Daily Archives: ஜூலை 5th, 2010

வீடுகளில் மின்தடைக்கு நிரந்தர தீர்வு 1 கிலோ வாட் சோலார் பவர் பேக்

மின்தடைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்காக, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் திட்டத்தை வீடுகளில் பயன்படுத்தலாம் என டெடா துணைப் பொதுமேலாளர் சையது அகமது தகவல் வெளியிட்டுள்ளார்.வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் இன்வெர்ட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றால் மூன்று மணி நேரம் வரை மட்டுமே தொடர்ந்து செயல்படமுடியும். ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெறமுடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த 2.2 லட்சம் ரூபாய் செலவாகும். ஒரு நாள் 8 யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும்.வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின்சாரப் பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த திறந்த வெளியில் 65 சதுர அடி இடம் தேவை. சோலார் அமைப்பை ஏற்படுத்த விரும்புவோர் தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகங்களில் விண்ணப்பித்து 50 சதவீதம் மானியம் பெற்றுக் கொள்ளலாம்.சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவினை ஒப்பிடுகையில் சோலார் அமைப்பை ஏற்படுத்திய எட்டு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பினை பராமரிப்பு செய்வது மிகவும் எளிமையானது. சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதும். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த வசதியை பொதுமக்கள் ஏற்படுத்தி, மின்தடை பிரச்னைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம் என தகவல் வெளியிட்டுள்ளார்.

திடீர் மரணம் நிகழ்வது ஏன் ?

எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் மரணம் ஏற்படும். வயது மூப்பு, விபத்து, தொடர் நோய் ஆகிய காரணங்களால் மரணம் ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், எந்த நோயும் இல்லாமல், நோய்க்கான அறிகுறிகளும் இல்லாமல், திடீரென சிலர் மரணம் அடைகின்றனர். இதற்கு “திடீர் இளவயது மரணம்’ (சடன் அடல்ட் டெத்) என மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர்.
தென் கிழக்கு ஆசியாவில் வசிக்கும் மக்களிடையே இது போன்ற மரணங்கள் சகஜமாக உள்ளன. நாட்டு பாடல்களில் கூட இது கூறப்பட்டுள்ளது. “பங்குன்குட்’ என்று பிலிப்பைனிலும், “போக்குரி’ என ஜப்பானிலும், “லாய் தாய்’ என தாய்லாந்திலும் இந்த மரணத்தை அழைக்கின்றனர். சிலர் “தோஷம்’ என அழைக்கின்றனர். இது போன்ற மரணம் சம்பவிக்கும் வீடுகளில், பெண் எடுக்கவும் தயங்கும் பழக்கமும் உண்டு.
திடீரென மரணம் ஏற்படுவது, பெண்களை விட, ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. 32 வயதில் மரணமடைபவர்கள் அதிகம் பேர். இரவு தூங்கச் சென்று, விடிவதற்குள் மரணம் அடைவது தான், இது போன்ற மரணங்களுக்கான அறிகுறி.
மரணம் அடைந்தவருக்கு அருகில் படுத்திருப்பவர், திடீரென ஒரு அழுகுரலையோ, கத்துவது போன்ற சத்தத்தையோ கேட்டதாகக் கூறுவர். இது சூனியம், மாந்திரிகம், சாபம் என அவரவர் நம்பிக்கைகளை பொறுத்து கூறப்படுகிறது. இது போன்ற மரணங்களில், ஐந்து சதவீதத்தினரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் போது, இதயத்துடிப்பில் லேசான மாறுதல் இருந்ததற்கான அடையா ளம் மட்டும் தெரியும். இளவயது மரணம் என்பதாலும், ஆரோக்கியமான உடல் என்பதாலும் டாக்டர்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இதயத் துடிப்புக்கு தேவையான மின்சக்தியில் மாற்றம் ஏற்படுவதற்கு, பாதிப்படைந்த மரபணு தான் காரணம். இதனால் தான் சில குடும்பங்களில், இத்தகைய மரணங்கள் பரம்பரையாக ஏற்படுகின்றன. தூங்கும் போது, நம் இதயம் துடிப்பது சற்று குறைகிறது. இது அளவுக்கு அதிகமாக குறைவதற்கான காரணம், மின்சக்தி மாறுபாடு தான். குறையும் இதயத்துடிப்பு, இறுதியில் நின்று விடுகிறது. இதனால் தான் இத்தகைய மரணங்கள், பெரும்பாலும் இரவு நேரத்தில் ஏற்படுகின்றன.

இத்தகைய பாரம்பரிய மரணங்கள் கொண்ட குடும்ப உறுப்பினர்களிடையே, குழந்தை பருவத்திலோ, விடலை பருவத்திலோ இதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரிவதில்லை. உடற்பயிற்சி செய்யும் போது, தங்களுடைய இதயம் வெகு வேகமாக அடித்து கொள்கிறதென்று பெற்றோரிடம் கூறுவர்; மயங்கி விழுவர்; திடீரென தலை சுற்றும். எனினும், உடல் ஆரோக்கியமாக இருப்பதால், பெற்றோரும், மருத்துவர்களும், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அதே போல் சாதாரண நிலையில், இவர்களிடம் எடுக்கப்படும் இ.சி.ஜி.,யும் சாதாரணமாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்த சில நொடிகளில் இ.சி.ஜி., எடுக்கும் போது மட்டும் வேறுபாடு தெரியும். எனினும், இது போன்று மரணம் அடைந்த 60 சதவீதத்தினரிடையே, மேலே சொன்ன அறிகுறிகள் கூட காணப்பட்டதில்லை. ஜீவாவும் இதில் அடக்கம். ஆரோக்கியமான நபர், படபடப்பான சூழ்நிலையில் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுகிறாரா, இவரது குடும்பத்தில் திடீர் மரணமோ, நோய் வாய்ப்படாத குழந்தையின் திடீர் மரணமோ ஏற்பட்டுள்ளதா, உடற்பயிற்சிக்கு பின், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். எனினும், இ.சி.ஜி.,யில் ஏற்படும் மாறுபாடை வைத்தே, திடீர் மரணம் சம்பவிக்குமென கூறி விட முடியாது. திடீர் மரணம் ஏற்பட்ட சிலரின் உடலை பரிசோதித்த போது, அவர்கள் அதுவரை கண்டறியாத ஒரு பாதிப்பு உடலில் இருப்பது தெரிந்தது.
இதய ரத்தக்குழாயில் கொழுப்பு அடைத்திருப்பது, படிமானம் ஏற்பட்டிருப்பது ஆகியவை, இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை துண்டித்திருக்கும் அல்லது தாமதப்படுத்திருக்கும். இதனால், மாரடைப்பு நோய் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கும். சிலருக்கு ரத்தக் குழாய்களே வேறு இடங்களில் மாறி வளர்ந்திருக்கும். பிறப்பிலேயே, “அயோடிக் ஸ்டெனோசிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஓடி ஆடும் இளவயதில், இவர்களின் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவில் எந்த மாறுபாடும் தெரியாது. திடீரென மரணம் ஏற்படும் போது தான், இந்த குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.
“கார்டியோமயோபதி’ என்ற நோயாலும் இதய தசைகள் பாதிக்கபட்டிருக்கலாம். இதுவும் சிலருக்கு பரம்பரையாகவே ஏற்படும். தசைகள் செயல் குறைந்த நிலையிலோ, பெரிய அளவிலோ காணப்படும். இதனால் சீரான இதயத்துடிப்பு இன்றியோ, இதயத்தின் சிக்கலான பகுதிகளுக்கு போதுமான அளவு ரத்த சப்ளையோ இல்லாமல் போகும். சில வைரஸ் தொற்றுக்கள் கூட, இதய தசைகளை பாதிப்படைய செய்யும், “மயோகார்டிடிஸ்’ என்றழைக்கப்படும் இந்த தொற்றால், இதயத்திற்கான மின் சப்ளை சீராக இல்லாமல் போய் மரணத்தை ஏற்படுத்தும். டெர்பெனாடைன் மருந்தோ அல்லது கோகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களோ கூட, இதயத்துடிப்பை தாறுமாறாக ஏற்றி, உயிருக்கு உலை வைத்து விடும்.
எல்லாவித திடீர் மரணத்தையும், முன்கூட்டியே தடுக்க முடியாது. வாழ்க்கையின் தவிர்க்க முடியாத விதி என்று கூட இதைக் கருதி கொள்ளலாம். எனினும், குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் மயக்கம், நாடித்துடிப்பு அதிகரித்து வியர்த்தல், மூச்சுத் திணறலை தொடர்ந்து மயக்கம் ஆகியவற்றை பெற்றோர் கவனிக்க வேண்டும். இதே போன்று குடும்பத்தில் மற்ற யாருக்காவது அறிகுறிகள் இருந்து அவர்கள் திடீர் மரணம் அடைந்துள்ளனரா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மயோகார்டிடிஸ், இ.சி.ஜி.,யில் மாறுபாடு, கார்டியோமயோபதி போன்றவற்றுக்கு சிகிச்சை முறைகள் உள்ளன. பிறப்பிலேயே உள்ள சில வகையான இதயக்கோளாறுகளுக்கு, அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. நொறுக்குத் தீனி சாப்பிட்டு கொண்டே, நீண்ட நேரம் அமர்ந்து “டிவி’ பார்ப்பதால் ஏற்படும் கொழுப்பு படிமானங்களை, தினமும் ஒருமணி நேர உடற்பயிற்சி செய்வதன் மூலம் தவிர்க்கலாம். பெற்றோர் தான் இதற்கு உதாரணமாக அமைய வேண்டும். பெற்றோர் உடற்பயிற்சியில் ஈடுபடாமல், “டிவி’ பார்த்து கொண்டே குழந்தைகளிடம் “உடற்பயிற்சி செய்…’ என்று சொன்னால், குழந்தைகள் அவர்கள் அறிவுரையை பின்பற்ற மாட்டார்கள்.

டாக்டர் கீதா மத்தாய்  குழந்தை நல மருத்துவர், வேலூர்.

மனநோய் ஒரு சமூக வியாதியா!

மனநோய் ஒரு சமூக வியாதி. ஆடையை கிழித்துக் கொண்டு அலைபவர்கள் மட்டும் மனநோயாளிகள் அல்ல. ஆசைகள் நிறைவேறாதவர்கள், விருப்பங்களை அடக்கிக் கொண்டவர்கள், அடக்கபடுபவர்கள் என எல்லோரும் எப்போதாவது மனநோய் அறிகுறிகளை வெளிபடுத்துவார்கள்.

சமுதாயத்தில் ஏற்ற இறக்கங்கள் பின்பற்றப்படும்வரை மனவியாதிகள் இருக்கும் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உளவியலின் தந்தையாக போற்றபடும் சிக்மட் பிராய்டு, `பண்பாட்டு உணர்ச்சியால் (பாலின) உணர்வை கட்டுபடுத்துவதும் மனநோய் பாதிப்புக்கு காரணம்’ என்று கூறினார்.   மனிதன் ஒரு இன்பம் விரும்பி. அவனுக்கு துன்பம் பிடிக்காது. ஆனால் இன்பமும் துன்பமும் மனதால் வருகிறது என்பதை உணராதபோது அவன் சுயநிலை இழக்கிறான். உளவியல் பாதிப்பு வெளிபடத் தொடங்குகிறது. மற்றவர்களால் மனநோயாளி என ஒதுக்கபடுகிறான். உடல் திடகாத்திரமாக இருந்தும் மனம் திடமாக இல்லாவிட்டால் அவனை சமுகம் மனிதனாகக் கருதாது.

மனவியாதியும் மற்ற வியாதிகள்போல குணபடுத்தக் கூடியதே. ஆனால் சமுகம், பாதிக்கபட்டவருடன் அவரது குடும்பத்தையே ஒதுக் குவதால் யாரும் துணிந்து மனநல சிகிச்சையை முதலிலேயே நாடுவதில்லை.   சிந்தனை, உணர்ச்சி, பண்பியல் இவற்றின் குறைபாடுகளே மன நோயின் அறிகுறிகளாகும். வழக்கத்துக்கு மாறாக பேசுவது, சொன்னதையே சொல்வது சிந்தனை குழப்ப அறிகுறிகளாகும். கல்வி அறிவிற்கும், கலாச்சாரத்திற்கும் பொருந்தாத முடநம்பிக்கை, அச்சம் காரணமாக எழும் தேவையற்ற பயம், நம்பிக்கை, இயல்பான உணர்வுகள் அடங்காமல் வெளி படுவது மனநோய் வெளிபாடுகளாகும்.கடவுள் தோன்றுவதாகவும், ஏதோ ஒலி கேட்பதாகவும், வாசனை வருவதாகவும், யாரோ தங்களை தொட்டுத் துன்புறுத்துவதாகவும் கூறுவதும் சில அறிகுறிகள் தாம். ஞாபகசக்தி குறைவதும், தூக்கம் குறைவதும் மன பாதிப்புகளின் வெளிபாடுகளே.   அறிகுறிகளை சரியாக கவனிக்காவிட்டால் மனநோய் முதிர்கிறது. இதில் எண்ணம் தொடர்பான முதிர்ந்த மனநோய்கள் இருவகைபடும். அவை: முளை பாதிப்பது, முளை பாதிக்காத மனம் சார்ந்த பாதிப்பு.

இதன் முதல்கட்டமாக மனச் சிதைவு ஏற்படுகிறது. குழந்தைகளிடம் அதிக எதிர்பார்பை காட்டுவதால் குமர பருவ மனச்சிதைவு உண்டாகிறது. இளமையில் விரைப்பு சார்ந்த மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது. பகை, வெறுப்பு, அலட்சியம், அகம்பாவ எண்ணம் கொண்டவர்களுக்கு பின்னாளில் சந்தேகம் சார்ந்த மனச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.   மனநலக் குறைவு உடல் நோய்களையும் தோற்றுவிக்கும். ஏனெனில் மனமும், உடலும் இணைபுள்ளவை. உடலில் நோய் ஏற்பட்டால் கோபம், எரிச்சல், சோர்வு போன்ற மன பாதிப்புகள் வெளிபடும். அதுபோல மனஅதிர்ச்சி ஏற்படும்போது வியர்வை, நடுக்கம் போன்ற உடல்பாதிப்புகள் ஏற்படும்.

எனவே உளவியல் மாற்றங்களால் சில வியாதிகளும் தோன்றும். உணர்வு கொந்தளிப்பால் ஆஸ்துமா, குடற்புண் உள்ளிட்ட ஜீரண மண்டல வியாதிகள் ஏற்படும். பயம், நாணம், கோபம் போன்ற உணர்வு அடக்கத்தால் தோல் வியாதி, ரத்த அழுத்தமும், சுரப்பிகளில் பாதிப்பும் ஏற்படுகிறது. பயம், அதிர்ச்சி போன்றவற்றால் முளை நாளங்கள் பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகள் தோன்றலாம்.    முளையில் ஏற்படும் பலவித நோய்களாலும் மனநோய் உருவாகும். ஜன்னி நோய் ஒரு வித பிதற்ற நிலை மனவியாதியே. மதுபழக்கம், நாளமில்லாச் சுரப்பிகளின் பாதிப்பு இதற்கு காரணமாகும். சிலருக்கு நினைவுகள் அடிக்கடி மாறுவதால் மனக்குழப்பம் ஏற்படலாம். ரத்த ஓட்டம் குறைவு, முளையில் உருவாகும் கட்டியால் நாள்பட்ட முளைபாதிப்பு நோய் ஏற்படலாம். இதனால் மனம் ஆற்றல் இழந்துபோகும். உணர்ச்சி வசப்படுவதால் பலவித வலிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. இதை மருந்துகளால் குணபடுத்தலாம்.

ஜன்னி, மனக்குழப்பம், வலிப்பு இவற்றுக்கு மதுபழக்கம் மற்றும் பழக்கவழக்கங்களே முக்கிய காரணம்.   ஒருவர் நலமாக இருக்க வேண்டுமென்றால் அவரது குழந்தை பருவம் சரியாக அமைந்திருக்க வேண்டும். குழந்தைகள் நோயற்ற நிலையில் சாப்பிட மறுத்தால் மனபாதிப்பாக இருக்கும். கவன ஈர்ப்புக்காக அல்லது, எதிர்ப்புக்காக, பயத்தால் உண்ண மறுத்து அடம் பிடிக்கலாம்.

மிரட்டும் கனவுகளால் தூக்கம் இழப்பது, தூக்கத்தில் சிறுர் கழிப்பது போன்றவற்றுக்கு மன பாதிப்புகளே காரணம். திக்கிபேசுவது மனநோய் இல்லை. ஆனால் அதனால் மனஇறுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி மற்றும் சூழ்நிலைக் குறைபாடுகள் குழந்தைகளின் கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பின்னாளில் வேறு மனநோய்களை தோற்றுவிக்கலாம்.   பொய், களவு, சண்டைக்குச் செல்லுதல், தீ வைத்தல் போன்றவற்றில் ஈடுபடும் குழந்தைகள் சமுக விரோதிகளாக வளரும் ஆபத்து உண்டு. இதற்கு காரணம் மனபாதிப்புகளே. இவர்கள் புத்திசாலிகளாகக் காணப்படுவார்கள். ஆனாலும் தாங்கள் விரும்பியதை அடைவதிலேயே குறியாக இருப்பார்கள். பாரம்பரியம், சுற்றுச்சூழல், முளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் அவர்கள் பாதிக்கபட காரணமாக அமைகின்றன.

குழந்தை பருவ ஏக்கங்கள், கோபங்கள், பெற்றோரின் கண்டிப்பு ஒருவரை மதுபழக்கத்திற்கு அடிமையாக்கலாம். மது மன நிலையை மாற்றுவதால் மனநோய் தோன்றும். ஒவ்வொரு மனநோயாளிக்கும் மிகவும் தேவையானது ஒரு நண்பனே என்கிறார் உளவியல் நிபுணர் கிளிபோர்டு பியர்ஸ். இக்காலத்தில் மனநோய்களுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. வீரிய மருந்து மாத்திரைகள் மதம் பிடித்தவர்போல் இருக்கும் நோயாளியை கட்டுபடுத்த உதவுகிறது. மின்அதிர்ச்சி முறை மற்றொரு முக்கியமான சிகிச்சையாகும். மருத்துவர்கள் செர்லெட்டி, பினி இருவரும் 1938-ல் இம்முறையை அறி முகபடுத்தினர். அதிக பாதிப்புள்ளவர்களுக்கு முளை அறுவைச் சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதுதவிர பேச்சு வழியில் மனபகுப்பு மருத்துவம், மனோவசிய சிகிச்சை, நடத்தை மாற்று மருத்துவம் போன்றவையும் உள்ளன.;.

புதைக்கப்படும் புலனாய்வுத் துறை : உரத்த சிந்தனை: எஸ்.ஆர்.சேகர்

மத்திய புலனாய்வுத் துறை – சி.பி.ஐ., என்றாலே, ஒரு பெருமிதம், மிடுக்கு, கம்பீரம். இப்படித் தான் சிலகாலம் வரை, நம் அனைவர் மனதிலும் சி.பி.ஐ., நின்றது. இப்போது அது பழங்கதை. இன்று சி.பி.ஐ., என்பது பபூனாக, மத்தியில் ஆட்சி செலுத்தும் கட்சியின் கையாளாக, ஏவலாளாக… புரியும்படி சொன்னால், ஆளும் கட்சியின் அடியாளாக செயல்படும் அவலம் தான் இன்றைய நிஜம். அவ்வப்போதும், சமீபகாலமாகவும், குறிப்பாக ஐ.மு.கூ., ஆட்சி 2004 துவங்கியது முதல், சி.பி.ஐ., ஆளும் கட்சியின் ஏவலாளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்ட நெறிமுறைகள், தர்ம நெறிமுறைகளெல்லாம் தூக்கி எறியப்பட்டு, அரசின் நிர்பந்தத்தால், வழக்குகளை பாதியிலேயே வாபஸ் பெறுவது போன்ற, புதிய கலாசாரத்தை சி.பி.ஐ., பின்பற்றத் துவங்கி விட்டது.

ஐ.மு.கூ., அரசு பதவி ஏற்று ஓராண்டு காலம் வரை, சி.பி.ஐ., தொந்தரவு செய்யப்படவில்லை. 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம், பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு முடியும் தறுவாயில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சதீஷ் சர்மா வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்டிருந்த 15 வழக்குகளும், சி.பி.ஐ.,யால் வாபஸ் பெறப்பட்டன. இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்பது மட்டுமல்ல, சி.பி.ஐ.,யை அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டது ஆளும்கட்சி என்பது வெட்டவெளிச்சமானது. சத்திஸ்கர் மாநில ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும், எம்.எல்.ஏ.,க் களை விலைக்கு வாங்கிய வழக்கில், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மீதிருந்த வழக்குகளை சி.பி.ஐ., கோர்ட்டில் திரும்பப் பெற்று, ஆளும் கட்சியின் ஏவலாள் எனும் அவப்பெயருக்குள்ளாயிற்று.

கடந்த 1984ல், சீக்கியர்களை கொன்று குவித்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லர், வலுவான ஆதாரங்களோடு, கிட்டத்தட்ட குற்றவாளி என அறிவிக்கப்படுவார் என்னும் சூழலில், அவர் மீதிருந்த அத்தனை வழக்குகளும் மார்ச் 2009ல் திரும்பப் பெறப்பட்டன. இதன் முக்கிய காரணம், அடுத்த இரண்டு வாரங்களில் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது. போபர்ஸ் வழக்கில், பல்வேறு தடைகளை மீறி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனும் நிலை ஒரு சமயம் வந்தது. மே 2009ல் ஐ.மு.கூ., மீண்டும் ஆட்சியை பிடித்தவுடன், அதே ஆண்டு அக்டோபரில், தேடப்படும் குற்றவாளி பட்டியலிலிருந்து சோனியாவின் குடும்ப நண்பர், இத்தாலியின் ஒட்டவோ குட்ரோச்சியை சி.பி.ஐ., விடுவித்தது. அவரது லண்டன் வங்கியில் அதுவரை சி.பி.ஐ., முடக்கி வைத்திருந்த பிரச்னைக்குரிய 21 கோடி ரூபாய் பணம் முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. விளைவு, ஒரே நாளில் அவர் பணத்தை எடுத்துக் கொண்டார். இப்படி சி.பி.ஐ., ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு கொத்தடிமையாக செயல்பட்டது அதிர்ச்சிக்குரிய சம்பவம்.

ஜூன் 22, 2008ல், சோனியா அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அரசு தோற்கடிக்கப்படும் எனும் சூழலில், முலாயம் சிங்குக்கு வலை வீசப்பட்டது. வலையாக மாறிய சி.பி.ஐ., அமர்சிங்கிடம் பேரம் படிந்தது. இதற்கு கைமாறாக, சமாஜ்வாடி எம்.பி.,க்களின் ஓட்டுக்களால், ஐ.மு.கூ., அரசு காப்பாற்றப்பட்டது. பிரதிபலனாக சி.பி.ஐ., டிச., 2008ல் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கிலிருந்து முலாயம் சிங்கை விடுவித்து வழக்குகளை வாபஸ் பெற்றது. மார்ச் 30, 2010ல், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் மீது, பாட்னா ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டிய சி.பி.ஐ., அதை செய்யாமல் தவிர்த்தது. இந்த பேரத்தில், அரசுக்கு ஆதரவாக தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாலு வெளிநடப்பு செய்தார். தாஜ் ஓட்டல் வழக்கு மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில், உ.பி., முதல்வர் மாயாவதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டிய சி.பி.ஐ., ஏப்., 23, 2010ல் அவகாசம் கேட்டது. அதற்கு விலையாக லோக்சபாவில் வெட்டுத்தீர்மானத்தில் அவரது கட்சி எம்.பி.,க்கள் 21 பேர் அரசுக்கு ஆதரவு ஓட்டளித்தனர். கொடுக்க வேண்டியதை கொடுத்து, சி.பி.ஐ., மூலம் பெற வேண்டியதை மன்மோகன் அரசு பெற்றது. இப்படி, தன் கட்சித் தலைவர்களை விடுவிக்கவும், தன்னுடைய ஆட்சியை காப்பாற்ற எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைக்கவும் சி.பி.ஐ.,யை மத்திய அரசு தனது அடியாளாக பயன்படுத்தியது.

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தொடுத்த வழக்கில் மனு ஐ.பி.சி., 304(2) பிரிவில் தண்டனை பெற்றுத்தர தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ.,யின் சாட்சியங்கள் வலுவாக இல்லாததால், பின்னாளில் வழக்கு ஐ.பி.சி., 304(எ) பிரிவுக்கு மாற்றப்பட்டு, வழக்கு நீர்த்துப் போனது. இடைக்காலத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு எதிராக வலுவான சாட்சியங்கள் திரட்டப்படும். சி.பி.ஐ., அரசியல் காரணங்களுக்காக, “ரெவ்யு பெட்டிஷன்’ போடவில்லை. அவ்வாறு செய்திருந்தால், இன்று குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திருக்கும். ஆட்சியாளர்களின் பிடியில் சி.பி.ஐ., இருந்ததால்தான் வழக்கின் முடிவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் போனது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, கையாளாக செயல்படத் தான் சி.பி.ஐ.,யை உருவாக்கியவர்கள் தொடங்கினரா? “ஸ்பெஷல் போலீஸ் எஸ்டாபிலிஸ்மென்ட்’ என்பது, 1941ல் இரண்டாம் உலகப் போரில், சப்ளை மற்றும் சர்வீசை கண்காணிக்க உருவாக்கப்பட்டது. 1962ல் அமைக்கப்பட்ட சந்தானம் கமிட்டி, இதன் செம்மைப்படுத்தப்பட்ட,”சென்ட்ரல் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேஷனை’ ஏற்படுத்தியது.

அமெரிக்காவிலுள்ள எப்.பி.ஐ., போல், சி.பி.ஐ., இருக்க வேண்டுமென்பது உருவாக்கியவர்களின் உள்ளக்கிடக்கை. இன்றும் கூட இன்டர்போலின் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பு சி.பி.ஐ., மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்லிமென்ட் தீர்மானத்தின் அடிப்படையில், ஜூன் 1, 1963ம் ஆண்டு சி.பி.ஐ., நிறுவப்பட்டது. இதன் பெருமைகளைச் சொன்னால், இதன் இன்றைய சிறுமைகளைக் கண்டு நம் நெஞ்சு வெதும்பும். இத்தனை பெருமைகளை உடைய சி.பி.ஐ., பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் குறைதீர்ப்பு மற்றும் தனிப்பயிற்சித்துறை அமைச்சரின் கீழ் செயல்படுகிறது. ஆகவே, அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இந்த அமைச்சர் தான் சி.பி.ஐ.,யின் எஜமான். இப்படி மந்திரி, “பாஸ்’ ஆக இருந்தால், ஆளும் கட்சிக்கு சொல்லவா வேண்டும். சி.பி.ஐ.,யை தங்கள் எடுபிடியாக்கினர்.

பிரியதர்ஷினி மட்டூ கொலை வழக்கில், 22 வயது சட்டக்கல்லூரி மாணவர் சந்தோஷ் குமார் சிங் முதலில் விடுவிக்கப்பட்டார். “சி.பி.ஐ., சரியாக செயல்படவில்லை’ என்று நீதிபதி, சி.பி.ஐ.,க்கு குட்டு வைத்தார். குற்றவாளி ஐ.பி.எஸ்., அதிகாரியின் மகன் என்பதால், சி.பி.ஐ., சுணக்கம் காட்டியது. பிறகு மீண்டும் வழக்கை எடுத்து 2006ம் ஆண்டு, மரண தண்டனை பெற்றுத் தந்தது. கடந்த 1991ல், ஹவாலா வழக்கில் வினீத் நாராயணன் விடுவிக்கப்பட்டதை கண்டித்த சுப்ரீம் கோர்ட், “சி.பி.ஐ., – சி.வி.சி.,யின் மேற்பார்வையில் செயல்பட வேண்டும்’ எனக் கூறியது சி.பி.ஐ.,க்கு ஒரு நெருடல். இப்படி சொதப்பல், அவமானப்படுதல், அரசியல் தலையீட்டுக்கு அடி பணிதல் என, பலவேறு குறைகள் இருந்தாலும், கடந்த இரண்டாண்டில் சி.பி.ஐ., வழக்கில் வெற்றி பெற்ற சதவீதம் 62க்கு மேல். எந்த ஒரு அமைப்பையும், எவ்வளவு வலுவாக ஏற்படுத்தினாலும், அதை தவறாக பயன்படுத்தும் குழுக்கள், எல்லா இடத்திலும் இருக்கத் தான் செய்கின்றன. அதற்கான தடுப்பும், பாதுகாப்பும், அதன் கட்டமைப்பிலும், சட்டத் திட்டத்திலும் இருந்தாலும், மேலும் மேலும் அவ்வப்போது அதை வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயம். email: srseghar@gmail.com

– எஸ்.ஆர்.சேகர், அரசியல் சிந்தனையாளர்


செலவு இல்லாமல் புண்ணியம் கிடைக்குமா ?

புண்ணியத்தை சுலபமாகத் தேடிக் கொள்ள, பகவான் நாமாவை சொல்லிக் கொண்டிருந்தாலே போதும்; அடிக்கடி சொல்ல முடியாவிட்டாலும், ஒரு நாளைக்கு, ஒரு தடவை சொன்னாலும் போதும். வாழ்நாள் முழு வதும் சொல்ல முடியாவிட்டாலும், கடைசி காலத்தில் சொன்னா லும் போதும்… சகல பாவங்களும் அகன்று, புண்ணிய லோகம் கிடைக்கும். இதற்கு புராணத்தில், “அஜாமிளன் சரித்திரம்’ என்று ஒன்று உள்ளது. வேத சாஸ்திரம் அறிந்தவர் அஜாமிளன். தினமும் காட்டுக்கு சென்று சமித்து, தர்ப்பை எல்லாம் எடுத்து வந்து, பூஜை, வழிபாடு எல்லாம் முறையாக செய்து வருபவர். இப்படி அடிக்கடி காட்டுக்குப் போகும்போது, ஒரு சமயம் அங்கிருந்த வேடப் பெண்ணைக் கண்டார். ஏதோ ஒரு மனமாற்றம்; அவளிடம் ஈடுபாடு கொண்டார்.
நாளடைவில் இந்த சிநேகம் வலுப்பெற்றது. இவரது ஆசார அனுஷ்டானம் குறைந்தது. கடைசியில் வீடு, மனைவி யாவற்றையும் விட்டு விட்டு, அந்த வேடப் பெண்ணுடனேயே தங்கி விட்டார். அது மட்டுமா? அவள் மூலமாக நாலைந்து பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார். கடைசி பிள்ளைக்கு, “நாராயணன்’ என்று பெயரிட்டார். காலம் ஓடியது. இவரது மரண காலம் வந்தது; படுத்து விட்டார். இவரை அழைத்துப் போக வந்து விட்டனர் எம தூதர்கள். அவர்களைக் கண்டதும், அஜாமிளன் நடுங்கிப் போய், பயத்தில் தன் பிள்ளையாகிய நாராயணனை, “நாராயணா!’ என்று கூப்பிட்டு விட்டார். அவ்வளவுதான், தேவலோகத்தில் இருந்து இவரை அழைத்துப் போக அங்கே வந்து விட்டனர் விஷ்ணு தூதர்கள்.
இவர்களைப் பார்த்த எம தூதர்கள், “அடடா… நீங்கள் இங்கே வரலாமா? இவன் மகா பாவி. இவனை அழைத்துப் போக நாங்கள் வந்திருக்கிறோம்; நீங்கள் போய் விடுங்கள்…’ என்றனர்.  அதற்கு, “இவனா பாவி? இவன் மகா புண்ணியசாலி. அதனால் தான் இவனை அழைத்துப் போக நாங்கள் வந்திருக்கிறோம். இவன் கடைசி காலத்தில், “நாராயணா!’ என்று சொன்னதால், இவனுக்கு விஷ்ணுலோக பதவி கிடைக்கிறது…’ என்றனர் விஷ்ணு தூதர்கள். இப்படி எம தூதர்களும், விஷ்ணு தூதர்களும் வாக்குவாதம் செய்து பார்த்துவிட்டு, சரி… இதை நம் தலைவரிடமே கேட்டு விடலாம் என்று போய் விட்டனர். நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்தார் அஜாமிளன்.
அப்போதுதான் அவருக்கு ஞானம் உண்டாயிற்று… “அடடா… நாம் இவ்வளவு காலம் எவ்வளவு பாவம் செய்துள்ளோம். இந்த நாராயண நாமமல்லவா நம்மைக் காப்பாற்றியது. அதன் பெருமையை இவ்வளவு நாளும் தெரிந்து கொள்ளாமலிருந்து விட்டோமே…’ என்று, வருத்தப்பட்டார்.  வீடு, மனைவி, வேடச்சி, பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, பத்ரிகாச்ரமம் சென்று நாராயணனைக் குறித்து தவம் செய்து, முக்தி பெற்றார் என்பது சரித்திரம்.
பகவான் நாமாவை மறக்காமல் சொல்லுங்களேன்… செலவு எதுவுமில்லாமல், புண்ணியம் கிடைக்குமே!

* ஆன்மீக வினா-விடை – பைரவருக்கு ஏற்ற பூ எது?
மல்லிகை, பிச்சி போன்ற மன சாந்தி தரும் மலர் மாலைகளை அணிவிக்கலாம்.