Daily Archives: பிப்ரவரி 7th, 2011

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10,000 அபராதம், ஒரு வருடம் ஜெயில்

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு பத்தாயிரம் வரை அபராதம் விதிப்பது மற்றும் ஒரு வருடம் வரை சிறையில் அடைப்பது என்ற வகையில், மோட்டார் வாகன சட்டங்களில் புதிய திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை முன்னாள் செயலர் சுந்தர் தலைமையிலான நிபுணர் குழு, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜோஷியிடம், 411 பக்கத்திலான, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபரின் உடலில், 100 மில்லி ரத்தத்தில் 150 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையுடன், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். அதுவே, போதையில் உள்ளவரது 100 மில்லி ரத்தத்தில் 30 முதல் 10 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 5,000 அபராதமோ அல்லது ஆறு மாதம் சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கலாம்.வாகனத்தில் சென்றவாரே மொபைல் போனில் பேசும் நபர்களுக்கு 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அதுபோல், சிக்னலை மதிக்காமல் செல்லும் நபர்கள், அவரவர் லேனில் செல்லாமல் மாறி மாறி செல்லும் நபர்களுக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் நபர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் முகத்தில் அதிகம் முடி வளர்வது ஏன்?

பெண்களை பெற்றவர்கள், தங்கள் பெண் புத்திசாலியாக, அழகாக இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்வர். வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழவழப்பான சருமம் எண்ணெய் நிறைந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக்கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிகமாய் வளர்கிறது.
ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக்கை கூட ஏற்படுகிறது. கழுத்து, கை, அக்குள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறுகின்றன. சரியாக குளிப்பதில்லையோ என, மற்றவர்கள் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. கழுத்திலும், அக்குளிலும் கருமையான சிறு சிறு மருக்கள் தோன்றி விடுகின்றன. இவை துணியில் உரசும் போது வலியும், அசவுகரியமும் ஏற்படுகிறது.
இதோடு கூட, மாதவிடாய் சுழற்சியிலும் கோளாறு ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு மாதவிடாயே ஏற்படாமல், திடீரென அளவுக்கு அதிகமாய் உதிரப் போக்கு ஏற்படும் நிலை உருவாகும். அடி வயிற்றில் கடுமையான வலி, விட்டு விட்டு ஏற்படும். தொட்டால், இன்னும் அதிக வலி ஏற்படும்.
இந்தியாவில், 14 முதல் 40 வயதுக்குட்பட்ட, 30 – 35 சதவீதப் பெண்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. கர்ப்பப் பை கட்டியால் அவதிப்படுகின்றனர். இல்லையெனில் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கர்ப்பப் பை கட்டியை கண்டறிய, ரத்தப் பரிசோதனை முறை இல்லை. ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம், ஆண் ஹார்மோன்கள் அதிகமாய் தென்படுதல் ஆகியவை இருக்கலாம். “அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ மூலம் மட்டுமே, கட்டியை கண்டறிய முடியும்.
கட்டி உள்ளவர்களின் கருப்பையில் உள்ள முட்டைகள், போதுமான வளர்ச்சியடைய வழியில்லாமல் போவதால், முதிர்ச்சியும் அடைவதில்லை. இதனால், மாதவிடாயும் ஏற்படுவதில்லை. முட்டை வளர்ந்து, வெளிவந்தால் தான், குழந்தை பிறக்க வழி உண்டாகும். முட்டை முதிர்வடையவில்லை எனில், மகப்பேறுக்கான வாய்ப்பே இல்லாமல் போகும்.
இதனால், பயந்து போகும் பெண்ணின் பெற்றோர், தீர்வு தேடி அலைகின்றனர். மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெறாமல், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கின்றனர். “குடும்ப பாரம்பரியமே இப்படி தான்’ என்று கருதி, மருத்துவரிடம் செல்வதே இல்லை. மூலிகைகள், நாட்டு மருந்துகளை கொடுக்கின்றனர்.
முகத்தில் முடி நீக்குதல், அதிக உடல் எடை குறைத்தல், மாதவிடாய் சீராக்குதல், மகப்பேறுக்கு வழி உண்டாக்குதல் ஆகியவை அவசியம். கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், மாதவிடாய் சீராகும்; ஆண் ஹார்மோன்கள் அளவு குறையும். முகத்தில் பருக்களும் குறையலாம்; ஆனால், மகப்பேறு தவிர்க்கப்படும். மாத்திரையை நிறுத்தி விட்டால், மீண்டும் பிரச்னைகள் முளைக்கும்.
நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தான, “மெட்பார்மின்’ இந்த உபாதைகளை குறைக்கும்; உடல் எடையும் குறையும். சில மாதங்களில், கருத்தரித்தல் நிகழும்.
திருமணமான பெண்கள், கருத்தரிக்க இயலாமல் போனால், அதற்குரிய மருந்துகள் சாப்பிட வேண்டும். டாக்டரின் ஆலோசனையுடன், “மெட்பார்மின்’ மாத்திரை சாப்பிடுவதை தொடரும் போது, கருத்தரிப்புக்கான மாத்திரைகள் சாப்பிடும் அளவை குறைத்து கொள்ளலாம்.
மகப்பேறுக்கு தயாராக இல்லாதவர்கள், “ஸ்பைரோனோலாக்டோன் சைப்ரோடெரோன் அசிடேட்’ சாப்பிட்டால், முகத்தில், கை, கால்களில் முடி வளர்வதை தவிர்க்கலாம்; மாதவிடாயும் சீராகும். கர்ப்பப் பையில் கட்டி ஏற்பட்டால், வேறு சில பிரச்னைகளும் உருவாகலாம். ஹார்மோன் சீரற்ற நிலையில், கர்ப்பப் பை சுவற்றில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வளர்சிதை மாற்றம் சீராக இல்லாமல், நீரிழிவு நோய், உயர் கொழுப்பு, ரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
மெனோபாஸ் கட்டத்தை அடையும் போது, மாதவிடாய் சீராகும். ஆனால், முகத்தில் முடி வளர்தல், தலைமுடி மெலிதாகுதல், வழுக்கை விழுதல் ஆகிய பிரச்னைகள் உருவாகும்.
மன உறுதியுடன் இருந்தால், மருந்து இல்லாமலேயே இப்பிரச்னையை சரி செய்யலாம். சரிவிகித உணவு, உடற்பயிற்சி ஆகியவை மேற்கொண்டு, உடல் எடையை சீராக வைத்து கொண்டாலே, ஹார்மோன் சுரப்பது சீராகும். அதிக உடல் எடையில் 10 சதவீதத்தை குறைத்தாலே, கர்ப்பப் பையில் கட்டி உள்ளவர்களின் மாதவிடாய் பிரச்னை சீராகும். கர்ப்பப் பை கட்டி உள்ளவர்கள், மற்றவர்களை விட, குறைவான அளவு உணவே உண்ண வேண்டும். மற்றவர்கள் உதவி இன்றி நடப்பது, மாடிப் படிகளில் ஏறி, இறங்குவது, ஒரு மணி நேர நடைபயிற்சி மேற்கொள்வது ஆகியவை, பருவமடைந்த பெண்களுக்கு, உடல் எடையை சீராக்க உதவும். மேலே சொன்ன பிரச்னைகளிலிருந்து வெளிவர உதவும்.

ஓய்வு தரும் உற்சாகம்?

ஓய்வு நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

– நன்றாக தூங்கிவிடுவேன்

– சினிமாவுக்குப் போவேன், டி.வி. பார்ப்பேன்

– நண்பர்களுடன் அரட்டை அடிப்பேன்

பெரும்பாலானவர்கள் இந்த மூன்றில் ஒரு பதிலைச் சொல்கிறார்கள்.

`உழைத்துக் கொண்டிரு, ஓய்வு கொள்ளாதே’ என்றுதான் பலரும் அறிவுரை வழங்கு கிறார்கள். உண்மையில் உழைப்பிற்கு ஓய்வு எதிரியா? அகராதி சொல்லாத பொருளாக அப்படித்தான் பின்பற்றப்படுகிறது.

மனம் இயல்பாகவே ஓய்வைத்தான் ஆவலுடன் எதிர்பார்க்கும். ஆனால் ஓய்வு என்பது உழைப்பை நிறுத்துவது என்றும், உடலை புத்துணர்ச்சி பெறச் செய்வது என்றும் பெரும் பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஓய்வு என்பது மனம் சம்பந்தமான விஷயம்.

மக்கள் எப்படி ஓய்வுப் பொழுதைக் கழிக்கிறார்கள், உண்மையில் ஓய்வை எப்படிக் கழிக்க வேண்டும்? ஓய்வை பயன்படுத்துவதால் ஏற்படும் உன்னத பலன்கள் என்ன? ஒரு அலசல்…

மனம் இளைப்பாறப் பயன்படுவதுதான் உண்மையான ஓய்வாகும். மனம் இளைப்பாற வேண்டுமென்றால் அது சோர்வுறுமா? என்பது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்ட முடிவு என்னவென்றால், “உடல்தான் களைப்புறுகிறதே தவிர, மனம் எப்போதும் சக்தி இழப்பதில்லை” என்பதுதான்.

சோர்வாக இருக்கிறோம் என்று நினைக்கும் வேளையில் நீங்களே வலியவந்து ஒரு செயலைத் தொடங்கிப் பாருங்களேன். சோர்வு ஓடிப்போகும். அப்படியானால் அது விளக்கும் பாடம் என்ன? மனம் எப்போதும் சோர்வடைவதில்லை. எந்தச் செயலில் நமக்குப் பற்று இல்லையோ அதுவே நமக்கு சோர்வாக தோன்றுகிறது. நம் விருப்பத்தை அதிகப் படுத்திக் கொண்டால் சோர்வு ஏற்பட வழியே இல்லை. உண்மையில் மூளையின் (மனதின்) கட்டளையை ஏற்றுச் செயல்படும் அளவுக்கு உடலில் தெம்பில்லை என்பதுதான் நம்மால் சோர்வாக உணரப்படுகிறது.

ஓய்வு எப்படிக் கழிகிறது…

விஞ்ஞான வளர்ச்சியால் இன்றைய காலத்தில் பெரும்பாலான வேலைகளை எந்திரங்களே செய்து முடித்து விடுகின்றன. இதனால் மனிதர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாகி இருக் கிறது. அதேபோல் ஓய்வைக் கழிப்பதற்கும் அனேக வழிகள், வசதிகள் இருக்கின்றன. சிலர் ஓய்வு நேரத்தில் வழக்கமான பொருளீட்டும் வேலையை தவிர்த்து மற்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இன்னும் சிலர் ஓய்வு நேரத்தையும் காசாக்கும் வேலையில் இறங்கி விடுகிறார்கள். இந்த இரண்டுமே ஓய்வைக் கெடுக்கும் செயல்களாகும்.

மகிழ்ச்சியாக இருப்பதைவிட வேறு எதையும் மனிதன் வாழ்வில் விரும்புவதில்லை. மகிழ்ச்சியாக ஓய்வை அனுபவிப்பதிலும் மக்கள் இருகூறாகப் பிரிந்து கிடக்கிறார்கள். ஏழை-பணக்காரன் என்பதுதான் அந்தக்கூறு. இவர்களில் பணம் படைத்தவர்களுக்கு அதிகம் ஓய்வு கிடைக்கிறது. ஓய்வைக் கழிப்பதற்கும் அவர்களுக்கு நிறைய வசதிகள் இருக்கிறது. கார்-பைக்கில் பறக்கிறார்கள். சினிமாவுக்குப் போகிறார்கள். சுற்றுலா செல்கி றார்கள். கச்சேரிகள், கூட்டங்கள் என பல வழிகளில் பொழுதை உல்லாசமாகக் கழிக்கிறார்கள்.

ஆனால் ஏழைகளுக்கு ஓய்வும் குறைவு. ஓய்வை அனுபவிக்கும் வசதிகளும் குறைவு. இவர்கள் பெரும்பாலும் டி.வி. பார்ப்பதில் பொழுதைக் கழித்து விடுகிறார்கள். பூங்காக் களுக்குச் செல்வது, கோவிலுக்குச் செல்வதோடு இவர்களது ஓய்வுப் பொழுது கரைந்து விடுகிறது.

ஓய்வைக் கொண்டாடும் வழிகள்

இன்னிசைக் கச்சேரி பார்ப்பது, பாட்டுக் கேட்பது, இசை நிகழ்ச்சியை ரசிப்பது என்று சிலர் ஓய்வுப் பொழுதை கழிக்கிறார்கள். சுற்றுலா செல்வதை சிலர் வழக்கமாக வைத்திருக்கி றார்கள். சினிமா பார்ப்பது, டி.வி. பார்ப்பது என்று பொழுதுபோக்குபவர்கள் ஏராளம். இன்னும் சிலர் கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் படுக்கையில் முடங்கி குறட்டை விடத் தொடங்கி விடுகிறார்கள்.

இவைதான் உண்மையிலேயே பொழுதுபோக்கென்று நம்புபவர்கள்தான் ஏராளம். இவை யெல்லாம் ஓய்வைக் கழிக்கும் சில வழிகளே தவிர, ஓய்வை அனுபவிக்கும் முழுமையான வழிகளல்ல. மனதை மறுமலர்ச்சி பெறச் செய்வதுதான் பொழுதுபோக்கு.

மேற்கண்ட வழிகளில் பொழுதுபோக்கும்போது சிலர் மகிழ்ச்சி அடையத்தானே செய்கி றார்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் உங்கள் பங்கு ஒன்றுமே இல்லையே. வெறும் பார்வையாளர்கள்தானே நீங்கள். ரசிப்பது மட்டும் மகிழ்ச்சியில்லையே. லயித்திருப்பதில்தானே உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

உண்மையான மகிழ்ச்சியும், ஓய்வை அனுபவித்த திருப்தியும் வேண்டுமானால் நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிகள் இவைதான்…

* நீங்கள் இசையைக் கேட்டவுடன் இன்பம் உணர்பவர்கள் என்றால் அந்த இசையை உருவாக்கும் முயற்சியில் இறங்கிப் பாருங்கள் இன்னும் அதிகமாக இன்பத்தில் மிதப் பீர்கள். கூடவே இசையைக் கற்றுக் கொண்ட மகிழ்ச்சியும், புதிய இசையை உருவாக்கும் எண்ணமும் வரும். இது வாழ்வையே புதுமையாக்கும். ஆம்.. இனியாவது வயலின், மவுத் ஆர்கான் இசையை ரசிப்பதைவிட வாசிக்கக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

* பாடல்களை கேட்பதற்குப் பதிலாக பாடல்களைப் பாடுங்கள். ஆடல் காட்சிகளைப் பார்ப்பதை விட நீங்களே ஆடி மகிழுங்கள். உங்களுக்கு ரசனையானதை மட்டுமே பாருங்கள், கேளுங்கள், ரசியுங்கள்.

* சுற்றுலா செல்வதும், புத்தகங்கள் வாசிப்பதும் நல்ல பழக்கம்தான். அத்துடன் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதைப்பற்றிய ஆழமான விஷயங்களை சேகரித்து எழுதுவது சிந்தனையை சரியான திசையில் செலுத்தும் வழியாகும்.

* சிலர் ஓய்வு நேரத்தை சும்மா இருந்து கழிக்கிறார்கள். சும்மா இருந்தால் மனம் அலைபாயத்தான் செய்யும். இதனால் பழுதுகள் ஏற்படுமே தவிர, மனம் வலிவு பெறாது.

* செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, அஞ்சல் வில்லை, நாணயம், விதவிதமான பொருட்கள் சேகரிப்பது என்பது மிகச்சிறந்த செயல்களாகும். மீன்கள் வளர்ப்பது, கால் நடைகளை பராமரிப்பது, சமையல், நூல் நூற்றல், எம்ப்ராய்டரிங் கற்றுக் கொள்வது, ஓவியம் தீட்டுவது, சிற்பம் செதுக்குவது போன்றவையெல்லாம் மனதை ஈர்க்கும் வகையில் ஓய்வை கழிக்கப் பயன்படும் சிறந்த வழிகளாகும். இவற்றுக்கு தினமும் கொஞ்சம் நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் மனம் அலைபாய்வதை கட்டுப்படுத்தும்.

சமுதாய அமைதியில் ஓய்வின் பங்கு
ஓய்வு என்பது மனிதனின் பொருளாதாரச் சிக்கல், சமூகத் தொல்லைகளை மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். நகர்ப்புறங்களில் இருப்பது போன்ற பூங்காக்கள், விளை யாட்டு மைதானங்கள் எல்லா ஊர்களுக்கும் அவசியம் தேவையாகும். இவை மக்கள் சந்திக்கும் இடங்களாகவும், ஓய்வைக் கழிக்கும் இடங்களாகவும் இருப்பதால் சமுதாய மறுமலர்ச்சி ஏற்படும். உறவு முறைகள் மேம்படும். மனிதனின் அறிவு நிலை வளர்ச்சி பெறும்.

குழந்தைகள் சிறுவயது முதலே இதுபோன்ற இடங்களில் சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டால் அவர்களின் பல்வேறு பரிமாணங்களும் வியக்கத்தக்க வகையில் மாறுதல் அடையும்.

மக்களுக்கு ஓய்வைக் கழிக்க சரியான வசதிகள் இருந்தால் மனம் தெளிவும், அமைதியும் பெறும். இதனால் அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது கணிசமாகக் குறையும். சமுதாயத்தில் அமைதி நிலவ ஏதுவாகும். மக்கட்பண்பு பெருக உதவி செய்யும்.

மேலைநாடுகளில் இருப்பதுபோன்ற மக்களை ஒருங்கிணைக்கும் சங்கங்கள் (இளைஞர் கள், குழந்தைகள், மக்கள் சங்கம்) உருவாக்கப்பட வேண்டும். அவை அரசியல் சாராத அமைப்புகளாக இருப்பது மிகவும் அவசியம்.

***

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!


மின்னணுத் துறையிலும், மருத்துவத் துறையிலும் புதிய பொருட்களை வடிவமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் நிபுணர்கள் சிலர், கடற்கரைகளில் போய் சோழிகளையும், சங்குகளையும் தேடி எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கரிம வேதிப்பொருட்கள் சேர்ந்து எவ்வாறு வியப்பூட்டும் வடிவங்களில் சங்குகளையும், சோழிகளையும் உருவாக்குகின்றன என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தொழில்துறைக்குத் தேவையான பல படிவங்களை உருவாக்குவதற்கான புதிய முறைகள் தெரியவரலாம் என்பது அந்த நிபுணர்களின் எண்ணம்.

உயிரிகள், வேதிவினை புரியாத ஜடப்பொருள்களை ஓடுகளாகவும், எலும்புகளாகவும், வேறு பல உறுப்புகளாகவும் மாற்றிக்கொள்கின்றன. இந்தச் செயல்முறைக்கு உயிரி கனிமமாக்கம் என்று பெயர். உயிரிகளில் குறைந்தது 40 கனிமங்களாவது திசுக்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.

சுண்ணாம்புக் கற்களிலும், சுண்ணாம்புப் பாறைகளிலும் உள்ள கால்சியம் கார்பனேட்டை பல்வேறு உயிரிகள் உட்கவர்ந்து கொள்கின்றன. அது மெல்லுடலிகளில் கூடுகளையும், ண் ஆல்கைகளில் செல்களையும் உருவாக்க உதவுகிறது. தாவரங்களில் கால்சியம் கார்பனேட்டுகளாக சேமித்து வைக்கப்படுகிறது.

முதுகெலும்பிகளின் எலும்புகள் கால்சியம் பாஸ்பேட்டால் ஆனவை. ஆல்கைகள், சில கூழ்பஞ்சுகள் ஆகியவற்றின் கட்டமைப்புகள் சிலிக்கானால் ஆனவை. இரும்பு, பேரியம், ஸ்டிரான்சியம் ஆகியவை உயிரிகளின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

பிரிட்டனின் பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மான், இம்பீரியல் வேதித் தொழிலகத்தின் டெரக் பிர்ச்சால் ஆகியோர், புரதங்களைப் போன்ற உயிரி மூலக்கூறுகள், உயிரி கனிமமாதலை ஒழுங்குபடுத்தி, எலும்புகளும், உடல்கூடுகளும் சரியான முறையில் உருவாக வைப்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.

ஒரு கனிமத்தின் அணுக்கள், ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டும் கூடி இணையுமாறு உயிரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதை மான் குழுவினர் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். அதற்கான விடை கிடைக்கும்போது தொழில்துறையில் ஒரு புரட்சிக்கு வித்திடுவதாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

புத்திர பாக்கியம் அருளும் புத்திர காமேட்டீஸ்வரர்

என்னதான் ஒருவருக்கு அள்ள அள்ள செல்வம் வந்து கொண்டிருந்தாலும் குழந்தைச் செல்வம் என்று ஒன்று இல்லாவிட்டால் அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லாமல் போய்விடும்.

இதனால்தான், `குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்றார் வள்ளுவர்.    இப்படி, குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதியரின் குறையை நீக்க ஈசன் குடிகொண்டிருக்கும் அவதார ஊர்தான் ஆரணி. இங்கு, குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திர காமேட்டீஸ்வரராக இறைவன் அருள் பாலிக்கிறார்.

குழந்தை வேண்டி புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஏழு திங்கள்கிழமைகள் விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய்ச்சோறோ, தயிர்ச் சாதமோ, காய்கறி வகைகளுடன் கூடிய சாதமோ அவரவர் தகுதிக்கேற்ப கொடுக்க வேண்டும். பிறகு தாங்கள் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைகளுக்கு அன்னம் பரிமாற வேண்டும்.

ஏழாவது திங்களில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளி மற்றும் பவள மல்லி மாலை (கோவிலிலேயே இந்த மாலை தருகிறார்கள்) அணிவித்து, மிளகு சேர்த்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமி அன்று கோவில் சார்பில் நடக்கும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்து கொள்ளலாம்.

புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி கொள்ளலாம்.