Advertisements

Daily Archives: ஜூன் 25th, 2010

உடலுறவு இதயத்தைப் பாதிக்குமா?

இதுவரை இதயத் தமனி நோய்கள், இதய வலி, மாரடைப்பு, ரத்த மிகு அழுத்த நோய் என இதயத்துக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைப் பார்த்தோம். இதயப் பாதிப்போடு உடலுறவும் தொடர்புபடுத்திப் பரவலாகப் பேசப்படுகிறது. எனவே அது பற்றடி விரிவாகத் தெரிந்துகொள்வது உதவும்.
நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய காம இயல் வல்லுநர்கள் (Sexologists) உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
உடலுறவு நிகழ்வுகளை காமஇயல் வல்லுநர்கள் கீழ்கண்ட நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர்.
எழுச்சி நிலை (Excitement Phase)
கிளர்ச்சி நிலை (Plaeau Stage)
உச்ச நிலை (Orgamic Phase)
மீள் நிலை (Resolution Phase)
மேற்கூறிய நான்கு நிலைகனிலும், இதயமானது பலவகையான ஆரோக்கியமான மாற்றங்களை அடைகிறது.
மாரடைப்புக்கான காரணங்களை ஆராய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப் போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாதல், மன இறுக்கம் ஆகியவைதான் அடிப்படையான காரணங்கள். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக்கூடிய ஆற்றல், உடலுறவுக்கு உண்டு என ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.
உடலுறவானது இதயத்திலும் இதயம் தொடர்பான ரத்தக் குழாய்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களானது மூன்று வகையான காரணங்களை அடிப்டையாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது உடலுறவில் ஈடுபடுபவர்களின் வயது, திருமணத்தின் போது வயது, உறவில் ஈடுபடுபவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களா அல்லது திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு உடலுறவில் ஈடுபடுபவர்களா ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.
உடலுறவின்போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் உடலுறவின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும்.
உடலுறவில் ஏற்படும் தம்பதிகளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
உடலுறவு கொள்ளும் தம்பதியர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்ற தம்பதியர்களைவிட அதிகமாக இருக்கும். இளமையின் விளிம்பில் இருப்பதால் உடலில் உள்ள பரிவு நரம்பு அமைப்பு அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வதோடு அல்லாமல் இதயத்துடிப்பின் அளவும் பன்மடங்கு அதிகமாகிறது.
உடலுறவின் உச்சக்கட்டத்தின்போது (Orgasm) ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நிலைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது. இதுபோல் உடலுறவின் உச்சநிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அளவுக்கு மிகவும் வேகமாகத்துடிக்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக்குள் இதயத்துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
வயதானவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இளம் வயது தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களைவிடக் குறைவானவே இருக்கும்.
ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போது செலவாகும் கலோரிகளின் எண்ணிக்கை, உடலுறவில் ஈபடுபவர்களின் வயது, அவர்களின் உடல் நிலை, அவர்களின் திருமண வயது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும். பொதுவாக சாதாரண உடலுறவின்போது 150 கலோரிபள் செலவழிக்கப்படகிறது. இந்த ஆற்றலானது சாதாரண மனிதன் இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடத்தின் மாடிப்படிகளில் ஏறும்போது செலவிடும் ஆற்றலுக்கு இணையானது.
பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள், உடலுறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றன. உடலுறவு அசைவுகளின்போது அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முள்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.
ஒரு மனிதன் 30 நிமிட நேரம் மெல்லோட்டத்தில் ஈடுபடும்போது ஏற்படும் பலன்கள், ஒருமுறை உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் பலன்களுக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது.
அதாவது கடுமையான குளிர்காலத்தில் அதிகாலையில் ஒரு பூங்காவை நான்கு முறை சுற்றினால் கிடைக்கும் பலன்களை ஒருமுறை உடலுறவு கொள்ளும்போது பெற முடியும்.

Advertisements

தாயின் மனநிலையே சேயின் மனநிலை

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.

மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

இன்றியமையா டிஜிட்டல் சாதனங்கள்

வீட்டில் சிறிய அலுவலகம் வைத்து இயங்குவதும், அலுவலகப் பணிகளை வீட்டில் உள்ள சாதனங்களில் இயக்குவதும் இப்போதைய நடைமுறை வாழ்க்கையின் அம்சங்களாக மாறிவிட்டன. உடனடியாகச் சில பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு, அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி தள்ளப்படுகிறோம். இமெயில்கள் மூலம் வரும் வேண்டு கோள்களை, அலுவலக நடைமுறை களை மேற்கொள்வது கட்டாயத் தேவையாய் மாறி வருகிறது. இதனால் வாழ்க்கையில் நமக்குத் தேவையான இன்றியமையாத டிஜிட்டல் சாதனங்களாகச் சில மாறிவிட்டன. வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்தினையும் விட்டுவிடாமல், முன்னேறி, முதல் நிலையில் இருக்க வேண்டுமானால் இவை நமக்குத் தேவையாய் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. லேப்டாப் கம்ப்யூட்டர்: அலுவலகம் மற்றும் வீடு என்றில்லாமல், பல இடங்களுக்கு நாம் சென்று, அலுவல் சார்ந்த சிலவற்றை விளக்க வேண்டியுள்ளது. நம் வேலைகள் தொடர்பான தகவல் குறிப்புகளை, அவ்வப்போது மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு முதல் தேவை ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர். அலுவலகங்களிலும் வீடுகளிலும் கூட, டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் பிடித்துக் கொண்டன. ஒருவரின் இணை பிரியா டிஜிட்டல் தோழனாக, வாழ்க்கையை மேம்படுத்தும் சாதனமாக லேப்டாப் கம்ப்யூட்டர் இடம் பிடிப்பதனால் தான், இன்று அதன் விலையும் சாதாரண மக்கள் வாங்கும் நிலைக்கு இறங்கியுள்ளது.
2. பன்முக பிரிண்டர்: கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வந்த காலத்திலிருந்து, பிரிண்டர் அதன் இணை பிரியாத தோழனாக நமக்கு உதவி வருகிறது. ஆனால் இப்போது ஒரு பிரிண்டர், அச்சிடும் வேலையை மட்டும் செய்வதில்லை. எம்.எப்.பி (MFP Multi Function Printer) என அழைக்கப்படும் இந்த பிரிண்டர்கள் அச்சிடுவது, ஸ்கேனிங், செராக்ஸ் காப்பி எடுப்பது, பேக்ஸ் சாதனமாக இயங்குவது, தொலைபேசியாகச் செயல்படுவது எனப் பல வேலைகளை மேற்கொள்ளும் சாதனமாக மாறிவிட்டது. சிறிய அலுவலகங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக மாறிவிட்டது. நம் வேலைகளின் தன்மையைப் பொறுத்து, கலர் எம்.எப்.பி. பிரிண்டராகவோ, மோனோ (கருப்பு) எம்.எப்.பி. பிரிண்டராகவோ ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது, நம் அலைச்சலை மிச்சப்படுத்தி, வேலை மேற்கொள்ள கூடுதல் நேரம் தரும்.
3. வை–பி ரௌட்டர் (Wi Fi Router): வயர் இணைப்பு இல்லாமல் இன்டர்நெட் இணைப்பு தருவதுடன், ஒரு வை–பி ரௌட்டர் வீடு அல்லது அலுவலகத்தின் உள்ளாக, வை–பி வசதி கொண்ட சாதனங்களிடையே டேட்டா பைல்களை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. ஸ்மார்ட் போன், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிடையே இந்த பரிமாற்றத்தை மேற்கொள்ள இந்த சாதனம் உதவுகிறது. இதனை வாங்குவதாக இருந்தால், எவ்வளவு இடைவெளியில் வயர்லெஸ் டேட்டா பரிமாற்றத்தினை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதன் அடிப்படையில், அதற்கேற்ற திறன் கொண்டதாக வாங்க வேண்டும்.
4. பிராட்பேண்ட் இன்டர்நெட் யு.எஸ்.பி.: Broadband Internet Dongle என அழைக்கப்படும் சாதனம், எப்போதும் இடம் மாறிக் கொண்டு, பயணம் செய்து, பணியில் ஈடுபடுவோருக்கு இணைய இணைப்பினைத் தரும் சாதனமாகும். கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து, இன்டர்நெட் உலகை உங்கள் உள்ளங்கையில் கொண்டு வரும் இந்த இன்டர்நெட் ட்ரைவ்கள் மூலம், உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுடனும் வீடியோ கலந்துரையாடலை மேற்கொள்ளலாம்; இமெயில்களை உடனுக்குடன் கையாளலாம்; அந்த நேரத்தில் ஒரு தகவல் என்ன நிலையில் இருக்கிறது என அறிந்து கொண்டு நம் வர்த்தகத்தினை, வேலையை மேம்படுத்தலாம். அவரவருக்கு ஏற்ற வாடகைக் கட்டணத்தில், பல இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் இவற்றை வழங்கி வருகின்றன.
5. ஸ்மார்ட் போன்: மொபைல் போன் ஓர் அத்தியா வசியத் தேவையாய் மாறிய பின், அதன் மூலம் அலுவலக மற்றும் அன்றாட பணிகளை மேற்கொள்ள, நமக்கு உதவுவது ஸ்மார்ட் போன் என்னும் உயர்வகை மொபைல் போன் ஆகும். இதில் 3ஜி இணைப்பு மற்றும் வை–பி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் நம் அலுவலக மற்றும் சொந்த பணிகளை, உள்ளங்கைகளுக்குள் கொண்டு வருகின்றன.
6. டேட்டா மாற்றும் கேபிள்: Data Transfer Cable என அழைக்கப்படும் இந்த கேபிள்கள், கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் இடையே, விரைவாகவும் எளிதாகவும் டேட்டா பைல்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்றன. இதன் மூலம் இரண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கிடையே, டேட்டா பைல்களை மாற்றி பேக் அப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
7. சுருக்கிப் பதியும் ட்ரைவ்கள்: டேட்டாவினைப் பதிந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, Encrypted Storage Device என்ற வகை சாதனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் பயோ மெட்ரிக் சாதனங்களும் வந்துள்ளன. இந்த சாதனங்களில் டேட்டா சுருக்கப்பட்டு பதியப்படுவதால், எளிதில் இதனை யாரும் பெற முடியாது. கை ரேகையைப் பதிந்து பின், பாஸ்வேர்டினைப் பயன்படுத்திய பின்னரே, டேட்டாவினைப் பெற முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தவறான பாஸ்வேர்டைப் பயன்படுத்தினால், உள்ளே உள்ள டேட்டா தானாக அழிக்கப்படும் வகையில் இந்த ட்ரைவ்கள் வரத் தொடங்கி உள்ளன.
8. இணைப்பு இல்லா பிரசன்டேஷன்: Presentation Remote என அழைக்கப்படும் இந்த சாதனங்கள், லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, பிரசன்டேஷன் காட்சிகளை அடிக்கடி தருபவர்களுக்கு நல்லதொரு சாதனம். 50 அடி தொலைவில் இருந்து நாம் காட்ட விரும்பும் பிரசன்டேஷன் காட்சிகளை, இதன் மூலம் இயக்கலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் அருகே செல்ல வேண்டிய தில்லை. இதிலேயே சிறிய லேசர் பாய்ண்ட்டரும் தரப்பட்டுள்ளதால், அதன் மூலம் இதனைப் பார்ப்பவர்களின் கவனத்தினைக் குறிப்பிட்ட தகவலுக்குக் கொண்டு வரலாம். இதில் சில மாடல்கள் மவுஸாகவும், டேட்டா ஸ்டோர் செய்திடும் ட்ரைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
9. இன்டர்நெட் பாதுகாப்பு சாப்ட்வேர்: நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் கட்டாயம் இருக்க வேண்டிய சாப்ட்வேர். குறிப்பாக மற்றவர்களின் எக்ஸ்டர்னல் டேட்டா ட்ரைவ்களைப் பயன்படுத்தும் போது, நம் கம்ப்யூட்டர்களில் கட்டாயம் ஒரு இன்டர்நெட் பாதுகாப்பு சாப்ட்வேர் தொகுப்பு பதியப்பட்டு இயக்கப்பட வேண்டும். ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி ஸ்பைவேர், பயர்வால், ஆண்ட்டி ஸ்பேம், அடையாளம் அறிந்து அனுமதி கொடுக்கும் வசதி, டேட்டா பாதுகாப்பு எனப் பன்முக பாதுகாப்பு வசதிகள் கொண்ட சாப்ட்வேர் தொகுப்புகள் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பெறலாம்.
10. சரியான இருக்கை: இதனை Ergonomic Chair என அழைப்பார்கள். கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் நமக்கு சரியான நாற்காலி தேவை. தொடர்ந்து பணியாற்றுவதால், நம் உடம்பின் முக்கிய பகுதிகளான கண்கள், முதுகெலும்பு, கைகள், குறிப்பாக மணிக்கட்டு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நாற்காலி, டிஜிட்டல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் தசைகளுக்கு பிரச்னை வராமலும், முதுகெலும்பிற்கு கூடுதல் அழுத்தம் வராமலும் பாதுகாக்கலாம்.