எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பார்முலாக்களைத் தொடர்ந்து பயன்படுத்த….

எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பல வேளைகளில் நாம் பார்முலாக்களை உருவாக்குகிறோம். இந்த பார்முலாக்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். ஒவ்வொருமுறையும் இவற்றை மனதில் கொண்டு அமைக்கும்போது சில தவறுகள் ஏற்படலாம். ஒருமுறைதான் நன்றாக அமைத்துவிட்டோமே, அவற்றை சேவ் செய்து எந்த நேரமும் பயன்படுத்தும் வகையில் வழியில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். துரதிர்ஷ்டவசமாக, எக்ஸெல் தொகுப்பில் அந்த வசதி இல்லை. ஆனால் வேறு சில வழிகளில் இதனை நாம் மேற்கொள்ளலாம். நோட்பேடில் ஒரு டெக்ஸ்ட் டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து அதில் இவ்வாறு அமைக்கப்படும் முக்கிய பார்முலாக்களை சேவ் செய்து வைத்துப் பின்னர் தேவைப்படுகையில், டாகுமெண்ட் டைத் திறந்து காப்பி செய்து பயன்படுத்தலாம். இந்த வகையில் ஓரளவிற்கு ஒரே மாதிரியாக அமைக்கப்பட்ட பார்முலாக்களைக் கையாள்கையில் அவற்றைத் தவறுதலாகக் காப்பி செய்து பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். இன்னொரு வழியும் உள்ளது. இந்த பார்முலாக்களுக்கு, அவற்றை அடையாளம் காணும் வகையிலான பெயர்களைச் சூட்டலாம். அதற்கான வழிகளைக் காணலாம்.
1.வழக்கம்போல உங்கள் பார்முலாவினை அமைக்கவும்.
2. பார்முலா உள்ள செல்லை செலக்ட் செய்திடவும். எப்2 அழுத்தவும். இப்போது எக்ஸெல் எடிட் முறைக்கு வரும்.
3. ஷிப்ட் கீயை அழுத்தி, கர்சரை நகர்த்தி முழு பார்முலாவினைத் தேர்ந்தெடுக்கவும். பார்முலாவின் முதலில் உள்ள = அடையாளம் முதற் கொண்டு தேர்ந்தெடுக்கவும்.
4. முழுவதும் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் கண்ட்ரோல்+சி அழுத்தி காப்பி செய்திடவும். இப்போது கிளிப் போர்டுக்கு பார்முலா சென்றுவிடும்.
5. அடுத்து எஸ்கேப் கீயினை அழுத்தவும். இப்போது எடிட் முறையிலிருந்து வெளியேறி இருப்பீர்கள். செல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
6. அடுத்து Insert மெனு செல்லவும். அங்கே Name என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Define என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் Define Name என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
7. ஒர்க்புக் பாக்ஸில் Names என்பதில், இந்த குறிப்பிட்ட பார்முலாவிற்கான பெயரை டைப் செய்திடவும்.
8. அடுத்து இந்த டயலாக் பாக்ஸில் கீழாக உள்ள,  Refers To பாக்ஸில் என்ன உள்ளதோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கண்ட்ரோல்+வி கீகளை அழுத்தவும். இப்போது செல்லுக்கான ரெபரன்ஸில், கிளிப்போர்டில் உள்ள பார்முலா அமைக்கப்படும்.
9. இந்த பார்முலாவில் டாலர் அடையாளம் எதுவும் இல்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அப்படி எதுவும் இருந்தால், அதனைத் தேர்ந்தெடுத்து நீக்கவும். (அவை கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற வகையில் உள்ள பார்முலாக்களுக்கு இந்த வழி சரியாக இருக்காது.)
10. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி எப்போதெல்லாம் இந்த பார்முலாவினைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களோ, = அடையாளம் ஏற்படுத்தி, இந்த பெயரினை மேலே 7ல் கொடுத்த பெயரினை டைப் செய்திடவும். செல்லில் பெயர் காட்டப்பட்டாலும், இந்த பெயருக்கு எந்த பார்முலா அமைக்கப்பட்டுள்ளதோ, அது ஒர்க்ஷீட் கணக்கிடுகையில் பயன்படுத்தப்படும். இந்த பார்முலாவினை ஒர்க்ஷீட்டின் எந்த செல்லிலும், அதற்கான பெயரைக் கொண்டு பயன்படுத்தலாம்.


%d bloggers like this: