அமெரிக்காவின் புதிய சட்டத்தால் பி.பி.ஓ., துறைக்கு பாதிப்பா?

அமெரிக்காவின் கால் சென்டர் பணிகள் பெரும்பாலும் வெளி நாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில் புதிய சட்ட வரையறையை அமெரிக்கா விரைவில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சட்ட வரையறையை அமெரிக்க செனெட்டர் சார்லஸ் ஷுமர் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளார். இதன் மூலம் பி.பி.ஓ., பணிகளுக்காக நாட்டைவிட்டு வெளியே செல்லும் அழைப்புகளுக்கு 25 சதவிகித வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்தக் கொள்கை முடிவு இந்திய பி.பி.ஓ., துறையை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று இந்திய ஐ.டி.,யின் மைய அமைப்பான நாஸ்காம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய பி.பி.ஓ., துறையின் மொத்த வருவாயில் 61 சதவிகிதம் அமெரிக்காவை மையமாகக் கொண்டது. அமெரிக்காவிலிருந்து வரும் இந்தக் கால்களை இந்தியாவிலுள்ள நொய்டா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற இடங்களிலுள்ள பி.பி.ஓ., மையங்கள் பார்த்துக் கொள்கின்றன. இருந்தாலும், அமெரிக்காவின் புதிய சட்ட வரையினால் இந்திய பி.பி.ஓ., துறைக்கு பாதிப்பில்லை என்று நாஸ்காம் கூறுகிறது.
இந்திய பி.பி.ஓ., துறையில் உள்ளே வரும் அழைப்புகளால் 600 கோடி நிதி புரள்கிறது. இதில் அமெரிக்காவிலிருந்து வரும் அழைப்புகளின் மதிப்பு வெறும் 18 கோடி மட்டும்தான். இதனால்தான் இந்திய பி.பி.ஓ., துறைக்கு பாதிப்பில்லை என்ற அறிவிப்பை நாஸ்காம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள புதிய சட்டத்தின் படி குறிப்பிட்ட அளவு கால்-சென்டர் பணிகள் அமெரிக்காவிலேயே செய்யப்பட வேண்டும் என்பதோடு, ஏற்கெனவே வெளியே அவுட் சோர்சிங் செய்யப்பட்ட சில பணிகளை மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பக் கொண்டு வரவேண்டும் என்ற சாராம்சமும் உள்ளது. இந்தப் பணிகளில் ஈடுபடும் கம்பெனிகள் காலாண்டிற்கு ஒரு முறை மொத்த வாடிக்கையாளர் அழைப்புகள் மற்றும் இவற்றில் அவுட்சோர்சிங்கில் வந்த அழைப்புகள் போன்ற புள்ளி விபரங்களைத் தருமாறு நிர்ப்பந்திக்கப்பட உள்ளன.
வச்சோவியா, சிட்டி பாங்க், பாங்க் ஆப் அமெரிக்கா, ஜி.இ., மார்கன் ஸ்டான்லி போன்ற நிதி நிறுவனங்களும், டெஸ்கோ போன்ற ரீடெயில் நிறுவனங்களும், வெரைசான் மற்றும் ஏ.டி. அண்டு டி., போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும், ஹெச்.பி., மற்றும் டெல் போன்ற கம்ப்யூட்டர் நிறுவனங்களும் தங்கள் பேக்-ஆபிஸ் பணிகளுக்கு இந்திய பி.பி.ஓ., நிறுவனங்களை பெரிதும் சார்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: