பெட்ரோல் விலை புதிய நிர்ணயத்தால் யாருக்கு லாபம்?

பெட்ரோல் விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவு, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கவே செய்யும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசு, அதன் விலை நிர்ணயத்தில் இனி தலையிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது. இதனால், பெட்ரோலுக்கான விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பெட்ரோலுக்கு தனிநபர் கொடுக்கும் விலையில் ஒரு ரூபாயில், 29 பைசா மத்திய அரசு வருவாயாகவும், 16 பைசா மாநில அரசு வருவாயாகவும் போக, மீதமுள்ள 55 பைசா முழுவதும் எண்ணெய் நிறுவனங்களுக்குப் போய்விடும். இது மாநிலங்களின் வரிகளுக்கு ஏற்ப சில காசுகள் மட்டும் மாறுபடும்.

டில்லியும், ஆந்திரமாநிலமும் அதிக வரிவிதிக்கும் மாநிலங்கள். இங்கு சராசரியாக மத்திய, மாநில அரசுகள் வரி என்ற கணக்கில் ஒரு ரூபாய்க்கு 45 பைசா வரியாகும். அதாவது, டில்லியில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 51 ரூபாய் 43 பைசாவுக்கு விற்கப்படுகிறது. இதில் 14 ரூபாய் 78 பைசா மத்திய அரசுக்கு வரியாகப் போய்விடும். டீசலை பொருத்தவரையில், ஒரு ரூபாயில் 12 பைசா மத்திய அரசுக்கும், 16 பைசா மாநில அரசுக்கும், 72 பைசா எண்ணெய் நிறுவனங்களுக்கும் கிடைக்கும். அதாவது தற்போதைய விலையான லிட்டர் 40 ரூபாய் 10 பைசாவில், மத்திய அரசுக்கு நான்கு ரூபாய் 74 பைசா கிடைக்கும். மாநில அரசுக்கு ஆறு ரூபாய் 35 பைசா கிடைக்கும். மீதமுள்ள 29 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்களுக்குத்தான்.

பெட்ரோல் விலை இனி பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யும் நடைமுறை வரக்கூடும். அப்போது பெட்ரோல் விலையில் ஏற்றம், இறக்கத்திற்கு ஏற்ப விலைமாற்றம் இருக்கும். ஆனால், மத்திய அரசின் வரிவிதிப்பில் ஒரே மாதிரி இருப்பதால் அதிக அளவு இழப்பு ஏற்படாது. ஆனால், மாநிலங்கள் உற்பத்தி நிலை மீதான வரிவிதிப்பு அடிப்படையில் வரி விதிப்பை மேற்கொள்கின்றன. அதனால் ஏற்படும் பாதிப்பு நுகர்வோர் கையைப் பிடிக்கும். மேலும், மாநிலங்களில் வெவ்வேறு விகிதங்களில் பெட்ரோலுக்கு விற்பனை வரி விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 33 சதவீதமும், குறைந்தபட்சமாக 24.7 சதவீதமும் உள்ளன. தமிழகத்தில் 30 சதவீதம் உள்ளது.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, சமீபத்தில் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பெட்ரோல் விலை உயரும்போதெல்லாம், தற்போதைய விற்பனை வரியால் பெரும் சுமையை மக்கள் சுமக்க நேரிடுவதால் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும். நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், மத்திய அரசு எக்சைஸ் வரிவிதிப்பில் அதிக லாபம் காணும் போது, மாநில அரசுகள் எப்படி தங்கள் வருவாயை இழக்கும் என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக விலை ஏறும் போது வரிஅளவு விகிதமும் உயரும் என்கிற போது, அதனால் லாபம் தானே. ஆகவே மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பு என்ற அம்சம் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில் கிடைக்கும் வரவு ஆகும். ஆகவே எண்ணெய் கம்பெனிகளுக்கும் இந்த விலை உயர்வால் மேலும் வரவு அதிகரிக்கும். இதனால் நுகர்வோருக்கு எந்தப் பலனும் இல்லை.இதுவரை, அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்டதைப் போல, இனி தனியார் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் விற்பனையில் தீவிரமாக ஈடுபட ஆரம்பிக்கும். இது வரை அரசு கட்டுப்பாட்டில் பெட்ரோல் விலை நிர்ணயம் இருந்ததால், கட்டுபடியாகும் விலை இல்லை என்ற காலங்களில் இந்தக் கம்பெனிகள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடிவைத்திருந்தனர்.இனி பெட்ரோல் சர்வதேச நடைமுறை விலைக்கு விற்கலாம் என்பதால் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து தங்கள் கிளைகளைத் திறந்து தீவிரமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

%d bloggers like this: