Daily Archives: ஜூலை 4th, 2010

அ.தி.மு.க., – தே.மு.தி.க., விறு விறு பேச்சுவார்த்தை: சூடாகிறது தேர்தல் களம்

தமிழக அரசியல் களத்தில் பொதுத்தேர்தல் காற்று வீசத் துவங்கி விட்டது. கூட்டணிகள் எப்படி மாறும் என்பதில் துவங்கி, யாருக்கு எத்தனை இடம், எப்படி அணி, எப்படி கூட்டணி அமைந்தால் வெற்றி பெறும் என்றெல்லாம் கூட்டல், கழித்தல் கணக்குகள் அரசியல் வட்டாரத்தில் போடத்துவங்கி விட்டனர். தேர்தலை கருத்தில் கொண்டு, ஜாதிக்கட்சிகளும் உயிர்பெறத் துவங்கி விட்டன.

தி.மு.க.,வைப் பொறுத்தவரையில், காங்கிரசின் தோழமையை மட்டும் வைத்து தேர்தலை சந்திக்க தயார் என்ற நிலையில் உள்ளது. இடைத்தேர்தல்களின் பயன்படுத்திய வெற்றி பார்முலாவும், அரசின் சாதனைகளும் தங்களின் வெற்றிக்கு துணையாய் இருக்கும் என்பது தி.மு.க., தலைமையின் எண்ணமாக உள்ளது. தேர்தல் களத்தை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுக்க வேண்டிய நிலையில் அ.தி.மு.க., உள்ளது. “தி.மு.க.,வை ஒழிப்பதே என் முதல் வேலை’ என விஜயகாந்த் திடீர் சபதம் எடுத்துள்ளது அ.தி.மு.க.,விற்கு நம்பிகையை கொடுத்துள்ளது. எப்படியும் அ.தி.மு.க., – தே.மு.தி.க., கூட்டணி அமைந்து விடும் என்பதை உறுதிப்படுத்துவது போல் இந்த பேச்சு அமைந்துள்ளது. இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற தகவல் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதை ஜெயலலிதாவே, விஜயகாந்தோ இதுவரை மறுக்கவில்லை.

தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்தால், வெற்றி உறுதி என்ற கருத்து தொடர்ந்து அ.தி.மு.க., தலைமைக்கு பல்வேறு ஆலோசகர்களால் சொல்லப்பட, கூட்டணியை உறுதிப்படுத்தும் இறுதிக்கட்ட பணி தீவிரமாகியுள்ளது. முதல்கட்ட பேச்சுவார்த்தையின் போதே, “எங்கள் கட்சிக்கு 15 சதவீத ஓட்டு வங்கி உள்ளது. எனவே, 80 முதல் 100 சீட்டுகளை ஒதுக்க வேண்டும்’ தே.மு.தி.க., நிபந்தனை விதித்துள்ளது. அவர்கள் கேட்கும் அளவுக்கு இடங்களை ஒதுக்க முடியாது என்றாலும், கூட்டணிக்கு ஒப்புக் கொண்டதே அ.தி.மு.க.,விற்கு தெம்பினை கொடுத்துள்ளது.

அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூலமாக, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து பேசப்பட்டுள்ளது. “உங்களுடன் கூட்டணி சேர வேண்டிய நிர்பந்தம் எதுவும் எங்களுக்கு இப்போது இல்லை. நாங்கள் தனித்து நின்றாலும், ஓட்டு வங்கி குறையாது. நாங்கள் பிரிக்கும் ஓட்டுக்கள் உங்களுக்குத்தான் இழப்பை ஏற்படுத்தும். எனவே, யோசித்து முடிவு சொல்லுங்கள்’ என அடுத்த வாதத்தை தே.மு.தி.க., முன்நிறுத்தியுள்ளது. பல கட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தையில், 50 தொகுதிகளுக்கு கீழேயே அ.தி.மு.க., நின்றுள்ளது. ஆனால், “ஐம்பது தொகுதிக்கு மேல் கொடுப்பதாக இருந்தால்தான், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை’ என தே.மு.தி.க., உச்சியில் ஏறிக் கொண்டுள்ளது.100 சீட்டில் பேச்சைத் துவங்கினால்தான், 50ல் முடிப்பார்கள் என்ற கணக்கில் தே.மு.தி.க., வின் காய் நகர்த்தல்கள் உள்ளன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: அ.தி.மு.க., வைப் பொறுத்தவரை 144 தொகுதிகளில் தாங்கள் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 90 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு வைக்கும் திட்டத்தையும் தற்போது தயாரித்துள்ளது. தே.மு.தி.க., கூட்டணியில் சேர்வது உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு 45 தொகுதிகளும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 15 தொகுதிகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ம.தி.மு.க.,விற்கு 25 தொகுதிகளும், உதிரிக் கட்சிகள், ஜாதிக்கட்சிகளுக்கு என ஐந்து தொகுதியும், “ரிசர்வ்’ செய்யப்பட்டுள்ளது.

இதில், தே.மு.தி.க., முரண்டு பிடிக்குமானால், ம.தி.மு.க.,விடம் இருந்து ஐந்து தொகுதிகளை பறித்து, 50 தொகுதிகளை தே.மு.தி.க.,விற்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கம்போல், இந்த முறையும் ம.தி.மு.க.,வின் தன்மானம் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என்றே தோன்றுகிறது. பொதுத்தேர்தல் நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் அந்த கட்சிக்கு எழும் வாய்ப்பு உள்ளது. அப்படி ம.தி.மு.க., வெளியேறும் பட்சத்தில், பா.ம.க.,விற்கு வலை போடவும் அ.தி.மு.க., தயாராக உள்ளது. தே.மு.தி.க., தரப்பிலும் அதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாவற்றையும் விட, காங்கிரஸ் கூட்டணிக்கான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், மொத்த கூட்டணிக் கணக்கும் மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பள்ளி தோழியை மணக்கிறார் தோனி; இன்று இரவில் திருமணம்; தடபுடல் ஏற்பாடு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கும், அவரது நீண்ட கால பள்ளித்தோழியான சாக்ஷி ராவத்துக்கும் டேராடூனில் உள்ள ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவருக்கும், இவரது பள்ளித்தோழி சாக்ஷி ராவத்துக்கும் இடையே டேராடூனில் உள்ள ஹோட்டல் பாகீரதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவ்விழாவில் தோனியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கிரிக்கெட் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

சாக்ஷி ராவத், ராஞ்சி ஷாமிலியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் படித்தவர். தோனியும் இதே பள்ளியில் படித்தவர் தான். பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். தோனி மற்றும் சாக்ஷி ஆகியோரின் தந்தைகள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். சாக்ஷியின் தந்தை ஓய்வு பெற்ற பின் அவர்களது குடும்பம் டேராடூனுக்கு இடம்பெயர்ந்து விட்டது. இருவருக்கும் இடையே திருமண தேதி நிச்சயிக்கப்பட்டு விட்டதா என தோனியின் நண்பரிடம் விசாரித்த போது, அது முடிவாகவில்லை என்றும், அநேகமாக ஆஸி., தொடருக்குப்பின் இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்னும் 2 நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. திடீரென இன்று இரவில் திருமணம் நடக்கும் என டேராடூன் செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது. பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங் மனோகர், வீரர்கள் ஆசீஸ் நெஹ்ரா, ஹர்பஜன்சிங் ஆகியோர் திருமணத்தில் பங்கேற்கின்றனர்.  வரும் 7 ம் தேதி மும்பையில் வரவேற்பு நிகழ்‌ச்சி நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் , பாலிவுட் நடிகர்கள் பங்கேற்கின்றனர். தற்போது திருமண நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

மகிழ்ச்சி வெள்ளம்: தோனியின் நிச்சயார்த்தம் குறித்த செய்தியறிந்து அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கால்பந்து ரசிகரான தோனியின் நிச்சயதார்த்தம், உலக கோப்பை கால்பந்து நடந்து வரும் வேளையில் நடந்திருப்பது மென்மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.

தாக்கு பிடிக்க முடியுமா? உச்சத்துக்கு போனது பெட்ரோல் விலை

மீண்டும் ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் ஒட்டு மொத்த வயிற்று எரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

இந்தாண்டில் மட்டும், இதுவரை மூன்று முறை பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2004ல் ஐ.மு., கூட்டணி அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறை பெட்ரோல், டீசல், சமையல் காஸ், கெரசின் விலையை உயர்த்தியதோடு, போனசாக பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கி, பொதுமக்களை புலம்ப விட்டுள்ளது, மத்திய அரசு. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், முடங்கிப் போயுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள், தற்போது பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், நிலைகுலைந்து போயுள்ளனர்.

கச்சா எண்ணெய் உயர்வு காரணமாம்! பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் போதெல்லாம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது என, காரணம் கூறி வருகிறது அரசு. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, பேரலுக்கு 76 முதல் 80 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால், பெட்ரோல் உற்பத்தி விலையை விட, இந்தியாவில் அதன் விற்பனை விலை மிக குறைவாக உள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உள்ளிட்டவை மானிய விலையில் மக்களுக்கு அளிக்கப்படுவதால், 2009-10ம் ஆண்டில் மட்டும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 46 ஆயிரத்து 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டுமெனில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியது அவசியம். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

உண்மையில் நஷ்டமா? இதுகுறித்து பெட்ரோலிய சந்தை நிலவரத்தை கூர்ந்து கவனித்து வரும் நிபுணர்கள் வேறு மாதிரியான கருத்தை தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுவதாவது: ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரிப்பதற்கு 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகிறது. இதற்கு பின், பெட்ரோலுக்கு ஏராளமான வரிகளை விதித்து, அதை பொதுமக்களின் தலையில் கட்டி விடுகின்றனர். இந்த வரிகளில் சிறிய அளவை மானியமாக அளிக்கின்றனர். இதன்படி பார்த்தால், மானியத்தால் ஏற்படும் நஷ்டம், லாபத் தொகையில் இருந்து கழிக்கப்பட்ட நஷ்டமாக இருக்குமே தவிர, ஒட்டு மொத்த நஷ்டமாக இதை கருத முடியாது. இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

வறுமையில் 40 கோடி மக்கள்: இந்தியாவைப் பொறுத்தவரை 41 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 55 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இது ஒட்டு மொத்த மக்கள் தொகையில் பாதி அளவு. இவர்களின் நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சர்வதேச சந்தை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என காரணம் கூறுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பது, சராசரி இந்திய மக்களின் நியாயமான கவலையாக உள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள்: இந்தியாவில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தான், பொதுமக்களின் பெட்ரோல், டீசல் தேவையை பூர்த்தி செய்கின்றன. பெட்ரோலிய பொருட்களை மானிய விலையில் விற்பதால், தங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுவதாக இந்நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன. இதற்காக, எண்ணெய் நிறுவனங்களுக்கு, அரசு முதல் கட்டமாக ஏற்கனவே 12 ஆயிரம் கோடி உதவித் தொகை அளித்தது. சமீபத்தில் மீண்டும் 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியது. இந்த உதவித் தொகையையும் மீறி, நஷ்டம் ஏற்படுவதால் தான், பெட்ரோலிய பொருட்களின் விலையை அதிகரிக்கும்படி கூறுகிறோம் என்கின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

விலை நிர்ணயமும் போச்சு: இதுவரை பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு தான், நிர்ணயித்து வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை எந்த அளவுக்கு ஏறினாலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, உள்நாட்டில் பெட்ரோல் விலையை முடிந்த அளவுக்கு சமநிலைப் படுத்தி வந்தது. தற்போது அந்த பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டு விட்டது, மத்திய அரசு. இதன்படி, பெட்ரோல் விலையை இனிமேல் எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறினால், அதற்கு ஏற்ப உள்நாட்டிலும் விலை உயர்த்தப்படும். கச்சா எண்ணெய் விலை இறங்கினால், உள்நாட்டிலும் பெட்ரோல் விலை இறங்கும். பெரும்பாலான நேரங்களில் விலை உயர்வு தான் இருக்குமே தவிர, விலை குறைய வாய்ப்பு இல்லை. தற்போது தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறதே, அதுபோல் தான் இனிமேல் பெட்ரோல் விலையும் நிர்ணயிக்கப்படும். எனவே, இனி பொதுமக்களின் நலன் கண்டு கொள்ளப்படாது. எண்ணெய் நிறுவனங்கள், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடாத வகையில் விலையை நிர்ணயித்துக் கொள்ளும். இதில் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள் தான்.

டீசலுக்கும் ஆபத்து: பெட்ரோலைத் தொடர்ந்து, டீசலின் விலை நிர்ணயம் மீதான தனது கட்டுப்பாட்டையும் படிப்படியாக விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் டீசலின் விலையும் விஷம் போல் ஏறும் என்பதை மறுப்பதற்கு இல்லை. இதனால், டீசலை பெரிதும் நம்பியுள்ள சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள், டீசல் விலை உயர்வை சமாளிக்க, வேறு வழியில்லாமல் போக்குவரத்து வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். இதன் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும். இறுதியாக, இந்த விலை உயர்வின் அனைத்து சுமைகளும் பொதுமக்களின் மீது வந்து இறங்கும்.

அடுத்து சமையல் காஸ், கெரசினா? பொதுமக்களின் நலன் கருதி, சமையல் காஸ், கெரசின் மீதான விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, தொடர்ந்து தன்வசமே வைத்துக் கொள்ளப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருந்தாலும், கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் காஸ், கெரசின் மீதான விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பையும், எண்ணெய் நிறுவனங்களிடமே அளிக்க, அரசு தயங்காது என்று தான் தெரிகிறது.

அரசியல் கட்சிகளின் நிலை என்ன? ஐ.மு., கூட்டணியை பொறுத்தவரை, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தவிர, மற்ற கட்சிகள் விலை உயர்வு குறித்து வாய் திறக்கவில்லை. மம்தா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தார். இதற்காக நடந்த அமைச்சரவை கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார். பா.ஜ., தலைவர்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி, நாளை 5ம் தேதி நாடு தழுவிய “பந்த்’நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இருந்தாலும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் இந்த போராட்டத்தில் இணைவது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், “பந்த்’ நடத்த ஆதரவு தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து களம் இறங்கினாலும், விலை உயர்வை வாபஸ் பெறுவது குறித்து, மத்திய அரசு மூச்சு விடாது என்று தான் தெரிகிறது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்: தற்போது டீசல் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரையிலும், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரையிலும், நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 35 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் கெரசின் விலையிலும் மத்திய அரசு விளையாடியுள்ளது. கெரசின் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்பாதிப்பு, பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் எதிரொலிக்க துவங்கி விட்டது. விலை உயர்வுக்கு முன் 2,650 ரூபாய்க்கு விற்ற, ஒரு மூட்டை சர்க்கரை, தற்போது 2,750 ஆக அதிகரித்துள்ளது. சில்லரை விலையில் கிலோவுக்கு ரூ.1.50 வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் லாரி வாடகையும் 500 ரூபாய் வரை அதிகரிக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பருப்பு, பூண்டு, சமையல் எண்ணெய் மற்றும் காய்கறி போன்றவற்றின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வு, அவர்களின் மீதான தாக்குதல் என்றே கூறலாம்.

கிரீத் பரேக்கிற்கு 80 “மிஸ்டு கால்’: பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்தும், விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு குறித்தும் ஆய்வு செய்வதற்காக கிரீத் பரேக் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தான், தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிரீத் பரேக் கூறியதாவது: பெட்ரோல் விலை தொடர்பாக என்னுடைய பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. விலை உயர்வு, விலை நிர்ணயம் தொடர்பாக அறிவிப்பு வெளியானதுமே, என்னுடைய மொபைல் போனுக்கு, பல்வேறு நபர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் துவங்கி விட்டன. குறிப்பாக, மீடியாவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் அழைத்தனர். அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் மட்டும் என்னுடைய மொபைல் போனுக்கு 80 மிஸ்டு கால் வந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அரசின் அறிவிப்பு திருப்தி அளிக்கிறது. இந்த விலை உயர்வால் பணவீக்கம் ஏற்படும் என, கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு கிரீத் பரேக் கூறினார்.

விலை உயர்வால் ஏற்படும் சுமை எவ்வளவு? தற்போதைய பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால், பொதுமக்களுக்கு கூடுதலாக மாதத்துக்கு மிகவும் குறைவான தொகையே செலவாகும் என, மத்திய அரசு ஒரு மதிப்பீடு செய்துள்ளது. இந்த மதிப்பீடு பற்றிய விவரம்: தற்போதைய விலை உயர்வால் சிறிய கார்களை பயன்படுத்துவோருக்கு, சராசரியாக மாதத்துக்கு 135 ரூபாய் கூடுதலாக செலவாகும். இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோருக்கு மாதத்துக்கு 90 ரூபாய் கூடுதலாக செலவாகும். சமையல் காஸ் பயன்படுத்தும் குடும்பத்தினருக்கு கூடுதலாக 200 ரூபாய் செலவிட நேரிடும். இவ்வாறு மத்திய அரசின் மதிப்பீடு கூறுகிறது. இந்த மதிப்பீடு சரியா, இல்லையா என்பதை பொதுமக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

அங்கு ஒரு டாலர் உயர்ந்தால் இங்கு 37 பைசா உயரும்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் விலையை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்து விட்டது. இதன்படி, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலையில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு ஒரு டாலர் அதிகரித்தால், நம் நாட்டில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 37 பைசா அதிகரிக்கும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் கதை தான்.

ரயில்வேக்கு ரூ.460 கோடி செலவு: டீசலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே துறைக்கு கூடுதலாக 460 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது இயங்கும் பயணிகள் ரயிலில் 51 சதவீத ரயில்கள், டீசலில் தான் ஓடுகின்றன. இதேபோல் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தும் ரயில்களில் 37 சதவீத ரயில்கள் டீசலில் ஓடுகின்றன. இந்த ரயில்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 230 கோடி லிட்டர் டீசல் வாங்குகிறோம். இதற்காக, 4,500 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. தற்போது டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளதால், மேலும் 460 கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிலைக்கு ரயில்வே தள்ளப்பட்டுள்ளது. இந்த சுமை, பொதுமக்களின் தலையில் சுமத்தப்படுமா என்பது, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது தான் தெரியும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

பயன்படுத்த மட்டும் கட்டணம் : அடோப்

போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் தொகுப்பிற்குப் பெயர் பெற்ற அடோப் நிறுவனம், தன் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை வழங்குகிறது. இதன் படி, மாதக் கட்டணம் செலுத்துவதன் மூலமும், பயன்படுத்தப்படும் எண்ணிக்கைக் கேற்ப பணம் செலுத்துவதன் மூலமும் ஒருவர் இந்நிறுவனத்தின் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். அண்மையில் கொல்கத்தாவில் அடோப் சி.எஸ். 5 தொகுப்பினை வர்த்தக ரீதியாக வெளியிட்டுப் பேசிய அடோப் மார்க்கட்டிங் பிரிவு தலைவர் இதனைத் தெரிவித்தார்.

பயன்படுத்தும் அளவிற்கு கட்டணம் என்பது, இணைய அடிப்படையில் மேற்கொள்ளப்படும். ஒருவர் இணையம் மூலமாக இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறாரோ அதற்கேற்ற அளவில் பணம் செலுத்த வேண்டும். மணிக்கணக்கு அல்லது வேறு அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். சந்தா அடிப்படையில் பணம் செலுத்துபவர்கள் குறிப்பிட்ட காலம் வரை, சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். அதன்பின், உரிமத்தினை நீட்டிக்கவில்லை என்றால் பயன்படுத்த இயலாது.

அண்மையில் அடோப் வெளியிட்ட அடோப் கிரியேட்டிவ் சூட் 5ல், வடிவமைப்பிற்குத் தேவையான பல வழக்கமான பல அப்ளிகேஷன் களுடன், புதிய அப்ளிகேஷன் களும் தரப்பட்டுள்ளன. அடோப் பிளாஷ் கேடலிஸ்ட், போட்டோ ஷாப், இன் டிசைன் ஆகியவை புதிய சில தொகுப்புகளாகும். இவற்றில் 250க்கும் மேற்பட்ட வசதிகள் கிடைக்கின்றன.

காதலில் காமம் கலந்தால்..!

காதலி அணியும் `ஆடை’ தான் முக்கிய காரணம். அந்த ஆடையில் குடும்ப பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எல்லை மீற மாட்டான்…

நண்பகல் ஆரம்பமாகி இருந்தது. சுனாமி எச்சரிக்கையை தவிர்த்து காலையிலும், மாலையிலும் பரபரப்பாக காணப்படும் மெரீனா கடற்கரையில் ஆங்காங்கே காதலர்கள் முளைத்திருந்தார்கள்.

சிலர் உச்சி வெயிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகுகளின் நிழலில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். சிலர் வெயிலுக்கு பயந்து அலைகளில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.

– இப்படியாக மெரீனாவில் காதல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்க, முதன் முதலாக காதலை வெளிப்படுத்திய வேகத்தில் அங்கே காலடி எடுத்து வைத்தார்கள் அவனும் அவளும்.

கையோடு கொண்டு வந்திருந்த குடையை விரித்து பிடித்துக்கொண்டாள் அவள். அந்த சின்ன லேடீஸ் குடைக்குள் வெயிலுக்கு பயந்து அடைக்கலம் புகுந்து கொண்டான் அவன்.

அந்த சின்னக்குடை தந்த சிறிய நிழலில் கையோடு கை உரசிக்கொண்டு நடந்தார்கள் இருவரும். இதற்கு முன்பு இப்படி நெருங்கிய உரசலோடு இருவரும் சென்ற அனுபவம் கிடையாது என்பதால், அவர்கள் தொண்டைக்குள் இருந்து வெளியே வராமல் மவுன போராட்டம் நடத்தின வார்த்தைகள்.

சிறிது தூரம்தான் நடந்திருப்பார்கள். காற்று வேகமாக வீசியதால் அவளது மென்மையான பிடியை விட்டு விலகி தனியாக பறந்தது குடை. அதை பிடிக்க இருவரும் ஓடினர். சிறிதுதூரம் ராக்கெட் வேகத்தில் பறந்த குடை, பயனற்று கிடந்த ஒரு படகின் மீது மோதிக்கொண்டு நின்றது.

கை நழுவிபோன குடையை எடுத்துவிட்டு அவர்கள் நிமிர்ந்தபோதுதான் படகுக்கு அடுத்த பக்கத்தில் அந்த காட்சியை கண்டார்கள். தனது மடியில் பூத்திருந்த காதலியை முதுகை வளைத்து தலையால் முடி காதல் ஆராய்ச்சியில் ழுழ்கியிருந்தான் காதலன்.

அதை பார்த்த மாத்திரத்தில் இவர்கள் இருவரும் பேச்சு வராமல் தவித்தனர். அந்த தவிப்புக்கு விடை கொடுக்க, அங்கே கிடந்த இன்னொரு படகின் சிறிய நிழலில் அமர்ந்து கொண்டனர். இருவரும் தோளோடு தோள் உரசி இருந்தனர்.

இருவரது மனதிலும், காதல் ஆராய்ச்சியில் இறங்கியிருந்த ஜோடியின் காட்சியே பலமாக பதிவாகி இருந்ததால், அவர்களது மனமும் எதையோ எதிர்பார்த்து ஏங்கித் தவித்தது. அந்த குரங்கு மனதிற்கு அணைபோட வேகமாக ஓடி வந்து கரையை முத்தமிட்டுச் சென்ற கடல் அலைகளை வெறித்து பார்த்துக் கொண்டனர்.

மெல்ல அவளை திரும்பி பார்த்தான் அவன். துப்பட்டா இல்லாத அவளது டாப்சும், அமர்ந்ததால் இன்னும் இறுக்கமாகிபோன அவளது டைட் ஜீன்ஸ் பேண்ட்டும் அவனை என்னமோ செய்தன. அவள் மீது கணபொழுதில் மோகம் கொண்டவன், எதிர்பாராதவிதமாக அவளது உதட்டில் இச் மழை பொழிந்து விட்டான்.

அவன் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்காத அவள் சட்டென்று எழுந்துவிட்டாள். அவளது கண்களில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. அடிக்க வருவதுபோல் கையை தூக்கினாள்.

” இப்படி நடந்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஐ லவ் யூ  சொன்ன முதல் நாள்லயே  இப்படின்னா, நிச்சயம் நம் காதல் ஜெயிக்காது. இப்பவே, ஏன்… இந்த நிமிஷமே பிரிஞ்சுக்குவோம். இனி நீ யாரோ, நான் யாரோ…” என்று படபடவென்று வார்த்தைகளை வெடிக்க விட்டவள், அங்கிருந்து வேகமாக அகன்றாள்.

இப்போதைய பெரும்பாலான காதலர்கள் மோதிக்கொள்வது இந்த விஷயத்தில்தான். `என்னை பார்த்து அவன் காதலிக்கவில்லை… என் உடலை பார்த்துதான் காதலித்து இருக்கிறான்…’ என்று இந்த விஷயத்தில் காதலிகள் குற்றம்சாட்டினால், அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். காதல் என்பது அன்பும், காமமும் நிறைந்ததுதான்.

நெய் வேண்டும் என்றால் பாலை முதலில் நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு, அதை மோர் ஆக்க வேண்டும். அந்த மோரை கடைந்தால் வெண்ணை திரண்டு வரும். அந்த வெண்ணையை உருக்கினால்தான் நாம் விரும்பும் நெய் கிடைக்கும்.

காமமும் அப்படியே! காதலி கிடைத்துவிட்டாள் என்பதற்காக அவள் மீது சட்டென்று மோகம் கொண்டுவிடக்கூடாது. பொறுமையாக காதலை வளர்த்து காதல் கைகூடி திருமணத்தில் முடிந்த பிறகுதான் அதை அரங்கேற்ற வேண்டும். அதுதான் உண்மைக் காதலுக்கு அழகு.

அதற்கு என்ன செய்யலாம்? முக்கியமாக, காதலர்கள் மனதில் காமம் எழ சூழ்நிலைகள் மட்டுமின்றி காதலிகளும் மற்றொரு வகையில் காரணமாக அமைகின்றனர். அதற்கு, அவர்கள் அணியும் ஆடை தான் காரணம். ஆடையில் குடும்ப பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எளிதில் எல்லை மீற மாட்டான். காதல் மொழி பேசுவதில் முக்கிய இடம் கண்களுக்குத்தான். அந்த கண்களின் பார்வையில் திருமணம் கை கூடும் வரையில் ஆபாசம் வெளிபடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காதலியிடம் நேருக்கு நேராக நின்று பேசும்போது அவளது கண்களை பார்த்தே பேச பழகிக் கொள்ளுங்கள். அந்த `கண்ணோடு கண்ணான பார்வை’ உங்கள் கண்ணியத்தை மேம்படுத்தும். காதலி அணிந்திருக்கும் உள்ளாடை அப்பட்டமாக தெரிந்தால், கண்ணியமாக சுட்டிக் காட்டுங்கள். அவள் உண்மையை புரிந்து கொள்வாள். உங்கள் மீதான நல்ல எண்ணமும் அவளிடம் அதிகரிக்கும். ஒரு நிமிடம் பேசினாலும், மணிக்கணக்கில் `கடலை’ போட்டாலும் காதலியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். அப்போது, அவளை அழகாக வர்ணிக்கலாமே தவிர, ஆபாசமாக வர்ணிக்கக்கூடாது. காதலியுடன் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, அவளுக்குத் தெரியாமல் அவள் அழகை ரசிப்பது நாகரீகம் அல்ல. பார்க், பீச், ஹோட்டல்… என்று ஊர் சுற்றும் காதலர்கள் மனதில் லாட்ஜில் ரும் போடும் ஆசை மட்டும் எழுந்து விடக்கூடாது. இந்த எண்ணத்தை காதலன் காதலியிடம் மறைமுகமாக ஏற்படுத்தினால், அச்செயல் அவனை தவறானவனாகவே அடையாளம் காட்டும்.