Daily Archives: ஜூலை 7th, 2010

ஆப்பரா 10.60 சோதனை பதிப்பு

முந்தைய பிரவுசர் பதிப்பைக் காட்டிலும் 50% கூடுதல் வேகத்துடன் இயங்கும் பிரவுசர் பதிப்பு ஒன்றை ஆப்பரா  (http://www.opera.com/) வெளியிட்டுள்ளது. இந்த புதிய பதிப்பு தற்போது சோதனை பதிப்பாகத்தான் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இதனைப் பயன்படுத்துபவர்  உலகின் எந்த இடத்தில் இருந்து இயங்குகிறார் என்பதனை அறியும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த பிரவுசர் நமக்கு வேண்டிய தேடல் தகவல்களைத் தரும். ஸ்பீட் டயல், டேப் பிரிவியூ மற்றும் ஆப்பரா மெனு ஆகியவற்றில் புதிய கிராபிக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.   இந்த பிரவுசர் மிக வேகமாக, உங்கள் முகத்தில் அடிப்பது போலத் திறக்கப்படும் என இதனை உருவாக்கிய குழுவிற்கு தலைமை ஏற்ற கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆப்பரா, மிக வேகமான ஒரு பிரவுசராக உள்ளது என்று கூறியுள்ளார். http://www.opera.com/browser/next/


என்ற தளத்திலிருந்து இதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.


கம்ப்யூட்டருக்குப் புதியவரா வேர்டில் பைண்ட் அண்ட் ரீப்ளேஸ்

ஆவணங்கள் தயாரிப்பதில் வேர்ட் தரும் வசதிகளில், மிக முக்கியமானது, அதிக பயனுள்ளதாகவும், பலரால் கருதப்படுவது, அதன் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) ஆகும். ஓர் ஆவணத்தின் மொத்த பக்கங்களிலும், குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை, ஜஸ்ட் ஒரு கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்த வசதி குறித்து இங்கு காணலாம்.  வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் தயாரித்த பின்னர் எடிட் செய்கையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சொல் ஒன்றுக்குப் பதிலாக இன்னொரு சொல் ஒன்றினைப் போட விரும்புகிறீர்கள். அப்போது கர்சரை ஒவ்வொரு லைனாக இழுத்துச் சென்று அந்த சொல்லைத் தேடி, அதை அழித்துவிட்டு மீண்டும் புதிய சொல்லை டைப் செய்வது நம் நேரத்தை வீணடிக்கும் செயலாக இருக்கும். இதற்கெனவே  வேர்ட் தொகுப்பில் Find and Replace என்றொரு வசதி உள்ளது. முதலில் அந்த சொல்லைத் தேட வேண்டிக் கொடுக்கும் கட்டளையைப் பார்க்கலாம். இதற்கு Edit  மெனு சென்று அதில்  Find கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதற்கென உள்ள  Ctrl+F என்ற ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தவும். இப்போது எந்த சொல்லைத் தேட என்று கேட்டு அதற்கென ஒரு நீள் கட்டம் இருக்கும். அதில் கர்சர் துடித்துக் கொண்டிருக்கும். அதில்  தேடி அறிய வேண்டிய சொல்லை டைப் செய் திடலாம். இந்த சொல் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இது ஒரு எழுத்தாகவோ, சொல்லாகவோ அல்லது நிறுத்தக் குறிகளாகவோ, ஸ்பெஷல் கேரக்டர்க ளாகவோ இருக்கலாம். அதன்பின்  Replace  என்ற கட்டத்தில் எந்த சொல்லைப் புதிதாய் அமைக்க வேண்டுமோ அதனை டைப் செய்திடலாம். பின்னர் கீழே உள்ள கட்டங்களில் Next என்ற கட்டத்தில் கிளிக் செய்தால், அடுத்த   சொல் இருக்குமிடத்தில் கர்சர் செல்லும். நீங்கள் விரும்பினால், அந்த சொல்லுக்குப் பதிலாக, புதிய சொல்லை அமைக்க,   Replace   என்பதில் அழுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு இடமாக அந்த சொல்லைத் தேடித்தேடி மாற்றி அமைக்காமல் அனைத்து இடங்களிலும் அமைக்க முடிவு செய்தால்    Replace All என்பதில் கிளிக் செய்தால் போதும்.  உடனே அனைத்து இடங்களிலும் தேடி, அறிந்த சொல்லுக்குப் பதிலாக புதிய சொல் அமைக்கப்பட்டு டாகுமெண்ட் ரெடியாகும்.

கையை சிதைத்து தலிபான் பாணி தண்டனை

கேரளாவில் கல்லூரி பேராசிரியருக்கு தலிபான் பாணி தண்டனை தந்தவர்கள் தொடர்பாக ஒருவரை விசாரித்து, அவர் வீட்டில் சோதனை நடத்திய போலீசாரை மிரட்டிய சம்பவம் நடந்தது. மேலும், இம்மாதிரி சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதை அகில இந்திய அளவில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் செய்திருக்கின்றன.

கேரள மாநிலம் தொடுபுழா அடுத்த ஆனிக்காடு ஹாஸ்டல் சந்திப்பு அருகே வசிப்பவர் டி.ஜெ.ஜோசப். இவர், தொடுபுழா நியூமேன் கல்லூரியில் மலையாள மொழித் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர், குறிப்பிட்ட மதத்தவர் புண்படும்படியான கேள்வித்தாள் தயாரித்தார் என்பது புகார். ஆனால் இது விவகாரம் ஆனதும் ஜோசபை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

ஜோசப் செயலில் ஆத்திரமடைந்த கும்பல், பழிவாங்க காத்திருந்தது. கடந்த 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பேராசிரியரும், அவரது தாய் ஏலிக்குட்டியும், சகோதரி கன்னியாஸ்திரியுமான மேரி ஸ்டெல்லா ஆகியோரும் சர்ச்சில் பிரார்த்தனைக்கு காரில் சென்றனர்.அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவரது வீட்டுக்கு அருகே மாருதி வேனில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தது. பின், டிரைவர் இருக்கையில் இருந்த பேராசிரியரை கீழே இறக்கி அவரது வலது கையின் முன்பகுதியை பயங்கரமாக கோடரி போன்ற கருவியால் சிதைத்து தப்பினர்.அதை பார்த்து அலறிய அவரது தாயையும், சகோதரியையும் அக்கும்பல் கீழே தள்ளி மிரட்டியது. பின், அவர்கள் வந்த வேனிலேயே ஏறி தப்பிச் சென்றது.

16 மணி நேர சிகிச்சை: கொச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேராசிரியருக்கு அங்கு 16 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சையில் மைக்ரோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ஆர்.ஜெயக்குமார், முதன்மை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை டாக்டர்கள் ஆசா சிரியாக், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றது.அறுவை சிகிச்சை 4ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு முடிந்தது. சிகிச்சை 16 மணி நேரம் நீடித்தது. அவரது கையில் வெட்டப்பட்ட பகுதியில் சேதமடைந்த சதைக்கு பதிலாக அவரது தொடை பகுதியில் இருந்து சதை எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டது. ஜோசப் நிலைமை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜோசப் கையை சிதைத்தாக ஜாபர் மற்றும் அஷ்ராபை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்அதையடுத்து, போலீசார் சில வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த வீடுகளில் ஜோசப்பை தாக்கியதாக போலீசாரால் சந்தேகிக்கப்படும் நபரான ஒரு மதவாத இயக்கத்தின் ஆதரவாளரான ரஷீத் (30) என்பவரது வீடும் ஒன்று. சம்பவத்தன்று, ஜோசப்பை தாக்குவதற்காக, குற்றவாளிகள் வந்த வேனை வாங்கிக் கொடுத்தவராகக் கருதப்படும் கே.கே.அலி என்பவரின் நண்பர் தான் ரஷீத்.இதனால் ரஷீத், இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் புலனாய்வுக் குழுவிலுள்ள சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பேமஸ் வர்கீஸ் என்பவரை மிரட்டியதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். ரஷீத் மீது, மிரட்டல் குற்றம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தவிரவும் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட பலருடைய மொபைல் போனில் வந்த தகவல்கள் குறித்தும் விசாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.

கண்டனம்: இதற்கிடையில், அகில இந்திய அளவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை விவரமாவது:சம்பந்தப்பட்ட பேராசிரியர் விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாம் மதத்தின் அடிப்படை தத்துவமான மன்னிப்பு வழங்கும் மாண்பிற்கு எதிரானது.தகுதியான அதிகாரிகள் இருக்கும் போது ஒருவர் சட்டத்தைக் கையில் எடுப்பதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. அவருக்கு ரத்தம் வழங்கிய ஜமாத் -இ- இஸ்லாமி இந்த் அமைப்பின் இளைஞர் பிரிவையும் பிற தொண்டர்களையும் பாராட்டுகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

“மடையன் என்று சொல்லவில்லை’ :திருவனந்தபுரம்:”கல்லூரி ஆசிரியர் தயாரித்த கேள்வி தான் மடத்தனமானது என்று சொன்னேனே தவிர, ஆசிரியரை மடையன் என்று சொல்லவில்லை’ என, கேரள கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி தெரிவித்தார்.நேற்று காலை சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., கே.எம்.மானி பேசுகையில், “ஆசிரியரை மடையன் என்று அமைச்சர் பேபி பேசியது முற்றிலும் தவறானது. “இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது’ என்றார்.அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பேபி, “நான் அவ்வாறு பேசவில்லை. ஆசிரியரை மடையன் என்று பேசவே இல்லை. அவர் தயாரித்த கேள்வி மடத்தனமானது என்று மட்டும் தான் பேசினேன்’ என்று மறுத்துள்ளார்.