Daily Archives: ஜூலை 21st, 2010

`ஹிப்போக்ரேட்ஸ் சத்திய பிரமாணம்!’

நோய்களுக்கான காரணம்… பேய்கள்தான் என உலகமே நம்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பிறந்தார் ஹிப்போக்ரெட்ஸ். கி.மு.460-ம் ஆண்டில் பிறந்த ஹிப்போக்ரேட்ஸ், தனது விடலைப் பருவத்திலேயே மூட நம்பிக்கைகளை தவிர்த்து, மருத்துவமே உண்மை என்று உலகுக்கு ஓங்கிக் கூறினார். இதனால் அவருக்கு பலத்த எதிர்ப்பு.

மனிதன் கண்டுபிடித்துத் தரும் புதுப்புது மருந்துகளால் தான் அவனைப் பிடிக்கும் நோய்களை குணப்படுத்த முடியும் என பகுத்தறிந்து, மருத்துவ ஆய்வில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

மனித உடலின் இயக்கத்தை அறிந்து கொள்ள, தொடர்ந்து முயற்சித்து, இவர் செய்த மருத்துவ பரிசோதனைகள் ஏராளம். உடல் இயக்கத்தை முழுவதுமாக தெரிந்து கொண்டதும் தர்க்க ரீதியாக இன்னும் பல ஆராய்ச்சிகளை செய்து பார்த்தார்.

மனித உடல் இயக்கம் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் படிப்படியாக ஹிப்போக்ரேட்ஸ் செய்து கண்ட அறிவியல் ஆராய்ச்சித் தீர்வுகள் அனைத்தும், இவராலேயே பதியப்பட்டு வந்துள்ளன.

மனித உடல் மற்றும் மூளையின் இயக்கம்…. இவற்றின் ஆரோக்கியம் ஆகியவை சத்து நிறைந்த உணவில் அடிப்படையில் தான் இயங்கும் என்பதை ஆய்வு ரீதியாக நிரூபித்த முதல் மனிதர் ஹிப்போக்ரேட்ஸ்.

முக்கியமாக, உடல் நலம் குன்றுவதற்கு சராசரியாக வேலை செய்து வந்த உடல் இயக்கத்தின் கோளாறு தான் என்றும், பேய், பிசாசு காரணமில்லை என்பதையும் நிரூபித்தார். மேலும் நோய்களை தீர்க்கும் மருந்துகள் நம்மிடமே உள்ளன என்பதையும் ஆய்வின் மூலம் உலகுக்கு உணர்த்தினார்.

மருத்துவ உலகின் தந்தை என போற்றப்படும் ஹிப்போக்ரேட்ஸ், `மருத்துவராக இறங்கி வந்துள்ள கடவுள்’ என்றும் கூறுகின்றனர்.

இன்றும்கூட உலகெங்கும் மருத்துவப் பட்டப்படிப்பினை முடித்துவிட்டு, மருத்துவ சேவை புரிய ழையும் ஒவ்வொரு டாக்டரும் எடுத்துக்கொள்ளும் சத்தியபிரமாணத்துக்கு, `ஹிப்போக்ரேட்ஸ் பிரமாணம்’ என்று பெயர்!

கட்டி பிடிப்பது ஒழுக்ககேடா!

சினிமா படங்களில் காதலர்கள் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள். அதை அனைவரும் ரசித்து பார்க்கிறார்கள். ஆனால் நேரில் யாராவது இருவர் கட்டித் தழுவிக் கொண்டால் `காலம் கெட்டு போச்சு, கலி முத்தி போச்சுன்னு’ பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் தழுவிக் கொள்வது என்பது தவறான காரியமா?

`இல்லை, இல்லை தழுவிக் கொள்வது உயிரினங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

காதலர்கள் மட்டுமே தழுவிக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாத விதிபோல பின்பற்றபட்டு வருகிறது. அவர்கள் கூட அந்தரங்கமாக, யாருக்கும் தெரியாமல்தான் கட்டிக் கொள்கிறார்கள். பொது இடங்களில் நண்பர்களோ, உறவினர்களோ, காதலர்களோ தழுவிக் கொள்வது அரிதாக உள்ளது.

மேலைநாடுகளில் பொது இடங்களில் தழுவிக் கொள்வது ஒரு இயல்பான நிகழ்வு. சில வேளைகளில் அங்கு பொது இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தழுவிக் கொள் வது, முத்தமிட்டுக் கொள்வது போன்ற போட்டிகளே நடக்கிறது. உண்மையில் தழுவிக் கொள்வது உடலுக்கு ஆரோக்கிய மானது. அதில் பல ரகசியங்கள் மறைந்து கிடக்கிறது.

இன்றைய காலத்தில் அன்பை வெளிபடுத்த மலர்கள் கூட பயன்படுத்துவது கிடையாது, வெறும் காகித பூக்கள்தான். அதுவும்கூட அரிது. எல்லாம் செல்போன் முலம் மெசேஜாக பரிமாறிக் கொள்ளபடுகிறது. அல்லது இன்டர்நெட்டில் மெயிலாக பறக்கிறது. நேரில் சந்தித்தால் கைகொடுத்துக் கொள்வதுதான் வாடிக்கையாக இருக்கிறது. பொது இடங் களில் தழுவி அன்பை வெளிபடுத்திக் கொள்வது அரிதானதாக இருக்கிறது. கலாச்சாரம் கருதி, அருவறுப்பானதாகக் கூட கருதபடுகிறது.

`தழுவிக் கொள்வதால் எய்ட்ஸ் பரவாது’ என்று ஒரு விழிப்புணர்வு வாசகம் உண்டு. அதனைக் கூறி தழுவிக் கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

“சமுதாய விலங்கான மனிதனுக்கு அன்பும், அரவணைப்பும் அவசியமானது” என்கிறது உளவியல். அன்பை வெளிபடுத்தும் எளிய வழி தழுவிக் கொள்வதுதான். அது அருவறுபானதல்ல. மாறாக தழுவிக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் உண்டு.

“நாகரீகமான முறையில் இடம் சூழல் கருதி இருவரின் விருப்பத்தின் பேரில் அதை முறையாக வெளிபடுத்த வேண்டும்” என்ற குரல் உலகின் பல பகுதிகளில் இருந்து ஒலித்து இந்தியாவை வந்தடைந்திருக்கிறது. நாகரீகமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்!

மாஸ்க்கை பயன்படுத்துவது எப்படி?

1. பார்லரில் செய்பவர்கள் முகத்தை கிளென்சிங் மில்கையும், வீட்டில் செய்பவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது காய்ச்சாத பாலையும் பஞ்சில்  தொட்டு முகத்தை துடைத்து சுத்தம் செய்யவும். கண் அடியில், வாய்பகுதியைச் சுற்றி மாஸ்க் போடுவதை தவிர்க்கவும். மாஸ்க் போட்டவர்கள் ஒரே நிலையில் இருக்க வேண்டும். ஆடவோ, அசையவோ கூடாது. அப்படிச் செய்தால் முகம் விர்ரென்று பிடித்து சருமம்  பாதிக்கப்படும்.
4. மற்றவர்களுடன் பேசக்கூடாது.
5. மாஸ்க்கை துடைக்கும்போது வெதுவெதுப்பான நீரிலோ அல்லது ஒரு காட்டன் துணியில் ஐஸ் க்யூப் வைத்தோ துடைக்கவேண்டும்.

வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்
பிரட் மாஸ்க் : ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக் கொண்டு 2 டீஸ்பூன் பால், 1 டீஸ்புன் தேன் கலந்து அரை மணிநேரம் ஊற வைத்து முகம் முழுவதும் தடவவும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தில் ஊறிய பிரட்டை மசாஜ் பண்ணி தேய்த்து எடுக்கவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சரமத்திற்கு நல்ல நிறத்தையும் பொலிவையும் கொடுக்கும்.

பாதாம் மாஸ்க் : மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பாதாம் மாஸ்க் மிகவும் நல்லது. எட்டு பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். மறுநாள் அரைத்து ஒரு டீஸ்பூனும் பாலோடு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாகும். கரும்புள்ளிகள் மறையும்.

புதிய மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் பதிப்பு 4

மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பினை (பதிப்பு 4.0.) பல மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. இனி வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகள், இந்த புதிய கட்டமைப்பில் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை பதிப்புதான். யார் வேண்டுமானாலும் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி, இதன் நிறை மற்றும் குறைகள் குறித்து மொஸில்லாவிற்குத் தெரிவிக்கலாம். முழுமையான பதிப்பு இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம். இதன் புதிய சிறப்பம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1.புதிய ஆட் ஆன் மேனேஜர்: கூடுதல் வசதிகள் தரும் ஆட் ஆன் தொகுப்புகளுக்குப் பயர்பாக்ஸ் பிரவுசர் புகழ்பெற்றது. இவற்றைத் தனியே வைத்து நிர்வகிக்க புதிய வசதி தரப்பட்டுள்ளது. புதிய ஆட் ஆன் தொகுப்புகளை, நமக்கேற்ற வகையில் பிரவுசருடன் இணைக்கவும், தேவைப்படாத போது நீக்கவும் வழி தரப்பட்டுள்ளது. இருப்பினும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இறுதி வெளியீட்டின்போது இதன் முழுமையான பயன்பாட்டு வடிவம் கிடைக்கும்.
2. வெப்–எம் பார்மட்: ஹை டெபனிஷன் வீடியோ எனப்படும் உயர் வகை வீடியோ காட்சிகளை பிரவுசரில் யு–ட்யூப் வழியாகக் காண, எச்.டி. தன்மையுடன் கூடிய எச்.டி.எம்.எல். 5 வீடியோ தரப்பட்டுள்ளது.
3. தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு: மொஸில்லா எப்போதும் தன் வாடிக்கையாளர்களின் தனி நபர் தகவல்களைக் காப்பதில் முன்னுரிமை தரும். ஏற்கனவே உள்ள பிரவுசர் ஹிஸ்டரியில் பயன் படுத்தப்பட்ட வெப் வரையறைகள், பெர்சனல் தகவல்களைக் காப்பதில் சில குறைகளைக் கொண்டிருந்தது. அது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

4.முடங்கிப் போகாது: பிரவுசரின் ப்ளக் இன் புரோகிராம் ஏதேனும் கிராஷ் ஆனால், பிரவுசரின் இயக்கம் முழுமையாக நின்று போய், மீண்டும் இயக்க வேண்டிய நிலையில் பிரவுசர் முடங்கிப் போகும். தற்போது இது களையப்பட்டுள்ளது. தொடர்ந்து தடையின்றி இன்டர்நெட் தேடலை மேற்கொள்ளலாம். அந்த பக்கத்தை மட்டும் மீண்டும் திறந்தால் போதும்.
5. இயங்கு திறன்: பயர்பாக்ஸ் பிரவுசர் முதலில் தொடங்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. இதனையும், இணையப் பக்கங்கள் இறக்கிக் காட்டப்படும் நேரத்தினையும் மொஸில்லா கணிசமாகக் குறைத்துள்ளது.

6.தோற்றம்: பிரவுசரைத் திறந்தவுடனேயே நம் கண்ணில் படுவது அதன் புதிய தோற்றமே. இணையத் தளங்களில் உள்ள தகவல்களுக்கு அதிக இடம் தரும் வகையில் டேப்கள் மேலே கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பயன்படுத்துபவரை வழி நடத்தும் இன்டர்பேஸ் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆப்பரா மற்றும் கூகுள் குரோம் பிரவுசர்களில் காணப்படும் சில அம்சங்களை, மொஸில்லா புதிய பதிப்பில் கொண்டு வந்துள்ளது எனக் கூறலாம். பல புதிய பட்டன்களும், ஒருங்கிணைந்த மெனுவும் தரப்பட்டுள்ளது. மெனுக்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் என்ற இடது ஓரம் உள்ள பட்டனுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கூகுள் குரோம் பிரவுசரில் இருப்பதைப் போல, டேப்கள் அனைத்தும் மேலாக நிறுத்தப் பட்டுள்ளன. கூகுளின் பிரவுசரில் இவை வட்டமாக இருக்கின்றன. இங்கே சரியான சதுரமாக உள்ளன. இருப்பினும் மெனுபார் தொடக்கத்தில் மறைத்துவைக்கப்படுகிறது. பயன்படுத்துபவர் விரும்பினால், அதனை பழைய பதிப்புகளில் இருந்தாற்போல வைத்துப் பயன்படுத்தலாம்.
7.புக்மார்க் பட்டன்: சர்ச் பாக்ஸுக்கு அடுத்தபடியாக, புக்மார்க் பட்டன் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து புக்மார்க்குகளும் போல்டர்களும் நமக்குத் தேடிப் பார்க்க கிடைக்கின்றன. 8. தேவையான டேப் கிடைக்க: பல டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரை இயக்குகையில், நாம் செல்ல விரும்பும் தளம் எந்த டேப்பில் உள்ளது என்பதைக் காண நமக்குச் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்கான ஒரு தீர்வை இந்த பதிப்பு கொண்டுள்ளது. ஸ்மார்ட் லொகேஷன் பாரில், விரும்பும் தள முகவரி அல்லது அதன் தலைப்பு பெயரினை டைப் செய்து நேரடியாகவும், விரைவாகவும் அந்த தளத்திற்குச் செல்லலாம்.

9.விண்டோஸ் 7 ஒருங்கிணப்பு: இந்த புதிய பதிப்பு விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் முழுமையான முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. டேப்களின் பிரிவியூ மற்றும் ஜம்ப் லிஸ்ட் இதிலும் தரப்பட்டுள்ளது. டேப் பிரிவியூவில் திறக்கப்பட்டுள்ள அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பார்வையிடலாம். ஜம்ப்லிஸ்ட் மூலம் அடிக்கடி திறந்து காணும் தளங்களுக்கு எளிதாகச் செல்லலாம்.
10. வேகம்: குரோம் மற்றும் ஆப்பராவுடன் ஒப்பிடுகையில், இந்த பதிப்பின் வேகம் குறைவாகவே உள்ளது. ஆனால் முந்தைய 3.6 பதிப்பினைக் காட்டிலும் வேகம் கூடுதலாக உள்ளது.

இந்த பதிப்பு குறித்த வீடியோ காட்சி ஒன்றினை http://videoscdn.mozilla.net/firefox4beta/ Firefox_4_beta. webm  என்ற முகவரியில் மொஸில்லா வெளியிட்டு ள்ளது. புதிய சோதனைப் பதிப்பினை  http://www.mozilla.com/enUS/firefox/beta/ என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சோதனைப் பதிப்பில் இருக்கும் அனைத்தும், இறுதியாக வெளியிடப்படும் தொகுப்பில் கிடைக்கும் என்று உறுதி கூற முடியாது. இதனைப் பயன்படுத்து பவர்களின் கருத்துக்களின் அடிப்படை யிலேயே இறுதி வடிவம் முழுமையாக்கப்படும் என மொஸில்லா அறிவித்துள்ளது.

அர்த்தமுள்ள இந்துமதம்-(6.புண்ணியம் திரும்ப வரும் ! கவியரசு கண்ணதாசன்)


ஆனால், செய்த வினையும் செய்கின்ற தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.

நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான் அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும்.

கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக் கூட வரமாட்டான்.இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.

என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான பணம் கணக்குக் காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.

வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.

அவர் ஏற்கெனவே ஒரு பணக்காரச் செட்டியாரையும், ஆச்சாள்புரத்துக்காரர் ஒருவரையும் ஏமாற்றியவர்.

அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.

ஏமாற்றி என்ன பயன்?

அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய் அன்றாடச் சோற்றுக்கே இன்று அலைமோதுகிறார்.

அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.

உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக் கொண்டு, அந்தப் `பாபாத்மா’ தினமும் கோவிலுக்கு வருகிறது.

நெற்றியில் கட்டுக்கட்டாக விபூதி; இரண்டு காதிலும் கதம்பப் பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.

அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.

முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.

ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான், கந்தன்.

ராஜாங்கம் கட்டி ஆண்டவனும்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.

இறைவனின் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.

குளத்திலே ஒரு ரூபாயைத் தவறிப் போட்டுவிட்டால், குளம் வற்றியதும் அது உன் கைக்கே கிடைக்கிறது, அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.

ஒரு நடைபாதையில் நீ கண்ணாடித் துண்டைப் போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.

குளிக்கும் அறையில் நான் எச்சிலைத் துப்பிவிட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளேபோனபோது, அது என் காலையே வழுக்கி விட்டது.

விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.

ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பணக்காரர், ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!

பக்தி செய்யும் எல்லோருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.

அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

`உண்மையே தெய்வம்,’ `அன்பே தெய்வம்’ என்று இந்துமதம் சொன்னது அதனால்தான்.

`நம்பினோர் கெடுவதில்லை’. இது நான்கு மறைத் தீர்ப்பு என்பது உண்மை தான்.

ஆனால் `கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.

அதுவும் உண்மைதான்.

காலங்களை நிர்ணயிக்கின்றவனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

மதத்துறையை `ஆத்மார்த்தத் துறை’ என்பது அதனால்தான்.

நதியின் ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.

ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாவங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!

அவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.

அறிந்து செய்யும் தவறு, தவறல்ல; அது குற்றம்.

அதற்கு மன்னிப்புக் கிடையாது!

நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாவக்கணக்கில் சேர்க்காதே.

சிறுவயதில் கடன்தொல்லை தாங்காமல் நான் `திருடியிருக்கிறேன்’, என் தாயின் பணத்தைத்தான்.

ஆனால் திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன்.

கடவுளை வேண்டியிருக்கிறேன் “இறைவா மன்னி” என்று.

அந்தத் தவற்றைக் கடவுள் மன்னிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?

என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர்கள் குறைவு.

உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.

என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.

ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.

எழுத்தின் மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.

சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.

இவ்வளவு அறியாமைக்கு இடையிலும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாற்றுகிறது.

ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?

என் தாய் தகப்பன் செய்த தருமங்களை நினைக்கிறேன்.

`தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துக்களின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.

செய்த பாவம் தலையிலடிக்கிறது, செய்த புண்ணியம் தலையைக் காக்கிறது.

ஆம்; செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.

புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!

பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.

கஷ்டகாலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்.

அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.

ஆகவே பாவம் செய்யாமல், புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத் தியானித்தால் உன் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

நான் தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.

இந்து மதத்தின் ஒவ்வொரு அணுவையும் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை.

சாதாரணப் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன.

அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன

ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல் தவறு செய்திருப்பதாக வழக்குக் கதைகள் உண்டு.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச் சென்றார்.

அவரது அம்பறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.

அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.

“ஒற்றை அம்பை ஊன்றி வை” என்பது வழக்கு.

அம்பை ஊன்றிய ராமபிரான், கங்கையில் குளித்து விட்டுக் கரையேறினார்.

ஊன்றிய அம்பை எடுத்தார்.

அதிலொரு தேரைக் குஞ்சு குத்தப்பட்டிருந்தது.

பூமிக்குள்ளிருந்த தேரைக் குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.

தேரைக் குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.

ராமபிரான் கண்கள் கலங்கிவிட்டன.

“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே, ஏன் கத்தவில்லை?” என்றார்.

அதற்குத் தேரை சொன்னது:

“பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும் போதெல்லாம் நான் `ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”

ராமபிரான் கண்ணீரோடு சொன்னார்:

“தேரையே, என்னை மன்னித்துவிடு. இது நான் அறியாமல் செய்த பிழை.”

தேரை சொன்னது,

“பெருமானே! `அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”

தேரையின் ஆவி முடிந்தது.

நன்றி -தினத்தந்தி

விளக்கேற்றினால் புண்ணியம் – ஜூலை 22 – கலியர் குருபூஜை!

ஒரு எண்ணெய் விளக்கு கூட இல்லாத பல கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. நம் முன்னோர் நமக்குத் தந்த கலைப் பொக்கிஷங்களை, கடவுள் வாழும் இல்லங்களை, இவ்வாறு வைத்திருப்பது பெரும் பாவம். கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்ன நம் முன்னோர், கோவில்கள் இருண்டு கிடப்பதை இன்னும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். சென்னையில் வசித்த கலியர் எனும் சிவபக்தரின் வாழ்க்கை வரலாறைக் கேளுங்கள்…
சென்னை திருவொற்றியூரில் பிறந்தவர் கலியர். இவர் மிகச்சிறந்த சிவபக்தர். எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். பெரும் செல்வந்தராக இருந்த இவர், தன் வருமானத்தின் பெரும்பகுதியை தன் ஊரில் இருந்த படம்பக்கநாதர் கோவில் திருப்பணிக்கு செலவிட்டு வந்தார். மிக முக்கியமாக, எந்தச் சன்னதியிலும் விளக்கு எரியாமல் இருந்ததில்லை. பகலும், இரவும் அணையாத தீபங்களை ஏற்றி வந்தார். எண்ணெய் வாங்கவே பெரும் பணம் செலவாயிற்று.
பக்தனைச் சோதித்துப் பார்ப்பது பரமனுக்கு விளையாட்டான வேலை. தன் பக்தனிடம் செல்வம் கொட்டிக்கிடப்பதால் தானே, தனக்கு தினமும் விளக்கேற்றுகிறான். அவனுக்கு வறுமையைக் கொடுத்துப் பார்ப்போமே என, முடிவெடுத்தார் சிவபெருமான். காலப்போக்கில், கலியர் செய்து வந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. எண்ணெய் உற்பத்தி குறைந்ததால், வாடிக்கையாளர்களுக்கே போதுமான அளவு கொடுக்க முடியவில்லை. கிடைத்த எண்ணெய் கோவிலுக்கே போதுமானதாக இருந்தது. அரை வயிறு சாப்பிட்டு, சிவத்தொண்டை  தொடர்ந்தார் அவர்.
அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் சிவபெருமான். சொட்டு எண்ணெய் கூட வராத அளவுக்கு செக்குகளை எல்லாம் விற்கிற நிலைமைக்கு, கலியரைக் கொண்டு வந்தார். எல்லாவற்றையும் இழந்தாலும், கலியர் மனம் கலங்கவில்லை. சற்றும் கவுரவம் பாராமல், இன்னொரு எண்ணெய் வியாபாரியிடம் கூலி வேலைக்குச் சென்றார். செக்கில் எண்ணெய் எடுக்கும் பணியைச் செய்தார். அதில் கிடைத்த கூலியைக் கொண்டு, எண்ணெய் வாங்கி, கோவிலுக்கு கொடுத்தார். மீதியைக் கொண்டு, தன் மனைவியுடன் வாழ்க்கையை ஓட்டினார்.  இப்போதும் விடவில்லை சிவபெருமான். ஒருநாள், அந்த கூலி வேலையும் இல்லாமல் போயிற்று. கலியருக்கு மிகுந்த மனவருத்தம். மனைவியுடன் கோவிலுக்குச் சென்றார். “இன்றுமுதல் கோவிலுக்கு எண்ணெய் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதோ… என் ரத்தத்தை எண்ணெயாக ஏற்றுக்கொள்…’ என்று, கத்தியை எடுத்து கழுத்தில் வைக்கவும், சிவபெருமானும், பார்வதிதேவியும் அவர் முன் தோன்றி தடுத்தனர். அவரது பக்தியைப் பாராட்டினர். முன்பையும் விட நிறைந்த செல்வத்தைக் கொடுத்தனர். அந்த பக்த தம்பதியர் தொடர்ந்து தீபமேற்றி வழிபட்டனர். இன்றும் பல கோவில்களில் இந்த நிலைமை இருக்கிறது. உங்கள் ஊர் கோவில்கள் நிறைந்த ஒளியுடன் இருக்க வேண்டும். அதற்கு ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, கோவிலுக்கு தாராளமாக எண்ணெய், மின்விளக்குகள் கொடுக்க வேண்டும். நம் கோவில்கள் ஒளிவெள்ளத்தில் மிதக்க வேண்டும். கோவில்களுக்கு தடையற்ற மின்சாரம் தர, அரசாங்கம் அறிவிப்பு வெளியிட வேண்டும். கலியரின் குருபூஜை நன்னாளில் இவற்றைத் துவங்குவோமா!