Daily Archives: ஜூலை 13th, 2010

வாழ வைக்கும் வைட்டமின்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.

அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும் என்பது பற்றி பார்ப்போம் :

வைட்டமின் `ஏ’ : இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் `பி’ : இது குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

வைட்டமின் `சி’ : இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடு முஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் `டி’ : வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் `டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது.

வைட்டமின் `ஈ’ : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும்.

கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

குளிர்ச்சி குளியல்


“ஏய்ய… பிடி… பிடி… பிடி… ஆங் இதோபிடிச்சுட்டேன்” குழந்தைகள் முன்னால் ஓட அம்மாவோ, பாட்டியோ துரத்தி வர… வாரா வாரம் வீட்டுக்குள் ஒரு சின்னப் போராட்டமே நடக்கும்.
பிடிபட்டவுடன் தலைநிறைய எண்ணெய் அப்பி மசாஜ் செய்து டிரம்ஸ் வாசிப்பத போல விரல்களால் தலையில் ஒரே தாளகதியில் தட்டுவார்கள். தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்கும் தினத்துக்கான இந்தக் களேபரங்கள் எல்லாம்  இப்போது ரொம்பவே குறைந்து போய்விட்டன.
இன்றைய அவசர உலகத்தில் ஒரு மணி நேரம் தலையிலும் உடம்பிலும் எண்ணெய் வழிந்தபடி உட்கார்ந்திக்க பலரால் முடிவதில்லை. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் அவசியம் பற்றியும் நிறையப்பேருக்குத் தெரிவதில்லை. வாரம் முழுக்க சேரும் உஷ்ணத்தை எல்லாம் நீக்கி, உடம்பைக் குளிர்ச்சியாக்கும் என்பதற்காகத்தான் நம் பாட்டிக்ளும் அம்மாக்களும் எண்ணெய் தேய்த்து குளிப்பதைக் கட்டாயமாக வைத்திருந்தார்கள். உடல் உஷ்ணம் அதிகமாகச் சந்தர்ப்பங்கள் உள்ள இன்றைய தினக்ஙளில் எண்ணெய்க் குளியல் இன்னும் எவ்வளவு அவசியம் என்று யோசித்துப் பாருங்கள். (டூவீலர் பயணம், வெயிலில் சுற்றுதல், சத்துள்ளதை விட்டுவிட்டு ஃபாஸ்ட் ஃபுட்டுக்கு மாறிவிட்ட சாப்பாட்டு முறை என்று நம் உடல் சூட்டை அதிகப்படுத்த இன்று எத்தனையோ காரணங்கள்.
எண்ணெய்க் குளியல், நம் உடம்பில் என்னென்ன அற்புதங்களைச் செய்யும் என்று பார்ப்போமோ? சூடு குறைந்து உடல் நார்மலுக்கு வரும். தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கேசப் பகுதியில் ஆக்ஸிஜனும் குளுகோஸூம் அதிகமாகக் கிடைக்கும். டென்ஷனும் கோபமும் ஏற்படுத்தும் விஷயங்கள் தினசரி எத்தனையோ நடக்கின்றன. அந்த நிகழச்சிகளை தடுக்க முடியாது என்றாலும் அவற்றால் உஷ்ணம் ஏற்படுவதை எண்ணெய் மசாஜ் குறைத்துவிடும். முக்கியமாக முடி உதிர்வது குறைந்து சீக்கிரமே நரைமுடி ஏற்படாமல் தடுக்கும்.
சிலருக்கு உடலில் ஒருவித வறட்சித் தன்மை ஏற்படும். எண்ணெய்க் குளியலால் இது நீங்கிக் குற்றாலத்தில் குளித்து வந்ததுபோல் ‘ஜில்’லென்று ஆகிறது.
தலைக்கு எண்ணெய் விட்டு மசாஜ் செய்து குளித்தால் உடம்பு முழுவதுமே மசாஜ் செய்த பலன் கிட்டும். உடம்பின் அத்தனை நரம்புகளும் ஒன்றுசேரும் தலைமைச்செயலகம் தலைதானே!
இது தவிர ஹார்மோன் சுரப்பு, மூளை, செல்களின் வளர்ச்சி என்று மேலும் பலன்களை லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம்.

அர்த்தமுள்ள இந்துமதம்-(4.பாவமாம், புண்ணியமாம்! கவியரசு கண்ணதாசன்)

இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்.

சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர்.

முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கை கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது. அப்போதும் அவர் நாணயத்தையும் நேர்மையையும் விட்டதில்லை.

குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலை பார்த்தார்.

அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.

அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருக்கு ஆறு ரூபாய் வரை கடனாகி விட்டது.

கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருக்கும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்.

அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் `முருகா! முருகா!’ என்று அழுவார்.

அந்தக் கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.

கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதார்; “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக்கொண்டார்.

நள்ளிரவில் காடுகள் நிறைந்த அந்த மலையை விட்டு இறங்கினார்.

வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது. அதைக் காலால் உதைத்துக் கொண்டு நகர்ந்தார்.

கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?

அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார். உள்ளே இரண்டு சிகரெட்டுகளும், பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.

அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

“நல்லவனாக வாழ்ந்தோம்; தெய்வத்தை நம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை” என்றுதானே எண்ணியிருக்கும்!

அந்த முருகன் அவரை வாழ வைத்தான்.

ஒவ்வொரு நாளும், “முருகா! முருகா!” என்று உருகுகிறார்.

“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம் வரக்கூடாது” என்று தொழில் புரிகிறார். அதனால், அவர் நாளுக்கு நாள் செழித்தோங்குகிறார்.

நீயும் நல்லவனாக இரு. தெய்வத்தை நம்பு.

உனக்கு வருகிற துன்பமெல்லாம், பனிபோலப் பறந்து ஓடாவிட்டால், நீ இந்துமதத்தையே நம்ப வேண்டாம்.

“பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்?”

“சொர்க்கமாம், நரகமாம்! எங்கே இருக்கின்றன அவை?”

“பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக் கொள்வோம் பின்னாலே?”

இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன் மொழிகள்.

பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு, அவை கேலியாகத் தெரிகின்றன.

`நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள், மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை’ என்று அவன் நினைக்கிறான்.

நல்லதையே செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் என்றும், அங்கே வகைவகையாக விருந்துகள் உனக்குக் காத்திருக்கும் என்றும், தீங்கு செய்தால் நரகத்துக்குச் செல்வாய் என்றும், அங்கே உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்கள் என்றும் சொல்லப்படும் கதைகள் நாகரிக இளைஞனுக்கு நகைச்சுவையாகத் தோன்றுவதில் வியப்பில்லை.

ஆனால் இந்தக் கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய கதைகள்.

அவனுடைய பற்றாக்குறை அறிவைப் பயமுறுத்தித்தான் திருத்த வேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக் கதைகளைச் சொல்லி

வைத்தார்கள்.இந்தக் கதைகள் நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன என்பதை அறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள்கூட, எவ்வளவு பலனை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.

பாவம் புண்ணியம் பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்கு உன் ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்ப வேண்டாம்.

ஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பிவிடுகின்றன.

அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.

ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒரு முறை நீ திட்டப்படுகிறாய்.

“எப்படித் தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்” என்று கிறிஸ்தவ வேதம் கூறுகிறது.

“செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும்” என்று முதன் முதலில் போதித்தது இந்துமதம் தான்.

“பாவம் என்பது நீ செய்யும் தீமை.”

“புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை.”

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.”

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”

“விநாச காலே விபரீத புத்தி.”

இவையெல்லாம் இந்துக்களின் பழமொழிகள்.

ஊரைக் கொள்ளையடித்து, உலையிலே போட்டு, அதை உயில் எழுதி வைத்துவிட்டு மாண்டவன் எவனாவது உண்டா?

பிறர் சொத்தைத் திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச் செத்தவன் எவனாவது உண்டா?

அப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதி வைத்த உயிலின்படி அவன் சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா?

எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதி மன்றத்தால் நியமிக்கப்படும் `ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்தவனுடைய சந்ததி சாப்பிட்டதில்லை.

கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகி, தண்டனையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன் உண்டா?

எனக்குத் தெரிந்தவரை இல்லை.

ஒருவன் செய்த எந்த பாவமும் அவன் தலையைச் சுற்றி ஆயுட்காலத்திலேயே அவனைத் தண்டித்து விட்டுத்தான் விலகியிருக்கிறது.

“பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது கிறிஸ்துவ வேதம்.

இல்லை, பாவத்தின் சம்பளம் வயதான காலத்தில்

திரும்பவரும் சிறு சேமிப்பு நிதி; சரியான நேரத்தில்

அவனுக்குக் கிடைக்கும் போனஸ்!

சாவுக்குப் பின் நடப்பது இரண்டாவது விசாரணை!

முதல் தீர்ப்பு அவன் ஆயுட்காலத்திலேயே அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விடுகிறது.

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது 1953ஆம் ஆண்டு டால்மியாபுரம் போராட்டத்தில் பதினெட்டு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, நானும், நண்பர் அன்பில் தர்மலிங்கமும், மற்றும் இருபது பேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்தோம். அங்கே தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் சிலரும் இருந்தார்கள்.

அவர்களைத் தனித்தனியாகச் சில அறைகளில் பூட்டி வைத்திருந்தார்கள்.

அவர்களிலே, `மாயவரம் கொலை வழக்கு’ என்று பிரபலமான வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழு பேர்.

செஷன்ஸ் கோர்ட் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.

அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் திரு. சோமசுந்தரம்.

பெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது வழக்கம்.

காரணம், பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திரும்பப் போகும் குற்றவாளி நல்லவனாகத் திரும்பி வந்து அமைதியான வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே!

அவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தே யோசிப்பார்.

செஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத் தண்டனையொன்றை அவர் ஊர்ஜிதம் செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஊர்ஜிதம் செய்ததாக அர்த்தம்.

மாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.

அவரைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும், அதை ஊர்ஜிதம் செய்தது.

ஜனாதிபதிக்கு கருணை மனு போயிற்று. அவரும் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.

காரணம், நடந்த நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.

மாயவரத்தில் நாற்பது வயதான ஒரு அம்மையார், விதவை. அந்த வயதிலும் அழகாக இருப்பார்.

சுமார் அறுபதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய நகைகளை அவர் வைத்திருந்தார்.

சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை மட்டுமே துணையாகக் கொண்டு வாழ்ந்திருந்தார்.

அவரை மோப்பமிட்ட சிலர், ஒருநாள் இரவு அவர் வீட்டுக்குள் புகுந்தார்கள்.

ஐந்து பேர் அவரைக் கற்பழித்தார்கள். அந்த அம்மையார் மூச்சுத் திணறி இறந்து போனார்.

இறந்த பிறகும் இன்னொருவன் கற்பழித்தான்.

ஆம்; மருத்துவரின் சர்டிபிகேட் அப்படித்தான் கூறிற்று.

நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன! கொலைகாரர்கள் ஓடிவிட்டார்கள்.

பிடிபட்டவர்கள் ஏழு பேர்.

சிறைச்சாலையில் அந்த ஏழு பேரில் ஆறு பேர் “நாளை தூக்குக்குப் போகப் போகிறோமே!” என்று துடித்துக் கொண்டிருந்தார்கள். “முருகா முருகா” என்று ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், ஒருவன் மட்டும் சலனம் இல்லாமல் அமைதியாக இருந்தான்.

சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை மற்ற கைதிகள் அணுகிப் பேச முடியாது.

நானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அவர்களை அணுகினோம்.

சலனமே இல்லாமலிருந்தானே அந்த மனிதன், அவனிடம் மட்டுமே பேச்சுக் கொடுத்தோம்.

உடம்பிலே துணிகூட இல்லாமல் சிறைச்சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.

நாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:

“ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதது மாதிரி `அலிபி’ தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்துவிட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்று பேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”

அவன் சொல்லி முடித்தபோது, `அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழியே என் நினைவுக்கு வந்தது.

அப்போது மாலை ஐந்து மணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்குத் திரும்பினோம்.

தர்மு தன்னையும் மறந்து சொன்னார்,

“என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா!”

ஆமாம், பாவம் கொடுத்த, `போனஸ்’ தான் செய்யாத கொலைக்குத் தண்டனை.

அன்று இரவு நான் தூங்கவே இல்லை.

காலை ஐந்து மணிக்கு, “முருகா! முருகா!” என்று பலத்த சத்தம்.

கைதிகள் தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன்.

போலிப்புகழ் வேண்டாமே !(- ஜூலை 14 – மாணிக்கவாசகர் குருபூஜை!)

போலிப் பட்டங்களை தனக்குத்தானே சூட்டிக் கொள்ளாமல், தகுதியானவர்களிடம் இருந்து தேடி வரும் பட்டங்களையே ஏற்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராகத் திகழ்ந்தவர் மாணிக்கவாசகர். “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்…’ என்று பாராட்டப்படும் நூலை எழுதி, சிவபெருமானிடமே பட்டம் பெற்றவர் இவர். இவரது குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது.
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர். ஊரின் பெயரால் இவருக்கு, “வாதவூரார்’ என்று பெயர் சூட்டினர் பெற்றோர். கல்வித்திறன் மிக்க இவரை தன் அமைச்சராக்கினான் பாண்டிய மன்னன் அரிமர்த்தனன்.  ஒருசமயம், தன் குதிரைப் படையை மேம்படுத்துவதற்காக, நல்ல ரக குதிரைகள் வாங்கி வரும்படி, பெரும் செல்வத்துடன் வாதவூராரை மன்னன் அனுப்பினான். சிவபக்தரான அவர், திருப்பெருந்துறை (புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார் கோவில்) எனும் தலத்தை அடைந்தார்.

அங்குள்ள குருந்தமரத்தடியில் (காட்டு எலுமிச்சை) குருவடிவம் தாங்கி அமர்ந்திருந்தார் சிவபெருமான். அவரை சிவனென்று அறியாமல், குருவாக ஏற்று, அங்கேயே தங்கிவிட்டார் வாதவூரார். குதிரை வாங்க கொண்டு சென்ற பணத்தை, கோவில் திருப்பணிக்குச் செலவழித்து விட்டார். இதையறிந்த மன்னன், அவரை திரும்ப வர உத்தரவிட்டான். இறைவன் மேல் பாரத்தைப் போட்டு, ஊர் திரும்புவதற்குள், இறைவனே குதிரைகளுடன் அங்கு வந்துவிட்டார். அத்தகைய குதிரைகளைப் பார்த்திராத மன்னன் மகிழ்ச்சியடைந்தான். ஆனால், அன்றிரவில் குதிரைகள் நரிகளாக மாறி ஊளையிட்டதை அறிந்து, இதில் ஏதோ சதி நடந்துள்ளது என்பதை உணர்ந்த மன்னன், வாதவூராரை சிறையில் அடைத்து விட்டான். அவர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார்.
தன் பக்தனின் துயர் துடைக்க, ஒரு லீலையை நிகழ்த்தினார் இறைவன். வைகையில் வெள்ளம் பெருகி வரச் செய்தார். அதன் கரைகளை உயர்த்த  வீட்டுக்கு ஒருவர் வரவேண்டுமென உத்தரவிட்டான் மன்னன். வந்தி என்ற மூதாட்டியின் வீட்டில் ஆளில்லாமல் போகவே, அவளுக்காக வேலைக்காரன் போல் வேடமிட்டு வந்து, அவள் சார்பில் கரையை அடைக்கச் சென்றார் இறைவன்.

சென்ற இடத்தில் தூக்கம் வருவது போல நடிக்கவே, பணிகளைப் பார்வையிட வந்த மன்னன், அவரது முதுகில் பிரம்பால் அடித்தான். அப்போது உலக உயிர்கள் முழுமைக்கும் முதுகு வலித்தது. வந்தது இறைவன் என்பதை அறிந்ததும், மன்னிப்பு கேட்டான் மன்னன். குதிரைகள் நரிகளானது சிவலீலை என்பது தெரிந்ததும், மாணிக்கவாசகரை விடுதலை செய்தான்.  மீண்டும் திருப்பெருந்துறை சென்ற அவர், தன் குருவிடமே தங்கியிருந்தார். ஒருநாள் குரு, தன் திருவடிகளை ஒரு பீடத்தில் வைத்து வணங்கும்படியும், தான் அங்கிருந்து செல்லப் போவதாகவும் தெரிவித்தார். மாணிக்கவாசகருக்கு அவரைப் பிரிய மனமில்லை. இருந்தாலும், குரு அங்கிருந்து மறைந்து விட்டார். பின்னர், சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்கச் சென்ற மாணிக்கவாசகர் அங்கே தங்கி, சிவனை நினைத்து உருகி, பல பாடல்களைப் பாடினார்.
அப்போது, அந்தணர் வடிவில் வந்த சிவன், “மாணிக்கவாசகரே… நடராஜரைப் பற்றி நீ பாடு; அதை நான் தொகுத்து எழுதுகிறேன்…’ என்றார். மாணிக்கவாசகரும், திருவாசகம், திருக்கோவையார் என்ற தலைப்பில் பாடல்களைப் பாடினார். இவற்றைத் தன் கைப்பட எழுதிய சிவன், “மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன் எழுதியது…’ என கையெழுத்திட்டு கொடுத்து மறைந்தார்.  பின்னர், தில்லை அந்தணர்கள் திருவாசகத்துக்குரிய பொருள் என்னவென்று கேட்க, “இதற்கு பொருள் இந்த தில்லையம்பலவாணனே’ என்ற மாணிக்கவாசகர், நடராஜருடன் ஐக்கியமாகி விட்டார். இறைவனிடமே, “மாணிக்கவாசகர்’ எனும் பட்டத்தை வாதவூரார் பெற்றது போல, நாமும் சிறப்பான செயல்களைச் செய்து, தேடி வரும் பட்டங்களை மட்டும் ஏற்போம். நமக்கு நாமே பட்டம் சூட்டிக் கொள்வதில்லை என்று, மாணிக்கவாசகரின் குருபூஜை நாளில் முடிவெடுப்போம்.