Daily Archives: பிப்ரவரி 2nd, 2011

தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது: இலவசத்தால் வந்த பலன்

தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 

மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.

 

இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி – சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், “டிவி’ என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

 

இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

 

இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம் வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது.தமிழக அரசின் மாநில திட்டக்குழு வகுத்துள்ள, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

 

மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு, 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில்துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.

 

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆச்சு?

 

கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் துவக்கப்படவே இல்லை. பல திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளன.தமிழக அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மார்ச் 19ம் தேதி தாக்கல் செய்தது. இதில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ள முக்கிய திட்டங்கள் வருமாறு:
* நவீன முறையில் தூய்மையாகவும், துரிதமாகவும் பாலை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்யவும், கோவை ஆவின் நிறுவனம், 27 கோடி ரூபாயில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் உதவியோடு நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.
* தஞ்சை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில், கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டம், 376 கோடியிலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 164 கோடியிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 69 கோடி ரூபாயிலும் என, மொத்தம், 609 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே போன்ற அறிவிப்பு, இந்த ஆண்டு கவர்னர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. பணிகள் துவக்கப்படவில்லை.
* இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வீடுகள் கட்டிக் கொடுக்கவும், 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
* மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, “ஆங்கிலம் – ஆங்கிலம் – தமிழ் அகராதி’, வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.
* மத்திய அரசின் நிதி உதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் துவக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன், ஏழு புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலிடெக்னிக் கூட புதிதாக துவக்கப்படவில்லை.
* திருவண்ணாமலையில், ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை இதற்கான கட்டுமானப் பணிகளை துவக்கவில்லை.
* வரும் நிதியாண்டில், தமிழக மின்வாரியம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலம், 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என வழக்கம் போல அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
* வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப் பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் திட்டம், 1,800 கோடி ரூபாயில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டியதோடு சரி. பணிகள் துவக்கப்படவில்லை.
* யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்றவற்றை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத உதவித் தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கும் பணி ஏதும் துவக்கப்படவில்லை.இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

நன்றி-தினமலர்

`பைஜாமா’

`பைஜாமா’ என்ற தொளதொள ஆடைக்கு நீண்ட வரலாறு உண்டு. `பைஜாமா’ என்ற வார்த்தை, இரண்டு பெர்ஷிய வார்த்தைகளில் இருந்து தோன்றியது. இந்த ஆடையைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்களும், பெர்ஷியர்களும்தான்.

அப்போதெல்லாம் ஐரோப்பியர்கள் இரவில் பகல் நேர ஆடையிலேயே உறங்கிவிடுவார்கள். 16-ம் நூற்றாண்டு வரை இரவு நேர உடை என்று எதுவும் கிடையாது. அதன்பிறகு, பகல் நேர உடையிலேயே சில மாறுதல்களைச் செய்து இரவு உடையாக உடுத்தினார்கள்.

பதினேழாம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவுக்கு பைஜாமாக்கள் அறிமுகமாயின. ஆனால் அது இரவு உடையாக பயன்பாட்டுக்கு வர மேலும் நூறு ஆண்டுகள் ஆயின. ஆண்களும், சிறுவர்களும் மட்டுமே முதலில் பைஜாமா அணிந்தனர். 1900-களின் தொடக்கத்தில்தான், இது ஒரு வசதியான உடை என்று பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் தெரியவந்தது.

ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்…

`தம்பதியர் இருவரும் இணைந்து ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பது குடும்பத்திற்கும், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் அதிக நன்மை தரும்’ என்கின்றனர், உளவியல் ஆய்வாளர்கள்.

தம்பதியர் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும்போது அங்கே ஈகோ எட்டிப் பார்க்காது. ஒருவருக்கொருவர் வேலையில் இருக்கும் நெருக்கடிகளை தெரிந்து கொள்வதால் பரஸ்பரம் உதவிகரமாக இருப்பார்கள். இதனால் பல்வேறு நிறுவனங்களில் தம்பதியர் இருவரும் ஒன்றாக பணிபுரிவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம். இருவருக்கும் இணைந்து பேசப் பழக அதிக நேரம் கிடைக்கும். வீட்டுக்கு செல்வது, வீட்டிலிருந்து அலுவலகம் வருவது என இருவருக்குமே பாதுகாப்பான பயணம். அலுவலகப் பணி காரணமாக தாமத மானாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பக்குவமும் ஏற்படும். இருவருக்குள்ளும் ஒற்றுமை உணர்வு, பரிவு, பாசம் அதிகரிக்கும். `நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா?’ போன்ற தேவை யற்ற சிக்கல்கள் வராது. மேலும் வேறு வகை யிலான சந்தேகம், சண்டை, வாக்குவாதம் என அனைத்தும் மறைந்து போகும்” என்கிறார் கள்.

மும்பையை சேர்ந்த பிரபல சைக்காலஜிஸ்ட், தம்பதியர் இணைந்து வேலை செய்வதை வெகுவாக வரவேற்கிறார். “வேலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அல்லது வேலையை கட்டாயமாக முடிக்கவேண்டும் என்ற அவசரமான, அவசியமான சூழலில், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும், மற்றொருவர் அந்த வேலையை முடித்துக் கொடுப்பார். இதனால் அவர்களுடைய வாய்ப்புகள் பறிபோகாது. பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றையும் இருவரும் பகிர்ந்து வேலையை முடிப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இருவரும் இணைந்து பணியாற்றுவதால் நிறுவனத்துக்கு லாபமும் அதிகம்” என்கிறார்.

கொல்கத்தாவை சேர்ந்த மனஅழுத்த நிபுணர், “இதுவொரு நல்ல விஷயமாகும். பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் இன்றைய இயந்திரத்தனமான உலகில் மனிதனின் மனதில் ஏற்படும் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதனால் அவர்களுக்குள் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பு தன்மையும் அதிகரிக்கும். அவர்களுக்கு இடையே நட்பு பாராட்டப்படும். இப்படி ஒரே நிறுவனத்தில் இருவரும் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சி அதிகரித்து, தங்களது குடும்பத்தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்வார்கள். பொருளாதார ரீதியாக வீடு, நிலம், சொத்து மற்றும் வங்கி சேமிப்பு என திட்டமிடல் அதிகரிக்கும். இருவருக்குள்ளும் எச்சரிக்கை உணர்வும், பரஸ்பரம் உதவும் மனப்பான்மையும் மேம்படும்” என்கிறார்.

ஐந்தாண்டு திட்டங்கள்

இந்தியாவில் திட்டமிடல் முறையில்  பல முற்போக் கான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பொருளாதாரத் திட்டமிடல் என்பது அரசியலும், பொருளாதாரமும் இணைந்த ஓர் இயங்கியல் அணுகு முறையாகும். கடந்த 57 ஆண்டுகளில் திட்டமிடல் முறையில் மாநிலங்களின் பங்கு முதன்மை பெற்று வருகிறது. மாநிலத் திட்டக்குழுவை இந்தியாவிலேயே முதன் முறையாக 1971-ஆம் ஆண்டில், தமிழ் நாட்டின் சமுதாய, பொருளாதாரத் தளத்தில் திட்டமிடல் கொள்கை புதிய உந்துதலைப் பெற்றது. தமிழ் நாடு பல்வேறு துறைகளில் சீரான வளர்ச்சியை எட்டு வதற்கு இது வழிகோலியது.

1920-ஆம் ஆண்டு முதல் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தே தமிழ்நாடு, சமூகநீதிக் கொள்கையைக் கடைப் பிடித்து, கல்வி, வேலைவாய்ப்புகளில் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. இதன் தொடர்ச்சி யாக, நாடு விடுதலை அடைந்த பின்னரும், வேளாண்மை, தொழில், பணித் துறைகளின் முன்னேற்றத்திற்கும், சமுதாய நலத்திட்டங் கள் சிறப்புற நிறைவேறுவதற்கும் தமிழ்நாடு அரசு திட்டங் களைத் தீட்டி செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் எளிய மக்கள் பங்கு பெற்றுப் பயனடைவதில்தான் உண்மையான சமூக, பொருளாதார மாற்றத் தையும், சமத்துவத்தையும் காணமுடியும். இந்த அணுகுமுறையின் அடிப்படையில் பதினோ ராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்கி, ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை அறிக்கையை 2006-ஆம் ஆண்டில் மாநிலத் திட்டக் குழு வெளியிட்டது.

மாநிலத் திட்டக்குழு ஒவ்வொரு வல்லுநர் குழுக்களை அமைத்தது அரசுத் துறைத் தலைவர்கள், வல்லுநர்கள் ஆகியோர்  இக்குழுக்க ளில் இடம்பெற்று, திட்டத்திற் கான கருத்துக்களை வழங்கினர். அனைத்து தரப்பினரின் கருத்துக்களைப் பெற்ற திட்டக் குழுவானது அவற்றை ஆய்ந்து பதினோ ராவது ஐந்தாண்டுத் திட்டத்தை ஒரு “மக்கள் திட்டமாக’ வடிவமைத்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக் காரணிகளை உரிய முறையில் சீரமைத்து, அனைத்துத் துறை களிலும் உள்ள வேறுபாடு களை நீக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதே திட்டமிடுதலின்கொள்கைகளும், செயல்பாடுகளும் ஆகும். இந்த உயரிய நெறிகளைப் பின்பற்றி தமிழ்நாடு சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியை அடைவதில் வெற்றி பெற்று வருகிறது. சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியைக் குறிக் கோளாகக் கொண்ட தமிழகம், நிலையான வளர்ச்சியடைந்து, இந்திய மாநிலங்களுக் கிடையே சமூக- பொருளாதாரத் தளங்களில் முற்போக்கான மாநிலமாகத் திகழ்கிறது. சமூகநீதியின் உயர் நெறியான இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றி, சமூகநலத்துறை களில் பொதுச் செலவைப் பெருக்கி, கடந்த 100 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளும், திட்டங்களும் தமிழ் நாட்டில் இயைந்த வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றன. துறைவாரியான வளர்ச்சி நிலை களில் மேம்பாடு காணப்பட்டாலும், சில துறைகளின் வளர்ச்சிப் போக்கில் ஏற்ற இறக்கங்கள் தென்படுகின்றன. நாடு விடுதலை அடைந்த போது, ஒருவேளாண் பொருளாதாரமாக இருந்த தமிழகம், இன்று தொழில், பணித் துறைகளின் முன்னேற்றத்தினால், நவீனப் பொருளாதாரமாகத் திகழ்கிறது வேளாண் துறை சந்திக்கும் எல்லாவித இடர்ப்பாடு களையும் களைந்து, அவ்வப்போது, பருவ மழையின்மை, வெள்ளப் பெருக்கு ஆகிய காரணிகளால், எழுகின்ற சிக்கல்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கான செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண் துறையில் அதிக வளர்ச்சி அடைவதே, ஊரகப் பகுதிகளில் வருமானத்தை அதிகரிப் பதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் உரிய திறவுகோலாகும். மேலும், வேளாண் துறையில் முன்னேற்றமானது, தொழில்நுட்பத்தின் வழியாகவும், விவசாயி களின் மேம்பாட்டு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டும் அமைந்திடல் வேண்டும். பதினோராவது திட்டக்காலத்தில் தமிழ்நாடு 9 விழுக்காடு வளர்ச்சி அடை வதற்கு இலக்குகள் வகுக்கப் பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிற மனிதவளர்ச்சிக் குறியீடுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, மாவட்டங்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைய செயல் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். முக்கியமான பொருளாதாரக் குறியீடுகளைக் கவனிக்கும் பொழுது, பொருளாதார முன்னேற்றம் கடந்த பத்தாண்டுகளில், ஆண்டுதோறும் 5.8 விழுக்காடாகவும், மக்கள்தொகை வளர்ச்சி 0.9 விழுக்காடாகவும், வேலைவாய்ப்பின்மை 1999-2000, 2004-05 ஆகிய ஆண்டுகளுக் கிடையே 0.25 விழுக்காடாகவும் இருந்தது. எனவே, இத்திட்டக்காலத்தில், வேலை வாய்ப்பை ஏற்படுத்து வதிலும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும், ஊரக, நகர்ப்புற மக்களின் வாழ்க்கைநிலையை உயர்த்துவதிலும் புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

திட்டமானது, நீடித்த, சுற்றுச் சூழல் மேம்பாட்டுடன் கூடிய வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. நீடித்த, சமச்சீரான பொருளாதார வளர்ச்சிக் காரணிகளையும் இணைத்து தமிழ்நாடு மேம்பாடடைவதற்கு ஏற்ப இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாவது திட்டக்காலத்தில் மாநிலத்தின் பொருளாதார நிலை பொருளாதார வளர்ச்சி பத்தாவது திட்டக் காலத்தில் தமிழ்நாடு, ஆண்டுதோறும் 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, உண்மை விலையில் (ஏநஉட ண்ய்  ழ்ங்ஹப்  ற்ங்ழ்ம்ள்) அடையும் என எதிர் பார்க்கப்பட்டது. எனினும் 6.8 விழுக்காடு வளர்ச்சியையே அடைய முடிந்தது. மோசமான பருவநிலை, இயற்கைச் சீரழிவு ஆகியவற்றால் முதன்மைத் துறையின் வளர்ச்சி குறைந்ததே இதற்கு காரணமாகும். பொருளாதாரமானது ஒன்பதாவது திட்டக்காலத்தில் ஆண்டு தோறும் சராசரியாக 4.8 விழுக்காடு வளர்ச்சியையும், பத்தாவது திட்டக் காலத்தில் 6.8 விழுக்காடு வளர்ச்சி யையும் எட்டியது. பத்தாவது திட்டக் காலத்தில் மூன்றாம் துறை 7.7 விழுக்காடு வளர்ச்சி பெற்றது. முதன்மைத் துறை ஆண்டுதோறும் 2.57 விழுக்காடு குறைந்த வளர்ச்சியைப் பெற்றதால் பொருளா தாரத்தில் பின்னடைவு ஏற்பட காரணமாக அமைந்தது. இரண்டாம் துறை 7.5 விழுக்காடு என்ற வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது.

தலா வருமானம்

தமிழ்நாடு 2004-05ஆம் ஆண்டு தலா வருமானத்தில், தேசிய அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்தது. ஒன்பதாவது திட்டக் காலத்தில் எய்திய 3.5 விழுக்காடு வளர்ச்சி யுடன் ஒப்பிடும்பொழுது பத்தாவது திட்டக் காலத்தில் ஆண்டுதோறும் 5.7 விழுக்காடு வளர்ச்சி எய்தப்பட்டுள்ளது.

வேளாண் துறை

வேளாண் துறையானது மாநில, தேசிய அளவில் ஊரக மக்களுக்கான முக்கிய வாழ்வாதாரமாக விளங்குகிறது. வளர்ச்சியில், வேளாண்துறையின் பங்கு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந் தாலும், பொருளா தாரத்தில் அத்துறை உருவாக்கும் தாக்கத் தைக் குறைத்து மதிப்பிடமுடியாது.
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் வேளாண்மைக்கும் அதன் துணைத் துறைகளுக்கும் 4 விழுக்காடு வளர்ச்சியும், ஆண்டுதோறும் 106.38 இலட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானிய உற்பத்தியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கக் காலங்களில் காணப்பட்ட வறட்சி காரணமாக இந்த இலக்கைவிட குறைவான வளர்ச்சியையே அடைய முடிந்தது.

கடுமையான வறட்சி, வெள்ளம், சுனாமி ஆகியவற்றின் காரணமாக பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் கால இலக்கான 106.38 இலட்சம் மெட்ரிக் டன்கள் உணவு உற்பத்தியை அடைய முடியவில்லை. பத்தாவது திட்டக் காலத்தில் சராசரி உணவு தானிய உற்பத்தியானது 63.78 இலட்சம் மெட்ரிக் டன்னாகும். இது ஒன்பதாவது திட்டக் கால உற்பத்தியான 85.33 இலட்சம் மெட்ரிக் டன்னைவிடக் குறைவானதாகும்.

இந்தியாவில், மக்களின் நிலவுடைமை அளவு குறைவாகவுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். சராசரி நிலவுடைமை 1976-77இல் 1.25 எக்டேராக இருந்தது. தற்போது 1 எக்டேராகக் குறைந்துள்ளது. மேலும் 59 ஆவது தேசிய மாதிரி ஆய்வான “”விவசாய குடும்பங் கள் கடன்படுதல் மூலம் விவசாய குடும்பங்கள் அதிகளவு கடன்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு சிறு-குறு விவசாயிகளின் தனித்தன்மை வாய்ந்த, நலிவுற்ற நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

தொழில் துறை

பத்தாவது திட்டக் காலத்தில் இரண்டாம் துறையின் இலக்கு 7.12 விழுக்காடாக இருந்த போதிலும், இத்துறை ஆண்டுதோறும் 7.5 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது. இது ஒன்பதா வது திட்ட காலத்தில் அடைந்த வளர்ச்சி வீத மான 2.15 விழுக்காட் டைக் காட்டிலும் குறிப் பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இரண்டாம் துறையின் உற்பத்தித் துறை வளர்ச்சி வீதமானது 8.19 விழுக்காடாகவும், கட்டுமானத் துறையின் வளர்ச்சி வீதம் 6.4 விழுக்காடாகவும் உள்ளது.

இத்தொழில்களின் வளர்ச்சி ஆற்றலைப் போற்றி வளர்த்தெடுப்பது பதினோராவது திட்டக் காலத்திலும் தொடரவேண்டும். பதிவு செய்யப்படாத தொழில் உற்பத்தி துறை ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சி பெற்று வரினும், உள்கட்டமைப்பு வசதிகள், கடன், தொழில்நுட்பம் ஆகியவை போதிய அளவு கிடைக்காத காரணத்தால், இத்துறை பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலைமை உள்ளது. இத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் அதைக் களைய உரிய நடவடிக்கைகளைப் பதினோராவது திட்டக் காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.

பணித்துறை பத்தாவது திட்டக் காலத்தில் மூன்றாம் துறையின் வளர்ச்சி இலக்கு 9.77 விழுக் காடாக நிர்ணயிக்கப்பட்டது. திட்டக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்த முடியாவிட்டாலும், பொருளாதாரத்தில் இத்துறை பெரும் தாக்கத்தை சந்தேகத்திற் கிடமின்றி ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் துறையானது வேகமாக வளரும் துறையாகும். ஒன்பதாவது திட்டக் காலத்தில் எய்தப்பட்ட 6.98 விழுக் காடு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது பத்தாவது திட்டக் காலத்தில் 7.72 விழுக்காடு வளர்ச்சி எய்தப்பட்டது. 2004-05-இல் உயர்ந்த அளவான 11.62 விழுக்காட்டை எட்டியது. பணித்துறையின் வளர்ச்சிக்கு காரணமான  அதன் உட் பிரிவான தகவல் தொடர்பில் 14.8 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. பணித்துறையின் வளர்ச்சியானது மாநிலப் பொருளாதாரத்தின் அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினி மென்பொருள், வன்பொருள் உற்பத்தியில் தமிழ்நாடு நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2005-06 இல் ரூ.14,115 கோடி அளவுக் குத் தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளது. இதன் அளவு 2006-07இல் ரூ.20,700 கோடியாக உயர்ந்துள் ளது. இத்துறையினால் வேலை வாய்ப்பு பெருகுவதால் இதன் வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. எனினும், வேளாண்மை சாராத துறை வளர்ச்சியின் விளைவாக ஊர்ப் புறங்களில் இருந்து பெரிய நகரங் களுக்குத் தொழி லாளர்கள் பெருமள வில் வருவதை வேளாண்மை சாராத துறையை அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கச் செய்வ தன் வாயிலாகவும், நகர்ப்புறத்திற்கு நல்ல குடிமை வசதிகளை அளிப்பதன் வாயிலாகவும் எதிர்கொள்ள இயலும்.

மக்கள்தொகை வளர்ச்சி

மாநிலத்தின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு 6.24 கோடியாக உள்ளது. கடந்த பத்தாண்டுக் காலத்தில் இதன் வளர்ச்சி வீதம் 11.72 விழுக்காடாகும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இந்த வளர்ச்சி வீதத்தை 11.72 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக 2011-ஆம் ஆண்டில் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் கணிக்கப் பட்ட மக்கள் தொகை விவரப்படி பதினோராவது திட்ட இறுதியில் மக்கள் தொகையானது 6.79 கோடியாக இருக்கும் எனத்தெரிகிறது. இதன்படி 2001இலிருந்து 2012 வரை வளர்ச்சி வீதம் 8.7 விழுக்காடு ஆக இருக்கும். இந்த கணிப்பின்படி ஊர்ப்புறங் களில் மக்கள் தொகை 13.4 விழுக்காடு குறைந்தும், நகரப் பகுதிகளில் 37 விழுக்காடு அதிகரித்தும் காணப்படும்.

உள்கட்டமைப்பு

தமிழகத்தில் சாலைவசதியானது 1,88,700 கி.மீ உள்ளது. மேலும் சாலை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தற்போது முன்னணி வகிக்கிறது. மாநிலத்தில் சாலை அடர்த்தியானது ஒரு இலட்சம் மக்கட்தொகைக்கு 286 கி.மீ. எனவும், 100 ச.கி.மீட்டருக்கு 137 கி.மீ. எனவும் உள்ளது. இது தேசிய அளவில் முறையே 258 கி.மீ., 75 கி.மீ.ஆக உள்ளது. பத்தாவது திட்டக் காலத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள குடியிருப்புகள் அனைத் திற்கும் அனைத்து பருவங்களுக் கும் ஏற்ற சாலைகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.

பத்தாவது திட்டக் காலத்தில், மின்சாரம், சாலை, தொலைபேசி, இணையதளம், பள்ளி, தூய்மையான நீர், துப்புரவு வசதிகளை 2010ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டது. பழைய வரையறைப்படி அனைத்து ஊர்ப்புறங்களும் மின்சார வசதி பெற்றுள்ளன. மேலும், தமிழகத்தின் அனைத்து ஊர்ப்புறங்களும் கிராம பொது தொலைபேசி வசதி பெற்றுள்ளன.

குடிநீர்

பத்தாவது திட்டத்தில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கத் திட்டமிடப்பட்டது. மாநிலத்தில் ஊர்ப்புறங் களில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு 40 லிட்டர் வழங்க முன்னுரிமை தரப்பட்டது. எனினும், 2006 செப்டம்பரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 86981 ஊர்ப்புறக் குடியிருப்புகளில் 50529 குடியிருப்புகளுக்கு மட்டுமே முழுமையான குடிநீர் வழங்கப் பட்டது. (40 டஸ்ரீக், அதற்கு மேல்), 35241 குடியிருப்புகளுக்கு பகுதியளவே வழங்கப் பட்டது. 1211 குடியிருப்புகளுக்கு குறைந்த அளவு குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டது. குடிநீர் வழங்கல் வசதியினை அடிப்படை யாகக் கொண்டு நகரங்கள் நன்று, சராசரி, தாழ்வு என தரம் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சென்னை மாநகராட்சி நீங்கலாக 718 நகர உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அவற்றில் 382 நன்று எனவும், 307 சராசரி எனவும் 29 தாழ்வு எனவும் தரம் பிரிக்கப் பட்டுள்ளன.

காடுகள்

2012-ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 25 விழுக்காடு காடுகள் நிறைந்த நிலப்பரப்பாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2006இல் 22877 சதுர கிலோமீட்டர் பரப்பு மாநிலத்தின் காடுகளாக இருக்கின்றன. இது மொத்த நிலப்பரப்பில் 17.59 விழுக்காடாகும். இருப்பினும் 2003-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காடுகள் பற்றிய கணக்கெடுப்பின்படி காடுகள், மரங்கள் சூழ்ந்தபகுதி, மொத்த நிலப்பரப்பில் 21.25 விழுக்காடாக உள்ளது.

முதலீடு

பத்தாவது திட்ட காலத்திற்கான முதலீடு ரூ.2,62,502 கோடி என மதிப்பிடப்பட்டது. அதில் மாநிலம் ரூ.40,000 கோடியை மாநில நிதியிலிருந்தும், ரூ.48,000 கோடியை மத்திய நிதியிலிருந்தும் பெற வேண்டியிருந்தது. எனவே, மாநிலம் மீதமுள்ள ரூ.1,74,502 கோடிக்கு தனியார் முதலீட்டையும், வெளி நாட்டு நேரடி முதலீட்டையும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதில் மாநிலத் திட்ட ஒதுக்கீடான ரூ.40,000 கோடியில் ரூ.37,689.79 கோடி வரவு, செலவுத் திட்டத்தில் (உண்மை நிலையில்) ஒதுக்கப்பட்டது. இது 94.22 விழுக்காடாகும்.

நிதிச் செயற்பாடு

பத்தாவது திட்டக் காலத்தில் தமிழகத்தின் திட்ட ஒதுக்கீடு ரூ.40000 கோடியாக, 2001-02ஆம் ஆண்டு விலையில் நிர்ண யிக்கப்பட்டது. மாநிலம் நடப்பு விலையில் திட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக செலவு செய்துள்ளது. ஆனால் 2001-02 விலையில் 94.2 விழுக்காடு மட்டுமே செலவு செய்ய முடிந்தது.

பத்தாவது திட்டக்காலத்தில் குடிநீர் வழங்கல், வீட்டு வசதி, நகர மேம்பாடு கல்வி, உடல்நலம் ஆகிய சமூகப் பணிகளுக்கு முன்னுரிமை தந்து 33 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரம், சாலை, போக்குவரத்து முதலான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 38 விழுக்காடும், வேளாண்மை, ஊரக மேம்பாட்டிற்கு 26 விழுக்காடும் ஒதுக்கப்பட்டது. பத்தாவது திட்டக் கால வருவாய் வரவில் செயலாக்கத்தின்போது உள்கட்டமைப்புக்கு வழங்கப்பட்ட முன்னுரி மையில் சிறிய அளவில் மாற்றம் அடைந்து சமூக நலத்திற்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.

நிதி ஆதாரங்கள்

தமிழ்நாட்டின் நீடித்தப் பொருளாதார வளர்ச்சிக்காக பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு, ரூபாய் 85344 கோடி நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத் தொகை பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட நிதி ஒதுக்கீடான ரூபாய் 40000 கோடியை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

இந்த திட்டநிதி ஒதுக்கீடு கீழ்க்காணும் இனங்களின் அடிப்படையில் அமையும். 1) மாநிலத்தின் சொந்த நிதியாதாரத்திலிருந்து திரட்டப்படும் நிதியளவு ரூ.17498.78 கோடியாகும். 2) நடுவண் அரசின் நிதியுதவி ரூ.15873.19 கோடியாகும். 3) மாநிலம் எழுப்பும் கடன் வழியாக பெறப்படும் நிதி ரூ.55708.50 கோடியாகும். 4) மாநில பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்மறை பங்களிப்பு ரூ. 5336.47 கோடி. 5) உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு ரூ.1600 கோடி. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 2006-07-ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் மொத்த முதலீடு ரூ.649330 கோடியாகும். இத் தொகையில் மாநிலத்தின் முதலீடு ரூ.85344 கோடியாகும். பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் நடுவண் அரசுத் துறைகளின் முதலீடு ரூ.128935 கோடியாக இருக்கும். இத்தொகை பத்தாவது ஐந் தாண் டுத் திட்டத்தின் மதிப்பீடான 18 விழுக்காட்டை விட அதிகரித்து 20 விழுக்காடாக அமையும். இந்த மொத்த முதலீட்டுத் தொகையில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ.435051 கோடியாக இருக்கும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தனியார் முதலீட் டின் பங்களிப்பான 66 விழுக் காட்டைவிட, ஒரு விழுக்காடு உயர்ந்து, பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் மொத்த முதலீட்டில் தனியார் துறையின் பங்களிப்பு 67 விழுக்காடாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நன்றி-நக்கீரன்

3 வகை மனித இனங்கள்!

சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் 3 வகை மனித இனங்கள் இருந்திருக்க வேண்டும் என்ற புதுச்செய்தியைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். கடைசிப் பனியுகத்தின்போது, நவீன மனிதர்கள், நியாண்டர்தால்கள், டெனிஸோவன்கள் என்று தெளிவான மூன்று இன மனிதர்கள் பூமியில் உலவித் திரிந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

நியாண்டர்தால்கள் இருந்தது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. அவர்களுடன், அதிசயமான ஒரு புதிய மனித இனமும் பூமியில் காணப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

டெனிஸோவன்கள் என்ற அந்தக் குகை மனிதர்களின் பல் மற்றும் கை விரல் எலும்புகள் சைபீரியாவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் இருந்து அந்த மனிதனின் டி.என்.ஏ.வும் எடுக்கப்பட்டிருக்கிறது.

கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள், ஐந்து முதல் ஏழு வயதுச் சிறுமிக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடும் என்பது வரை விஞ்ஞானிகள் துல்லியமாகக் கூறுகிறார்கள். அவளின் பற்கள், நவீன மனிதர்களுடையதைப் போல இல்லாமல் அவர்களின் மூதாதையரான `ஹோமோஎரக்டஸ்’ போன்றிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது, அப்பெண் ஒரு புதிய இனத்தைச் சேர்ந்தவள் என்பதை உறுதிப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். காரணம், `ஹோமோஎரக்டஸ்’ மனிதர்கள் நவீன மனிதர்களுக்கு 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார்கள்.

ஏற்றுமதி எழுச்சி தொடருமா?

சென்ற டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 36.4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 2,250 கோடி டாலர் ஆகும். கடந்த 33 மாதங்களில் இதுவே அதிகபட்ச ஏற்றுமதி. இது ஒரு சாதனை எனலாம்.

பொதுவாக, ஒரு நிதி ஆண்டில், கடைசி மூன்று மாதங்களில் ஏற்றுமதி அதிகரிப்பது வாடிக்கை. எனவே, 2011-ம் ஆண்டில், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஏற்றுமதி மேலும் கணிசமாக அதிகரிக்கும் என்பது மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கணிப்பு.

அதிக அளவில் ஏற்றுமதியான பொருள்கள் ஜவுளி, சிறிய மோட்டார் வாகனம், உருக்கு, உருக்கு சார்ந்த மெஷின்கள் உள்ளிட்ட பொறியியல் உற்பத்திப் பொருள்கள், ரசாயனம், மருந்துவகை, மின்னணுப் பொருள்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், தோல் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள்.

ஏற்றுமதியில் சரிவைச் சந்தித்த பொருள்களும் உண்டு. முக்கியமாக தேயிலை. காரணம், இந்த ஆண்டு தேயிலை விளைச்சல் மிகவும் குறைந்தது. அதேபோல், பழங்கள், காய்கறி, வெங்காயம் ஆகியவை ஏற்றுமதியில் வீழ்ச்சி கண்டன. வெங்காயம் பற்றி சொல்லவே தேவையில்லை. அதன் ஏற்றுமதிதான் தடை செய்யப்பட்டுள்ளதே!

மற்றபடி, அண்மைக்காலமாக, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு அரசின் ஊக்குவிப்பு, சலுகைகள் தவிர, வேறு சில முக்கியமான காரணங்கள் உள்ளன: வழக்கமாக நாம் ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளை மட்டும் நம்பி இராமல், ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

அடுத்து, சர்வதேசப் பொருளாதார மந்த நிலையிலிருந்து மெல்ல, மெல்ல மீட்சி அடைந்துவரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேவை அதிகரித்து வருகிறது.

முக்கியமாக ஓர் உணர்வுபூர்வமான காரணமும் உண்டு. குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பைப் பயன்படுத்துவதில்லை என்ற உண்மை, வெளிநாட்டு இறக்குமதியாளர்களை உரிய வகையில் சென்றடைந்துள்ளது. இது ஒரு நல்ல திருப்பம்.

உதாரணமாக, காஷ்மீர் மற்றும் லக்னௌ போன்ற வடமாநிலங்களில் தயாரிக்கப்படும் கலை அழகு மிளிரும் நேர்த்தியான கம்பளங்கள், தரைவிரிப்புகள் (கார்பெட்) ஆகியவற்றுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அவற்றின் ஏற்றுமதி முன்பைவிட கணிசமாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு செயல்படுத்திவரும் ஊக்குவிப்புத் திட்டங்கள், புத்துயிர்த் திட்டங்களின் பயனாக பொருள்களின் விலையை முடிந்த அளவு குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில், கடந்த காலங்களைவிட, இப்போது இந்திய ஏற்றுமதியாளர் மீதுள்ள நன்மதிப்பு, நல்லெண்ணம் உயர்ந்துள்ளது. இதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏற்றுமதியாளர்கள் அரும்பாடுபட வேண்டும் என்பது வெளிப்படை.

பொருளாதார வல்லுநர்களின் கணிப்புப்படி, அமெரிக்காவின் இறக்குமதி எதிர்காலத்தில் 15 சதவீதம் குறையும்; ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதி 10 சதவீதம் குறையக்கூடும். காரணம், அந்த நாடுகளில் பொருளாதார மீட்சி முழுமையாக ஏற்படவில்லை என்பதே.

இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஓர் அச்சுறுத்தல். இந்நிலையில், ஏற்றுமதியில் எழுச்சி தொடர வேண்டும் எனில், உலகிலுள்ள புத்தம் புதிய சந்தைகளை அடையாளம் கண்டு, அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தீவிரம் காட்டியே ஆக வேண்டும்.

உதாரணமாக, கஸகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளில் சுபீட்சம் அதிகரித்துள்ளது மட்டுமல்ல. அங்கெல்லாம் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது.

ரஷியா, உக்ரைன் போன்ற நாடுகள் இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்வதில் நாட்டம் கொண்டவர்கள். குறிப்பாக, பொறியியல் துறைப் பொருள்களைப் பொறுத்தவரை, கொலம்பியா, பிரேசில் போன்ற நாடுகளின் புதிய சந்தைகள், சீனப் பொருள்களைவிட இந்தியப் பொறியியல் பொருள்களையே இறக்குமதி செய்ய விரும்புகிறார்கள். காரணம், நியாயமான விலை, நல்ல தரம் என்பதே.

இது ஒருபுறம் இருக்க, அரசுத்தரப்பில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பல உண்டு. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டாலே அல்லாமல் ஏற்றுமதிப் பெருக்கத்துக்கு வழி காண முடியாது.

நெடுஞ்சாலைகள் மேம்பாடு, துறைமுகங்கள், விமானக் கூடங்கள் நவீனமயமாக்கம் ஆகியவை உடனடித் தேவை. பெங்களூர், ஹைதராபாத், தில்லி உள்ளிட்ட சில விமானக் கூடங்கள் உலகத்தரத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. எனினும், நாட்டின் எட்டுத் திசைகளிலும் உள்ள விமானக்கூடங்கள், சரக்குப் போக்குவரத்துக்கு ஏதுவாக, குறிப்பிட்ட காலவரம்புக்குள் நவீனமயமாக்கப்பட வேண்டும்.

சரக்குப் பெட்டக வசதிகள், குளிர்சாதனப் பண்டகசாலைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டும். குளிர்சாதன வசதியுடன் கூடிய மோட்டார் “வேன்’கள் போன்ற வசதியை அதிகரிப்பதுடன், நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் பரவலாக்கப்பட வேண்டும். 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருப்பதால், மேற்கூறிய திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்று நம்புவோம்.

ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு ஜவுளித்துறை, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, தோல் பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு அண்மையில் ரூ. 1,052 கோடி அளவுக்குச் சலுகைகள் வழங்கியுள்ளது. அதிக தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழில்களைத் தேர்வு செய்து ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கதே.

பொறியியல் துறை மற்றும் ரசாயனப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, ஏற்கெனவே, அதாவது சென்ற ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்ட சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மூலதனப் பொருள்களின் ஏற்றுமதிக்கு முற்றிலும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 2012 மார்ச் வரை தொடரும்.

வரிச்சலுகை பாஸ் புத்தகத் திட்டம் நடப்பாண்டு ஜூன் 30-ம் தேதி முடிவுக்கு வருகிறது. இது ஒரு முக்கியமான திட்டம். நீண்டகாலமாகச் செயல்படுத்தப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பு இதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. எனினும், அந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில், இத்திட்டத்துக்கு மாற்றாக, வேறு சலுகை அளிப்பது அவசியம்.

இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகம் விரைந்து செயல்பட்டு, ஏற்றுமதியாளர்களின் நலன் காக்க வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் எதிர்ப்பை அமெரிக்கா போன்ற நாடுகள் எப்படிச் சமாளிக்கின்றன என்பது உலகறிந்த ரகசியம்!

அமெரிக்க விவசாயிகளுக்கு விதிமுறைகளுக்குப் புறம்பாக, அப்பட்டமாக வழங்கப்படும் சலுகைகள் கடுகளவும் குறையாத வகையில், புதிய, புதிய உருவில் இன்றளவும் தொடருகின்றன என்பதே உண்மை.

ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி அளவும், டாலர் மதிப்பும் அதிகரித்துள்ளது என்பதையே மனத்தில்கொண்டு, அவற்றுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைக்க இருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இது முறையல்ல.

நிதி நிலையைக் காரணம் காட்டி, எந்த ஒரு துறைக்கும் சலுகைகளைக் குறைப்பதற்கு இது தருணம் அல்ல. இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஏற்றுமதியாளர்களுக்குத் தீராத தலைவலியாக இருப்பது, சிக்கலான நடைமுறைகளும், முடிவில்லாத காகிதப் பணிகளும்தான். காலம் கடந்தாவது, மத்திய அரசு இதனை உணரத் தொடங்கியுள்ளது.

பல்வேறு ஆவணங்களையும், சான்றிதழ்களையும் தயாரிப்பதில் ஆகும் கால விரயமும், பண விரயமும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஒருவர் ஏற்றுமதி செய்யும் மதிப்பில் குறைந்தது 7 முதல் 10 சதவீதம்வரை இதற்கு செலவாகிறது.

இந்தத் தகவல் வர்த்தக அமைச்சகத்தால், ஆய்வு செய்யப்பட்டு, கண்டுள்ள அதிகாரப்பூர்வமான தகவல். இந்தச் செலவில் பாதி குறைந்தால்கூட, ஏற்றுமதிப் பொருள்களின் விலை அந்த அளவு குறைந்து, போட்டியை எதிர்கொள்வதற்கு உதவும்; ஏற்றுமதியாளர்களின் லாபமும் சற்று உயரும்.

இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், “”நம்பிக்கை அடிப்படையிலான” புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு யோசித்து வருகிறது. அதன்படி, ஏற்றுமதியாளர்கள் தரும் சுய அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு நிபந்தனை: அந்த அறிக்கை உண்மை என்பதற்கு அறிகுறியாக, ஒரு சார்டர்டு அக்கவுண்டென்ட் கையெழுத்து போட வேண்டும்.

அதேபோல், சுங்கத் துறை, கலால் துறை, சேவை வரித்துறை, அந்நிய வர்த்தகத் துறை எனப் பல்வேறு துறைகளின் ஒப்புதல்களைப் பெற வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்கெனவே கணினி மயமாக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரே ஒரு “பத்திரத்தை’த் தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும், அந்தப் பத்திரத்தின் அடிப்படையில் செயல்படலாம் என்ற யோசனையும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த யோசனைகள் ஏட்டளவில் நின்றுவிடாமல் விரைந்து செயல்படுத்தப்பட்டால் நல்லது.

ஏற்றுமதிக்குச் சாதகமாக உள்ள சூழலை நன்கு பயன்படுத்திக்கொண்டு, ஏற்றுமதியாளர்களும் அரசும் முனைப்புடன் செயல்பட்டு, ஏற்றுமதியைப் பெருக்கிட வேண்டும் என்பதே இப்போதைய தேவை.

எக்ஸெல் டிப்ஸ்-2.2.2011

Ctrl-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்
F2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும்.
Ctrl-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம்.
Ctrl-Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.
Ctrl-Shift-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl-’: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl-R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
Ctrl-D: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து கீழே உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
Ctrl-‘: செல்லின் மதிப்பு மற்றும் அதன் பார்முலாக் களை மாற்றி மாற்றி காட்ட இந்த சுருக்கு வழியைப் பயன்படுத்தலாம்.
Ctrl-$: கரன்சி மதிப்பை இரண்டு தசம ஸ்தானங்களுக்கு தரும் வகையில் பார்மட் செய்திட இந்த சுருக்கு வழி பயன்படுகிறது.
கிழமைகளின் பெயர்கள்:
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், செல் ஒன்றில் கிழமைகளின் பெயரை டைப் செய்தால், அந்த பெயரின் முதல் எழுத்து தானாகப் பெரிய எழுத்தாக அமைக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, monday என டைப் செய்தால், அது Monday என மாற்றப்படும். இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. ஏதோ காரணத்தினால், நீங்கள் டைப் செய்தபடியே ‘monday’ அமைய வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கான செட்டிங்ஸ் ஒன்றை எக்ஸெல் தொகுப்பில் அமைத்தால் போதும். ஒர்க்ஷீட்டைத் திறந்து கொள்ளுங்கள். இதில் Tools மெனு சென்று கிடைக்கும் மெனுவில், AutoCorrect என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இப்போது எக்ஸெல் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும். இதில் AutoCorrect என்ற டேப் தேர்ந்தெடுக்கப் படுவதனை உறுதி செய்திடவும். Capitalize Names of Days என்றுள்ள பாக்ஸில் செக் அடையாளத்தை எடுத்துவிட்டால், நீங்கள் விரும்பியபடி முதல் எழுத்து மாற்றப்பட மாட்டாது. பின்னர், ஓகே அழுத்தி வெளியேறவும்.
ஆப்ஜெக்ட் கேன்சல்:
எக்ஸெல் தொகுப்பில் சார்ட் ஒன்றைத் தயாரிக்கையில், அதில் இணைக்கவேண்டியவற்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். தேர்ந்தெடுத்த பின், அவை அனைத்தும் சரியாக நீங்கள் எண்ணியபடி அமையும் வரை, அவற்றின் தன்மைகளை (properties) மாற்றி அமைக்கிறீர்கள். இதில் ஏதாவது ஒன்றை இதிலிருந்து நீக்க வேண்டும் எனில், அதற்கென ஒரு விரைவான வழி உள்ளது.
சார்ட்டில் சேர்க்க வேண்டியவற்றை, கிளிக் செய்து தேர்ந்தெடுக்கிறீர்கள். தவறுதலாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டால், இதனை நீக்க இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கலாம். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது நீக்கப்பட்டுவிடும். இன்னொரு ஆப்ஜெக்ட் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்ற சூழ்நிலையில், எப்படி ஏற்கனவே தேர்ந்தெடுத்ததனை நீக்குவது. மிக எளிய வழி எஸ்கேப் கீயினை அழுத்துவதுதான். எக்ஸெல் உடனே உங்கள் தேர்வை ரத்து செய்கிறது.
எக்ஸெல் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Ctrl+A – அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க
Ctrl+B – போல்ட் பார்மட்டிங் செய்திடவும், அதனை நீக்கவும்
Ctrl+C –– தேர்ந்தெடுத்த சொல்லை காப்பி செய்திட
Ctrl+D -– தேர்ந்தெடுத்த செல்லில் நிரப்ப
Ctrl+F –– தேடுதலுக்கான ஆப்ஷனைக் காட்ட
Ctrl+G -– Go to டயலாக் பாக்ஸ் செல்ல
Ctrl+H –– Find and Replace டயலாக் பாக்ஸ் செல்ல
Ctrl+I –– சாய்வெழுத்து பார்மட்டிங் செய்திடவும் அதனை நீக்கவும்
Ctrl+K –– Hyperlink டயலாக் பாக்ஸ் இணைக்க
Ctrl+L ––– Create list டயலாக் பாக்ஸ் கொண்டு வர
Ctrl+N ––– புதிய பைல் ஒன்றை கொண்டு வர
Ctrl+O ––– புதிய பைல் ஒன்றைத் திறக்க
Ctrl+P –– பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்க
Ctrl+S –– அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் பைலை சேவ் செய்திட
Ctrl+U –– அடிக்கோடினை இடவும் நீக்கவும்
Ctrl+V –– கிளிப் போர்டில் உள்ளதை ஒட்ட
Ctrl+X –– தேர்ந்தெடுத்த சொல்லை கட் செய்து கிளிப் போர்டுக்கு கொண்டு செல்ல
Ctrl+Y –– முந்தைய செயல்பாட்டினை செயல்படுத்த
Ctrl+Z –– மேற்கொண்ட செயல்பாட்டினை நீக்க

லினக்ஸ் தொகுப்பிற்கான பிரவுசர்கள்


லினக்ஸ் பயன்படுத்துபவர்களும், அந்த சிஸ்டத்திற்கென உள்ள அனைத்து பிரவுசர்கள் குறித்து அறிந்திருப்பதில்லை. ஒன்றிரண்டு பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள் மட்டுமே. லினக்ஸ் இயக்கத்தில் இயங்கக் கூடிய மற்ற பிரவுசர்கள் குறித்தும் இங்கு காணலாம்.

1. குரோம்: எந்த சந்தேகமும் இன்றி, குரோம் பிரவுசர் தான் நல்ல வேகத்தில் இயங்கக் கூடிய ஒரு பிரவுசராகும். லினக்ஸ் சிஸ்டத்தில் இயங்க குரோம் மற்றும் குரோம் பிரிமியம் (Chrome and Chromium Browser) என இரண்டு பிரவுசர்கள் கிடைக்கின்றன. குரோம் பிரவுசரின் ஓப்பன் சோர்ஸ் பிரவுசரே குரோமியம் பிரவுசராகும். இரண்டும் ஒரே மாதிரியான வசதிகளை அளிக்கின்றன.

2. பயர்பாக்ஸ்: மொஸில்லா வழங்கும் பயர்பாக்ஸ், வெகுகாலமாக லினக்ஸ் பயன்படுத்து பவரிடையே மிகவும் பிரபலமானது. மேலும், பல லினக்ஸ் தொகுப்பு களுடன், பயர்பாக்ஸ் இணைந்தே இன்ஸ்டால் செய்யப்பட்டு, மாறா நிலை (Default) பிரவுசராகக் கிடைக்கிறது.

3.ஆப்பரா: சில வேளைகளில், லினக்ஸ் பயன்பாட்டில், மற்ற பிரவுசர்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆப்பரா முதலிடம் பெற முயற்சிக்கும். ஆனால் முதல் இடத்தை இதுவரை பெற்றதில்லை. ஆப்பரா பிரவுசரை டவுண்லோட் செய்கையில், அது எந்த வகை லினக்ஸ் சிஸ்டத்தினை, டவுண்லோட் செய்திடும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறது என்று உணர்ந்து, அதற்கேற்ற பதிப்பினை டவுண்லோட் செய்திடத் தந்திடும்.
குரோம் தவிர மற்ற பிரவுசர்களை டவுண்லோட் செய்திடுகையில், குறிப்பிட்ட பிரவுசர் பதிப்பினைச் சுட்டிக் காட்டி, இதனை டவுண்லோட் செய்திடப் போகிறீர்களா என்ற கேள்விக்குப் பதில் பெற்ற பின்னரே, அந்த பிரவுசர் தொகுப்பு இறக்கப்படும்.
இந்த பிரவுசரைப் பெற http://www.opera.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

4.கான்குவரர் (Konqueror): கே.டி.இ. டெஸ்க்டாப் என அழைக்கப்படும் லினக்ஸ் தொகுப்பிற்கு எல்லாமே Konqueror தான். பைல் மேனேஜ ராகவும், பிரவுசராகவும் இதுவே பயன்பட்டது. பின்னர், கே.டி.இ. தயாரித்த குழுவினர், Dolphin பிரவுசரை இதில் மாறா நிலை பிரவுசராக அறிமுகப்படுத்தினர். ஆனால், Konqueror அருமையான ஒரு பிரவுசர் எனப் பல லினக்ஸ் அபிமானிகள் கூறியுள்ளனர். வேறு எந்த பிரவுசரும் தராத சில வசதிகளை இந்த பிரவுசர் தருகிறது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய இன்ஜின் செயல்பாடு உள்ளது.இந்த பிரவுசரை இன்ஸ்டால் செய்கையில் அது KHTML பார்மட் பயன்பாட்டினை இணைத்தே இன்ஸ்டால் செய்கிறது. இந்த பிரவுசரைப் பெற http://www.konqueror.org என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

5. லின்க்ஸ் (Lynx): வெகுகாலமாக, இந்த பிரவுசர் தான் சிறப்பான ஒரே பிரவுசராக இருந்து வந்தது. இணைய தளங்களில் டெக்ஸ்ட் மட்டுமே படிக்க தரப்பட்ட நிலையில், இந்த பிரவுசர் அனைவராலும் பிரியத்துடன் பயன்படுத்தப்பட்டது. கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் தராத சர்வருடன் நீங்கள் இணைப்பேற்படுத்தினால், இந்த பிரவுசர் உங்களுக்கு அதிகப் பலனைத்தரும். எனவே இப்போதைய ஸ்டாண்டர்ட் பிரவுசரில் கிடைக்கும் லிங்க்ஸ், இமேஜஸ், பிளாஷ் அல்லது ஜாவா அப்ளிகேஷன்கள் எதுவும் இந்த பிரவுசரில் கிடைக்காது. இந்த பிரவுசரைப் பெற http://lynx.browser.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

6. எபிபனி (Epiphany): நீங்கள் நம்புகிறீர் களோ, இல்லையோ, எபிபனி பிரவுசர் தான், GNOME டெஸ்க்டாப்பின் மாறா நிலை பிரவுசராக இடம் பெற்றிருந்தது. எபிபனி பிரவுசரை மட்டுமின்றி, அதனுடன் கிடைக்கும் எக்ஸ்டன்ஷன் பேக்கேஜை யும் இணைத்து இன்ஸ்டால் செய்திட்டாலே, அதன் முழு பயனையும் அனுபவிக்க முடியும். இந்த பேக்கேஜ் இன்ஸ்டால் செய்யப்படுகையில், அனைத்து ப்ளக் இன் சாதனங்களும் இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. இந்த பிரவுசரைப் பெற http://projects.gnome.org/epiphany/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

7. அரோரா (Arora): லினக்ஸ் தொகுப்பு மட்டுமின்றி, மேக் மற்றும் விண்டோஸ் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரவுசர். மூன்று சிஸ்டங்களிலும் பயன்படுத்திப் பார்த்த போது, மூன்றுமே திருப்தியாக, பயனளிக்கும் வகையில் இருந்தது. பலருக்கு இது போல ஒரு பிரவுசர் இருப்பதே தெரியாது. இதன் தொழில் நுட்பத் திறன் மிகவும் பாராட்டத்தக்கது. அடிக்கடி கிராஷ் ஆகும் பல பிரவுசர்களுக்கிடையில், மிக வலுவாக, சரிந்துவிடாமல் இயங்கும் நல்ல பிரவுசர் இது. இந்த பிரவுசரைச் சோதித்துப் பார்த்து, மாறிக் கொள்ள விரும்பினால், போக வேண்டிய வலைத்தள முகவரி: http://code.google.com/p/arora/

8.மிடோரி(Midori): எளிமையாகவும் வேகமாக இயங்கக் கூடியதாக ஒரு பிரவுசர் இருக்க வேண்டும் எனத்தான், அனைத்து பிரவுசர் நிறுவனங்களும் இலக்கு வைத்துள்ளன. ஆனால் பல பிரவுசர்கள் இந்த இலக்குகளை அடைவதில்லை. மிடோரி பிரவுசர் இந்த இலக்கினைச் சிறப்பாக அடைந்துள்ளது என்பது ஒரு நல்ல உண்மையாகும். இந்த பிரவுசர் கிராஷ் ஆகாமல் தொடர்ந்து செயல் படக் கூடியது. இந்த பிரவுசருக்கென ஆட் ஆன் தொகுப்பு, பிளக் இன் புரோகிராம்கள், தீம்ஸ் போன்றவை எதுவும் இல்லை. இதன் இஞ்சின் தரும் வேகமான இணையச் செயல்பாடு குறிப்பிடத்தக்க தாகும். இந்த பிரவுசரைப் பெற http://www.twotoasts.de /index.php?/ pages/midori_summary.html என்ற முகவரி யில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

9.நெட்சர்ப் (Netsurf): சுண்டெலியைப் போலச் சிறியதாகவும், சிறுத்தையைப் போல வேகமாகவும் செயல்படும் இந்த பிரவுசர், இணையத்தில் கிடைக்கும் இலவச பிரவுசர். அதிவேகமாகச் செயல்படும் பிரவுசர்களில் இதுவும் ஒன்று. ஆனால் இன்னும் இது சோதனைத் தொகுப்பாகவே உள்ளது. பல புதிய வசதிகளை இன்னும் இது கொண்டிருக்கவில்லை. ஆனாலும், தயாரிப்பின் தொடக்கத்தில் இருந்தாலும், விளம்பரங்களைத் தடுக்க, பபர் அமைப்பு, பிரவுசர் ஹிஸ்டரி பராமரிப்பு, மெமரி தேக்கம், அச்செடுத்தல், தீம்ஸ் எனப் பல வசதிகளைத் தருகிறது. மேலே சொன்ன அனைத்து பிரவுசர்களையும் பயன்படுத்திப் பார்த்த வகையில், அவற்றின் திறன், தரும் வசதிகள், கூடுதல் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம். குரோம், கான்குவரர், பயர்பாக்ஸ், அரோரா, ஆப்பரா, லிங்க்ஸ், மிடோரி, நெட்சர்ப், எபிபனி எனக் கொள்ளலாம். ஆனாலும் சில குறிப்பிட்ட வசதிகளுக்கு, அதில் சிறப்புப் பெற்ற பிரவுசர்களே சரியானவையாக உள்ளன.