Daily Archives: பிப்ரவரி 9th, 2011

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்களிடம் கேட்கும் 29 கேள்விகள்

இன்று துவங்கும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள், பிப்., 28 வரை நடைபெறுகிறது. வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களிடம் கேட்கும் 29 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். அவை:

1. பெயர்,

2. குடும்ப தலைவருக்கு உறவு முறை,

3. இனம்,

4. பிறந்த தேதி மற்றும் வயது,

5. தற்போதைய திருமண நிலை,

6. திருமணத்தின் போது வயது,

7. மதம்,

8. ஷெட்யூல்டு வகுப்பு/ ஷெட்யூல்டு பழங்குடி,

9. மாற்றுத் திறன் (ஊனம்),

10. தாய்மொழி,

11, அறிந்த பிற மொழிகள்,

12. எழுத்தறிவு நிலை,

13. கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை.

14. அதிக பட்ச கல்வி நிலை,

15. கடந்த ஆண்டில் எப்பொழுதாவது வேலை செய்தாரா.

16. பொருளாதார நடவடிக்கையின் வகை,

17. நபரின் தொழில்,

18. தொழில், வியாபாரம், சேவையின் தன்மை,

19. வேலை செய்பவரின் வகை,

20. பொருளீட்டா நடவடிக்கை,

21. வேலை தேடுகின்றாரா, வேலை செய்ய தயாரா,

22. பணி செய்யும் இடத்திற்கு பயணம்,

23. பிறந்த தேதி,

24. கடைசியாக வசித்த இடம்,

25. இடப்பெயர்ச்சிக்கான காரணங்கள்,

26. நகரத்தில் இடப்பெயற்சிக்கு பின் வசித்து வரும் காலம்,

27.உயிருடன் வாழும் குழந்தைகள்,

28. உயிருடன் பிறந்த குழந்தைகள்,

29. கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகள்.

கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கான பதில்களை முன்னதாகவே தயாராக வைத்திருந்து, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,.

புதன் கோளில் அடுத்த மாதம் இறங்குது அமெரிக்க விண்கலம்

கடந்த 2004&ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஏவிய ‘மெசஞ்சர்’ விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தில் அடுத்த மாதம் தரையிறங்க உள்ளது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ புதன் கோள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. புதன் கோள் பற்றிய ஆராய்ச்சிக்காக ‘மெரைனர்10’ என்ற விண்கலத்தை நாசா கடந்த 1973&ம் ஆண்டு அனுப்பியது. அதன் பிறகு, பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 2004&ம் ஆண்டு ஆகஸ்ட் 3&ம் தேதி ‘மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை புதனுக்கு அனுப்பியது நாசா.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து மெசஞ்சர் விண்கலத்தை சுமந்துகொண்டு டெல்டா&2 ராக்கெட் போகிறது.. போகிறது.. போய்க்கொண்டே இருக்கிறது. பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி தற்போது புதனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில் பாயும் அந்த ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு தற்போது புதன் கிரகத்தை நெருங்கியிருக்கிறது.

சூரியனுக்கு ரொம்ப நெருக்கமான கிரகம் என்பதால் வெயில் அதிகமாம். பூமியில் இருக்கும் சூரிய வெப்பத்தைவிட 11 மடங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதிக வெப்பத்தையும் தாங்கும் விதத்தில் வெளிப்புற பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக மெசஞ்சர் திட்ட விஞ்ஞானி லூயிஸ் பிராக்டர் தெரிவித்தார்.

புதனின் மண்தன்மை, வெப்பம், சுற்றுப்பகுதி, வானிலை உள்பட சகல அம்சங்களையும் ஆராய்வதற்கு ஏற்ப அதிநவீன சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள், வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவிகள், நவீன கம்ப்யூட்டர்கள், கேமராக்கள் ஆகியவை மெசஞ்சர் விண்கலத்தில் இருக்கின்றன.

6 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வகையில் புதனின் வட்டப்பாதைக்குள் மெசஞ்சர் அடுத்த மாதம் 17&ம் நுழைய உள்ளது. இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

ஜூலியன் அஸாஞ், பிராட்லே மேனிங் வரலாற்றை மாற்றும் தியாகங்கள்

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதியதில் தலையாயப் பங்கு வகித்தவரும் அமெரிக்காவின் மூன்றாம் குடியரசுத் தலைவருமான தாமஸ் ஜெபர்ஸன் பத்திரிகைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறுகையில், “”பத்திரிகைகள் இல்லாமல் அரசாங்கம் மட்டும் அல்லது அரசாங்கம் இல்லாமல் பத்திரிகைகள் மட்டும் என்ற இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டி வந்தால் நான் துளியும் தயங்காமல் அரசாங்கம் இல்லாமல் பத்திரிகைகள் மட்டும் என்பதையே தேர்ந்தெடுப்பேன்” என்றார். தகவல் என்பது மக்களாட்சியின் நாணயம் (currency) என்றார் அவர். ஊடகச் சுதந்திரமும் ஒரு சமூகம் நீதியுடன் செயல்படுவதற்கு அச்சாணியைப் போன்றவை.

மக்களாட்சி சிறப்பாகச் செயல்படத் தங்குதடையற்ற தகவல் மற்றும் செய்திப் பரிமாற்றங்கள் மிக அவசியம். ஆனால் இன்றைய மையநீரோட்ட ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயல்படுகளைப் பார்க்கிறபோது இவர்களை மனத்தில் வைத்து ஜெபர்ஸன் அப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை.இன்று உலகெமங்கும் எல்லா நாடுகளிலும் அரசாங்கம், மைய நீரோட்ட ஊடகங்கள், மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகோர்த்துச் செயல்படுவதையும் இவற்றின் நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருப்பதையும் புரிந்து கொள்ள ஒருவர் மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஊடக நிறுவனங்கள் தாங்களே பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாகவும் கார்ப்பரேட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுபவையாகவும் (விளம்பரங்கள் மூலம்) பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சேவகர்களாகவும் மாறிவிட்ட நிலையில் பத்திரிகைள் ஆற்ற வேணடியது என்று ஜெபர்ஸன் எதிர்பார்த்த பணியை இன்று ஆற்றக்கூடியது இணையமாகவே இருக்கிறது.
சமீபத்தில் அம்பலமான நீராடியா விவகாரம் இந்த மூன்று பிரிவினருக்கும் இகுடையில் இருக்கும் .றவின் தன்மையையும் இந்திய மக்களாட்சியின் நான்காம் தூணின் லட்சணத்தையும் (மற்ற மூன்று தூண்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை) வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இந்த விபகாரத்தை மையநீரோட்ட ஊடகங்கள் அனைத்தும் (ஓபன் மற்றும் அவுட் லுக் தவிர்த்து) இருட்டடிப்பு செய்ய முயன்ற வேளையில் இது லட்சக்கணக்கானவர்களால் இணையத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இனி இதைப் பற்றி மௌனம் சாதிப்பது தங்களது முகத்திரையைக் கிழித்துவிடும் என்பதை உணர்ந்த பின்னரே மைய நீரோட்டப் பத்திரிகைகள் இதைப் பற்றி செய்திகள் வெளியிடத் தொடங்கின.
அமெரிக்க ராணுவத்தினர் ராய்ட்டர் செய்தியாளர்கள் இருவர் மீதும் அப்பாவிப் பொதுமக்கள் பலர் மீதும் ஹெலிகாப்டரிலிருந்து நடத்திய தாக்குதல் வீடியோவை 2011 ஏப்ரல் மாதம் 5இல் அம்பலப்படுத்தியதிலிருந்து, ஆப்கானிஸ்தான் (2010 ஜூலை 25), ஈரான் (2010 அக்டோபர் 22) போர்க் குறிப்புகள் மற்றும் அமெரிக்கத் தூதரகக்கேபிள்களை (2010 நவம்பர் 28) அம்பலப்படுத்தியதுவரை விக்கிலீஸின் பயணம் ஓர் அசாதாரணமான, வீரஞ்செறிந்த பயணம். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்க் குறிப்புகள் அமெரிக்க ராணுவத்தின் அயோக்கியத்தனங்களை, கொடூரங்களை அம்பலப்படுத்தின என்றால் உலகெங்குமுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளன் கேபிள் செய்திகள் மூலம் அமெரிக்கா சர்வதேச அரசியலை எவ்வாறு கையாள்கிறது என்பதும் அம்பலமாகியுள்ளது. அம்பலம் என்று சொல்கிறபோது ஏதோ இதுவரை உலகிற்குத் தெரியாதிருந்த விஷயங்கள் இப்போதுதான் தெரியவந்திருப்பதாக அர்த்தமல்ல.

விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள விஷயங்கள் பல ஏற்கனவே தெரிந்தவைதான். உலகெங்குமுள்ள பல முற்போக்கான பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் இவற்றை ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளனர். விக்கிலீக்ஸ் குறித்த கடந்த கட்டுரையில் நான் கூறியதுபோல இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் ஆவணங்கள் அமெரிக்க ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் கைப்பட எழுதியவை என்பதுதான் இவற்றின் சிறப்பு.
ஐ.நா.அவையின் உயரதிகாரிகளை உளவுபார்க்க அமெரிக்க அரசு உத்திரவிட்டது. ஈரானின் அணுசக்தி உற்பத்தி மையங்கள் அழிக்கப்படவேண்டுமென்று அமெரிக்காவிடம் சவுதி அரேபியாவின் மன்னர் வைத்த கோரிக்கை, அல்லது லஷ்கர் -இ-தய்பாவைவிட இந்து அடிப்படைவாதச் சக்திகள் ஆபத்தானவை என்ற ராகுல் காந்தியின் கருத்து, காஷ்மீரில் மனித உரிமைகள் இந்தியப் பாதுகாப்புப் படைகளால் மிக மோசமாக மீறப்படுகின்றன என்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் கூறியது என எதுவுமே அதிர்ச்சியளிக்கும் விஷயம் அல்ல. இந்த விஷயங்கள் சம்பந்தப்பட்டவர்களை முகம் சிவக்க வைக்கும் அல்லது தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் என்பதைத் தவிர இவற்றால் பெரும் மாற்றங்கள் ஏதும் சர்வதேச அரசியலிலோ இந்திய அரசியலிலோ ஏற்படப்போவதில்லை. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மனித உரிமைகள் இந்தியப் பாதுகாப்புப்படைகளால் மீறப்படுவது என்பது அனைவருக்கும் தெரிந்தது.

அமெரிக்கா உட்படப் பல நாடுகளின் அரசாங்கங்கள் பயப்படுவது இப்போது வெளியாகிவிட்ட ரகசியங்களுக்காக அல்ல. இனி ரகசியம் என்று எதையும் மக்களிடமிருந்து மறைப்பது சாத்தியமல்ல என்னும் நிலை உருவாகிக்கொண்டிருப்பதே இவர்களின் பெரும் அச்சம். விக்கிலீக்ஸ்போல், ஜூலியன் அஸாஞ் மற்றும் பிராட்லே மேனிங் போல பலர் உருவாகிவிடக் கூடாது என்பதே அமெரிக்கா மற்றும் பலநாட்டு அரசுகளின் தீவிரக் கவலை.

எப்பாடுபட்டாவது அஸாஞை ஒழித்துக்கட்ட அமெரிக்கா முயல்கிறது. இந்த முயற்சியில் அமெரிக்காவிற்கு எந்த அளவிற்கு வெற்றிகிட்டும் எனத் தெரியவில்லை. ஆனால் வெற்றிக்காக அது எதை வேண்டுமானாலும் செய்யும் என்பது மட்டும் நமக்குத் தெரியும். இப்போது அமெரிக்காவின் கையில் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆயுதம் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் இருவர் அஸாஞ் மீது தொடுத்துள்ள பாலியல் வன்முறை வழக்கு.
ஜூலியன் அஸாஞ்மீது ஸ்வீடன் அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கு சிக்கல்கள் நிறைந்தது. தெளிவற்றது.

உண்மையில் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை இதில் சம்பந்தப்படாத மூன்றாம் நபர் யூகிப்பது அவ்வளவு எளிதல்ல என்று லண்டன் த கார்டியன் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது மிகவும் சரி. ஸ்வீடன் நாட்ட வரும் Christian Association of Social Democrats என்ற அமைப்பின் உறுப்பினருமான பெண் ஒருவர் அஸாஞ் பேசுவதற்கான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். 2010 ஆகஸ்ட் 11ஆம் தேதி ஸ்வீடன் வந்தார் அஸாஞ். அந்தப்பெண் சிலநாட்கள் வெளியூர் செல்லவிருந்ததால் அவரது வீட்டிலேயே அஸாஞ் தங்கிக்கொள்ளலாம் என்று ஏற்பாடானது. அந்தப்பெண் 14ஆம் தேதி வெளியூரிலிருந்து திரும்பிய பிறகு இருவரும் அதே நாளில் Social Democrats’Brotherhood Movement என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

அதில் “”போர் மற்றும் ஊடகத்தின் பங்கு” என்னும் தலைப்பில் நடந்த அந்தக் கருத்தரங்கில் அஸாஞ் முக்கியப் பேச்சாளார்.
அன்று இரவு இருவரும் உடலுறுவு கொண்டனர். தான் காண்டம் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் ஆனால் காண்டம் இல்லாமல் உடலுறவு கொள்ள அஸாஞ் முயன்றதாகவும் பின்னர் தனது வற்புறுத்தலால் காண்டம் பயன்படுத்தியதாகவும் ஆனால் பயன்படுத்தியபோது அதை வேண்டுமென்றே அஸாஞ் கிழித்துவிட்டதாகவும் அந்தப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

அதே கருத்தரங்கில் அஸாஞ் சந்தித்த மற்றொரு பெண்ணுடன் சில நாட்கள் கழித்துக் காண்டம் இல்லாமல் உடலுறவுகொள்ள முயன்றதாகவும் அதற்கு அந்தப்பெண் மறுத்துவிட்டதால் பின்னர் காண்டம் பயன்படுத்தியதாகவும், ஆனால் பின்னர் தான் தூங்கிக்கொண்டிருந்தபோது காண்டம் இல்லாமல் தன்னுடன் அஸாஞ் உடலுறவு கொண்டுவிட்டதாகவும் அந்த மற்றொரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். பெண்கள் இருவருமே இதைப்பற்றி உடனடியாக எந்தப் புகாரையும் காவல்துறையில் பதிவு செய்யவில்லை என்பதுடன் அந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அடுத்த சில நாட்களும் அஸாஞ் கடன் சுமுகமான உறவுடனேயே இருந்துள்ளனர்.

ஸ்வீடன் நாட்டின் சட்டங்கள் Whistle-களுக்கு மிகுந்த பாதுகாப்பளிப்பதாக இருப்பதால் அந்நாடு, விக்கிலீக்ஸ் அதிகப் பிரச்சினைகள் இன்றிச் செயல்படுவதற்கு உகந்தது என்று கருதி அங்கு தங்கி, வேலை செய்ய அனுமதி கேட்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி மனுச்செய்திருந்தார் அஸாஞ். பெண்கள் கொடுத்த புகார்களின் பேரில் அஸாஞ்சிற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. முதலில் இரு தரப்பு ஒப்புதலுடன் தொடங்கிய உடலுறவிலிருந்து பின்னர் தாங்கள் விலகிக்கொள்ள விரும்பியபோதிலும் அஸாஞ் வலுக்கட்டாயமாக உடலுறவைத் தொடர்ந்ததாகப் பெண்கள் குற்றம் சாட்டியிருந்தனர் ஒரு வழக்கு பாலியல் வன்முறை (rape) என்பதாகவும் மற்றொரு வழக்கு பாலியல் தொந்தரவு (molestation)என்பதாகவும் பதிவு செய்யப்பட்டது. அஸாஞ் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்ற சந்தேகிப்பதற்கான காரணங்கள் ஏதுமில்லை என்பதாலும் பாலியல் தொந்தரவுகளுக்காகக் கைது வாரண்ட் தேவையில்லை என்பதாலும் கைது வாரண்ட் திரும்பப்பெறப்படுவதாக 21ஆம் தேதி ஸ்டாக்ஹோமின் தலைமை பிராசிக்யூட்டர் தெரிவித்தார்.

பாலியல் தொந்திரவு குறித்து மேலும் விசாரணைகள் தொடரும் என்று அவர் அறிவித்தார். அந்தப்பெண்களின் வழக்கறிஞர் மேல்முறையீடு செய்தார். காவல்துறையின் விசாரணையின்போது தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அஸாஞ் முற்றிலுமாக மறுத்தார். பாலியல் வன்முறையில் அஸாஞ் ஈடுபட்டார் என்று நம்புவதற்கு ஆதாரங்கள் இருப்பதாக பிராசிக்யூஷன் இயக்குநர் செப்டம்பர் ஒன்றாம் தேதி அறிவித்ததுடன் அது குறித்த விசாரணைகள் தொடரும் என்றார். அக்டோபர் மாத மத்தியல் எந்தக் குறிப்பான காரணங்களையும் கூறாமல் ஸ்வீடனில் தங்கி, பணியாற்ற அனுமதி கேட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பாலியல் வன்முறை மற்றும் பாலியல் தொந்திரவுகளுக்காக அஸாஞ் விசாரிக்கப்பட வேண்டுமென ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் தனது பணிகள் காரணமாக நவம்பர் மாதம் லண்டன் வந்த அஸாஞ், லண்டனிலுள்ள ஸ்வீடன் தூதரகத்திலோ ஸ்காட்லேண்ட் காவல்துறை அலுவலகத்திலோ அல்லது வீடியோ கான்பரன்ஸிங் மூலமோ தன்னை விசாரிக்கும்படி கேட்டுக்கெண்டார். ஆனால் அதை ஒப்புக்கொள்ளாத ஸ்வீடன் பிராசிக்யூசன் இயக்குநர் விசாரணைக்காக அஸாஞ் ஸ்வீடன் வந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக ஸ்வீடன் காவல்துறை சர்வதேசக் கைது வாரண்டைச் சர்வதேசக் காவல்துறை மூலம் நவம்பர் 20ஆம் தேதி பிறப்பித்தது.

டிசம்பர் 8ஆம் தேதி தானாக முன்வந்து அஸாஞ் தன்னை லண்டன் காவல்துறையிடம் ஒப்படைத்துக்கொண்டார். வெஸ்ம்மினிஸ்டர் நீதிமன்றத்திற்குக்கொண்டு செல்லப்பட்ட அவரை 14ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் வரை சிறைக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. 14ஆம் தேதி அவருக்கு நீதிமன்றம் பெயில் வழங்கியது.ஆனால் பிராசிக்யூஷன் தரப்பு மேல்முறையீடு செய்யப்போவதாக உடனடியாக அறிவித்ததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்படும்வரை மீண்டும் சிறையில் வைக்கப்பட்டார். 16ஆம் தேதி உயர் நீதிமன்றம் அவருக்குப் பெயில் வழங்கியது. விசாரணைக்காக அவர் ஸ்வீடன் கொண்டுசெல்லப்படுவது குறித்த extradition வழக்கு இனி நடக்கும். பொதுவாக extradition வழக்குகள் வழக்கமாக ஓரிரு மாதங்களில் முடிவடையும். ஆனால் இந்த வழக்கு மிகுந்த முக்கியத்துவமுடையது என்பதால் பல மாதங்கள் ஆகக்கூடும்.

பிரிட்டனிலிருந்து அஸாஞ்சை நேரடியாக அமெரிக்காவிற்கு அனுப்பக் கோருவது சட்டரீதியாக மிகக்கடினம் என்பதால் ஸ்வீடனிலிருந்து அமெரிக்கா கொண்டு செல்ல அமெரிக்கா தீவிரமாக முயல்கிறது. ஸ்வீடன் பல விதங்களில் மிக முற்போக்கான நாடாக இருந்தபோதிலும் அமெரிக்காவின் நெருக்குதலுக்கு எளிதில் பணிந்துவிடும் வாய்ப்புள்ளது என்பதால் இந்த வழக்கை மிகத் தீவிரத்துடன் அஸாஞ்சின் வழக்கறிஞர்களும் ஆதரவாளர்களும் நடத்தி வருகின்றனர். உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் இறுதியாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் ஆகியவற்றை இந்த வழக்கு கடந்து வந்தாக வேண்டும்.

இவற்றில் மனித உரிமைகள் குறித்து மிகந்த அக்கறை கொண்டுள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் மற்றும் ஐரோப்பியக் கவுன்சில் அமெரிக்காவின் மிகுந்த கோபத்திற்குள்ளாகியிருப்பதை விக்கலீக்ஸ் அம்பலப்படுத்திய அமெரிக்க தூதாண்மை அதிகாரிகளின் கேபிள்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் ரகசியச்சிறைச்சாலைகள், கொடூரமான விசாரணை முறைகள், காலவரையறையில்லாமல் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணையில்லாமல் அடைத்துவைத்திருப்பது ஆகியவற்றை ஐரோப்பியக்கவுன்சில் கடுமையாக எதிர்த்துவருகிறது.

இதன்காரணமாகத் தனது அரசால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்படுவதற்கு அவர்களை அமெரிக்கா தனது நாட்டிற்கு அனுப்பக்கோருவதை ஐரோப்பியக்கவுன்சில் கடுமையாக எதிர்க்கிறது. அமெரிக்கா தன்னை விசாரணைக்கு அனுப்பிவைக்க கோரும்பட்சத்தில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தை, மற்ற அனைத்து நீதிமன்றங்களிலும் தனது வழக்கு தோற்கும்பட்சத்தில், அஸாஞ் அணுக முடியும். ஏற்கனவே மனித உரிமைகள் மீறலைக்காரணம் காட்டி அஸாங் ஸ்வீடன் அனுப்பப்படுவதை எதிர்த்து அவருடைய வழக்கறிஞர்கள் வாதங்களை வைத்துள்ளனர்.

அஸாஞ் குறித்த மிகத் தீவிரமான கிரிமினல் விசாரணையை அமெரிக்கா மேற்கொண்டிருப்பதாக அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் தெரிவித்துள்ளார். ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவத்தில் உளவுப் பிரிவில் பணிபுரியும் இளம் ராணுவ அதிகாரி பிராட்லே மேனிங்கிடமிருந்து ஆவணங்களை திருடச் சதிசெய்ததாக அவர்மீது குற்றம்சாட்ட அமெரிக்கா முயன்றுவருவதாகத் தெரிகிறது. ஊடகவியலாளர் என்னும் முறையில் தனக்குக் கிடைத்த ஆவணங்களைப் பொதுமக்களின் பார்வைக்காகத் தான் வெளியிட்டிருப்பதை மிக வெளிப்படையாக அஸாஞ் பலமுறை தெளிவுபடுத்தியிருப்பதால் இந்த அடிப்படையில் அவர்மீது வழக்கு தொடுப்பது அமெரிக்காவிற்கு எளிதானதாக இருக்காது என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கிடையே உளவு பார்த்த குற்றத்திற்காக அல்லது மற்ற அரசியல் குற்றங்களுக்காக ஒருவரைத் தனது நாட்டிற்க அனுப்பிவைக்க கோர முடியாது என்பது அமெரிக்கா எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை.

எல்லாவற்றையும்விட முக்கியமாக classified அரசாங்க ஆவணங்களை வெளியிடுவது அமெரிக்காச் சட்டத்தின்படி குற்றமல்ல. உளவுபார்த்த குற்றத்திற்காக அஸாஞ்மீது வழக்கு தொடுக்க வேண்டுமானால், அமெரிக்காவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படுத்தும் நோக்கம் அஸாஞ்சிற்கு இருந்தது என்பதோ அல்லது இந்த ரகசிய ஆவணங்களைத் தவறான முறையில் அரசாங்கத்திடமிருந்து பெற்றார் என்றோ நிரூபிக்கப்பட வேண்டும். ரகசிய ஆவணங்களை அரசாங்கக்கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்வதில் அஸாஞ் தொடர்பு கொண்டிருந்தார் என்றோ அல்லது பிராட்லே மேனிங்கை அவ்வாறு செய்யத்தூண்டினார் என்ற வகையிலோ அவர்மீது வழக்குத் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

ஊடகவியலாளர் என்ற முறையில் ரகசியச் செய்திகளைச் சேகரிப்பதும் வெளியிடுவதும் அமெரிக்கச் சட்டங்களின்படி குற்றமல்ல. அமெரிக்க அரசியல் சாசனச் சட்டத்திற்கான மதல் திருத்தமானது பத்திரிகைகளுக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அந்த அடிப்படையி“ல தான்1971இல் டேனியல் எல்ஸ்பெர்க் அம்பலப்படுத்திய பென்டகன் ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளிடுவதைத் தடுக்க முடியவில்லை. மேலும், இப்போது நியூயார்க் டைம்ஸ், த கார்டியன் உட்பட உலகின் மிக முக்கியமான மற்றும் புகழ் வாய்ந்த ஐந்து பத்திரிகைகள் இந்த கேபிள்களை வெளியிட்டுள்ளதால் விக்கிலீக்ஸ் நிறுவனர் அஸாஞ் தண்டிக்கப்படும் பட்சத்தில் இந்தப் பத்திரிகைகளும் அதே குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டி வரும். ஆகவே ஏராளமான சட்ட இடைஞ்சல்களை எதிர்கொள்வதைத் தவிர்த்து அமெரிக்கா மற்ற வழிகளை நாடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

அலாஸ்கா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் கடந்த அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளருமான சாரா பாலின், அமெரிக்கா ஒசாமா பின்லேடனை வேட்டையாடுவதைப்போல அஸாஞ்சையும் வேட்டையாட வேண்டும் என்று பேசிவருகிறார். தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களின்போது சட்டத்திற்குப்புறம்பான வகையில் அஸாங் கையாளப்படுவதில் தயக்கம் காட்டக்கூடாது என்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. சட்டத்திற்குப் புறம்பாகக் கையாள்வது என்று சொல்லுவதன் அர்த்தம் என்ன என்பதைத் தனக்கு வேண்டாதவர்களை – சில நாடுகளின் தலைவர்களும் இதில் அடக்கம் – சி.ஐ.ஏ.எப்படித் தீர்த்துக்கட்டியது என்பதை அறிந்தவர்களுக்குப் புரியும்.

ஜூலியன் அஸாஞ்சைக்கொல்வதன் மூலம் எதையும் பெரிதாகச் சாதித்துவிட முடியாது என்பது அமெரிக்காவிற்குத் தெரியும் என்றாலும் இன்று அமெரிக்க அரசிற்கு இருக்கும் கோபத்திற்கு, கோபம் என்று சொல்வதுகூடத்தவறு, வெறிக்கு அது அஸாஞ்சைத்தண்டிக்க எல்லா வழிகளையும் முனையும் என்பதில் சந்தேகமில்லை.
ஹிட்லர், ஸ்டாலின், ஈரானின் கோமேனி உட்படப் பலரை 1927லிருந்து ஒவ்வொர வருடமும் “”அந்த வருடத்திற்கான மனிதர்” என்று தேர்ந்தெடுத்துத் தனது அட்டையில் அவர்களது படத்தை வெளியிட்டுவரும் அமெரிக்காவின் மிகப்பிரபலமான வார இதழ் டைம் இந்தமுறை தனது வாசகர்கள் 2010 ஆம் ஆண்டுக்கான நபராகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் (3,82,026 வாக்குகள்) அஸாஞ்சைத் தேர்ந்தெடுத்தபோதிலும் பத்தாம் இடத்தில் (18, 353 வாக்குகள் மட்டுமே பெற்ற) இருந்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கை டைம் ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்தது. அயத்துல்லா கோமேனியைக்கூட தேர்ந்தெடுப்பதிலும், அட்டைப்படத்தில் வெளியிடுவதிலும் தயக்கம் காட்டாத டைம் இதழ் அஸாஞ் விஷயத்தில் காட்டியிருக்கும் பெறும் சறுக்கலிலிருந்து அமெரிக்கா அரசால் அஸாஞ் எப்படிப்பார்க்கப்படுகிறார் என்பதையும் அமெரிக்கா மற்றும் உலகளாவிய வாசகர்கள் மத்தியல் அஸாஞ் பெற்றுள்ள செல்வாக்கையும் காட்டுகிறது.

அமெரிக்க செனட்டர் ஜோலிபர்மேனும் வலதுசாரி அமெரிக்கத் தலைவர்கள் பலரும் அளித்த நிர்ப்பந்தகளால் அமேசான் டாட்காம் நிறுவனம் அமெரிக்காவில் விக்கிலீக்ஸ் வலைத்தளத்திற்குத் தான் அளித்துவந்த சேவையை நிறுத்தியது. இதன்மூலம் விக்கிலீக்ஸை அமெரிக்காவில் முடக்க முடியும் என்பது லிபர்மேன் போன்றவர்களின் திட்டம். அமெரிக்கா அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாக EveryDNS.net தனது சேவையை விக்கிலீக்ஸிற்குத் தருவதை விலக்கிக்கொண்டதன் காரணமாக விக்கிலீக்ஸ் வலைத்தளம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் அஸாஞ்சின் ஆதரவாளர்கள் ஏராளமான விக்கிலீக்ஸ் வலைத்தளங்களை உலகமெங்கும் உருவாக்கினர். விக்கிலீக்ஸ் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளடக்கங்களையும் இந்த மிர்ரர் வலைத்தளங்களிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.
ஒரு விக்கிலீக்ஸ் இருந்ததுபோய் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொமைன் பெயர்களில் விக்கிலீக்ஸ் மிர்ரர் வலைத்தளங்கள் செயல்படுகின்றன.

மேலும் இந்த வலைத்தளத்திற்காக நிதி திரட்டப்படுவதைத் தடுக்க பே பால், மாஸ்டர் கார்ட், விஸா ஆகியவை விக்கிலீக்ஸூக்குத் தங்கள் மூலம் செலுத்தப்படும் நன்கொடையைப் பரிமாற்றம் செய்ய, மறந்துவிட்டன. இதையடுத்து இந்த நிறுவனங்கள்மீது உலகமெங்குமுள்ள அஸாஞ் ஆதரவாளர்கள், hackers என்றழைக்கப்படும் கணினி நிபுணர்கள் இணையத் தாக்குதல் தொடுத்தனர். இதன் விளைவாக இவற்றின் செயல்பாடுகளின் வேகம் மிகவும் குறைந்து அவை பெரும் பிரச்சினையை சந்தித்தன.

தகவல் தொடர்புப் புரட்சி யுகத்தில் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைக்கூடத் தனிமனிதர்கள் சிலரால் தொழில்நுட்ப உதவியுடன் முடக்க முடியும் என்பதைக் காட்டியதுடன் hackers மத்தியில் அஸாஞ்சிற்கு இருக்கும் செல்வாக்கையும் காட்டியது.உலகெங்கும் உள்ள ஊடகங்கள் ஜூலியன் அஸாஞ் பற்றிய செய்திகளால் நிரப்பப்பட்டிக்கும் வேளையில் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் ராய்ட்டர் நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவர்மீதம் பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஈராக்கியர்கள் மீதும் ஹெலிகாப்டரிலிருந்து தாக்குதல் தொடுத்துக்கொன்ற கொடூரச் சம்பவத்தைக் காட்டும் வீடியோ முதல் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்க்குறிப்புகள் மற்றும் உலகெங்குமுள்ள அமெரிக்கத் தூதாண்மை அதிகாரிகளின் ரகசிய கேபிள் தகவல்கள் வரை அனைத்தும் அம்பலமாவதற்கு மூலகாரணமாக இருந்ததாகக் கூறப்படும் பிராட்லே மேனிங் பற்றிய செய்திகளை அவ்வளவாகக் காண முடிவதில்லை.

வெறும் 22 வயதே நிரம்பிய மேனின் அமெரிக்க ராணுவத்தின் உளவுத் துறையில் பணிபுரிந்த இளம் அதிகாரி. ஈராக்கிலுள்ள அமெரிக்கா ராணுவத்தில் பணிபுரிந்த இவர் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை உள்ளிருந்து கவனிக்கும் வாய்ப்பு பெற்றவர். ஈராக்கில் கலகம் மற்றும் வன்முறையைத் தூண்டுவதற்காகப் பிரசுரங்களையும் குறிப்புகளையும் விநியோகித்தார்கள் எனக் கூறித் தீவிரவாதிகள் என்ற பெயரில் சிறையில் அமெரிக்க ராணுவம் பலரை அடைத்திருந்தது.

அவர்களை விசாரிக்கிற பொறுப்பில் மேனிங் இருந்தார். அவர்கள் வெளியிட்டதாகவும் விநியோகித்ததாகவும் கூறப்படும் பிரசுரங்கள் உண்மையில் கலகத்தையோ வன்முறையையோ தூண்டுவன அல்ல என்பதையும் அவை ஈராக் பிரதமர் நௌரி – அல் மலிக்கிமீதான அரசியல் விமர்சனங்கள் என்பதையும் அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப்படுத்துபவை என்பதையும் மேனிங் அறிந்தார். இதைத் தன் மேலதிகாரிகளிடம் கூறியபோது””இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இன்னும் எவ்வளவு பேரைப் பிடிக்க முடியும் என்று பார்” என்று அறிவுறுத்தப்பட்டார். ஈராக்கில் தனது நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா வெளியில் கூறுவதற்கும் உண்மையில் அமெரிக்கா நடந்துகொள்வதற்கும் இடையில் இருக்கும் மிகப்பிரம்மாண்டமான இடைவெளியை பறற மேலும் மேலும் அறிய நேர்ந்த மேனிங் அதிர்ச்சிக்குள்ளானார்.

அமெரிக்கா ராணுவத்திற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் Secret Internet Portocol Router Network இல் உள்ள இலட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை உலகிற்கு அம்பலப்படுத்துவ என அவர் முடிவுசெய்து அந்த ஆவணங்களை ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்து அவற்றை விக்கிலீக்ஸ் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார். 2010 மே மாதம் தான் நடத்திய ஓர் இணைய உரையாடலின்போது தனக்கு முன்பின் அறிமுகமற்ற அட்ரியன் லாமோ என்பவனிடம் தான் செய்த செயலைப் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்டார். இந்த லாமோ தன்மை பத்திரிகையாளன் எனவும் முன்னாள் hacker எனவும் தன்னால் முடிந்த உதவிகளை மேனிங்குக்குச் செய்வதாகவும் கூறினான். இதை நம்பிய மேனிங் தனது ரகசியத்தை அவனுடன் பகிர்ந்துகொண்டார்.

இவ்வளவு பெரிய ரகசியத்தை தன்னை வாழ்நாள் முழுவதும் சிறைக்கு அனுப்பக்கூடிய ஒரு ரகசியத்தை ஏன் முன்பின் தெரியாத ஒருவனிடம் மேனிங் கூற வேண்டும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. தான் நினைத்திருந்தால் இந்த ரகசியங்களை ரஷ்யாவிற்கோ சீனாவிற்கோ விற்றுப் பெரும் பணம் சம்பாதித்திருக்க முடியும் எனவும் ஆனால் தனது நோக்கம் பணமல்ல மாறாக அமெரிக்கா ராணுவத்தின் அநியாயங்களை உலகிற்கு அம்பலப்படுத்துவதே என்றும் அந்த இணைய உரையாடலில் மேனிங் தெரிவித்திருந்தார். தன்னிடம் பகிரப்பட்ட இந்த ரகசியத்தைலாமோ உடனடியாக அமெரிக்க அரசிடம் தெரிவித்தான். இதன் விளைவாக அமெரிக்க ராணுவச் சட்டங்களின்படி கைது செய்யப்பட்ட மேனிங் இரண்டு மாதக் காலம் குவைத்தில் உள்ள ராணுவச் சிறையில் வைக்கப்பட்டு இப்போது கடந்த ஐந்து மாதக்காலமாக அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.
நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே உணவுக்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் அவர் சிறை அதிகாரிகளைப் பார்க்கமுடியும். மற்ற 23 மணி நேரம் தனிமையில் கழிக்கவேண்டும். அவருக்குப் படுப்பதற்குப் படுக்கையோ தலையணையோ எதுவும் தரப்படவில்லை. சிறையில் உடற்பயிற்சிகள் எதுவும் செய்யக்கூடாது என்று கட்டளை. வெளியாட்கள் யாரையும் சந்திக்கமுடியாத, வெளியுலக நிகழ்வுகள் எதையும் அறிந்துகொள்ள முடியாத (தொலைக்காட்சி, பத்திரிகைகள் எதுவும் கிடையாது) மிகக்கொடுமையான இந்த சூழலின் காரணமாக அவரது மனநிலை பாதிக்கப்பட்டுவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய பேச்சு, சுதந்திர உரிமைகளை ராணுவ அதிகாரி ஒருவர் கோர முடியாது என்ற நிலையில் இனி அவரது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
மேனிங் பற்றிக் குறிப்பிடுகிற போது “”அவர் ஈடு இணையற்ற நாயகன்” என்று ஜூலியன் அஸாஞ்சும் டேனியல் எல்ஸ்பெர்க்கும் குறிப்பிடுகின்றனர். வரலாற்றில் விளையும் பல நேர்மையான மாற்றங்களுக்கு இத்தகையவர்களின் தியாகங்கள் மிக மிக முக்கியமானவையாக இருக்கின்றன.

பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!

இன்றைய இளைஞர்கள் அறிவியல், தகவல் தொடர்பு மற்றும் தொழில் ட்பம் போன்ற பல்வேறு துறைகளில் வேக வேகமாக முன்னேறி வருகின்றனர். பல்வேறு திறமைகளை கைவசம் கொண்ட அவர்களுக்கு தங்கள் சொந்த பிரச்சினைகள் மட்டும் பூதாகரமாக இருப்பது ஏன்? இன்றைய தலைமுறையை சிக்கலுக்குள்ளாக்கும் கேள்வி இதுதான்.

நவீன தலைமுறையினருக்கு தங்களது பிரச்சினைகளை பெற்றோர்களிடம் ஏன் வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை…இதற்கு என்ன காரணம்? அப்படியே திக்கித்திணறி தெரிவித்தாலும் கூட அவை பெரும்பாலும் தோல்வியில் தான் முடிகின்றன. இதற்கு என்னதான் காரணம்? பெற்றோர்களிடம் இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுக்குள்ள பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்குள் ஒருவித பதற்றம் வந்து தொற்றிக் கொள்கிறது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையாமல் போய்விடுமோ என்ற பயத்தில் தான் அந்த பதற்றம் ஏற்படுகிறது. அந்த மிதமிஞ்சிய எதிர்பார்ப்பில், தாங்கள் சொல்ல வந்த பிரச்சினைகளை மறந்து எதைஎதையோ தவறாக சொல்லி விடுகிறார்கள். அதன்பிறகு, பெற்றோர்கள் தங்களுக்கு சாதகமாக பதில் சொல்வார்கள் என்று பிள்ளைகள் எதிர்பார்த்தால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. அதேபோல், பிள்ளைகள் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லி விட்டார்களா? அல்லது சொல்ல வந்த விஷயத்தில் எதையாவது மறைக்கிறார்களா என்று பெற்றோர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாக, இந்த மாதிரியான நெருக்கடிகள் பற்றி இளைய தலைமுறையினர் யோசிப்பதே இல்லை. காரணம், அவர்களுக்கு `தாங்கள் தான் எல்லாவிதத்திலும், பெற்றோர்களை விட சிறந்தவர்கள். இப்போது உள்ள அறிவியல் சாதனங்கள் அவர்களின் காலத்தில் இல்லை. அதை நாம் தானே பயன்படுத்துகிறோம். அதனால், நமக்குத் தான் எல்லாம் தெரியும்’ என்ற அதிகப்பிரசங்கித்தனமான எண்ணமும் ஒரு காரணமே.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், தங்கள் பிரச்சினைகளை எவ்வாறு பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றே அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுடைய அனுபவங்கள் உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்பதை நம்புங்கள். அதனால், உங்கள் பிரச்சினைகளை தயங்காமல், எதையும் மறைக்காமல், வெளிப்படையாக எடுத்துக் கூறுங்கள். அப்போதுதான் முழுமையான தீர்வு கிடைக்கும்.

சொல்ல விரும்பும் பிரச்சினையை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், ரத்தினசுருக்கமாக எடுத்துக் கூறுங்கள். என்ன பிரச்சினை? எங்கு நடந்தது? அதற்கு யார் காரணம்? நீங்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன? என்பது போன்ற அடிப்படையான தகவல்களை உங்கள் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள். அதை உங்கள் பெற்றோரிடம் தயங்கி தயங்கி தெரிவிக்கும் போது அவர்கள் மறுத்து விடுகிறார்கள். நீங்கள் கல்யாணம் முடிந்தால் போதும் என்ற அப்போதைய சந்தோஷத்தை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், உங்கள் பெற்றோரோ, `பிள்ளைகளுக்கு எந்த விதத்திலாவது தீங்கு நேர்ந்து விடுமோ?’ என்று பயப்படுகின்றனர். அதனால்தான், அவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

பிரச்சினைகள் தலைமுறை இடைவெளியிலோ, அல்லது தகவல் தொடர்பு இடைவெளியிலோ வருவதில்லை. நம்மிடம் தான் உள்ளது. பிரச்சினைகளை எவ்வாறு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டால் போதும். தெளிவு உள்ள இடத்தில் பிரச்சினைக்கு இடமே இல்லை.

வேர்ட் 2010 – உங்கள் வசமாக்க

வேர்ட் 2010 தொகுப்பைப் பொறுத்தவரை, அதன் மிகச் சிறந்த அம்சமாக, அதன் வளைந்து கொடுக்கும் தன்மையினைக் கூறலாம். நம் விருப்பப்படி, பல வசதிகளை அமைத்துக் கொண்டு எளிதாகச் செயல் படலாம். இந்த வசதி, வேர்ட் 2007 தொகுப்பில் தரப்பட்ட ரிப்பன் இடைமுகத்தில் தரப்படவில்லை. இத்தொகுப்பு தரும் அந்த வசதிகளை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று இங்கு பார்க்கலாம்.
நீங்கள் என்ன செயல்பாடுகளை மேற்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இவை நகாசு வேலைகளாகவோ அல்லது செயல்பாட்டு வேலை களாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் வேர்ட் மிக விரைவாகச் செயல்பட வேண்டும் என விரும்பலாம். டூல்ஸ் மற்றும் டாகுமெண்ட் குறித்த விபரங்களை எளிதாகப் பெறும் வகையில் வைக்கலாம். உங்கள் ஆசை அல்லது விருப்பம் எதுவாக இருந்தாலும், அதனை நிறைவேற்றிக் கொள்ள வேர்ட் 2010, அதற்கான வழிகளைத் தருகிறது.

1. Quick Access Toolbar–ஐ மாற்றி அமைக்க: குயிக் அக்செஸ் டூல்பார் என்பது, சில டூல்ஸ் கொண்ட ஒரு சிறிய செட். இது வேர்ட் 2010ன் இடது மேல் மூலையில் காணப்படும். மாற்றப்படாத நிலையில் இந்த டூல்பாரில் Save, Undo, மற்றும் Repeatஆகிய வசதிகள் காணப்படும். ஆனால், நீங்கள் Customize Quick Access Toolbar அம்புக் குறி மீது கிளிக் செய்து, கூடுதல் வசதிகளைப் பெறலாம். இந்த டூல்பாரில் கூடுதலாக ஒரு டூலைச் சேர்க்க, டூல்பார் பட்டியலில் அதன் மீது கிளிக் செய்திடவும். இன்னும் தெளிவாக இது குறித்து அறிய, More Commands என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது, வேர்ட் ஆப்ஷன்ஸ் பாக்ஸில், Quick Access Toolbar category கிடைக்கும். இதில், நீங்கள் அப்போது அமைத்துக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்டில் மட்டும் பயன்படுத்த இந்த டூல் தேவையா, அல்லது எப்போதும் தேவையா என்பதனை அமைக்க வேண்டும். மேலும் இந்த மாற்றத்தினை மற்ற கம்ப்யூட்டர்களுக்கும் எடுத்துச் செல்ல விரும்பினால், அதற்கான ஆப்ஷனும் இதில் தரப்பட்டுள்ளது.

2.ரிப்பனில் உங்களின் டேப் மற்றும் குரூப்களை இணைக்க: வேர்ட் 2007 தொகுப்பு வந்த பின், இந்த இணைக்கும் வசதியினைத்தான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்திருப்போம். வேர்ட் 2010ல் நாம் விரும்பும் டேப்களை ரிப்பனில் இணைக்க முடியும். இவற்றை டேப் குழுக்களாகவும் அமைக்கலாம்.
ஒரு புதிய டேப் குரூப்பினை (tab group) இணைக்க File tab மீது கிளிக் செய்திடவும்.பின்னர் இதில் Options கிளிக் செய்க. இதற்குப் பின், Customize Ribbon என்பதில் கிளிக் செய்திடவும். உடனடியாக, வேர்ட், புதிய டேப் குரூப் ஒன்றை இணைத்திடும். நீங்கள் தேர்ந்தெடுத்த டேப்பிற்கு அடுத்தபடியாக இது அமைக்கப்படும். இந்த டயலாக் பாக்ஸிற்கு வலது பக்கத்தில், உள்ள New Tab என்பதில் கிளிக் செய்திடவும். இனி, இந்த டேப்பின் பெயரை மாற்றலாம்; இணைக்கலாம்; குழுப் பெயரும் கொடுக்கலாம்.
அடுத்து, இந்த குரூப்பில் நீங்கள் விருப்பப்படும் டூல்களை இழுத்து வந்து இதில் விட்டுவிடலாம். அனைத்தும் முடிந்த பின்னர், ஓகே கிளிக் செய்து, மாற்றங்களை சேவ் செய்துவிடலாம்.

3.வேர்ட் வண்ணக் கட்டமைப்பினை மாற்ற: வேர்ட் தொகுப்பின் கட்டமைப்பில், நம் இஷ்டப்படி, வண்ணக் கலவை அமைக்கும் வகையில் வழிகள் இல்லை. இருந்தாலும், மாறா நிலையில் வரும், அந்த ஸ்டீல் கிரே வண்ணத்தினை மாற்றி அமைக்கலாம். மாற்றப்படும் வண்ணம் நீல நிறமாகவோ, திரிந்த கருப்பு நிறமாகவோ இருக்கலாம்.
வண்ண அமைப்பு கட்டம் ரிப்பன், டைட்டில் பார் மற்றும் நம் திரையில் உள்ள டெஸ்க்டாப் சுற்று வட்டத்தில் தெரியவரும். மாறா நிலையில் வேர்ட் 2010 தொகுப்பு, கிரே கலர் கட்டமைப்பைப் பயன்படுத்து கிறது. இருப்பினும் சில மாற்றங்களை நாம் இதில் மேற்கொள்ளலாம்.
ரிப்பனில், இன்னும் சற்று கூடுதலாக வெண்மையைக் கொண்டு வரலாம்; சில டூல்ஸ் மற்றும் ஆப்ஷன் களில், பளிச் என்ற நிலையையும், சில டூல்களின் பார்டர்களில் வண்ணக் கலவையையும் கொண்டு வரலாம். வண்ணங்களை இணைக்கையில் வேறுபட்ட வண்ணங்கள் இருந்தால் தான், உங்களால் நன்றாகப் பார்த்துப் படிக்க முடியும் என்றால், அந்தக் கலவையில் அமைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு ஏற்படுத்தும் வண்ண மாற்றங்கள், அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் ஏற்படுத்தப்படும். எனவே இங்கே மாற்றிவிட்டு, அடுத்து அவுட்லுக் செல்கையில் அங்கேயும் இந்த மாற்றங்கள் இருந்தால், ஆச்சரியப்படாதீர்கள்.

4. டாகுமெண்ட் ப்ராப்பர்ட்டீஸில் கூடுதல் வசதிகள்: வேர்ட் 2010ல் தரப்பட்டுள்ள புதிய வசதியான Backstage வியூ , நம் பைலுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெற உதவிடுகிறது. உங்களுடைய குழுவில் உள்ள மற்றவர்கள், இந்த டாகுமெண்ட்டைப் பார்த்திருந்தால், எடிட் செய்திருந்தால், அதனை அறிந்து கொள்ள முடிகிறது. File டேப் கிளிக் செய்து, அதில் Info தேர்ந்தெடுத்தால், இந்த தகவல்களைப் பெறலாம். வலது புறம் உள்ள பிரிவில் இவை காட்டப்படுகின்றன. இந்த ப்ராப்பர்ட்டீஸ் தகவல்களை, ஒரு டாகுமெண்ட் பேனலில் (Document Panel) இணைத்துக் கொள்ளவும் இங்கு வசதி தரப்பட்டுள்ளது.

5.அடிக்கடி டைப் செய்திட வேண்டுமா? சில வாக்கியங்களை நாம் ஒவ்வொரு டாகுமெண்ட்டிலும் அமைப்போம். ஒரு மையத்தின் நோக்கத்தினை விளக்கும் வாக்கியம், ஒரு நிறுவனத்தின் முழு பெரிய பெயர், முகவரிகள், முடிக்கும் சொற்கள் என எத்தனையோ விஷயங்களை, ஓராண்டில் எத்தனை முறை நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் அமைக்க வேண்டியதிருக்கும்? ஏன் ஒவ்வொரு முறையும் டைப் செய்து நம் நேரத்தினையும், உழைப்பையும் செலவழிக்க வேண்டும். அது மட்டுமின்றி, இவற்றைக் குறிப்பிட்ட ஒரு எழுத்துவகையில் தான் அமைக்க விரும்புவோம். இதற்கும் கூடுதலாக சில நிமிடங்கள் ஆகலாம். இவற்றை ஏதேனும் ஒரு வழியில் அமைத்து, நேரம், உழைப்பு வீணாகாமல் அமைக்க முடியுமா? நாமே, நம்முடைய Quick Parts என்ற பகுதியை உருவாக்கி, இவற்றை அமைத்து, நொடியில் பயன்படுத்தலாம்.
இதற்கு முதலில் என்ன வாக்கியங்கள், எந்த எழுத்துவகையில், என்ன ஸ்டைலில் அமைக்க முடியுமோ, அதனை உருவாக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Insert டேப்பினைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் பட்டியலில், Quick Parts என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் கீழாக உள்ள Save Selection To Quick Part Gallery என்பதில் கிளிக் செய்திடவும். இறுதியாக Create New Building Block என்ற டயலாக் பாக்ஸில், இந்த Quick Parts –க்கு ஒரு பெயர் சூட்டவும். எந்த கேலரியில் இது இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதனையும் குறிப்பிடவும். மேலும் பிற தேவைகளையும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பின்னர், இறுதியாக ஓகே, கிளிக் செய்து மூடவும்.

6. மாறா நிலை போல்டரை அமைக்க: புதிய பைல் ஒன்றை உருவாக்கும் ஒவ்வொரு வேளையும், அதனை எந்த போல்டரில் சேவ் செய்திட வேண்டும் என, அந்த போல்டரைத் தேர்ந்தெடுக்க விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அலைய வேண்டும். வேர்ட் 2010ல் எந்த போல்டரில் இவை சென்றடைய வேண்டும் என்பதனை, வரையறை செய்து மாற்றலாம்.
மாறா நிலையில் தரப்பட்டிருக்கும் போல்டரை மாற்ற, File டேப்பில் கிளீ செய்து Options தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் Word Options டயலாக் பாக்ஸில், Word Options என்பதைக் கிளிக் செய்திடவும். அடுத்து Default File Location என்ற பீல்டில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் போல்டருக்கான டைரக்டரி வழியை (Path) டைப் செய்திடவும். இப்படியே ஒவ்வொரு வகை டாகுமெண்ட்டிற்கும் அமைத்து, இறுதியில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதில் ஆன்லைன் சர்வரில் உள்ள ட்ரைவில் கூட சேவ் செய்திடும் படி அமைக்கலாம். ஆனால், இன்டர்நெட் இணைப்பில் உங்கள் கம்ப்யூட்டர் அப்போது இயங்க வேண்டும்.

7. உங்கள் திட்டப்படி பக்க வடிவம்: வர்த்தக அலுவலகங்கள், கல்வி மையங்கள் என ஒவ்வொரு வகை டாகுமெண்ட்டிற்கும், ஒரு வகையில் அதன் பக்கங்கள் இருக்க வேண்டும் என நாம் விரும்புவோம். ஒன்றில் மார்ஜின் இடைவெளி அதிகமாக, அதில் குறிப்புகள் எழுத இடம் இருக்கும்படி அமைக்க வேண்டும். இன்னொன்றில், பிரிண்ட் இடம் நான்கு பக்கங்களிலும் சற்று கூடுதலாக இருக்க விரும்புவோம். இது போல நம் விருப்பப்படி பக்கங்களை அமைக்க வேர்ட் 2010 உதவுகிறது.
இதற்கு, Page Setup டயலாக் பாக்ஸை முதலில் கொண்டு வரவும். அதில் நீங்கள் விரும்பும் வகையில் பக்க அகலம், உயரம், நீளம் ஆகியவற்றை செட் செய்திடவும். பின்னர், Set As Default என்பதில் கிளிக் செய்திடவும். இந்த இடத்தில், உங்களுக்கு ஒரு செய்தி காட்டப்படும். நீங்கள் தொடர்ந்து செயல்பட விரும்புகிறீர்களா? என்று கேட்கப்படும். ஏனென்றால், இந்த மாற்றங்கள் Normal.dot என்ற டெம்ப்ளேட் பைலில் மாற்றப்பட்டு அமைக்கப்படும். நிலையாக இந்த அளவுகளில் பக்கங்கள் வேண்டும் எனில், Yes என்பதைக் கிளிக் செய்திடவும். அதுவே மாறா நிலையாக, புதிய அளவுகளில் பக்கமாக அமைக்கப் பட்டு, அந்த அளவுகளிலேயான பக்கம் உங்களுக்கு புதிய பைலில் காட்டப்படும்.

8. பிடித்த எழுத்துவகையை அமைக்க: ஒவ்வொரு வருக்கும் ஒரு குறிப்பிட்ட எழுத்துவகை (Font) யினைப் பிடிக்கும். எடுத்துக்காட்டாக, எனக்கு Calibri, Footlight, Palatino போன்ற மிதமான எழுத்து வகைகள் பிடிக்கும். ஒரு சிலருக்கு Times New Roman எழுத்துவகைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். எது ஒருவருக்குப் பிடித்திருந்தாலும், அவர் கம்ப்யூட்டரில், வேர்ட் 2010 தொகுப்பில் அதனை, மாறா நிலை எழுத்துவகையாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு MManage Styles என்ற டயலாக் பாக்ஸ் செல்லவும். Set Defaults என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் Font, Size, Color, Position, Line Spacing, and Paragraph Spacing ஆகியவற்றில், நீங்கள் விரும்பும் அளவில் செட் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து இவற்றை சேவ் செய்திடவும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்துவகை, செட் செய்யப்பட்ட அளவில், வண்ணத்தில் கிடைக்கும்.

அங்கோர் அதிசய அழிவுகள்

வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்? அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவு களாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை, இடைப்பட்டவை, சிறியவை என்றெல்லாம் சொல்லத்தக்க சுமார் எழுபது கோயில்கள் இங்குள்ளன. கி.பி.முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்துமதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்தில் கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிலிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக்கி ஆளத் தொடங்கினார். அவன் பெயர் இரண்டாம் ஜெயவர்மன். கெமர் கலாச்சாரம் அவனிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசியர்கள் கருதுகின்றனர். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கலாச்சாரம் அது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட கோயில்தான் அங்கோர் வாட். இது மிகப் பெரும் இந்துக்கோயில் மட்டும் அல்ல. உலகின் மிகப் பெரிய கோயிலும் கூட. இருநூறு ஹெக்டர் நிலத்தில் மேற்கத் திசை நோக்கிய இக்கோயில் விஷ்ணுவுக்காக கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு அடுத்தபடியாக அதிகமான வழிபாட்டிற்குரியவர்களாக விஷ்ணுவும் புத்தரும் இருந்துள்ளனர்.

“அங்கோர்’ என்கிற சொல் “நகர்’ என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. “வாட்’ என்றால் கோயில். “அங்கோர் வாட்’ என்பது நகரக்நாட்டு அரண்மனைக்கோட்டைகளைச் சுற்றியுள்ளதுபோல் அகழி உள்ளது. வெளிப்பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயில் உயர்ந்த கட்டடமாக எழுப்பப்பட்டுள்ளது. கோயிலை மூன்று அடுக்குகளாகப் பார்க்க முடிகிறது. முதல் அடுக்கில் புடைத்த சுவர் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இரண்டாம் அடுக்கில் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இறங்கிக்குளிப்பதற்கேற்பப் படிகள் உள்ளன. புத்தர் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன. அங்கிருந்து இரண்டாம் அடுக்கிற்குச் செல்ல மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கு பெரிய தளப்பரப்புடையதாக அதற்கு மேலுள்ள மூன்றாம் அடுக்கிற்கான பிரகாசமாக அமைந்துள்ளது. மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. நான் சென்ற சமயம் அங்கே பாராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், அந்தப்படிகள் மீது ஏறிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. படிகள் மிகவும் செங்குத்தாகவும் குறுகலாகவும் இருப்பதால் பல சமயங்களில் அவற்றின் மீது ஏறியவர்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். பொதுவாக அங்கோர் கோயில்களில் ராமாயண, மகாபாரதக்காட்சிகள் காணப்படுகின்றன. அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்த பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன.

அங்கோர் வாட் கோயிலை இரண்டாம் சூர்யவர்மன் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. எட்டாம் ஜெயவர்மன் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் அது நிறைவுசெய்யப்பட்டது. இவ்வாறே பல கோயில்களும் நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டுள்ளன. பொருள் வசதி, மன்னர்களின் விருப்பம் போன்றவற்றைப் பொருத்துக் கட்டடப்பணிகளில் விரைவு, தாமதங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். சொல்லப்போனால் எல்லாக் கோயில்களுமே கட்டடக்கலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவ்வாறு முடிக்கப்படாத கோயில்களில் மிகவும் புகழ்பெற்றது பயோன். கிபி 1181இலிருந்து 1220 வரை வாழ்ந்த ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது பயோன். இது அங்கோர் தோமில் உள்ளது. அங்கோர் தோம் (பெரும் நகரம்) இப்போது கோயில்களை மட்டும் கொண்டிருக்கிறது. சுற்றிலும் காடுகள் நிரம்பியுள்ளன. இதன்தெற்கு வாயில் அழகானது. அகழியால் சூழப்பெற்றது. பாலத்தின் இருபக்கங்களிலும் ஏழுதலை நாகத்தை வைத்து அசுரர்கள் கடைவதைப்பார்க்கலாம். திருபாற்கடலைக் கடையும் சிற்பங்களை அங்கோரில் பல இடங்களில் காண முடிகிறது. அங்கோர் தோமில் சிகரம் வைத்தாற்போல் காணப்படுவது பயோன் கோயில். ஏழாம் ஜெயவர்மனால் தொடங்கப்பட்டு எட்டாம் ஜெயவர்மனால் முடிக்கப்பட்டது. ஏழாம் ஜெயவர்மன் பத்த மதத்தவர் என்பதால் லோகேஸ்வரரின் உருவங்கள் கோபுரங்களில் இருப்பதாக ஒரு சாரார் எண்ணுகின்றனர். ஆனால் அவை ஏழாம் ஜெயவர்மனின் உருவங்களாகக்கூட இருக்கக்கூடும் என்கிற யூகமும் வலுவானது. அங்கோர் வாட்டைப் போன்று இதுவும் மூன்று அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆனால் அதற்குள் வட்ட வடிவத்தில் கோவிலின் உற்புறம் படிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கையும் அடையப் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மொத்தம் முப்பத்தியேழு கோபுரங்கள். பெரும்பாலான கோபுரங்களின் நான்கு பக்கங்களிலும் லோகேஸ்வரரின் (ஏழாம் ஜெயவர்மனின்?) முகங்கள், அவற்றைத் தவிரவும் பல்வேறு மூலைகளிலும் மனவெழுச்சியை உண்டாக்கும் முகங்கள் ஏராளமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் நடந்து செல்லும்போது நாம் முகங்களால் சூழப்பட்டுக் கண்காணிக்கப்படும் உணர்வு வலுக்கிறது. அதன் உட்புறவாயில்கள் வழியே நுழைந்துவருவது மாயத்தை அனுபவிப்பதற்கு நிகரானது. படை வீரர்கள் ஆயுதங்களை தாங்கிக்கொண்டும் யானைகள் மீதேறியும் போர்க்களம் நோக்கிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் காணப்படுகின்றன.
அங்கோரிலுள்ள எந்தக்கோயிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கள் கட்டி முடிக்கப்படவில்லை. முடிக்கப்பட்ட பகுதிகளிலம் பல சிற்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புத்த கோயிலாக இருப்பினும் பயோனில், லிங்கங்களும் காணப்படுகின்றன. இவை பின்னர் அங்கே வைக்கப்பட்டிருக்கலாம். சிற்பங்கள் மக்களுடைய அன்றாட வாழக்கையைப் பதிவுசெய்து உருவாக்கப்பட்டுள்ளன. கடைத்தெருவில் உள்ள பெண்கள், கோழிச்சண்டையைப் பார்க்கும் மனிதர்கள் எனப் பல்வேறு காட்சிகள் அங்கே தரப்பட்டுள்ளன. மூடிய கண்களும் திறந்த கண்களுமாகப் பெரிய தேவமுகங்களுக்கிடையே சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கைச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ள இக்கோயில்கள், வெறும் வழிபாட்டுத்தலங்கள் அல்ல என்பதை உறுதி செய்கின்றன. “சுலபமாக நம்மால் பார்க்கவியலாத, சூர்யஒளி எளிதில் புகாத மூலைகளிலும் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. வழிபாடு செய்ய இயலாவிடினும் இவ்வகையில் சிற்பங்களை வடித்ததன் மூலம் கெமர்கள் கடவுளர்களின் உலகத்தைக் கோயில்களில் உருவாக்கியதாக நம்பிக்கைகொண்டிருந்தனர்.’ என்று அங்÷õர் கோவில்கள் பற்றி பிரதான ஆய்வாளர் எனப் பெயர் பெற்றுள்ள ஜார்ஜ் கோடிஸ் கருதுகிறார். இந்தக் காரணங்களுக்காகத்தான் இக்கோயில்கள் எழுப்பப்பட்டன என்று அறுதியிட முன்வரும் எவருக்கும் இவை பெரும் சவால்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றில் நூலகங்கள் என்றழைக்கப்படும் கட்டடங்களும் இருக்கின்றன. ஒவ்வொர கட்டடமும் இரண்டு கட்டுகள் கொண்டுள்ளது. அரசர் மற்றவர்களுடன் ஆலோசிக்கவும் ஆரூடம் கேட்கவும் இந்த நூலகங்களைப் பயன்படுத்தி இருக்கலாம். இவை ஆடம்பரங்களற்ற கற்கட்டடங்கள். உருண்ட தூண்களால் தாங்கப்பெற்றுள்ளன. புடைப்புச் சிற்பங்கள் எதுவுமில்லை. இங்கே கல்வி கற்பிக்கப்பட்டிருக்கக்கூடும். எனவே கல்விக்கூடங்களாகவும் இவை பயன்பட்டிருக்கும்.

“கடவுளர்களுக்கு நிகரானவர்கள் தாங்கள்’ என்று அரசர்கள் கருதியதால் இவை நினைவுச் சின்னங்கள் என்று கருதவும் வாய்ப்புள்ளது. ஏழாம் ஜெயவர்மன் தன் தந்தையின் நினைவிற்காகக் கட்டிய கோயில் “தா ப்ரோம்’ அங்குள்ள லோகேஸ்வரரைத் தன் தந்தையின் சாயலில் அவர் வளர்த்துள்ளார். அவருடைய மனைவிகளின் சிலைகளையும் அங்கே காணலாம். அவருடைய இரண்டாம் மனைவி, கல்வியைப் பரப்பப் பெரிதம் முயன்றவர் எனச் சொல்லப்படுகிறது. கெமர் சரித்திரத்திலேயே ஏழாம் ஜெயவர்மனுக்கு இணையாக இன்னொரு அரசன் தோன்றியதில்லை எனலாம். தொழுநோய் அரசன் என்னும் பெயரில் சிலை ஒன்றுண்டு. அதன் அசல் கம்போடியாவின் தலைநகரான “நாம் பெங்க்கி’லுள்ள பொருட்காட்சியகத்திற்குச் சென்று விட்டது. அங்கோர் தோமில் அதன் நகல் திறந்தவெளியில் மண்டபம் ஒன்றின் மீதுள்ளது. ஏழாம் ஜெயவர்மன்தான் அந்தத் தொழுநோயாளி எனச் சொல்பவர்கள் உண்டு. அவர் பல மருத்துவமனைகளைக் கட்டியுள்ளதை வைத்து இவ்விதம் முடிவுக்கு வந்திருக்கலாம். நோயைத் தன் ஆட்சியில் கட்டுப்படுத்தவே மருத்துவமனைகளைக் கட்டினார் எனச் சொல்பவர்கள் உண்டு.

அவர் திறமைசாலியாகவும் வலிமையுடையவராகவும் விளங்கினார் என்பதற்கு அவரது ஆட்சிக்காலம் சாட்சியாக விளங்குகிறது. சிம் ரெப் இறுதியாக தாய்லாந்தின் வசம் இருந்தது. அது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்காரர்கள் கைக்கு மாறியது. பிரெஞ்சுக்காரர்களால்தான் அங்கோர் கோயிலகள் உலகப் புகழ் சுத்தம் செய்து அங்குள்ள கோவில்களை அவர்கள் தாம் புனருத்தாரணம் செய்தனர். பிரெஞ்சுக்காரர்கள் பல சிற்பங்களைத் திருடிச் சென்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆந்ரே மால்ரா அங்குள்ள சிலைகளைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார். பிரெஞ்சு காலனியின் சுவடுகளைச் சிம் ரெப்பில் பல இடங்களிலம் காண முடியும். சிம் ரெப்பில் உள்ள ஒட்டல்கள் புதுவையிலுள்ள கட்டடங்களை நினைவுப்படுத்துகின்றன. பிரெஞ்சு மொழி பேசுகிற பழைய தலைமுறையினர் அங்கு நிறையக் காணப்படுகிறார்கள். பிரெஞ்சு வழிகாட்டிகள் எளிதில் கிடைக்கிறார்கள்.கிட்டத்தட்ட எழுபது அங்கோர் கோவில்கள் சிம் ரெப் நகரில் காணப்படுகின்றன. அங்கோர் வாட், அங்கோர் தோமிலுள்ள பயோன், தா ப்ரோம், தொம்மனான், பன்தே செராய், பே காங், நீக் பியன் போன்றவை மிக முக்கியமான கோயில்கள். இரண்டு நாட்களில் இவற்றையெல்லாம் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு மூன்றாம் நாளன்று ஏற்கனவே பார்த்தவற்றில் மிகவும் முக்கியம் எனக் கருதுபவற்றை மீண்டும் பார்த்துச் செலவிடலாம்.

கம்போடிய மக்கள் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்கிறார்கள். சிறுவர்கள், சிறுமிகம் பலரும் பள்ளிக்குச் சென்றதில்லை. புத்த துறவிகளாக வாழும் விருப்பம் இளைஞர்கள் பலருக்கு இருக்கிறது. அதற்காகப் படிக்கச் செல்பவர்கள் குடும்பத்தினர் படுகிற துயரத்தைப் பார்த்துவிட்டு அதைப்பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்குப்போகிறார்கள். “டுக் டுக்’ என்ழைக்கப்படம் வாகனங்களை (இது மோட்டார் சைக்கிளுடன் இணைக்கப்பட்ட, பயணிகள் மூவர்வரை அமர்ந்து செல்லும் நான்கு சக்கர வண்டி) ஓட்டுகிற ஆங்கிலம் பேசுகிற இளைஞர்கள் சிலர் இவ்வாறு துறவைத் துறந்தவர்கள்தான். அரசர்கள்மீதான மரியாதை இன்னும் தொடர்கிறது. யாராவது சூர்யவர்மன், ஜெயவர்மன் என்றெல்லாம் பெயர் சூட்டியிருக்கிறார்களா எனக்கேட்டால் அரசர்களுடைய பெயரை நாம் எப்படி வைத்துக்கொள்வது எனப் பதிலுக்குச் நம்மைப் பார்த்துக்கேட்கிறார்கள். தெருவோரக் கடைகளிலும் சுற்றுலா இடங்களிலும் இளைஞர்களே வேலை செய்கிறார்கள். சிறுவர் சிறுமியர் நானாவிதப் பொருட்களையும் கைகளில் வைத்துக்கொண்டு “ஒன் டாலர், ஒன் டாலர்’ எனக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். சாலையோர உணவு விடுதிகளில் ஒரு டாலருக்கு நல்ல உணவு கிடைக்கும். உடனே எங்கும் கிடைப்பது அசைவம்தான். ஒரு லிட்டர் அளவு சுவையான இளநீர் தரும் தேங்காய்களும், ஒரு டாலருக்கு கிடைக்கின்றன.

அமெரிக்க டாலர்தான் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வேண்டப்படும் செலாவணி. உள்நாட்டுக் கரன்சியான ரியெல் அவர்களுக்குள் சங்கேதமாகப் புழங்குகிறது. அதை வெளிநாட்டவர்கள் கொடுத்தால் சட்டை செய்வதில்லை. மக்கள் சுற்றுலாப் பயணிகளை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். கெமர் மொழி பேசப்படுகிறது. ஆங்கிலத்தைப் புரிந்துகொள்கிற இளைய தலைமுறை அங்கு உண்டு. கம்போடியர்களைத் தவிர, சீனர்கள், வியட்நாமியர்களும் அங்கு வாழ்கின்றனர். நவம்பரிலிருந்து பிப்ரவரிவரை பயணத்திற்குகந்த காலமாகக் கருதப்படுகிறது. அக்டோபர் மாதக் கடைசியில் நான் சென்ற சமயத்தில் மழைக் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. மழை தன் சொச்சத்தை அவ்வப்போது கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தவண்ணம் இருந்தது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி தரை எங்கும் பச்சையாய்ப் பூத்திருந்தது. ஆனால் பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் நாள் முழுதும் தணியாத வெப்பம். மழை விட்ட உடனேயே லேசாக வியர்த்தது.

அங்கோர் கோயில்களில் இப்போது வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. ஒரு சில இடங்களில் பௌத்தர்கள் ஊதுபத்திகளை வைத்துச் சிறிய ஆராதனைகள் புரிவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. கோயில்கள் முற்றாகவே சுற்றுலா இடங்களாக மாறிவிட்டன. சாலைகள் எழில் மிகுந்த கானகங்களினூடே செல்வதால் பயணிகள் பலரும் விரும்பி சைக்கிள்களில் செல்கிறார்கள். இவற்றினூடே கோயில்களைப் புனருத்தாரணம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. யுனெஸ்கோ வேர்ல்ட் ஹெரிடேஜ் சென்டரின் மேற்பார்வையில் அவை செய்யப்படுகின்றன. பல இடங்களில் பல நூறு வருடங்களாகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள மரங்கள் கோயில்களை மலைப்பாம்புகள் போன்று பெரும் வடங்களாக நொறுக்கி வளைத்துள்ளன. காலமும் கலையும் ஒன்றாகக் கட்டுண்டு கிடப்பதுபோல் அவை ஒருவித அசுர அழகைத் தம்மகத்தே கொண்டுள்ளன. புனருத்தாரணப் பணிகளில் பல நாடுகளும் பங்கேற்றுள்ளன. அவற்றில் ஈடுபட கெமர் கைவினைக் கலைஞர்கள் தயார்செய்யப்படுகின்றனர்.

நமது ஊர் ஆட்கள் இங்குள்ள கோயில்களுக்கு சகட்டுமேனிக்கு வெள்ளையடித்து மிலிட்டரி ஓட்டல்களில் எரியும் பச்சை ட்யூப் பல்புகளை மாட்டிவிடுவதைப் போன்றதல்ல அது. மிகவும் கவனத்துடன் பழமையைப் புதுப்பிக்கிறார்கள். புதுப்பிப்பது இயலாதென்றால் மேலும் சீர்கேடடையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆர்கேயாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவினர் சில வருடங்களுக்கு முன்னர் அங்கே சென்று அங்குள்ள ஓட்டைகளில் கான்கிரிட்டை ஊற்றி நிரப்பி, தங்களாலான ‘நற்பணி’யைச் செய்திருக்கிறார்கள். பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே அதை நிறுத்திக்கொண்டார்கள். அங்கோர் கோயில்கள் செங்கற்கள், சுண்ணாம்புக் கற்கள், செம்பாறாங் கற்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டவை.

அங்கோர் கோயில்களில் சிவன், விஷ்ணு, புத்தர் சிலைகள் ஏராளம். அதேபோல் அப்சரஸ் தேவதைகள் எல்லா இடங்களிலும் தென்படுகின்றனர். பற்கள் தெரியச் சிரிக்கும் அப்சரஸ்கள் அரிதாக உள்ளனர். ராமாயண, மகாபாரதப் புராணக் காட்சிகள் கோயில் சுவர்கள், தூண்கள் என்று எல்லாவற்றிலும் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கோயில் முகப்புகளும் புராணக் கதாபாத்திரங்களும் கெமர் கலாச்சாரத்தையும் அம்மக்களின் உருவங்களையும்தாம் கொண்டுள்ளன. இந்திய முகங்களை அவற்றில் காண முடியாது. ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கெமர்கள் தங்களுடையதாக உள்வாங்கிக்கொண்டதன் விளைவு அது.

தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற பிறநாடுகளிலும் இப்புராணங்கள் இவ்வாறே அங்குள்ள கலாச்சாரப் பின்னணிகளுடன் உள்முகப்படுத்தப்பட்டுள்ளன. தவிரவும் இச்சிற்பங்களை வடித்தவர்கள் கெமர் சிற்பிகள். கெமர் மக்கள் இந்து, புத்த மதங்களை விரும்பி ஏற்றுக்கொண்டதாக இதன் மூலம் அறியலாம். படையெடுப்பாலோ வன்முறையாலோ மதம் அங்கே திணிக்கப்படவில்லை எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்திய அரசர்களின் காலனியாகவும் கம்போடியா ஒருபோதும் விளங்கியதில்லை. இந்தியாவில் இருந்து சென்ற புத்த மதம் பல நாடுகளிலும் பரவிப் பல்வேறு குணங்களைப் பெற்றுள்ளது. இந்தியாவில் வேரூன்றிய இந்து மதம் எத்தகைய மாறுதல்களுடன் கம்போடியாவில் குடியேறியது என்பதை அங்கோர் சிற்பங்களை வைத்து ஒருவாறாக ஊகிக்க முடிகிறது. இங்கிருந்து சென்ற வியாபாரிகள் வாயிலாகத்தான் இந்து மதம் அங்கே பரவியிருக்கிறது. ஆனால் ஆட்சியை நிலைநாட்டத் தொடங்கியவர்கள் அங்குள்ள கலாச்சாரத்திற்கு இணக்கமான ஒரு மதமாக இந்து மதத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அடிமைகள் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும். ஆனால் பிறப்பை வைத்துக் கொடுமைகள் புரியும் இந்து மதக் கூடா நெறிகள் அங்கே இருந்திருக்கமாட்டா. கோயில் நுழைவு சமூகத்தினரின் எப்பிரிவுக்கும் மறுக்கப்பட்டிருக்காது. கோயில் சுவர்களில் எல்லா மக்களின் வாழ்க்கை முறைகளும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பதால் அது எல்லோருக்குமான அரங்கமாகப் பயன்பட்டிருக்கக்கூடும். தவிரக் கம்போடிய மக்கள் அனைவரும் அன்றிலிருந்து இன்றுவரை அசைவ உணவுப் பழக்கம் உடையவர்கள். எனவே உணவுப் பழக்கத்தை வைத்துத் தீண்டத்தக்கவர், தகாதவர் என்னும் பாகுபாடுகள் உண்டாகியிருக்க மாட்டா. இந்தியாவைப் போலன்றிக் கீழைநாடுகளில் இந்து மதம் பின்பற்றப்படாவிடினும் அது குறித்து இன்றுவரை அங்கே ஒரு நல்ல அபிப்பிராயம் நிலவுகிறது. சாதிப் பாகுபாடுகள் அங்கு வேர்விட்டிருந்தால் இந்து மதம் வெறுக்கப்பட்டிருக்கும். சுருக்கமாகக் கூறினால் கம்போடியாவில் இருந்த இந்து மதம் இந்தியாவிலுள்ள இந்து மதமல்ல.

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் அவர்களது கற்பனையை மெய்யாகவே ஆட்கொண்டிருந்தன. அரசர்களைப் போலவே மக்களும் புராணங்கள் மீதும் மதக் கோட்பாடுகளின் மீதும் பெரும் நம்பிக்கைகள் கொண்டிருந்ததாலேயே கெமர் ஆட்சிக் காலத்தில் பல கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டன. புத்த மதத்தைப் பொருத்தவரை அவர்கள் பின்பற்றுவது ஹீனயானம். தெரவாடா பௌத்தம் என்று இது அழைக்கப்படுகிறது. தாய்லாந்து, பர்மா, ஸ்ரீலங்கா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் இது செல்வாக்கு பெற்றுள்ளது.

இந்து மதத்திற்கும் புத்த மதத்திற்கும் அங்கே பெரிய பூசல்கள் எழுந்ததாகச் சரித்திரம் சொல்லவில்லை. ராஜ விஹாரா என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட தா ப்ரோம் கோயிலில் நுழைந்தவுடன் தூணில் செதுக்கப்பட்டுள்ள புத்தர் சிற்பம் ஒன்று அங்குள்ளது. அதில் புத்தர் சம்மணமிட்டு அமர்ந்துள்ளார். தரையில் மடிந்த அதே கால்கள் சற்றே மடக்கினாற்போல் தெரியுமாறு அந்தச் சிற்பத்தின் மீது மேலும் இரண்டு கோடுகள் வரைந்தாற்போல் செதுக்கப்பட்டுள்ளன. இதே போன்று வேறு சில சிற்பங்களும் உள்ளன.

தா ப்ரோம் கோயிலைக் கட்டத் தொடங்கிய ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தினன். அவனுக்குப் பின் வந்த இந்துவான இரண்டாம் இந்திர வர்மன் அக்கோயிலைக் கட்டி முடித்தான். முதலில் செதுக்கப்பட்ட புத்தர் சிற்பத்தின் சம்மணக் கால்களை மடக்கி இந்துக் கடவுள் போலும் அது தோற்றமளிக்க வைக்கப்பட்டுள்ளது. உடைப்போ சிதைப்போ இல்லாமல் சிலை இரு மதத்தின் கடவுள்களாகவும் விளங்குவதைப் புத்த, இந்து மதங்கள் ஒன்றின் மீது மற்றொன்று கவிந்தாற் போல் உறவுகொண்டிருந்ததன் உருவகமாகக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. கம்போடியாவிலுள்ள அங்கோர் கோயில்களைக் கட்டிய மன்னர்கள் புத்த, இந்து மதங்களின் வம்சாவளியினராக ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருந்தனர். இரண்டு மதங்களுக்குமிடையே சிற்சில பிணக்குகள் அவ்வப்போது ஏற்பட்டிருக்கலாம் எனக் கொண்டாலும் கொண்டும் கொடுத்துமான ஒரு நீண்ட உறவு அங்கு நிலவி வந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் கம்போடியாவில் இவ்விரு மதங்கள் புகுமுன் அங்கிருந்த மதம், அதன் சடங்குகள், புராணங்கள் என்னென்ன என்பன பற்றியெல்லாம் ஆதாரபூர்வமான தகவல்கள் எவையுமில்லை.

பெரிய பெரிய கோயில்களைக் கட்டியதால் மக்கள் சலிப்புற்று கெமர் ஆட்சிக்கு முடிவுகட்டும் விதமாகத் தங்கள் அரசர்களை நோக்கிப் படையெடுத்து வந்த எதிரிகளை இருகரம் நீட்டி வரவேற்றார்கள் என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது தவறான யூகம் என நினைக்கிறேன். மக்கள் வெறுப்புற்றிருந்தால் அவர்கள் ஏழு நூற்றாண்டுகளாக ஒரு செயலை இந்து மதம் புத்த மதம் என்று மாறி மாறிக் கோயில் கட்டுமானப் பணிகளில் தொடர்ந்திருக்கமாட்டார்கள். கோயில்கள் தவிர மருத்துவமனைகளும் கட்டப்பட்டன என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். எப்படித்தான் இவ்விதம் கோயில்களை மக்கள் கட்டினார்களோ என்கிற வியப்பிற்கான விடையாக அவர்கள் சலிப்புற்று வெறுக்கும் வகையில் பிழியப்பிழிய வேலை வாங்கப்பட்டார்கள் எனக் கூறுவது கிழக்கின் உணர்வைப் புரிந்துகொள்ளாத மேற்கின் கற்பனையாகும். ஏன் இன்றைய கம்போடியர்களாலும் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையோவென எண்ணவைக்கிறது.

‘அங்கோரைப் படைத்த மக்களால் எதையும் செய்ய முடியும்’ எனக் கொக்கரித்த சர்வாதிகாரி போல்பாட் கம்போடிய மக்கள் அனைவரையும் கிராமப்புறங்களை நோக்கித் துரத்தி அவர்களை விவசாய மண்ணில் கடின உழைப்பில் ஈடுபடவைத்தான். எதிர்த்தவர்களைக் கொன்றொழித்தான். கம் போடியா கொலையுண்ட பூமியாகியது. எந்தச் சக்தி அங்கோர் கோயில்களைக் கட்டுமாறு அவர்களை இயக்கியது என்பதை அறியாத போல்பாட்டின் படைகள் போரின் போது அங்கோர் கோயில்களில் ஓடி ஒளிந்த மக்களை வேட்டையாடியதுடன் கோயில்களையும் நாசமாக்கின. பல புத்த இந்துக் கடவுள்களின் கற்சிரசுகள் கொய்யப்பட்டன. நிலமெங்கும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு அவற்றின் மீது நடந்தவர்களை முடமாக்கின. பொய்க்கால்களைப் பூட்டிக்கொண்டு இசைமீட்டிப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களைக் கோயில் வாயில்களில் காண முடிகிறது.

அரிசி, பட்டு தவிர சுற்றுலாத் துறையிலிருந்துதான் அவர்களது வருமானம். அங்கோர் கோயில்களைப் பார்க்க ஆண்டுக்கு இருபத்தைந்து லட்சம் பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியக் கலாச்சாரம் மற்றும் கட்டடக் கலையின் கணிசமான பாதிப்பு கொண்ட அங்கோரைப் பார்க்க வருபவர்களை இந்தியா வருமாறு அழைக்க இந்திய சுற்றுலாத் துறை முயல வேண்டும். பல்லவ காலத்துக் கட்டடக் கலையின் பாதிப்புகளும் அவற்றில் இருப்பதால் தமிழ் நாட்டுச் சுற்றுலாத் துறையும் பார்வையாளர்களைத் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு ஈர்க்க முயன்றால் அது நல்ல விளைவை ஏற்படுத்தும். அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகளை அழைத்து நமது கோயில்களைக் காட்டிவிட்டுத் திருப்பி அனுப்பினாலேயே போதும். அவர்களே கம்போடியாவையும் இந்தியாவையும் தொடர்புபடுத்திப் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தி விடுவார்கள். சுற்றுலா வாயிலாக வருவாய் மட்டுமின்றி ஒப்புநோக்கில் ஆய்வுகளுக்கும் இது வழிவகுக்கும். அவ்வாறான ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் கோயில் கட்டடக் கலையைக் கெமர்கள் இந்தியாவிலிருந்து தான் முற்றாக எடுத்துக்கொண்டனர் என்றோ இந்தியக் கலையைத்தான் அவர்கள் அங்கே செழுமைப்படுத்தினர் என்றோ சொல்லமாட்டார்கள் என்று நம்புவோமாக. கெமர்களின் கலை தனித்தன்மை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அங்குள்ள பிரமிட் வடிவ கோபுரங்களை இந்தியக் கோயில்களில் காண முடியாது.

அங்கோர் வாட், அங்கோர் தோமிலுள்ள பயோன், தா ப்ரோம், தொம்மனான், பன்தே செராய், பே காங்க், நீக் பியன் போன்றவை மிக முக்கியமான கோயில்கள். அவற்றை மனதில் கொள்கிறார் போல் பார்க்கச் சில நாட்கள் தேவை. நான் மூன்று நாட்களை அங்கே செலவிட்டேன். இரண்டு நாட்களில் இவற்றை யெல்லாம் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு மூன்றாம் நாளன்று ஏற்கனவே பார்த்தவற்றில் மிகவும் முக்கியம் எனக் கருதியவற்றை மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.

சிம் ரெப்பிற்கு வந்து போகும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பொருளாதாரத்திற்கேற்பத் தங்குமிடங்கள், உணவு விடுதிகளைத் தேடிக்கொள்ள முடியும். பாங்காக்கிலிருந்து சாலை வழியே செல்பவர்கள் பொய்பெட்டில் (கணிடிணீஞுt) விசாவைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கோரைச் சுற்றிப் பார்க்கும்போது நல்ல வழிகாட்டியின் துணையை இரண்டு நாட்களுக்காவது பெறுவது அவசியம்.

இன்று அங்கோர் பூமி தெளிந்த நீரோடையின் அழகைப் பெற்றுள்ளது. சிதிலமடைந்திருப்பினும் துப்புரவுடன் துலங்கும் அக்கோயில்கள் ஒருவேளை இவ்வாறுதான் ஆரம்ப முதலே படைக்கப்பட்டனவோ என்று எண்ணுகிற விதத்தில் கம்பீரம் குலையாது நிற்கின்றன. உலக அதிசயங்கள் என்று அதிகாரபூர்வமான பட்டியலில் அவை இடம்பெறாவிடினும் அவற்றைப் பார்ப்பவர்கள் அவ்விதமே கண்டுகொள்வார்கள் என்பது உறுதி.
மிகப் பரந்த நிலத்தில் கோயில்களை மட்டுமே கொண்டுள்ள நகரம் அங்கோர். விடியலிலும் பொழுது சாய்தலிலும் அதன் கோயில்களைப் பார்க்கும்போது காலத்தைக் கடந்து வாழ்வது என்பது என்ன என்பதை உய்த்து உணர முடிகிறது. இரவு ஆரம்பிக்கிறபொழுது சுற்றுலாப் பயணிகள் முற்றாக அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். ஆள் நடமாட்டம் சிறிதும் அற்ற அமைதியான பூமியாக மாறிவிடுகிற அங்கோரைக் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்கும்போது கெமர்களின் ஆட்சி அங்கு மீண்டும் திரும்பிவிட்டது போன்றே தோற்ற மளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக அடர்ந்த காடுகளாகவும் புதர்களாகவும் மண்டிக்கிடந்த நிலையில் எவருடைய கண்காணிப்பு அக் கோயில்கள் மீது இருந்ததோ அதே லோகேஸ்வரரின் கண்காணிப்பு அந்த இருளில் முன்போலவே தொடர்கிறது.

அம்ஷன்குமார்

நன்றி-காலச்சுவடு

பணக்காரனாக எளிய விரதம்! -பிப்.10 – ரத சப்தமி

சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்று சொல்கிறது சாஸ்திரம். ரதசப்தமி திருவிழாவின் தாத்பர்யமே அதுதான். சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர். “சூரிய ஜெயந்தி’ என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, “சப்தமி திதி’ என்கிறோம். தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி. திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார். 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். இளைஞர்கள் இந்த நாளில் சூரியனுக்குரிய ஆயிரம் பெயர்களை (சகஸ்ரநாமம்) சொல்லி வழிபட வேண்டும். பெரியவர்கள் மவுன விரதம் இருப்பது சிறப்பு. இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். ஜாதக ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். அவரே, நம் முதல் தந்தை. பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார். இவர் ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள். இந்நாளில் விரதமிருந்தால், எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும். இந்த நாளில் துவங்கி, தினமும் சூரியோதய நேரத்தில் குளிப்பவன் செல்வ வளம் பெறுவான். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது நல்ல நாள்.
இந்த விரதம் எளிமையானது. ஏழு எருக்கம் இலைகளை கால்கள், தோள்பட்டைகள், கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீரை ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.
இவ்வாண்டு ரதசப்தமி முதல், அதிகாலையே எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காலையிலேயே நீராடி, பணிகளை விரைவில் துவக்கி விடுங்கள். பணக்காரர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.