Daily Archives: பிப்ரவரி 3rd, 2011

சீனர்களின் முயல் புத்தாண்டுக் கொண்டாட்டம்!

சீனர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டம் தூள் பறக்கிறது. இது, அவர்களுக்கு முயல் ஆண்டு. எலி, எருது, புலி, முயல், கடல் நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி பெயர்களைக் கொண்ட சந்திரமுறை புத்தாண்டை அவர்கள் காலம் காலமாகக் கொண்டாடி வருகின்றனர். வசந்த விழா என்றும் இது வழங்கப்படுகிறது. சீனர்களின் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கும் புராதன ஆண்டுக் கணக்கு முறையாகவும் கருதப்படுகிறது.”விலங்குகள் உங்கள் இதயத்தில் உள்ளன…’ என்பது சீனப் பழமொழி. அது, அவர்களின் நம்பிக்கையாக வேரூன்றி விட்டது. வருடங்களுக்கு விலங்குகளின் பெயர் சூட்டப்பட்டதற்கு அதுவே காரணம். பனிரெண்டு ஆண்டு சுழற்சிக்குப் பிறகு, வரும் பிப்ரவரி 3ம் தேதி, முயல் ஆண்டு துவங்குகிறது. இதற்குமுன் 1999ல் முயல் ஆண்டு வந்தது. ஜனவரியில் முடிவடையும் புலி ஆண்டைத் தொடர்ந்து, இப்போது பிறக்கும் முயல் ஆண்டு எப்படி இருக்கும் என்று அவ்வூர் ஜோதிடர்களின் கணிப்பு இதோ…முயல், அமைதியும், சாந்த குணமும் கொண்டது. சலசலப்பு இல்லாமல், காரியத்தில் கண்ணாக இருந்து சாதிக்கும் பண்புடையது. அதனால், முயல் ஆண்டில் பிறந்தவர்கள் அமைதி விரும்பிகள்; அதிகம் பேச மாட்டார்கள். அனைவராலும் விரும்பப்படுவர். மற்றவர்களின் துயரங்களில் பங்கேற்று ஆறுதல் கூறுவர். இவர்கள் கற்பனைத் திறனுள்ளவர்கள். சொந்தப் பாதையில் நடைபோட்டு வெற்றி பெறக் கூடியவர்கள். முயல்களின் உண்மையான குணங்களை, மற்றவர்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியாது. அசுத்தம், அக்கப்போர், அடிதடி, வன்செயல்கள் முயலுக்குப் பிடிக்காதவை. அதே சமயம், விடுகதைகள், கலைகள், ரகசியங்கள் மிகவும் பிடித்தவை என்பதால், முயல் ஆண்டில் பிறப்பவர்களும் அப்படித்தான் இருப்பர்.ஆடும், பன்றியும், முயலும் நட்பானவை. அதனால், அந்த ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு முயல் ஆண்டு அனுகூலமான பலன்களைத் தரும். சேவல், முயலுக்குப் பகையானது என்பதால், சேவல் ராசிக்காரர்களுக்கு முயல் ஆண்டில் நன்மைகள் குறைவாக இருக்கும்.இந்த 2011ல் முயல் ராசிக்காரர்களின் சமூக உறவும், நட்பும் சிறப்பாக அமையும். அவர்களின் காதல் தொடர்புகள் கைகூடி மகிழ்ச்சி நிலவும்; திருமணம் செய்து கொள்வர். புலி ஆண்டில் பிறந்தவர்கள், மேலும் பல அனுகூலங்களை எதிர்பார்க்கலாம்.முயலின் செல்வாக்கால், திறமைகளும், சொத்துகளும் அதிகரித்து ஒளிமயமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான அறிவாற்றலைப் பெறலாம். செயல்களுக்குரிய சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். அதனால், திட்டமிட்டு, விவேகமாக செயல்பட
வேண்டும். உழைப்பால் உயரலாம்.நாய் ஆண்டில் பிறந்தவர்களுக்கு, இந்த முயல் ஆண்டு நல்ல வருடமாக அமையும்.கடல் நாகம், புலி ராசிக்காரர்கள் இந்த முயல் ஆண்டில் சாதகமான பலன்களை அனுபவிப்பர். அவர்களில் ஒரு சாராருக்கு இது அற்புதமான ஆண்டாக இருக்கும். சிலருக்கு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.சீனப் புத்தாண்டு, சீனா, ஹாங்காங், தைவான் ஆகியவற்றுடன் சீனர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் சிறப்பு விழாவாக, 15 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இந்தோனேசியா, மக்காவ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்னாம் ஆகியவை அவற்றில் அடங்கும். இவை இரண்டு நாள் புத்தாண்டு விடுமுறை வழங்குகின்றன.பதினைந்தாம் நாள் விளக்குத் திருவிழா கண்கொள்ளாக் காட்சியை தருகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசு விடுமுறை வழங்கப்படாவிட்டாலும், அங்கு வசிக்கும் சீனர்கள் கோலாகலமாக புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.கொரியர்கள், திபேத்தியர்கள், பூட்டானியர்கள், மங்கோலியர்கள், வியட்னாமியர்கள் மற்றும் ஜப்பானியர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன், சீனப் புத்தாண்டு சடங்கு, சம்பிரதாயத்துடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
“சிவப்பு தான் சீனர்களுக்குப் பிடித்த கலர்…’ என்று பாடும் அளவுக்கு, சீன விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும், சிவப்பு வண்ணம் கொழிக்கிறது. புத்தாண்டு தொடக்க இரவில் குடும்பமாகச் சேர்ந்து அலங்காரச் சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் உணவருத்தி மகிழ்வர்.பதினைந்தாம் நாள் விளக்குத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சிவப்புக் காகித உறைகளிலும், பைகளிலும் தான் அன்பளிப்புகள் வழங்கப் படுகின்றன.
சீனர்களின் ஆண்டுக் கணக்கு ஒரே மாதிரி அனுசரிக்கப் படவில்லை. அதனால், இந்த முயல் ஆண்டான கி.பி.2011, சீனக் கணக் கின்படி 4708, 4709 அல்லது 4648 ஆண்டு எனக் கூறப் படுகிறது.

`இன்சுலின்’ கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

1889-ம் ஆண்டில் ஆஸ்கர் மின்கோவஸ்கி என்ற ஜெர்மானியர், கணையம் இல்லாமல் ஒரு நாயால் உயிர் வாழ முடியுமா என்று பார்ப்பதற்காக அதன் கணையத்தை அறுத்தெடுத்து நீக்கினார். மறுநாள் அந்த நாய் கழித்த சிறுநீரை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. சிறுநீரில் சர்க்கரை இருந்தது. நேற்றுவரை நலமாக இருந்த நாய்க்கு இன்று நீரிழிவு நோய் ஏற்பட்டிருக்கிறது.    கணையத்தில் சுரக்கிற ஜீரணச் சாறுகளில் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஏதோ ஒரு பொருள் இருப்பதை ஆஸ்கர் உணர்ந்தார். அவர், ஒரு நாயின் கணையத்தில் இருந்து குடலுக்கு ஜீரணச் சாறுகள் செல்லும் நாளங்களை முடிச்சுப் போட்டு அடைத்துப் பார்த்தார். அப்போது கணையம் வற்றிச் சுருங்கியது. ஆனால் நாய்க்கு நீரிழிவு நோய் ஏற்படவில்லை. குடலுக்கு ஜீரண திரவங்களை அனுப்ப முடியாவிட்டாலும் கணையம் நீரிழிவு தடுப்புப் பொருளை உற்பத்தி செய்துகொண்டுதான் இருந்தது. ஆகவே அந்த அம்சம் கணையத்தின் ஜீரணச் சாறுகளில் இல்லை என்பது நிச்சயமாயிற்று.

கணையத்தின் சிறிய தீவுச் செல்களைச் சுற்றியுள்ள தந்துகிக் குழாய்களில் இருந்து ஒரு ஹார்மோன் வெளிப்பட்டு சர்க்கரை எரிக்கப்படுவதை ஒழுங்குபடுத்தக்கூடுமோ என்று ஆய்வாளர்கள் யோசித்தார்கள். ஆனால் அந்த ஹார்மோனை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் பெஸ்ட், பான்டிங் என்ற இருவர் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் அதைக் கண்டுபிடித்துவிட்டனர். அந்த மர்மப்பொருள், நீரிழிவுள்ள நாயின் சிறுநரில் இருந்தும், ரத்தத்தில் இருந்தும் சர்க்கரையின் அளவைக் குறைத்தது. முதலில் `ஜலெட்டின்’ என்று பெயரிடப்பட்ட அந்தப் பொருளுக்கு பின்னர் `இன்சுலின்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படித்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான `இன்சுலின்’ பிறந்தது.

குடியரசா? “குடி’ மக்கள் அரசா?

குடியரசு நாள் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது; “குடியரசு தினம் என்பது நாட்டுமக்கள் அனைவருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்ட நாள்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். குடிமக்கள் உரிமை பெற்ற நாள் என்று கூறலாம்.  ஆனால், இப்போது “குடிமக்கள்’ என்பது அந்தப் பொருளில் வழங்கப்படவில்லை; “குடிக்கும் மக்கள்’ என்பதே நடைமுறை வழக்காகிவிட்டது. அந்த அளவுக்குக் குடிக்கும் மக்கள்தொகை நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கிறது; மக்கள்தொகைப் பெருக்கத்தைவிடவும் இது போட்டி போட்டுக்கொண்டு பெருகுவது சமுதாய அவலம்.  காந்திஜியின் அகிம்சை வழியில் நாடு விடுதலை பெற்றதாகக் கூறப்படுகிறது. அது உண்மையானால் அவர் விரும்பிய தீண்டாமை ஒழிப்பும், மதுவிலக்கும் இதுவரை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டுமே! “ஏன் அவ்வாறு செய்யப்படவில்லை?’ என்ற வினா எழுகிறதல்லவா!  நாடெங்கும் 62-வது குடியரசு நாள் கொண்டாடப்படும் இந்நாளில் இதற்கு யாரும் பதில் கூறப் போவதில்லை. வினா எழுப்பியவர்கள் பதிலை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதைத்தவிர, வேறு வழியில்லை. இனிமேலாவது இது நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பது நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களின் நம்பிக்கை. நம்பிக்கை வீணாகலாமா?  “”தீண்டாமைக்கு அடுத்தபடியாக மிகவும் கண்டிக்கத்தக்கது ஒன்று உண்டென்றால் அது குடி என்ற சாபக்கேடுதான்…” என்றார் காந்திஜி. என்றாலும் இது தடுக்கப்படவில்லை; தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இந்தியாவை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகாலம் ஆண்டனர்; ஆனால், அவர்கள் இந்நாட்டை ஆளுவதற்காக வரவில்லை; அடிமைப்படுத்துவதற்காகவும் வரவில்லை; அவர்கள் வணிகம் செய்வதற்காகவே இந்நாட்டுக்கு வந்தனர்.  இங்கிலாந்திலிருந்து, “கிழக்கிந்தியக் கம்பெனி’ என்ற பெயரில் இந்தியாவுக்குள் கால் வைத்தனர்; ஆட்சி அதிகாரத்துக்கு ராபர்ட் கிளைவ் என்பவன் “கால்கோள்’ நடத்தினான்.  வணிகம் செய்யவே வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி செய்யவே ஆரம்பித்தனர் என்பது கடந்தகால வரலாறு.  விடுதலை பெற்ற இந்தியாவில் ஆட்சி செய்யவே வந்த அரசியல்வாதிகள் இப்போது வணிகம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதுவும் மதுக்கடை நடத்துகின்றனர். “டாஸ்மாக்’ என்று இதற்குப் பெயர். இதில் பணியாற்றுகிறவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டி தொழிற்சங்கமும் தொடங்கப்பட்டுவிட்டது என்பது இன்றைய வரலாறு.  தமிழக அரசுக்கு “டாஸ்மாக்’ மூலமாக வரும் வருமானம், அரசின் மொத்த வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்காகும்; இந்த வருமானத்தை இழந்துவிட்டால் எப்படி ஈடுசெய்வது என்று சிலர் வினா எழுப்புகின்றனர். அரசாங்கம் என்பது நிர்வாகம் செய்ய வேண்டுமே ஒழிய, வணிகம் செய்யக்கூடாது; அதுவும் மதுக்கடைகளை நடத்தக் கூடாது என்பதே அதற்கு விடையாகும்.  “”நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, மதுவிலக்குக் கொள்கையைத் தளர்த்திவிட்டேன் என்றால் சாமானிய மக்கள் குடிகாரர்களாக மாறி, தமிழகத்தின் எதிர்காலமே இருண்டுவிடும். எனவே, அரசுக்கு நிதி கிடைக்கும் என்பதற்காக மதுவிலக்கை ரத்து செய்ய மாட்டேன்” என்று முன்னாள் முதல்வர் அண்ணா கூறினார்.  பணத்துக்காகப் பாவச்செயல்களைச் செய்யக்கூடாது என்பதே அறநூல்களின் அறிவுரை. கொலை, களவு, விபசாரம், சூது, குடி என்பன பஞ்சமாபாதகங்களாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் இறுதியாகக் கூறப்படும் “குடி’யே எல்லாத் தவறுகளையும் செய்யத் தூண்டும் முதல் தவறாகிறது.  அண்மையில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 42 கோடி பேர் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்கின்றனர். ஆனால், மதுபான உற்பத்தியில் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான் மதுபானம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது; இந்தியாவின் பங்கு 65 விழுக்காடு என்றால் எண்ணிப் பாருங்கள்.  “தேசப்பிதா’ எனப் போற்றப்படும் காந்திஜியின் நிர்மாணத் திட்டத்தில் முக்கியமானது மதுவிலக்காகும். “மதுவிலக்கு’ காங்கிரஸ் கட்சியின் முக்கியக் கொள்கையாகக் கடந்த 1920 முதல் இருந்துவந்தது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே அக்கட்சி ஆட்சிக்கு வந்தபோதே, மதுவிலக்கைக் கொண்டுவந்தது; ஆனால், நாடு விடுதலைபெற்ற பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் மதுவிலக்கு போன இடமே தெரியவில்லை. ஏன் இந்த நிலை?  இதுபற்றிக் கேட்டால் மாநில அரசுகள், மத்திய அரசின் மீதும், மத்திய அரசு மாநில அரசுகள் மீதும் பழியைப் போடுகின்றன.  மாநில அரசின் உரிமைகளையெல்லாம் அவர்களைக் கேட்காமலேயே எடுத்துக்கொள்ளும் மத்திய அரசாங்கம் இதுபோன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தம் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில்லை.  இந்திய அரசமைப்புச் சட்டம் (பிரிவு 47), மதுவிலக்கைச் செயல்படுத்த முயல வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தும் பகுதியில் கூறியுள்ளது. எனினும், தம் இயலாமைக்கு மத்திய, மாநில அரசுகள் புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறிக் கொண்டிருக்கின்றன. உண்மையான காரணம் வேறு. குடிமக்களை இந்தப் போதை மயக்கத்தில் வைத்திருப்பதே தங்கள் ஆட்சிக்குப் பாதுகாப்பு என அவை நினைக்கின்றன.  “அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் மாறாத பற்றும், நம்பிக்கையும் கொண்டு செயல்படுவோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோர் “மதுவிலக்குக் கொள்கை’க்கு ஆதரவாக இல்லை; பிறகு எப்படி இதனை நடைமுறைப்படுத்துவது? அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவு வெறும் அலங்காரத்துக்காகத்தானா?  தமிழ்நாட்டில் சங்க காலம் முதல் மது அருந்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மகிழ்ச்சிக்கும், சமூகம் சார்ந்த கொண்டாட்டங்களுக்கும் அது தேவையாகவே இருந்தது. “சிறிய கள் பெறினே எமக்கீயும் மன்னே/ பெரியகள் பெறினே / யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே!’ என்று ஒளவையார் என்னும் புலவர் அதியமானைப் பாடிய பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.  மதுவை கள், நறவு, தேறல், பிழிவு எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவர் காலத்தில்தான், “மது அருந்துவது தவறு’ என்ற கொள்கை உருவானது. “கள்ளுண்ணாமை’ என்று ஓர் அதிகாரத்தையே இயற்றினார்.  மது அறிவை மயக்குகிறது; உடலை அழிக்கிறது; வாழ்வைப் பாழ்படுத்துகிறது; எல்லாத் தீமைகளையும் செய்வதற்கு ஊக்கம் தந்து மனித இனத்தின் அமைதியைக் கெடுக்கிறது. இது யாருக்குத் தெரியாது? தெரிந்தும் அவனை அந்தத் தீய பழக்கத்திலிருந்து தடுக்க முடிகிறதா?  மது அருந்துபவரை அப்பழக்கத்திலிருந்து மீட்பது எளிமையான செயல் அல்ல. அவரைத் திருத்த முயல்வது தண்ணீருக்குள் மூழ்கியிருப்பவரை விளக்குக்கொண்டு தேடுவதுபோன்ற இயலாத செயல் என்று வள்ளுவர் கூறுவது, மதுவுக்கு அடிமையான மனிதரின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இது காலத்தைக் கடந்து நிற்கும் உண்மை. “மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்குக் கேடு’ என்று மதுப்புட்டியில் எழுதிவிட்டால் போதுமா? கேடு செய்வதை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாமா?  ஏற்கெனவே 6 சாராய ஆலைகள் அனுமதிக்கப்பட்டது போதாமல் மேலும் 8 சாராய ஆலைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது, குடிமக்கள் மேல் உள்ள பாசத்தைக் காட்டவில்லையா? இதனால்தான் 2004-2005-ம் ஆண்டு ரூ. 5,860 கோடியாக இருந்த மதுவின் வருவாய் 2009 – 2010 -ம் ஆண்டு ரூ. 14,000 கோடியாக அதிகரித்துள்ளது. அதனால் சாலை விபத்துகளும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே போகின்றன.  தமிழ்நாட்டில் மட்டும் எங்கும் இல்லாத மதுக்கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கு மதுவும் இருக்கிறது; மதுவிலக்கும் இருக்கிறது; வேடிக்கையாக இல்லையா?  அயல்நாட்டு இந்தியத் தயாரிப்பு மதுபானங்கள் விற்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நம் நாட்டுக் கள்ளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறுகின்றனர். கள்ளச்சாராயம் மிகக் கொடுமையானதாகும்; அதற்கு இந்த அந்நிய மது தேவலாம் எனக் காரணம் கூறப்படுகிறது.  “அந்நிய மதுவைவிட போதை (ஆல்கஹால்) குறைவான கள்ளுக்குத் தடைவிதித்தது ஏன்?’ என்று “கள்’ இயக்கத்தினர் கேட்கின்றனர். தமிழக முதல்வர் மதுவிலக்குத் தொடர்பாக, “நல்ல செய்தி வரும்’ என்று குறிப்பாகக் கூறியுள்ளார். “அந்த நல்ல செய்தி எப்போது வரும்?’ என்று நாட்டுநலனில் அக்கறை கொண்டவர்கள் கேட்கின்றனர்! தேர்தல் வரும் நேரத்தில் நெருக்கடி வந்தால் மதுக்கடைகள் மூடப்படலாம்; தேர்தல் முடிந்த பிறகு ஏதாவது ஒரு காரணம் கூறி மதுக்கடைகள் மறுபடியும் திறக்கப்படலாம்.  உலகத்தில் பல நாடுகளில் மது அருந்தும் பழக்கம் இப்போதும் இருக்கிறது. அங்கு மக்கள் மதுவை அருந்துகின்றனர்; ஆனால் இங்கு மது, மக்களையே அருந்துகிறது. எனவே, எத்தனை கோடி இழக்க நேர்ந்தாலும் சரி, மதுக்கடைகள் மூடப்படுவதே சாலச்சிறந்தது; மதுக்கடைகள் மூடினால், பல வீட்டுக்கதவுகள் திறக்கப்படும் அல்லவா! இதற்கு அரசாங்கத்தின் மனக்கதவுகள் திறக்கப்பட வேண்டும்.  ஓர் அரசாங்கத்தின் நோக்கம் கருவூலத்தை நிரப்புவதாக மட்டும் இருந்துவிடக் கூடாது. குடிமக்களின் நலனைப் பேணுவதாகவே இருக்க வேண்டும், மக்களின் அறியாமையையும், மதுமயக்கத்தையுமே நம்பிக்கொண்டு இருக்கும் அரசு நீண்டகாலம் நிலைக்காது. “குடியரசா? “குடி’ மக்கள் அரசா?’ என்ற வினாவுக்கு விடை கிடைப்பது எப்போது?

நன்றி-தினமணி

தாவரங்களின் திறமையை அதிகரிக்கும் முயற்சி!

தாவரங்கள் சூரிய ஒளியில் இருந்து ஒளிச்சேர்க்கை மூலம் உணவைத் தயாரிக்கின்றன. தாவரங்கள் தம் மீது சூரிய ஆற்றலில் ஒரு சில சதவீத அளவைத்தான் பயன்படுத்திக்கொள்கின்றன. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் அவற்றின் திறமையை அதிகரிப்பதன் மூலம், அதிகமாக உரங்களைப் பயன்படுத்தாமலே விளைச்சலை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பாக்டீரியா போன்ற சில ண்ணுயிரிகள், காற்றில் உள்ள நைட்ரஜன் மூலக்கூறுகளைக் கவரும் திறனைப் பெற்றிருக்கின்றன. பரிணாம வளர்ச்சியின்போது பல உயிரிகள் இந்தத் திறமையை இழந்துவிட்டன. ஆனாலும் இருவித்திலைத் தாவரங்கள் தமது வேர்களில் உள்ள பாக்டீரியா முடிச்சுகளின் உதவியுடன் காற்றில் உள்ள நைட்ரஜனை பிடித்துப் பொருத்திக் கொண்டு தமது தேவைகளை ஓரளவு நிறைவு செய்துகொள்கின்றன.

அந்த பாக்டீரிய முடிச்சுகளில் ஜீன் மரபு மாற்றங்களை ஏற்படுத்திக் காற்றில் உள்ள நைட்ரஜனை கரிமச் சேர்மங்களாக மாற்றுவதில் அவற்றுக்குள்ள திறமையை அதிகரிக்கும் முயற்சியில் ரஷிய நாட்டு விஞ்ஞானி அலெக்சாண்டர் பாயேவ் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தமது ஆய்வில் வெற்றி பெறும்போது உலகளவில் உணவு உற்பத்தி அதிகரிக்கும்.

எக்ஸெல் டிப்ஸ்-கூடுதலாக ஒர்க் ஷீட்கள் வேண்டுமா?

கூடுதலாக ஒர்க் ஷீட்கள் வேண்டுமா?
எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றைத் திறந்தால் அதன் மாறாநிலைப்படி (டிபால்ட்-Default) மூன்று ஒர்க் ஷீட்கள் மட்டுமே இருக்கும். வேண்டும் என்றால் மீண்டும் புதிய ஒர்க் ஷீட்களை இணைத்துக் கொள்ளலாம். எனக்கு மாறா நிலையிலேயே அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட்கள் வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதற்கேற்ற வகையிலும் எக்ஸெல் புரோகிராமினை செட் செய்து கொள்ளலாம். Tools மெனு சென்று Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் உள்ள பல டேப்களில் General என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். Sheets in new workbook என்னும் இடத்திற்கு எதிராக உள்ள பாக்ஸில் 255க்குள்ளாக ஒரு எண்ணைத் தரவும். எண்களை அமைக்க இங்கு மேல் கீழாக அம்புக் குறிகளும் தரப்பட்டிருக்கும். அமைத்தபின் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி நீங்கள் செட் செய்த எண்ணின் எண்ணிக்கையிலான ஒர்க் ஷீட்களுடன் எக்ஸெல் ஒர்க்புக்கை அமைக்கும்.
ஒரே நேரத்தில் பல ஒர்க்புக்குகளைத் திறக்க
எக்ஸெல் என்றாலே பல்வேறு தகவல்களை ஒன்றிணைத்து நமக்கு வேண்டிய வகையில் முடிவுகளை அமைக்கவும் உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு புரோகிராம் ஆகும். எனவே ஒரே நேரத்தில் பல்வேறு வகை தகவல்கள் அடங்கிய பல ஒர்க்புக்குகளைத் திறந்து பணியாற்ற விரும்புவோம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தகவல்களை மாற்றுவோம். ஒன்றின் முடிவின் அடிப்படையில் இன்னொன்றை அமைப்போம். அப்படியானால் தினந்தோறும் பணி தொடங்குகையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளைத் திறக்க வேண்டியதிருக்கும். ஒவ்வொன்றாகத் திறந்து அமைப்பது என்பது நேரத்தை வீணாக்கும் செயல். இதற்கென எக்ஸெல் ஒரு வழியைத் தருகிறது.
1.முதலில் நீங்கள் திறந்து பணியாற்ற விரும்பும் அனைத்து ஒர்க்புக்குகளையும் திறந்து கொள்ளுங்கள். நீங்கள் பணியாற்றும் இடம் எக்ஸெல்லில் ஒர்க் ஸ்பேஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ஒர்க் ஸ்பேஸில் அடுத்து இவை அனைத்தையும் கொண்டு வர வேண்டுமென்றால் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பைலாக மாற்ற வேண்டும். எனவே இந்த குரூப்பில் தேவை இல்லாத ஒர்க்புக் இருந்தால் அதனை மூடிவிடவும்.
2.இப்போது தேவையான ஒர்க்புக்குகளைத் திறந்து இருப்பதை உறுதி செய்து கொண்டு File மெனு கிளிக் செய்து Save Workspace என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் Save Workspace டயலாக் பாக்ஸில் புதிய பைல் பெயர் ஒன்றைக் கொடுக்கவும். பின் Save என்பதில் கிளிக் செய்து மூடவும்.
3. சரி, இதனை எப்படித் திறப்பது? பைல் மெனு சென்று Open என்பதில் கிளிக் செய்திடவும். இனி ஒர்க் ஸ்பேஸ் பைல் பெயரைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் அனைத்து ஒர்க்புக்குகளும் திறக்கப்பட்டு நீங்கள் பணி புரிய தயாராக இருக்கும்.
ரூபாய்-பைசா புள்ளி வைத்திட
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கரன்சியான ரூபாய் எவ்வளவு என்று குறிப்பிடுகையில் சரியாகக் கணக்கிடும் வகையில் பைசாவையும் சேர்த்துக் குறிப்பிடுவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் ரூபாய்க்கும் பைசாவிற்கு இடையே புள்ளி அமைப்பது சற்று சிரமமாக இருக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமே அமைக்கும்படி செட் செய்திடலாம். எப்படி என்று பார்ப்போமா!
எடுத்துக்காட்டாக நீங்கள் பண மதிப்பைக் குறிப்பிடுகையில் ரூபாய் பைசா இணைந்த எண்ணை புள்ளி இடாமல் முதலில் அமைக்கவும். எடுத்துக்காட்டாக 11245, 2345, 5693, 236798 என அமைப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் கீழ்க்காணும் முறையில் அமைத்துவிட்டால் இந்த எண்கள் 112.45, 23.45, 56.93, 2367.98 என அமைக்கப்படும். நீங்கள் செட் செய்திட வேண்டிய முறை:
1. “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “Edit” என்னும் டேபில் கிளிக் செய்திடவும். இதில் “Fixed decimal” என்னும் பிரிவில் செக் செய்திடவும். இப்போது “Places” என்னும் இடத்தின் முன்னால் “2” என அமைத்திடவும். பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். இனி நீங்கள் அமைத்திடும் எண்களின் இறுதி இரண்டு இலக்கங்களுக்கு முன்னால் புள்ளி தானே அமைக்கப்படும். இந்த செயல்பாடு தேவையில்லை என்றால் “Fixed decimal” என்னும் பிரிவின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.