இனபெருக்க காலத்தில் யானைகள் அட்டகாசம்

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்கு அருகே 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பனத்தூர் கோட்டார் என்ற பகுதி. வனத்துறைக்குச் சொந்தமான இப்பகுதியில் 10 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இங்கு யானை பூங்கா நிறுவபட்டு உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூங்கா ஆரம்பிக்கபட்டது.

உலகில் உள்ள பெரிய யானைபூங்கா இதுவாகும். இங்கு 65 யானைகள் பராமரிக்கபட்டு வருகிறது. இவை யாவும் பிரபலங்கள் மற்றும் பக்தர்களால் தானமாக வழங்கபட்டவையாகும்.

லட்சுமி நாராயணன் என்ற யானைதான் இங்கு படுசுட்டி. இந்த யானை நடிகர் சுரேஷ் கோபியால் வழங்கபட்டதாகும். இங்குள்ள யானைகளில் இது இளமையான யானையாகும். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்வகையில் வேகமாக நடைபோடும். தண்ணீர், சேற்றை தன் மேல் வாரி இறைத்துக் கொள்ளும். நண்பர்களுடன் மட்டுமே உணவு சாப்பிடும். அதை லட்சுமி என்று அழைத்தால் அதற்கு பிடிக்காது. அப்படி அழைத்தால் அது ஒத்துழைக்காது. குளிக்காமல் சேட்டை செய்யும். இங்குள்ள `ராமன் குட்டி’ என்ற யானை பெரிய யானையாகும். அது தானாகவே தண்ணீரை சீறி அடித்து குளித்துக் கொள்ளும். கேசவன் என்ற யானை இங்குள்ள யானைகளில் உயரமானதாகும். இது 10 அடி உயரம் கொண்டது.

பல பிரபலங்கள் இந்த பூங்காவுக்கு யானைகளை வழங்கி உள்ளனர்.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரி அசோக் சவான் மற்றும் அவரது பிரதிநிதி புஜ்பால் ஆகியோர் 2 யானைகளுக்கான நிதியை வழங்கினார்கள். முதல்-மந்திரி 30 வயதுள்ள `கோபி கண்ணன்’ என்ற யானையை வழங்கினார். புஜ்பால் 25 வயது நிரம்பிய `பார்தன்’ என்ற யானையை வழங்கினார். 8 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு யானையை வழங்கினார். `கிருஷ்ணா’ எனப்படும் அந்த யானைக்கு தற்போது 25 வயதாகிறது. பள பளவென்று ஜொலிக் கும் அந்த யானை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இதற்கு முன்பாக புதிதாக யானை வழங்க அரசாங்கம் பல கட்டுபாடுகளை விதித்து இருந்தது. தற்போது விதிகள் கொஞ்சம் தளர்த்தபட்டு உள்ளது.

பத்மநாபன் என்ற யானை இங்குள்ள யானைகளில் சிறப்புக்குரியதாகும். இதற்கு 61 வயதாகிறது. இதுதான் இங்குள்ள வயது முதிர்ந்த யானையாகும். பத்மநாபனுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அதாவது சிறந்த நடுவர் தன்மையுடன் செயல்படுமாம்.

யானைகள் முர்க்கத்தனமான சேட்டைகளில் ஈடுபட்டால் பத்மநாபன் யானை தான் அவைகளைக் கட்டுபடுத்தும். இதனால் `சிறந்த நடுவர்’ என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு பட்டம் கொடுக்கபட்டது.

பத்மநாபனுக்கு தினமும் 6 லிட்டர் பால் கொடுக்க படுகிறது. கூடுதலாக 5 கிலோ அரிசி, நொறுக்கபட்ட அரிசி 6 கிலோ வழங்கபடுகிறது.

இனபெருக்க காலத்தில் யானைகள் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும். அப்போது பாகன்கள்கூட விலகித்தான் இருப்பார்கள். அந்தக் காலத்தில் மட்டும் மற்ற யானைகள் ஒன்று சேர்ந்து உண்ணாது. யாராவது நெருங்கினால் உணவை தூக்கி எறிந்துவிடும்.

%d bloggers like this: