Daily Archives: ஜூலை 25th, 2010

வீட்டிலேயே நாமாகவே ஃபேஷியல் செய்யும் முறை

நன்றாகக் கனிந்த பூவன் வாழைப்பழத்தில் பாதியை எடுத்து நன்கு கையால் நசுக்கிக் குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு விட்டமின் ‘ஈ’ மாத்திரை  (காப்ஸ்பூல்) வாங்கி அறுத்தால் அதற்குள் ‘ஈ’ ஆயில் இருக்கும். அந்த ஈ ஆயிலையோ அல்லது ஒரு ஸ்பூன் சுத்தமான தேனையோ கலந்து கழுத்தில், முகத்தில் மேல்நோக்கி தேய்த்து சுழல்வட்டமாக 20 நிமிடம் மெல்ல மசாஜ் செய்யுங்கள். நெற்றி, கண்களை சுற்றி நிதானமாக மெதுவாகச் செய்யுங்கள்.
பிறகு ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து ஒரு சிறிய டவலை அந்த நீரில் நனைத்துப் பிழிந்து கை பொறுக்கும் சூட்டுடன் கழுத்து, முகத்தில்  ஒற்றி வாழைப்பழக் கலவையைத் துடைத்து எடுத்துவிடுங்கள். கடைகளில் பரு, வெண், கறுப்பு முளைகள் நீக்கும் ‘சிறிய கருவி’ கிடைக்கும். அதை வைத்து மூக்கின் மேலும் முகத்தில் வேறு இடங்களிலும் இருக்கும் அழுக்கு, பரு, முளைகளை நீக்குங்கள். பிறகு கீழ்க்கண்ட மூலிகை பொருட்களால் ஆன ‘பேஸ் பேக்கை’ யோ அல்லது வேறு பேஸ்பேக்குகளையோ போடவும்.
கொஞ்சம் குப்பைமேனி இலை, புதினா இலை, வேப்பிலை, துளசி இலை ஆகிய எல்லாவற்றையும் மிக்ஸியில் சுத்தமாக அரைத்து விழுதை அல்லது  விழுதின் சாற்றை முகம், கழுத்துபகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் ஊறினபின் கழுவுங்க இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகம் மாசு மறுவில்லாமல் பளிச்சென்று இருக்கும்.

“நெட்’டிலிருந்து பாடங்களை “டவுண்லோடு’ செய்வதால் குறைந்து வரும் மாணவர்களின் படைப்பாற்றல்

மாணவர்கள் தங்களது ஹோம் ஒர்க்குகளை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதால், அவர்களின் படைப்பாற்றல் முற்றிலும் குறைந்து விடுவதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். கல்விக்கு இணையதளம் இன்றைய காலக்கட்டத்தில் பெரும் பங்காற்றுகிறது. அதே நேரத்தில், மாணவர்களை சோம்பேறிகளாகவும் ஆக்கி விடுகிறது. அவர்களின் கல்வித்திறனையும், படைப்பாற்றலையும் முற்றிலுமாக மழுங்கச் செய்து விடுகிறது.

கல்வியும் தற்போது, கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது. ஆசிரியர்கள் ஹோம் ஒர்க் மற்றும் அசைன்மென்ட்டுகளை அளிக்கும் போது, மாணவர்கள் அதை தாமாகவே செய்வதில்லை. மாறாக, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதை “காபி’ செய்து, “பேஸ்ட்’ செய்து விடுகின்றனர். மற்றவர்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும் திருடி பயன்படுத்துவதால், அவர்களின் தனித்தன்மை வெளிப்படாமல் போகிறது. இது, அவர்களின் அறிவுத்திறனை முற்றிலுமாக பாதிக்கிறது. ஆசிரியர்களுக்கு இது தெரிவதில்லை.

ஆனால், இணைதளங்களிலிருக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் கல்வி தொடர்பான தகவல்கள் அனைத்தும் மற்றவர்களின் ஆக்கங்கள் ஆகும். இதனை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்துவது, “சைபர்’ சட்டத்தின்படி குற்றம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும். இதற்காக, நீதிமன்றம் அபராதம் விதிக்கவும் வழியுள்ளது.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும், “சைபர்’ சட்ட நிபுணருமான பவான் டங்கல் கூறியதாவது: ஆசிரியரின் அனுமதியின்றி, இணையதளங்களிலுள்ள மெட்டீரியல்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். காப்புரிமை சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டால், இதற்கு ஐந்து கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்கு உரிமையானவர்கள், தங்கள் பணத்தையும், உழைப்பையும் சிந்தி உருவாக்கிய இதனை அனுமதியின்றி பயன்படுத்துவது நியாயமற்றது.

மேலும், இதை பயன்படுத்துவதால், மாணவர்களின் கல்வியறிவு எந்த விதத்திலும் முன்னேறப் போவதில்லை. எனவே, மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் மூலம் அசைன்மென்ட்டுகளை தயாரிக்க ஊக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு பவான் டங்கல் கூறினார்.