Daily Archives: ஜூன் 21st, 2010

செல்போன் சில விஷயங்கள்

எல்லாருக்குமே கைக்குழந்தையாகி விட்டன, செல்போன்கள். எப்போதும் சிணுங்கிக் கொண்டிருப்பது அதன் மழலைமொழி. மாறாத நேசம் நமக்கு அதன்மீது. ஆனால் குழந்தைகளுக்கும், செல்போன்களுக்கும் சில வித்தியாசம் உண்டு.

நாம் தாலாட்டுவதற்கு பதில் அதுதான் மெல்லிசை பாடல்களால் நம்மைத் தாலாட்டி தூங்க வைக்கும். அதோடு அவசியமான விஷயங்களை நினைவுபடுத்தும். அதை சீராட்டி, பாராட்டி பாதுகாத்தால் நீண்டநாள் பலன் தரக்கூடியவை.

உங்கள் செல்போன்களை பாதுகாக்க இதோ அருமையான டிப்ஸ்… எபோதும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் செல்போனை மற்றவர்கள் பயன்படுத்த முடியாமல் செய்வதோடு, உங்கள் அந்தரங்க விஷயங்களையும் பாதுகாக்கும். புளூடூத் மற்றும் வி.பி. போன்ற தொடர்பு இணைப்புகளை பயன்படுத்தி முடித்தவுடன் `ஆப்’ செய்துவிடுங்கள். குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கிடைக்கும் தேவையற்ற பாதுகாப்பு மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். வழியாக வைரஸ்கள் பரவுவதால் கவனமாக கையாளவும். முன்பின் தெரியாதவர்களின் எஸ்.எம்.எஸ்.களுக்கு பதிலளிப்பது அல்லது `மிஸ்டுகால்’களுக்கு தொடர்பு கொள்வதை தவிர்த்துவிடுங்கள். எஸ்.எம்.எஸ்.கள் வழியாக வரும் புதிய அறிவிபுகளை தகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அணுகலாம். அல்லது தவிர்த்தாலும் நல்லதே. தேவையற்ற `ஸ்பாம்’ மெசேஜ்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தால் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கலாம். அவசியமற்ற மற்றும் அந்தரங்கமான, ஆபாச விஷயங்களை மொபைல்களில் தேவையில்லாமல் சேமித்து வைப்பதை தவிர்க்கவும். உங்களது செல்போனின் ஐ.எம்.ஈ.ஐ. நம்பரை டைரி அல்லது பாதுகாப்பான இடத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது மொபைல் திருட்டு போனால் கண்டுபிடிக்கவும், தடை செய்யவும் வசதியாக இருக்கும். செல்போன்களுக்கு உறை அணிந்து பயன்படுத்துவது, டிஸ்பிளே திரையில் உராய்வு ஏற்படுவதை தடுக்கும். பட்டன்கள் விரைவில் பாதிக்கபடுவதையும் குறைக்கும். செல்போன்களை கழுத்து பட்டையுடன் இணைத்து பயன்படுத்துவது சிறந்த முறை. தண்ணீரில் விழுவதாலும், கீழே விழுந்து உடைந்து விடுவதாலும் நிறைய போன்கள் சேதமடைகின்றன. செல்போன்களை கைப்பையில் வைத்து பயன்படுத்துவதும், அவசியமான நேரங்களில் மட்டும் உபயோகிப்பதும் உங்களுக்கு நல்லது.

சுறுசுறுப்புக்கு காரணம் காபியல்ல, மனம்!

பலருக்கு காபி குடிக்காவிட்டால் பொழுதே விடியாது. அதிகாலையில் ஆவி பறக்க காபி பருகியதும்தான் உடம்புக்குள் ஒரு சுறுசுறுப்புப் பிறப்பதாக உணர்வார்கள்.

காபியில் உள்ள `காபீன்’, உடம்புக்குச் சுறுசுறுப்பு அளிப்பதாகத்தான் இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் காபியில் உள்ள `காபீன்’ அல்ல, காபியை பற்றி மனதில் தோன்றும் எண்ணம்தான் சுறுசுறுப்புக்கு காரணம் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு கெட்ட செய்தியையும் கூறுகிறார்கள். அதாவது, `காபீன்’, உஷார்தன்மையை ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் படபடப்பையும், உயர் ரத்த அழுத்தத்தையும் உண்டாக்குகிறது என்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பீட்டர் ரோஜர்ஸ், வழக்கமாகக் காலையில் காபி பருகும் பழக்கம் உள்ளவர்கள், அது இல்லாமலே சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்கிறார்.

“எங்கள் ஆய்வின்படி, காபி பருகுவதால் பலன் ஏதும் இல்லை. அதனால் நாம் உஷார்தன்மை பெற்றதைப் போல உணர்ந்தாலும், `காபீன்’ பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது. அதேநேரம் அது படபடப்பைக் கூட்டுகிறது” என்று ரோஜர்ஸ் தெரிவிக்கிறார்.

வாழையின் மகத்துவம்

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு `பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

இனபெருக்க காலத்தில் யானைகள் அட்டகாசம்

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்கு அருகே 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பனத்தூர் கோட்டார் என்ற பகுதி. வனத்துறைக்குச் சொந்தமான இப்பகுதியில் 10 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இங்கு யானை பூங்கா நிறுவபட்டு உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூங்கா ஆரம்பிக்கபட்டது.

உலகில் உள்ள பெரிய யானைபூங்கா இதுவாகும். இங்கு 65 யானைகள் பராமரிக்கபட்டு வருகிறது. இவை யாவும் பிரபலங்கள் மற்றும் பக்தர்களால் தானமாக வழங்கபட்டவையாகும்.

லட்சுமி நாராயணன் என்ற யானைதான் இங்கு படுசுட்டி. இந்த யானை நடிகர் சுரேஷ் கோபியால் வழங்கபட்டதாகும். இங்குள்ள யானைகளில் இது இளமையான யானையாகும். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்வகையில் வேகமாக நடைபோடும். தண்ணீர், சேற்றை தன் மேல் வாரி இறைத்துக் கொள்ளும். நண்பர்களுடன் மட்டுமே உணவு சாப்பிடும். அதை லட்சுமி என்று அழைத்தால் அதற்கு பிடிக்காது. அப்படி அழைத்தால் அது ஒத்துழைக்காது. குளிக்காமல் சேட்டை செய்யும். இங்குள்ள `ராமன் குட்டி’ என்ற யானை பெரிய யானையாகும். அது தானாகவே தண்ணீரை சீறி அடித்து குளித்துக் கொள்ளும். கேசவன் என்ற யானை இங்குள்ள யானைகளில் உயரமானதாகும். இது 10 அடி உயரம் கொண்டது.

பல பிரபலங்கள் இந்த பூங்காவுக்கு யானைகளை வழங்கி உள்ளனர்.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரி அசோக் சவான் மற்றும் அவரது பிரதிநிதி புஜ்பால் ஆகியோர் 2 யானைகளுக்கான நிதியை வழங்கினார்கள். முதல்-மந்திரி 30 வயதுள்ள `கோபி கண்ணன்’ என்ற யானையை வழங்கினார். புஜ்பால் 25 வயது நிரம்பிய `பார்தன்’ என்ற யானையை வழங்கினார். 8 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு யானையை வழங்கினார். `கிருஷ்ணா’ எனப்படும் அந்த யானைக்கு தற்போது 25 வயதாகிறது. பள பளவென்று ஜொலிக் கும் அந்த யானை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இதற்கு முன்பாக புதிதாக யானை வழங்க அரசாங்கம் பல கட்டுபாடுகளை விதித்து இருந்தது. தற்போது விதிகள் கொஞ்சம் தளர்த்தபட்டு உள்ளது.

பத்மநாபன் என்ற யானை இங்குள்ள யானைகளில் சிறப்புக்குரியதாகும். இதற்கு 61 வயதாகிறது. இதுதான் இங்குள்ள வயது முதிர்ந்த யானையாகும். பத்மநாபனுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அதாவது சிறந்த நடுவர் தன்மையுடன் செயல்படுமாம்.

யானைகள் முர்க்கத்தனமான சேட்டைகளில் ஈடுபட்டால் பத்மநாபன் யானை தான் அவைகளைக் கட்டுபடுத்தும். இதனால் `சிறந்த நடுவர்’ என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு பட்டம் கொடுக்கபட்டது.

பத்மநாபனுக்கு தினமும் 6 லிட்டர் பால் கொடுக்க படுகிறது. கூடுதலாக 5 கிலோ அரிசி, நொறுக்கபட்ட அரிசி 6 கிலோ வழங்கபடுகிறது.

இனபெருக்க காலத்தில் யானைகள் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும். அப்போது பாகன்கள்கூட விலகித்தான் இருப்பார்கள். அந்தக் காலத்தில் மட்டும் மற்ற யானைகள் ஒன்று சேர்ந்து உண்ணாது. யாராவது நெருங்கினால் உணவை தூக்கி எறிந்துவிடும்.

வாழும்’ உறுப்புகள்

ஒருவரிடமிருந்து 25 வகையான உறுப்புகளையும், திசுக்களையும் தானமாக பெற முடியும் என்கிறார்கள், மருத்துவர்கள். ஒரு மனிதன் பத்து நபர்களுக்கு தன் உறுப்புகளைத் தானமாகத் தந்து உதவலாம். ஒவ்வொரு உறுப்பையும் முறைபடி பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்கும் போது அந்த உறுப்புகள் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரம் தாக்குபிடிக்கும் என்பதை பற்றி பார்போம்.

தோல், எலும்பு, இதய வால்வுகள் – 5 ஆடுகள் வரை

கண்விழித்திரை (கார்னியா) – 10 நாட்கள்

சிறுரகம் – 3 நாட்கள்

கணையம் – 20 மணி நேரம்

கல்லீரல் – 18 மணிநேரம்

இதயம், நுரையீரல் – 5 மணிநேரம்

எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறக்கூடியது.

யார் யார் தானமாக கொடுக்க முடியும்?

இதயத்துடிப்பு நின்று போதல், நுரையீரல் செயல்பாட்டை இழத்தல், முளைச்சாவு ஏற்பட்டவர்கள் ( முளை செயல் இழந்து போய் இதயம் மட்டும் துடித்துக் கொண்டு இருப்பதை ` முளைச்சாவு’ என்பர்.) இதுபோன்று பாதிக்கபட்டவர்களின் உடலில் இருந்து மட்டும் 25 வகையான உறுப்புகளை தானமாக பெற முடியும்.

எந்தவிதமாக மரணம் நேர்ந்தாலும் இறந்தவர்களின் உடலில் இருந்து எலும்புகளையும், திசுக்களையும் எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.