அருளை அள்ளித்தரும் அர்த்தநாரீஸ்வரர்

அடர்ந்த மரங்கள், மூங்கில் காடு நிறைந்த அந்த பகுதியை திருக்கோவிலூர் தெய்வீகராச உடையார் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான்.

ஒருசமயம் அவன் வேட்டையாடச் சென்ற இடத்தில், களைப்பு காரணமாக அவனுக்கு தாகம் எடுத்தது. அப்போது, அந்தணர் ஒருவரது வேடத்தில் அங்கே வந்த சிவபெருமான், பூமியை கீறி நீர் நிறைந்த குளத்தை உருவாக்கி அவனது தாகத்தைத் தணித்தார்.

இதற்கு கைமாறாக, மன்னன் அப்பகுதியில் சிவனுக்கு கோவில் கட்ட முடிவு செய்தான். அதனால் அந்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டினான். அப்போது மரங்களுக்கு இடையில் இருந்த லிங்கத்தின் மீது மன்னனின் வாள் பட்டு, ரத்தம் பீறிட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மன்னன், அந்த வாளால் தன்னையும் வெட்டிக் கொண்டான். அப்போது ஈசன் தோன்றி மன்னனுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து அந்த லிங்கத்தை வைத்து கோவில் கட்டி மன்னன் வழிப்பட்டான்.

சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தியாகதுருகம் அருகே எலவனாசூர்கோட்டையில் கம்பீரமாக காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தான் அது.

கி.பி.992-ல் முதலாம் ராஜராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறினாலும், கோவிலின் கட்டிடக்கலையில், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசர்களின் கலையம்சத்தையும் காண முடிகிறது.

இலங்கையில் ராவணனை வென்று சீதையை அழைத்துக்கொண்டு ராமன் இவ்வூரின் வழியே வந்தார். அப்போது, சிவனை வழிபட்டுக் கொண்டிருந்த அனுமனை கண்ட ராமன், “ஏலே! வானர சூரா” என்று அழைத்ததாகவும், அப்பெயரே தற்போது `எலவனாசூர்’ என்று மருவி அழைக்கப்படுவதாகவும் செவிவழிச்செய்தி கூறுகிறது. உயர்ந்து நிற்கும் இக்கோவில் ராஜகோபுரம் கி.பி. 1110-ம் ஆண்டு குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.

சிறப்பம்சம்

இக்கோவிலில் அன்னதானம் செய்பவர்கள் 32 தர்மங்களை செய்த பலனை பெறுவார்கள் என்பதும், இங்குள்ள தண்டு தீர்த்த குளத்தில் நீராடி விரதமிருந்து ஈசனை வணங்கி, அன்னதானம் வழங்கினால் நாடாளும் ராஜபதவியை அடைவார்கள் என்பதும் நம்பிக்கை.

முருகப்பெருமான், ஈசனை வணங்கி பாவ விமோசனம் பெற்ற தலமும் இது என்பதால், பழனிக்கு அடுத்தபடியாக ஆண்டிகோலத்தில் இங்கு இருப்பதைக் காணலாம்.

தமிழகத்தின் மற்ற கோவில்களுக்கு இல்லாத சிறப்பாக, இக்கோவிலின் நுழைவாயில் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. வழக்கமாக சிவனை வணங்கியவாறு காட்சியளிக்கும் நந்தீஸ்வரர், இங்கு மட்டும் பக்தர்களை வரவேற்கும் வகையில் இருக்கிறார்.

கோவில் மூலவரான சிகரசிகாமணிநாதரை தரிசிக்க 18 படிகளில் ஏறிச் செல்லவேண்டும். கருவறையில் சிகரசிகாமணிநாதராகிய ஈசன், சுயம்புலிங்கமாக காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு தமிழ்மாதமும், ஞாயிற்றுக்கிழமை மாலையில், சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுவதைக் காணலாம். அப்போது தேவலோகத்தில் இருந்து வரும் ரிஷிகள் பூஜை செய்வதாக கூறப்படுகிறது.

%d bloggers like this: