போட்டியாக ஒரு புதிய நகை!

அலங்காரத்தில் நமக்கு அதிக ஆர்வம். தங்கம் பெண்களின் ஒரு அங்கம்போல மாறிவிட்டது. தங்க நகை நிறம் மங்காது, துருப்பிடிக்காது, காலத்துக்கும் மதிப்பு குறையாது என்பதால் நமக்கு அதன்மேல் ஒரு ஈர்ப்பு. இதைவிட விலை உயர்ந்த ஆபரணமாக பிளாட்டினம் மற்றும் வைர நகைகள் உள்ளன. தற்போது இந்த நகைகளுக்குப் போட்டியாக புதிய நகையை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.

`டயசெர்’ (DiaCer) என்று இந்த நகைக்குப் பெயரிடப்பட்டுள்ளது. வைரம் (டைமெண்ட்) மற்றும் செராமிக் தாது (சரளைக்கல்) இரண்டும் சேர்த்து இந்த நகை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டின் பெயரையும் சேர்த்து `டயசெர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரான்கோபர் இன்ஸ்டிடிட் ஆய்வாளர்கள் 4 பேர் இந்த புதிய நகையை ஆய்வகத்தில் உருவாக்கி உள்ளனர். கெமிக்கல் வேபர் டெபாசிசன் (chemical vapor deposition&CVD) எனும் தொழில்நுட்பத்தில் கார்பைடு செராமிக்குடன் வைரத்துகள்களைச் சேர்த்து இந்த நகை உருவாக்கப்படுகிறது. பல படிநிலைக்குப் பின் செராமிக் மீது வைரம் கவசம்போல் படிந்து உறுதியான டயசெர் அணிகலன் உருவாகிறது.

இந்த நகையை எளிதில் தயாரிக்கவும், உருமாற்றவும் முடியும். இது நீண்ட நாள் உழைக்கும். பளபள தோற்றம் கொண்டது. எனவே விரைவில் இந்த நகை பிரபலமாகிவிடும் என்று நகையை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த நகை வடிவமைப்பிற்கு `ஸ்டிப்டர்வெர்பேண்ட்’ என்ற விருதும், 34 லட்சம் பரிசும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: