Daily Archives: பிப்ரவரி 8th, 2011

சூரியச் சூறாவளி!

மிகப்பெரிய சூரியச் சூறாவளி 2012ல் நிகழும் என்று கூறுகின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இந்த சூரிய புயல், நூறு மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்டதாக இருக்கும். இதனால், பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்று, வரிசைப்படுத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.
* நாடுகளின் மின்சார வினியோக அமைப்புகளும், தகவல் தொடர்பு அமைப்புகளும் பலத்த சேதமடையும்.
* விமானப் போக்குவரத்து, மின்னணுச் சாதன அமைப்புகள், கப்பல் போக்குவரத்துக்கு உதவும் உபகரணங்கள் முடங்கும் அபாயம் உள்ளது. முக்கியமாக, செயற்கைக் கோள்கள் வேலை செய்யாது.
* நூறு ஆண்டுகளில் அசாதாரண சக்தி கொண்ட இந்த சூரியப் புயல், முதன் முதலாக பூமியை தாக்கவுள்ளது. இதனால், பெரிய அளவுக்கு மின் வினியோகத் தடைகளும், தகவல் தொடர்பு சிக்னல்கள் இழப்பும் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
சூரியப் புயல் தாக்கும் போது, சூரியனின் வெப்ப அளவு 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்டையும் கடந்து விடும்.
இந்த சூப்பர் சூரிய சூறாவளி, இடி இடிப்பது போன்று நிகழும். பூமியின் காந்தப் புலங்களை நம்பி இயங்கும் நம் தகவல் தொழில் நுட்ப உலகம், பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த வகையில், அதிசக்தி சூரியப்புயல், 2012 அல்லது 2013ல் ஏற்படும் என்பது உறுதி. அதன் விளைவுகள் பற்றி, இன்னமும் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூரியப் புயலால் ஏற்படும் சூரிய எரிதழல்கள், பூமியின் காந்தப் புலத்தை பாதிக்கும். ஆனால், இது மிக மிக வேகமாக நடக்கும், இடி இடிப்பது போன்ற நேரத்தில், அனைத்தும் நடந்து முடிந்து விடும் என்கிறார் நாசாவில் சூரியப் பவுதிகப் பிரிவு விஞ்ஞானி, டாக்டர் பிஷர். இதனால் ஏற்படும் சேதங்களை சீர் செய்ய, மிகப்பெரிய அளவில் பணம் செலவழியும் என்பதோடு, நீண்ட காலம் ஆகும் என்பதும் உண்மை. சூரிய சுழற்சியில், 24ம் கட்டத்தை எட்டுவதால், இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது என்கின்றனர் விஞ்ஞானிகள்

கை கொடுக்கும் காடுகள்!

காடுகள் மனிதகுலத்துக்குப் பெரும் நன்மை பயக்கின்றன. அவை நமக்கு மரம், பிசின்கள் போன்ற பல பொருட் களைத் தருகின்றன. காட்டு மரங்களில் இருந்தே நாம் காகிதங் களையும், செயற்கைப் பட்டுகளையும் உருவாக்குகிறோம்.

ஒரு காலகட்டத்தில் மனிதன் காடுகளை பெருமளவில் நாசப்படுத்தியதோடு, அழித்தும் வந்தான். காடுகள் அவ்வாறு அழிக்கப்பட்டதால் மரங்களும், பிற பயனுக்குரிய பொருட்களும் கிடைக்காமல் போயின. அதுமட்டுமல்ல, தட்பவெப்பநிலை மாறியதோடு, காடுகள் மறைந்த இடங்களில் எல்லாம் பாலைவனங்கள் தோன்றலாயின. அதன் பின்பே காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பரவலாயிற்று.

காடுகள், நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளில் உள்ள அடர்ந்த காடுகளில் மழை பெய்யும்போது, மரங்களின் இலை களால் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் விழுகிறது. எனவே அங்குள்ள வளமான மண் கரைந்து போவதில்லை. அப்படியும் அரித்துச் செல்லும் மண்ணை மலைச் சரிவில் உள்ள மர வேர்கள் தடுத்து விடுகின்றன.

மலைகளில் மரங்களே இல்லாதிருந்தால் மழை வேகமாகப் பெய்து, அங்குள்ள வளமான மண்ணை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. குளிர்காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி, வெறுந்தரையில் விரைவில் உருகிவிடும். ஆனால் காடுகளில் பெய்யும் பனி மெதுவாகவே உருகும். மேலும் அந்த நீர், நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுகளுக்கும், பூமியின் அடியில் உள்ள ஓடைகளுக்கும் மெதுவாகச் சென்று பரவுகிறது.

வேகமான வெள்ளப் பெருக்கு, மரங்களை வீழ்த்தி விடுகிறது. வெற்றிடத்தில் விழும் மழை நீரும், உருகும் பனி நீரும் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக துரித கதியில் ஓடி மறைந்து விடுகிறது.

வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதை காடுகள் தடுக்கின்றன. மரங்களின் வேர்களும், கிளைகளும், வண்டல் மண் அரித்துச் செல்லப்படாமல் தடுத்து விடுகின்றன.

காடுகள் அழிக்கப்பட்டு மொட்டையாகும் மலைகளில் இருந்து அடித்துச் செல்லப்படும் வண்டல், துறைமுகங்கள், நதிக் கால்வாய்கள் ஆகியவற்றில் படிகிறது. அந்த வண்டல் மண்ணை அகற்றி, ஆழப்படுத்த உலகெங்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதே நேரம் வண்டல் அரிக்கப்படும் நிலம் தனது வளத்தை இழப்பதால், விவசாயம் கேள்விக்குறியாகிறது.

மனிதன் தனது சுயநலத்தால் எப்படித் தனக்குத் தானே தீங்கு செய்துகொள்கிறான் என்பது இதிலிருந்து புரியும்.  

மைடியர் மைண்ட்பவர்

ஆல்ஃபா நிலையில் ஒரு இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதித்தால் அது நம் வாழ்க்கையில் சுலபமாக நிறைவேறும் என்பதை பார்த்தோம். அந்தக் காட்சியை சரியான முறையில் அமைப்பது மிகவும் முக்கியம். அது எப்படி என்பதை பார்ப்போம்.
நமது மூளையின் ஆல்ஃபா நிலை என்பது மிக அற்புதமான, சுகமான நிலையாகும். மூனையின் வேகம் வினாடிக்கு 7லிருந்து 14 வரை இருக்கும் நிலை ஆல்ஃபா நிலை. நாம் சற்று அமைதியாக இருக்கும் நிலை இது. தியானத்தின் மூலம் இந்த நிலையை அடைகிறோம். இதற்கு பயிற்சி தேவை. ஆல்ஃபா நிலையை நாம் அடைந்தவுடன் நமக்குள் இருக்கும் ஆழ்மனம் திறக்கிறது. அங்கிருக்கும் வியக்கத்தக்க சக்தியை அந்த நேரத்தில் நாம் பயன்படுத்த முடிகிறது.
நமது இலட்சியங்களை ஆல்ஃபா நிலையில் மனத்திரையில் ஒரு காட்சியாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் காட்சி, ஆழ்மனத்தில் பதிந்து அங்கிருந்து பிரபஞ்ச சக்திக்கே ஒரு செய்தியாகப் போய் சேர்ந்துவிடுகிறது. பிரபஞ்ச சக்தி பல விதத்தில் செயல்பட்டு நமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறது. தகுந்த சூழ் நிலைகளை நமது வாழ்க்கையில் உருவாக்கி, தகுந்த மனிதர்களைச் சந்திக்க செய்து அந்த இலட்சியம் நிறைவேற வழி வகுக்கிறது.
இப்படி ஆல்ஃபா நிலையில், இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதிக்கும் பொழுது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது அந்தக் காட்சிகளின் அமைப்புதான். இலட்சியத்தை மனத் திரையில் உருவாக்கும் பொழுது அந்த இலட்சியம் நிறைவேறிவிட்ட காட்சியை மட்டும் கண்டால் போதும். இதை எப்படி அடையப்போகிறோம், வழிமுறைகள் என்ன, என்பதைப் பற்றி தியானத்தில் யோசிக்க வேண்டாம். வழிமுறைகளை யோசிக்கும் பொழுது நமது மனம் பல இடங்களில் செயல்பட முடியாமல் தடுமாறும்.
சுரேந்திரனின் அனுபவத்தைப் பார்ப்போம். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒருமுறை என்னைச் சந்தித்து தன் பிரச்னையைப் பற்றிச் சொன்னார்.
“குடும்பத்தில் செலவு மிகவும் அதிகமாகிவிட்டது. என்னால் சமாளிக்க முடியவில்லை. எப்படியாவது எனக்கு பிரமோஷன் கிடைத்து சம்பளம் உயர வேண்டும் என்று பல மாதங்களாக ஆல்ஃபா தியானம் செய்து வருகிறேன். ஆனால், இதுவரை நடக்கவில்லை. என்ன செய்வது?’
“சரி. உங்கள் நிறுவனத்தின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?’
“அதுதான் மேடம் பிரச்னை. எனக்கு மேல் உயர் பதவி எதுவும் இல்லை. எம்.டி. தான் இருக்கிறார். இருந்தாலும் வேறு எப்படி தியானம் செய்வது என்று எனக்கு புரியவில்லை. அதனால்தான் இந்த வழிமுறையை யோசித்தேன்.’
“நீங்கள் இந்த பிரமோஷன் என்கின்ற வழிமுறையை விட்டுவிட்டு குடும்ப வருமானம் பெருகுவது போல் பார்த்து வாருங்கள். நிச்சயம் நடக்கும்.’ என்றேன்.
நாமாக யோசிக்கும் பொழுது நமது இலட்சியம் நிறைவேற ஏதேனும் ஒருவழிதான் நமக்கு புலப்படும். ஆனால் வழிமுறைகளை பிரபஞ்சத்திடம் விட்டுவிட்டோமானால் நம் கண்ணுக்குத் தெரியாத பல கதவுகள் திறக்கும். பல வழிகள் பிறக்கும்.
நான் சொன்னபடி சுரேந்திரன், தியானம் செய்து வந்தார். சில மாதங்கள் கழித்து சுரேந்திரன் தன் மனைவியுடன் என்னை சந்திக்க வந்தார். இருவர் முகத்திலும் பிரகாசமான புன்னகை.
“நீங்கள் சொன்னபடி இருவருமே தியானம் செய்து வந்தோம். அதன் பிறகு என் மனைவி செய்த சில கைவினைப் பொருட்கள், ஒரு கண்காட்சியில் வைத்து விற்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஒரு தொழிலாக அமைந்துவிட்டது. இன்று அதன் மூலம் எங்களது குடும்ப வருமானம் பெருகி மிகவும் சௌகரியமாக இருக்கிறோம்.’
இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். பிரபஞ்ச சக்தி ஒரு தாய் போன்றது. நமக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு குழந்தையைப் போல் காண்பித்தால் போதும். அந்தத் தாய் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பாள். வழிமுறைகளை நாம் தியானத்தில் செல்லும் பொழுது பல சமயம் அது நமக்கு சரியான வழியாக இல்லாமல் போகலாம். அப்பொழுது பிரபஞ்ச சக்தியால் கூட நமது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அதனால்தான் இலட்சியம் நிறைவேறும் காட்சியை மட்டும் காண வேண்டும். எந்த நிபந்தனைகளும் இன்றிக் காண வேண்டும். அப்படிச் செய்தால் நமது இலட்சியங்கள் ஒவ்வொன்றாக நாம் நினைத்ததைவிட மிகவும் சுலபமாக நடைபெறுவதை நாம் காண முடியும்.
பிரபஞ்ச சக்தி நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அவற்றை குறைவின்றிப் பெற்றுக் கொள்ள நாம் தான் தயாராக வேண்டும்.

இசை சந்தோஷமளிப்பது ஏன்?

அனேகமாக எல்லோருக்குமே இசை பிடிக்கும். இசை கேட்பது, சந்தோஷமளிப்பதற்குக் காரணம் என்ன? அந்த நேரத்தில், மூளையில் ஒரு வேதிப்பொருள் சுரக்கப்படுகிறது. அதுதான் இசை ரசிகரின் மனதுக்குள் மகிழ்ச்சியைப் பரப்புகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மேற்கண்ட வேதிப்பொருளானது, குறிப்பிட்ட `த்ரில்’லான இசைக் கணத்தை எதிர்பார்க்கிறது, அப்போது ஏற்படும் துடிப்பை உணர்கிறது.

இதுதொடர்பான `டோபமைன்’ என்ற வேதிப்பொருளின் பங்கு பற்றி ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளை செல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ள இது உதவுகிறது. புதிய கண்டுபிடிப்பானது, இசை கேட்கும்போது இந்த வேதிப்பொருள் நேரடியாக வெளிப்படுவதைக் காட்டுகிறது. ஒருவர் இசை கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது மூளையை `ஸ்கேன்’ செய்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட மான்ட்ரியால் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ஸட்டோர், வலோரி சலிம்பூர் ஆகியோர், ஏன் எல்லா இன மக்களிடமும் இசை பிரபலமாக இருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கின்றனர்.

அதாவது குரல் தேவையில்லை, இசைக் கருவிகளில் இருந்து எழும் இசையே `டோபமைனை’ சுரக்கச் செய்துவிடுகிறது என்று இவர்கள் கூறுகின்றனர். இசை கேட்கும் சந்தோஷத்தில் குரலின் பங்கு என்ன என்று மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இசை ரசிகர் ஒருவர் ஏதாவது ஒரு இசையைக் கேட்பதை விட, தனக்குப் பிடித்த இசையைக் கேட்கும்போது அதிக `டோபமைன்’ வெளிப்படுவதும் ஸ்கேனில் தெளிவாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த `டோபமைன்’ வேதிப்பொருளானது, பொதுவாக `உறவின்’போது அல்லது சாப்பிடும்போது சந்தோஷத்தை உணர வைக்கிறது. போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது `மிதக்க’ வைப்பதும் இதுதான். இசையும் ஒரு போதைதானோ?

எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?

பிளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு பிளாஷ் ட்ரைவிற்கு மாறியவரா நீங்கள்?

உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள் ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ் ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம். ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது. எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.
கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.

வைரத்தின் வரலாறு-2

சாலிடேர்(Solitaire) என்றால் என்ன ?

சாலிடேர் என்பது ஒற்றை வைரத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை, 33 சென்ட் மற்றும் அதற்கு அதிகமான எடையுள்ள வைரங்களைத்தான் சாலிடேர் என்று குறிப்பிடுவார்கள்.

விவிஎஸ் வைரங்கள் என்றால் என்ன ?

விவிஎஸ் (VVS) என்றால் very very small inclusions என்கிற ஆங்கில வார்த்தையின் சுருக்கம். அதாவது மிகச் சிறிய, சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத, லென்ஸை வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய வைரத்தின் உள்ளேயே இணைந்து வளர்ந்துள்ள கனிம, அல்லது வேதிப் பொருளின் (மிகச்சிறிய) துகள்களோ, துணுக்குகளோ ஆகும். இதனால் வைரத்தின் ஜொலிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இது தவிர இன்னும் பெரிய துகள்களை VS1, VS2 என்பார்கள்.

அதன் உள்ளே உள்ள துகள்களின் அளவை பொறுத்து குறியீடுகளும் மாறிக் கொண்டே போகும்.

பூமியில் இருந்து எடுக்கப்படும் எல்லா வைரங்களும் நகை செய்யப் பயன்படுமா?

இல்லை. 40-50 சதவீதம் வைரங்கள் மட்டுமே நகை செய்யப்பயன்படும். அவை 4Cs என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தரம் குறைந்த மற்ற வைரங்கள் தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படும். இவை Industrial Diamonds எனப்படும்.

Industrial Diamonds – என்றால் என்ன ?

நகை செய்யப் பயன்படாத வைரங்கள் பலவித தொழிற்சாலை உபகரணங்களுக்கு பயன்படும். ஏனென்றால் அந்த வைரத்தின் தன்மை என்றுமே மாறாது. அவை சாணைக்கல்லில் அடைப்புகளை நீக்கும் கருவிகள் (Dressing Tools), கண்ணாடிகள் வெட்டும் கைக்கருவிகள் (Glass Cutter), லேத்மெஷினில் ஸ்டீல் பாகங்களை வெட்டும் கருவிகள் (Cutting Tools), அறுவை சிகிச்சை செய்யும் கைக்கருவிகள் (Operation Instruments), இன்னும் பலவற்றில் உபயோகிக்கப்படுகிறது. இதன் துகள்களை சாணைக்கல்லில் பதித்து வைரத்தை பட்டை தீட்ட பயன்படுத்தலாம். இப்படி பலவற்றில் பயன் படுத்தலாம்.

4Cs என்றால் என்ன?

பல நாடுகளில் வைரங்களின் தரத்தைக் குறிப்பிட வெவ்வேறுவிதமான வார்த்தைகளை குறிப்பிட்டு வந்தார்கள். உலகளவில் ஒரே தர நிர்ணயம் செய்வதற்காக (நிமிகி) ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடிட் ஆப் அமெரிக்கா 4சி என்கிற முறையை அறிமுகப்படுத்தியது. அது பின்வருமாறு.

1.CLARITY, 2. COLOUR, 3. CAROT, CUT

1.CLARITY (தெளிவு)

வைரத்தை மேலிருந்து உள்ளே பரிசோதித்து பார்க்கும் போது ஏதேனும் வேதிப் பொருள்களோ கனிமப் பொருள்களோ உள்ளடங்கி இருக்கிறதா என்பதை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படும். அது எந்தவிதத்திலாவது அதன் ஜொலிப்பை பாதித்தால் வைரத்தின் விலை குறையும்.

2. COLOUR (நிறம்)

வைரம் சுத்த வெள்ளையாக அதாவது நிறமற்றதாக (தெளிந்த நீரோடை போல்) இருந்தால் நல்ல தரமானது. நிறம் சற்றே மாறுபட்டு கொஞ்சம் பழுப்பு நிறம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக இருந்தால் தரம் குறைவாகும். தெளிவான கற்களே சிறந்தவை.

3. CAROT (எடை)

100 சென்ட் = 1 கேரட் இது வைரத்தின் எடையை குறிக்கிறது. வைரக் கல்லின் எடையை பொறுத்து அதன் விலை நிர்ண யிக்கப்படும்.

4. CUT (பட்டை தீட்டப்பட்டுள்ள முறை)

வைரக்கல் எந்த முறையில் பட்டை தீட்டப்பட்டுள்ளதோ அதை பொறுத்து விலை நிர்ணயிக்கப் படும். பட்டை சரியாக தீட்டப் படாமல் இருந்தால் வைரத்தின் விலை குறைந்து விடும்.

இந்த நான்கு C க்கள் (4 Cs ) வைரம் தேர்வு செய்வதற்கான அடிப்படையாகும்.

தங்கக் கேரட் வைரக் கேரட் இரண்டும் ஒன்றுதானா ?

வைரத்தில் கேரட் (CAROT) என்கிற வார்த்தை அதன் எடையைக் குறிக்கும். தங்கத்தில் கேரட்(Karatage) என்கிற வார்த்தை தங்கத்தின் தரத்தைக் குறிக்கும்.

உ.ம் 24 கேரட் என்றால் 100$ சுத்தத் தங்கம் அதே 24 கேரட் வைரம் என்பது அதன் எடையைக் குறிக்கும் இரண்டும் வேறு வேறு பொருள் (Meaning) கொண்டவை.

வைரத்தில் `ரத்தப்பந்து` என்றால் என்ன?

வைரம் வளரும் போது ஆயிரத்தில் ஏதாவது ஒரு கல்லில் அதனோடு சேர்ந்து சிவப்பு நிறத்தில் (மாதுளம் பழத்தின் முத்து நிறத்தில்) கார்னெட் (Garnet) என்கிற ஒருவகை ரத்தின கல்லும் சேர்ந்தே வளரும். வைரத்தை பட்டை தீட்டிய பிறகு இந்த சிவப்பு நிறம் நன்றாக தெரியும். இதை நம் ஊர் வியாபாரிகள் `ரத்தப்பந்து` என்பார்கள்.

டீபியர்ஸ் (De Beers) வைரங்கள் என்றால் என்ன?

1876ம் ஆண்டு ஜோஹன்னாஸ் டீபியர்ஸ் மற்றும் ஆர்ணால்டஸ் டீபியர்ஸ் சகோதரர்களுக்கு சொந்தமான பண்ணை நிலத்தில் ஏராளமான வைரங்கள் கிடைத்தன. ஆப்பிரிக்காவில் இந்த இடத்தை ஸெஸில் ரோட்ஸ் (Cecil Rhodes) என்பவர் வாங்கி வைரங்களை தோண்டி எடுத்து பெரும் செல்வந்தர் ஆனார்.அந்த நிறுவனத்துக்கு டீபியர்ஸ் மைனிங் கம்பெனி என்று பெயரிட்டார். இது 1880 ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி துவங்கப்பட்டது.

இன்று உலக வைர வியாபாரத்தில் 75சதவீதத்திற்கும் மேலாக இந்த நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால் De Beers சகோதரர்கள் இங்கிருந்து வைரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இந்த நிலத்தை சுமார் 500 டாலருக்கு விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.

ஹார்ட்ஸ் ஆரோஸ் வைரம் (Hearts and Arrows Diamonds) என்றால் என்ன?

சிறந்த பொறியியல் நுணுக்கத்துடன் ஒவ்வொரு பட்டையையும் குறிப்பிட்ட விகிதத்தில் சிறப்பாக தீட்டப்பட்ட வைரத்தை டைமண்ட் ஸ்கோப் என்ற கருவியின் மூலமாக பார்த்தால், அதனுள்ளே இருதயம் போலவும், அம்பு போலவும் துல்லியமாகத் தெரியும். இந்த வைரங்கள் அதிக ஜொலிப்புடன் விளங்கும் அதைத்தான் மேற் கண்டவாறு குறிப்பிடுக்கிறோம்.

ஆப்பிரிக்காவில் வைரங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

தென் ஆப்பிரிக்காவில் 1866ல் எராஸ்மஸ் ஜேக்கப் என்ற சிறுவனும் அவன் தங்கையும் ஆரஞ்சு நதியின் கரையில் விளையாடும் போது ஒரு பளபளப்பான கல்லைப் பார்த்து, அதை வீட்டுக்கு விளையாட எடுத்துச் சென்றனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த போயர் என்ற ஆங்கிலேயர் அவர்களது தாயாரிடம் அந்த கல்லை விலைக்குத் தருவீர்களா? என்று கேட்க, அவளோ பணமெல்லாம் வேண்டாம் என்று இலவசமாகவே கொடுத்துவிட்டாள். பிற்பாடு அதை (Boer)பரிசோதித்ததில் அது மிக அருமையான வைரம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பட்டைத் தீட்டாத கல்லின் எடை 21.23 காரட் இருந்தது. பட்டை தீட்டியபின் 10.73 காரட்டில் அருமையான வைரமாய் ஜொலித்தது. இதற்கு “யுரேகா” என்று பெயரிட்டனர். (அதாவது புதிய கண்டுபிடிப்பு என்று பொருள்). இது தான் ஆப்பிரிக்காவின் வைரக் கண்டுபிடிப்புக்கு ஆரம்பம் இந்த வைரம் தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லி மிசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விலைஉயர்ந்த வைரங்கள் வாங்கும் போது தரத்தை எப்படி அறிந்து கொள்வது?

இதற்கென்றே சில சட்ட திட்டங்கள், தரக்கட்டுப்பாடு முதலியவற்றை வகுத்து. அதை தர உறுதி செய்து சர்டிபிக்கேட் கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட கல்லும் முழுவதும் சீல் செய்யப்பட்டிருக்கும். அதில் கல்லுடைய எடை, நிறம், பட்டையின் விகிதம் முதலிய எல்லாமே குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்காக பல அமைப்புகள் உலக முழுவதுமுள்ளன. சான்றிதழ் பெற்ற கல்லை நகையில் வைத்து பதித்த பிறகு, அது அதே கல்தானா, என்று எப்படி அறிவது?

இதற்கும் ஒரு முறை உள்ளது. அந்தக் கல்லின் பட்டையின் மேல் பகுதியும், கீழ்பகுதியும் சந்திக்கும் இடத்தை கர்டில் (GIRDLE)என்று குறிப்பிடுவோம். அந்த இடத்தில் லேசர் கதிரின் (LASER) மூலமாக ஒரு அடையாள நம்பரை எழுதி விடுவார்கள். அதை அழிக்கவே முடியாது. லென்ஸ் வைத்து பார்த்தால் தெரியும்.

அது என்ன ஹெர்ட்ஸ் ?

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ் என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது என்று பார்ப்போமா!
ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக ஏத் என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு(ரேடியோ அலைவரிசையில்), கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. சி.ஆர்.டி. மானிட்டர் (“டிவி’ பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால், அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 ஏத் என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின்வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படு வதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.
மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப் படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.
முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க.
கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப் படுகிறது.

ஏர்டெல் 3 ஜி சேவை தொடங்கியது

இந்தியாவில் மொபைல் போன் சேவை வழங்குவதில் முதல் இடத்தில் இயங்கும் ஏர்டெல் நிறுவனம், 3ஜி சேவையினை பெங்களூருவில் சென்ற திங்கள் கிழமை தொடங்கியது. அடுத்ததாக, சென்ற ஜனவரி 27 அன்று, சென்னை மற்றும் கோவையிலும் தன் 3ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தரத் தொடங்கியுள்ளது. தனியார் நிறுவனப் பிரிவில், ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனங்களை அடுத்து, ஏர்டெல் இந்த சேவையினை மக்களுக்கு வழங்குகிறது.
இந்த சேவை மூலம், மொபைல் வழி இன்டர்நெட் சேவையினை தென் பகுதி மக்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறோம் என்று ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் சேவை பிரிவு தலைவர் அதுல் பிண்டால் கூறினார்.
இப்போது வைத்திருக்கும் சிம் கார்ட் மூலமாகவே, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சேவையினைப் பெறலாம். லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு 3ஜி டேட்டா கார்டினை ஏர்டெல் வழங்குகிறது. அனைத்து தரப்பிலும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, பல்வேறு அளவுகளில் கட்டண விகிதங்களை ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் வழங்கும் இன்டர்நெட் யூசேஜ் கால்குலேட்டர் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் எந்த அளவில், 3ஜி சேவையைப் பயன்படுத்தி இன்டர்நெட் இணைப்பு பெறுகின்றனர் என்பதனை கண்காணிக்கலாம். இதன் மூலம் தங்கள் பயன்பாட்டினை வரையறை செய்திடலாம்.
3ஜி சேவை மூலம், வாடிக்கையாளர்கள், வீடியோ கான்பரன்சிங், அதிவேக இன்டர்நெட் இணைப்பு, வேகமான டேட்டா டவுண்லோடிங், கேம்ஸ் ஆகியவற்றைத் தங்கள் மொபைல் போன்களில் மேற்கொள்ளலாம். இதுவரை பி.எஸ்.என்.எல்., டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் 3ஜி சேவையினை வழங்கி வருகின்றன. வோடபோன் எஸ்ஸார். ஏர்செல், ஐடியா செல்லுலர் மற்றும் எஸ் – டெல் ஆகியவை இந்த சேவையை வழங்க உரிமம் பெற்றுள்ளன.
வரும் மார்ச் மாதத்திற்குள், ஏறத்தாழ 50 நகரங்களில் 3ஜி சேவையை வழங்க ஏர்டெல் நிறுவனம் திட்டமிடுகிறது. மீத நகரங்களில், 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும். சென்ற டிசம்பர் முடிவிலான காலத்தில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 15 கோடி அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் உள்ள 22 தொலை தொடர்பு மண்டலங்களில், 13 மண்டலங்களில் 3ஜி சேவை வழங்க, ஏர்டெல் ரூ.12,295 கோடி செலுத்தி உரிமம் பெற்றது. இந்த 13 மண்டலங்களில் மட்டுமின்றி, பிற மண்டலங்களில் இயங்கும் நிறுவனங்க ளுடன் இணைந்து மற்ற மண்டலங்களிலும் ஏர்டெல் இந்த சேவையை வழங்கும் எனத் தெரிகிறது.
3ஜி சேவை வழங்குவதற்கான தொலை தொடர்பு பொறியியல் கட்டமைப்பினை, எரிக்சன், சீமென்ஸ், ஹுவெய் மற்றும் ஐ.பி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஏர்டெல் பெற்றுள்ளது.

காங்கிரஸ் அதிக சீட் எதிர்பார்ப்பதால் திருப்பம்: தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிவுக்கு வரும்

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் அதிக சீட்டுகளை எதிர்ப்பார்க்கிறது. அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., இடம் பெறுவது தாமதமாவதற்கும் அதிக சீட்டுகள் எதிர்பார்ப்பே காரணமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அக்கட்சி அ.தி.மு.க., அணியில் இடம் பெறுமா அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற குழப்பமும் நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டினால் தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிந்து விடும் நிலை புதிய திருப்பமாக உருவாகவுள்ளது.

தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவும் அறிவிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுவும், தலைவர் சோனியாவால் அறிவிக்கப்படவுள்ளது. தி.மு.க.,விடம் 80 தொகுதிகள் கேட்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது. தி.மு.க., தரப்பில் 80 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளையாவது காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இறுதிகட்ட நிபந்தனையை விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அ.தி.மு.க., அணியை பொருத்தவரையில் கூட்டணிக்கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி முடித்துள்ளது. தே.மு.தி.க.,வுடன் தொகுதி பங்கீடு முடித்த பின், அடுத்த கட்டமாக பா.ம.க.,வைப் பற்றி யோசிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க., அணியில் பா.ம.க., “வெயிட்டிங்’ லிஸ்டில் உள்ளது.தே.மு.தி.க., – ம.தி.மு.க., – இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்துக் கொடுக்கும் போது, அ.தி.மு.க., தரப்பில் குறைந்த பட்சம் 126 முதல் 135 தொகுதிகளுக்குள் தான் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும்.அதேபோல், தி.மு.க., அணியில் காங்கிரசுக்கு 70 முதல் 80 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 முதல் 15 தொகுதிகளும் மற்ற சமுதாய அமைப்புகள் கட்சிகளுக்கு தி.மு.க., தரப்பில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதால், அக்கட்சியும் 135 தொகுதிகள் வரை தான் போட்டியிட வேண்டியதிருக்கும்.

இப்படி கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் பகிர்ந்து கொடுத்து விட்டால், இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.,வால் பெரும்பான்மை பெற முடியவில்லை. எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக, மத்தியில் தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிவுக்கு வந்தது போல், இனிமேல் தமிழகத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்பு இருக்கிறது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்திருப்பத்தால் முக்கியமாக தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் மக்களிடம் தங்களுடைய தனி ஆட்சி என்று வலியுறுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இது காங்கிரஸ், தே.மு.தி.க., போன்ற கட்சிகளுக்கு சாதகமாகுமா என்பது சீட் ஒதுக்கீடு மற்றும் தேர்தல் பிரசாரம் ஆகிய நடைமுறைகளில் தெரிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையால் இக்கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் யுக்தி பற்றி அதிக அக்கறை கொண்டுள்ளன. பீகாரில் அதிக செல்வாக்கு கொண்ட லாலு கட்சியின் தற்போதைய நிலை, இத் தடவை பா.ம.க.,வுக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகள் அதைக் கூட்டணியில் மனமுவந்து ஏற்கத் தயங்குவதே அந்த அபாயத்தை நோக்கிச் செல்லும் அடையாளம் என்று கூறப்படுகிறது.

நன்றி-தினமலர்

கனவுகள்-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

ஆண்டாள் கனவு காண்கிறாள்; அற்புதமான கனவு; இனிமையான கனவு. கலியாணமாகாத ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் காணுகின்ற கனவு. நிறைவேறாத காரியங்களைப் பற்றிக் கனவு காண்பதிலே தான் எவ்வளவு சுகம்!

இந்தக் கனவுகளிலே பலவகை உண்டு. அரைகுறைத் தூக்கத்தில் வரும் கனவு, நினைவின் எதிரொலி.

பகல் தூக்கந்தான் பெரும்பாலும் அரைகுறை தூக்கமாக இருக்கிறது. ஆகவேதான், `பகல் கனவு பலிக்காது’ என்கிறார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவு பெரும்பாலும் பலிக்கிறது. ஆழ்ந்த தூக்கம் என்பது அதிகாலையில் தான் வருகிறது. ஆகவே, `காலைக் கனவு கட்டாயம் பலிக்கும்’ என்கிறார்கள். ஆண்டாள் காண்பதோ காலைக் கனவுமல்ல; பகல் கனவுமல்ல. அது ஆசையின் உச்சம்; பக்திப் பெருக்கு; பரவசத் துடிப்பு. கண்ணனை மணவாளனாகக் காண்கிறாள் கோதை.    `உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்று தன்னை அவன் கையில் தருகிறாள் நாச்சியார். கண்ணாடி முன் நிற்கிறாள். பூச்சூடி, குழல் முடித்து, பொட்டிட்டு நின்று, தன் திருமுகத்தைத் தானே பார்க்கிறாள். ஆண்டாளின் ஸ்தூலத்திற்குக் கண்ணாடியில் தெரியும் அவளது உருவமே தோழியாகிறது. “அடி தோழி!

நான் கனவு கண்டேன். வாரண மாயிரம் சூழ வலம்வந்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்.”

– “எல்லே இளங்கிளியே! என் கனவைக் கேட்டாயா?

ஆயிரம் யானைகள் சூழ நாரண நம்பி வந்தான்;

அவன் வரும்போது பூரண கும்பங்கள் எழுந்தன;

தோரணங்கள் நாட்டப்பட்டன. கதிரொளி தீபம் கலசமுட னேந்தி சதிரிள மங்கையைர் தாம்வந் தெதிர்கொள்ள மதுரையார் மன்னர் அடிநிலை தொட்டெங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான். – ஆம்!

ஒளி மிகுந்த தீபங்களைக் கையிலேந்திக் கொண்டு சதிராடும் இளமங்கையர் வந்தார்கள். அவனை எதிர்க்கொண்டார்கள். அந்த மதுரையார் மன்னர், மாயக் கண்ணன், எனது பாதத்திலிருந்து உச்சிவரை உடம்பே அதிர்ந்து போகுமாறு புகுந்ததாகக் கனவு கண்டேன். அந்த மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனவு கண்டேன். அடி தோழி! என் கனவு நனவாகும்.”

– ஆம், ஆண்டாளின் கனவு, அவளது ஆசையின் விரிவு! ஏக்கத்தின் இலக்கியம்!

இத்தகைய கனவுகளைப் பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது. கனவுகள் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தால், அவை பலிக்கும் என்கிறது. சிலப்பதிகாரத்தில் `கனாத்திறம் உரைத்த காதை’ வருகிறது. `முத்தொள்ளாயிர’ நாயகிகளும் கனவு காண்கிறார்கள். திருக்குறளிலும் கனவுக் குறிக்கப் பெறுகிறது. கனவு என்பதை இறைவன் விடும் முன்னறிவிப்பு என்றே நான் கருதுகிறேன்.

இந்துக்களுக்கு கனவு நம்பிக்கை அதிகம். எனக்கு மிக அதிகம். காரணம், நான் கண்ட கனவுகள் பெரும்பாலும் பலித்திருக்கின்றன. 1948-ஆம் ஆண்டு நான் சேலத்தில் வேலை பார்த்தபோது அரிசிப்பாளையத்தில் தங்கியிருந்தேன்.

என்னோடு பூந்தோட்டம் திருநாவுக்கரசு என்ற நண்பரும், சாந்தி மா. கணபதி என்ற நண்பரும் தங்கியிருந்தார்கள். அவர்களில் பூந்தோட்டம் திருநாவுக்

கரசு இப்பொழுது சிங்கப்பூரில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். சாந்தி மா. கணபதி என்ற நண்பர், 1960-ல் காலமானார். ஒருநாள் காலையில், காந்தியடிகளைச் சுட்டுக் கொன்று விட்டதாக எனக்கொரு கனவு வந்தது. காலையில் எல்லாரிடத்திலும் அதைச் சொன்னேன்.    “சீ சனியனே! உன் கருநாக்கை வைத்துக்கொண்டு சும்மாயிரு. எதையாவது உளறித் தொலைக்காதே” என்று எல்லாரும் என்னைக் கோபித்துக் கொண்டார்கள். அன்று மாலை வானொலி கண்ணீரோடு ஒரு செய்தியைச் சொன்னது, “காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று. எனது நண்பர்கள் திகைத்துப் போனார்கள்; என்னை எச்சரித்தார்கள். “இதோ பார்! நீ கனவு கண்டதாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டாகள். இதிலே உனக்கும் சம்பந்தமிருப்பதாகச் சொல்லிவிடுவார்கள். ஆகவே, வாயை மூடிக் கொண்டு சும்மாயிரு” என்றார்கள். எனக்கு, அந்தப் பயம் தெளியவே வெகு நாளாயிற்று. சில கனவுகள் ஆணியடித்தாற்போல் எதிர்மறை பலன்களைக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, என் கனவில் மலம் வந்தால் மறுநாள் எங்கிருந்தாவது பணம் வருகிறது. நூற்றுக்கணக்கான முறை அந்தக் கனவைக் கண்டு மறுநாளே பலனடைந்திருக்கிறேன். பல் விழுவதாகக் கனவு கண்டால், மறுநாளே என்மீது கோர்ட்டில் புது வழக்கு வருகிறது. இருபது வருடங்களாக அடிக்கடி நான் படிப்பது போலக் கனவு காண்கிறேன்.

ஒவ்வொரு தடவையும் அந்தக் கனவு வந்த பிறகு என் புகழ் உயர்ந்து வந்திருக்கிறது. பல தடவை ரயிலுக்குப் போகும்போது ரயிலைத் தவற விடுவதாகக் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவதொரு நல்ல சந்தர்ப்பத்தை நான் இழந்திருக்கிறேன். உயரமான இடத்தில் ஏறி இறங்க முடியாமல் தத்தளிப்பதாகக் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் வாழ்க்கையில் ஏதாவது சிக்கல் வந்து தீர்க்க முடியாமல் கலங்கியிருக்கிறேன்.

ஏறிய உயரத்திலிருந்து மளமளவென்று இறங்கி வருவது போலக் கனவு கண்டால், வந்த சிக்கல் தீர்ந்து விடுகிறது. கனவில் வெள்ளம் வந்தால், காலையில் பணம் வருகிறது. அந்த வெள்ளம் வடிந்து போவது போல் கனவு கண்டால், பணம் செலவழிந்து போகிறது. 1967- ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் தோற்றுப் போவதையே கனவில் கண்டேன். ஒரு கோட்டை!

நானும் மற்ற காங்கிரஸ் நண்பர்களும் அங்கே நிற்கிறோம். மூவேந்தர் காலத்து ஆடை அணிந்து, தி.மு. கழக நண்பர்களெல்லாம் படைகள் போல வந்து, அந்தக் கோட்டையைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.அந்தக் கனவைப் பற்றி அப்பொழுதே எனது நண்பர்கள் பலரிடமும் கூறினேன்; அது பலித்து விட்டது. 1971- ஆம் ஆண்டுத் தேர்தலில் யானை என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்து, எனக்கு மாலை போடுவது போலக் கனவு கண்டேன். அந்தத் தேர்தலில் நான் சார்ந்திருந்த இந்திரா காங்கிரசுக்குப் பலத்த மெஜாரிட்டி கிடைத்தது. இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மலை மீது நான் சுற்றி வருவதாகவும், அந்த மலையில் எங்கும் நாமம் போட்டிருக்கவும் கனவு கண்டேன். திருப்பதிக்குச் சென்று திரும்பி வந்தேன். பல தொல்லைகள் மளமளவென்று தீர்ந்தன. அதன் பிறகுதான், “திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா – உன் விருப்பம் கூடுமடா” என்ற பாட்டை எழுதினேன். என் கனவில் கண்ணன் அடிக்கடி வருகிறான்; ஆனால் என்னோடு பேசுவதில்லை. ஒருவேளை இது என் நினைவின் எதிரொலியாக இருக்கலாம். தி.மு.க. விலிருந்து நான் பிரிந்த பிறகு, நானும் சம்பத்தும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் பெங்களூரில் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றோம். மத்தியானம் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, நான் கூட்டத்திற்குச் செல்வதாகவும், அங்கே கல்லெறி நடப்பதாகவும், என் கார்க் கண்ணாடி உடைந்ததாகவும் கனவு கண்டேன். அது பகல் கனவுதான், என்றாலும் ஆழ்ந்த தூக்கத்தில் வந்த கனவு. என்ன ஆச்சரியம்! நான் கண்ட கனவு அன்று மாலையே அப்படியே நடந்தது. காரில் எந்தக் கண்ணாடி உடைந்ததாகக் கனவு கண்டேனோ அதே கண்ணாடி உடைந்தது. கனவில் வந்த முகங்களே என் கண் முன்னாலும் காட்சியளித்தன. வாய் நிறைய ரோமம் இருப்பதாகவும், அது இழுக்க இழுக்க வந்து கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்.

அப்பொழுதெல்லாம் தொல்லை மாற்றித் தொல்லை வரும்.

சிவனடியார்களின் கனவில் ஆண்டவன் வந்து, `இந்த இடத்துக்கு வா’ வென்று சொன்னதாகவும் அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று அமைதி கொண்டதாகவும் செய்திகள் படிக்கிறோம். அவை பொய்யல்ல என்றே நான் நினைக்கிறேன். `நிர்மலமான தூக்கத்தில் களங்கமற்ற உள்ளத்தில் தோன்றும் கனவுகள் பலிக்கின்றன’ என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தக் கனவுகளை நாம் வரவழைக்க முடியாது. அவை ஆண்டவன் போட்டுக் காட்டும் படங்கள்.