நோன்பு

அனைத்து மத கோட்பாடுகளும் கூறும் அறிவுரைதான் நோன்பு என்று சொல்லப்படும் விரதம். மதங்கள் மனிதனை ஆரோக்கியப் படுத்தவும், நல்வழிப் படுத்தவும் தோன்றியவைதான். இவை மனித ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளன. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப மனிதன் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவன் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியும்.

மனித ஆரோக்கியத்திற்கு நோன்பு ஒரு தலைசிறந்த மருந்தாகும். ஆம். தினமும் வயிறு புடைக்க உண்டு நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிக் கொள்வதற்கு பதிலாக நோன்பு இருந்து ஆயுளை நீட்டிக்கச் செய்வது சாலச் சிறந்தது.

A hundred eat themselves to death

before one man dies of hunger

பட்டினியால் வாடி ஒருவன் இறப்பதற்கு முன்பாக பசியின்றி உண்டே பலபேர் இறந்து போகின்றனர்.

நோன்பை இந்து மதத்தில் சைவ சமயத்தினர் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி, கார்த்திகை நாட்களில் மேற்கொள்கின்றனர். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளில், அதிக பெண்கள் விரதம் இருக்கின்றனர்.

வைணவ சமயத்தினர் ஏகாதசி, வரலட்சுமி நோன்பு மேற்கொள்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.

இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. ரம்ஜான் மாதத்தில் தினமும் காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை நோன்பு மேற்கொள்கின்றனர். இக்காலத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறந்து நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். இது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் நோன்பாகும்.

இதுபோல், ஒவ்வொரு மதத்திலும் நோன்பை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன.

நோன்பு என்றவுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், சத்து குறைந்து போகும், உடல் மெலிவு உண்டாகும் என்று பல வகைகளில் கருதுபவர்கள் உண்டு. இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் நோன்பை சீராக கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

நோன்பை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். சிலர் நோன்பு என்றால் நாள் முழுவதும் பட்டினி கிடப்பது என்று நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறான கருத்தாகும். நோன்பு என்பது வேறு. பட்டினி என்பது வேறு.

உடலில் சக்தியின்றி மெலிந்து ஊட்டச்சத்து தேவையுள்ள நிலையில் இருப்பவர்கள் நோன்பு மேற்கொள்வது தவறு. அதுபோல் குடல்புண் உண்ணவர்களும் நோன்பு மேற்கொள்ளக் கூடாது.

வயிற்றுக்கும், செரிமான உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுப்பதே நோன்பு ஆகும். உண்ண உணவு இருந்தும் மனிதன் உண்ணாமல் வாரம் ஒருவேளை உணவை தவிர்ப்பதுதான் நோன்பு.

சிலர் நோன்பு என்ற பெயரில் ஒருவேளை உணவைத் தவிர்த்து பின் வயிறு புடைக்க உண்கின்றனர். இதுவும் தவறு.

நோன்பு இருக்கும் நாளன்று உடலில் நோயின் தாக்குதல் இருக்கக்கூடாது. ஓய்வெடுக்கும் நாளாக இருக்க வேண்டும். நோன்பு மேற்கொள்பவர்கள் மற்ற உணவு வேளைகளில் நீர்ச்சத்து நிறைந்த எளிதில் சீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.

நோன்பின் பயன்கள்

நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.

உள்ளுறுப்புகள் தூய்மையுறுகின்றன. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன.

உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படும்.

நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது.

உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புகளுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது.

இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது.

தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.

இளையவரும், முதியவரும், புதுப்பிக்கப் படுகிறார்கள்.

நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன.

நோன்பு சில செயல்களை நிறுத்துகிறது. இதனால் ஒரு சமநிலை உண்டாகிறது. இந்த ரசாயனச் செயல்களின் சமநிலை உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது.

நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும்.

நீண்ட ஆயுளுடன் வாழ நோன்பு சிறந்த மருந்தாகும்.

ஒரு மறுமொழி

  1. அவசியமான அருமையான தகவல்கள் ..

%d bloggers like this: