Daily Archives: ஜூன் 23rd, 2010

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்

உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.

அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார்.

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடு

கிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.

ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார்.

உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.

அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.

பர்கரா? ஆஸ்துமா ஆபத்து!

பரவி வரும் மேலை நாட்டுக் கலாச்சாரம் காரணமாக நம்மூரிலும் சர்வ சாதாரணமாக பீட்சா, பர்கர் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலும் குழந்தைகள் இவற்றை விரும்பி விழுங்குகிறார்கள்.

உங்கள் வீட்டிலும் அப்படித்தானா? அப்படியானால் கொஞ்சம் கவனம்! வாரம் மூன்று அல்லது அதற்கு மேல் பர்கர் சாப்பிடும் குழந்தைக்கு ஆஸ்துமா அல்லது மூச்சிரைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.

ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உலகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்தனர். அப்போதுதான் பர்கர்களுக்கும், ஆஸ்துமாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதிலும் பணக்கார நாடுகளில் அந்தப் பாதிப்பு அதிகமாகவே இருப்பது தெரிந்தது. அங்குதான் `ஜங் புட்’ எனப்படும் துரித உணவுப் பழக்கம் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவில் அதிகம் இறைச்சி எடுத்துக்கொள்வது கூட ஆஸ்துமாவுக்கான அபாயத்தை ஏற்படுத்துவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மாறாக, அடிக்கடி பர்கர் சாப்பிடுவது ஆஸ்துமா அபாயத்தை உண்டாக்கும் காரணிகளை ஊக்குவிக்கக் கூடும் என்கிறார்கள் அவர்கள்.

“ஆஸ்துமாவுக்கும் பர்கருக்குமான இணைப்பு நேரடியாகப் பலம் வாய்ந்தது என்று கூடக் கூற முடியாது. ஆனால் உடல் பருமன், தொந்தி போன்ற மறைமுக வழிகள் மூலம் அது ஆஸ்துமாவுக்கு வழி ஏற்படுத்தி விடுகிறது” என்று ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்தவரான ஜெர்மனி உல்ம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண் கேப்ரியல் நெகல் கூறுகிறார்.

அதேநேரம் அவர் ஆறுதலாகத் தெரிவிக்கையில், பழங்கள், காய்கறிகள், மீன் ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுவது ஆஸ்துமாவுக்குத் தடை போடும் என்கிறார். பழங்கள், காய்கறிகளில் காணப்படும் `ஆன்டி ஆக்சிடன்ட்கள்’, மீனில் உள்ள `ஒமேகா 3 பாலிஅன்சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்ஸ்’ ஆகியவை ஆஸ்துமாவுக்கு எதிராகச் செயல்பட வல்லவை என்கிறார் கேப்ரியல்.

வேலைக்காக RESUME தயார் செய்வது எப்படி!

இவை நினைவிலிருக்கட்டும்! ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது தனது சுயவிவரக் குறிப்புடன் (சி.வி.) இணைத்து அனுப்பும் இணைப்புக் கடிதம் முக்கியமானது. அது, வழக்கமான தபால் என்றாலும், மின்னஞ்சல் என்றாலும், விண்ணப்பதாரர் பற்றிய `முதல் மதிப்பை’ உருவாக்குபவை அவைதான். எனவே, இணைப்புக் கடிதம் தயாரிப்பதில், சுயவிவரக் குறிப்பை உருவாக்குவதற்கு இணையான கவனத்தைச் செலுத்த வேண்டும்.

இணைப்புக் கடித விஷயத்தில், விண்ணப்பதாரர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. சரியான நபருக்கு…

இணைப்புக் கடிதம் அனுப்புவதில் அடிப்படையான விஷயம், அதன் முகவரியில் குறிப்பிட்டிருப்பவரும், உள்ளே குறிப்பிட்டு எழுதப்படுபவரும் ஒரே நபராக இருக்க வேண்டும் என்பது. “பலர், `ஏ’ என்ற நபரை முகவரியில் குறிப்பிட்டுவிட்டு, `பி’ என்ற நபருக்கு உள்ளே குறிப்பிட்டு எழுதுவார்கள். அது அலட்சிய மனோபாவத்தையே காட்டும். விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் வாய்ப்பைக் குறைக்கும். குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதால், சரியான, சாத்தியமான தொடர்பு வழியையும் குறிப்பிட வேண்டும்.

2. தெளிவில்லாதது…

வேலைக்கு விண்ணப்பிக்கும் பலர் புரியும் பெரும் தவறு, குறிப்பாக எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறோம் என்று தெளிவாகக் குறிப்பிடாதது. நீங்கள் விண்ணப்பிக்கும் வேலையைப் பற்றித் தெளிவாக அறிந்திருப்பதும், அதை ஆரம்பத்திலேயே தெளிவாகக் குறிப்பிடுவதும் முக்கியமானது.

3. அடிப்படை விஷயங்கள்

உங்களின் இணைப்புக் கடிதமானது அடிப்படை விஷயங்களில் சரியாக இருக்க வேண்டும். அதாவது, அக்கடிதம் சுருக்கமாக, ஈர்ப்பதாக, வேலை அளிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். பள்ளிப் படிப்பு, பொழுதுபோக்குகள் போன்றவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை. அவை எந்த மதிப்பையும் சேர்க்காது. இணைப்புக் கடிதத்தில் மூன்று அல்லது நான்கு பத்திகளுக்கு மேல் இருக்கக் கூடாது. முதல் பத்தி, ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஒரு நீளமான இணைப்புக் கடிதம், உங்களுக்கு எதிராகத்தான் அமையும்.

4. அளவுக்கு மீறினால்…

நங்கள் இதற்கு முன் பல நிறுவனங்களில், பல வேலைகளில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் நீட்டி முழக்கி விளக்கி எழுதுவது நல்லதல்ல. வேலை அளிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் சுருக்கமாக இருந்தால் போதும். எதிர்மறை விஷயங்கள், ஒன்றையே திரும்பத் திரும்ப எழுதுவது போன்றவற்றைத் தவிருங்கள். அதேபோல அதீதமான ஆர்வத்தையும் வெளிக்காட்டாதீர்கள். `இது எனது கனவு வேலை’ என்று வழியாதீர்கள்.

5. `பொத்தாம் பொதுவாக’…

நீங்கள் குறிப்பிடும் உங்களது திறமைகளை நிரூபிக்கும் விஷயங்களை இணைத்து அனுப்புவது அவசியம். `விஷயங்களை அலசி ஆராயும் திறமை எனக்கு உண்டு’
என்பது போல பொத்தாம்பொதுவாகக் குறிப்பிட வேண்டாம். ஒழுங்கற்ற அமைப்பு, எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் போன்றவை ஆரம்பத்திலேயே முகச்சுளிப்பை ஏற்படுத்திவிடும்.

6. சம்பள விஷயம்…

இணைப்புக் கடிதத்தில், உங்களின் தற்போதைய சம்பளம், எதிர்பார்க்கும் சம்பளத்தைக் குறிப்பிட வேண்டாம். அப்படித் தெரிவித்தால், ஆரம்பகட்டத் தொடர்புகள் அல்லது நேர்முகம் மேற்கொள்ளப்படாமலேயே, விண்ணப்பதாரர் சம்பள விஷயத்தில் கண்டிப்புக் காட்டுகிறார் என்ற எண்ணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத் துக்கு ஏற்படுத்தக்கூடும்.

நோன்பு

அனைத்து மத கோட்பாடுகளும் கூறும் அறிவுரைதான் நோன்பு என்று சொல்லப்படும் விரதம். மதங்கள் மனிதனை ஆரோக்கியப் படுத்தவும், நல்வழிப் படுத்தவும் தோன்றியவைதான். இவை மனித ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளன. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப மனிதன் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவன் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியும்.

மனித ஆரோக்கியத்திற்கு நோன்பு ஒரு தலைசிறந்த மருந்தாகும். ஆம். தினமும் வயிறு புடைக்க உண்டு நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிக் கொள்வதற்கு பதிலாக நோன்பு இருந்து ஆயுளை நீட்டிக்கச் செய்வது சாலச் சிறந்தது.

A hundred eat themselves to death

before one man dies of hunger

பட்டினியால் வாடி ஒருவன் இறப்பதற்கு முன்பாக பசியின்றி உண்டே பலபேர் இறந்து போகின்றனர்.

நோன்பை இந்து மதத்தில் சைவ சமயத்தினர் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி, கார்த்திகை நாட்களில் மேற்கொள்கின்றனர். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளில், அதிக பெண்கள் விரதம் இருக்கின்றனர்.

வைணவ சமயத்தினர் ஏகாதசி, வரலட்சுமி நோன்பு மேற்கொள்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.

இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. ரம்ஜான் மாதத்தில் தினமும் காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை நோன்பு மேற்கொள்கின்றனர். இக்காலத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறந்து நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். இது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் நோன்பாகும்.

இதுபோல், ஒவ்வொரு மதத்திலும் நோன்பை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன.

நோன்பு என்றவுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், சத்து குறைந்து போகும், உடல் மெலிவு உண்டாகும் என்று பல வகைகளில் கருதுபவர்கள் உண்டு. இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் நோன்பை சீராக கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

நோன்பை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். சிலர் நோன்பு என்றால் நாள் முழுவதும் பட்டினி கிடப்பது என்று நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறான கருத்தாகும். நோன்பு என்பது வேறு. பட்டினி என்பது வேறு.

உடலில் சக்தியின்றி மெலிந்து ஊட்டச்சத்து தேவையுள்ள நிலையில் இருப்பவர்கள் நோன்பு மேற்கொள்வது தவறு. அதுபோல் குடல்புண் உண்ணவர்களும் நோன்பு மேற்கொள்ளக் கூடாது.

வயிற்றுக்கும், செரிமான உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுப்பதே நோன்பு ஆகும். உண்ண உணவு இருந்தும் மனிதன் உண்ணாமல் வாரம் ஒருவேளை உணவை தவிர்ப்பதுதான் நோன்பு.

சிலர் நோன்பு என்ற பெயரில் ஒருவேளை உணவைத் தவிர்த்து பின் வயிறு புடைக்க உண்கின்றனர். இதுவும் தவறு.

நோன்பு இருக்கும் நாளன்று உடலில் நோயின் தாக்குதல் இருக்கக்கூடாது. ஓய்வெடுக்கும் நாளாக இருக்க வேண்டும். நோன்பு மேற்கொள்பவர்கள் மற்ற உணவு வேளைகளில் நீர்ச்சத்து நிறைந்த எளிதில் சீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.

நோன்பின் பயன்கள்

நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.

உள்ளுறுப்புகள் தூய்மையுறுகின்றன. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன.

உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படும்.

நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது.

உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புகளுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது.

இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது.

தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.

இளையவரும், முதியவரும், புதுப்பிக்கப் படுகிறார்கள்.

நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன.

நோன்பு சில செயல்களை நிறுத்துகிறது. இதனால் ஒரு சமநிலை உண்டாகிறது. இந்த ரசாயனச் செயல்களின் சமநிலை உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது.

நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும்.

நீண்ட ஆயுளுடன் வாழ நோன்பு சிறந்த மருந்தாகும்.