Daily Archives: ஜூன் 22nd, 2010

இந்தியர்களை தாக்கும் பருமன்!

இந்தியர்களுக்கு அடிவயிற்று சுற்றளவு 90 சென்டி மீட்டர் அல்லது, பி.எம்.ஐ., 23-ஐ தாண்டியவுடன் விழித்துக் கொள்வது மிகவும் நல்லது. அப்போது டாக்டரிடம் காட்டி, மருந்துகளை சாப்பிட ஆரம்பிப்பது, பின்னாளில் சர்க்கரை நோய் அதிகரிக்காமல் இருக்க வழி வகுக்கும்.

ஆசிய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் பி.எம்.ஐ.,யில் உள்ள வேறுபாடுகளை கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பு, இதய, சர்க்கரை நோய்களுக்கான அறிகுறிகள், அதற்கான மருத்துவ சிகிச்சைகள், உணவு முறைகள் குறித்து புதிய வழிகாட்டு முறைகளை அறிவித்துள்ளது.

சராசரியாக ஒருவருக்கு பி.எம்.ஐ.,என்பது 21-க்கும் 23-க்கும் இடையே இருப்பதே நல்லது. அதற்கேற்ப உடல் பராமரிப்பு அவசியம். சத்தான உணவு சாப்பிடுவது மட்டுமல்ல, உடற்பயிற்சியும் மிக முக்கியம். அப்போது தான் உடல் பருமன் வராமல் இருக்கும்.

இந்த அளவை பராமரிக்க இளம் வயதில் இருந்தே உணவுக்கட்டுப் பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் முப்பது வயதை தாண்டும் போது, உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.

போட்டியாக ஒரு புதிய நகை!

அலங்காரத்தில் நமக்கு அதிக ஆர்வம். தங்கம் பெண்களின் ஒரு அங்கம்போல மாறிவிட்டது. தங்க நகை நிறம் மங்காது, துருப்பிடிக்காது, காலத்துக்கும் மதிப்பு குறையாது என்பதால் நமக்கு அதன்மேல் ஒரு ஈர்ப்பு. இதைவிட விலை உயர்ந்த ஆபரணமாக பிளாட்டினம் மற்றும் வைர நகைகள் உள்ளன. தற்போது இந்த நகைகளுக்குப் போட்டியாக புதிய நகையை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.

`டயசெர்’ (DiaCer) என்று இந்த நகைக்குப் பெயரிடப்பட்டுள்ளது. வைரம் (டைமெண்ட்) மற்றும் செராமிக் தாது (சரளைக்கல்) இரண்டும் சேர்த்து இந்த நகை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டின் பெயரையும் சேர்த்து `டயசெர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரான்கோபர் இன்ஸ்டிடிட் ஆய்வாளர்கள் 4 பேர் இந்த புதிய நகையை ஆய்வகத்தில் உருவாக்கி உள்ளனர். கெமிக்கல் வேபர் டெபாசிசன் (chemical vapor deposition&CVD) எனும் தொழில்நுட்பத்தில் கார்பைடு செராமிக்குடன் வைரத்துகள்களைச் சேர்த்து இந்த நகை உருவாக்கப்படுகிறது. பல படிநிலைக்குப் பின் செராமிக் மீது வைரம் கவசம்போல் படிந்து உறுதியான டயசெர் அணிகலன் உருவாகிறது.

இந்த நகையை எளிதில் தயாரிக்கவும், உருமாற்றவும் முடியும். இது நீண்ட நாள் உழைக்கும். பளபள தோற்றம் கொண்டது. எனவே விரைவில் இந்த நகை பிரபலமாகிவிடும் என்று நகையை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த நகை வடிவமைப்பிற்கு `ஸ்டிப்டர்வெர்பேண்ட்’ என்ற விருதும், 34 லட்சம் பரிசும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்னையின் பேச்சை மறுத்த அக்பர்

அக்பர் தன் அன்னையின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். ஒருநாள் ஆக்ராவிலிருந்து லாகூருக்கு அவர் தனது அரண்மனை பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவருடன் அன்னையும் உடன் சென்றார்.

அன்னை பல்லக்கிலும், அக்பர் குதிரை மீதும் பயணம் செய்தனர். அவர்கள் செல்லும் வழியில் சிறிதளவே தண்ணீர் ஓடும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. ஆனால், இவர்கள் கடக்கும் நேரம் இடுப்பளவிற்கு தண்ணீர் பெருகத்தொடங்கியது.

அக்பர் தனது குதிரையை விட்டு இறங்கி, தன் அன்னை அமர்ந்திருந்த பல்லக்கை நோக்கி ஓடினார். பல்லக்கைச் சுமக்கும் பணியாட்களுடன் தானும் சேர்ந்து கொண்டு அவரும் பல்லக்கைச் சுமந்து சென்றார்.

தாய் பத்திரமாக ஆற்றைக் கடக்க வேண்டுமே என்ற கவலையில் அவரும் தோள் கொடுத்தார். தாயின் மீது அக்பருக்கு அளவு கடந்த மரியாதை, பக்தி இருந்தாலும், ஒரு சமயம் தன் அருமை அன்னையின் சொல்லையும், ஏற்க மறுத்துவிட்டார். அக்பர் ஏற்காத அந்த சொல் தான் என்ன? முஜ் நகரத்தில் போர்த்துக்கீசியர்களுக்கும் முகலாய படையினருக்கும் இடையே ஏற்பட்ட சடையில் போர்த்துக்கீசியர், முகலாயர்களுடைய கப்பல் ஒன்றைக் கைபற்றினார்கள்.

அந்தக் கப்பலிலிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்ததுடன், பயணிகள் வைத்திருந்த சமையல் ஒன்றை பறித்து, அதை ஒரு நாயின் கழுத்தில் கட்டி, நகரத் தெருக்களில் ஓட விட்டார்கள்.

இதைக் கேள்விபட்ட அக்பரின் அன்னை, போர்த்துக்கீசியர்களுக்கு பாடம் புகட்ட இன்னொரு சமயலை அதுபோல செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்.

ஆனால், அன்னையிடத்தில் பெருமதிப்பும், பாசமும் கொண்ட அக்பர், முதன் முறையாக அவரது பேச்சுக்கு அடிபணிய மறுத்தார்.

“மதியில்லாத செயலை புரிந்த போர்த்துக்கீசியர்களை போல, நானும் செய்ய விரும்பவில்லை. அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது அரசனுக்கு அழகல்ல. பெருமையும் இல்லை. எந்த மதத்தை அவமதித்தாலும் அது கடவுளை அவமதிப்பதாகும்.” என்று பணிவுடன் பதிலளித்தார்.

அன்னையும் அக்பரின் பதிலைக் கேட்டு அமைதியானார்.

வேதனை தரும்… வெள்ளை படுதல்…

“மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்” என்றார் பாரதி.

பெண்களை கடவுளாக மதிக்கும் தேசம் நம் பாரத தேசம்.

பெண்களின் நலம் நாட்டின் நலம். பெண்களின் நலம்தான் குழந்தைகளின் நலம். ஆகையால் பெண்களின் நலத்தைப் பொறுத்தே ஒரு நாட்டின் நலமும் இருக்கும்.

இன்றைய நவீன உலகில் ஆணுக்குப் பெண் நிகராக போட்டி போட்டுக்கொண்டு பொருள் ஈட்டுகிறாள். ஆனால் பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், கருப்பைக் கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் பல பெண்கள் ஏன் பெண்ணாகப் பிறந்தோம் என மன வருத்தம் கொள்ளும் அளவுக்கு மன உளைச்சல் தருவது இந்த வெட்டை நோய் என்று சொல்லப்படும் வெள்ளைப் படுதல் நோய்தான். இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.

வெள்ளைப் படுதல் அறிகுறிகள்

· பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்

· வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.

· வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

· சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்

· வெள்ளைப் படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.

· இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல்.

நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

· பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப் படுதல் இருக்கும்.

· ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

· அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

· தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

· சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

· அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

· அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

வெள்ளை நோயைத் தவிர்க்க

· உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

· பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

· உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

· நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மருந்து

இந்த வெள்ளைப் படுதல் நோயை குணப்படுத்த இந்திய மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன. மூலிகைகளைக் கொண்டே இதனை குணப்படுத்த இயலும்

மணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி

பூண்டுப்பல் -4

சின்ன வெங்காயம் – 4

நல்ல மிளகு – 5

சீரகம் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

யானை நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நீர்விட்டு நன்கு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதில் மோர் 200 மிலி. சேர்த்து நன்கு கலக்கி தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.

வெள்ளைப்படுதலுக்கு வர்மப் பரிகார மருந்து

நன்னாரி வேர் – 10 கிராம்

அதிமதுரம் – 5 கிராம்

காய்ந்த திராட்சை – 5 கிராம்

மணத்தக்காளி விதை – 5 கிராம்

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

காய்ந்த செம்பருத்திப் பூ – 5 கிராம்

காய்ந்த ரோஜா இதழ் – 5 கிராம்

சின்ன வெங்காயம் – 3

நன்னாரி வேரை எடுத்து சிதைத்து அதன் உள்ளே உள்ள வேரை நீக்கி சதையை மட்டும் எடுத்து, அதனுடன் அதிமதுரம், மணத்தக்காளி விதை, காய்ந்த செம்பருத்திப் பூ, காய்ந்த ரோ ஜா இதழ், சீரகம், சோம்பு இவற்றை சேர்த்து நன்றாக இடித்து, அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த திராட்சை சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி அரை கப் அளவாக வந்தவுடன் வடிகட்டி தினமும் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் அடியோடு நீங்கும்.

· சிறுநீர் வெளியேறும்போது சுண்டி சுண்டி இழுப்பது மாறிவிடும்.

· மாதவிலக்குக் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிக குருதிப் போக்கை மாற்றும், ஒழுங்கற்ற குருதிப் போக்கை சரி செய்யும்.

· ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கண்களைச் சுற்றியுள்ள கருப்பு, கழுத்திலுள்ள கருப்பு, இடுப்புப்பகுதியில் உள்ள கருப்பு போன்றவற்றை மாற்றும்.

· உடலிலுள்ள தேவையற்ற உப்புகளை நீக்கி முகத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

· மன உளைச்சல் நீங்கும். கை கால் குடைச்சல் நீங்கும்.

சிறுநீர் தண்ணீர்போல் வெளியேறும்வரை, இந்த கஷாயத்தை அருந்தலாம். இந்த கஷாயம் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். தேவைப் பட்டால் கஷாயத்துடன் தேன் கலந்து அருந்தலாம்.

உணவு முறை

· அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.

· உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

மேற்கண்ட மருந்துகளை முறையாக செய்து அருந்தினால், வெள்ளை நோயின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம்.