Monthly Archives: பிப்ரவரி, 2011

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…!

தலைப்பு என்னவோ உண்மை தான். ஆனால், அதை எல்லாம் தாண்டி அசாதாரணமானது, தி.மு.க., – பா.ம.க., உறவு. “துரோகம்… துரோகம்… பச்சைத் துரோகம்’ என, தி.மு.க., தலைவரை விமர்சித்த அதே வாய், இன்று, “மீண்டும் மகத்தான வெற்றி பெற்று ஆறாவது முறை தமிழக முதல்வராக வருவார் கருணாநிதி’ என்கிறது. இரு தரப்பு விமர்சனங்கள் ஏராளம். அவற்றில், நினைவில் நின்றவை மட்டும் இங்கே.

* ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார். – ராமதாஸ், 25.3.2009

* இலங்கைத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி மாற்றி மாற்றி பேசுகிறார். இருப்பது ஓர் உயிர். அது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போகட்டும் என்றார். பின்னர், “மத்திய அரசு நினைத்தால், இலங்கைத் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். இல்லையென்றால், இங்குள்ள தமிழர்களும் சாக வேண்டியது தான்’ என்றார். அதிலிருந்தும் பல்டியடித்து, “இலங்கைத் தமிழர் பிரச்னையில் இதை விட அதிகமாக செய்வதற்கு எதுவும் இல்லை’ என்கிறார். – ராமதாஸ், 11.4.2009

* இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறும் ராமதாஸ், மத்திய அமைச்சரவையில் தன் மகனை இன்னும் நீடிக்கச் செய்வது ஏன்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு இதையெல்லாம் பேசியிருந்தால், ராமதாஸ் நேர்மையானவர் என கருதலாம். – கருணாநிதி, 16.4.2009

* தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முன் அமர்ந்து, இலங்கைப் போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். மாறாக, பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதெல்லாம் கண் துடைப்பு வேலை. – அன்புமணி, 22.4.2009

* லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 40க்கு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலிலும், தி.மு.க., ஆட்சியிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். – ராமதாஸ், 27.4.2009

* பஸ் கட்டணக் குறைப்பு என்பது, இதற்கு முன் கேள்விப்பட்டிராதது. லோக்சபா தேர்தலை ஒட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதியும், போக்குவரத்து அமைச்சர் நேருவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். – ராமதாஸ், 3.5.2009

* லோக்சபா தேர்தல் வருவதால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களை ராமதாஸ் ஏமாற்றுகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். – ஸ்டாலின், 7.5.2009

* டாஸ்மாக் நிறுவனம், 12,300 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குவதாக, தி.மு.க., அரசு சொல்கிறது. அது, ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம். – ராமதாஸ், 9.1.2010

* குடிசை மாற்று வாரியம் என்பது, குடிசைகளை ஒழித்து, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, 1967ம் ஆண்டு தி.மு.க., அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், சென்னை இன்னமும் குடிசைகளின் நகரமாகத் தான் இருக்கிறது. – ராமதாஸ், 9.1.2010

* தி.மு.க., – அ.தி.மு.க., என எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லாததால், விரைவில் பா.ம.க., என்ற கட்சியே காணாமல் போய்விடும். – ஸ்டாலின், 19.1.2010

* வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வினியோகிக்கும்போது தி.மு.க.,வினர் கையும், களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். – ராமதாஸ், 27.2.2010

* தி.மு.க.,வுடனான கூட்டணியில் மீண்டும் இணைய நாங்கள் விரும்புகிறோம்; ராஜ்யசபா சீட் ஒன்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். – ராமதாஸ், கடிதம்

* வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தான் ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். – தி.மு.க., தீர்மானம், 30.5.2010

* தன்னைத் தானே சமூக நீதி போராளி என அழைத்துக்கொள்ளும் கருணாநிதி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தயாராக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. – ராமதாஸ், 26.8.2010

* புராணங்களில் குரு என்றழைக்கப்பட்ட சுக்கிராச்சாரியார், நல்லவற்றை நடக்கவிடாமல் தடுத்து வந்தார். (காடுவெட்டி ) குரு என்றால் அது தான் அர்த்தம். – கருணாநிதி, 5.9.2010

* இந்தியாவிலேயே அதிகம் இளம் விதவைகள் இருப்பது தமிழகத்தில் தான். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வரை இந்நிலை தான் தொடரும். – ராமதாஸ், 8.1.2011

* காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. – கருணாநிதி, 30.1.2011

* கூட்டணி குறித்து பா.ம.க., இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழைப்பு வருகிறது. – ராமதாஸ், 30.1.2011

* பா.ம.க., இருக்கிறது என்று நாங்கள் சொன்னபோது, அவர் மறுத்தார். இனி, கூட்டணி பற்றிய கேள்விக்கே இடமில்லை. – கருணாநிதி, 1.2.2011

* பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க சோனியா விரும்பவில்லை. டில்லியில் அவர் என்னிடம், “எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது’ என்றார். – கருணாநிதி, 3.2.2011

* தி.மு.க., – பா.ம.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். – ராமதாஸ், 17.2.2011

நன்றி-தினமலர்

கோபத்தில் காங்கிரஸ்; தயக்கத்தில் திமுக!

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துத் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுக தரப்பினருடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில், பரஸ்பரம் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிப்பதற்குப் பதிலாகச் சந்தேகமும், வெறுப்பும் ஏற்பட்டிருப்பதுதான் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றது முதலே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை திமுக தலைமை எதிர்கொள்வதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில், ஐவர் குழுவின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி. தங்கபாலு, காங்கிரஸ் பத்திரிகைத் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகிய மூவர் மட்டும்தான் முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த திமுகவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும், மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் பேச்சுவார்த்தைக்கு வந்தது முதலாவது அதிர்ச்சியாக இருந்தது.பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ப. சிதம்பரம் தனது கையில் பேசவேண்டிய விஷயங்கள் பற்றிய குறிப்புடன் வந்திருந்தது திமுக அணி சார்பில் வந்திருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரை முருகன், அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி.பேச்சுவார்த்தைக்குப் புறப்படுவதற்கு முன்பே சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியது ஐவர் குழு. பெருவாரியான தொண்டர்களின் மனோநிலை இந்த முறை கூட்டணி ஆட்சிக்கான உத்தரவாதம் இல்லாமல் காங்கிரஸ் தேர்தல் களத்தில் இறங்கக்கூடாது என்பதுதான்.””நாங்கள் ஏற்கெனவே கூட்டணியில் இருக்கிறோம். அன்னை சோனியா காந்தியே “எதிரிகளை மன்னிக்கலாம், ஆனால் துரோகிகளை மன்னிக்கக் கூடாது’ என்று தன்னிடம் கூறியதாகக் கூறிய முதல்வர் கருணாநிதி, காங்கிரஸூடனான கூட்டணியை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதானே பாமக-வைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்க வேண்டும்?” என்பது காங்கிரஸ் தரப்பில் பரவலாக எழுப்பப்படும் கேள்வி.””31 இடங்களை ஒதுக்குவது என்றால், அது ஏறத்தாழ 12% வாக்குகளுக்குச் சமம். பாட்டாளி மக்கள் கட்சிக்கு அவ்வளவு வாக்குகள் இருக்கிறதா?” என்பது இன்னொரு தொண்டரின் ஆவேசக் கேள்வி. இந்த மனக்குறைகளை உள்ளடக்கிய நிலையில்தான் ஐவர் குழு, திமுக தரப்பை சந்தித்துத் தனது கோரிக்கைகளைப் பட்டியலிட்டது.234 தொகுதிகளில் திமுக குறைந்தது 140 தொகுதிகளிலாவது போட்டியிடுவது என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மீதமுள்ள 94 இடங்களில் பாமகவுக்கு 31 இடங்களையும் ஒதுக்கிவிட்ட நிலையில், இருப்பது வெறும் 63 இடங்கள்தான். கடந்த முறை அதிமுக கூட்டணியில் 9 இடங்களைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்கும் 15 இடங்கள் இல்லாவிட்டாலும் குறைந்தது 10 இடங்களை ஒதுக்கினாலும் மீதமிருப்பது 53 இடங்கள் மட்டுமே. கடந்தமுறை 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதலாக 5 இடங்களை அளித்து 53 இடங்களில் போட்டியிடச் செய்வதுதான் திமுகவின் திட்டம் என்று, திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகள் என்பது 5 மக்களவைத் தொகுதிக்குச் சமம். கடந்த மக்களவைத் தேர்தலின் அடிப்படையில் பார்த்தால், 15 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸூக்கு 90 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கைப்படி, “”ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 இடங்கள் என்று பெற்றுக்கொண்டாலும், காங்கிரஸூக்கு 78 இடங்கள் தரப்பட வேண்டும் என்பதுதானே நியாயம்?”கடந்த தேர்தலில் இருந்த நிலையில் திமுக இப்போது இல்லை. “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் ஆளும்கட்சியின் ஒரே கவசம் காங்கிரஸ் மட்டும்தான். “”இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும், நாங்கள் கூட்டணிக் கட்சி என்பதால் “கை’ கொடுக்கும்போது, அதற்குத் தகுந்தாற்போல இடங்களையும் திமுக தரத்தானே வேண்டும்?” என்கிற காங்கிரஸின் கோரிக்கை திமுக தலைமையை எரிச்சலூட்டாமல் என்ன செய்யும்?””ஒவ்வொரு முறையும் ஆட்சியைக் கைப்பற்றவும், குறைந்தபட்சம் ஆட்சியில் பங்கு பெற்று அதன் மூலம் கட்சியைத் தமிழகத்தில் மீண்டும் பலப்படுத்தவும் கிடைத்த வாய்ப்புகளை, எங்கள் தலைமை நழுவவிட்டு விட்டது. இந்த முறையும் எங்களது முதுகில் ஏறி அவர்கள் வெற்றிக்கனியை எட்டிப்பிடித்துவிட்டு, எங்களைத் தோளில் சவாரி செய்கிறோம் என்று நையாண்டி பேச விடுவதாக இல்லை” என்பது காங்கிரஸ் தொண்டர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. தாங்கள் அதிக இடங்களில் போட்டியிடுவதும், திமுக முன்பைவிடக் குறைந்த இடங்களில் போட்டியிடுவதும்தான் கூட்டணி ஆட்சிக்கு வழிகோலும் என்கிற காங்கிரஸின் கணக்கு, திமுகவிடம் வைத்திருக்கும் கோரிக்கையில் தெரிகிறது.””வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று அறிவிப்பு. மூன்றில் ஒரு பங்கு, அதாவது 78 இடங்கள். வெற்றிபெற்று அமைச்சரவை அமைத்தால் அதிலும் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள். குறைந்தபட்ச செயல்திட்டம். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு என்று பல நிபந்தனைகளைக் காங்கிரஸ் திமுகவுக்கு விதிப்பதாகவும், இதைக் கேட்டு திமுக தரப்பு விதிர்விதிர்த்துப்போய் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.முதல்வர் கருணாநிதி தில்லி சென்று, சோனியா காந்தியைச் சந்திக்கச் சில மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதுதான் வெளியில் வந்த செய்தி. கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த ராகுல் காந்தியும் தங்களது சந்திப்பின்போது இருக்க வேண்டும் என்று சோனியா விரும்பியதுதான் இந்தக் காத்திருப்புக்குக் காரணம் என்பது பலருக்கும் தெரியாது. மேலும், காங்கிரஸின் கோரிக்கைகள் அனைத்துமே ராகுல் காந்தியின் ஒப்புதலுடன்தான் வைக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.””திமுக தரப்பு எங்களது கோரிக்கையை நிராகரிப்பதால் நஷ்டம் திமுகவுக்குத்தான். எங்களுக்கு இப்போதும் பதவி இல்லை. தனியாகப் போட்டியிட்டாலும் பதவி இல்லை, அவ்வளவுதானே. 1977-ல் நாங்கள் தனித்துப் போட்டியிட்டபோது 27 இடங்களிலும், 1989-ல் தனித்துப் போட்டியிட்டபோது 26 இடங்களிலும் வெற்றி பெற்றோம். 2001-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தமாகாவும் காங்கிரஸூமாக 30 இடங்களிலும், 2006-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது 34 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த முறை மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டாலும் ஏறத்தாழ அதே இடங்களில் வெற்றிபெற முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர் ஒருவர்.ஒருவேளை திமுக தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் தயங்காது என்று தில்லியிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளும் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமானால், அதிமுகவுடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் தேமுதிகவேகூட அந்த அணிக்கு வரக்கூடும். ஏன், அதிமுகவே, காங்கிரஸூடன் கூட்டணி ஆட்சிக்குப் பச்சைக்கொடி காட்டக்கூடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர்.””காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் சரி, அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் சரி, பரஸ்பரம் இருக்கும் நட்புறவும் தோழமையும், திமுகவுக்கும் காங்கிரஸூக்கும் கிடையாது. தலைவர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் வேண்டாவெறுப்பாகத் கைகோத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மனத்தளவில் தொண்டர்கள் அதிமுக – காங்கிரஸ் உறவைத்தான் விரும்புகிறார்கள்” என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஐந்து ஆண்டுகள் “மைனாரிட்டி’ ஆட்சி நடத்திய திமுக, காங்கிரஸூக்கு அதிக இடங்களைத் தராமல் இருக்க “சதி’ செய்கிறது என்கிற குமுறலும் கோபமும் காங்கிரஸôர் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது. காங்கிரஸ் தலைமையும் திமுகவிடம் பல பிரச்னைகளில் கோபமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், திமுக வகுக்கும் வியூகம்தான் என்ன?

நன்றி-தினமணி

சலுகைகள் நிறைந்த பட்ஜெட் தாக்கல் செய்தார் பிரணாப்: நிதி ஒதுக்கீடு தாராளம்-புதிய யுக்தி ஏராளம்

பலத்த எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்று 2011 – 2012ம் ஆண்டுக்கான மத்திய அரசு இந்தியாவின் 80 வது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இன்றைய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இந்த பட்ஜெட் அரசின் சீர்திருத்த பட்ஜெட் என்றும் பிரணாப் அவரது பணியை செவ்வனே செய்திருக்கிறார் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டியுள்ளார். அங்கன்வாடி :ஊழியர்கள் சம்பள உயர்வு, கல்விஒதுக்கீடு, விவசாயிகள் கடன் அதிகரிப்பு, நதி சீரமைப்பு திட்டம், முதியோர் பென்சன் பெறுவோர் வயது வரம்பு தளர்வு , உள்ளிட்டவை மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தும்.

இன்றைய பட்ஜெட்டிற்கு பின்னர் சென்செக்ஸ் புள்ளிகள் 500 க்கும் அதிகமாக ஏறுமுகமாக சென்று 18 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. முன்னதாக பட்ஜெட் உரையில் பிரணாப் கூறுகையில்; நாட்டில் உணவுப்பணவீக்கம், ஊழல் பிரச்னைகள் பெரும் கவலை அளிப்பதாவும், இதனை சீர்செய்ய உரிய நடவடிக்கைள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். பணவீக்கம் மெல்ல, மெல்ல சீரடையும் என உறுதியளித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவீதமாக இருக்கும் , வேளாண்வளர்ச்சி 5. 6 சதவீதமாகவும், தொழில்வளர்ச்சி8.1 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கூறினார்.

நபார்டுதிட்டத்திற்கு 3 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பதாகவும், விவசாயதுறை முன்னேற்றத்திற்கு 7 ஆயிரத்து 860 கோடி ஒதுக்கியிருப்பதாகவும், முக்கிய அம்சங்களை அறிவித்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* 2011 ல் மொத்த பொருளாதார வளர்ச்சி8.6 சதமாக இருக்கும்.

* 2011- 2012 ல் பொருளாதார வளர்ச்சி 9.1 சதமாக இருக்கும்

* உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதம் மானியம்

* விவசாயிகளுக்கு வழங்கிவரும் கடனை அதிகரிக்க முடிவு

* நாடு முழுவதும் புதிதாக 15 உணவுப்பூங்கா திறக்க முடிவு

* மண்ணெண்ணெய், உரத்திற்கு நேரடி வரி மானியம்

* வேளாண்துறையில் தனியார் முதலீடு அதிகரிப்பு

* வீட்டுக்கடன் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும்.

* பாரத்நிர்மாண் திட்டத்திற்கு 58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* கல்வி முதலீட்டு தொகை 24 சதம் உயர்த்தி நடப்பாண்டில் 52 ஆயிரத்து 57 கோடி ஒதுக்கீடு.

* அங்கன்வாடி :ஊழியர்களுக்கு 1500 லிருந்து 3 ஆயிரமாக ஊதிய உயர்வு

* சர்வசிக்ச அபியான் ( அனைவருக்கும் கல்வி ) திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை கொண்டுவர 5 அம்ச திட்டம்

* கிராமப்புற தொலை தொடர்பு வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* முதியோர் உதவி பென்சன் திட்டத்தில் வயது ( 65 ல் இருந்து 60 வயதாக ) வரம்பு தளர்வு

* உணவுப்பாதுகாப்பு திட்டம் நடப்பாண்டில் நிறைவேற்ற உறுதி

* தாக்குதலில் காயத்திற்குள்ளாகும் பாதுகாப்பு படை வீரர்களின் கருணைத்தொகை உயர்வு

* நதிகள் சீரமைப்பு செய்ய சிறப்பு திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதல் கடனுதவி.

* நக்சல் பாதிப்பு பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்த சிறப்பு ( 25 முதல் 30 கோடி வரை) திட்டம்.

* தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1. 60 லட்சத்தில் இருந்து 1. 80 லட்சமாக உயர்வு

* 80 வயதுக்கு மேல் உள்ள முதியோருக்கு ரூ. 500 உதவித்தொகை

* அடிப்படை உணவு மற்றும் எரிபொருளுக்கு சுங்கவரி, ‌சேவை வரியில் மாற்றம் இல்லை

* மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமான வரிவிதிப்பில் ( ரூ. 5 லட்சம் வரை )விதிவிலக்கு

* இரும்பு ,சிமெண்ட் உற்பத்தி வரியில் சலுகை

* சூரிய மின்சக்தி தயாரிப்புக்கான பலகை இறக்குமதி வரி ரத்து

* திரைப்படத்துறையினருக்கு சலுகை

* விமான கட்டண சேவை வரி உயர்வு

ஜம்மு காஷ்மீர் மேம்பாடுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

கம்பெனி்களுக்கான கூடுதல் வரி குறைப்பு

வெளிநாட்டினர் முதலீட்டுக்கு ஊக்குவிப்பு

எது உயர்கிறது – எது குறைகிறது ? : தங்கம், பிராண்டடு துணிமணிகள், அழகுசாதனபொருட்கள், மது வகைகள் தனியார் ஆஸ்பத்திரி கட்டணம், விமானகட்டணம், குளிர்சாதன உயர் ரக நட்சத்திர ஓட்டல் கட்டணம் ஆகியன உயருகிறது.

மொபைல்போன்கள், குளிர்சாதனபெட்டி, இரும்பு, சிமென்ட், கட்டுமானபொருட்கள், ஹோமியோபதி மருந்துகள், சில்க் துணிகள் ஆகியன விலை குறைகிறது.

அமைதி காத்த எதிர்கட்சியினர்: பிரணாப் முகர்ஜி பட்ஜெட் உரை முடியும் வரை எதிர்கட்சியினர் பெரும் அளவில் எதிர்ப்பு எதுவும் ‌தெரிவிக்கவில்லை. அனைத்து எம்.பி.,க்களும் பிரணாப்பின் அறிக்கையை கவனமாக , அமைதியாக கவனித்து கொண்டிருந்தனர்.

அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் பட்டியல்: நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இது வரை 79 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ( 26 நவ., 1947 ) , நிதி அமைச்சர் சண்முகம்ஷெட்டி ஆவார். இதனையடுத்து தொடர்ந்த ஆட்சியில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெற்றவர் மொராஜிதேசாய் . ப.சிதம்பரம், யஸ்வந்த்சின்கா, ஒய்.பி.,சவான், தேஷ்முக் ஆகியோர் 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். பிரணாப்பை பொறுத்தவரையில் அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் 6 வது முறையாகும். இந்திய வரலாற்றில் அதிகம் பட்ஜெட் போட்டவர் என்ற பட்டியலில் பிரணாப் 3 வது இடத்தை பிடித்தார்.

`பயணக் காப்பீடு’ பற்றி அறிவோம்!

`பயணக் காப்பீடு’ (டிராவல் இன்சூரன்ஸ்) பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. தெரிந்த சிலரும், `அது ஏன் வீண் செலவு?’ என்று அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

`பயணக் கட்டணம், அது இது என்று ஏற்கனவே நிறைய செலவு செய்தாகிவிட்டது. இந்நிலையில் இந்தச் செலவு வேறா? நாம்தான் பயணத்துக்கு பக்காவாகத் திட்டமிட்டிருக்கிறோமே, என்ன தவறாகப் போய்விடப் போகிறது?’ என்று பயணக் காப்பீடு பற்றி அறிந்தவர்கள் கூட அதில் கவனம் செலுத்தாது விட்டுவிடுகிறார்கள்.

ஆனால், சுற்றுலா அல்லது வேறு விஷயமாகப் பயணம் செய்யும் அனைவருக்குமே பயணக் காப்பீடு மிகவும் பயனுள்ளது. அதற்காகச் செலவழிக்கும் தொகை, பயணத்தில் நீங்கள் எதிர்பாராத பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்போது கைகொடுக்கும். குறிப்பாக நீங்கள் விடுமுறையில் வெளிநாடு சென்றிருக்கும்போது ஏதாவது `எமர்ஜென்சி’ ஏற்பட்டால் இது பயன்தரும்.

பயணம் மேற்கொள்ளும் எவரும் `பயணக் காப்பீடு’ பெறுவது என்பது நல்ல யோசனை என்கிறார்கள் ஆலோசகர்கள். இக்காப்பீட்டின் குறிக்கோள், உங்களைப் பயமுறுத்தி பாக்கெட்டை பதம் பார்ப்பது அல்ல. பயணத்தின்போது திடீரெனத் தாக்கும் பிரச்சினைகள் உங்கள் பயணத்தின் இனிமையைக் குலைத்துவிடாமல் காப்பது, பொருள் இழப்பு ஏற்படும் நிலையில் அதைக் குறைப்பது.

உள்நாட்டுப் பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் இரண்டுக்குமே காப்பீடு பெறலாம். நம் நாட்டு எல்லைக்குள் பயணம் செய்தால் உள்நாட்டுக் காப்பீடும் (டொமஸ்டிக் இன்சூரன்ஸ்), நாடு தாண்டிப் பறக்கும்போது வெளிநாட்டுக் காப்பீடும் (ஓவர்சீஸ் இன்சூரன்ஸ்) பெறலாம்.

பயணக் காப்பீட்டில் பிரதானமாக இரண்டு வகைகள் உள்ளன. அவை, நம் நாட்டுக்கு எல்லைக்குள் பயணம் செய்யும்போது பெறும் உள்நாட்டுக் காப்பீடு (டொமஸ்டிக் இன்சூரன்ஸ்), நாடு தாண்டிப் பறக்கும்போது பெறும் வெளிநாட்டுக் காப்பீடு (ஓவர்சீஸ் இன்சூரன்ஸ்) என்று கடந்த வாரம் பார்த்தோம்.

தொடர்ந்து இந்த வாரம்…

அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வோர், அனேகப் பயணக் காப்பீடு (`மல்டி டிரிப் கவர்’) பெறலாம். ஒருமுறை பெறும் இந்தக் காப்பீட்டை அதன் காலகட்டம் முடியும் வேளைகளில் புதுப்பித்துக் கொண்டால் போதும். குழுக் காப்பீடும் உண்டு. குடும்பமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அது பயனுள்ளதாக இருக்கும்.    “நிறுவனங்கள் சார்பாகவும், சுற்றுலாவாகவும் வெளிநாடு களுக்குப் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நடப்பு ஆண்டில் வெளிநாட்டுப் பயணக் காப்பீட்டுப் பிரிவு 20 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீட்டு நிறுவனங்களுக்கு லாபமளிக்கும் பிரிவு. காரணம், இதில் `கிளெய்ம்’ விகிதம் 40 சதவீதம் அளவுக்கு இருக்கிறது” என்று காப்பீட்டுத் துறையைச் சார்ந்த கரண் சோப்ரா கூறுகிறார்.

விழிப்புணர்வு வேண்டும்

பயணக் காப்பீட்டின் பயன்கள் அதிகம் என்றபோதும் அதுபற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாக உள்ளது என்று இத்துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். “பயணக் காப்பீட்டுத் துறை ஆண்டுக்காண்டு 15 சதவீதம் அளவுக்கு வளர்ந்து வருகிறது என்றபோதும், இன்றும் 5-ல் ஒருவர்தான் இக்காப்பீட்டைப் பெறுகின்றனர். பயணக் காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் நாங்கள் பிரபல கிரெடிட் கார்டு நிறுவனம், பள்ளிகள் ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக விளம்பரம் செய்து வருகிறோம்” என்று மற்றொரு முன்னணி காப்பீட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவிக்கிறார்.

“பயணக் காப்பீடு, `சீசன்’ சார்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இதைப் பெறுவோர் எண்ணிக்கை மே- ஜூலை மாத காலகட்டத்திலும், நவம்பர்- ஜனவரி மாத காலகட்டத்திலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் இந்தக் காப்பீட்டைப் பெறுவோர் குறைவாக இருப்பதற்குக் காரணம், நம் நாட்டில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மற்ற அண்டை நாடுகளுக்கும்தான் அதிகமானவர்கள் பயணம் செய்கின்றனர். அவர்களின் பயணம் சராசரியாக 4 முதல் 7 நாட்களில் முடிந்துவிடுகிறது. எனவே இந்தக் குறுகிய காலப் பயணத்துக்கு ஏன் காப்பீடு பெற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்” என்று மற்றொரு ஆலோசகர் கூறுகிறார்.

பயணக் காப்பீட்டுக்கான பிரீமியம் என்பது அதைப் பெறுபவரின் வயது, பயண கால அளவு, செல்லும் இடம், எவ்வளவு தொகைக்கு காப்பீடு பெற விரும்புகிறார் என்பன போன்ற விஷயங்களைப் பொறுத்தது.    பயணத்துக்கு `புக்’ செய்யும்போது, பயணக் காப்பீட்டுக்கும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். நீங்கள் ஒரு `டிராவல் ஏஜன்டின்’ மூலம் பயணச்சீட்டுக்கு `புக்’ செய்கிறீர்கள் என்றால், நீங்களே பயணக் காப்பீடு பாலிசியை வாங்கலாம் அல்லது `டிராவல் ஏஜன்டை’ வாங்கித் தரும்படி கூறலாம். பல்வேறு வகையான பயணிகளுக்கு அதற்கேற்ற பயணக் காப்பீடு கிடைக்கிறது. மாணவர்களின் கல்வி தொடர்பான பயணம், தொழில்ரீதியான பயணம், சுற்றுலாப் பயணம், சாகசப் பயணம் என்று ஒவ்வொன்றுக்கும் அதற்கேற்ற காப்பீட்டைப் பெறலாம்.

தற்போது பெரும்பாலும் பயணச்சீட்டுகள் `ஆன்லைன்’ மூலமாக `புக்’ செய்யப்படுகின்றன. எனவே பயண இணையதளங்கள், பயணக் காப்பீடு வழங்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகின்றன.

நீங்கள் எந்த இணையதளத்தின் வழியாக பயணச்சீட்டுக்குப் பதிவு செய்கிறீர்களோ, அதிலேயே பல்வேறு வகையான பயணக் காப்பீட்டு வாய்ப்பு விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட இணையதளம் எந்தக் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைப்புக் கொண்டிருக்கிறதோ, அந்த நிறுவனத்தின் `பாலிசி’ இருக்கும். நீங்கள் மற்ற நிறுவனங்களின் பயணக் காப்பீட்டு பாலிசிகளுடன் ஒப்பிட்டுத் தேர்வு செய்வதற்கு அங்கு வசதி இருக்காது. ஆனால் இணையதளம் மூலமாக குறிப்பிட்ட பாலிசியைத் தேர்வு செய்யும்முன் அதற்கான விதிகள், நிபந்தனைகளைப் படித்துத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் இணையதளங்கள் மூலமாகவும் நீங்கள் பயணக் காப்பீட்டைப் பெறலாம். `கிரெடிட் கார்டு’ மூலமாகவோ, `டெபிட் கார்டு’ மூலமாகவோ நீங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம். விமானத்தில் ஏறுவதற்கு முன்புகூட கட்டணத்தை செலுத்த முடியும். பயணக் காப்பீட்டை `ஏஜன்ட்’ மூலம் பெற்றாலும், `ஆன்லைன்’ மூலம் பெற்றாலும் கட்டணத்தில் எந்த வித்தியாசமும் இராது.

“பயணக் காப்பீட்டைப் பெறும்போது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், செல்லும் இடத்துக்கு ஏற்ப சரியான தொகைக்குக் காப்பீடு பெறுவது. சர்வதேசப் பயணங்களுக்கான காப்பீட்டுப் பிரிமீயம் என்பது மொத்தச் செலவில் 1 முதல் 2 சதவீதம் என்ற குறைவான அளவுதான். பல்வேறு காப்பீட்டு இணையதளங்களில் புகுந்து பார்த்தால் உங்களுக்குத் தேவையான, சரியான பயணக் காப்பீட்டை அறியலாம்” என்று ஒரு காப்பீட்டு ஆலோசகர் கூறுகி றார்.

பயணக் காப்பீட்டின் அவசியத்தை அறிந்துவிட்டீர்கள். இனி, பயணம் மேற்கொள்ளும்போது அதுகுறித்து யோசிப்பீர்கள்தானே?

பெண்களைத் தாக்கும் `நிரோடிக்!’

திருமணத்திற்கு பின்னர் பெண்களைத் தாக்கும் மனநோய்களில் முக்கியமானது நிரோடிக் அச்சம்! இந்த நோய் உள்ள பெண்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். ஆனால் மனதுக்குள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.

தினசரி வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் அச்சப்படுவார்கள். குறிப்பாக விபத்து நடந்த இடத்தை பார்க்கவோ அல்லது விபத்தில் சிக்கியவர்களின் உடலைப் பார்த்தோ மிகவும் பயப்படுவார்கள். ரத்தத்தை கண்டால் வாந்தி, மயக்கம் வரும். இதனால் உடல்ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொள்வார்கள். இதன் விளைவாக உடலில் வியர்வை, நடுக்கம், விரைவான இதயத்துடிப்பு ஆகியவை ஏற்படும். சிறுகுடல் பாதிக்கப்படும். கொந்தளிப்பான உணர்வால் மூர்ச்சை உண்டாகும்.    * இப்படி பயப்படும் பெண்கள் முதலில் வாழும் முறையை மாற்றவேண்டும். பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.

* பயப்பட வைக்கும் சூழ்நிலையை எதிர்த்து போராடும் மனநிலையை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். எதற்கும் பயப்படத் தேவை இல்லை என்று அவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

* தனிமையில் இருந்தால் பயமாக இருக்கிறது என்றால் அதை தவிர்ப்பது நல்லது. அச்சம் தரும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்ளவேண்டும்.

* பள்ளிக்கு செல்லும் குழந்தை வீடு திரும்பும் வரை பயப்படுவது, கணவரை நினைத்து கவலைப்படுவது ஆகியவை தேவையில்லாத பயம் என்பதை உணர வேண்டும்.

* எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனப்பான்மையை உருவாக்க வேண்டும். எதையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். * தினமும் யோகா, தியானம், இசை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. * மனதில் அச்சம் தோன்றும்போது ஏதாவது பாடலை பாடலாம். எப்போதும் நமக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் அச்சம் தரும் சிந்தனை குறையும்.

* இவை அனைத்தையும் விட, குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். இதனால் மனதில் அச்சம் குறையும்.

* அச்சத்தால் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும்.

அழகில் அதிரடி

பெண்களின் ஆடை – அலங்கார துறைகளில் கடந்த சில ஆண்டுகளில் அதிரடியான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பது, அழகுக் கலைத்துறை.

பெட்டிக் கடைகள்போல் நகரப் பகுதிகளில் ஒதுங்கிக் கிடந்த பிட்டி பார்லர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் சாயலில் கம்பீரமாக உயர்ந்து விட்டன. வீடுகளில் அமர்ந்துகொண்டு எதை தேய்த்தால் அழகு கூடும் என்று சிந்தித்துக்கொண்டிருந்த பெண்கள், `நாமும் அதன் உள்ளே சென்றுதான் பார்ப்போமே!’ என்று புகுந்து செல்ல தயாரானார்கள்!

ஆனால் தொடக்கத்தில் அது அவர்களுக்கு தயக்கத்தை தான் தந்தது. விதவிதமாக வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்கள் அங்கே குவித்துவைக்கப்பட்டிருந்தன. பெண்களுக்கு கூந்தலை வெட்டி அலங்காரம் செய்ய கத்திரியோடு ஆண்கள் காத்திருந்தார்கள். `இது நமக்கு சரிப்படுமா?` என்று தயங்கினார்கள்.

இன்று அந்த தயக்கங்கள் போன இடம் தெரியவில்லை. அதனால் அழகு நிலையங்கள் அதிரடியாக மாறிப்போய்விட்டன. பெரும்பாலான இடங்களில் ஆண்கள்தான், பெண்களுக்கு கூந்தலை வெட்டி அலங்காரம் செய்கிறார்கள். அவர்கள் கைகளில் சாதாரணமாக தென்பட்ட கத்திரி, சீப்புகள் இப்போது வித விதமாக மினுமினுக்கின்றன. கேட்டால் அதற்கே ஆயிரக் க ணக்கில் விலை சொல்கிறார்கள். நவீன கருவிகள் நாள்தோறும் வந்து இறங்குகின்றன. சொகுசு படுக்கைகள், இருக்கைகள் அழகை விரும்புகிறவர்களின் மேனியை மென்மையாய் தழுவுகின்றன.

அழகுக் கலை நிபுணர்களின் விரல்களுக்கு மாபெரும் மந்திரசக்தி உண்டு. இன்றோ அவர்களது விரல்களோடும், விழிகளோடும் கம்ப்ட்டர்களும் போட்டி போட்டு அழகுக் கலை துறையில் புகுந்துவிட்டன. அழகுக்கலை நிபுணர்களிடமும் நிறைய மாற்றங்கள். எப்போதும் பழகிய முகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் சலித்துவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ, வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அழகழகான ஆண், பெண் நிபுணர்களும் வந்து குவிகிறார்கள். அழகுக்கலைத் துறையில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய அதிரடி மாற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்து கிறதா? அல்லது அழகை விரும்புகிறவர்களுக்கு அபரிமிதமான பலனைத் தருகிறதா? என்பதை அறிவதற்காக இத்தகைய மாற்றங்களை உள்வாங்கியிருக்கும் நவீன `பேஜ் 3 லக்சுரி சலூன் மேக்ஓவர் ஸ்டுடியோ’விற்குள் ழைந்தோம்.

அழகுக் கலை நிறுவனங்கள் வைக்கும் பெயர்களில்கூட புதுமை புகுந்துவிட்டது. `பேஜ் 3′ என்றால் என்ன அர்த்தம்? என்று ப்ரண்ட் ஆபீசில் சிரித்து வரவேற்ற பெண்ணிடம் கேட்டால், அவர் சி.ஈ.ஓ. வீணாவிடம் அழைத்துச் சென்றார். அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டால் அவர் பத்திரிகை களை மேற்கோள்காட்டி பதிலளித்தார். “பொதுவாக பத்திரிகை களில் மூன்றாம் பக்கம் எனப்படும் ஓபனிங் பேஜ் முக்கியத்துவ மானது. அதில் புகழ் பெற்றவர்களைப் பற்றிய செய்தியோ, முக்கிய செய்திகளோ வெளியாகும். அதுபோல் இதுவும் முக்கியத்துவமானது, பிரபலமானவர்களுக்கானது என்பதற்காக இப்படி பெயர் வைத்திருக்கிறோம்” என்றார்.

உள்ளே இளம் பெண்ணின் கூந்தலை வெட்டிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் தலையலங்காரம் நம்மைக் கவர்ந்தது. `வாடிக்கையாளர்கள்தானே தங்கள் கூந்தலை விதவிதமாக அலங்காரம் செய்துகொண்டு செல்வார்கள். இங்கு அலங்காரம் செய்யக்கூடிய நீங்களே உங்கள் முடியில் ஏதேதோ அலங்காரம் செய்திருக்கிறீர்களே?’ என்று கேட்டால், கிடைக்கும் பதில் இன்னொரு விதத்தில் ருசிகரமாக இருக்கிறது.

“எல்லோருமே மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். மாற்றங்களுக்காக யாரும் அதிக காலம் காத்திருப்பதில்லை. அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்தால்தான் ரசிக்கிறார்கள். பியூட்டி பார்லரில் அட்டகாசமான உள்ளறை அலங்காரம், நவீன கருவிகள், மாறுபட்ட அழகுடைய பெண்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவைகள் மாறிக்கொண்டே இருந்தாலும் அழகுக்கலை நிபுணர்களிடமும் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். அதனால் நாங்கள் வாரத்திற்கு ஒருமுறை எங்கள் தலைமுடியையே புதுமையாக இப்படி மாற்றிக்கொள்வோம். அதுபோல் இங்கே இருக்கும் ஒவ்வொரு அழகுக்கலை நிபுணரும் தங்கள் முடியை ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்திருப்பார்கள். எல்லாம் புதுமைக்காகத்தான்..”- என்றார். இப்படிப்பட்ட புதுமையையும் இங்கே காணமுடிகிறது.

ஐதீகம் நிறைந்த நகரமான சென்னையில் இப்போது பெண்களுக்கு, ஆண் நிபுணர்கள் கூந்தல் அலங்காரம் செய்கிறார்கள். இந்த மாற்றம் நிகழ என்ன காரணம்?

“முன்பு பெண்கள் தங்கள் கூந்தலை வெட்டிக்கொள்ளவே மாட்டார்கள். எவ்வளவு நீளமானலும் வளர்த்துக் கொண்டே இருப்பார்கள். பின்பு கூந்தலை வெட்டிக்கொள்ள முன்வந்தார்கள். அதுவும் ஒருசில ஸ்டைல்களிலே மீண்டும் மீண்டும் வெட்டிக் கொண்டார்கள். பெண்களுக்கு பெண்கள் தான் கூந்தலை வெட்டவும் செய்தார்கள். இப்போது 100-க்கு மேற்பட்ட வகைகளில் விதவித மான ஸ்டைல்களில் கூந்தலை வெட்ட முடியும். அந்த புதிய முறை ஹேர் ஸ்டைல்களை வெளி நாட்டு ஆண்களும், இந்தியாவின் வடகிழக்கு மாநில இளைஞர்களும் நிறைய கற்றார்கள். அவர்களின் கூந்தல் வடிவமைப்பு கலையை இந்தியாவில் எல்லா நகரங்களும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்தன. சென்னையும் அதில் முக்கியமான இடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக் கிறது. இங்கும் ஏராளமான ஆண் கலைஞர்கள் வந்துவிட்டார்கள். அவர்களை பயன்படுத்தும் போது பெண்களுக்கு சிறப்பான கூந்தல் அலங்காரம் கிடைக்கும். எப்போதுமே பெண்களை அலங்கரித்து பார்ப்பதில் ஆண்களுக்கு சந்தோஷம்தானே. ஆண்களிடம் கூந்தல் அலங்காரம் செய்துகொள்ள பெண்கள் இப்போது தயங்குவதில்லை. மாறாக அந்த ஆண் நிபுணரும், அந்தப் பெண்ணின் கணவரும் கலந்து பேசி தன் மனைவிக்கு பொருத்தமான ஸ்டைலை தேர்ந்தெடுக் கிறார்கள்..”

பெண் அழகுக்கலை நிபுணர்களாக வடகிழக்கு மாநில பெண்கள்தானே அதிகம் காணப்படுகிறார்கள். அப்படி அவர்களிடம் என்ன சிறப்பு இருக்கிறது?

“எப்போதும் சிரித்த முகத்துடன், சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சமர்ப்பண உணர்வோடு, மிகுந்த ஈடுபாட்டோடு வேலை பார்ப்பார்கள். இவர்களது அணுகுமுறை எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கிறது. சிறு வயதில் இருந்தே தங்களை அழகுப்படுத்திக்கொள்ளுதல், நேர்த்தியாக உடை அணிதல் போன்றவை இவர்களின் பிளஸ் பாயிண்ட். அதனால் அவர்கள் இளமைப் பருவத்தில் அழகுக்கலையையே பாடமாக எடுத்து படித்து திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். தற்போது தென்னிந்திய பெண்களும் பெருமளவு அழகுக்கலையை கற்று வருவதால், பிற்காலத்தில் இதில் நிறைய மாற்றங்கள் தோன்றும்”

வெளிநாட்டு, வெளிமாநில ஆண்- பெண் அழகுக்கலை நிபுணர்களை இங்கு வரவழைப்பது வியாபார வெற்றித் தந்திரங்களில் ஒன்றா?

“தற்போது அழகுக் கலையில் மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்கள் இளமையாக, அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக உலகளாவிய நிலையில் உள்ள சிறந்த அழகு சாதன பொருட்கள் இந்தியாவிற்கு வருகின்றன. அவைகளை பயன்படுத்தும்போது பக்க விளைவு இல்லாத அழகை பெற முடிகிறது. அதுபோல்தான் சிறந்த அழகுக்கலை கலைஞர்கள் எங்கிருந்தாலும் அவர்களையும் கண்டுபிடித்து கொண்டு வருகிறார் கள். இதில் வியாபார தந்திரம் எதுவும் இல்லை”

டெல்லி, மும்பை போல் இங்கும் அதி நவீன பார்லர்கள் உருவாக்கும்போது, இங்குள்ள மக்களும் அழகுக்காக அதிக பணத்தை செலவிட வேண்டியது இருக்கும்தானே?

“இப்போது அழகை விரும்புகிறவர்கள் அதற்கு தக்கபடியான பணத்தை செலவிட தயங்குவ தில்லை. சிறந்த பொருட்களால், சிறந்த கலைஞர்களால் தாங்கள் அழகுப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார் கள். `கேரா ஸ்கின் ட்ரீட்மென்ட்’ என்ற புதிய முறை இப்போது அறிமுகமாகியுள்ளது. பிரபலங்கள் அதை விரும்புகிறார்கள். இன்றும் நாம் சிலரைப் பார்த்து, `இப்போதும் இவர்கள் இளமையாக இருக்கிறார்களே அது எப்படி?’ என்று வியக்கிறோமே. இனி நாம் அப்படி ஏராளமான பெண்களைப் பார்த்து வியக்க வேண்டியதிருக்கும்…”

ஆனாலும் பெண்கள் ஆரோக்கியத்திற்கு செலவிடும் நேரத்தைவிட அழகுக்காக அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

“ஆரோக்கியம்தானே சிறந்த அழகு. ஆனால் அழகு இல்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தாலும் மனிதர்களால் திருப்தியாக வாழ முடியாது. அழகும், ஆரோக்கியமும் இருகண்கள். இரண்டிற்கும் பெண்கள் போதுமான நேரத்தை செலவிடுகிறார்கள். ஜிம்முக்கும் செல்கிறார்கள். பியூட்டி பார்லர்களுக்கும் வருகிறார்கள்..”

`கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..’ என்று பாட்டெல்லாம் பாடினாலும், இப்போதும் சிவப்புதான் சிறந்த அழகு என்ற எண்ணம் நிலவுகிறதே.. என்ன செய்வது?

“நிறம் ஒரு பிரச்சினை இல்லை. அதற்காக ஸ்கின் லைட்னிங் உள்ளது. இயற்கைதன்மை நிறைந்த ஆர்கானிக் பேஷியல் இருக்கிறது. பழச்சாறு, காய்கறிச் சாறு கலந்த அவை சருமத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். சுருக்கங்கள் நீங்கும். ஒயின் தெரபி, சாக்லேட் தெரபி போன்றவைகளுக்கும் வரவேற்பு உள்ளது. முன்பெல்லாம் மனைவி அழகாக இருக்கவேண்டும் என்று கணவர் எதிர்பார்த்தார். பின்பு அம்மா அழகாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகள் எதிர்பார்த்தார்கள். இப்போது பாட்டிகளும் அழகாக இருக்கவேண்டும் என்று பேத்திகள் எதிர்பார்க்கிறார்கள். ஆக 7 முதல் 70 வயதுவரை எல்லோரும் அழகாக இருக்க விரும்புகிறார் கள். அவர்கள் விரும்பும் சிறந்த அழகை கொடுக்க பார்லர்கள் தயாராக இருக்க வேண்டியதுள் ளது”

எவ்வளவுதான் பார்லர்கள் கம்ப்ட்டர் மயமானாலும் ஐபுரோ திரெட்டிங் போன்றவை கையால், நூலால்தானே செய்கிறீர்கள்?

“இது தென்னிந்தியாவிற்கே கிடைத்த பொக்கிஷம் போன்ற கலை. வெளிநாடுகளில் திரெட்டிங் செய்ய ரேசர்தான் பயன்படுத்துகிறார்கள். அது அங்குள்ள பெண்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் கையால் கலை ட்பத்தோடு செய்யும் இந்த கலைக்கு உலகம் முழுக்க வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இந்த முறையை கற்றுச் சென்றுள்ள பலர் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் திரெட்டிங் மட்டும் செய்து நிறைய சம்பாதிக்கிறார்கள். நூலால் திரெட்டிங் செய்வது எளிதல்ல. முகத்திற்கு, இமைக்கு தக்கபடி அற்புதமாக அதை வடிவமைக்க வேண்டும்”

நாள் – கிழமை செட் செய்திடலாம்

நாட்டுக்கு நாடு தேதியை எழுதும் வகையில் வேறுபாடு இருப்பதால் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளில் நாளினை எப்படி குறிப்பது என்பதனை நம் விருப்பத்திற்கு விட்டுவிட்டு அதனை அமைப்பதற்கான வசதிகளையும் தந்து விடுகின்றனர். எம்.எஸ்.எக்ஸெல் தொகுப்பில் நாள் மற்றும் கிழமையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறந்து கொண்டு முதலில் எந்த செல்களில் தேதிக்கான பார்மட் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Format மெனு சென்று Cells என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் Format Cells டயலாக் விண்டோவில் Number டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் சில டேட்டா வகைகள் (categories) தரப்பட்டிருக்கும். இந்தப் பட்டியலில் Custom என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலது பக்கம் Type என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் விருப்பப்படி தேதியை பார்மட் செய்வதற்கு வசதி உள்ளதா எனப் பார்க்கவும். இங்கு Date என்ற பிரிவு கிடைக்கும். இந்த பிரிவில் செல்லும் முன் தேதியை எப்படி எல்லாம் அமைப்பது என்று தெரிந்து கொள்வோம். அதற்கான குறியீடுகளைப் பார்க்கலாம். d என்பது தேதியின் எண்ணைத் (1,2,3 …. 31) தரும். dd என்பது தேதியை இரண்டு இலக்கங்களாகத் (01,02,03 ..31) தரும். ddd என்பது கிழமையினைச் சுருக்கித் (Mon, Tue . . .) தரும். dddd என்பது நாளினை முழுமையாகத் தரும்.
மாதங்கள் பெயரை அமைக்கும் குறியீடுகள்: m என அமைத்தால் மாதத்தின் எண் (1, 2, 3 … 11, 12) கிடைக்கும். mm என்பது மாதங்களின் எண்களை (01, 02 … 12) இரு இலக்கத்தில் தரும். mmm என்பது மாதத்தின் பெயரைச் (Jan, Feb) சுருக்கித் தரும். மாதங்களின் பெயரை முழுமையாகப் (January, February) பெற mmmm என அமைக்க வேண்டும். மாதத்தின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் பெற mmmmm என அமைக்க (J, F, M, A) வேண்டும்.
ஆண்டுகளை எப்படி அமைப்பது? yy என்பது ஆண்டுகளை இரு இலக்கங்களில் (07, 08) குறிக்கும். yyyy என அமைத்தால் ஆண்டுகள் 4 இலக்கங்களில் முழுமையாகக் கிடைக்கும்.
சரி, குறியீடுகளைத் தெரிந்து கொண்டீர்கள். இனி இவற்றின் துணை கொண்டு நாள், கிழமையை எப்படி அமைப்போம் என்று பார்ப்போம். வகைகளைப் பார்க்கையில் Custom என்பதில் கிளிக் செய்தீர்கள் அல்லவா? அப்போது வலது பக்கம் Type என்பதன் அருகே தேதிக்கான பார்மட் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இதில் மேலே தரப்பட்ட குறியிடுகளைக் கலந்து அமைத்தால் நமக்கு தேவையான வடிவமைப்பில் நாள் மற்றும் கிழமை கிடைக்கும். எடுத்துக்காட்டாக dddd, mmmm d, yyyy என அமைத்து அந்த செல்லில் 52611 என டைப் செய்தால் Thursday, May 26, 2011 எனக் கிடைக்கும். ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். பார்மட்டில் டைப் செய்யப்படும் டேட்டாக்களைப் பிரிக்க ஸ்பேஸ் மற்றும் கமா அமைத்தால் அவை அப்படியே காட்டப்படுகின்றன. இந்த இடத்தில் சிறிய இடைக்கோடு ( – ஹைபன்) நெட்டு சாய்வு கோடு (/ ஸ்லாஷ்) போன்றவற்றையும் அமைக்கலாம். இதனை அமைக்கையில் அருகே Sample என்ற கட்டத்தைப் பார்க்கலாம். இதில் டேட்டா எப்படி அமையும் என்ற முன் மாதிரி காட்டப்படும். இந்த சாம்பிள் டைப் பீல்டுக்கு மேலே இருக்கும். இந்த வகை அமைப்பை அமைத்திடுகையில் அதற்கான செல்லில் டேட்டா இருந்தால் நீங்கள் பார்மட்டை அமைக்கையிலேயே அதற்கேற்றார்போல் அது மாறுவதைக் காணலாம்.
நாளும் கிழமையும் எக்ஸெல்லில் அமைப்பதைக் கற்றுக் கொண்டீர்களா. நல்லது. அனைவருக்கும் நாளும் கிழமையும் நல்லதாக அமையட்டும்.

ஏன் இந்த நம்பிக்கை -கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

“தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக; பிராமணவாதம் எதனைக் கொள்னினும் கொள்ளுக; உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும், மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும், அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்திலிருந்து அழுகுரல் வரும் வரையில், ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆம், பலவீனத்திலும் பயத்திலுந்தான் கடவுள் நம்பிக்கை தோற்றமளிக்கிறது. இந்து சமயமன்றிப் பிற சமயங்களும் இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் கேட்டதாக நினைவு. ஓர் ஆசிரியர் தன் மாணவியைப் பார்த்துக் கேட்கிறார்:

“கடவுள் எங்கே இருக்கிறார்?”

மாணவி சொல்லுகிறாள்:

“தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்.”

“இல்லை; அது பழங்கதை. வாழ்க்கை நன்றாக இருக்கும் போது கடவுள் இல்லை; வறுமை வரும்போது அவர் உடனே வருகிறார். வெற்றி பெற்றவனுக்குக் கடவுள் இல்லை; தோல்வியுற்றவன் நெஞ்சில் உடனே தோற்றமளிக்கிறார்” என்றார் ஆசிரியர்.    ஆம்; பாவம் செய்யும்போது கடவுள் இல்லை. அதற்குரிய தண்டனையை அனுபவிக்கும் போது கடவுள் இருக்கிறார். ஒலியிலே தோன்றாத கடவுள், எதிரொலியில் தோன்றுகிறார். சிலையிலே காணமுடியாத தெய்வம், சிந்தையிலே சாட்சிக்கு வருகிறது.

`கடவுள் நம்பிக்கை என்பது ஏதாவதொரு வடிவத்தில் எல்லோருக்கும் இருந்தே தீருகிறது’ என்பது இந்துக்கள் முடிவு. `உயர்ந்தனவோ தாழ்ந்தனவோ அனைத்திலுமே நான் இருக்கிறேன்’ என்றே கண்ணன் சொல்கிறான்.

அர்ஜுனனிடம் கண்ணன் சொல்கிறான்:

“அர்ஜுனா, தேவர் கூட்டங்களும், முனிவர்

களும் என் உற்பத்தியை உணரமாட்டார்கள்; ஏனென்றால், அவர்களுக்கு முற்றிலும் முதற்காரணம் நானே. ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும், உலகிற்குக் தலைவன் என்றும், என்னை அறிகிறவன் மனிதர்களுள் மயக்கமில்லாதவன். புத்தி, ஞானம், தெளிவு, பொறுமை, சத்தியம், அடக்கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை, அஹிம்சை, மனத்தின் நடுநிலை, திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி அனைத்துமே என்னிடத்திலிருந்தே உண்டாகின்றன. வேதங்களுள் நான் சாம வேதம்; தேவர்களுள் இந்திரன்; இந்திரியங்களுள் நான் மனது; உயிர்களில் நான் உணர்வு. புரோகிதர்களுள் நான் பிரகஸ்பதி; சேனாதிபதிகளில் நானே தேவசேனாதிபதியாகிய முருகன்; நீர் நிலைகளில் நான் கடல். ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம்; பசுக்களில் நான் காமதேனு; தம்பதிகள் நடுவே நான் மன்மதன்; பாம்புகளில் நான் வாசுகி. நாகங்களில் நான் அனந்தன்; மழைத் தேவதைகளில் வருணன்; அடக்கியாள்வோர்களில் நான் எமன். விலங்குகளில் நான் சிங்கம்; பறவைகளில் நான் கருடன். தூய்மை தருவனவற்றுள் நான் காற்று; ஆயுதம் ஏந்தியவர்களில் நான் ராமன்; மீன்களிலே நானே மகர மீன்; நதிகளில் நானே கங்கை. அர்ஜுனா! சிருஷ்டிப் பொருளுக்கு முதல், இடை, கடையாகிய மூன்றும் நானே. வித்தைகளில் நானே ஆத்ம வித்தை. வாதம் செய்பவர்களிடம் நானே வாதம். பெண்மையில் நானே புகழ், திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறுமை. காலங்களில் நானே வசந்தம்; மாதங்களில் நானே மார்கழி; தருக்களில் நானே தேவதாரு. வாசகர்களின் சூதாட்டம் நானே; அழகும், மனத் தெளிவும், செயலாற்றும் வன்மையும் சேர்ந்தவர்களிடத்தில் அனைத்தும் நானே!

தண்டிப்பவர்களிடத்தில் நானே செங்கோல் ஆகிறேன்; வெற்றி வேண்டுவோரிடத்தில் நானே நீதி. ரகசியங்களில் நானே மவுனம்; ஞானிகளுடைய ஞானமும் நானே. அர்ஜுனா அனைத்துக்கும் வித்து எதுவோ அது நானே”.

– இது கண்ணனின் திருவாய் மொழி. எல்லாம் நானே என்று சொல்ல வந்த பரந்தாமன், எவை எவை உயர்ந்தவையோ, எவை எவை பிரச்சினைக்குரியவையோ, அவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த அகிலத்தில் தான் யார் என்பதை விளங்க வைக்கிறான். ஸ்தூலமாகக் காட்சி தரும் அழகிய கண்ணன் நிலை, இவை அனைத்தையுமே உள்ளடக்கியது. தெளிவு, மயக்கம் இரண்டிலுமே திரண்டு நிற்கும் அந்த இறைவனைக் கர்மத்தைவிட ஞானமே அதிகமாக அறிகிறது. கர்மத்தின் விளைவாக வரும் ஞானம், அதைவிட விரைவாகப் புரிந்து கொள்கிறது. நம் கண்ணுக்குத் தெரியும் உலகத்தைவிட கண்ணுக்குத் தெரியாத சூட்சம உலகம் பல மடங்கு பெரிதாக இருக்கிறது. அவை அனைத்தையும் இயக்கும் மூலப் பொருளை அனுபவம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகிறது.    கடவுள் நம்பிக்கையல்ல. விஞ்ஞானிகூட விளக்கம் சொல்ல முடியாத ரகசியம் இறைவனின் சிருஷ்டியில் இருக்கிறது. உலகத்தில் இருநூறு கோடி மனிதர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இருநூறு கோடியிலும் ஒருவரே போல் காட்சியளிக்கும் இன்னொருவர் இல்லை. ஒருவருக்கொருவர் பத்துக்கு ஒன்பது ஒற்றுமை இருந்தால், ஒன்றாவது மாறுபட்டு நிற்கும். நூற்றுக்கு நூறு உடலமைப்பும், குரலமைப்பும் உள்ள இருவரை நீங்கள் காண முடியாது. இரட்டைப் பிள்ளைகளாகப் பிறப்பவரிடையே கூட ஏதாவதொரு வித்தியாசத்தைக் காணமுடியும். குணங்களிலும் ஒருவருக்கொருவர் கொஞ்சமாவது மாறுதல் இருந்தே தீரும்.

என் தந்தை குடிக்க மாட்டார்; வேறு பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்; ஆனால் சீட்டாடுவார்.

நானோ, சீட்டு மட்டும் ஆடமாட்டேன். ஆகவே, இருநூறு கோடிக்கும் தனித்தனி `டிசைன்’ செய்தவன் இறைவன். இது மனிதனால் ஆகக்கூடியதா?

மனித முயற்சியால் நடக்கக் கூடியதா?

உலகமெங்கும் நீதித் துறையினர் குற்றவாளிகளின் கைரேகை

களைப் பதிவு செய்கிறார்களே, ஏன்?

ஒருவனின் கைரேகை போல் இன்னொருவனின் ரேகை இருக்காது என்பது ஒரு நம்பிக்கையாகும். விஞ்ஞானமும் அதை ஒப்புக் கொண்டிருக்கிறது. இருநூறு கோடி கைகளுக்கும் தனித்தனி `டிசைன்’ போட்டிருக்கிறான் இறைவன். படிப்பறிவில்லாதவர்களைக் கைரேகை வைக்கச் சொல்வதற்குக் காரணம் இதுதான். குறுக்கெழுத்துப் போட்டியில், ஒரு எழுத்தை மாற்றினால் ஓரு கூப்பன் அதிகமாவது போல், ஒவ்வொரு பிறவிக்கும் ஒவ்வொரு ரேகையை மாற்றுகிறான் இறைவன். வியக்கத்தக்க அவனது சிருஷ்டியிலேயே அவனைக் கண்டுகொள்ள முடிகிறது.

அப்படியும் கண்டு கொள்ளாதவர்கள், தங்கள் பலவீனத்தால் ஏற்பட்ட துன்ப அனுபவங்களிலே கண்டு கொள்ளுகிறார்கள்.

விஞ்ஞான ரீதியாக இன்று சொல்லப்படும் உண்மைகளை இந்து மதம் எப்போதோ சொல்லி விட்டது. இந்து மதத்தின் தனிச்சிறப்பு அதுதான். சிலை வழிபாட்டு நிலையையும் அது ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கு அப்பாற்பட்டு மனத்துள்ளே கடவுளைக் காணும் நிலையையும் `மேல்நிலை’ என்று கூறுகிறது. சிலையை வெறும் கல் என்று சொல்லும் நாஸ்திகனுக்கும், மனம் என்னும் ஒன்று இருக்கிறது. அது மரணப்படுக்கையிலாவது கடவுளைப் பற்றிப் பேச வைக்கிறது. பிறப்புக்குத் தகப்பன் கொடுத்தது ஒரு துளி ரத்தம் மட்டுமே. இவ்வளவு எலும்புகளும், நரம்புகளும் ரேகைகளும் எங்கிருந்து வந்தன?

மண்டையோட்டை அறுத்துப் பார்த்தால் உள்ளே ரோமம் இல்லை. இந்த ரோமம் வளர்வது எப்படி?

நாம் வளர்வது எப்படி?

குழந்தைப் பருவத்தில் விழுந்த பல் முளைப்பது எப்படி?

ஒன்பது ஓட்டைகள் இருந்தும் உள்ளே இருக்கும் காற்று உலாவிக்கொண்டே இருப்பது எப்படி?

இவை அறிவு போடும் கேள்விகள். ஆனால் அனுபவம் காட்டும் உண்மைகள், இவற்றை விட அதிகமாகக் கடவுள் நம்பிக்கையை உறுதி செய்கின்றன. இறைவனின் அஸ்திவாரம் என்ன என்பதனை முதலிலேயே கண்டுகொண்டவர்கள் இந்துக்கள்தான். இரக்கம், அன்பு, கருணையைக் காட்டிய பௌத்தமதம் கடவுள் ஒன்றைக் காட்டவில்லை. ஆனால், கடவுள் என்று ஒன்றைக் காட்டிய இந்து மதம் இரக்கம், அன்பு, கருணையை விட்டுவிடவில்லை. பௌத்த மதத்தை இந்து மதம் ஜீரணித்து விட்டதற்குக் காரணம் இதுதான். வாழ்க்கையைக் `கர்ம காண்டம்’, `ஞான காண்டம்’ என்று பிரித்தது இந்து மதம் தான்.

கர்ம காண்டத்தின் தொழில்கள் காரணமாக ஜாதி உண்டு. ஞான காண்டத்தில் ஜாதி இல்லை; யாவரும் சந்நியாசி ஆகலாம். லௌகீக வாழ்க்கையையும், தெய்வ நம்பிக்கையையும் ஒன்றாக இணைத்தது இந்து மதம். உணவு, மருத்துவம், தொழில் அனைத்திலும் பாவ புண்ணியங்களைக் காட்டுவது இந்து மதம். உடல் இன்பத்தைக் ஒப்புக்கொண்டது இந்து மதம். அதற்கு மேற்பட்ட துறவு நிலையிலும் ஆதிக்கம் செலுத்துவது இந்து மதம். இன்பங்களுக்குச் சடங்குகள் செய்வது இந்து மதம். துன்பங்களுக்கு ஆறுதல் சொல்வது இந்து மதம். ஆகவேதான், எந்த நிலையிலும் ஒரு இந்துவுக்குக் கடவுள் நம்பிக்கை எழுந்துக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாதவனும், மேற்சொன்ன நிலைகளுக்குத் தப்ப முடியாது. `ஆஸ்தி’ என்றால் சொத்து. `நாஸ்தி’ என்றால் பூஜ்ஜியம். `நாஸ்திகன்’ ஒன்றுமில்லாத சூனியம். இந்துவின் கடவுள் சூனியத்தில் தோன்றி, செல்வத்தில் பரிணமிக்கிறான். ஆகவே, நாஸ்திகனும், இந்துவே; ஆஸ்திகனும் இந்துவே. இரண்டு பேரும் கடவுளைப் பற்றியே பேசுகிறார்கள்.

கோடீசுவர பிச்சைக்காரர்கள்!

இஸ்ரேல் நாட்டில் பிச்சை எடுப்பது லாபகரமான தொழிலாக மாறிவருகிறது என்று அந்நாட்டு சமூகநல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் முன்பு எங்குமே பிச்சைக்காரர்களைக் காணமுடியாது. தற்போது முக்கிய நகரான டெல் அவிவில் நிறைய பிச்சைக்காரர்கள் காணப்படுகின்றனர்.

வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் நாள்முழுவதும் நின்று பிச்சை எடுக்கும் ஒருவர் ஒருநாளைக்கு 5 ஆயிரத்து 625 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 650 ரூபாய் வரை சம்பாதித்து விடுகிறார். இந்தப் பிச்சைக்காரர்கள் மாதத்துக்கு ரூ. ஒரு லட்சத்து 65 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள். இந்நாட்டுக் குடிமக்களின் சராசரி வருமானத்தை விட இது இருமடங்கு அதிகமாகும்.

பிச்சை எடுப்பவர்களில் பலர் குடிகாரர்களாகவோ, போதைக்கு அடிமையானவர்களாகவோ இருக்கிறார்கள். 1990-களில் ரஷியாவில் இருந்து குடிபெயர்ந்த தர்களால்தான் இஸ்ரேலில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக அந்தச் சமூகநல அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! மவுஸ் ஏன்? எதற்காக?

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான். சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை அழுத்திக் கிளிக் செய்வதனையே ஆங்கிலத்தில் ‘leftclicking’ எனக் கூறுகின்றனர். ஏதாவது ஒரு பைல் அல்லது இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றால் மவுஸின் அம்புக் குறி முனையை பைல் பெயர் அல்லது செயல்படுத்தும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று இந்த இடது பட்டனை இருமுறை கிளிக் செய்தால் உடனே பைல் இயக்கத்திற்கு வந்துவிடும்.
இதே போல ஒரு விண்டோவினை மூட, சிறியதாக்க இந்த மவுஸின் முனையை அதற்கான இடத்தில் கொண்டு சென்று அழுத்தினால் போதும்.
ஒரு முறை கிளிக் செய்து அப்படியே பட்டனை விடாமல் மவுஸை இழுத்தால் நாம் தேர்ந்தெடுத்த பைல் அல்லது டெக்ஸ்ட் அப்படியே இழுபடும். அதனை நாம் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று பட்டனை அழுத்துவதிலிருந்து எடுத்துவிட்டால் அந்த பைல் அல்லது டெக்ஸ்ட் விட்ட இடத்தில் அமர்ந்துவிடும்.
டெக்ஸ்ட் உள்ள டாகுமெண்ட்டில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று எந்த இடத்தில் விடுகிறோமோ அந்த இடத்தில் நீங்கள் டைப் செய்யத் தொடங்கலாம்.
வலது புறத்தில் உள்ள பட்டன் பொதுவாக சிறிய மெனு ஒன்றைக் கொண்டு வர உதவுகிறது. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் படங்களில் மாற்றங்கள் செய்திட அவற்றைத் தேர்ந்தெடுத்தபின் அதில் மவுஸின் கர்சரை வைத்து வலது பட்டனை அழுத்தினால் அதற்கேற்ற மெனு கிடைக்கும். அதில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான பிரிவுகள் கிடைக்கும். அதில் எந்த பிரிவைச் செயல்படுத்த வேண்டுமோ அதில் கர்சரை வைத்து இடது கிளிக் செய்தால் போதும். இத்தகைய மெனுக்களில் நாம் செயல்படுத்த சில பொதுவான கட்டளைகள் கிடைக்கும். அவை: =
Open: டபுள் கிளிக் செய்து செயல்படுத்தும் பணியினை இந்த பிரிவில் கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்;
Cut: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது படத்தை நீக்குவதற்கு;
Copy: இதில் கிளிக் செய்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள் காப்பி ஆகும். பின் அதனை எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம்.
Create Shortcut: குறிப்பிட்ட புரோகிராம் அல்லது பைலுக்கான குறுக்கு வழி ஒன்றை அமைத்திட இது உதவும். இதனை உருவாக்கிவிட்டால் அப்போது கிடைக்கும் ஐகானில் கிளிக் செய்து அதற்கான புரோகிராமை இயக்கலாம்; பைலை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.
Delete: நிரந்தரமாக நீக்கிட; Rename: பைல் அல்லது புரோகிராமிற்குப் புதிய பெயர் தர. மற்றும் Properties: பைல் அல்லது புரோகிராம் குறித்த அதன் தன்மைகளை அறிய இது உதவுகிறது.
மவுஸின் நடுவே சிறிய உருளை ஒன்று இருப்பதைப் பார்ப்பீர்கள். டெக்ஸ்ட்டில் நாம் மேலும் கீழும் செல்ல இது உதவும். என்டர் அழுத்தி நாம் கீழே செல்லுவோம். அல்லது ஆரோ கீகளை அழுத்தி மேலே செல்வோம். அந்த வேலையை எளிதாக மேற்கொள்ள இந்த வீல் உதவுகிறது. இதனுடைய பல சிறப்பு பயன்பாடுகள் குறித்து அந்த அந்த சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான டிப்ஸ்களில் பார்க்கலாம்.
வயர் இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக் கூடிய வயர்லெஸ் மவுஸ் வெகு நாட்களாகப் புழக்கத்தில் உள்ளது. அதன் பயன்பாடுகளும் மேலே குறிப்பிட்டபடி தான் இருக்கும்.