Monthly Archives: ஜனவரி, 2011

`டென்ட்’ துணியில் இருந்து பிறந்த ஜீன்ஸ்!

ஆஸ்கார் லெவி ஸ்ட்ராஸ் என்பவர் 1849-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு வந்தார். சுரங்கத்தில் தங்கம் தோண்டும் பணி பரபரப்பாக நடைபெற்ற காலம் அது. சுரங்கத் தொழிலாளர்களின் கால்சட்டைகள் வெகு சீக்கிரமே கிழிந்து விடுவதை அவர் கவனித்தார். உறுதியான ஒரு துணியில் பேன்ட் தைத்துக் கொடுத்தால்தான் இவர்களுக்குச் சரிப்படும் என்று அவர் நினைத்தார். டென்ட் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியின் மீதத்தைக் கொண்டு ஒரு பேன்ட் தைத்தார். சுரங்கத் தொழிலாளர்களுக்கு அது பிடித்துப் போய்விடவே, ஆர்டர்கள் குவிந்தன. ஸ்ட்ராஸ், பிரான்சில் இருந்து `நீம்’ என்றழைக்கப்பட்ட கனத்த துணியை வாங்கித் தைத்தார். அதுவே `டெனிம்’ என்று பெயர் மாற்றம் பெற்று உலகெங்கும் பரவியது.

`ஜீன்ஸ்’களில் தற்போது காணப்படும் `ரிவிட்’ உங்களுக்குப் பிடிக்கும் என்றால், நீங்கள் அல்கலி ஐக் என்ற கவனக்குறைவான சுரங்கத் தொழிலாளிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர், சுரங்கத் தொழிலுக்கான உபகரணங்களை ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் வைத்து விடுவார். அதனால் பாக்கெட்டுகள் அடிக்கடி கிழிந்து போகும்.

அல்கலியின் கிழிந்த பாக்கெட்டுகளை தைத்துத் தைத்துச் சலித்துப் போன அவரது தையல்காரர் என்ன செய்தார் தெரியுமா? அல்கலியை ஒரு கொல்லரிடம் அழைத்துப் போனார். அவரது பாக்கெட்டுகளில் `ரிவிட்’ அடித்து விடும்படி வேடிக்கையாகச் சொன்னார்.

`இது ரொம்ப நல்ல யோசனையாயிருக்கே!’ என்று அதைப் பார்த்து வியந்த லெவி ஸ்ட்ராஸ், எல்லா ஜீன்ஸ்களிலும் `ரிவிட்’ அடிக்கத் தொடங்கி விட்டார்.

டெபாசிட் முதிர்வு காலத்திற்கு முன்பணத்தை எடுத்தால் அபராதம் உண்டு

வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியில், (பிக்சட்டெபாசிட்) முதலீடு செய்துள்ளவர்கள், முதிர்வுகாலம் முடிவதற்கு முன்பே பணத்தை எடுத்தால்,அபராதம் செலுத்த வேண்டும். இந்த நடைமுறையை வங்கிகள் உடனடியாக அமலுக்குகொண்டு வந்துள்ளன.முதலீட்டு பணத்தில் ஒரு சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும். வங்கிகளில் நிரந்தரவைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்கள், தவிர்க்க முடியாத காரணங்களால்முதிர்வு காலத்திற்கு முன்பாக பணத்தை எடுக்கவிரும்பினால், அதற்கு அபராத விதிப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கிகள் முடிவுக்கே விட்டது. ஒருகுறிப்பிட்ட தொகையை அபராதம் விதிக்கும் நடைமுறையை, சில பொதுத்துறை வங்கிகள் நடைமுறைப்படுத்தியிருந்தன. ஆனால், சில தனியார் வங்கிகள், இந்த நடைமுறையை பின்பற்றாமல் இருந்தன. இந்நிலையில், எச்.டி.எப்.சி., வங்கி உட்படகடந்த 24ம் தேதி முதல் நிரந்தர வைப்பு நிதி திட்டத்திற்கு,ஒரு சதவீதம் அபராதம் விதிக்கும் தொகையைஅமல்படுத்தியுள்ளது.இதே போல், கர்நாடகா வங்கி, தனலட்சுமி வங்கிஆகியவை ஒரு சதவீத அபராத தொகையை நிர்ணயித்துள்ளது. இருப்பினும் ஐ.ஓ.பி., வங்கி, ஐந்துலட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு அபராதம் விதிப்பதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஐந்துலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை முதிர்வு காலம்முடிவதற்கு முன் எடுத்தால் அபராதம் விதிக்க உள்ளது.

இந்திய மாணவர்களை கண்காணிக்கும் கருவி : அமெரிக்காவின் அவமானச் செயல்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக் கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில், “எலக்ட்ரானிக் டேக்’ எனப்படும் கருவியைக் கட்டி, அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக புதிய, “இ-மெயில்’ முகவரி ஒன்றையும் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான சான்பிரான்சிஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது டிரி வேலி பல்கலைக் கழகம். அமெரிக்க சட்டப்படி, இப்பல்கலை, ஆண்டுக்கு 144 விசாக்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்க முடியும். ஆனால், இந்தாண்டு சட்ட விரோதமாக மாணவர்களிடம் அதிகளவில் பணத்தைக் கறந்து, போலி விசாக்கள் மூலம் மாணவர் சேர்க்கையை பல்கலை நடத்தியுள்ளது.

இப்பிரச்னையில் மாட்டியுள்ள 1,555 இந்திய மாணவர்களில், 750 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், வேறு வழியில்லாமல் தங்கள் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அங்கேயே தங்கி, வேறு கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்காக முயன்று வருகின்றனர். அமெரிக்க குடியேற்றத் துறை இவர்கள் அனைவரிடமும் விசாரித்து வருகிறது.

இதற்காக இவர்களது காலில், “எலக்ட்ரானிக் டேக்’ எனப்படும் மின்னணு கண்காணிப்புக் கருவியை அத்துறை கட்டி விட்டுள்ளது. பாதத்திற்கு மேல் வளையம் போன்ற எலக்ட்ரானிக் தகவல் தரும் கருவி மாட்டப்படுகிறது. மாணவர்கள் எங்குள்ளனர் என்பதை இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள முடியும். இதற்கு, இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி இது பற்றி கூறியிருப்பதாவது: அமெரிக்க கொள்கைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் மோசடி செய்தது பல்கலைக் கழகம் தான். மாணவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகள். அதனால், அவர்கள் மீது இரக்கம் கொண்டு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கைவிட வேண்டும். நேர்மையான மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் இந்திய அரசின் கவலை. அதற்காக அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்விவகாரத்திற்கு காரணம் போலி ஏஜன்டுகள் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷன் தலைவர் கோமதி ஜெயராம் கூறுகையில், “இந்தப் பிரச்னையில் அரசியல் ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த மாணவர்களை இங்குள்ள வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றுவது அல்லது இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது ஆகிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்றார்.

இ-மெயில் முகவரி : டிரி வேலி பல்கலைக் கழகத்திற்கு படிக்கச் சென்றுள்ள மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர் இப்பிரச்னையில் இந்தியத் தூதரக உதவிகளைப் பெறுவதற்காக www.indianembassy.org என்ற இ-மெயில் முகவரியை, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து, minca@indiagov.org மற்றும் edu@indiacgny.org என்ற முகவரிகளுக்குக் கடிதம் எழுதி, இந்திய அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெறலாம்.

அமெரிக்க விளக்கம்:இது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்கா, மாணவர்கள் காலில் கருவிகள் கட்டப்படுவது அமெரிக்காவின் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. கருவியை கட்டியதால் மாணவர்கள் குற்றவாளிள் எனவோ, சந்தேகப்படும் நபர்கள் எனவோ அர்த்தமள்ள. மாணவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக கருவிகள் கட்டப்படுகின்றன என கூறியுள்ளது.

குதிகால் செருப்பு-பெண்களுக்கு அதன் மேல் ஈர்ப்பு

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.

* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.

* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி `நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.

* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை:

குதிகால் செருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.

* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.

* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.

* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் `சோல்` ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பான தாக இருக்கும்.

* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.

* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.

நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:
* குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.

* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.

* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.

* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.

* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.

* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.

* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.

* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.

* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

மரபணு தகவல் புரட்சி!

பத்து வருடங்களுக்கு முன், அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரும் விடுத்தக் கூட்டறிக்கையில் மனித ஜீனோமின் மாதிரி வரைவு உருவாக்கப்பட்டதாக அறிவித்தபோது, மரபணு (அ) ஜெனிடிக்ஸ் துறையில் மிகப்பெரிய புரட்சி தொடங்கிவிட்டதை உலகம் உணரத் தொடங்கியது. இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே மருத்துவத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்வதற்கான ஆராய்ச்சிகள் ஜெட் வேகத்தில் பறக்கத் தொடங்கிவிட்டன. உயிரியல் ரகசியத்தை அணுவணுவாக தோண்டத் துவங்கி யது விஞ்ஞான உலகம். மிகச் சாதாரணமாக கூறவேண்டு மானால் “நீ யார் என்பதை உன்னுள் தேடு’. இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது மரபணு ஆராய்ச்சிகள். ஒவ்வொரு மனிதனின் தனி அடையாளங்களும், உடல் கூறுகளும் பாரம்பரியமாக கிடைக்கப்பெற்றது. கண்களின் நிறம், சருமம், மூக்கு வடிவம். போன்ற எல்லா அம்சங் களும் வழி வழியாக, சந்ததிகளாக தொடருபவை.

நாம் எல்லோரும் எண்ணற்ற செல்களினால் ஆக்கப்பட்டிருக்கிறோம். செல் என்பது நுட்பமான, நுண் ணிய உயிரணு. செல்லில் பாரம்பரியத்தின் வரலாற்றுப் பதிவு பொதித்து வைக்கப்பட்டுள்ளது. பிறப்பின் ரகசியம் எழுதப்பட்டிருக்கிறது. மொழியில்லாத மொழி, சாங்கேத மொழி. நம் எதிர்கால சந்ததியினருக்கு அளிக்கப் போகும் வம்ச ரகசியம். செல்லின் நடுவே நியூக்கிளியஸ் -கரு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நியூக்கிளியஸினுள்ளே சிக்கலான 46 குரோமோசோம்கள் இடம் பெற்றிருக்கிறது. குரோமோசோம்களை நுட்பமாக கவனித்தால் டி.என்.ஏ (டி.ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) எனும் சிக்கலான மாலிக்யூல்கள் காணப்படுகின்றன. இது முறுக்கிய ஏணிப்படி போன்ற சங்கிலித்தொடர் அமைப்பு. சற்று வித்தியாசமான ஏணி. ஏணியின் இருபுறம் இரு தண்டுகளும், அதனை இணைக்கும் எண்ணற்ற படிகள் உள்ளதாக கற்பனை செய்து கொண்டால் இதன் அமைப்பு எளிதில் விளங்கும், இந்த ஏணி, நான்கு படிகள் இடைவெளியில் ஒன்றுக் கொன்று எதிர்திசையில் முறுக்கிவிட்டுக் கொண்டே சென்றதைப் போன்ற அமைப்பு. தண்டுகள் சர்க்கரை மற்றும் பாஸ்பேட் குழுக்களால் ஆனது. இவையனைத்தும் எஸ்டர் பிணைப்பினால் பிணைக்கப்பட்டிருக்கும். இதில் ஒவ்வொரு முறுக்கமும் ஒரு நியூக்ளிடைடு. நியூக்ளிடைடில் நான்கு படிகள் போல காணப்படுவது அடினைன் (ஆ), குவனைன்(ஏ) சைட்டோசைன் (ஈ) தைமின் (ப) ஆகிய கார வரிசைகள், உதாரணமாக, ஏஆபஈ என்பது ஒரு கார இணை என்று வைத்துக்கொண்டால் இந்த நான்கு காரங்களை எண்ணற்ற விதத்தில் மாற்றி கார வரிசைகளை உருவாக்கலாம். இந்தக் கார வரிசைகள் தான் மரபுத் தகவல் கள். இதை சாங்கேத மொழி என்பதை விட கட்டளைகள் என்பதே பொருத்தமாக இருக்கும். இது போன்ற சாங்கேத தகவல்கள் அமைந்த சிறு துண்டம்தான் ஜீன். ஒரு குறிப் பிட்ட செயலுக்கான தகவல் தொகுப்பு ஜீன். முழு டி.என்.ஏவில் உள்ள அனைத்து ஜீன்களையும் சேர்த்து ஜீனோம் என்கிறார்கள்.

ஒவ்வொரு மரபணுத் தகவலும் ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தை குறிக்கும். அமினோ அமிலம் தகவலுக்கு தகுந்த புரோட்டீன்களை (புரதம்) உருவாக்கும். பின்னர் புரோட்டீன்கள் நொதிகளாகவும், ஹார்மோன்களாகவும், ஆண்டிஜென்களாகவும் (எதிர்புரத தூண்டி) மாறுகிறது. புரோட்டீன்கள் முக்கியமாக உடல் உறுப்புகளாகவும், உருவ மற்றும் செயல் வடிவம் பெற்று, பல்வேறு செயல்களுக்கும், உயிர் வேதியில் மாற்றங்களுக்கும் காரணமாகிறது. காரங்களின் வரிசைக்கும் (மரபணு தகவல்) புரோட்டீனை உருவாக்கப்போகும் அமினோ அமில வரிசைக்கும் உள்ள தொடர்புதான் ஜெனிடிக் கோடு. மரபணுத் தகவல்களால் நம் கண், காது, மூக்கு, உடல் அமைப்பு போன்ற நுட்பமான தகவல் மட்டும் பல சந்ததிகளாக தொடரவில்லை. நம் முந்தைய சந்ததியினர் அளித்த நோய்களுக்கும்தான். புற்றுநோய், சர்க்கரை வியாதி, இதய மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் கூடவே தொடரும். அதனால், நம் பெற்றோர்களை பார்த்து எனக்கு என்ன மிச்சம் வைத்தீர்கள் என கேள்வி கேட்க முடியாது.

ஜினோம் வரிசைப்படுத்தலும் மனித ஜீனோம் திட்டமும்

மனித ஜீனோம் சுமார் 3 மில்லியன் மரபணுச் செய்திகள் (அ) தகவல்கள் பொதிந்து வைக் கப்பட்ட நீண்ட தொடர். டி.என்.ஏ மாலிக்யூ லில் உள்ள ஜீனோம் வரிசைப்படுத்துவது என்பது மரபணு செய்தியான கார இணை களின் சரியான வரிசையை கண்டறிவதுதான். மனித ஜீனோம்களை வரிசைப்படுத்த மனித ஜீனோம் திட்டம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. 1990-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட மனித ஜீனோம் திட்டத்தில் 1 சதவீதம் ஜீனோம் வரிசைப்படுத்திய பிறகு சீனாவும் இந்த குழுவில் இணைந்த கொண்டது. முதன் முதலில் ஜீனோம் மாதிரி விரைவு உருவாக்கி 2000- ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி உலகுக்கு அறிவித்தது. முதலில் 90 சதவீதம் ஜீனோம்களை வரிசைப்படுத்தியது. அதில் 1000 கார வரிசை களுக்கு ஒரு தவறு இடம் பெற்றிருந்தது. மேலும் 1,50,000 இடை வெளிகளுடன் தரமான 28 சதவீத ஜீனோம்களைத் தான் இத்திட்டத்தால் வரிசைப்படுத்த முடிந்தது. முதன் முதலாக 2001- ஆம் ஆண்டு கிரைக் வென்டர் மற்றும் சக விஞ்ஞானிகள் அவர்களுடைய ஜீனோம் வரிசைப் படுத்தல் ஆய்வுகள் வெளியிடப்பட்டது, அதே சமயம் மனித ஜீனோம் திட்டத்தின் மனித ஜீனோம் வரிசைப்படுத்தல் ஆய்வுகள் வெளியிடப்பட்டது. மேலும் 2003 ஏப்ரல் மாதம் மிக நுணுக்கமாக, 400 இடைவெளிகள் மட்டுமே கொண்ட, 99 சதவீத ஜீனோம்களை இத்திட்டத்தினரால் வரிசைப் படுத்தப்பட்டது. இது 10,000 கார வரிசைக்கு ஒரு தவற்றைக் கொண்டிருந்தது. 3 மில்லியன் கார இணைகளை வரிசைப்படுத்தவும், அனைத்து ஜீன்களை அடையாளம் காணவும் 13 வருடங்கள் எடுத்தது.

தற்போது ஒரு நாளைக்கு 25 முதல் 100 பில்லியன் கார இணைகள் வரிசைப்படுத்தக்கூடிய இயந்திரங்கள் வந்து விட்டன. அதிகமான மரபணு தகவல்களை (ஜீனோ டைப்) நாம் புரிந்துகொள்ளக்கூடிய பீனோடைப் தகவல் களாக மாற்றவும், இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் அதிக திறன் கொண்ட கணினி தேவைப்படுகிறது எவ்வளவு என்கிறீர்களா? நம்முடைய சாதாரண கணினியைப்போல 10,000 மடங்கு.

இந்தியாவின் முயற்சி

இந்தியா 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி மனித ஜீனோம் வரிசைப்படுத்துதலில் தீவிரமாக இறங்கியது. ஜீனோம் வரிசைப்படுத்துத லில் இந்தியா இறுதியாக நுழைந்தாலும் மிக வேகமாக மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தியது. அதுவும் நாற்பத் தைந்தே நாட்களில் செய்து முடித்தது. வயது 52, உயரம் 167 செ.மீ, எடை 52 கிலோகிராம் கொண்ட, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனிதனின் ஜீனோம்தான் இந்தியா வரிசைப்படுத்திய ஜீனோம். அந்த அதிர்ஷ்டசாலியின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தும் எண்ணம் தற்போதைய ஈநஒத தலைவர் பேராசியர் சமீர் பிரம்மசாரியால் உரு வானது. தற்போதைய ஒஏஇஒலியின் தலைவர் ராஜேஸ். எஸ்.கோகலே தலை மையில் ஸ்ரீதர் சிவசுப்பு வினோத் ஸ்கரியா ஆகிய விஞ்ஞானிகளுடன் 6 மாணவர்கள் சேர்ந்த குழு மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தியது. இதனை செய்து முடிக்க நொடிக்கு ஒரு டிரில்லியன் செயல் வேகம் கொண்ட சூப்பர் கணினிகள் ஈநஒதலின் உதவியால் பயன்படுத்தப்பட்டது. சுமார் 51 ஜிகா கார வரிசைகள் கட்டிங்- எட்ஜ் தொழில்நுட்ப முறையில், 76 ஜீன் துண்டுகளின் 10 லட்சம் கார வரிசைகள் வரிசைப்படுத்தப்பட்டது.

மரபணு மருத்துவம் (அ) ஜீன் மருத்துவம்

மனிதனின் ஜீனோம் வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்விக்கு இனிவரும் காலங்கள் தீர்க்கமான பதில்களை சொல்லக் காத்திருக்கிறது. நோய் வரும் முன் காப்போம் என்ற வாக்கியம் உண்மையில் இந்த மருத்துவமுறைக்கு மிக பொருந்தும். பாரம்பரியமாக தொடரும் புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களை ஜீன்களில் கண்டறிந்து, திருத்தப்பட்ட ஜீன்களை அவ்விடத்தில் இணைத்தால் போதுமானது. தேவையன்றி நோய் வந்தபின் மருந்தோ, மாத்திரையோ சாப்பிடத் தேவையில்லை. அதாவது இருதய நோய் ஏற்படும் என்ற தகவலை வெட்டி எறிந்து விட்டு, ஆரோக்கியமான மனிதரில் எடுக்கப்பட்ட இருதய தகவலை இணைத்துவிட்டால் போதுமானது. இவ்வகை மாற்றங்கள் இருவகைகளில் செய்யப்படுகிறது. உடல் செல்களிலும், கருசெல் அல்லது இனப்பெருக்க செல்களிலும் இவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட ஜீன் சிகிச்சைமுறை கையாளப்படுகிறது. உடல் செல்கள் பெருக்கம் அடைவது குறைவு. எனவே இம்முறை ஒருசில நோய்களுக்கு மட்டுமே பயன்படும். கருசெல் அல்லது இனப்பெருக்க செல்களில் திருத்தியமைக்கப்பட்ட வேற்று மனிதர்களின் ஜீன்களை இணைத்து நோய்களை இல்லாமல் செய்யலாம். நமக்கு தேவைப்படும் உடல் உறுப்புகள், அமைப்பு, கண்கள் போன்ற வற்றை பெறலாம். எதிர்காலத்தில் உன்னிடம் இருக்கும் இந்த நீளமான மூக்கு என்னுடையது என்று யாரேனும் சொந்தம் கொண்டாடினால் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

ஜீனோம் வகைப்பாட்டுத் திட்டங்கள்

ஒரு மனிதனின் ஜீனோம்களை வரிசைப்படுத்தி, அதனை ஒரு அடிப்படை முன்மாதிரியாக வைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் ஜீனோம்களும் வெவ்வேறு வகையானது. ஒரே மாதிரியான இரட்டைகள் இதற்கு விதிவிலக்கு இரு வெவ்வேறு மனிதர்களின் ஜீனோம்களைக் கொடுத்து வித்தியாசங்களை கண்டுபிடி என்றால் சுமார் 60 லட்சம் வித்தியாசங்கள் கண்டுபிடிக்க லாம். எனவே பல தரப்பட்ட மனிதர்களின் ஜீனோமை வரிசைப்படுத்தி ஒரு ஜீனோம் தரவு புலம் அல்லது தரவுதளம் உஹற்ஹ க்ஷஹள்ங் உருவாக்குவது அவசியம். தரவு தளம் பெருமளவி லான மரபணுத் தகவல்கள் அல்லது பதிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் தனி மனித குணாதிசயங்கள், நோய்களின் வரலாறு ஆகியவற்றை உட்கொண்டதாக இருக்க வேண்டும்

இண்டர்நேஷனல் ரிசர்ச் கன்சார்டியம் எனும் அமைப்பு பல்வேறு மனிதர்களின் ஜீனோம் வரிசைப் படுத்த 1000 ஜீனோமை திட்டத்தை 2008-இல் தொடங்கியது, மருத்துவத்திற்கு உதவும் வகையில், மிக விரிவாக பல்வேறு மனிதர்களின் ஜீனோம் வரிசைகளை உருவாக்குவது இதன் நோக்கம். உலக அளவில் விஞ்ஞான சமூகத்திற்கு பயன்படும் தரவு தளம் உருவாக்க முனைந்துள்ளனர்.

உலகிலேயே முதன் முதலாக, இந்தியாவில் பேராசிரியர் சமீர் பிரம்மச்சாரி தலைமையில், இந்தியாவில் உள்ள பல்வேறு இன மனித ஜீனோம் வரைவு உண்டாக்கி, வெற்றி கண்டுள்ளனர். இந்தப் பணியில் 12-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களும் சுமார் 150 விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர். உயிரி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பலதரப்பட்ட 1000 பேர்களின் ஜீனோமை வரிசைப்படுத்துவது இதன் பணி. நம்நாடு உலக மக்கள்தொகையில் 1/6 பங்கு பலதரப்பட்ட மக்களை பெற்றிருப்பதினால் இந்த வெற்றியானது முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல சீனா 100 மனிதர்களின் ஜீனோமை வரிசைப்படுத்த யான் ஹீவாங் திட்டத்தை 2007-இல் தொடங்கியது.

எதிர்நோக்கியுள்ள சவால்கள்

இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் வளரும் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பாரம்பரிய நோய்களை குணப்படுத்த முடியும், கழிவுநீரை சுத்தப்படுத்தும் பாக்டீரியாவை உருவாக்கி கழிவுநீரிலிருந்து நன்னீர் உண்டாக்கலாம். வாயு மண்டலத்தில் உள்ள கார்பன்- டை- ஆக்ஸைடை எடுத்து அதனை எரிபொருளாக மாற்றும் பாக்டீரியாவை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவை அனைத்திலும் வெற்றி கிட்டலாம். இருந்தபோதிலும், முதலில் நோய்களை குணப் படுத்துவதில் புரட்சி உண்டாக்கட்டும். அதன் பின் மற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்த லாம் என்கின்றனர் மற்றொரு பிரிவினர். பயோ டெக்னாலஜி கம்பெனிகள் மனித மரபணு தகவல்களை விற்பது லாபகரமாக இருக்குமென எண்ணி மும்முர மாக செயல்படுகின்றன. கிரைக்வென்டர் தனியார் கம்பெனிகள் இதைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும் என எச்சரிக்கிறார். ஜீனோம் வரிசைப் படுத்தல் வழி குறைபாடுள்ள ஜீன்களை அறிந்து, அதனை களைவது மட்டுமல்ல அதன் நோக்கம் திறமை வாய்ந்த ஜீனோம்களை அறிவதும் கூட, அவ்வாறு செய்யும்போது மனிதனின் திறமையற்ற ஜீன்களை களைய முனையும் விஞ்ஞான உலகம். இதனால் மனிதனின் உண்மையான பிறப்பு என்பது குழிதோண்டி புதைக்கப்படும். எதிர்காலத்தில் அசல் மனிதர்கள் இருக்கமாட்டார்கள் நகல் மனிதர்களே நடமாடுவார்கள். எப்படி இருப்பினும் இந்த ஆய்வுகள் அனைத்தும் மனிதகுலத்தின் நன்மைக்கு செய்யப்படும் புரட்சி என்பதில் மகிழ்ச்சியடைவோம்.

ஒரே இடத்தில் அனைத்து டிக்ஷனரிகளும்

ஒரே இடத்தில் அனைத்து டிக்ஷனரிகளும்:
ஆங்கிலச் சொல் ஒன்றின் பொருள் வேண்டுமா? இணையத்தில் பல டிக்ஷனரிகள் உள்ளன. இவற்றின் தளங்கள் சென்று தேடலாம். ஆனால் அதற்குப் பதிலாக, ஒரே முயற்சியில் அனைத்து டிக்ஷனரிகளும் தரும் பொருள் வேண்டும் என்றால், கூகுள் செல்லலாம். கூகுள் சர்ச் பாக்ஸில் define:WORD என்ற பார்மட்டில் அந்த சொல்லை டைப் செய்திடவும். இதில் WORD என்ற இடத்தில் நீங்கள் பொருள் தேடும் சொல்லை டைப் செய்திட வேண்டும். உடன் கூகுள் ஆன்லைனில் உள்ள அனைத்து டிக்ஷனரிகளிலும் இந்த சொல்லுக்குப் பொருள் தேடி வரிசையாகத் தரும்.
இணைய வேகம் அறிய:
உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்து காட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
சீதோஷ்ண நிலை அறிய:
ஒரு ஊரில் அப்போதைய சீதோஷ்ண நிலை எப்படி உள்ளது என்று எதன் வழி அறியலாம்? அங்கே மழை பெய்கிறதா? பனி கொட்டுகிறதா? வெயில் எவ்வளவு? அந்த ஊரில் உள்ள ஒருவருக்கு போன் போட்டுப் பேசி அறியலாம். பாரிஸ், வாஷிங்டன் போன்ற தொலை தூர நகரங்களில் நிலவும் வானிலை குறித்து அறிய என்ன செய்யலாம்? இங்கு கூகுள் நமக்கு உதவுகிறது. சீதோஷ்ண நிலை குறித்துத் தகவல் தரும் இணைய தளங்களைத் தேடிப் பின் நீங்கள் தேடும் ஊரின் நிலை குறித்து தேடி அறியலாம். இந்த சுற்று வேலை எல்லாம் வேண்டாம். கூகுள் சர்ச் பாக்ஸில் இதனை சற்று விளக்கமாகவே பெறலாம். மதுரை சீதோஷ்ண நிலை தெரிய வேண்டுமா? Madurai weather என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடன் கிடைக்கும் திரையில் மதுரையின் அப்போதைய சீதோஷ்ண நிலை செல்சியஸில் காட்டப்படும். அப்போதைய மேகக் கூட்டம் எப்படி? காற்று எப்படி வீசுகிறது. அதன் ஈரப்பதம் என்ன? என்றெல்லாம் காட்டப்படும். பின் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த அளவில் சீதோஷ்ண நிலை இருக்கும் என்று காட்டப்படும்.

குழந்தைகளுக்கும் அவசியம் உடற்பயிற்சி !

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, எல்லா துறைகளும் சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு, சம்பளம், சந்தர்ப்பங்கள், பொருளாதாரம் என, எதிலும் ஏற்றம் காணப்படுகிறது. எனவே, ஆரோக்கியத்தில் மக்கள் கவனம் செலுத்தும் நேரம் வந்து விட்டது. உடற்பயிற்சி செய்வது ஒன்றே, ஆரோக்கியத்திற்கான சிறந்த வழி. “உடற்பயிற்சியை எப்படி துவங்குவது. 100 மீட்டர் எல்லாம் என்னால் நடக்க முடியாது’ என, மக்கள் சொல்வது தெரிகிறது. சிறு வயது முதலே, நடைபயிற்சியை துவங்க வேண்டும். “என் குழந்தைகள் படிப்பில் மும்முரமாக உள்ளனர்’ என்பதும் என் காதில் விழுகிறது. உடலில் சக்தியும், ஆரோக்கியமும் இருந்தால் தான், வாழ்க்கையை நல்ல முறையில் அனுபவிக்க முடியும். இந்த இரண்டு விஷயங்களையும் பணம் கொடுத்து வாங்க முடியாது. உங்கள் உழைப்பு தேவை. வீட்டுக்கு வெளியில் நடைபயிற்சி துவக்குங்கள். வீட்டைச் சுற்றியே அது அமைந்து விட்டால், தொடர்ந்து நடக்க முயல்வீர்கள். உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நடக்கலாம். முதலில் 15 நிமிடம்; பின், மேலும் 10 நிமிடத்தை கூட்டிக் கொள்ளுங்கள். பின், மெதுவாக ஒரு மணி நேரம் நடக்க துவங்குங்கள். தினமும் 4 – 5 கி.மீ., நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். பின், மெதுவான ஓட்டத்தை துவக்கலாம். வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு, உங்கள் வேகத்தைக் கூட்டிக் கொள்ளலாம். பின், மெதுவாக 10 நிமிடம் நடை; மீண்டும் ஓட்டம். இது போன்று ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் செய்து கொள்ளுங்கள். வாரத்திற்கு 3 – 4 நாட்களும், நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று, நான்கைந்து ஆண்டுகளாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பாத்ரூம் செருப்பைப் போட்டு நடை பயிலக் கூடாது. காலுக்கேற்ற ஷூ அணிந்து நடக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை நடைபயிற்சி மேற்கொண்டால், ஆரோக்கியம் இன்னும் நல்ல முறையில் செழிக்கும். ஓட்டப் பயிற்சியின் போது பெறும் ஆரோக்கியம் இதில் கிடைக்காது எனினும், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தைப் பேணலாம். நடை பயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ, அதற்கேற்ற சரியான உடையை அணிவதும் அவசியம். முந்தைய கட்டுரைகளில் கூறியது போல், ஓட்டப் பந்தய வீரர்கள் அணியும் பருத்தியாலான சாக்ஸ், உடைகள் அணிவது அவசியம். தசையை பலப்படுத்தும் உடற்பயிற்சிகளும் செய்தால், மூட்டு இணைப்புகள் உட்பட பல உறுப்புகள் நல்ல நிலையில் இயங்கும். ஓட்டப் பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை இடுப்பு சதையைக் குறைக்கவும், ஒட்டுமொத்த உடல் எடையைக் குறைக்கவும் உதவும். இடுப்பு வளைவை சீராக்கி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம், எலும்பு முறிவு, மனநலம் பாதித்தல் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மையும் “டாட்டா’ சொல்லி விடும். குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரம் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். அதிக போக்குவரத்து, பூங்காக்கள் இல்லாமை ஆகிய காரணங்களால், தற்போது இது சாத்தியமில்லை. எனவே அவர்கள், “டிவி’ முன் அமர்ந்து விடுகின்றனர். “டிவி’யில் வேகமாக நகரும் காட்சிகள், குழந்தைகளின் மூளையில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதால், அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. பல பள்ளிகள், விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே தனியார் விளையாட்டுப் பயிற்சிக் கூடத்தில் குழந்தைகளை சேர்க்க வேண்டியுள்ளது. இதற்கு, அதிகப் பணம் செலவாகிறது. எனவே, குழந்தைகள் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போதே, தினமும் அரை மணி நேரம் ஓட்டப் பயிற்சி செய்ய வைப்பது நலம்.

ரூ.70 லட்சம் கோடி கறுப்புப்பணம் கைமாறியது எப்படி?

இந்தியாவில் வாழும் பெரும் பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், மாபியா கூட்டாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தை, வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். சுவிட்சர்லாந்து, ஜெர்மன் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.

“வெளிநாட்டு வங்கிகளில் 70 லட்சம் கோடி ரூபாய், இந்தியர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் கணக்கை காட்ட முடியாது’ என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்நிலையில், கறுப்புப்பணம் எப்படி கைமாறுகிறது; இதில், யார், யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து விசாரித்தால், தலை கிறு கிறுக்கிறது. ஏனெனில், அந்தளவிற்கு, “ஹைடெக்’ முறையிலும், பல்வேறு “குறியீடுகள்’ மூலமும் இந்த தொழில் நடக்கிறது.

இது குறித்த பரபரப்பு தகவல்கள்:வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்ய இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான ஏஜன்டுகள் கள்ளத்தனமாக செயல்படுகின்றனர். இந்திய ஏஜன்டுகள் பெரும்பாலும் ஹவாலா மோசடி செய்யும் தொழிலில் கை தேர்ந்தவர்கள். இவர்கள், சென்னை, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து இயங்குகின்றனர்.இதேபோல், கேரள மாநிலம் கண்ணூர், பாலக்காடு, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் ஹவாலா ஏஜன்டுகள் பெருமளவில் உள்ளனர். வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்ய விரும்புவோர், முதலில் மாநிலத்தில் உள்ள சப்-ஏஜன்டுகள் மூலம், மெயின் ஏஜன்டை பிடித்து பணம் கொடுக்கின்றனர். இவர்கள், வெளிநாடுகளில் உள்ள தங்கள் ஏஜன்டுகளுக்கு தகவல் அளித்து, எவ்வளவு பணம், எந்த வங்கியில் கட்ட வேண்டும் என தெரிவிப்பர்.அதன்படி, அவர்கள் அங்கே சம்பந்தப்பட்ட வங்கியில் பணத்தை முதலீடு செய்வர். வெளிநாட்டு வங்கிகளின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பிரதிநிதிகள், வெளிநாட்டில் இருக்கும் இந்திய ஏஜன்டுகளுக்கு, முதலீட்டு தொகைக்கு ஏற்ப அதிக அளவு கமிஷன் தருகின்றனர்.

இந்தியாவில் பணம் வாங்கிய ஏஜன்ட், வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் உள்ளவர்களுக்கு தர வேண்டிய பணத்தை, வெளிநாட்டு ஏஜன்டுகளின் கட்டளைக்கு ஏற்ப இங்கேயே பிரித்து கொடுக்கிறார். இம்முறை “உண்டியல்’ என்ற ரகசிய பெயரால் அழைக்கப்படுகிறது. இதில், பெரும்பாலும் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு சென்று பணத்தை பத்திரமாக சப்ளை செய்தால், 1,000 ரூபாய் முதல் 1,500 வரை கமிஷன் தரப்படுகிறது. ரயில், பஸ்களில் பயணித்து இவர்கள் ரொக்கப்பணத்தை சப்ளை செய்கின்றனர். பண சப்ளையின் போது, கொள்ளையர்களிடமோ, போலீஸ், உளவுத்துறை, லஞ்ச ஒழிப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையிடம் மாட்டினால் பணத்தை அனாதையாக விட்டு, தப்பி விடுவர்.இந்த ஏஜன்டுகள் “குருவிகள்’ என ரகசிய குறியீட்டுடன் அழைக்கப்படுகின்றனர். தற்போது கூரியர் மேன், பார்சல் பாய் என்றெல்லாம் புதிய, புதிய சங்கேத பெயர்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். பண பறிமாற்றத்தில் “குருவிகள்’ முகவரி மாற்றி பணத்தை தராமல் இருக்க, சிறிய கைக்குட்டை, டோக்கன், மொபைல் எண், வித விதமான பொம்மைகள் என பலவற்றை பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டில் பணம் கட்டுபவருக்கு ஒரு டோக்கன் அல்லது ரகசிய அடையாளம் கொண்ட பொருள் தரப்படும்.

அந்தப் பொருள், கூரியர் மூலம் இந்தியாவில் பணம் பெறக்கூடியவருக்கு அனுப்பப்படும். அதேநேரம் அதேபோன்ற பொருள் அல்லது ரகசிய குறியீட்டு எண், இந்தியாவில் பணம் சப்ளை செய்யும் “குருவிகளுக்கும்’ தரப்படும்.”குருவிகள்’ பண சப்ளை செய்யும் முகவரிக்கு சென்று, அவர்களிடம் இருக்கும் ரகசிய அடையாள பொருள் அல்லது எண்ணை சரிபார்த்து பணம் தருவர். இந்த முறை பல ஆண்டுகளாக இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது, மொபைல் போன் வசதி வந்து விட்டதால், மொபைல் எண் அடிப்படையில் மிக சுலபமாக பணம் சப்ளை செய்யப்படுகிறது.வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிய பணத்தை மொத்தமாக கொண்டு வருவதற்கு, அன்னிய முதலீட்டு முறையும், தொண்டு நிறுவனங்கள் வழியாகவும், தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கி, சுங்கத்துறையை ஏமாற்றியும் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர்.

தாராளமயமாக்கல், அன்னிய முதலீடு, வெளிநாட்டு இந்தியருக்கு வரிச்சலுகை போன்ற மத்திய அரசின் பல சலுகைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுவதை விட, ஹவாலா, கறுப்புப்பண முதலைகளுக்கு மிக எளிதாக பயன்படுகிறது. இது மட்டுமின்றி, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு சென்று வரும் இந்தியர்கள் கொண்டு வரும் வெளிநாட்டு கரன்சி, விமான நிலையத்திலேயே சட்ட விரோதமாக இந்திய பணமாக மாறி விடும்.இந்தியாவில் கறுப்புப் பண ஏஜன்டுகளாக இருப்போர், விமான நிலையங்களில் தங்களது ஆட்களை இந்திய பணக்கட்டுடன் நிறுத்தி வைத்து, வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவோருக்கு, கூடுதல் விலை கொடுத்து இந்திய பணத்தால் அவற்றை வாங்கி விடுவர். இவ்வாறு பெறப்படும் பணம் மிக எளிதாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது.

இந்த ஹவாலா மோசடி, சென்னை, மும்பை, கொச்சி விமான நிலையங்களில் போலீஸ், சுங்கத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது. இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணம், நல்ல பணமாக (ஒயிட் மணி) தொழில் துவங்க வரும் வெளிநாட்டினர் வழியே ஏஜன்டுகள் மூலம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதேபோல், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அந்தமான் வழியே பணத்தை கொண்டு வர சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர் (என்.ஆர்.ஐ.,) வங்கிக் கணக்கு வழியிலும் கறுப்புப்பணம் பெருமளவு கொண்டு வரப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.இப்படி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர முடியுமா? முடியாதா, இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா, எடுக்காதா என்பதைப் பற்றி ஆங்காங்கே பட்டிமன்றங்கள் நடத்தாத குறையாக விவாதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடுகளில் முடங்கும் பணத்திற்கு இந்தியாவில் வரிச்சலுகை வழங்கி, அவற்றை இந்தியாவின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெளிநாட்டு பண வரவு சட்ட திருத்தத்தால் மோசடி : வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை நல்ல பணமாக கொண்டு வருவதில், தொண்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டு பணத்தை கொண்டு வர விரும்பும் தொண்டு நிறுவனங்கள், தங்களது தொண்டுகளை காட்டி, வெளிநாட்டு பணம் பெறுவதற்கான உரிமத்தை பெறுகின்றன. இந்த எண் பெற்றால், எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும், தடையின்றி, வரியின்றி கொண்டு வர முடியும். ஆனால், தொண்டு நிறுவனங்கள் உண்மையானவையா என இந்திய உளவுப்பிரிவான “ரா’ விசாரித்து அனுமதி தரும்.எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், “பாரின் கான்ட்ரிபியூட்டட் ரெகுலேஷன் ஆக்ட்’ என்ற வெளிநாட்டு பணப்பங்கு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தடையில்லா எண் வழங்கும் முறை மாவட்ட கலெக்டரின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், சில போலியான தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்களை வசப்படுத்தி தடையில்லா எண் பெற்று, வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களின் கறுப்புப் பணத்தை நன்கொடை என்ற பெயரில் கொண்டுவந்து, பின் கமிஷன் பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கின்றன.இதை “ரா’ அதிகாரிகள் கண்டுபிடித்து, தடையில்லா எண்ணை ரத்து செய்ய முயற்சித்தால், கோர்ட் மூலமே ரத்து செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் கறுப்புப்பண நடமாட்டத்தை அரசு நினைத்தால் மட்டுமே கடுமையான சட்ட திட்டத்தால் தடுக்க முடியும் என்பதே உண்மை.

 

டிஜிட்டல் அடிமைகளா நாம் ?

வர்த்தகம், விளம்பரம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. நம்முடைய கம்ப்யூட்டர் இயங்காமல் போனாலோ, இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் போனாலோ, ஒரு வித பதற்றம் நம்மைத் தொத்திக் கொள்கிறது. இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு தகவல் அல்ல. பல ஆய்வு நிறுவனங்கள் எடுத்த கணிப்புகளின் அடிப்படையில் எடுத்த முடிவுகளே.
இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், மக்களிடம் இன்னமும் தொலைக்காட்சிப் பெட்டியில் காட்டப்படும் விளம்பரங்களின் ஆதிக்கமே அதிகமாயுள்ளன. இருந்தாலும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன. தற்போது டிஜிட்டல் மீடியா வழி விளம்பரம் ரூ.1,000 கோடி அளவில் இருந்து வருகிறது. இது நடப்பு 2011 ஆம் ஆண்டில் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,600 கோடி வரையில் உயரும் வாய்ப்பு உள்ளது. இன்டர்நெட் விளம்பரத்தினைப் பொறுத்தவரை நான்கு விதமாக கிடைக்கிறது. டிஸ்பிளே விளம்பரம், சோஷியல் நெட்வொர்க் மீடியா விளம்பரம், தேடுதல் சாதன விளம்பரம் மற்றும் மொபைல் விளம்பரம் என நான்கு பிரிவுகளாக இதனைப் பார்க்கலாம். தற்போது ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்து, அதன் பயன்பாடு அதிக மக்களைச் சென்றடைவதால், மொபைல் வழி விளம்பரம் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது 30% வளர்ச்சியினைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ ப்ராஸ்பெக்ட் என்னும் நிறுவனம் இது குறித்து மேற்கொண்ட ஆய்வின் இறுதியில், இந்தியாவில் இணைய தேடல்களை மேற்கொள்பவர்கள் குறித்த்டு கீழ்க்காணும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இன்டர்நெட் பார்ப்பவர்களில், 82% பேர், நாளொன்றுக்கு மூன்று முறை இணையத்தில் தேடலை மேற்கொள்கின்றனர். இது மற்ற ஆசிய பசிபிக் நாடுகளில் 77.4% ஆக உள்ளது.
92% பேர் நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு முறை தேடல் சாதனம் பயன்படுத்துகின்றனர்.
சென்ற 2010 ஆம் ஆண்டில் தேடல் பயன்படுத்துவது 93.6% பேருக்கு ஒரு முக்கிய பணியாக இருந்துள்ளது. மொபைல் பயன்படுத்து பவர்களில் தேடலை மேற்கொள்பவர்கள் 90% ஆவார்கள். இவர்களில் 67% பேர் இதனை மிக முக்கியமாக மேற்கொள் கின்றனர்.
இணையத்தில் தேடுகையில், 89.4% பேர் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்துவதனையே அதிகம் விரும்புகின்றனர். அடுத்தபடியாக, யாஹூ தேடல் சாதனத்தினை 7.5% பேரும், பிங் சாதனத்தினை 2.4% பேரும் பயன்படுத்துகின்றனர்.
சோஷியல் நெட்வொர்க் தளங்களை, மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவிலும் இளைஞர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைப்பு, இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 67% பேர் சோஷியல் நெட்வொர்க் தளங்களைப் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதிக அளவில் மக்கள் பார்க்கும் முதல் 20 தளங்களில், 7 தளங்கள் சமுதாய இணைய தளங்களாக உள்ளன.
இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இணைய விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன. கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான விளம்பரங்கள் 78.4%, கல்வி நிலையங்கள் குறித்து 71.8%, பொழுது போக்கு 65.5% என்ற அளவில் உள்ளன. தாங்கள் வாங்கிட விரும்பும் பொருட்களை, ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதற்காக 80% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். தேடல் மூலமாகக் கண்டறிந்த தளங்கள் வழியாகப் பொருட்கள் வாங்குவதையே பெரும்பாலானவர்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இணைய வழி வர்த்தகத்தில் மக்கள் அதிகம் நம்பிக்கை வைப்பது நிறுவனங்கள் பெற்ற பெயர் அடிப்படையில் தான். இந்த வகையில் மக்களின் வர்த்தக அடிப்படையை இணையம் மாற்றியுள்ளது.

அப்டேட் வழியில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது. இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.
சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் (Steve Lipner) – உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார் – பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது. அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ். இந்த வைரஸ், விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும். பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடும். பின்னர் இதே தகவல்கள் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படும். இந்த வைரஸ் வரும் மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமைதான் வெளியிடப்படும். இந்த அஞ்சல் எந்த நாளிலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரலாம். மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும். மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும். எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.