Daily Archives: பிப்ரவரி 11th, 2011

மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை!

இன்றைய நவீன மருத்துவ முறையின் ஓர் அங்கம், ரத்தப் பரிசோதனை. தற்போது, ரத்தப் பரிசோதனைக்கு மருத்துவமனை அல்லது அதற்கென உள்ள சோதனைக் கூடத்தில் ரத்தம் கொடுத்துவிட்டு முடிவுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

இனி அந்த நிலை மாறப் போகிறது. ஒரு கைக்கு அடக்கமான, மலிவான ரத்தப் பரிசோதனைக் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு துளி ரத்தம் இட்டால் போதும், இந்த உபகரணம் அரை மணி நேரத்தில் துல்லியமான முடிவுகளைக் கூறிவிடும்.

இந்த நவீன உபகரணத்தை உருவாக்கியிருக்கும் ரோட் தீவு பல்கலைக்கழகப் பொறியாளர்கள், ரத்தப் பரிசோதனையைத் தங்கள் கருவி எளிதானதாகவும், மலிவானதாகவும், மிகவும் திறன் மிக்கதாகவும் ஆக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

“மருத்துவப் பரிசோதனையைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய முன்னேற்றம். எங்களின் இந்தக் கருவி மூலம், ரத்தப் பரிசோதனையை மருத்துவமனையிலோ, மருத்துவரின் அறையிலோ, ஏன், வீட்டிலோ கூட செய்துகொள்ளலாம். நோயாளி ஒருவர், மருத்துவரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே ரத்தப் பரிசோதனை செய்துவிடலாம். அவர் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பே சோதனை முடிவுகள் காத்திருக்கும்” என்கிறார், ஆய்வுக் குழுவில் ஒருவரான முகம்மது பக்ரி.

இந்த முறையில், கிரெடிட் கார்டை விடச் சிறிய ஒரு பிளாஸ்டிக் பாலிமர் அட்டையில் ஒரு துளி ரத்தம் வைக்கப்படுகிறது. பின்னர் அது சிறிய `காலணிப் பெட்டி’ போன்ற உபகரணத்துக்குள் செருகப்படுகிறது. ரத்தமானது அதில் ஏற்கனவே உள்ள பொருட்களுடன் வினைபுரியும் விதத்தை `சென்சார்கள்’ உணர்ந்து முடிவை அறிவித்துவிடுகின்றன.

வேர்ட் டிப்ஸ்-வேர்ட் டேபிளில் ஹெடர்கள்

வேர்ட் டேபிளில் ஹெடர்கள்
வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். அதனை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில் அது பல பக்கங்களில் அமைந்திருப்பதனையும் அடுத்த அடுத்த பக்கங்களில் டேபிளில் உள்ள வரிசைகளுக்கான தலைப்புகள் இல்லை என்பதனையும் உணர்கிறீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஹெடர்கள் வந்தால் தானே ஒவ்வொரு காலமும் எது குறித்த தகவல்களைக் கொண்டுள்ளன என்று எளிதாகத் தெரியும். உடனே முதல் பக்கத்தில் இருக்கும் டேபிள் தலைப்பு உள்ள படுக்கை வரிசையினை அப்படியே காப்பி செய்து ஒவ்வொரு பக்கத்தின் முதல் வரிசையிலும் புதிய வரிசையினை ஏற்படுத்தி பேஸ்ட் செய்திடலாம். ஆனால் இது இன்னும் பிரச்னையை ஏற்படுத்தும். பின்னாளில் ஏதேனும் ஒரு வரிசையை இணைத்தாலோ அல்லது நீக்கினாலோ இரண்டாம் பக்கத்திலிருந்து உள்ள தலைப்பு அடுத்த பக்கத்திற்கோ அல்லது முந்தைய பக்கத்திற்கோ செல்லும். இந்த குழப்பத்தினைச் சரி செய்திட ஒரு வழியினை வேர்ட் தருகிறது. இதற்கான தீர்வினை Headings என்ற பகுதியில் பெறலாம். ஆம்; முதலில் முதல் பக்கத்தில் டேபிள் தலைப்பு அமைத்த வரிசையினை செலக்ட் செய்திடவும். பின் Table மெனு செல்லவும். விரியும் மெனுவில் கிடைக்கும் பிரிவுகளில் Heading Rows Repeat choice என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். பழைய வேர்ட் தொகுப்பாக இருந்தால் Headings என்று மட்டுமே இருக்கும். இனி பார்த்தால் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பில் இந்த ஹெடர்கள் இருக்கும். நீங்கள் எத்தனை வரிசையினை சேர்த்தாலும் நீக்கினாலும் இது அப்படியே தான் இருக்கும். இந்த ஹெடர்களில் மாற்றம் செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டால் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு வரிசையில் மட்டுமே மாற்ற முடியும். இரண்டாவது பக்கத்திலோ அல்லது வேறு பக்கத்திலோ உள்ள ஹெடரில் மாற்ற முடியாது. மேலும் முதல் பக்கத்தில் என்ன மாறுதல் செய்கிறோமோ அது மற்ற பக்கத்திலும் அப்படியே மாற்றப்படும்.
வேர்ட் டேபிள் செல்களுக்கிடையே இடைவெளி
வேர்டில் டேபிள் உருவாக்கி தகவல்களை அமைக்கும் வசதியில் பல நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். அவற்றில் ஒன்று செல்களுக் கிடையே சிறிய இடைவெளியை உருவாக்குவது. இது செல்களையும், அவற்றின் வரிசைகளையும் அழகாக எடுத்துக்காட்டும். இதற்கு டேபிள் எடிட்டர் ஒன்றை வேர்ட் கொண்டுள்ளது. பொதுவாக டேபிள் ஒன்றை உருவாக்குகையில், செல்களுக்கிடையே இடைவெளி எதுவும் ஏற்படுத்தப்பட மாட்டாது. செல்களைப் பிரிக்கும் கட்ட கோடு மட்டுமே காட்டப்படும். இதனையும் வேண்டாம் என்றால், மறைத்துவிடலாம். எனவே செல்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்த நாம் அதனுடன் வரும் டேபிள் எடிட்டரைப் பயன்படுத்த வேண்டும்.
1. முதலில் வடிவத்தினை மாற்ற எண்ணும் டேபிளில் எங்கேனும் ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட் Contex மெனுவினைக் காட்டும்.
2.இந்த மெனுவில் Table Properties என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் உடனே, Table Properties டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இதில் Table டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Options என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Table Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
5. இதில் Allow Spacing Between Cells என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
6. இந்த செக் பாக்ஸின் வலது பக்கம், செல்களுக்கிடையே எவ்வளவு இடம் விடப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
7. அடுத்து Table Options டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடவும்.
8. பின்னர், Table Properties டயலாக் பாக்ஸை மூடுவதற்கான ஓகே பட்டனைக் கிளிக் செய்திடவும்.
அடிக்கோடுகள் சலிப்பாக இருக்கின்றனவா?
வேர்ட் டாகுமெண்ட்டில், சில சொற்களை மற்ற சொற்களிலிருந்து பிரித்துக் காட்ட, எழுத்துக்களை தடிமனாக, சாய்வாக மற்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம். இவற்றை முறையே CTRL +B, CTRL +I மற்றும் CTRL +U கீகளை அழுத்தி அமைக்கிறோம். இதில் கோடு எப்போதும் ஒரு அளவில் அமைக்கப் படுகிறது. பல வேளைகளில், இந்தக் கோடு அமைவது நமக்குச் சலிப்பினைத் தருகிறது. ஏனென்றால், நம்மில் பலருக்கு, இன்னும் பலவகையான கோடுகளை அமைக்க வேர்ட் வசதிகளைத் தருகிறது என்பதனை அறியாமல் இருக்கிறோம். புள்ளிகள், டேஷ் கோடுகள், இரட்டை கோடுகள், அலை அலையாய் கோடுகள் ஆகியவற்றைக் கொண்டும் அடிக்கோடிடலாம். எப்படி அவற்றை அமைப்பது எனப் பார்க்கலாம்.
1. எந்த சொற்களுக்கு அடிக்கோடிட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து “Font” dialog box திறக்கவும் “Home” டேப்பினை ரிப்பனில் தேர்ந்தெடுத்து இதனை மேற்கொள்ளலாம். பின்னர், வலது கீழாக உள்ள அம்புக்குறியினைக் கிளிக் செய்திடவும். அல்லது CTRL + SHIFT + F ஆகிய கீகளை ஒருசேர அழுத்தவும்.
3. இப்போது “Font” டயலாக பாக்ஸ் கிடைக்கும். உங்கள் விருப்பப்படி, “Underline style” என்பதனை அடுத்துள்ள டெக்ஸ்ட் பாக்ஸை விரிக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் வகையிலான அடிக்கோடு அமைக்க பல ஆப்ஷன்கள் கிடைக்கும். அவற்றிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதே போல “Underline color” என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதற்கான வண்ணத்தையும் அமைக்கலாம். இதில் காட்டப்படும் வண்ணம் எதுவும் உங்களுக்கு மன நிறைவைத் தரவில்லை என்றால், “More Colors” என்பதில் கிளிக் செய்து மேலும் பல வண்ணங்களைப் பெற்று, தேர்ந்தெடுக்கலாம்.
4. பின்னர் ஓகே கிளிக் செய்து, டயலாக் பாக்ஸை மூடி வெளியேறலாம். இனி, நீங்கள் செட் செய்தபடி, அடிக்கோடுகள் கிடைக்கும்.
எத்தனை முறை திருத்தப்பட்டாய்?
உங்கள் வேர்ட் டாகுமெண்ட் எத்தனை முறை திறந்து திருத்தப்பட்டது என அறிய வேண்டுமா? இதனை சிறிய பீல்டு ஒன்றை, டாகுமெண்ட்டில் ஏற்படுத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு முறை, நாம் வேர்ட் டாகுமெண்ட்டினைத் திறந்து, எடிட் செய்து, சேவ் செய்திடுகையில், டாகுமெண்ட் ப்ராப்பர்டீஸ் பகுதியில் இந்த தகவல் அப்டேட் செய்யப்படுகிறது. இதில் ஒரு பகுதிதான், பைல் எத்தனை முறை சேவ் செய்யப்படுகிறது என்பதாகும். இதனை Revision Number என அழைக்கின்றனர். நீங்கள் விரும்பினால், நீங்களாகக் கூட இந்த எண்ணை பீல்டில் அமைத்து, ஒவ்வொரு முறையும் அதனை அப்டேட் செய்திடலாம். கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொள்ளவும்.
1. எங்கு இந்த Revision Number வேண்டுமோ அங்கு கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
2. Insert மெனுவிலிருந்து Field என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும். நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், ரிப்பனில் உள்ள Insert டேப் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும். பின்னர், Text குரூப்பில், Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு தரப்படும் ஆப்ஷன்களில் Field என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.)
3. அடுத்து Categories என்ற பட்டியலில், Numbering என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட், Field Names பட்டியலில் இந்த ஆப்ஷன்களை அப்டேட் செய்து கொள்கிறது.
4. Field Names பட்டியலில் RevNum என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5 .இதற்குப் பின்னர், தேர்வுகளை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி, பீல்ட் உருவாக்கப்பட்டு அங்கே,எத்தனை முறை, டாகுமெண்ட் திருத்தப்பட்டு சேவ் செய்யப்பட்டது என்பது எண்ணால் காட்டப்படும்.

என்ன வரப்போகிறது ?-லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழா

லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசியது 4ஜி அலைவரிசை தொடர்பு குறித்துத் தான். பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை தொடர்புடன் கூடிய மொபைல் போன் அல்லது டேப்ளட் பிசியைக் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தனர். 4ஜி அலைவரிசை கொண்ட மொபைல் போன்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தொலைதொடர்பு வேகத்தைத் தரும். ட்ரெயினில் பயணிக்கும் போது கூட விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணைய இணைப்பு பெற முடியும். மிகக் குறைந்த வேக இணைப்பு கூட விநாடிக்கு ஒரு கிகா பிட் வேகத்தில் இருக்கும்.
அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்களில், ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளே புக் டேப்ளட் பிசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஐ-பேட் சாதனத்தைக் காட்டிலும் 400 கிராம் குறைவான எடையில், 7 அங்குல அகலத் திரையுடன் இயங்கியது. இதே போலக் கவனத்தை ஈர்த்த இன்னொரு சாதனம் டெல் ஸ்ட்ரீக் 7 (Dell Streak 7) டேப்ளட் பிசி. டெல் நிறுவனத்தின் 4ஜி திறன் கொண்ட முதல் டேப்ளட் பிசி இதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 2.2 இயக்கத்தில் செயல்படுகிறது. இதில் உள்ள கொரில்லா கிளாஸ் டச் ஸ்கிரீன் திரை, வேறு எதனையும் பக்கத்தில் கூட ஒப்பிட விடுவதில்லை. இந்தியாவில் 2ஜி வரலாற்றினையும், 3ஜி முழுமையாக உண்டா என்று அறியாத நிலையையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், தடைகள் நீங்கி 4ஜி சாதனங்களைப் பயன்படுத்தும் வகையில் சேவை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
2. முப்பரிமாண டிவி: பலரின் கண்கள் அதிகம் மொய்த்த அடுத்த சாதனம் முப்பரிமாண “டிவி’. இதனை கண்ணுக்கு ஸ்பெஷல் கண்ணாடி போட்டு பார்க்க வேண்டியதில்லை. சோனி நிறுவனம் இத்தகைய ஒரு “டிவி’யினைக் காட்டியது. இவற்றுடன் 27 புதிய எச்.டி.டி.வி. (HDTV) மாடல்களும் காட்டப்பட்டன. இவற்றில் 16 “டிவி’க்கள், முப்பரிமாண படத்தைக் காட்டக் கூடியன.
ஐஸ்டேஷன் (iStation) என்னும் நிறுவனம் ஸூட் (Zood) என்னும் டேப்ளட் பிசியைக் காட்டியது. முப்பரிமாணக் காட்சியைக் காட்டும் திரை இதன் சிறப்பாகும். அது மட்டுமின்றி 2டி யிலிருந்து 3டிக்கு (2D to 3D) மாற்றும் தொழில் நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது.
சில “டிவி’க்கள் நமக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தருவதாகவும் இருந்தன. தற்போது வேகமாகப் பரவி வரும் திரைகள் மூலம் டிவிக்களை மிக மிக ஸ்லிம்மாக வடிவமைப்பது எளிதாகிறது. இந்த வகையில் எல்.ஜி. நிறுவனம் 2.9 மிமீ மட்டுமே தடிமன் கொண்ட “டிவி’ ஒன்றை அறிமுகப் படுத்தியது. இதே போன்ற வேறு பல “டிவி’க்களும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. சாம்சங் நிறுவனம் ப்ளாஸ்மா “டிவி’ திரை கொண்ட 16 “டிவி’க்களை அறிமுகப்படுத்தியது. இவற்றின் ரெசல்யூசன் என்ற அளவில் இருப்பது ஒரு சிறப்பாகும்.
“டிவி’க்களின் தடிமன் சிறிய அளவில் குறையும் போது, திரையின் அகலம் அதிகமாகி வருவது வழக்கமாகி வருகிறது. எல்.ஜி. மற்றும் ஷார்ப் நிறுவனங்கள் 72 அங்குல எல்.இ.டி. திரை கொண்ட “டிவி’க்களில் பல மாடல்களை அறிமுகப் படுத்தியுள்ளன. இவற்றில் பல முப்பரிமாண காட்சிகளைக் காட்டும் “டிவி’க்களாகும்.

மைக்ரோசாஃப்ட் கிளவ்ட் சேவை இந்தியாவில் துவங்கியது

கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான வாடிக்கையாளர் நிர்வாகப் பணிகள் சேவையினை தருவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தனிப் பிரிவினை இந்தியாவில் தொடங்கி உள்ளது.
கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை வேகமாகப் பரவி வருகிறது. பெரிய நிறுவனங்கள் சில, சக்தி வாய்ந்த சர்வர்களை நிறுவி, அதன் மூலம் பல நிறுவனங்களுக்கு கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கி வருகின்றன. இதனைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் உற்பத்தி பொருட்கள், அவை குறித்த நுணுக்கமான தகவல்கள், விற்பனை, விற்பனைக்குப் பின் சேவை மற்றும் இவை சார்பாக வாடிக்கையாளர் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள் ஆகியவற்றை மேற்கொள்ள தனியே சர்வர்களை அமைத்து இயக்குவது அதிக செலவினைத் தரும் வேலையாக அமையும். இவை அனைத்தையும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் பெற்றால், கவலையின்றி இந்த அனைத்து பணிகளையும் குறைந்த செலவில் பெறலாம். இந்த கட்டமைப்பினைப் பெரிய நிறுவனங்கள் சில கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் அமைத்துத் தருகின்றன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் சி.ஆர்.எம். 2011 என்ற பெயரில், இந்த சேவையினை இந்தியாவில் வரும் பிப்ரவரி 28 முதல் வழங்க இருக்கிறது. முதலில் வரும் வாடிக்கை நிறுவனங்களுக்கு பல சலுகைகளை மைக்ரோசாப்ட் வழங்கு கிறது. பிற நிறுவனங்கள் மூலம் இந்த சேவையினைப் பெற்று வருபவர்கள், மாற்றிக் கொள்ள விரும்பினால், அவர்களுக்கும் பல தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது. மேலும் விபரங்களுக்கு http://www.cloudcrmforless.com என்ற இணைய தள முகவரியில் உள்ள பக்கத்தைக் காணலாம்.

நீங்கள் குறட்டை விடுபவரா…?!

யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே… அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

* தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.    * மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை வராது.

* வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப் போகலாம்.

* தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

* தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

* பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

* உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்.