“குடி’யிலும் நாங்க தான் “பர்ஸ்ட்!’ சொல்கின்றனர் கேரள “குடி’மகன்கள்

“கல்வியில் மட்டுமல்ல; “குடி’யிலும் நாங்கள் தான் முன்னணி’ என, நிரூபித்துள்ளனர் கேரள “குடி’மகன்கள். ஆம். இந்தியாவில் மது அருந்துவதில் கேரளாதான் முதலிடம் வகிக்கிறது என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. “தேசிய மாதிரி ஆய்வு’ அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ.,), சமீபத்தில் கேரளாவில் ஓர் ஆய்வு நடத்தியது. அதில், கேரளாவில் குடும்பச் செலவு, கல்விச் செலவு, நுகர்வுச் செலவு போன்றவையோடு, “குடி’ப்பதற்கும் எவ்வளவு செலவு செய்கின்றனர் என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து என்.எஸ்.எஸ்.ஓ.,வின் துணை இயக்குனர் சி.ஆர்.கே.நாயர் கூறுகையில், “கேரளாவில் நகர்ப்புறங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 19 ரூபாயும், கிராமப்புறங்களில் 17 ரூபாயும் மதுவிற்காகச் செலவழிக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.

இந்தியாவின் சராசரி “குடி’ அளவு, நாள் ஒன்றுக்கு, நகர்ப்புறங்களில் 7 ரூபாயும், கிராமங்களில் 6 ரூபாயும் தான். இவற்றை விட இரண்டு மடங்கு கேரளாவில் “குடி’க்காக செலவழிக்கப்படுகிறது. டில்லியில் மாதச் செலவாக 1,828 ரூபாய் செலவழிக்கின்றனர். ஆனால் கேரளாவில் 1,948 ரூபாய் செலவழிக்கின்றனர். அதே போல், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களுக்காக, சராசரியாக, இந்தியாவில் 9 ரூபாய் 90 காசுகள் செலவழிக்கப்படுகின்றன. ஆனால் கேரளாவின் நகர்ப்புறங்களில் 18 ரூபாய் 50 காசும், கிராமங்களில் 14 ரூபாய் 50 காசும் செலவழிக்கின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் கேரளாவில் உணவு, மருத்துவம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் வாங்குவதில் அதிகமாக செலவழிப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. ஆனால், கேரளாவில் 2005-06ல் 12 சதவீதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம், தற்போது 9.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொழில்முறைப் படிப்புகளுக்கு, இந்தியாவின் பிற இடங்களை விட, கேரளாவில் 20 சதவீதம் செலவு குறைவாகவே ஆகிறது.

%d bloggers like this: