Daily Archives: பிப்ரவரி 16th, 2011

கர்சர் முனையில் உலகக் கோப்பை

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான போட்டிகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள், அலுவலக வேலைகள், ரேஷன் கடை பொருள் வாங்குதல் என அனைத்தையும் ஒத்திபோட்டுவிட்டு, “டிவி’ முன்னரும், முடிந்தால் கிரிக்கெட் நடக்கும் ஸ்டேடியத்தில், மனைவியை ஏமாற்றி வாங்கிய கள்ள மார்க்கெட் டிக்கெட்டில் கிரிக்கெட் பார்க்கச் செல்ல மக்கள் தயங்க மாட்டார்கள். 13 நகரங்களில், 14 நாடுகள் பங்கு பெறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் 10 நகரங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் இவை நடத்தப் படுகின்றன. பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 02 வரை இந்த போட்டிகள் நடைபெறு கின்றன.
இந்த போட்டிகளைத் தொடர்ந்தோ அல்லது குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் காணவேண்டும் என்றால் என்ன செய்யலாம்? நிகழ்ச்சி நிரலைத் தேடி அறிவது எப்படி?
இதற்கெனவே அருமையான ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனுடன் தளம் ஒன்று http://www.cricbuzz.com/cricketschedule/series/228/iccworldcup2011 என்ற முகவரியில் இயங்குகிறது.
இந்த தளத்திற்குச் சென்றால், உடன் கிரிக்கெட் மைதானம் போல ஓவல் வடிவில் திரை காட்டப்படுகிறது. சுற்றிலும் டேப்கள் அமைக்கப்பட்டுள்ளன. பங்கு பெறும் நாடுகள், நடைபெறும் நகரங்கள், நாட்கள், அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்கள், குவார்ட்டர், செமி பைனல் மேட்ச்கள் என அனைத்திற்கும் டேப்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், உடன் டேப்பில் குறிப்பிட்டது சார்பான அனைத்து தகவல்களும் தரப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, இந்தியா என்ற டேப்பில் கர்சர் செல்கையில், திரையின் நடுவே, இந்தியா எந்த நாட்டுக் குழுவினை எதிர்த்து, என்று, எங்கே விளையாட்டுக்களில் பங்கேற்கிறது என்ற விபரம் காட்டப்படும். அதே போல, குறிப்பிட்ட நாளுக்கான டேப்பில் கர்சர் சென்றால், அந்த நாளில் நடைபெறும் போட்டிகள் சார்பான தகவல்கள் தரப்படுகின்றன. போட்டிகள் நடைபெறும் நகரம், ஸ்டேடியத்தின் பெயர் கொண்ட டேப்பில் கர்சர் செல்கையில், அந்த ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்ற போட்டிகள், கலந்து கொள்ளும் குழுக்கள், நாட்கள் பட்டியல் காட்டப்படுகின்றன. அனைத்தும் மிக அழகாக, வேகமாகக் கிடைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் காலத்தில் நிச்சயமாக இந்த தளத்தில் தகவல்கள் உடனடியாக அப்டேட் செய்யப்படும். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, எப்படி எல்லாம் ஒரு நிகழ்வைக் காட்டலாம் என்று அறியவிரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல தளம்.

வந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி

லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெங்களூருவில் இயங்கும் மைக்ரோ ஸ்டார் இண்டர் நேஷனல் (MSIMicro Star International) நிறுவனம், தன் முதல் டேப்ளட் பிசியை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. MSI WindPad 100W Tablet PC என அழைக்கப்படும் இந்த பட்டய கம்ப்யூட்டர் இன்டெல் மொபைல் ப்ராசசரில் இயங்குகிறது. 10.1 அங்குல மல்ட்டி பாய்ண்ட் டச் ஸ்கிரீன், இரண்டு வீடியோ கேமராக்கள், ஜி-சென்ஸார், ஏ.எல்.எஸ். லைட் சென்சார் என நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக திறன் தரும் பேட்டரி இதில் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் இன்டெல் வடிவமைப்பில் இந்த அளவிற்கு பேட்டரி திறன் கொண்டது இதுவே முதல் மொபைல் கம்ப்யூட்டராகும்.
இந்த பட்டய கம்ப்யூட்டரின் பரிமாணம் 274x173x18.5 மிமீ. எடை பேட்டரியுடன் 800 கிராம். ஒரு எஸ்.டி. கார்ட் ரீடர், யு.எஸ்.பி. 2 ஸ்லாட், மினி எச்.டி.எம்.ஐ. போர்ட் ஆகியன இருப்பதால், வழக்கமான கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மல்ட்டி மீடியா வசதிகளையும் இதில் பெறலாம். எடை 800 கிராம் இருப்பதால், தங்களுடைய டேட்டா மையத்தைத் தங்களுடனேயே தூக்கிச் செல்ல விரும்பும் இளைஞர் களுக்கு உகந்ததாக இது உள்ளது.
இரண்டு கேமராக்கள் இருப்பதனால், இயக்குபவர் தன் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம், நண்பர்களுடன் தொடர்ந்து நேரடியாகத் தொடர்பில் இருக்கலாம். இன்னொரு கேமரா கான்பரன்ஸ் வசதிக்கான படங்கள் மற்றும் வீடியோக்களைத் தயார் செய்திடலாம்.
அறிமுகமாக, தற்போது இந்த பட்டய கம்ப்யூட்டர் மும்பையில் உள்ள 12 இ-ஸோன் விற்பனை மையங்களில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இந்திய நகரங்கள் அனைத்திலும் விற்பனை செய்யப்படும் என இந்நிறுவன பொது மேலாளர் எரிக் குயோ தெரிவித்துள்ளார்.
இதன் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
1.WindTouch UI: இந்த கம்ப்யூட்டரில், வழக்கமான இன்டர்பேஸ் இல்லாமல், எம்.எஸ்.ஐ. நிறுவனம் தயாரித்த WindTouch என்னும் இடைமுகம் தரப்பட்டுள்ளது. இதில் கம்ப்யூட்டரில் வேலை, பொழுது போக்கு, கருவிகள் மற்றும் நெட்வொர்க் என்று நான்கு பிரிவுகள் தரப்பட்டுள்ளன.
2.EasyFace: முகம் அறிந்து இயக்கம். இந்த Face Recognition Software எம்.எஸ்.ஐ. நிறுவனத்தின் தயாரிப்பு. பட்டய பிசியில் தரப்பட்டுள்ள 1.3 எம்பி வெப்கேம் சாதனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இத்துடன் பயோமெட்ரிக் தொழில் நுட்பம், லாக் இன் பாஸ்வேர்ட் பாதுகாப்பு ஆகியவையும் உண்டு.
3. Taskbar magnifier: டாஸ்க் பாரினைச் சற்றுப் பெரிதாக்கிக் காட்டுவதன் மூலம், விரல்களால் தொட்டு இயக்கும் வசதி எளிதாகக் கிடைக்கிறது.
4. Photo Management Software: விரல்களினால் தொட்டு, புகைப்படங் களைப் பெரிதாக்கவும், சுழற்றவும் முடிகிறது. இதன் மூலம் எளிதாக நம் புகைப் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
5. பதிந்தே கிடைப்பது: பல புரோகிராம்கள் இதில் பதியப்பட்டு கிடைக்கின்றன. Microsoft Office Starter 2010 தொகுப்பு கிடைக்கிறது. இதில் டேப்ளட் பிசிக்களுக்கான வேர்ட் மற்றும் எக்ஸெல் 2010 உள்ளன.எனவே அலுவலக வேலைகளை எங்கும் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம். இத்துடன், அடோப் ரீடர், அடோப் பிளாஷ் பிளேயர் தரப்படுகிறது. இதனால் மல்ட்டிமீடியா அனுபவம் எளிதாகிறது.
6. ஹார்ட்வேர் சிறப்புகள்: இதில் மிகக்குறைந்த மின் சக்தியில் இயங்கும் இன்டெல் மொபைல் ப்ராசசர் (Intel Atom Z530 processor) இயங்குகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் Windows 7 Home Premium. 2 ஜிபி டி.டி.ஆர்.2 மெமரி கிடைக்கிறது. 32 ஜிபி சாலிட் ஸ்டேட் ட்ரைவ் , இரண்டு யு.எஸ்.பி. போர்ட் உள்ளன. இவற்றுடன் இரண்டு கேமராக்கள் இதன் பயன்பாட்டினை இன்னும் சிறப்பாக மாற்றுகின்றன.
இதன் விலை ரூ.22,000 என்ற அளவில் இருக்கலாம். தொடக்கத்தில் ரூ.34,000 என்ற அளவில் திட்டமிடப்பட்டது.
இந்த டேப்ளட் பிசியைத் தயாரித்த, எம்.எஸ்.ஐ. என அழைக்கப்படும் மைக்ரோ ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம், கம்ப்யூட்டருக்கான மெயின் போர்ட், கிராபிக் கார்ட்ஸ் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் நிறுவனமாகும். கிராபிக் கார்ட் தயாரிப்பில் உலக அளவில் பெயர் பெற்றது.மெயின் போர்டு தயாரிப்பில் முதல் மூன்று நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது.

லண்டன் குழந்தைகளுக்கு இந்திய ஆசிரியர்கள் கணக்கு பாடம்!

லண்டன் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஆஷ்மவுன்ட் பிரைமரி பள்ளியில், வாரம் ஒரு முறை, தங்கள் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து, கணக்கு பாடம் படிக்க தயார் ஆவர். அடுத்த சில நிமிடங்களில், பல ஆயிரம் கி.மீ., தூரத்தில், இந்தியாவில் பஞ்சாபில் உள்ள ஒரு பள்ளியுடன், அவர்கள் கம்ப்யூட்டர் இணைக்கப்படும். ஆன் லைனில் அந்த குழந்தைகளுக்கு பஞ்சாப் பள்ளி ஆசிரியர்கள், கணக்கு பாடம் சொல்லிக் கொடுப்பர்.
இந்த பள்ளி மட்டுமல்லாமல், பிரிட்டனில் உள்ள மேலும் மூன்று பள்ளிகள், தங்கள் குழந்தைகளுக்கு இன்டர்நெட் மூலம் பாடம் சொல்லித்தரும் பணியை, இந்தியாவில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளன.
ஆன் லைனில் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறை, ஐரோப்பாவில் இது முதல் முறை. “பிரைட்ஸ்பார்க்’ என்ற லண்டன் கல்வி நிறுவனம், இதற்காக நூறு இந்திய ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் சரளமாகப் பேச பயிற்சி கொடுத்துள்ளது. இந்த பயிற்சி, நல்ல பலனைத் தருகிறது, குழந்தைகளுக்கு உபயோகமாக உள்ளது என பெற்றோரும், குழந்தைகளும் கூறியுள்ளனர்.
பட்ஜெட்டில், கல்வி ஒதுக்கீட்டிற்கு 3 சதவீத அளவு குறைக்க முடிவு செய்துள்ளது பிரிட்டன் அரசு. இதன் மூலம், பல ஆயிரம் ஆசிரியர்கள் வேலை பறிபோகும். அப்போது, ஆன்லைன் மூலம் பாடம் படிக்கும் முறை மேலும் பிரபலமாகும். இந்தியாவில் குறைந்த சம்பளத்தில், லண்டன் குழந்தைகளுக்கு, இந்திய ஆசிரியர்கள் பாடம் சொல்லித்தரும் சூழ்நிலை உருவாகும் என, பிரிட்டன் ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் !

பொதுவாகவே, ஆஸ்பத்திரியில் உடல்நிலை சரியாக இல்லாத போது, உடல்நலம் முன்னேற்றம் அடைந்து, படுத்த படுக்கையாக இருக்கும்போது, தம்மைப் பார்த்துப்பேசி, தனக்குக் குணம் அடைய, தமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ வரமாட்டார்களா என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது இயற்கை.
அவர்கள் கூறும் நம்பிக்கையான உரையாடலால் நமக்கு நாமே உடல்நிலை முன்னேற்றமடைந்துவிட்டமாதிரி நமக்கு உற்சாகமோ சந்தோஷமோ உண்டாவது உண்மை.
படுத்த படுக்கையாக இருப்பவர்களையோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பவர்களையோ நாம் காணச் செல்லும்போது நமக்கு நாமே சில வழிமுறைகளை அனுசரிப்பது நல்லது. அதுதான் சிறந்ததும் கூட.

* முதன்முதலில் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியின் விசிட்டிங் வேளை எப்போது என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
* போவதற்கு முன்பாக, உங்களுக்கு உடல்நிலை ஓரளவு திருப்தியாக இருக்க வேண்டும். ஏனென்றால் நோயாளி, ஆஸ்பத்திரிச் சூழ்நிலையில் இருப்பதால், உங்கள் உடல்நிலை சிறிதளவாவது பாதிக்கப்பட்டு இருந்தால், நோயாளிக்கு அதே பிரச்சினை வரக்கூடும். அதுமட்டுமல்ல ; அதே மாதிரி குழப்பம் அருகில் உள்ள நோயாளிக்கும் வரக்கூடும்.
* நீங்கள் பார்க்க இருக்கும் நோயாளி எந்த வார்டு எந்த அறை படுக்கை நம்பர் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாங்கள் பார்க்கும்போது நோயாளி தூங்கிக்கொண்டு இருந்தாலோ அல்லது டாக்டர் அந்த நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தாலோ, தொந்தரவு செய்யாமல் வெளியே வந்துவிடவும். அல்லது வெளியே விசிட்டர் ரூமிற்கு வந்து அங்குள்ள புத்தகம், பத்திரிகை முதலியவற்றைப் படித்துப் பொறுமையாகக் காத்துக்கொண்டு இருக்க வேண்டும்.
வரவேற்று அறையில் வளவளவென்று எதுவுமே பேசாமல் இருப்பது நல்லது.
* வெறும் கையோடு போகக்கூடாது என்றால் பழங்களோ அல்லது ஏதாவது பரிசோ தவிர, படிக்கும் நாவல், புத்தகம் எடுத்துச் சென்றால் நோயாளி சந்தோஷம் அடைவார். குறிப்பாக வீட்டில் செய்த உணவுப் பொருட்கள் அல்லது ஹோட்டலில் செய்த பண்டங்கள் தவிர்க்கவும். பிஸ்கட், பிரட், நன்றாகப் பரிசோதனை செய்த பின் கிடைக்கும் சீல் வைத்த குடிதண்ணீர் சிறந்தது. மொபைல் எடுத்துப்போகக் கூடாது.
* நோயாளியை ஆஸ்பத்திரியில் சேர்த்தவுடன் அவருக்கு அவசியம் நிம்மதி தேவை. அவரோடு குடும்பச் சண்டை அல்லது குடும்பப் பிரச்சினை முதலியவைகளை விவாதிப்பது நல்லதல்ல. கூடுமானவரை சப்தம் போடாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, பக்கத்துப் படுக்கையில் வேறு நோயாளி தூங்கிக்கொண்டு இருந்தால் வார்த்தையில் மிகவும் கவனம் ÷வை.
* அவ்வப்போது அவரது உடல்நிலை பற்றி அவரைப் பரிசோதனை செய்யும் டாக்டர் அல்லது நர்சோடு எதுவும் விசாரிக்க வேண்டாம். குழப்பம் அதிகமாகும். நோயாளிக்கு நம்பிக்கை தேவை.
* கட்டில் அருகே உள்ள டிரிப் ஷீட்டில் படிக்க வேண்டாம். உங்களுக்கும் உடல்நிலை, ஜூரம் பற்றி ஒரளவு தெரிந்திருக்கும். அதற்காக டாக்டர் குறிப்பிட்ட நோய் அதன் முன்னேற்றம், குறைபற்றி நீங்களாகவே எதுவுமே தெரியாமல் முடிவு செய்யக் கூடாது. டாக்டருக்கு உங்களைவிட அதிகம் தெரியும்.
* நோயாளி ஏதாவது விரக்தியாகப் பேச நேரிட்டால் நம்பிக்கையான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். போதும்.
* நோயாளியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது நாம் யாரை சந்தித்தாலும் நமது உறவினருக்கு அவரைப் பற்றிய நல்லதைத்தான் கூற வேண்டும்.

வயிற்றுக்கு ஓய்வு கொடுங்கள்!

பிறப்புலேர்ந்து இறப்பு வரைக்கும் எல்லாருக்கும், எந்த வயதுலயும் வரக்கூடிய பிரச்சினை வயிற்றுப்போக்கு. இது பாதிச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். சாப்பிடற உணவு ஜீரணிக்கப்பட்ட பிறகு, சிறுகுடலால உறிஞ்சப்பட்டு, மீதி பெருங்குடலுக்குத் தள்ளப்படுது. சில சமயத்துல சிறுகுடல்லேர்ந்து உறிஞ்சப்படாம, அப்படியே பெருங் குடலுக்குத் தள்ளப்படும். அதோட பாக்டீரியா தொற்றும் சேர்ந்துதான் வயிற்றுப்போக்கை உண்டாக்குது. வயிற்றுப்போக்குக்கான காரணங்கள் நிறைய….

ஊரு விட்டு ஊரு, இல்லைனா நாடு விட்டு நாடு போறவங்களுக்கு, இது சகஜம். ஆரோக்கியமில்லாத சாப்பாடு, சமைக்காத உணவு, கை, கால்களை சரியா கழுவாததுன்னு இதுக்குப் பல காரணங்கள். சின்னக் குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்றுப்போக்குக்கு இன்ஃபெக்ஷனோ, பால் அலர்ஜியோ காரணமா இருக்கலாம். குழந்தைகளுக்கு பேதியாகிறப்ப அலட்சியம் கூடாது. 23 தடவை போனாலே என்னனு கவனிக்கணும்.

வயித்தைக் காயப் போட்டாலே இந்தப் பிரச்சினை சரியாயிடும்ங்கிறது பலரோட நம்பிக்கை. அது ரொம்ப தப்பு. வயித்துக்கு ஓய்வே கொடுக்கக் கூடாது. ரத்தம் கெட்டியாகிறது, உடம்புல உள்ள நீர்ச்சத்தெல்லாம் வறண்டு போகிறது, மயக்கம்னு அதோட பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும்.

வயிற்றுக்போக்கை அதிகப்படுத்தற உணவுகள்னு சிலதைச் சொல்லலாம். பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ், சுண்டல், முழு தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், பால், ஜூஸ், பாட்டில் பானங்கள், காபி இதெல்லாம் அந்த ரகம்.

பேதியைக் கட்டுப்படுத்தற உணவுகள்னு பார்த்தா அரிசி, நெய் ஜவ்வரிசி, ஆரோரூட்ல செய்த கஞ்சி, வெந்தயம், நீர்மோர், கேரட், உருளைக்கிழங்குன்னு நிறைய இருக்கு.

வயிற்றுப்போக்கு வந்தவங்க, அதிக நார்ச்சத்து உணவுகளைத் தவிர்க்கணும். அரிசி நொய், ஜவ்வரிசி, ஆரோரூட் மாவுல தளர்வா, கொஞ்சமா உப்பு சேர்த்த கஞ்சியை அடிக்கடி கொஞ்சமா, ஒவ்வொரு டீஸ்பூனா ஒரு நிமிஷம் எடுத்து விழுங்கறது நல்லது. காபி குடிக்கிறது உடம்புல உள்ள நீர்ச்சத்தை அழிச்சிடும். ஓரளவு கெட்டியான சூப் குடிக்கலாம். பெரியவங்களுக்கு பேதியானா, நீர்மோர்ல வெந்தயப் பொடி சேர்த்துக் குடிக்கலாம்.

தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கும் பேதியாகலாம். அதுக்காக தாய்ப்பால் கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. பவுடர் பால் கொடுக்கிற குழந்தைகளுக்கு, அதை மாத்தின உடனே, சரியா ஜீரணமாகாம போகலாம். குழந்தையோட உடல்வாகு, அதோட செரிமானத் திறன் எல்லாம் பார்த்து, டாக்டரோட அட்வைஸ் படி புது உணவை ஆரம்பிக்கிறது நல்லது. கஞ்சியா இருந்தா, குழந்தைகளுக்கு வடிகட்டியும், பெரியவங்களுக்கு அப்படியேவும் கொடுக்கலாம்.

ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸ் நல்லது. மத்தபடி ஆப்பிள், பேரிக்காய், பச்சை திராட்சை தவிர்க்கப்படணும். சாக்லெட் கூடாது. அதுல உள்ள ‘சார்பிட்டால்’ என்ற செயற்கை இனிப்பு, பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்தும். அதிக இனிப்பு, அதிக உப்பு ரெண்டுமே தவிர்க்கப்படணும்.

பிள்ளைகள் படிப்புக்கு இரட்டிப்பு செலவு: பெற்றோரின் அறியாமை

மத்திய அரசின் பல்வேறு வரிகள் மீது, கல்விக்கான, “செஸ்’ கட்டணம் வசூலிக்கப்படுவதால், இந்த தலைமுறை பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி பெற, தமிழக அரசு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை என, அரசு பள்ளிகளில் படித்து வாழ்வில் சாதித்தோர் நம் நாட்டில் ஏராளம்.10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் சாதிப்போர் பட்டியலில், மாநகராட்சி பள்ளி மாணவர்களும் இடம்பிடித்துக் கொண்டு தான் உள்ளனர். ஆனால், இன்றும் நம் சமூகத்தில், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கத்தினர் கூட தங்கள் பிள்ளைகளை, “கான்வென்ட்’ பள்ளிகளில் படிக்க வைக்கத் தான் விரும்புகின்றனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் சில தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க, விண்ணப்பம் வழங்கப்படும் குறிப்பிட்ட நாளின் முதல்நாள் இரவே, அப்பள்ளிகளின் வாசலில் தவம் கிடக்கவும் பெற்றோர் தயாராக உள்ளனர்.

 

பார்த்ததும் கவர்ந்திழுக்கும் சூழல், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதான பங்கு வகிக்கும் ஆங்கிலத்தில் பயிற்சி போன்ற காரணங்களால், தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் முன்னுரிமை தருகின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தைக் கண்டித்து, சென்னை உள்ளிட்ட இடங்களில், அவ்வப்போது பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதிலும் பலர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பள்ளி நிர்வாகத்தை பகைத்துக் கொள்ள விரும்பாமல் மவுனம் காக்கின்றனர். இப்படி, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்விக்காக அரசுக்கு கட்டணம் செலுத்துகிறோம் என்ற நிகழ்கால உண்மையை பெற்றோர் உணராமல் இருப்பது, அவர்களின் அறியாமையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சாடுகின்றனர்.

 

வருமான வரி, கலால் வரி, சேவை வரி, சுங்க வரி ஆகிய மத்திய அரசின் வரி இனங்களின் மீது, 2005 – 06ம் நிதியாண்டு முதல் பள்ளிக் கல்விக்காக 2 சதவீதமும், 2008 – 09 நிதியாண்டு முதல் உயர்கல்விக்காக 1 சதவீதமும் செஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.உதாரணமாக, 23 ரூபாய் சேவை வரி விதிக்கப்படும் ஒருவரின் மொபைல் போன் பில்லுக்கு, 69 பைசா செஸ் கட்டணமாக பெறப்படுகிறது. இந்த வரி வருவாய், அனைவருக்கும் கல்வி(சர்வ சிக்ஷா அபியான்), மதிய உணவு போன்ற கல்வி திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிடுகிறது. மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பங்கு இவ்வரியின் மூலமே கிடைக்கிறது.

 

பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைவாக உள்ளதென்ற வாதம் தவறானது. அனைத்து பள்ளிகளிலும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். அரசு பள்ளிகள் குறித்த நம் சமூகத்தின் பார்வை மாற வேண்டும். நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு பட்ஜெட்டில், கல்விக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரத்து 36 கோடி ரூபாயில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, “செஸ்’ கட்டணம் மூலமே அரசுக்கு கிடைத்துள்ளது’ என்றார்.தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு அவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால், பெற்றோருக்கு இரட்டிப்பு செலவு ஏற்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி, பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராடவும் வேண்டியுள்ளது. இதற்கு பதிலாக, பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க இந்த தலைமுறை பெற்றோர் முன்வர வேண்டும். அப்போதுதான், தங்கள் காலத்தில் கல்லூரி படிப்புக்கு செலவு செய்த பணத்தை, தங்கள் பிள்ளைகளின் பள்ளி படிப்புக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது என்ற புலம்பலில் இருந்து அவர்கள் விடுபட முடியும். அரசு பள்ளிகளின் தரமும் மேலும் உயரும்.
-என்.கிரிதரன்

நன்றி-தினமலர்

வைரத்தின் வரலாறு-3

விளம்பரங்களில் வைரத்தைப் பற்றி “EF” கலர், “FG” கலர் என்று குறிப்பிடுகிறார்களே, அது என்ன? வைரக்கல் நிறத்தை, ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்கள். “D” நிறம் மிக உயர்ந்த வெள்ளையை குறிக்கிறது. இந்த நிற வைரம் கிடைப்பது மிக அரிது. “E” “F” “G” ஆகிய நிறங்கள்தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படுகிறது. இவைகளில் வித்தியாசம் அதிகமாக இருக்காது. H,I என்று போகும்போது இன்னும் வெண்மை நன்றாக குறையும். J,K,L என்ற நிறங்கள் சிறிது சிறிதாக மஞ்சளாக ஆரம்பிக்கும். இப்படி `பளிச்` சென்ற தன்மைக்கு தகுந்தபடி “Z” வரை நிறம் குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த பெரிய வைரம் கோகினூர் மட்டும்தானா? வேறு வைரங்கள் ஏதேனும் உண்டா ?

நிறைய உண்டு. அவை:

1. ரீஜென்ட் (Regent): இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில் இது குறிப்பிடத்தக்கது. இந்த வைரத்திற்கு மற்றொரு பெயர் பிட் வைரம் (Pit Diamond) .

பட்டை தீட்டப்படாத பொழுது இதன் எடை 410 காரட்டுக்கும் மேல். 1700-ல் ஆந்திராவில் கோல்கொண்டாவில் இருந்து 72 கி.மீ. தெற்கில் உள்ள பர்க்கால் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. இது இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரங்களில் ஒன்று.

அப்போது சென்னை கவர்னராக இருந்த தாமஸ் பிட் (இவர் முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வில்லியம் பிட்டின் தாத்தா) என்பவரால் இந்த வைரம் சுமார் ஒரு லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு 140.50 காரட் எடையுள்ள வட்ட சதுரக் கல்லாக பட்டை தீட்டப்பட்டு, Pit வைரம் என்று பெயர் இடப்பட்டது. பிறகு 1717-ல் பிரெஞ்ச் அரசரால் 5 லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டு ரீஜென்ட் என்று பெயர் மாற்றப்பட்டது.

இது பல கைகள் மாறி, கடைசியாக நெப்போலியனிடம் போய் சேர்ந்தது. நெப்போலியனுக்கு பணக் கஷ்டம் வந்தபோது, 40 லட்சம் டாலருக்கு இதை ஒரு தனவந்தரிடம் அடகு வைத்து பிறகு மீட்டார். இந்த வைரத்தை நெப்போலியன் தன் போர்வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார்.

இன்று இது பாரிஸ் நகரில் லூவர் மிசியத்தில் உள்ளது.

2. பைகாட் வைரம் (The Pigot Diamond):

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரத்தின் எடை சுமார் 48 காரட்கள். 1775-ல் அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த பேரன் பைகாட் (Baron Pigot )என்ற ஆங்கிலேயருக்கு சில அரசு காரியங்கள் முடித்து கொடுத்ததற்காக ஒரு இந்திய இளவரசரால் பரிசளிக்கப்பட்டது. இந்த வைரத்திற்கு முதலில் தி கவர்னர்(The Governer)என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு பைகாட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1799-ல் இவர் இறந்த பிறகு 1801-ல் அவருடைய சந்ததியினர் இதை நெப்போலியனின் தாயார் லெட்டிசியா போனபார்டே(Letizia Bonaparte)என்பவருக்கு விற்றுவிட்டார்கள். இப்போது இருக்குமிடம் தெரியவில்லை.

3. ஷா வைரம் (Shah Diamond)

இது இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வித்தியாசமான வைரம். நான்கு புறங்களிலும் நீளமான பட்டையுடன், நிறம் சற்று குறைந்த, உட்புறம் முற்றிலும் சுத்தமான கண்ணாடிபோல் வடிவம் கொண்டது. இந்தியாவில் அகமது நகர் கவர்னராக இருந்த புர்கான் நிஜாம் ஷா என்பவருடைய பெயர் ஒரு பகுதியில் எழுதப்பட்டு உள்ளது. மற்றொரு பக்கத்தில் முகலாய அரசர் ஜஹாங்கீர் மகனுடைய பெயரும், இன்னொரு பக்கத்தில் பாரசீக அரசர் பாத் அலி ஷா (Fath Ali Shah) பெயரும் அவரவர் ஆட்சி புரிந்த வருடங்களை குறிப்பிட்டு அராபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இன்று இது ரஷியாவில் கிரம்ளின் மாளிகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆப்பிரிக்கா தவிர வேறு எங்கும் வைரம் கிடைக்கிறதா?

கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ரியோடின்டோ (Riotinto) சுரங்கம் மற்றும் ரஷ்யா, இஸ்ரேல், பிரேசில் இப்படி பல நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. இதைத்தவிர, ஒரு ருசிகர தகவல் என்னவென்றால், மனித உடலிலிருந்தும் வைரம் தயாரித்திருக்கிறார்கள்.அமெரிக்காவில் உள்ள நிணி நிறுவனம் இறந்துவிட்ட ஒருவரின் உடலை முழுவதும் சாம்பல் ஆக்கி அதில் இருந்து கார்பன் வேபர் டெபாஸிஷன் (Carbon vapour deposition method) என்ற ஒரு முறையில் ஒரு காரட் வைரத்தை பரிசோதனை முறையில் உருவாக்கி உள்ளது. ஆனால் இதற்கு ஆகும் செலவு, வாங்கும் வைரத்தை விட பல மடங்கு அதிகம்.

ஆனால் இந்த முறையில் வைரத்தை உருவாக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் நம் முன்னோர்கள் “வைரம் பாய்ஞ்ச உடம்பு” என்றார்களோ என்னவோ!

இப்படி பல புதுமைகள் வைரத்திற்கு இருப்பதால்தான் என்றும் நம்மை அது ஈர்ப்பதாக உள்ளது.

ராஜா எம். ஸ்ரீராம், டி.ஜி, எப்எப்ஐஜி., (ஜெம்மாலஜிஸ்ட்), சென்னை.