Daily Archives: பிப்ரவரி 10th, 2011

அபாயகரமான காளான்கள்!

காளான்களில் ஒட்டுண்ணிகள், சாறுண்ணிகள் தவிர, அசைவம் உண்ணும் காளான்களும் உள்ளன. இவை பூஞ்சனம் வகையைச் சேர்ந்தவை. இவற்றின் உடல் அமைப்பு இழை களால் ஆனதாக உள்ளது.

இந்த வகைக் காளான்களில் ஒன்று, கோதுமைப் பயிரைத் தாக்கும் நூற்புழுவை உண்டு உயிர் வாழ்கிறது. அசைவம் உண்ணும் காளான் களில் சிலவகை, ஒரு குறிப்பிட்ட இனப் பிராணிகளை மட்டும் உண்பதற்கு ஏற்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன.

வேறு சில காளான்களோ, புழுக்களைப் பிடிப்பதற்கு ஏற்ற தகுந்த பொறிகளைப் போன்ற வசதிகளைப் பெற்றிருக்கின்றன.

அசைவம் உண்ணும் காளான்களில் `டிரைக்கோ தீசியம் சிஸ்டோபோரியம்’ என்ற வகைக் காளான் மிகவும் மெல்லிய இழையைப் பெற்றுள்ளது. இரையைப் பிடிக்க எந்த ஒரு தனி அமைப்பும் இதில் அமைந்திருக்கவில்லை. ஆனால் இந்த இழைகளில் இருந்து கசியும் ஒருவிதப் பிசுபிசுப்பான திரவம், இதன் அருகே வரும் புழுக்களைப் பிடித்துக்கொள்கிறது.

அப்போது, காளான் வேறு சில மெல்லிய இழைகளைப் புழுவின் உடலினுள் செலுத்தி, அதன் உள்ளே உள்ள அனைத்தையும் உறிஞ்சி ஜீரணித்துக்கொள்கிறது.

சில காளான்கள், விதைகள் போன்ற பிசுபிசுப்பான, உயிருள்ள பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. ஏதாவது சிறு பிராணிகள் அவற்றை உண்டால், அந்த விதைகள் அந்தப் பிராணிகளின் உடலில் முளைக்கத் தொடங்குகின்றன.

அந்தச் செடி போன்ற அமைப்பு பல இழைகளைத் தோற்றுவித்து, பிராணியின் உடலைக் கிழித்து உண்டு விடுகிறது.

இவ்வாறு இந்தக் காளான்கள் பயங்கர இயல்பு கொண்டவையாக இருந்தாலும், சில நன்மைகளும் விளைகின்றன. இவற்றில் சில, பயிர்களைத் தாக்கும் பூச்சியினங்களை அழிக்கும் இயல்பைக் கொண்டிருப்பதால் விவசாயிகளுக்கு நன்மை புரிகின்றன.

அநியாய ஆடம்பரம்!

தன்னை `சூரியக் கடவுள்’ என்று அழைத்துக் கொண்ட பிரெஞ்சு மன்னன் பதினான்காம் லூயி வீண் ஆடம்பரத்துக்காகக் கட்டியதுதான் வெர்செய்ல்ஸ் அரண்மனை. நாட்டையே திவாலாக்கிய இதைக் கட்டி முடிக்க 50 ஆண்டுகள் ஆயின. முப்பதாயிரம் பேர் வலுக்கட்டாயமாக கூலியில்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர். பணியின்போது நூற்றுக்கணக்கான பேர் கொள்ளை நோயால் உயிரிழந்தனர்.

கட்டுமானப் பணிகளை மன்னன் நேரடியாக மேற்பார்வையிட்டான். சலவைக் கல், வெண்கலச் சிலைகள் பல நிறுவப்பட்டன. 250 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைக்கப்பட்டது.

ஏராளமான நீரூற்றுகள் அமைக்கப்பட்டன. பல வகையான விலங்குகளும், பறவைகளும் கொண்ட காட்சி சாலையும் ஏற்படுத்தப்பட்டது. அரண்மனையை ஒட்டி ஒரு மைல் நீளமும், 200 அடி அகலமும் உடைய கால்வாய் வெட்டப்பட்டது. அதில் படகுகள் விடப்பட்டன.

1682-ல் மன்னர் தனது பரிவாரங்களுடன் இங்கு குடியேறினார். 1789-ம் ஆண்டு வரை வெர்செய்ல்ஸ், பிரான்சு நாட்டின் தலைநகராக இருந்தது. அரசனின் பரிவாரம், 9 ஆயிரம் வீரர்கள் உட்பட 20 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அரண்மனையில் ஆயிரம் பிரபுக்களும், 4 ஆயிரம் பணியாளர்களும் வசித்தனர். அது ஆடம்பர மாளிகையாக இருந்ததே தவிர, அடிப்படை வசதிகள் இல்லை. இந்த அரண்மனையின் கோலாகல வாழ்க்கைக்கு 1789-ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி முடிவு கட்டியது. தற்போது இது அருங்காட்சியமாக உள்ளது.

மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் புகைப் பழக்கத்தை விட முடியுமா?

மருத்துவ சிகிச்சை மூலம் புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என, மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புகைப் பிடிக்கும் பழக்கம் காரணமாக, உலகளவில் ஆண்டுதோறும், 50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர், நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயின் காரணமாக பலியாகின்றனர். சிலர், அந்த பழக்கத்தை எளிதாக விட்டு விடுகின்றனர். சிலரால், என்ன செய்தும் அந்த பழக்கத்தை விட முடிவதில்லை. இந்நிலையில், புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கும், மூளைக்கும் உள்ள தொடர்பு குறித்து, மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். எலிகள் மற்றும் சுண்டெலிகளை, சிகரெட்டிலிருந்து வெளியாகும் நிகோடின் புகையை சுவாசிக்க வைத்தும், அவற்றின் மூளையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டும், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் மூலம், சிகரெட் பிடிப்பதற்கும், மனிதனின் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையின் மேற்பரப்பிலுள்ள நுண்ணிய மரபணுக்கள், புகை பிடிப்பதற்கு தூண்டுகின்றன. “ஆல்பா 5′ என்று அழைக்கப்படும், இந்த செல்கள் சிறியதாக இருப்பவர்கள், எளிதாக புகைப் பழக்கத்தை கைவிட முடிகிறது. பெரிதாக உள்ளவர்களுக்கு, புகைப் பழக்கம், மது உள்ளிட்ட எந்த பழக்க வழக்கங்களையும் எளிதாக விட முடியாமல் தவிக்கின்றனர். மூளையின் இந்த பகுதிக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம், புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என்று மருத்தவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

`ஆட்டிச’ பாதிப்பு குழந்தைகள்!

ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு `ஆட்டிசம்’ பாதிப்பு ஏற் படும் அபாயம் அதிகம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சுமார் 5 லட்சம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.

பிறருடன் தொடர்புகொள்ளும் திறன் குறைவாக இருத்தல், குறுகிய கவனத் திறன் போன்ற பாதிப்புகள் கொண்டது `ஆட்டிசம்’ எனப்படுகிறது. இந்த ஆட்டிசம்தான் குழந்தைகளை அச்சுறுத்துகிறது.

முதல் குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் மூன்றாண்டு களுக்குப் பின் பிறக்கும் குழந்தையைவிட, இரண்டு ஆண்டு களுக்குள் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிச ஆபத்து அதிகம் என்கிறார்கள், இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

முதல் குழந்தை பிறந்ததற்குப் பின் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக அடுத்த குழந்தை பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைக்கு ஆட்டிச அபாயம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். பெற்றோருக்கு என்ன வயதாக இருந்தாலும் அது பிரச்சினையில்லை என்றும் கூறு கிறார்கள்.

ஆட்டிசத்தை ஏற்படுத்தும் மற்ற காரணங்களையும் ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிறப்பு இடைவெளிக் குறைவால் ஏற்படும் பாதிப்பை அவர்களால் புறந்தள்ள முடியவில்லை.

“நாங்கள் பல்வேறு கோணங்களில் அலசினாலும், இந்த உண்மையைப் புறக்கணிக்க இயலவில்லை” என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட நியார்க் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான பீட்டர் பியர்மான் கூறுகிறார். அதேநேரத்தில், இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

முறையாகத் திட்டமிடாமையால் அமெரிக்காவில் குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது, 1995-ம் ஆண்டில் மொத்தக் குழந்தை பிறப்பில் 11 சதவீதமாக இருந்தது என்றால், 2002-ல் 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

எனவே இவ்விஷயம் தொடர்பாகக் கவலை கொண்டிருக்கிற அமெரிக்க அரசு, விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது.

எந்த இடத்திலும் இன்டர்நெட்

இன்டர்நெட் இணைப்பினை எளிதாக எந்த இடத்திலும் மேற்கொள் ளலாம். இதற்கென பல நிறுவனங்கள், டேட்டா நெட் கார்ட்களை விற்பனை செய்கின்றன. சிலர் இதனை இன்டர்நெட் டாங்கிள் எனவும் அழைக்கின்றனர். சற்றுப் பெரிய ப்ளாஷ் மெமரி ஸ்டிக் போலத் தோற்றமளிக்கும் இவற்றை, எந்தக் கம்ப்யூட்டரிலும் (டெஸ்க்டாப், லேப்டாப், நெட்புக் போன்றவை) இணைத்து, இன்டர்நெட்டில் உலா வரலாம். பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்ட ரில் உள்ள நெட்வொர்க் இணைப்பினைச் சிரமப்படுத்த வேண்டியதில்லை.
இது போன்ற இன்டர்நெட் இணைப்புகளால், நாம் அலுவல் காரணமாக வெளியூர்களுக்குச் செல்கையில் அங்கு இருக்கும் கம்ப்யூட்டர்களில் அல்லது நம் லேப்டாப்பில் இந்த டேட்டா கார்ட்களை இணைத்துப் பயன்படுத்த முடிகிறது.
இருந்தாலும், சில வேளைகளிலும் இவையும் நம் காலை வாரிவிடுகின்றன. இணைப்பு தராமல்,ஏதாவது ஒரு எர்ரர் குறியீட்டினைக் காட்டிவிட்டு, தொடர முடியாமல் உறைந்துவிடுகின்றன. இதனால் நம் வேலைகள் தடை படுகின்றன.
இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க நாம் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

1. மொபைல் இன்டர்நெட்டுக்கு ஒரே நிறுவனமா? எப்போதும் இன்டர்நெட் இணைப்பு பெற, குறிப்பாக, நாம் செல்லும் இடங்களில் எல்லாம் இன்டர்நெட் இணைப்பு பெற, ஒரே நிறுவனத்தின் இன்டர்நெட் இணைப்பு கார்ட் அல்லது அட்டையை நம்ப வேண்டாம். நீங்கள் வாங்கியுள்ள இணைப்பு ட்ரைவினைத் தந்த நிறுவனத்தின் இன்டர்நெட் தொடர்பு, நீங்கள் வசிக்கும் நகரில் நல்ல வேகத்தில் கிடைக்கலாம். ஆனால், மற்ற நகரங்களில் அந்த நிறுவனத்தின் டவர்கள் சரியான திறன் கொண்டு இயங்காததால், வேகத்தில் தடைபடலாம். சென்னையில் சரியாக இயங்கும் ஒரு நெட்வொர்க் கார்ட், டில்லியில் அல்லது மதுரையில் பாதி அளவு மட்டுமே வேகம் தரலாம்; அல்லது அந்த நகரிலிருந்து சிறிது தொலைவு தள்ளிப் போனால், இயங்காமலேயே இருக்கலாம். எனவே ஒன்றுக்கு இரண்டாக நெட்வொர்க் கார்டுகளை, வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

2.குறைந்த வேக மொபைல் இன்டர்நெட் இணைப்பு: உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு பெற்று பயன்படுத்து பவர்களுக்கு வித்தியாசமான பிரச்னை உண்டாகலாம். உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பிற்கான ஐகானில் ஐந்து கட்டங்களும் நிறைவு பெற்று, சிக்னல் மிக ஸ்ட்ராங்காக இருப்பதாகக் காட்டப்படலாம். ஆனால் டேட்டா மிக மெதுவாக, நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் கிடைக்கும். இதில் என்ன சிக்கல் என்றால், உங்கள் மொபைல் போனுக்கும் அருகில் உள்ள அதன் டவருக்கும் சிக்னல் பரிமாற்றம் மிக வேகமாக உள்ளது. ஆனால் அந்த சிக்னல் டவரினை அதிகம் பேர் பயன்படுத்துவதால், டேட்டா மிக மெதுவாகக் கிடைக்கிறது. எனவே உடனே இன்டர்நெட் இணைப்பு வேண்டும் என்றால், உங்கள் இடத்தை மாற்றிப் பார்க்க வேண்டும். சில வேளைகளில், சிக்னல் பரிமாற்றம் மிக மோசமாக இருக்கும்; ஆனால் டேட்டா வரத்து வேகமாக இருக்கும். இதற்குக் காரணம், உங்கள் சிக்னல் டவரைக் குறைந்த இணைப்புகளே பயன்படுத்துவதால் தான்.

3. விடுதிகளில் வை-பி: பல சாதாரண விடுதிகள் கூட, இப்போதெல்லாம் அவர்கள் விடுதி முழுவதையும் வை-பி செய்திருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். தங்கும் அனைவரும் இன்டர்நெட் இணைப்பு வேண்டுவதால், இந்த வசதி தரும் விடுதிகளுக்கு முன்னுரிமை தருகின்றனர். அங்கு போன பின்னரே, நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் அந்த வை-பி வேலை செய்திடவில்லை என்பது. எனவே, நாமே நம்முடைய வை-பி ரௌட்டரைக் கொண்டு செல்ல வேண்டும். ஈதர்நெட் இணைப்பினை வயர்வழி இணைத்திருக்கும் அறையைக் கேட்டு வாங்கி, அங்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டும். இது போன்ற வசதிகளை மேற்கொள்கையில், நீளமான இணைப்பு தரும் கேபிள்களைக் கையுடன் கொண்டு செல்லுங்கள். அறைகளில் உள்ள ஈதர்நெட் இணைப்பு மிகக் குறைவான நீளமுள்ள கேபிளைக் கொண்டிருக்கும். நீங்களோ படுக்கையில் வைத்து லேப்டாப்பில் இன்டர்நெட் இணைப்பினை மேற்கொள்ள எண்ணுவீர்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு.

4.இன்டர்நெட் வேகத்தை உறுதி செய்திடுங்கள்: நம் வர்த்தகம் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக, பெரிய அளவிலான பைல்களை அப்லோட் செய்திட வேண்டிய திருக்கும். இன்டர்நெட் இணைப்புதான் உள்ளதே என்று, பைல்களை அப்லோட் செய்திட முனைந்தால், அப்லோட் செய்திடும் நேரத்தில் நாமே நம் அலுவலகத்திற்குச் சென்று திரும்பலாம் போலத் தோன்றும். எனவே, பைல்களை அப்லோட் செய்திடும் முன், கிடைக்கும் இன்டர்நெட் இணைப்பினை ஒருமுறை சோதனை செய்திடவும்.

5. பாதுகாப்பினைப் பயன்படுத்தவும்: திறந்த வெளியில் வை-பி இணைப்பு கிடைக்கிறதா? சற்று கவனத்துடன் பாதுகாப்பாகச் செயல்படவும். ஹாட்ஸ்பாட் ஷீல்ட் (Hotspot Shield) போன்ற பயன்பாட்டு புரோகிராம் களைப் பயன்படுத்தினால் உங்கள் மெயில் மற்றும் தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பாகக் கையாளலாம். இதனை எல்லாம், இன்டர்நெட் இணைப்பினை வை-பி மூலம் பெறும் முன்னர் ஏற்பாடு செய்து கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

6.கிளவ்ட் இணைப்பினைத் தள்ளி வைக்கலாம்: கிளவுட் கம்ப்யூட்டிங் முறை வெகு வேகமாகப் பரவி வருகிறது. பல நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் செலவுகளைக் குறைத்திட இந்த முறைக்குத் தாவி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் உருவாக்கும் அனைத்து டாகுமெண்ட்களுக்கும் உங்களுடைய நகல் ஒன்றை, உங்கள் கம்ப்யூட்டரில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல கிளவ்ட் கம்ப்யூட்டிங் சர்வரில் இணைக்கப்படாமலேயே, அலுவலகப் பணிகளை மேற்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

7.பயணத்திட்டத்தில் இன்டர்நெட்: பயணம் ஒன்றை, அலுவலகப் பணிகளுக்கோ, குடும்பத்தினருடனோ அல்லது தனி நபர் சந்தோஷத்திற்காகவோ, மேற் கொள்ளத் திட்டமிடுகையில், மாத்திரைகள், பெர்சனல் ஆடை, உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தயார் செய்வது போல, இன்டர்நெட் இணைப்பினையும் உறுதி செய்து கொள்ளுங்கள். வெளியூர்களில் உறவினர் அல்லது நண்பர் வீடுகளில் தங்கினாலும், விடுதிகளில் தங்கினாலும் அங்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்குமா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். அது போன்ற விடுதிகளிலேயே அறைகளை முன்பதிவு செய்திடவும். உங்களுடன் இன்டர்நெட் இணைப்பு தரும், பழகிய நிறுவனத்தின் டேட்டா கார்டுகளை எடுத்துச் செல்லவும்.

இன்டர்நெட் – ஏமாறாமல் இருக்க

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம். இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.

1. முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண் தரலாமா? மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல் தரலாமா? ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் – அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி; உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்: இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.
6. பாதுகாப்பு வழிகளைக் கடைப் பிடியுங்கள்:

இணையத்தில் எப்போதும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற எச்சரிக்கையுடனேயே அதனை அணுகினால், நிச்சயம் நீங்கள் பலியாக மாட்டீர்கள்.

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம். அதன் அவசியம் அறிந்தே, `இல்லங்கள் தோறும் நூலகம் இருக்க வேண்டியது அவசியம்` என்றார் அறிஞர் அண்ணா. இன்று உலகம் முழுவதும் நூலகங்கள் பெருகி உள்ளன. நூலக பெருமையை உலகோர் உணர்ந்ததையே இது காட்டுகிறது.

எகிப்தியர்கள் கி.மு. 300 ஆண்டில் அலக்சாண்டிரியாவில் 7 லட்சம் பேப்பர் உருளைகளை சேகரித்து வைத்திருந்ததே முதல் நூலகமாக அறியப்படுகிறது. கி.மு. 4-ம் நூற்றாண்டில் ஜூலியஸ் சீசர் பல நூலகங்கள் உருவாக பெருமுயற்சி மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது.

***

அமெரிக்காவில் உள்ள `லைப்ரரி ஆப் காங்கிரஸ்’ நூலகமே உலகின் மிகப் பெரிய நூலகமாகும். 1800-ல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் சுமார் 6 கோடி கையெழுத்துப் பிரதிகள், லட்சக்கணக்கான நூல்களும், ஒலி- ஒளி நாடாக்களும் உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள போட்லி நூலகமே உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.

இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைய நூலகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் பெரிய கிளை நூலகங்களும், சிறு நூலகங்களும் செயல்படுகின்றன. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஊர்ப்புற நூலகங்களும், ஏராளமான தனியார் நூலகங்களும் உள்ளன.

***

கொல்கத்தாவின் பெல்வேடேர் பகுதியில் உள்ள இந்திய தேசிய நூலகம் இந்தியாவின் பெரிய நூலகம் என்ற சிறப்பை பெறுகிறது. 1836-ல் பொது நூலகமாக இது செயல்படத் தொடங்கியது. 1903-ம் ஆண்டில் கர்சன்பிரபு இந்த நூலகத்துடன் அபிஷியல் இம்பீரியல் நூலகத்தை இணைத்து நி இம்பீரியல் நூலகத்தை உருவாக்கினார். 1953-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் இது தேசிய நூலகம் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது. 1990 வரை இங்கு 15 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது சுமார் 20 லட்சம் நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளுடன் நூலகம் செயல்பட்டு வருகிறது. ***

கொல்கத்தாவில் இன்னொரு புகழ்பெற்ற நூலகம் இருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மைய நூலகமான இதுதான் இந்தியாவின் பழமையான நூலகமாக திகழ்கிறது. 12-12-1856-ல் இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் செனட் இல்லத்தில் செயல்பட்டு வந்த நூலகம் 1912- ல் தனிகட்டிடத்திற்கு மாறியது. தர்பங்கா மகாராஜா இதற்கு பெரிதும் உதவினார். 1935 வரை மாணவர்களுக்கு நூல்கள் வழங்கும் நூலகமாக செயல்பட்ட இது, தற்போது ஆராய்ச்சியாளர்களுக்கும் கைகொடுக்கிறது. இப்போது இங்கு சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. ***

டெல்லியில் பிரசித்தி பெற்ற டெல்லி பொது நூலகம் இருக்கிறது. இந்திய அரசும், யுனெஸ்கோ அமைப்பும் இணைந்து ஏற்படுத்திய சிறப்புக்குரிய நூலகம் இது. மாதிரி பொது நூலகங்களை உருவாக்கும் திட்டத்தில் 1951-ம் ஆண்டில் இந்த நூலகம் நிறுவப்பட்டது. ஆசியாவிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நூல்களை வழங்கும் நூலகம் என்று பெயர் பெற்ற நூலகம் இது. மைய நூலகமான இது சில பெரிய கிளை நூலகங்களையும், சிறு கிளை நூலகங்கள் பலவற்றையும் கொண்டு செயல்படுகிறது. இங்கு பார்வையற்றோருக்கான பிரெய்லி நூலகப் பிரிவும் செயல்படுகிறது. ***

சென்னையில் உள்ள கன்னிமாரா பொதுநூலகம் சிறப்புக்குரிய நூலகமாகும். இது 1896-ல் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவின் அனைத்து வெளியீடுகள், ஐ.நா, யுனெஸ்கோ வெளியீடுகளும் இங்கு சேகரிக்கப்படுகிறது. 1990 வரை இங்கு 2 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது சுமார் 6 லட்சம் நூல்கள் இருக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழக நூலகமும் சென்னையில் சிறப்பாக இயங்கும் இன்னொரு நூலகமாகும். இவ்விரு நூலகங்களிலும் பல்துறையைச் சேர்ந்த பன்மொழி நூல்கள் நிறைந்து கிடைக்கின்றன. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இவற்றை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

***

சென்னை அடையாறில் உள்ள அடையாறு நூலகம் தமிழகத்தின் பழமையான நூலகம் ஆகும். ஸ்டீல் ஆல்காட் என்ற அமெரிக்கர் அரிய ஓலைச்சுவடிகள் மற்றும் பழமையான நூல்களை சேகரித்து இந்த நூலகத்தை 28-12-1886-ல் நிறுவினார். சுற்றுலாப்பிரியரான இவர் அடையாறை ஓய்விடமாக பயன்படுத்தினார். அங்கு தனக்காக உருவாக்கிய நூலகத்தை உலகப்புகழ் பெற்றதாக உயர்த்தும் நோக்கத்தில் உலகம் முழுவதும் பயணித்து பயனுள்ள நூல்களை நூலகத்தில் சேர்த்தார். இங்கும் லட்சக்கணக்கான நூல்கள் பராமரிக்கப்படுகிறது. அரிய, பழமையான நூல்களின் கருவூலம் இந்நூலகம்.

***

தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் விதத்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் நூலகம் “அண்ணா நூற்றாண்டு நூலகம்”. 2010 செப்டம்பர் 15-ல் இந்நூலகம் தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. 8 மாடி கட்டிடத்தில் செயல்படும் இது கன்னிமாரா நூலகத்தைவிட பெரியது. தெற்கு ஆசியாவின் பெரிய நூலகம் என்ற சிறப்பையும் இது பெற்றிருக்கிறது. இங்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி நூல்கள் தனித்தனித் தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரெய்லி நூலகப் பிரிவும் உள்ளது. இங்கு லட்சக்கணக்கான நூல்கள் சேகரிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

***

டெல்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்தியன் கவுன்சில் நூலகம் 1 லட்சம் நூல்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களுடன் இயங்கி வரும் முக்கிய நூலகமாகும். 1950 முதல் செயல்படும் இந்நூலகம் சட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். டெல்லி மத்திய தலைமைச் செயலக நூலகம் (21/2 லட்சம் நூல்கள்), உத்தரபிரதேசம் ஆசாத் நூலகம் (5 லட்சம் நூல்), கோவா வரலாற்று ஆவணக்காப்பகம், டெல்லி இண்டியன் நேஷனல் சயின்டிபிக் டாக்மென்ட்டேசன் சென்டர், அகமதாபாத் ஜேத்தாபாய் புத்தகாலயம், டெல்லி நேஷனல் ஆர்ச்சீவ்ஸ் ஆப் இண்டியா போன்றவை இந்தியாவின் குறிப்பிடத்தக்க நூலகங்களாகும்.

உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி

உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில், ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை உலகில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சம் பேர். இது 6.1 சதவீதமாகும். இதில், 7 கோடியே 80 லட்சம் பேர் இளைஞர்கள். கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. உலக தொழிலாளர் நிறுவனம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்த ஆண்டு வேலை இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகில் 20 கோடியே 33 லட்சமாக குறையும் என்று உலக தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் ஆறுகோடி பேர்: ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள், இந்தியாவில் வேலை இல்லாமல் உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி திட்டங்களால், கடந்த 20, 30 ஆண்டுகளில் படித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், படித்த, வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில், கடந்த 2004-05ம் ஆண்டில் பணிக்கு சேருவோர் எண்ணிக்கை 0.32 சதவீதம் குறைந்துள்ளது. உலகளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு காரணமாக இந்தியாவிலும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 1993 – 94ம் ஆண்டில் விவசாய துறையில் வேலை வாய்ப்புகள் 61.67 சதவீதமாக இருந்தது. ஆனால், 2004 -05ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 52 சதவீதமாக குறைந்துவிட்டது. விவசாயத்துறை மூலம் வரும் வருமானம் அதிகமாக உள்ள நிலையில், விவசாய வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது. இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தகம், ஓட்டல், உணவு விடுதி, போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த துறைகளில் பணி செய்பவர்கள், தங்களின் பணி பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்கின்றனர். எனவே, பல இளைஞர்கள் சுய தொழில்களில் ஈடுபட துவங்கியுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கும் ஒரு தடை ஏற்படுகிறது. சுய தொழில், சிறு தொழில் செய்யும் இளைஞர்களின் தொழிலை பாதிக்கும் அளவிற்கு பெரிய நிறுவனங்களும், சூப்பர் மார்க்கெட்டுகளும், ஷாப்பிங் மால்களும் ஏராளமாக வந்துவிட்டன. இதன் காரணமாக, வேலை இல்லாமல், சுய தொழில் செய்யும் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் பெரிய நிறுவனங்களுக்கு செல்கிறது. இது, வேலை இல்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பக்தரைப் பார்க்கும் அஞ்சுமுக அனுமன்

ஒரு கோயிலுக்கு நீங்கள் போகிறீர்கள். அங்கே முக்கியமாக என்னவெல்லாம் வேண்டுவீர்கள்?

ஆண்டவா… என் குடும்பம் எப்போதும் ஒற்றுமையாக இருக்கணும்!
பகவானே… என் பசங்க நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி பாஸ் ஆகணும்!
கடவுளே… எனக்கு கல்யாண பாக்கியம் குடுப்பா…!
ஆயுளும் ஆரோக்கியமும் அளிக்கணும் தாயே!
தெய்வமே… தீவினை எல்லாம் தீய்ஞ்சு போக அருள்புரி!
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல் இருக்கும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு கோரிக்கையையும் வெவ்வேறு கடவுள்முன் வைப்பீர்கள்.
உங்கள் வேண்டுதல் எதுவானாலும் சரி… வெவ்வேறு கோயிலுக்குப் போக வேண்டாம். எல்லாவற்றையும் ஒரே தலத்தில், ஒரே கடவுளிடம் சொன்னால் போதும்; விரைவிலேயே அனைத்தும் ஈடேறிவிடும்! என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!
அந்த ஆனந்தத்தை நீங்கள் அனுபவித்து உணரவேண்டுமானால், நீங்கள் செல்லவேண்டிய தலம், சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கம். அங்கேதான் அருளாட்சி செய்கிறார் பஞ்சமுக அனுமன். பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும்.
ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன். இப்படி ஒரு வித்தியாசமான கோலத்தில் இவர் இங்கே கோயில் கொண்டது எப்படி? குடியிருப்புகள் மிகக் குறைவாக இப்பகுதி இருந்த காலகட்டம். இந்து மதத்துக்கு உரிய கோயில்கள் இங்கே குறைவாகவே இருந்தது. அதுவும் வெகுதொலைவு போய் கும்பிடணும். அப்போதான் இப்பகுதியில் வசித்த ஒரு பக்தருக்கு எல்லா வரங்களையும் தரக்கூடிய தெய்வத்துக்கு ஒரு கோயில் கட்டினால் என்ன? அப்படின்னு ஓர் எண்ணம் வந்துச்சு.
அதே நினைவோட, அவர் எப்போதும் வணங்கும் காஞ்சி மாமுனிவரை நினைச்சுகிட்டே உறங்கப்போயிருக்கார். அப்போ அவர் கனவுல பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை பண்ணலாம்னு அசரீரி மாதிரி கேட்டிருக்கு உடனடியா அப்படி ஒரு சிலையைத் தேடிப்போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்க்கோட்டுல, ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைச்சிருக்கு. சிலை வந்தாச்சு. கோயில்கட்ட இடம் பார்த்தாச்சு. அப்புறம் என்ன பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டியதுதான் பாக்கி. இப்படித்தான் அப்பகுதியில் இருந்த நாங்க எல்லோருமே நினைச்சோம். ஆனா, அங்கே கோயில் கட்ட முடியாதபடி பல்வேறு சர்ச்சைகள் வேற்று மதத்தவரால் ஏற்படுத்தப்பட்டு, கோயில் அமைக்க தடைபோட்டுட்டாங்க. ரெண்டு வருஷம் போராடியும் தீர்வு கிடைக்கவே இல்லை. கடைசியில – சஞ்சீவி மலையையே தூக்கிட்டு வந்த அனுமன், நம்ப பாரத்தைத் தாங்க மாட்டாரா என்ன?ன்னு நினைச்சு, அவர்கிட்டேயே பொறுப்பை ஒப்படைச்சுட்டோம். சொன்னா நம்பமாட்டீங்க… அதன்பிறகு மளமளன்னு எல்லாம் நடந்து முடிஞ்சு அனுமன் ஜம் என்று பிரதிஷ்டையாகி கும்பாபிஷேகமும் நடந்துச்சு.
இதோ இப்போ வரைக்கும் ஏகப்பட்ட தடைகளைத்தாண்டி கோயில் வளர்ந்து கம்பீரமா நிற்குது. இதுக்குக் காரணம், நாங்க யாரும் இல்லை. தன் வால் கோட்டையைத் தானே தனக்கு சிம்மாசனமா அமைச்சுக்கற அனுமன், இந்த கோயிலையும் தன் இருப்பிடமா தானே அமைச்சுகிட்டு எழுந்தருளி இருக்கார் என்பதுதான் உண்மை! என்கிறார் இப்பகுதியில் வசிப்பவரும், சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநருமான விஜய திருவேங்கடம். ஒரே ஒரு சன்னதியோடு இருந்த இந்தக் கோயிலில் இன்று விஜய கணபதியும் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அஞ்சனை மைந்தனைப்பற்றிய அரிய விவரத்தினைக் கேட்டபின், நெஞ்சினில் தூய பக்தியோடு கோயிலுக்குள் நுழைகிறோம்.மூன்றுநிலை ராஜகோபுரம் ராமநாமத்தைச் சொல்லும் அனுமன்போல் கம்பீரமாக நிமிர்ந்து நின்று நம்மை அழைக்கிறது. ஜடாரிமுன் பவ்யமாக தலைவணங்கும் பாவத்துடன் ராஜகோபுரத்தின் வழி உள் நுழைகிறோம்.
நேர் எதிரே உள்ள சன்னதியில் ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் அருள்நிறை விழிகளோடு அன்பர்களுக்கு அருளக் காத்திருக்கிறார் அனுமன். சின்னஞ்சிறு சன்னதி. அதன் முன்னே சென்று நின்றதும், பக்தர்களுக்கு எளியவராக சிலை வடிவில் காட்சிதரும் அனுமன்மீது நம் பார்வை படர்கிறது.
மறுநிமிடம் அந்த அஞ்சுமுக அனுமன் சட்டென விஸ்வரூபம் எடுத்து தன்பார்வையை நம்மீது பதித்து நெஞ்சு முழுவதும் நிறைந்த அஞ்சேல் என்று அபயக்கரம் நீட்ட உடல் சிலிர்க்கிறது. பெரும்பாரமாக இருந்த கஷ்டங்கள் அப்போதே நீங்கி விட்டது போன்று உணர்வு எழ, காற்றின் மகன் வந்து அமர்ந்துவிட்டதில் மனம் லேசாகிறது.
கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீமையைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள்.
மெதுவாக சன்னதியை வலம் வந்தால் ஏராளமான மட்டைத் தேங்காய்கள் ஓரிடத்தில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அமாவாசைகளில் இங்கு வரும் பக்தர்கள் காரியத்தடைகள் விலகவும், மணப்பேறு, மகப்பேறு வேண்டியும் அனுமனை வழிபட்டுக் கட்டியவையாம் இவை, ஒவ்வொரு அமாவாசையின்போதும் அதிகரித்து அனுமன் வால்போல் நீண்டு இன்று ஆயிரக்கணக்கினையும் தாண்டியுள்ளதே, இந்த அனுமனின் ஆற்றலுக்கு சாட்சியாக இருக்கிறது. அதிகபட்சம் தொண்ணூறு நாட்களுக்குள் வேண்டுதல் நிறைவேறிவிடுகிறதாம்.
அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தினமும் பிரசாத விநியோகமும் உண்டாம்.
விரைவில் விஜய விநாயகர் இங்கே புதிய சன்னதியில் கோயில் கொள்ளப்போவது தனிச்சிறப்பு.
ஒரு முக்கியமான விஷயம்… உங்கள் வீட்டிலோ உங்களுக்கு தெரிந்தவர்கள் வீட்டிலோ மாணவ, மாணவியர் யாராவது இருக்கிறார்களா? அப்படியானால் 13.2.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு இந்தக் கோயிலுக்குப் போய் வாருங்கள். காரணம், மாணவர்களின் தேர்ச்சிக்காக ஹயக்ரீவ ஹோமம் அந்த சமயத்தில் இங்கு நடக்கப்போகிறது. ஒவ்வொரு வருடமும் இப்படி ஹோமம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் பூஜிக்கப்பட்ட நோட்டுப்புத்தகம், பேனா போன்றவையும் இலவசமாக அளிக்கிறார்களாம்.
இத்தலத்தில் கோயில் கொண்டு அஞ்சு முகத்துடன் பக்தர்தம் நெஞ்சம் நிறைந்து அருளும் அனுமன், கொஞ்சமும் குறைவிலாது பக்தர்கட்கு அளிக்கிறார் தன் குளிர்வான அருளை.
சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் 6 கி.மீ.யில் உள்ள கௌரிவசக்கத்தில், பழனியப்பா நகரில் இருக்கிறது இந்தப் பஞ்சமுக அனுமன் ஆலயம். பிராட்வே மற்றும் தி.நகரிலிருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் பேருந்துகளில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.