மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு

“நேற்று இரவு விருந்துக்கு வந்து விட்டு போனார்; இன்று காலை அவர் திடீர் மரணம்’ என்று செய்தி வருகிறது. இதைக் கேட்டு உறவினர்கள் கதறுகின்றனர்; நண்பர்கள் அங்கலாய்க்கின்றனர்; பெரிய தலைவரென்றால், நாடே பேசுகிறது.
உதாரணம்: பெருந்தலைவர் காமராஜ், மதிய உணவு உண்டு, சிறிது ஓய்வுக்காக படுக்க போனவர், எழுந்து வரவில்லை.
திடீர் மரணம் என்றால், மாரடைப்பு தான். மாரடைப்பு என்றால் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளமான, கரோனரி ரத்த நாள முழு அடைப்பு. கரோனரி ஆஞ்சியோகிராமில் அடைப்பு இல்லாதவர், திடீர் மரணமடைகிறார். ஏன்?
ரத்த நாளத்தில் உட்சுவர், நடுசுவர், வெளிச்சுவர் உண்டு. உட்சுவர் கண்ணாடி போன்று, ஒரே ஒரு அடுக்கை கொண்டதால், சிறிய பிரச்னையானாலும் எளிதில் பாதிப்படைகிறது. நடுசுவர், தசைகளால் ஆனது. இது சுருங்கி விரியும் தன்மை கொண்டது. வெளிச்சுவர் இரண்டு சுவர்களை தாங்கி கொண்டுள்ளது. ரப்பர் போல சுருங்கி விரியும் தன்மை கொண்டது ரத்த குழாய். ரத்தத்தில் அதிகமாகவுள்ள கெட்ட கொழுப் புகளான எல்.டி.எல்., – வி.எல்.டி.எல்., – டி.ஜி.எல்., இவை அதிகமாக இருந்து, நல்ல கொழுப்பான எச்.டி.எல்., குறைவாக இருந் தாலும், அதிகமாக சர்க்கரை இருந்தாலும் ரத்தத்தின் நீர் தன்மை குறைந்து, ரத்தம் கெட்டியாக இருக்கும்.
இதனால் ரத்த ஓட்டம் குறைகிறது. கெட்டக் கொழுப்பு, ரத்த நாளத்தின் உட்சுவர் மீது படர்ந்து இருக்கும். சில நேரங்களில் இது கட்டியாக வளர்ந்து, அடைப்பை உண்டாக்கும். இது ஒரு வகை அடைப்பு. மற்றொரு வகையில், ரத்த நாளத்தின் உட்சுவரில் விரிசல் ஏற்பட்டு, அந்த விரிசலில் கெட்டக் கொழுப்பு, நடு சுவருக்கும், உட்சுவருக்கும் இடையில் சேர்ந்து விடும். இந்த அடைப்பு இ.சி.ஜி., டிரெட் மில், எக்கோ கார்டியே கிராம், ஆஞ்சியோ கிராம் முதலிய பரிசோதனைகளால் கூட கண்டறிய முடியாது. தற்கொலை படை, வெடிகுண்டுகளை உடலில் கட்டி, நாட்டில் செல்வாக்குமிக்க, புகழ் பெற்ற தலைவர்களைக் கொன்று, தானும் சிதறி அழிவதோடு இல்லாமல், ஒன்றுமறியாத மக்களையும் கொன்று அழிக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜிவின் மரணத்தை யாரும் மறக்க முடியாது. மே 21, 1991 அன்று நடந்த சம்பவத்தில், அவரது சிதறிய உடலை, சென்னை ஜி.எச்., சவ அறையில் பார்த்து, நான் கதறி அழுதேன்.
இப்போது நாமெல்லாம் நம் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு அலைகிறோம். எப்படி?
நமது உடலிலுள்ள ரத்த நாளத்தின் உட் சுவரில், கெட்டக் கொழுப்புகளான டி.ஜி.எல்., – எல்.டி.எல்., – வி.எல்.டி.எல்., போன்றவைகள் படர்ந்து விடும். இவை நாளடைவில் அதிகமாகச் சேர்ந்து, அடைப்பாக மாறும்.
அடைப்பு பெரிதாகி, நாளத்தின் விட்டத்தை அடைக்கும். இதை  “அதெரோமேட்டஸ் பிளேக்’ என்பர். இது, கெட்டியாக இருக்கும்.  பால், தயிர் வைத்த பாத்திரத்தின் சுவரில் படர்ந்து இருப்பது போல, இவை இருக்கும். இது ஒரு வகை. இது ஆஞ்சியோ கிராமில் தெரியும்.
இந்த வகை அடைப்பிற்கு உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் அல்லது பை-பாஸ் செய்து கொள்ளலாம். 90 சதவீதம் கீழுள்ள அடைப்பிற்கு திட்டமிட்டு வைத்தியம் பார்க்கலாம்.
அடுத்த வகை, மென்மையான, “வல்னரபுள் பிளேக்!’ ஆனால், இது பயங்கரமானது. ரத்த நாளத்தில் உட்சுவரில் விரிசில் ஏற்படும் போது, கெட்டக் கொழுப்புகள், விரிசல் மூலமாக உள்ளே சென்று, நாளடைவில் பலூன் போல விரிவடைகிறது. இது எந்த நேரத்திலும், பலூன் போலவே வெடித்து விடும்.
உடலில் எங்காவது காயம் ஏற்பட்டால் சிறிது ரத்தம் வெளியேறி, பின் உறைந்து நின்று விடுகிறது அல்லவா? ரத்தத்திலுள்ள தட்டை அணுக்கள் எனப்படும், “பிளேட்லெட்’ தான் இதற்கு காரணம்.
பலூன் கட்டி, உட்சுவருக்கும் நடுசுவருக்கும் இடையில் இருப்பதால், கட்டி வெடித்த பின், ரத்தம் சிறிது வெளியேறி, பின் உறைகிறது. உறைந்த பகுதி ரத்த நாளத்தை அடைத்து, இதயத்தை செயலிழக்க செய்து, திடீர் மரணத்தை ஏற்படுத்துகிறது. இது தான் ஆங்கிலத்தில், “சடன் கார்டியாக் டெத்’ எனப்படுகிறது. இந்த பலூன் வகை, “பிளேக்’கை, ஆஞ்சியோகிராமில் கண்டுபிடிக்க முடியாது. இதயத்திற்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம், ஐந்து மடங்கு வரை விரிவடைந்து, இதயத்திற்கு ரத்தம் கொடுக்கும். அதிக வேலை, உடற்பயிற்சி, படி ஏறுவது, மன உளைச்சல், அலைச்சல் ஆகியவற்றின் போது, இதயத்திற்கு அதிக ரத்தம் தேவைப்படும்.
அப்போது, ரத்த நாளம் அதிகளவில் விரிவடைந்து கொடுக்க நேரிடும். விரியும் தன்மையில் கோளாறு ஏற்பட்டால், மார்பு வலி வரும்.
இந்த வகையான மார்பு வலி தான், பெண்களுக்கு 90 சதவீதம் இருக்கும். இதை ஆங்கிலத்தில், “பிரின்ஸ்மட்டல் அல்லது ஸ்பாஸ்டிக் ஆஞ்சைனா’ என அழைப்பர். இது சில நேரங்களில் ஆபத்தாக முடியும்.
இந்த இரண்டும் தான், நாம் உடலில் கட்டிக் கொண்டு அலையும் மனித வெடிகுண்டுகள். இப்போது புரிகிறதா…
மனித வெடிகுண்டின் வரலாறு
ரத்த நாளத்திலுள்ள உட்சுவர், வழவழப்பாக இருக்கும். இதனால், ரத்தத்திலுள்ள தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் சுவரில் ஒட்டாமல், ரத்தம் ஓடிக் கொண்டே இருக்கும். எதுவும் ஒட்டாது. இந்த வழுவழுப்புத் தன்மை, குழந்தை பருவத்திலிருந்து 22 வயது வரை நன்றாக இருக்கும். அதன் பிறகு இது குறைந்து விடுகிறது.
நம் 25வது வயதிலிருந்து வழுவழுப்புத் தன்மை குறைந்து, கெட்டக் கொழுப்பு படர ஆரம் பிக்கும். அதிக எடை, தினமும் மாமிசம், புகை, மது, உடல் உழைப்பு இல்லாமை, இவைகளால் கொழுப்பு படரத் துவங்கி விடுகிறது.  இந்த கொழுப்பு கட்டியாக வளர்ந்து, முழு அடைப்பாக மாறி விடுகிறது.
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அதிக கொலஸ்டிரால் என்று பல காரணங்கள், “சாப்ட் பிளேக்’ கட்டிகளை வெடிக்கச் செய்து விடும்.
மனித வெடிகுண்டை செயலிழக்கச் செய்வது எப்படி?
இந்த மனித வெடிகுண்டுகள், “வெடிக் காமல்’  செயலிழக்க செய்வது எப்படி? ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்து, உடற்பயிற்சி தினமும் செய்து வர வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும்.
“ஸ்டேட்டின்’ என்ற, கொலஸ்டிரால் குறையும் மருந்தை தினமும் உட்கொள்ள வேண்டும். இது ரத்த நாளத்தின் உட்சுவரில் படிந்துள்ள கெட்டக் கொழுப்பை குறைக்கிறது. மேலும், இந்த கொழுப்பு கட்டியையும் குறைக்கிறது. ஆஸ்பரின் அல்லது சூப்பர் ஆஸ்பரின் இரண்டும், ரத்தம் உறைவதைத் தடுத்து, திடீர் மரணத்தை தடுத்து விடும். இது உயிர் காக்கும் அபூர்வ மருந்து.
மார்பு வலி ஏற்பட்ட உடன், மருத்துவமனை செல்ல வேண்டும். “எமர்ஜென்சி ஆஞ்சியோகிராம்’ செய்து, அடைபட்ட ரத்த குழாயை திறந்து, “ஸ்டென்ட்’ வைத்து, ரத்த ஓட்டத்தை சரி செய்ய வேண்டும். இந்த மாரடைப்பை கண்டறிய, கூகீOகஏ கூ பரிசோதனை செய்து, அடைப்பு இல்லையா என அறிய முடியும்.
மார்பு வலி, மாரடைப்பை, வாயுக்கோளாறு என்று கருதி அசட்டையாக இருந்து விடாமல், இ.சி.ஜி., டிராப் டி, எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
மனித வெடிகுண்டு உருவாகாமல் தடுப்பது எப்படி?
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கெட்டக் கொழுப்பு இவைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, வெறும் வயிற்று சர்க்கரை, உணவுக்குப் பின் சர்க்கரை மட்டும் போதாது. ஏஆஅ1ஞி என்ற, மூன்று மாத சர்க்கரையின் அளவு தான் மிகவும் முக்கியம். புகைப் பிடித்தால், நிகோட்டின் என்ற நச்சுப் பொருள், உடலிலுள்ள ரத்தக் குழாயை பாதிக்கிறது.
மன உளைச்சல், மன அழுத்தமில்லாமல் இருக்க வேண்டும். உடல் எடை , இடுப்பு அளவு அதிகமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும், மனித வெடிகுண்டு என்ற, “வல்னரபுள் பிளேக்’ உருவாகக் காரணமாகும் மூலப் பொருட்கள். இது ஏற்படாமல் வாழ்வதே, மனிதனின் முக்கிய கடமை!

%d bloggers like this: