Daily Archives: ஜூலை 14th, 2010

பயர்பாக்ஸ் ஆட் ஆன் 200 கோடி டவுண்லோட்

ஜூலை 1, 2010 அன்று பயர்பாக்ஸ் பிரவுசர் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்புகள் மற்றும் தீம்ஸ் எனப்படும் காட்சித் தோற்றங்கள், 200 கோடிக்கும் மேலாக டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன.  addons.mozilla. org என்ற தளத்திலிருந்து இவை சென்ற மூன்று ஆண்டுகளில் நடந்தேறியுள்ளது.   பயர்பாக்ஸ் பிரவுசர் தொடர்ந்து வாடிக்கை யாளர்களின் பிரியமான பிரவுசராக இருப்பதற்கு, அதன் ஆட் ஆன் தொகுப்புகள் ஒரு காரணமாகும். பல்வேறு வசதிகளை இந்த தொகுப்புகள் தந்து வருகின்றன. மேலும் இந்த பிரவுசர் ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைந்திருப்பதால், யார் வேண்டு மானாலும் இத்தகைய தொகுப்புகளைத் தயாரித்து வழங்கலாம் என்பதுவும் இதன் சிறப்பாகும்.  சென்ற 2008 நவம்பரில்  ஆட் ஆன் டவுண்லோட்  நூறு கோடியைத் தாண்டி இருந்தது. அடுத்த 19 மாதங்களில் இந்த எண்ணிக்கை இருநூறு கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 15 கோடி தொகுப்புகள் பயன்படுத்தப்படுவதாக மொஸில்லா அறிவித்துள்ளது. இவற்றில் மிகச் சிறந்த ஆட் ஆன் தொகுப்புகளாக 25 தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்து மொஸில்லா தன் தளத்தில் வெளியிட்டுள்ளது. அவற்றை  https://addons.mozilla.org/enUS/firefox/collection/bestof2billion?src=rockyourfirefox என்ற முகவரியில் உள்ள தளத்தில் பார்த்துத் தேவைப்பட்டால் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.  மேலும் தகவல்களுக்கு

http://rockyourfirefox.com/2010/07/2billiondownloads/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

உங்கள் தனிநபர் விருப்பங்கள் உங்களுக்கு மட்டும்

என்னதான் இணைய தளங்கள், நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும், தனிநபர் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருப்போம் என உறுதி அளித்தாலும், சில இணைய தளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில விளம்பர நிறுவனங்களின் புரோகிராம்கள், நம் தனிநபர் விருப்பங்களைத் திருடிக் கொண்டிருக்கலாம். இவற்றை எப்படி அறிவது? இதற்கு இணையத்தில் ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://www.privacychoice.org/whos_watching. இந்த தளத்திலிருந்து, நீங்கள் பார்க்கும் இணைய தளங்களில், நீங்கள் அறியாமல் உங்கள் பெர்சனல் தகவல்களைத் திரட்டும் நிறுவனங்கள் குறித்த தகவல்களை அறியலாம். இதிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை நீங்கள் எடுக்கலாம்.  இந்த தளம் விட்ஜெட் எனப்படும் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் வேவு பார்க்க உதவிடும் தளங்களையும் நீங்கள் புறக்கணிக்கலாம். இந்த தளத்தில் நுழைந்தவுடன் Your Choicesஎன்னும் டேபினைத் திறக்கவும். இங்கு நீங்கள் விலக்க விரும்பும் தளங்கள் வகையினை நிர்ணயம் செய்திடலாம். தேர்ந்தெடுத்த தளங்களை விலக்கி வைக்கலாம். அல்லது இத்தகைய அனைத்து தளங்களையும் விலக்கலாம். இந்த இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை ஏற்றுக் கொள்கையில், மேலும் மூன்று ஆப்ஷன்கள் உங்களுக்குத் தரப்படும். அவை Opt out through the Network Advertising Initiative, Optout with the TACO Firefox Addon, மற்றும்  Block Tracking Through your Browser ஆக இருக்கும். இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், இந்த தளத்திலேயே அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றிற்கான பதில்கள் உள்ளன. அவற்றைப் படித்துத் தெளிந்து கொள்ளலாம். உங்கள் அந்தரங்கம் புனிதமானது. அது உங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும். மற்றவர்களுக்கல்ல.

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட் களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

கால்சியம் சத்து…

மனித உடலுக்கு உணவின் மூலம் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் அனுப்பப்படுகின்றன.  இந்த தாதுப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது.  இவற்றில் ஏதேனும் ஒன்றில் பற்றாக்குறை உண்டாகும்போது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சீர்கேடடைகின்றன.  மேலும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டிற்கும் உடல் உறுப்புகளின் பலத்திற்கும் இவையே பயன் படுகின்றன.

உடலுக்கு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், போன்ற தாதுப் பொருட்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன.

இவற்றில் கால்சியத்தின் பயன்பாடுகள் பற்றியும் அவை எதில் அதிகம் நிறைந்துள்ளன என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம்.

கால்சியம் சத்தானது உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது.  கால்சியம் சத்து குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும்.  வளர்ச்சி  குன்றி காணப்படும்.

இரத்தக் குழாய்கள், இதயம் இவற்றின் சுருங்கி விரியும் தன்மைக்கு கால்சியம் மிகவும் உதவுகிறது.  இதனால் உடலின் பாகங்களுக்குத் தேவையான இரத்தத்தை இரத்தக்குழாய்கள் இலகுவாக கடத்துகின்றன.

நாளமிலாச் சுரப்பிகளின் செயல்பாட்டைத் தூண்டுவதற்கு கால்சியம் சிறந்த பணியாளாக செயல்படுகிறது.  மேலும் இவற்றின் சுரப்பு நீரான என்ஸைம் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நரம்புகளின் செயல்பாட்டிற்கும், எலும்புகளின் செயல்பாட்டிற்கும் கால்சியம் சத்து இன்றியமையாதது.  இரத்தம் உறைதலிலும் கால்சியம் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

பற்களின் உறுதிக்கும் கால்சியம் சத்து முக்கியமானது.  அதாவது உடலின் அனைத்து செயல் பாட்டிற்கும் கால்சியம் சத்து இன்றியமையாததாக இருக்கிறது.

உடலில் 99 சதவிகித கால்சிய சத்துக்கள் எலும்புகளிலும், பற்களிலும் சேமித்து வைக்கப்படுகின்றன.  இவை உடலுக்கு கால்சியம் சத்து தேவைப்படும்போது கொடுப்பதுடன் மீதமுள்ளவற்றை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையும் கொண்டுள்ளது.  இது வயதிற்குத் தகுந்தவாறு நடைபெறும்.

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியத் தேவையாகும்.  கால்சியம் சத்து குறையும்போது முதுமையில் உடல் பலமிழக்கிறது.  பெண்களுக்கு கால்சியத் சத்து அவசியம் தேவையாகும்.  மாதவிலக்கு முடியும் தருவாயான மெனோபாஸ் காலத்தில் அதிக அளவு கால்சியம் சத்து குறைவு உண்டாகும்.

தேவையான கால்சியம் சத்து

7 முதல் 12 மாத குழந்தைக்கு    – 270 மி.கி.
1 முதல் 3 வயது வரை        – 500 மி.கி.
4 முதல் 8 வயது வரை        – 800 மி.கி.
9 முதல் 13 வயது வரை    – 1300 மி.கி.
14 முதல் 18 வயது வரை    – 1300 மி.கி.
19 முதுல் 40 வயது வரை    – 1200 மி.கி
40 முதல்                                       – 1100 மி.கி.

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்

கால்சியம் சத்து குறைவதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.  இதனால் எலும்புகள் பலமிழக்கின்றன.  கருவில் இருக்கும்போதே தாய்க்கு கால்சியம் சத்து குறைந்திருந்தால் பிறக்கும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

கால்சியம் உடலில் குறைவதால் இரத்த ஓட்டம் சீர்குலைகிறது.  இதனால் மயக்கம், வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுகிறது.  இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை குறைவதால் இரத்த அழுத்தம் உண்டாகிறது.  இதயத்திற்கு சீராக இரத்தம் செல்வதில்லை.  இதனால் இதயநோய்கள் உண்டாக ஏதுவாகிறது.

தசைகள் சுருங்கும் தன்மை குறைவதால் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படும்.  தசைகள் இறுகாமல் தொளதொளவென மாறிவிடும்.

கால்சியம் சத்து குறைவால் வயிற்றுப் பகுதியின் சுவர்கள் சிதைந்துவிடுகின்றன.  இதனால் உணவில் உள்ள பொருட்களை உறிஞ்சும் தன்மை குறைகிறது. நகங்கள் வெளுத்துக் காணப்படும்.  பற்கள் தேய்மானம் அடையும்.  பற்களில் கூச்சம் உண்டாகும் பற்சிதைவு ஏற்படும்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் காலத்தில் நாளமில்லாச் சுரப்பிகள் செயல்பாடு குறைவதால் உடலுக்கு அதிக கால்சியம் தேவைப்படும்.  இதனால் எலும்புகளில் சேமிக்கப்ட்ட கால்சியம் சத்துக்கள் உடல் எடுத்துக்கொள்கிறது.  இதனால் கால்சியம் சத்து இழப்பு ஏற்பட்டு  ஓஸ்டியோபொராசிஸ்  என்ற நோய் தாக்குகிறது.  இதனால் பெண்கள் அதிக மூட்டு வலி, முதுகு வலி, கை கால் வலி , எலும்பு பலமிழப்பு போன்றவை உண்டாகும்.  இதுபோல் ஆண்களுக்கும் 50 வயதிற்கு மேல்  கால்சியம் குறைபாடு ஏற்படலாம். கால்சியம் குறைபாட்டைப் போக்க பல மருந்துகள் தற்போது மருத்துவச் சந்தைகளில் விற்கப்படுகிறது.

ஆனால் உணவின் மூலம் இப்பற்றாக் குறையைப் போக்கி கால்சியம் இழப்பினால் உண்டாகும் பாதிப்புகளை நீக்கி ஆயுள் முழுவதும் உறுதியாகவும் பலமாகவும் வாழலாம்.

கால்சியம் சத்துநிறைந்த பொருட்கள்

பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பால் அருந்துவது நல்லது.  அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பாலாடை, நெய் முதலியவற்றிலும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் அதிகம் உள்ளது.

கீரைகளில் அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, அகத்திக்கீரை, லட்சுக் கொட்டைக் கீரை, வெந்தையக் கீரை போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.

பழங்களில் கொய்யா, பப்பாளி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பலாப்பழம், திராட்சை, சாத்துக்குடி,  ஆரஞ்சு, ஆப்பிள் இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.  முளைகட்டிய பயறு வகைகளில் அதிகம் உள்ளது. அதிலும் பச்சைப் பயிற்றில் அதிக கால்சியம் உள்ளது.

நம் உடலுக்கு அவசியத் தேவையான கால்சியத்தை பெற இன்றிலிருந்தே கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் .