Daily Archives: பிப்ரவரி 1st, 2011

நேர்மை தூங்கும் நேரம்…

நாம் 62-வது குடியரசு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிய நேரத்தில், தேசமெங்கும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்த நேரத்தில், மகாராஷ்டிர மாநிலத்தில் மன்மாட் என்கிற நகரத்தில் ஒரு குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக வருங்காலம் என்னவாகப் போகிறது என்று தெரியாமல் தங்களது விதியை நொந்து கதறிக் கொண்டிருந்தது. அது சாதாரணக் கண்ணீர் அல்ல, ஆற்றாது அழுத கண்ணீர்…  அந்தக் குடும்பத்தின் தலைவராக இருந்த யஷ்வந்த் சோனாவானே யார் தெரியுமா? கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அவர் செய்த தவறு என்ன தெரியுமா? நேர்மையாளராக இருந்தது. தவறைத் தட்டிக் கேட்டது. திகைக்காதீர்கள். இந்திய அரசுப் பணியிலும் நிர்வாகத்திலும் நேர்மையாளராக இருந்தால் இப்படி ஒரு சோதனையை எதிர்கொள்ள நேரும் என்று சொன்னால், இந்திய ஜனநாயகம் செத்துவிட்டது என்று அரைக்கம்பத்தில் மூவர்ணப் பதாகையைப் பறக்க விட்டுவிடலாமே…  தனது அலுவலக ஜீப்பில் பணி நிமித்தம் ஒரு உதவியாளருடனும், ஓட்டுநருடனும் பயணித்துக் கொண்டிருந்தார் கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்த யஷ்வந்த் சோனாவானே. நெடுஞ்சாலையில் ஒரு மண்ணெண்ணெய் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருப்பதையும், அதிலிருந்து சிலர் மண்ணெண்ணெயைத் திருடுவதையும் பார்த்த அவர் தனது ஜீப்பை நிறுத்தித் திருடுபவர்களைத் தனது செல்பேசியில் படம்பிடித்தார். திருட்டுக் கும்பல் ஓடி மறைந்தது.  தனது ஜீப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் சோனாவானே. ஐந்தாறு மோட்டார் சைக்கிள்களில் சிலர் திடீரென்று விரைந்து வந்தனர். அவர்கள் வந்த வேகத்தைப் பார்த்துப் பயந்து சோனாவானேவின் உதவியாளரும், ஓட்டுநரும் ஓட்டம் பிடித்தனர். வருபவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ? அகப்பட்டுக்கொண்ட சோனாவானே அடித்துத் துவைக்கப்பட்டார். டேங்கர் லாரியிலிருந்த மண்ணெண்ணெய் அவர்மீது ஊற்றப்பட்டது. அந்த நேர்மையான கூடுதல் ஆட்சியர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.  இப்படி நேர்மைக்குத் தண்டனை வழங்கி எக்காளமிட்டது யார் தெரியுமா? பொப்பட் ஷிண்டே என்று காவல்துறையால் அடையாளம் கண்டு இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர். இந்தக் கைதுகூட எதனால் நடந்தது தெரியுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 80,000-க்கும் அதிகமான கெஜட்டட் அதிகாரிகள் யஷ்வந்த் சோனாவானேயின் கொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதால்தான்.  பொப்பட் ஷிண்டே மீதான முதல் குற்றச்சாட்டு அல்ல இது. பல ஆண்டுகளாகவே இதுபோன்ற பெட்ரோல், மண்ணெண்ணெய் திருட்டுகள் மன்மாட் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சமூக விரோதிகளின் கைப்பாவைகளாக காவல்துறை மட்டுமல்ல, உள்ளூர் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் என்று எல்லோருமே இயங்கி வரும் சூழ்நிலை. இந்தச் சமூகவிரோதக் கும்பலுடன் ஒத்துழைக்காத காவல்துறை அதிகாரிகள் நடுத்தெருவில் நாயை அடிப்பதுபோல அடிக்கப்பட்ட சம்பவங்கள் இப்போது பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.  பெட்ரோல், மண்ணெண்ணெய் கடத்தல், திருடுதல், கலப்படம் செய்தல் என்பது மகாராஷ்டிரத்தில் மட்டும் நடப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளனவோ, எங்கெல்லாம் எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இது நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் இப்போது கோடீஸ்வரர்கள் என்பது மட்டுமல்ல, தொண்டு நிறுவனத் தலைவர்களாகவும், கல்வி நிறுவனங்களின் தலைவர்களாகவும் தங்களுக்கு யோக்கிய முலாம் பூசிக்கொண்டு உலா வருகிறார்கள் என்பதும் நிஜம்.  நமது தமிழகத்திலேயே, சென்னையில், பெட்ரோலியக் கலப்படத்துக்காகக் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டு, சிபிஐ வழக்குப் பதிவு செய்தும்கூட எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளில் சிலரே இந்தக் கடத்தல் கலப்பட சமூக விரோதக் கும்பலுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக இருக்கும்போது, யார் இதைத் தடுப்பது? இதனால் ஏற்படும் இழப்புக்கு சாதாரண பொதுஜனம் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் அதிக விலை கொடுத்து ஈடுகட்டுவதைத் தவிர, வேறு வழிதான் என்ன?  மன்மாட் நகரில் நேர்மைக்காக உயிர்த் தியாகம் செய்திருக்கும் யஷ்வந்த் சோனாவானேயைப்போல பலர் ரத்தம் சிந்தியும்கூட, சமூகவிரோதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லையே. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியான சத்யேந்திர துபே 2003-ல் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதற்காக பிகாரில் கொல்லப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் கலப்படப் பெட்ரோல் விற்றதற்காக இரண்டு பெட்ரோல் பங்குகளை சீல் வைக்கச் செய்த மஞ்சுநாத் என்கிற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி 2005-ல் கொல்லப்பட்டார்.  நமது தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், ஏ.ஆர். வெங்கடேசன், ஜி. புண்ணியகோடி என்ற இரண்டு தாசில்தார்களும், ஆர். சண்முக சுந்தரம் என்கிற வருவாய் ஆய்வாளரும் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றபோது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொல்லப்படவில்லையா? நாங்குநேரியில் தாசில்தார் எஸ். நடராஜன், மணல் கடத்தி வந்த லாரியைத் தடுக்க முயன்றபோது, லாரியால் மோதப்பட்டு இப்போது சக்கர நாற்காலியில் தள்ளப்பட்டிருக்கும் அவலம் அரங்கேறவில்லையா?  நேர்மையாளர்களையும், ஊழலுக்கும் அநீதிக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் காப்பாற்ற வேண்டிய, காவல்துறையும் அரசும், சமூகவிரோதிகளுடன் கைகோத்துக் கொண்டு செயல்படும் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்திய ஜனநாயகத்துக்கே முற்றுப்புள்ளி விழுந்துவிடும்!

நன்றி-தினமணி

2011- நிறுவனங்கள் தரப்போவது என்ன ?

புத்தாண்டில் கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்று எல்லாரும் கணித்துள்ளனர். பலர் தொழில் நுட்பத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் பல எதிர்பார்ப்புகளைச் சொல்லி வருகின்றனர். நாம் இத்துறையில் இயங்கும் நிறுவனங்கள் வாரியாக, அவை என்ன திட்டமிட்டுள்ளன, அவற்றிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
ஆப்பிள்: 2010 ஆம் ஆண்டில் மிகவும் வெற்றிகரமாக, புத்தம் புதிய மல்ட்டி டச் டேப்ளட் பிசியினை அறிமுகப்படுத்தி, பல லட்சக் கணக்கில் அதனை விற்று சாதனை படைத்தது ஆப்பிள் நிறுவனம். இனி அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டியது இந்த நிறுவனத்திற்கு அவசியமாகிறது. மேலும் இதே டேப்ளட் பிசி சந்தையில் பல புதிய நிறுவனங்கள் வந்து மொய்க்க இருப்பதால், போட்டியும் மிகக் கடுமையானதாக இருக்கும். ஐ-பேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பை புதிய வசதிகளுடன் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இதற்கு உள்ளது. தன் ஐ-போனை மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து விற்பனைக்குக் கொண்டு வரலாம். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, தன் புதிய மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஆப்பிள் லயன் (Lion) என்ற பெயரில் கொண்டு வரும். இதனால் மேக் கம்ப்யூட்டரின் விலை அதிகமாகும். இதில் ஐ-பேடில் உள்ள சில வசதிகளை இணைக்க ஆப்பிள் முயற்சித்து வருகிறது.
அடுத்து ஆப்பிள் இன்னும் வலுவாக ஊன்றாத இரு பிரிவுகளில், இந்த ஆண்டில் செயல்படும் எனத் தெரிகிறது. அவை – கிளவ்ட் கம்ப்யூட்டிங் மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங். இவற்றை அடுத்து வெளி நாடுகளில் விற்பனை செய்து வரும் ஆப்பிள் டிவியை, இன்னும் மலிவான விலையில் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டு செல்ல, ஆப்பிள் முயற்சிக்கும்.
கூகுள்: தேடல் பிரிவில் தனக்கு நிகர் இல்லை என இயங்கும் கூகுள், தற்போது பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதன் முக்கிய போட்டியாளரான, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சினுக்குத் தன் வாடிக்கையாளர்கள் சென்றுவிடாமல் இருக்க, பல புதிய வசதிகளைத் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பெரிய வெற்றியை அடைந்தாலும், ஐபோன் சாப்ட்வேர் போல நகாசு வேலைகளைத் தருவதாய் இல்லை. டேப்ளட் பிசிக்கான ஆண்ட்ராய்ட் பதிப்பு ஐ-பேட் சாதனத்திற்குச் சவால் விடுவதாய் அமையலாம்.
2011ல் கூகுள், பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் தன் நிலையை உறுதிப்படுத்தலாம். கிளவ்ட் கம்ப்யூட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் படி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு பிரவுசராக வலுப்பெறலாம். பயனாளர்கள் இதன் மூலம் இணைய சர்வரில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்துவார்கள். தங்கள் பைல்களைக் கூட, கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணையத்தில் சர்வரில் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்துவார்கள். இந்தப் பணிகளுக்கெல்லாம் உதவிடும் வகையில், கூகுள் நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாற்றத்தினைக் கொண்டு வரும்.
இதே போல இதுவரை தீவிரமாக இறங்காத, சோஷியல் நெட்வொர்க்கிங் பிரிவிலும், கூகுள் இந்த ஆண்டில் தடம் பதிக்கலாம். கூகுள் டிவியிலும் கவனத்தைச் செலுத்தி, இன்டர்நெட்டினை, டிவியில் நம் வீட்டு ஹாலுக்குக் கொண்டு வரலாம்.
மைக்ரோசாப்ட்: சாப்ட்வேர் பிரிவில் சக்கரவர்த்தியாகத் திகழும் மைக்ரோசாப்ட், இன்னும் வாடிக்கையாளர் களை எல்லாப் பிரிவுகளிலும் தன் வசம் வைத்துள்ளது. விண்டோஸ், ஆபீஸ் மற்றும் எக்ஸ் பாக்ஸ் இதற்கு எடுத்துக் காட்டுக்களாகும். ஆனால் இரண்டு பிரிவுகளில், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசி, மற்ற நிறுவனங்களிடமிருந்து சவால்களை எதிர் கொண்டுள்ளது. விண்டோஸ் போன் 7 சிறப்பான சிஸ்டமாக இருந்தாலும், போட்டியைச் சமாளிக்கும் அளவிற்கு விரிவாக இல்லை.
பேஸ்புக் மற்றும் ட்விட்டர்: சோஷியல் நெட்வொர்க்கிங் பிரிவில் இந்த இரட்டையர்கள், 2010 ஆம் ஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தினைப் பெற்றனர். இந்த ஆண்டிலும் சவால்களைச் சந்தித்துப் பல புதிய பரிமாணங்களைத் தங்கள் சேவையில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

முன்னோர் திருவிழா !பிப்., – 2 தை அமாவாசை!

மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது. ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வரலாம். சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் மனித உருக் கொண்டு, பூலோகத்திலுள்ள புஷ்பவனக் காட்டுக்கு வந்தன. இவை, அங்கு மலர் பறித்து, இத்தலத்து சிவனைப் போற்றி வழிபாடு செய்தன. கலியுகம் பிறந்தவுடன், “இனி, நல்லதுக்கு காலம் இல்லை. அதனால், பூலோகத்தில் இருப்பது நல்லதல்ல…’ என்று இறைவனிடம் கூறிவிட்டு, இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச்சென்று விட்டன. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து, இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர், இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி, கதவை திறந்தனர். வேதங்கள் இங்கு தங்கியிருந்து இறைவனை வணங்கியதால், இவ்வூர், “வேதாரண்யம்’ என்று பெயர் பெற்றது. திருமறைக்காடு என்று தமிழில் சொல்வர். கடற்கரை ஓரத்தில் கோவில் இருக்கிறது. சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான நாவுக்கரசரும்,
ஞானசம்பந்தரும் சிவத்தலம்தோறும் சென்று, சிவனைப் போற்றி, பதிகம் பாடி வந்தனர். அவர்கள் ஒரே சமயத்தில் வேதாரண்யம் வந்தடைந்தனர். மக்கள் பக்கத்து வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று வழிபட்டதைக் கண்ட அவர்கள் வருத்தமடைந்தனர். நாவுக்கரசர் பத்து பாடல்கள் (பதிகம்) பாடியவுடன், கதவு திறந்தது. பின்னர் கதவை மூடுவதற்கு ஒரே ஒரு பாடலை சம்பந்தர் பாட, கதவு மூடிக் கொண்டது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம். பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையலாம். இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்தக் கடல் தீர்த்தம். இதில், ஒருமுறை நீராடுவது ராமேஸ்வரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பர். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி மாத, மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். இவ்வூர் அருகிலுள்ள கோடியக்கரை கடல் தீர்த்தமும் மிக விசேஷமானது. அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாடு செய்வோர் மட்டுமின்றி, மற்றவர்களும் புனித நீராடலாம். இங்கே சுவாமியும், அம்பாள் வேதநாயகியும் மணமக்களாக எழுந்தருளியுள்ளனர். கருவறையில் லிங்க வடிவத்தின் பின்புறம் இந்த திருமணக் காட்சியைக் காணலாம். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, நோயற்ற வாழ்வு பெற இவர்களை வணங்குவர். நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. திருவள்ளுவர் திருக்குறளில், தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்கிறார். “தென்புலத்தாராகிய முன்னோர், கடவுள், முன்பின் தெரியாத விருந்தினர், உறவினர், தன் குடும்பம் ஆகிய ஐந்து பேரையும் இல்லறத்தில் இருப்பவர் காப்பாற்ற வேண்டும்…’ என்பது இதன் பொருள். இதில், முதலிடத்தை முன்னோருக்கு தருகிறார் வள்ளுவர். இதிலிருந்தே நம் முன்னோருக்கு வாரிசுகள் செய்ய வேண்டிய கடமை தெளிவாகிறது. அவ்வகையில், தை அமாவாசையை, “முன்னோர் திருநாள்’ என்றே அழைக்கலாம். இந்த நன்னாளில், நம் முன்னோரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

வள்ளுவர் ஓர் இந்து-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்துக்களின் நெற்றி மதச் சின்னத்தைக் காட்டுகிறது.

கிறிஸ்தவர்களின் கழுத்தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதைக் குறிக்கிறது.

முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும், கோஷாவும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதைத் தெளிவாக்குகின்றன.

ஆனால், இந்தச் சின்னங்கள் ஏதுமில்லாத நவநாகரிக இளைஞன் ஒருவனை, அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரு கதை உண்டு.

ஒரு மனிதன் பன்னிரண்டு மொழிகள் பேசுவானாம்.

ஒவ்வொரு மொழியையும், அந்தந்த மொழிக்காரர்கள் எப்படிப் பேசுவார்களோ அப்படியே, அதே தொனியோடும் உச்சரிப்போடும் பேசுவானாம்.

அவனுடைய தாய் மொழி எது என்று யாருக்கும் தெரியவில்லையாம்.

அவனைக் கேட்டால் அவனும் சொல்ல மறுத்து விட்டானாம்.

அவனது தாய் மொழியைக் கண்டுபிடிக்க அவனது நண்பர்கள் ஒரு வேலை செய்தார்களாம்.

ஒருநாள், அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது `பளார்’ என்று அவன் முதுகிலே ஓங்கி அடித்தார்களாம்.

அவன், ஆத்திரத்தோடு, “எந்தடா நாயாடி மோனே” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தானாம்.

அவனது தாய் மொழி மலையாளம் என்பது தெரிந்து விட்டதாம்.

தன்வயமற்ற நிலையில் ஒருவன் பேசுகிற பேச்சுத்தான் உண்மையான பேச்சு.

அது போதையாயினும் சரி, உற்சாகமாயினும் சரியே.    நடக்கும் வழியில் ஒரு கல் தடுக்கிவிட்டதென்றால் ஒருவன் `கடவுளே’ என்கிறான்; அவன் இந்து.

`அல்லா’ என்றால், அவன் முஸ்லீம்.

`கார்த்தரே’ என்றால், அவன் கிறிஸ்தவன்.

ஒவ்வொரு மதத்துக்காரருக்கும் முக்கியமான கட்டங்களில் எல்லாம், தனது மத தத்துவம், தனது கடவுள் நினைவுக்கு வருவதுபோல், ஒவ்வொரு மதக் கவிஞனுக்கும், தனது எழுத்துகளில் தனது கடவுள் பற்றிய சிந்தனையே வரும்.

வள்ளுவனும் அப்படியே!

இறைவனைப் பற்றி, அவன் குறிப்பிடுகிற சில வார்த்தைகள் வேறு சில மதக்கடவுளுக்கும் பொருந்தும் என்றாலும், பெரும்பாலானவை நேரடியாக இந்துமதக் கடவுள்களையே குறிக்கின்றன.

உதாரணமாக, `வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்பது, எல்லா மதத்தின் மூலவருக்கும் பொருந்தும் என்றாலும், விருப்பு வெறுப்பற்றவன் என்று இந்துக்களே இறைவனை அதிகம் கூறுகிறார்கள்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் இந்த எண்ணம் பிரதிபலிக்கிறது.

`கடவுள்’ என்ற வார்த்தையை வள்ளுவன் பயன்படுத்தவில்லை என்றாலும், `கடந்து உள்ளிருப்பவன்’ என்ற பொருளில் இந்துக்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்துகிறார்கள்.

`இறைவன்’ என்ற சொல் `கடவுள்’ என்ற பொருளில் வள்ளுவனால் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஐந்தாவது குறளில், `இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’ என்றும்,

பத்தாவது குறளில், `பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்’ என்றும், அது ஆளப்படுகிறது.

கடவுளை `இறைவன்’ என்று பௌத்தர்களோ, முஸ்லீம்களோ, கிறிஸ்தவர்களோ கூறத் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வள்ளுவன் கூறியிருக்கிறான். (மற்றவர்கள் பின்னால் எடுத்துக் கொண்டார்கள்.)

வள்ளுவன் காலத்தில் பௌத்த மதமும், இந்தியாவிலேயே பிறந்த வேறு சில மதங்களும் மட்டுமே இருந்தன.

அந்நாளில் அவை, கடவுளை `இறைவன்’ என்று அழைத்ததில்லை.

ஆனால், இந்துக்களின் கடவுள் பாடல்கள், பிரபந்தங்கள் அனைத்திலும் அந்த வார்த்தை வருகிறது.

அதிலும் வினைகள் இருவகை; அவை நல்வினை, தீவினை எனச் சொல்வோர் இந்துக்கள்.

அஃதன்றியும், இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற பொருளில் 690, 733, 778 ஆவது குறள்களில் வள்ளுவன் கையாள்கிறான்.

இறைவனையும், அரசனையும் வேறு எந்த மதத்தவரும் ஒன்றாகக் கருதுவதில்லை. ஒரே சொல்லால் அழைப்பதில்லை.    பிற்காலத்தில் தமிழ் இந்துக்கள் இன்னும் ஒரு படி மேலே போய், `கோ’ என்ற வார்த்தைக்கு `இறைவன், அரசன், பசு’ என்ற மூன்று அர்த்தத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

`இறைவனடி சேர்வது’ என்ற மரபு இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்

என்ற குறளில் வரும், `வானுறையும் தெய்வம்’ இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

தெய்வம் வானத்தில் இருக்கிறது என்பதை மற்ற மதத்தவர் ஒத்துக் கொள்வதில்லை.

`பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர்’ என்ற குறள், “திருப்பாற்கடல் கடையப்பட்டபோது ஆலகால விஷத்தை அள்ளியுண்ட பரமசிவனையே குறிக்கிறது” என்கிறார் பேராசிரியர் திரு. ஜி. சுப்பிரமணிய பிள்ளை. `அடியாருக்கு, நஞ்சமுதம் ஆவதுதான் அற்புதமோ?’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.

நற்றிணையில் வரும், `நஞ்சுண்பர் நனிநாகரிகர்’ என்ற தொடரும் சிவனாரைக் குறிப்பதாக நான் சொன்னால் யார் மறுக்க முடியும்?

அஃதன்றியும், ஒரு குறளில் இந்துக்களுக்கு மட்டுமே உரிய இந்திரனைச் சாட்சிக்கழைக்கிறார் வள்ளுவர். வேறு எந்த மதத்தவருக்கும் `இந்திரன்’ என்று ஒருவன் இல்லை. அதிலும் இந்திரன் சம்பந்தப்பட்ட இந்து மதம் ஒன்றையே வள்ளுவர் உவமிக்கிறார்.

ஐந்தவித்தான் ஆற்றல்அகல் விசும்புளார் கோமான்

இந்திரனே சாலுங் கரி.

ஐந்து பொறிகளையும் அடக்காது சாபம் எய்திய இந்திரன், அடக்குவோனுடைய ஆற்றலுக்குச் சான்றாகிறான் என்கிறார்.

கெட்டுப் போனவனைக் காட்டி நல்லவனைப் புகழ்வது போல், பொறி அடக்காத இந்திரனைக் காட்டி அடக்குவோரின் ஆற்றலை வியக்கிறார் வள்ளுவர்.

இந்துக்களின் புராணப்படி, `அகல் விசும்புளார் கோமான்’ என்றே இந்திரனை அழைக்கிறார்.

அவர் கூறும் உவமான கதை அகலிகையின் கதையாகும்.

இன்னுமோர் இடத்தில்,

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை -என்கிறார்

இந்துக்களின் இறைவனுக்கு மட்டுமே எட்டு குணங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. (அதாவது, பரமசிவனுக்கு.)

பரிமேலழகர் சொற்படி அந்த எட்டு குணங்கள் கீழ்க்கண்டவை.

தன் வயத்தனாதல்

தூயவுடம்பினனாதல்

இயற்கையுணர்வினனாதல்

முற்றுமுணர்தல்

இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்

பேரருளுடைமை

முடிவிலாற்றலுடைமை

வரம்பில் இன்பமுடைமை

– சைவ ஆகமத்திலும் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

அப்பர் சுவாமிகளும், `எட்டு வான் குணத்து ஈசன்’ எனப் பாடினார்.

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

என்றொரு குறள்.

இதில் `வாலறிவன்’ என்பது, மற்ற மதக் கடவுள்களையும் குறிக்கக்கூடிய மயக்கத்தைத் தரும். ஆயினும், எங்கும், எப்பொழுதும், தானாகவே அனைத்தையும் அறியும் ஞானத்தைக் குறிப்பதால், `அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தமூர்த்தியாகி’ நிற்கும் ஈசனைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அதுபோலவே, `தனக்குவமை இல்லாதான்’ என்ற சொல்லும் மயக்கத்தைத் தரும். ஆயினும், அதுவும் ஈசனைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ள முடியும்.

அப்பர் சுவாமிகள் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் ஜி. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் இதனை விளக்கியிருக்கிறார்கள்.

ஒரு குறளில் வரும் `மலர்மிசை ஏகினான்’ என்ற வார்த்தை பல பொருள் தருமாயினும், பரிமேலழகர் உரைப்படியும், பிற்கால நாயன்மார்கள் பாடல்களின் படியும், அதுவும் சிவபெருமானையே குறிக்கின்றது.

பிறவியைப் `பெருங்கடல்’ என்று இந்துக்கள் மட்டுமே குறிப்பதால், நான் முன்பு சொன்ன அந்தக் குறளும் வள்ளுவன் ஓர் இந்துவே எனக் காட்டுகிறது.    மற்றும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

– என்றும்,

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு

– என்றும்,

இந்துக்களின் துறவுத் தத்துவத்தையும், தலைவன் பெயரையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

வள்ளுவர் கூறும், `தானமும் தவமும்’ இந்துக்களின் மரபுகளே.

துறவறத்தின் பெருமையைப் புத்தமதமும் கூறுமாயினும், இந்திரனைப் பற்றிய குறிப்பு வள்ளுவரின் `நீத்தார் பெருமை’ என்ற அதிகாரத்திலேயே வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வள்ளுவப் பெருந்தகை, தொட்ட இடமெல்லாம், இந்துக் கடவுள்களையும், இந்துக்களின் மரபையுமே கூறுவதால், அவரும் ஓர் இந்துவே என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை.

அவரைத் தூக்கத்தில் தட்டி எழுப்பியிருந்தாலும், `இறைவா’ என்றுதான் சொல்லி இருப்பார்.

அறத்துப்பாலில் காணும் அறமும், பொருட்பாலில் காணும் பொருள்களும், தமிழர்களுக்கு மட்டுமே உரியவையாக அன்று இருந்தன.

ஆகவே, தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே ஒரு தமிழனே என்பது எனது துணிபு.

அநாத ரட்சகன் அர்த்தம் தெரியுமா?

பகவானை ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றெல்லாம் சொல்கின்றனர். ஆபத்து காலத்தில் உதவக் கூடியவன் பகவான் தான் என்றும், நாதன் என்பதற்கிணங்க சமயத்தில் காப்பாற்ற கூடியவன் என்றும், பகவானை குறிப்பிடுகின்றனர். பகவானுக்கு ஆயிரம் நாமாக்கள் உள்ளன. அவைகளில் எதைச் சொல்லி கூப்பிட்டாலும் ஓடி வருவான். இதை சகஸ்ர நாமம் என்பர். இது தவிர, சுருக்கமாக அஷ்ட்டோத்ரம் என்று நூற்றியெட்டு நாமாக்களும் உண்டு. அவசரமாக பூஜை செய்யும்போது, இந்த அஷ்டோத்ரத்தையும், சாவகாசமாக பூஜை செய்யும் போது, இந்த சகஸ்ர நாமத்தையும் சொல்லி பூஜை செய்வர். பகவானிடம் நம்பிக்கை வைத்து, “நீதான் கதி’ என்று, அவனையே சரணாகதியடைய வேண்டும். இந்த சரணாகதி என்ற பதத்துக்கு, நிறைய வியாக்கியானம் செய்திருக்கின்றனர். அதற்கான பலனும் நிறைய உண்டு. சரணாகதி தத்துவம் என்கின்றனர் இதை. திரவுபதி, துரியோதனனின் சபையில் அவமானப்படுத்தப்பட்ட போது, ஒரு கையால் சேலையைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையை உயரத் தூக்கி கண்ணனை உதவிக்கு அழைத்தாள். அப்போது, உதவிக்கு வரவில்லை கண்ணன். பிறகு, இரண்டு கைகளையும் தூக்கி, “அச்சுதா… கிருஷ்ணா…’ என்ற போது, அருள் செய்தான் கண்ணன். கஜேந்திரன் கதை உங்களுக்கு தெரியும் தானே… அந்த கஜேந்திரன் ஆயிரம் வருஷ காலம் முதலையோடு போராடினானாம். கஜேந்திரனின் பந்துக்கள் வந்து கரையிலேயே நின்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டு சென்றனர். “இனி, நமக்கு உதவுவதற்கு யாருமே இல்லை…’ என்ற நிலைக்கு வந்த கஜேந்திரன், பகவான் தான் துணை என்பதை புரிந்து கொண்டு, “ஆதி மூலமே!’ என்று அபயக் குரல் கொடுத்தானாம். இந்த குரலை கேட்ட பகவான், கருட வாகனத்தில் வந்து, சக்ராயுதத்தால் முதலையை வதம் செய்து, கஜேந்திரனை விடுவித்தார். அப்போது கஜேந்திரன், ஒரு தாமரையை பிடுங்கி பகவான் மீது வீசி, தன் நன்றியை தெரிவித்து, பகவானை துதி செய்ததாக புராணம் கூறுகிறது. இப்படி ஆபத்து காலத்தில், பகவானை அழைத்து, துதி செய்து,பகவான் தரிசனம் பெற்ற கஜேந்திரன் மோட்சம் பெற்றான். பட்டத்ரி இந்த சரித்திரத்தை ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னிதியில் சொல்லி, “ஹே குருவாயூரப்பா… இது சத்தியமா?’ என்று கேட்க, குருவாயூரப்பனும், “அந்த கஜேந்திரன் போட்ட தாமரைப் புஷ்பம், இதோ இன்னும் என் கையில் இருக்கிறதே…’ என்று சொல்லி தலையை அசைத்தானாம். இப்படி சரித்திரம் உள்ளது. ஆபத்து காலத்தில் உதவக் கூடியவன் அந்த ஆபத்பாந்தவன்தான். *