200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் “டேமேஜ்’ ெய்து விட்டனர்,” என்று சாமியார் நித்யானந்தா கூறினார்.

“அஹிம்சை, அன்பு, அமைதி’ என்ற தலைப்பில் சாமியார் நித்யானந்தாவின் ஆன்மிக உரையில் கூறியதாவது:குரு பூர்ணிமா என்பது சிஷ்யர்கள், குருவுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியாகும். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த நேரத்தில், அஹிம்சை வழியிலும், அன்பாலும் வென்ற எனது சிஷ்யர்களுக்கு நான் செய்யும் மரியாதையாக கருதுகிறேன். ராம்நகர் சிறையில் இருந்த போது, அங்கிருந்த மற்ற கைதிகள், என்னிடம் ஆசி பெற்றனர். அதில் ஒரு கைதி, எனக்கு விரைவில் ஜாமீன் கிடைக்க ஆசி கேட்டார். எனக்கே ஜாமீன் கிடைக்காமல் தான், இங்கே இருக்கிறேன், என்றேன் (சிரிப்பொலி).இருந்த போதும், அந்த பக்தரை வாழ்த்தினேன். ஒரு வாரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இங்கு வந்து, உங்களிடம் ஆசி பெற்றதால் தான், ஜாமீன் கிடைத்தது.

உங்களை கடவுளாக கருதுவேன், என்று கூறினார்.மீடியா ரிப்போர்ட்டர்கள் என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டனர். பல்வேறு வார பத்திரிகைகள், எனது பெயருக்கு முன்பும், பின்பும் எனக்கு பல்வேறு பட்டப்பெயர்களை வைத்தனர். சில பத்திரிகைகள் நித்யானந்தா என்ற பெயரை “நித்தி’ என்று அழைத்தனர். அதற்கெல்லாம் கவலைப்பட வில்லை. நான் ஒரு ரிப்போர்ட்டரிடம், இவ்வாறு என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிடுகிறீர்களே, ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர், நாங்கள் தினமும் நான்கைந்து பரபரப்பான செய்திகளை கொடுத்தால் தான், மாத சம்பளமே கிடைக்கும் என்றனர். அவர்களின் நிலைமை அப்படி.மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் “டேமேஜ்’ செய்துவிட்டனர். போலீஸார், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் பலர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். சிறையில் மற்ற கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்தேன்.இவ்வாறு ஒன்றரை மணி நேரம் அவர் சொற்பொழிவாற்றினார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், நிருபர்களிடம் சாமியார் நித்யானந்தா பேசினார்.
அப்போது நமது நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
கேள்வி: பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?
பதில்: விரைவில் சந்திக்கிறேன். என்னை பற்றி அவதூறாக பேசிய செய்திகளை சந்திக்க நான் தயாராக இல்லை. என்னை மனிதனாக நினைத்த, உங்களை போன்ற  பத்திரிகையாளர்களை சந்திக்க தயாராக உள்ளேன். எனது செயலாளரிடம், நீங்கள் அனுமதி பெற்று வாருங்கள். நான் பேட்டி கொடுக்கிறேன்.

அப்போது ஒரு வார பத்திரிகையாளர், எங்கள் பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்க வேண்டும் என்றார்.அப்போது சாமியார், அந்த குறிப்பிட்ட வார பத்திரிகை பெயரை சொல்லி, உங்கள் வார பத்திரிகையில், என்னை மிகவும் கீழ்தரமாக, மட்டமாக எழுதினீர்கள். சாமியார் என்றால் என்ன? அவனுக்கு எந்த ஆசையும் இருக்க கூடாதா? என்று கேட்டார். நான் செய்யாத தவறுகளை ஏன் எழுதினீர்கள். உங்கள் எடிட்டரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று கோபமாக கூறினார். என்னை மதித்தவர்களை நான் மதிப்பேன் என்றார்.

தங்கப் பல்லக்கில் நித்யானந்தா பவனி :நித்யானந்தா தியான பீடத்தில் குரு பவுர்ணமி விழாவை ஒட்டி, தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கில் சாமியார் நித்யானந்தா இரண்டரை மணி நேரம் பவனி வந்தார். குழந்தைகள், பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி வீசினார்.குரு பவுர்ணமி விழாவை முன்னிட்டு, பிடதி நித்யானந்தா தியான பீடத்தில் நேற்று காலை 5 மணிக்கு சாமியார் நித்யானந்தா, வழக்கமாக நடத்தும் பஞ்ச தபசு பூஜையை நடத்தினார்.பின், தெப்பக்குளத்திலுள்ள 101 அடி உயர வைத்திய சரோவர் லிங்கத்திற்கு 100 குடம் பால், 100 குடம் சந்தனம், 100 குடம் விபூதி, 100 குடம் மஞ்சள், 100 குடம் அபிஷேக பொடி என அபிஷேகம் செய்தார். அதே நேரத்தில், தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள 1,008 லிங்கத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அங்கிருந்த பக்தர்கள், “ஓம் நமசிவாயா, ஓம் நமசிவாயா’ என்று கூறினர்.

அதையடுத்து, குளத்தில் இறங்கி குளித்தார். பின், பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடினர். பின்,  600 ஆண்டு பாரம்பரியம் மிக்க ஆலமரம் அருகே சென்றார். அங்கிருந்த தங்க முலாம் பூசிய பல்லக்கில் ஏறி, ஆலமரத்தை சுற்றி பவனி வந்தார். பின், ஆசிரம வளாகம் முழுவதும் பவனி வந்தார்.கூடியிருந்த பக்தர்களுக்கு, குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி வீசினார். சில பெண்கள் பக்தி பரவசத்தில், தன்னையும் மறந்து, நித்யானந்தா பாட்டுக்கு மயங்கியபடி பாடி, ஆடிக் கொண்டே வந்தனர்.இரண்டரை மணி நேர பல்லக்கு ஊர்வலத்திற்கு பின், சாமியாருக்கு, சிஷ்யர்கள் பாதபூஜை செய்தனர். சாமியாருக்கு பஞ்ச ஆரத்தி எடுத்தனர்.

நித்யானந்தா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து  விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் பேசினார். பின், சாமியார் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களில் பெரும்பாலானோர், பல ஆண்டுகளாக வந்து செல்வதாக தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் புதுமுகங்களாக காணப்பட்டனர். அவர்களிடம் கேட்ட போது, “”இந்த சாமியார் பற்றியும், ஆசிரமம் பற்றியும் பல செய்திகளை பத்திரிகைகளில் படித்தோம்.  எனவே இங்கு என்ன நடக்கிறது என பார்க்கலாம் என வந்தோம்,” என்றனர்.

நிகழ்ச்சியில்  கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்பினர் கலந்து கொண்டனர். நடிகை மாளவிகா, தனது கணவர் அவினாஷ், குழந்தையுடன் பங்கு பெற்று சாமியாரிடம் ஆசி பெற்றார். அவருக்கு, சாமியார் ஆப்பிள் வழங்கினார்.

நன்றி – தினமலர்

ஒரு மறுமொழி

  1. ( நித்யானந்தா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து ‘விஸ்வ இந்து பரிஷத்’ தலைவர் வேதாந்தம் பேசினார்.) இப்போது புரிந்து கொள்ளுங்கள் தியான பீடம் எதை நோக்கி செல்கிறது என்பதை. நித்யானந்தம்.

%d bloggers like this: