Daily Archives: ஜூலை 29th, 2010

சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?

“எனக்கு கொஞ்சம் கலரான பொண்ணு பாருங்க”

பெண் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டால், பல மாப்பிள்ளைகளின் முக்கியக் கோரிக்கை இதுதான். குணம், கல்வி, குடும்ப பின்னணி என்று வாழ்க்கைக்கு அவசியமான எத்தனையோ இருக்க, சிவப்பு நிறத்தில் ஏன் மோகம் அதிகமாக இருக்கிறது. `இது ஒரு குழந்தை மனபான்மை’ என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.

டீன் ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு சிவப்பு நிற சருமத்தின் மீது ஆசை வருகிறது. ஆண்களுக்கு உயரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பெண், தனக்கு வரும் கணவன் திடகாத்திரமாகவும், உயரமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆணோ, தனக்கு துணைவியாக வருபவள் அழகில் சிறந்தவளாக, அதுவும் செக்கச் சிவந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

மனோதத்துவ ரீதியாக இப்படி நிறம், உயரம் போன்றவற்றில் அக்கறை கொள்வதை `காம்ப்ளக்சன்’ என்று கூறுகிறார்கள்.

சமுதாயத்தில் இயல்பாகவே உடல்தோற்றத் திற்கு மிகுந்த மதிப்பு அளிக்கபடுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் ஆணா, பெண்ணா என்று கேட்ட மறுநிமிடம் குழந்தை கறுப்பா, சிவப்பா? என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கிறது. திருமண ஊர்வலம் நடந்தாலும், `பெண் நல்ல நிறமாக இருக்கிறாளா? என்பது பற்றிய பேச்சு எழுவதை பார்க்கிறோம்.

இயல்பாக நமது மனம் இல்லாத ஒன்றை பற்றி ஏங்கும். அதைஎப்படியாவது பெற வேண்டும் என்றும் விரும்பும்.

மேனி நிறத்தை மெருகூட்டுவதாக நிறைய விளம்பரங்கள் வருவது பெரும்பாலானவர்களுக்கு சிவந்த தேகத்தில் இருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டும் சிறந்த உதாரணமாகும். உண்மையிலேயே எந்த பொருளும் இயல்பான வண்ணத்தை மாற்றிவிடாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதன்மீது உள்ள ஏக்கத்தால் அத்தகைய பொருட்களை உபயோகபடுத்தத் தொடங்குகிறோம். அப்படி நிறம் மாறிவிடுவது நிஜமென்றால் உலகில் ஒரு கறுப்பு மனிதனையும் காணவே முடியாது. ஏக்கம் கொண்டவர்களின் மனம் சமாதானம் அடைவதற்கு இந்த தயாரிப்புகள் உதவுகின்றன அவ்வளவுதான்.

சிவந்த நிறத்திற்காக ஆசைபட்டு ஒவ்வொரு தயாரிப்புக்காக மாறுவது, பெண் தேடும்போதும் நிறத்தை காரணம் காட்டி மறுத்துவிடுவது என்று காலம் நகரும்போது ஒருவித சலிப்பும், மாற்ற இயலாத காரணத்தால் ஒருவித இயலாமையும் ஏற்படும். இது மன இறுக்கத்தைக் கொடு வரும். நீண்டநாள் பாதிப்புகள் மனவியாதியாக பரிணமிக்கலாம்.

படிக்கும் பருவத்தில் அல்லது பணியாற்றும் பருவத்தில் ஏற்படும் இதுபோன்ற நிறத் தோற்ற மனபான்மை ஒருவரின் படிப்பு அல்லது முன்னேற்றத்தை பாதிப்படையச் செய்யும்.

பெற்றோர், குழந்தை பருவத்தில் இருந்தே தங்களது குழந்தையின் தோற்றம், நிறம் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்த்து வளர்த்து வந்தால் இளம் பருவத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஒருவரை அழகு என்று கொண்டாடுவதும், மற்றவரை அழகற்றவர் என்று ஒதுக்கி வைப்பதும் பிற்காலத்தில் பிரச்சினைகளைத் தரலாம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

குறைகிறது தூக்கம்… புலம்புகிறார்கள் இந்தியர்கள்!(`ஓ.எஸ்.ஏ.’ குறைபாடு )

நீங்கள் அதிக நேரம் வேலை செய்பவரா? அதிகம் உடல் எடை கொண்டவரா? எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகுபவரா?

– அப்படியென்றால், உங்களுக்கு `ஓ.எஸ்.ஏ.’ குறைபாடு இருக்கலாம். `அஸ்ட்ரக்டிவ் ஸ்லீ அனியா’ என்பதன் சுருக்கம்தான் ஓ.எஸ்.ஏ. இதனால், உறக்கத்தின்போது முச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, தூக்கமின்மை உண்டாகும்.

பொதுவாக நகரவாசிகள்தான் மேற்படி கேள்விகளுக்கு `ஆம்’ என்று பதில் சொல்பவர்களாக இருக்கிறார்கள். அதனால், இவர்கள்தான் அதிக அளவில் இந்த இரவுநேர நோய் பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள். இந்த நோய் பாதிப்பு தொடரும் பட்சத்தில் நிம்மதியை இழந்து பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாகிவிடுகிறார்கள் என்கிறது, சமீபத்தில் இந்தியாவில் நடத்தபட்ட ஆய்வு. 35 முதல் 65 வயதுள்ள சுமார் 6 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தபட்டது.

ஆய்வில், நகர்புறங்களில் வாழும் 93 சதவீதம் பேர் இரவுநேர தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்கள். இவர்களில் 28 சதவீதத்தினர் 5 மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்கள். 71 சதவீதத்தினர் இரவில் முன்று முறை விழித்து தூக்கம் வராமல் தவிக்கிறார்கள்.

நிம்மதியான தூக்கம் தொடர்பாக நடத்தபட்ட அந்த ஆய்வில் குறட்டை விடுபவர்கள் பற்றிய முக்கிய தகவல்களும் கிடைத்தன.

இந்தியாவை பொறுத்தவரை குறட்டை விடுபவர்களில் 38 சதவீதத்தினர் அதிக உடல் பருமன் கொண்டவர்கள். மற்றவர்கள்… அளவுக்கு அதிகமாக புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் ஆவார்கள்.

ஓ.எஸ்.ஏ. பாதிப்பை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

சரி… ஓ.எஸ்.ஏ. என்பது என்ன?

நமது சுவாசபாதையில் தடை இல்லாமல் இருந்தால்தான் நுரையீரலுக்கு காற்று எளிதில் செல்லவும், வெளியேறவும் வசதியாக இருக்கும். அதில் தடை ஏற்படும்போது ஓ.எஸ்.ஏ. பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, சுவாச பாதை பாதிக்கபட்டு, நுரையீரலுக்கு காற்று செல்வதில் தடை ஏற்படுகிறது.

பொதுவாக நாம் தூங்கும்போது நாக்கு, தடிமனான கழுத்து திசுக்கள், சதைகள் சுவாச பாதையை அடைக்கின்றன. அதனால், பல விநாடிகளுக்கு சுவாசம் நின்றுவிடுகிறது. தொடர்ந்து, உடல் காற்று வராமல் தடுமாறுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. முச்சு விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, உறக்க நிலையில் உள்ளவர்கள் எழுந்து விடுகிறார்கள்.

அவர்கள் மீண்டும் முச்சுவிடும்போது ஆக்சிஜன் அளவு அதிகரித்து, ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது. இரவு முழுவதும் இந்த செயல்பாடு மீடும் மீண்டும் நடக்கிறது.

ஆனால், ஓ.எஸ்.ஏ. பாதிப்பு இருக்கும்போது 8 மணி நேர சராசரி தூக்கத்தின் அளவு குறைந்துபோய் விடுகிறது. `இரவில் தூங்கும்போது அடிக்கடி தடை ஏற்படும். நம்மை அறியாமலேயே விழித்துக்கொண்டு தூக்கம் வராமல் தவிப்போம். மனமும் அமைதியாக இல்லாமல் எதையோ தேடி அலை பாய்ந்து கொண்டிருக்கும். மறுநாளும் அதன் தாக்கம் தொடரும். அதாவது, மறுநாள் களைப்பும், தூக்கக் கலக்கமுமாக இருக்கும்…’ என்று விளக்கம் கொடுக்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் இரவு தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்களாம்.

தனது அலுவலகத்தில் 8 மணி நேரத்தையும் தாண்டி 10 முதல் 12 மணி நேரம் வரை வேலை பார்க்கும் அசோக் ஒரு மணி நேரம் ரெயிலில் பயணம் செய்து, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தை நடந்து சென்றால்தான் வீட்டை அடைய முடியும். ரெயிலில் பயணித்தது அவருக்கு நன்றாக நினைவிருக்கும். அதற்கு பிறகு வீட்டுக்கு வந்த நினைவுகள் அவருக்கு குழப்பமாக இருக்கும். சாலையை எந்தெந்த இடங்களில் `கிராஸ்’ செய்து வீட்டிற்கு வந்தோம் என்பதுகூட அவருக்கு நினைவில் இருக்காது. இதுவும் ஓ.எஸ்.ஏ. நோய் பாதிப்புதான்.

இந்த நோய் பாதிப்பு ஒருவரிடம் உள்ளதா என்பதை அவரால் கண்டுபிடித்துவிட முடியாது. அவருக்கு அருகில் தூங்குபவர், அவரது இரவு நேர நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டினால் மாத்திரமே அதை உணர்ந்து கொள்ள முடியும். ஒருவேளை, அந்த நோய் பாதிப்பு இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம்.

சிலர் பிறவிக் குறைபாடு, புதிதாக எடுத்துக்கொள்ளும் உணவுகள், புகையிலை பயன்படுத்தும் வழக்கம், உடற்பயிற்சி செய்யாமை… என்று நீளும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினாலும் ஓ.எஸ்.ஏ. பாதிப்பை சந்திக்கலாம். ஆனாலும், உடல் பருமன் அதிகம் இருக்கும்போதுதான் இதன் தீவிரம் இன்னும் அதிகமாகிறது.

ஆண்கள் உடல் பருமன் பாதிப்புக்கு ஆளாகும்போது, அவர்களது வயிற்றுக்கு மேல் பகுதியில் எக்குதப்பாக சதை போடுகிறது. அதனால், அவர்கள் உடல் சதை போடுவதை தவிர்த்துவிட வேண்டும். இதேபோல், கர்ப்பிணி பெண்களுக்கும் ஓ.எஸ்.ஏ. பாதிப்பு ஏற்படலாம்.

ஒருவருக்கு ஓ.எஸ்.ஏ. பாதிப்பு இருந்து, அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தைக்கூட ஏற்படுத்திவிடும். அத்துடன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிரப்பு சக்தி குறைவு, அன்றாட செயல்களில் தடை போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதற்கு முழுமையான தீர்வு 8 மணி நேரம் தூக்கம்தான். நீங்கள் 8 மணி நேரம் தூங்காதவர் என்றால், இன்றே அதற்கான காரணத்தை ஆராயுங்கள். குறைபாடுகள் தெரிந்தால் உடனேயே சிகிச்சையை ஆரம்பித்து விடுங்கள்.

சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்

அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள்.

வீட்டில் ஆரோக்கியமான சிந்தனைகள் மட்டுமே தோன்றட்டும்.

உறக்கத்திற்கு முன்பாக மனதை அமைதிபடுத்துங்கள்.முடிந்தால் தியானம் செய்யுங்கள்.

படுக்கையில் அமர்ந்த பிறகு சிக்கலான பிரச்சினைகளில் மனதை செலுத்த வேண்டாம்.

இயற்கை உபாதை காரணமாக இரவில் விழிப்பு தட்டி எழுந்தால், அந்த காரியத்தை முடித்ததும் படுத்துவிடுங்கள். அப்போது, அடுத்தவருடனான பேச்சு, விவாதம் வேண்டாம்.

சுத்தமான காற்றோட்டம், தூய்மையான படுக்கை, இட நெருக்கடியற்ற படுக்கையறை, மணம் தரும் வாசனைத் திரவியங்கள், முழுவதுமாக இருட்டாக அல்லாமல் மிக மெல்லிதான வெளிச்சம், இவற்றோடு தெளிந்த மனம் – இவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

நீங்கள் படுக்கும் படுக்கை உங்களுக்கு சவுகரியத்தை தருவதாக இருக்க வேண்டும். அணியும் ஆடை பருத்தி ஆடையாக, இறுக்கமாக இல்லாமல் இருத்தல் அவசியம்.

வசதி உள்ளவர்கள் ஸ்லீம் லே, ஸ்லீப் மெஷின் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மூக்கின் பக்கவாட்டு பகுதியை தூக்கி மூச்சுவிடுவதை சுலபமாக்கும் மூக்கு பட்டை, தொடை சதையை இறுக்கி, மூக்கு துவாரத்தை ஈரமாக வைத்திருக்கும் குறட்டை தெளிப்பான் போன்றவையும் உங்களுக்கு உதவலாம்.

முடிந்தவரை 8 மணி நேரம் தூங்குங்கள். தூக்கத்தின் அளவு குறைய குறைய ஆபத்துதான்.

கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான விளக்கக் குறிப்புகள்

சிறு வயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது. எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம். இணைய தளம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். டிஜிட்டல் போட்டோ எடுத்து அவற்றை கம்ப்யூட்டரில் இணைக்க முயற்சிக்கிறீர்கள். எடுத்த போட்டோக்களை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். இதற்கெல்லாம் உதவிக் குறிப்புகளை நாடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கென உள்ள இந்த தளம் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய உதவியினை வளமாக நல்ல டுட்டோரியல் பாடங்களாகப் பதிந்து வைத்து இந்த இணையதளம் தருகிறது. இதன் முகவரி http://www.goodtutorials.com/ இந்த செய்தியை எழுதும் போது இந்த தளத்தில் 25,049 டுடோரியல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளாக இந்த வழிகாட்டும் தளங்கள் உள்ளன. அவை : CSS, Flash, HTML, Illustrator, Java, JavaScript, Maya, Photography, Photoshop, PHP, Ruby, Ruby on Rails and 3ds Max என பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் புதியதாக பதியப்பட்ட 15 உதவித் தளங்களின் பட்டியல் காணப்படுகிறது. நான் பார்த்த போது போட்டோ ஷாப்பிற்கான இன்டர்பேஸ் குறித்த டுடோரியல் காணப்பட்டது. இதனைத் திறந்து பார்க்கையில் போட்டோ ஷாப் குறித்து பல செய்திகள் கிடைத்தன. இந்த உதவிக் கட்டுரைகளின் கீழாக மேலும் பல உதவி தரும் தளங்களுக்கான லிங்க்குகள் உள்ளன. அவற்றையும் கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதன் கீழ் சில பிரிவுகளும் உண்டு. அவை: Rating, Clicks, Comments, Save, Share and Report இந்த தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். எந்த கட்டுரையை சேவ் செய்திட வேண்டுமென்றால் சேவ் டேபைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அப்போது இன்னொரு லிங்க் தரப்பட்டு அங்கு சேவ் செய்யப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இந்த கட்டுரைகள் சேவ் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் அக்கவுண்ட்டை ஏற்படுத்த இந்த தளத்தில் பதிவு செய்வதும் எளிது. நிச்சயமாய் இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இன்றே இந்த தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் உங்கள் பேவரிட் தளப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரையை குறைக்கும் “மகாகனி’

இன்று உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய். மனித உறுப்புக்களின் செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, இறுதியில் மரணத்தில் தள்ளும் தன்மை கொண்டது இந்த நோய். சித்த வைத்தியத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்துகள் உள்ளன. வெந்தயம், சுண்டை, பாகல், வேம்பு, நிலவேம்பு போன்ற பல மூலிகைகள் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை. இந்த வகையில், மகாகனி மூலிகையும் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள அடர்ந்த பசுமை காடுகளில் இந்த அரிய மூலிகை காணப்படுகிறது. மிக, மிக கசப்பு மற்றும் துவர்ப்பு தன்மை கொண்ட மகாகனியின் பட்டை, உலர்ந்த பழத்தோல் ஆகியவை “தேன்காய்’ என்ற பெயரில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விற்பனை செய்யப்படுகின்றன. இதிலுள்ள பேராக்மலின் லிமனாய்டுகள் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. மகாகனியின் பட்டை, பழத்தோல் ஆகியவற்றை 10 கிராம் அளவில் எடுத்து, 500 மி.லி., நீரில் போட்டு, கொதிக்க வைக்க வேண்டும்.  அது, 125 மி.லி., அளவிற்கு சுண்டிய பின், தொடர்ந்து குடித்து வர சர்க்கரை அளவு குறையும். மகாகனி பட்டையை இடித்து, பொடித்து, சலித்து 500 மி.கி., அளவிற்கு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்போ, பின்போ சாப்பிட்டு நீர் அருந்தலாம். மருந்துகள் உட்கொள்ளும் போது சர்க்கரை அளவு மிக குறைந்து, குறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாகனி ஒரு மாமருந்து.