார் தீபிகா. தானும் ஒரு அலமாரி நிறைய காலணிகள் வைத்திருபதாகக் கூறும் கரீனா கபூர், `பேக்’குகளை விட காலணிகள் பெண்களை அழகாகத் தோன்ற வைக்கும் என்கிறார்.

பணக்கார தம்பதி… எளிய வாழ்க்கை..!

இந்தியாவிலேயே பணக்கார மனிதர் அவர்… இந்தியாவின் பிரபலமான சமுக சேவகி, `மும்பை இண்டியன்ஸ்’ கிரிக்கெட் அணியின் முகம் அவரது மனைவி.

அந்த சக்தி வாய்ந்த தம்பதி, முகேஷ் அம்பானி- அவரது வாழ்க்கைத் துணை நிதா.

ஆனால் அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் முக்கியமானதாகக் கருதுவது, தங்கள் குழந்தைகளை எளிமையாக வளர்பதும், ஏறக்குறைய ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்வதும்.

“மற்ற குழந்தைகளை போலவே எளிமையாக இருக்கும்படி நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு (இரட்டையர் ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த்) கூறுகிறோம். நாங்கள் அவர்களை வெளியிடங்களில் இருந்து அழைத்து வர விமானங்களை அனுப்புவதில்லை, அவர்கள் `ஏர் இந்தியா’ விமானத்தில் தான் பயணம் செய்கிறார்கள். அது அவர்களுக்கு பிடிக்கவும் செய்கிறது. பல மாணவிகள் சேர்ந்து இருக்கும் `டார்மட்டரி’யில் தான் இஷா தங்கி படிக்கிறாள். அங்கு ஒரு மேல் படுக்கை அடுக்கில் படுத்துக் கொள்கிறாள். 20 பெண்களுடன் குளியலறையை பகிர்ந்துகொள்கிறாள். இதெல்லாம் அனைத்துக் குழந்தைகளும் கடந்து வர வேண்டிய முக்கியமான விஷயங்கள். எங்கள் குழந்தைகளும் இவற்றை விரும்புகிறார்கள். சொல்ல போனால் அவர்கள் தற்போது என்னையும் ஏர் இந்தியா விமானத்திலேயே பயணம் செய்யச் சொல்கிறார்கள்” என்கிறார் நிதா.

“நான் எனது தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டது, அவர் மிக மிக `பிஸியாக’ இருந்த நேரத்திலும் குழந்தைகள் எங்கள் நால்வருக்கும் நேரம் ஒதுக்கியிருக்கிறார். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அறிந்திருப்பது அவசியமானது” -இது முகேஷ் அம்பானி.

“முகேஷ் இல்லாமல் நான் `டின்னர்’ சாப்பிட்டதே இல்லை. எவ்வளவு தாமதம் ஆனாலும் குழந்தைகள் அவருடன் பேசிவிட்டுத்தான் படுப்பார்கள். வீடு திரும்பும்போது பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவார். அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களை ஆர்வமாகச் சொல்லிக் கொடுப்பார். அவர் ஒரு `ட்யுஷன்’ ஆசிரியர் மாதிரி செயல்படுவார். இஷாவும், ஆகாஷும் வெளியிடங்களுக்கு படிக்க போய்விட்ட பிறகு வீடே `வெறிச்’சிட்ட மாதிரி இருக்கிறது” என்கிறார் நிதா நிதானமாக.

அடுத்து முகேஷ் பேசுகிறார், “குழந்தைகள் நுறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அஸ்திவாரம் உறுதியாக இருக்க வேண்டும். எனது முத்த மகன் ஆகாஷ் ஒருமுறை கேட்டான், `அப்பா… கால்குலேட்டர்தான் இருக்கே, அப்புறம் ஏன் வாய்பாடு படிக்கணும்?’ என்று. ` எல்லாவற்றைம் உன் `தலையால்’ செய்யக் கத்துக்கணும்’னு நான் சொன்னேன். அதன்பின் ஒவ்வொரு நாள் இரவும் என்னிடம் அவன், பெருக்கல் வாய்பாடு, கூட்டல் வாய்பாட்டை மனபாடமாக ஒப்பித்து விட்டுத்தான் படுக்கச் செல்வான்!”

இன்னும் தனது சிந்தனையெல்லாம் `நடுத்தர வர்க்கமாகவே’ இருப்பதாக நிதா கூறுகிறார்: “நான் இன்றும் சாதாரணமாகவே இருக்கிறேன். எனது சிந்தனையிலும், மதிப்பீடுகளிலும் ஒரு நடுத்தர வர்க்க பெண்ணாகவே உள்ளேன். நானும் முகேஷும் சாதாரணமாக இருபதையே முக்கியமாகக் கருதுகிறோம்” என்று முடிக்கிறார்.

கினியா பிக்

மிகச்சிறிய விலங்கான இதை `கினியா பிக்’ என்று அழைப்பர். அது தவறு. இதனுடைய பெயர் தான் கினியா. ஆனால், இது பன்றி அல்ல. அறிவியல் அறிஞர்கள் இதை கெவியா போர்செல்லஸ் என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக `கேவி’. கேவி என்றால் `கொறிக்கும் விலங்கு’ என்று பொருள். தெற்கு அமெரிக்காவின் பல வீடுகளில் பரவலாக இது வளர்க்கபடுகிறது.

`போர்செல்லஸ்’ என்றால் `சிறிய பன்றி’ என்று அர்த்தம். இது 25 செ.மீ. நீளம் மட்டுமே வளரும். 1.2 கிலோகிராம் எடை கொண்டது. `பிரட்’ தான் இவற்றின் உணவு. தெற்கு அமெரிக்கா மட்டுமல்லாமல், ஐரோப்பா மற்றும் பிரிட்டனின் உயர்வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கும் இவைதான் செல்ல பிராணிகள்.

தற்போது இவற்றின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இவை பயந்தாங் கொள்ளிகளாக இருக்கின்றன. அதேநேரம் மனிதர்களிடம் நண்பனைபோல பழகுகின்றன. எந்த இடத்தில் உணவை மறைத்து வைத்தாலும், அதை எளிதில் கண்டு
பிடித்து விடும் ஆற்றல் இவைகளுக்கு உண்டு. அளவில் சிறியதாக இருந்தாலும், தண்ணீரில் சிறப்பாக நீந்துகின்றன.

விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு!

இப்போது விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் ஒன்றாகத்தான் தங்க வேண்டும். ஒரு விண்வெளி வீரர் தனிமை விரும்பியாக இருந்தாலும் அவர் தனியே தங்க வாய்ப்பிருக்காது. அதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கவிருக்கிறது, அமெரிக்கா லாஸ் வேகாஸில் உள்ள `பிகெலோவ் விண்வெளி இருப்பிட கட்டுமானத் தொழிற்சாலை’.

இத்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள எதிர்காலத்துக்கான மாதிரி விண்வெளி இருப்பிடங்கள் பெரிய தர்ப்பூசணியைப் போலக் காட்சியளிக்கின்றன. இவற்றின் உள்ளே சென்றாலே ஒரு வசதியான வசிப்பிடத்துக்கான அனைத்து வசதிகளையும் காண முடிகிறது.

“எங்கள் தொழிற்சாலைக்கு வந்து இவற்றைப் பார்க்கும் ஒவ்வொரு விண்வெளி வீரரும் பெரிதும் வியந்து போகின்றனர். இந்த அளவுக்கு ஓர் இருப்பிடத்தை உருவாக்க முடியும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை” என்று இந்தத் தொழிற்சாலையின் நிறுவனரான ராபர்ட் பிகெலோவ் தெரிவிக்கிறார்.

இன்னும் நான்காண்டு காலத்தில் இந்த விண்வெளி வசிப்பிடங்கள் விண்
வெளிக்குச் செல்லப் போகின்றன. அப்போது இவை முதல் விண்வெளி `தனி வசிப்பிடங்களாக’ இருக்கும்.

`பேயிங் கஸ்டமர்களுக்கான’ இருப்பிடங்கள் அதற்கடுத்து ஓராண்டுக்குப் பின் ஏற்படுத்தப்படும். விண்வெளி நிலையம் அமைக்கும் நிபுணத்துவமோ, பொருளாதார வசதியோ இல்லாத நாடுகள் அந்தக் குடியிருப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக, 2016-ம் ஆண்டில் ஒரு பெரிய விண்வெளிக் குடியிருப்பு அமைக்கப்படும். அப்போது அங்கு ஒரே நேரத்தில் 36 விண்வெளி வீரர்கள் வசிக்க முடியும். அது, தற்போதைய சர்வதேச விண்வெளி நிலையத்தில் வசிக்கும் விண்வெளி வீரர்களைப் போல ஆறு மடங்கு அதிகம்.

2017-ம் ஆண்டில் 15 முதல் 20 ராக்கெட் ஏவுதலுக்குக் கட்டணம் செலுத்தியுள்ளது `பிகெலோவ்’ நிறுவனம். அதற்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராக்கெட் ஏவுதலைப் பயன்படுத்திக்கொள்ளும். அதன்மூலம் வர்த்தக ரீதியாக விண்வெளிக்கு ஆட்களைக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது. தனியாரின் இந்த முயற்சிக்கு அமெரிக்க அரசும் ஆதரவு அளிக்கிறது.

விண்வெளிக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட விண்கலங்களை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 2011-ம் ஆண்டில் 600 கோடி டாலர்கள் என்ற பெருந்தொகையை முதலீடு செய்யவுள்ளது ஒபாமா அரசு.

தனியார் நிறுவனங்களின் வர்த்தக ரீதியான விண்வெளி முயற்சிகள் வெற்றி பெற்றால், பணம் செலுத்தும் எவரும் விண்வெளிக்குப் பயணம் செய்து அங்கு குறிப்பிட்ட நாட்களுக்குத் தங்கலாம்.

`பிகெலோவ்’ நிறுவனத்தின் விண்வெளி வசிப்பிடத்துக்குப் பூமியிலிருந்து செல்லவும், அங்கு 30 நாட்களுக்குத் தங்கவும் தற்போது ஏறக்குறைய 112 கோடி ரூபாய் கட்டணமாக விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அதிகமாகத் தெரிந்தாலும், ரஷியாவின் `சோயுஸ்’ விண்கலத்தின் மூலம் தனது வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப `நாசா’ செலுத்தும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது குறைவுதான்.

`சூடான்சர்’ என்ற பெயர் கொண்ட, 6,400 கனஅடி பரப்புக் கொண்ட விண்வெளி இருப்பிடத்தை முதலில் விண்வெளிக்கு அனுப்ப `பிகெலோவ்’ திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு 11,700 கனஅடி பரப்புக் கொண்ட இரண்டாவது `சூடான்சர்’ விண்வெளிக்கு அனுப்பப்படும்.

விண்வெளி இருப்பிடங்கள் நிறுவப்பட்டதும், தாங்களால் உணவு, நீர், காற்று விநியோகத்தை மேற்கொள்ள முடியும், திடீரென ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்று `பிகெலோவ்’ நிரூபித்துக் காட்டும். இந்நிறுவனம் தற்போது கூறும் விஷயங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டால், எதிர்கால விண்வெளி வசிப்பிடத்துக்கும், பூமியில் உள்ள ஓட்டல்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இருக்காது என்று கூறப்படுகிறது.

உறுதியான உடலை பெற… ஈஸி டிப்ஸ்!

ஆரோக்கியமான உணவை மட்டும் நாம் எப்போதும் சாப்பிட்டு வர வேண்டும். தேவைக்கேற்பவோ அல்லது ருசிக்காகவோ கூட பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடக்கூடாது.

உடற்தகுதிக்குரிய உடற்பயிற்சிகளை தவறாமல் தினமும் செய்து வர வேண்டும். குறிப்பாக சிட் அப்ஸ் எனப்படும் உட்கார்ந்து எழுந்திருக்கும் பயிற்சியை தினமும் கட்டாயம் செய்ய வேண்டும். உணவை நன்றாக மென்று தின்ன வேண்டும். தினமும் ஒரு நிமிடமாவது, நாம் செய்யும் வேலைகளில் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்கிறோமோ என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதயத் தசைகளை வலுவடையச் செய்யும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் போது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்தைக் குறைத்து விடலாம். இதுவே உடலைக் கட்டுமஸ்தாக ஆக்குவதற்குரிய சிறந்த முறையாகும்.

கொழுப்பைக் குறைப்பதற்காக தேவையற்ற வழிமுறைகளில் வீணாகச் செலவு செய்ய வேண்டாம். சிறப்பு வகை டானிக் போன்ற மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டிய தேவையில்லை.

கொழுப்பைக் குறைத்து உடலை வாளிப்பாக மாற்றும் என்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி தேவையற்ற பொருட்களை வாங்கி உடலைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் உடலமைப்பிற்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை தகுந்த பயிற்சியாளர்களின் ஆலோசனையுடன் தினமும் செய்து வந்தாலே போதும். நீங்களும் சிக்ஸ் பேக்-அப் உடம்பை பெறலாம்.

உற்சாகம் தரும் எலுமிச்சை…

சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.

மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான்.

முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.

உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.

கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

100 கிராம் எலுமிச்சை பழத்தில்

நீர்ச்சத்து – 50 கிராம்

கொழுப்பு – 1.0 கிராம்

புரதம் – 1.4 கிராம்

மாவுப்பொருள் – 11.0 கிராம்

தாதுப்பொருள் – 0.8 கிராம்

நார்ச்சத்து – 1.2 கிராம்

சுண்ணாம்புச் சத்து – 0.80 மி.கி.

பாஸ்பரஸ் – 0.20 மி.கி.

இரும்புச் சத்து – 0.4 மி.கி.

கரோட்டின் – 12.மி.கி.

தையாமின் – 0.2 மி.கி.

நியாசின் – 0.1 மி.கி.

வைட்டமின் ஏ – 1.8 மி.கி.

வைட்டமின் பி – 1.5 மி.கி.

வைட்டமின் சி – 63.0 மி.கி

எலுமிச்சையின் பயன்கள்

வயிறு பொருமலுக்கு

சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.

தாகத்தைத் தணிக்க

தற்போது கோடைக்காலத்தின் முடிவில் இருக்கிறோம். இருந்தும் கோடை வெயிலின் வேகம் குறையவில்லை. அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.

கல்லீரல் பலப்பட

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

தலைவலி நீங்க

ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

நீர்க் கடுப்பு நீங்க

வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.

இரத்தக் கட்டுக்கு

உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க

சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.

பித்தம் குறைய

எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.

நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.

· எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.

· எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.

· தாதுவைக் கெட்டிப்படுத்தும்.

· உடல் நமைச்சலைப் போக்கும்

·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.

· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.

எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.