Daily Archives: பிப்ரவரி 17th, 2011

யாராய் இருந்தால்தான் என்ன?

ஸ்பெக்ட்ரம்’ உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவரும்போது, பரபரப்பாகப் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுவதும், ஒரு சிலர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படுவதும்  வழக்கமாகிவிட்டது. அப்போதெல்லாம், மக்கள் மத்தியில் காணப்படுவது அதிர்ச்சியோ, ஆர்வமோ அல்ல. “இதனால் எல்லாம் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை’ என்கிற சலிப்புதான் மேலோங்கும்.ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் மக்களுக்கு நம்பிக்கையின்மை காணப்படுவதற்குக் காரணம், மிகப்பெரிய ஊழல்களில் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் குற்றவாளிகள் தப்பித்துவிடுவதுதான். மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடுவதிலும், விசாரணைக் கமிஷன் அமைப்பதிலும் அரசு முனைப்புக் காட்டுவதே, காலத்தைக் கடத்தி ஊழலின் தாக்கத்தை நீர்த்துப்போக வைப்பதற்குத்தான் என்று மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருப்பதும் அவர்களது அவநம்பிக்கைக்குக் காரணம்.ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாகியும் ஏழு பிரதமர்களின் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் இன்றும் போஃபர்ஸ் பீரங்கிபேர ஊழலின் ஊற்றுக்கண் கண்டறியப்படவில்லை. குற்றவாளிகளைத் தப்ப விடுவதில் காட்டிய முனைப்பை, மத்திய புலனாய்வுத் துறை சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதில் காட்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை. இப்படி அரசின் ஆதரவுடன் தவறுகள் மறைக்கப்படும்போது, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஊழல் வழக்குகளில் தீர்ப்புகள் காலவரையின்றி தள்ளிப் போகும்போது, மக்களுக்கு அரசின் செயல்பாடுகளில் மட்டுமல்ல, ஜனநாயகத்தின்மீதே வெறுப்பும், சலிப்பும், நம்பிக்கையின்மையும் ஏற்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?அவசரக் கோலத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, குற்றவாளிகள் தப்பிப்பதோ, நிரபராதிகள் தண்டிக்கப்படுவதோ நிச்சயமாகத் தவறுதான். நிதானமாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதும் உண்மைதான். அதற்காக, நிதானம் ஒரேயடியான நிதானமாகவும், நீதிமன்றச் செயல்பாடுகள் ஆமைவேகத்தில் நகர்ந்து, காலம் கடந்து தீர்ப்பு வழங்கப்படுவதும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைக் குலைக்குமே தவிர, அதிகரிக்காது.இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எடமலயாறு அணை ஊழலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட கேரள முன்னாள் மின்சார அமைச்சர் ஆர். பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை தந்து தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகுதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று சலித்துக் கொள்வதைவிட, ஊழலில் சம்பந்தப்பட்ட நபர் என்னதான் செல்வாக்குப் படைத்தவராக இருந்தாலும், பெரிய பதவி வகித்தவராக இருந்தாலும், காலம் கடந்தாலும், நீதியும் சட்டமும் தனது கடமையைச் சரிவரச் செய்திருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைவதுதான் சரி.1982-87-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மின்சார அமைச்சராக இருந்த ஆர். பாலகிருஷ்ண பிள்ளை, எடமலயாறு அணையுடன் இணைந்த மின் உற்பத்தி நிலையத்துக்கான ஒப்பந்தப்புள்ளி அளித்ததில் முறைகேடுகள் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விசாரணை நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர். பாலகிருஷ்ண பிள்ளைக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கேரள உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அவரை நிரபராதி என்று விடுதலை செய்தது. இப்போது, வி.எஸ். அச்சுதானந்தனின் மேல்முறையீட்டின் விளைவாக உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் 5 ஆண்டு தண்டனையை ஓராண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 20 ஆண்டு காலதாமதம்கூட தண்டனைதான் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது கவனத்துக்குரிய ஒன்று.பெரிய பதவிகளிலும், சமுதாய அந்தஸ்துடனும் வாழும் பிரமுகர்களுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவதுவரைதான் மரியாதை. அவர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தாலும், அவர்களது குடும்பம் செல்வச் செழிப்புடன் மாட மாளிகைகளில் வாழ்ந்தாலும் அவர்கள் மீது படியும் ஊழல் கறை பல தலைமுறைகளுக்கும் தொடரும் என்பதுதான் உண்மை.முன்னாள் மத்திய தொலைத்தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா வாழ்ந்த வாழ்க்கைக்கும், அவரது செல்வாக்குக்கும், சில காவலாளிகள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துச் சென்றதைவிட பெரிய தண்டனை நிச்சயமாக இருக்க முடியாது. இன்னும் போஃபர்ஸ் ஊழல் சோனியா காந்தியைச் சந்தேகத்தோடுதான் பார்க்க வைக்கிறது. அதன்பிறகு மூன்று முறை மக்கள் மன்றம் முதல்வராகத் தேர்ந்தெடுத்த பிறகும்கூட சர்க்காரியா கமிஷனின் நிழல், முதல்வர் கருணாநிதியை விட்டு அகன்றபாடில்லை. “டான்சி’ வழக்கும், அளவுக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது படிந்துவிட்ட நிரந்தரக் கறையாகத்தான் தொடர்கிறது.அதற்காக, ஊழல் வழக்குகளில் விசாரணை தேவையில்லை என்றோ, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டாம் என்றோ பொருள் அல்ல. ஊழல் வழக்குகளால் எந்தவிதப் பயனும் இல்லை என்று சலிப்படையத் தேவையில்லை. சட்டத்திலிருந்து தப்பினாலும் யாரும் தர்மத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.ஆர். பாலகிருஷ்ண பிள்ளை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னொரு கருத்தையும் தெரிவித்திருக்கிறது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் தொடர்பான வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்களும், விசாரணை நீதிமன்றங்களும் விரைவாக விசாரித்துக் காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் அந்தக் கருத்து. உயர் நீதிமன்றங்கள் தங்களது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி இதுபோன்ற வழக்குகளை விரைந்து விசாரிப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.அரசியல் பிரமுகர்கள், பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள், உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும்போதுதான், மக்களுக்கு அரசின் மீதும், ஆட்சிமுறை மீதும் நம்பிக்கை ஏற்படும். சட்டமும், நீதியும் சாமானியனுக்கு மட்டுமல்ல, எல்லா இந்தியக் குடிமகனுக்கும் சமம் என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே அது முறையான மக்களாட்சி!

நன்றி-தினமணி

குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை

மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்

வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம்

வெளியில் செல்லும் போதும் , பயணங்களின் போதும் உபயோகிக்கலாம்

தொடர்ந்து மாற்றாமல் இருந்தால் டயாபர் ரேஷ் எனப்படும் allergy ஏற்படும்

ஆண் குழந்தைகளுக்கு இறுக்கமாக போடகூடாது , இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து பின் நாட்களில் விந்து அணு குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது .

துணி diaper சிறந்தது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது . எனவே வீட்டிலேயே சுத்தமான புது துணியை பயன்படுத்தலாம் .

துணியை துவைத்தபின் டெட்டோல் போன்ற கிருமி நாசினிகளை உபயோகித்தால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படக்கூடும் .

அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்

தட்பவெப்பம்,உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது. பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கிறார்

அலர்ஜி உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது. வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது. மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
பூக்கும் காலத்தில் காற்றில் பரவும் பூக்களின் மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும். வீட்டில் உள்ள தூசியில் பூஞ்சைக் காளான் துகள்கள் இருக்கும். மேலும் நுண்ணுயிர்கள் தூசியில் கலந்துள்ளன. புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு சரியான காரணத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் கண்டறிந்து அதற்கு மருந்து சாப்பிடுவது சிறந்தது. சிலருக்கு பரம்பரைக் காரணத்தாலும் உருவாகலாம். இது போன்ற தொல்லைகளுக்கு தானே மருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம் என்கிறார் ஜெயந்தி ஈசன்.

பாதுகாப்பு முறைகள்:

* உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும்.
* வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டை வீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால் ஏற்படுகிறது.

* உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளவும்.

* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம்.

* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும்.

* தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.

* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.

* துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாக தோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம்.

* சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம்.

* ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது.

* நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம்.

*பிரச்னை உள்ளவர்கள் உணவில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்குகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா: அலர்ஜி பிரச்னை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், பிரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. இதன் மூலம் ஜலதோஷம் உள்ளிட்ட தொந்தரவுகள் அதிகரிக்கும். மேலும் சில சிப்ஸ் வகைகள் சைனீஸ் உணவு வகைகளான பிரைட் ரைஸ், மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றில் அஜினமோட்டோ உப்பு சேர்க்கப்படுவதால் அவற்றையும் தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ள கீரை வகைகள், தானியங்கள், முழு கோதுமை உள்ளிட்டவைகளுக்கும் தடா போடவும்.
அலர்ஜிக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளைத் தவிர்ப்பதன் மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

*அக்ராகாரம் வேர், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.

?*அகத்திக் கீரை சாறுடன் துவரம்பருப்பு 100 கிராம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் அலர்ஜியால் உண்டாகும் கண் எரிச்சல் குணமாகும்.

*அலர்ஜியால் தொடர்ந்து வரும் தும்மலின் தொல்லையை தவிர்க்க அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப்பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடிக்கலாம்.

*வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அருகம்புல் சாறு எடுத்து குடித்தால் அலர்ஜியால் ஏற்படும் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.

*அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து அதிகாலையில் குடித்தால் சளிப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

*ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து குடித்தால் சளித்தொல்லை தீரும்.

*இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் தலா பத்து மிலி அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலந்து குடித்தால் அலர்ஜியால் உண்டாகும் வாந்தி நிற்கும்.

*சாப்பிட்ட உணவு அலர்ஜியானால் கொத்தமல்லி இலைச் சாற்றுடன் உப்பு கலந்து குடித்தால் நஞ்சு வெளியேறி விடும்.

*உருத்திர சடை இலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் அலர்ஜியால் உண்டாகும் மூக்கடைப்பு குணமாகும்.

*எலுமிச்சம் பழத்தைக் கண்களில் அடிக்கடி ஒற்றிக் கொண்டால் கண் எரிச்சல் குணமாகும். அலர்ஜியால் கண்ணில் நீர்வடிதலும் நிற்கும்.

குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளருங்கள்!

குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்க்கும், குழந்தைக்கும் அமைதியும், அதிகமான ஓய்வும் தேவை. குழந்தை தினமும் 23 மணி நேரம் தூங்க வேண்டும். தாயும் அதிக நேரம் தூங்க வேண்டும். அந்த நேரத்தில் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குழந்தை பிறந்ததும் உறவினர்கள் பார்க்க வந்து தாய் மற்றும் குழந்தைக்கு தொந்தரவு கொடுக்காமல் சில நாட்கள் கழித்து குழந்தையை பார்த்து கொஞ்சுவதே மிகவும் நல்லது. குழந்தை பிறந்த சில நாட்களுக்கு மற்றவர்கள் தூக்கி கொஞ்சாமல் இருப்பது சுத்தமானது… சுகாதாரமானது!

குழந்தைக்கு ரோல்மாடலே பெற்றோர்கள்தான். அவர்கள் தங்கள் கடமைகளை சரியான நேரத்தில், ஒழுங்காக செய்தாலே குழந்தைகளும் அதை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இரவு 12 மணி வரை டிவி பார்ப்பது, காலையில் தாமதமாக எழுவது, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது போன்ற பெற்றோரின் பழக்கங்கள் குழந்தைகளிடம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் டிவி பார்ப்பதையோ, வெளியே செல்வதையோ அல்லது யாரிடமாவது ஜாலியாக பேசுவதையோ தவிர்ப்பது நல்லது.

குழந்தைக்கு சேலை மற்றும் இதர துணிகளால் தொட்டில் கட்டுவது கூடாது. இதனால் குழந்தைக்கு பல தீமைகள் ஏற்படும். குழந்தை தன் விருப்பத்திற்கு கை, கால்களை ஆட்டவும், புரண்டு படுக்கவும் முடியாது. தன் நெஞ்சு மற்றும் உடம்பை குறுக்கிக் கொண்டு தூங்க வேண்டிய சூழல் ஏற்படும். காற்றோட்டமும் குறையும். இதனால் குழந்தைக்கு மார்பில் மூக்கடைப்பும், சளியும் ஏற்படும். மேலும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் அடிக்கடி விழித்துக் கொள்ளும். இதனால் தாய்க்கும் தூக்கம் கெடும்.

‘ஊட்டி வளர்த்த பிள்ளை உருப்படாது’ என்பது பழமொழி. சாப்பிடுவதற்கு குழந்தைகள் அடம் பிடித்தால் ஊட்டுவதை நிறுத்துங்கள். சாப்பாட்டைக் கண்டால் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டாம். சாப்பாடு வேண்டும் என்று குழந்தை கேட்கும் வரை கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருக்கவும். வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிடும் போது குழந்தைக்கும் சாப்பாடு வைத்து மற்றவர்களை பார்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும். நாளடைவில் குழந்தைக்கு நல்ல சாப்பாட்டு பழக்கத்தை இது உருவாக்கும்.

குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிட வேண்டாம். ஒப்பீடு செய்வது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் மற்ற குழந்தையை மிஞ்சித் தான் இருப்பார்கள். பெற்றோர்களின் ஊக்குவிப்பினால் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகமாக வேண்டும், மேலும் நீங்கள் கொடுக்கும் பயிற்சியால் குழந்தை மிகவும் திறமைசாலியாக மாறும் சூழல் ஏற்படும். ஆரம்பத்தில் தோல்வி கண்டாலும் ஊக்குவித்தால் குழந்தைகள் முயற்சி செய்து வெற்றி அடைவார்கள்.

குழந்தையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பது தவறு. கண்டிப்பு இல்லாமல் மிகுந்த செல்லத்துடன் வளர்ப்பதும் தவறு. குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளர்க்க வேண்டும். கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிக்காமல் பயப்படுவார்கள். கண்டிக்காமல் செல்லம் கொடுத்து வளர்த்தால், குழந்தை பெற்றோரை தாம் நினைத்ததைச் செய்யும் அடிமை என்று நினைத்து விடுவார்கள். இதனால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

அடம் பிடிக்கும் குழந்தையிடம் எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் அடிபணியக் கூடாது. தொடர்ந்து குழந்தை அடம் செய்ய ஆரம்பித்தால், அலறினால் யாரும் கண்டு கொள்ள வேண்டாம். குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம். இது கஷ்டம்தான் என்றாலும் பொறுமையாக பெற்றோர் இருந்தாலே, அடம் செய்தால் நமக்கு எதுவும் கிடைக்காது என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். பின்னர் அமைதியாக இருக்கும்போது பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கவும்.

மூளை நலமே நமது வாழ்க்கை நலம்

மூளை நலமே நமது வாழ்க்கை நலம் என்றால் மிகையில்லை. ஒருவர் அறிஞர் ஆவதும், கலைஞர் ஆவதும், கயவர் ஆவதும் அவரது மூளையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்துதான். மூளை ஆராய்ச்சி சமீப காலமாகத்தான் விரிவடைய ஆரம்பித்திருக்கின்றன. இருந்தாலும் அதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வியப்பூட்டும் விஷயங்கள் ஏராளம். ஒருவர் சிரிப்பதற்கு மூளையின் எந்த செல்கள் வேலை செய்கின்றன… பொறாமை எண்ணம் எங்கே உதிக்கிறது… கொலை எண்ணத்தால் மூளை எப்படி கொதிக்கிறது என்பது போன்ற விஷயங்கள் வெளியாகத் தொடங்கின.

***

1985-ம் ஆண்டு எம்.ஆர்.ஐ. (மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங்) ஸ்கேனர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் மூளை ஆராய்ச்சி வேகம் பிடித்தது. அதற்கு முன்புவரை இறந்தவர்களின் மூளையை சோதனை செய்தே சில முடிவுகளை வெளியிட்டனர். பல விஷயங்கள் கங்களாக இருக்கும். இப்போதெல்லாம் ஒருவரை இருக்கையில் அமர வைத்து அவரது மூளை செயல்படுவதை அவரே பார்க்கும் வகையில் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஸ்கேனர், மரபணு ஆய்வுகள் மூளை பற்றிய பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன.

***

மூளைக்கு ஒரு சிறப்புத்தன்மை இருக்கிறது. மூளை அதன் வெளிப்புறச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வடிவமைத்துக் கொள்கிறதாம். அதாவது பார்வை ஒளி, மொழி (ஒலி), மணம், தசைக்கட்டுப்பாடு மற்றும் காரணம் அறிதல் போன்ற தூண்டுதல் உணர்வுகளால் மூளையின் நிரான் செல்கள் புதுவடிவம் பெறுகின்றன. ஐம்புலன்களின் உணர்வுகளையும் புறச்சூழலில் இருந்து துளித்துளியாக ஏற்றுக்கொண்டு உணர்வு மண்டலத்தில் சேர்த்து மூளை தானாகவே புதிய பரிமாணத்திற்கு மாறுகிறது.

***

கர்ப்பப்பையில் சில நிரான் செல்கள் வளர்ந்து ஒருங்கிணைந்து மூளை உருவாகிறது. சில மாதங்களில் கருவிற்கு 20 ஆயிரம் கோடி நிரான்கள் உருவாகி மூளையாகிறது. இவை வளரும்போதே மற்ற உறுப்புகளோடு தொடர்பு கொள்கிறது. 12 வயது வரை மூளை வளர்ச்சி துரிதமாக நடப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தப்பருவ குழந்தைகளே புதிய விஷயங்களை எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். 4 வயது வரை மொழி, காட்சி, மனப்பான்மை, கற்கும் ஆர்வத்திற்கான மூளைக்களம் துல்லியமாக செயல்படுகிறது. அதன் பிறகு அறிவுப் பலகணி மூடிக்கொள்கிறது. பிறகு கட்டமைப்பு நிறைவடைந்து செயல்பாடுகளே தொடர்கிறது.

***

உணர்வுகளால் மூளையில் அனேக மாற்றங்கள் நிகழும். அதனால் வாழ்க்கையும் மாறக்கூடும். அதாவது தாயானவள் தன் குழந்தையிடம் கொஞ்சிப் பேசி மகிழ்விக்க வேண்டும். இதனால் குழந்தையின் மொழி அறிவும், பேச்சுத்திறனும் வளர்ச்சி அடைகின்றன. இவ்வாறு பழகாவிட்டால் குழந்தை மந்தமானதாக இருக்கும். வளர்ந்த பிறகும் கற்கும் திறன் குறைந்துவிடும். இதேபோல பல காட்சிகளை காட்டி ஊக்கப்படுத்தினால்தான் காட்சி சார்ந்த பகுதி சிறப்பாக இயங்கும். இல்லாவிட்டால் காட்சிப் பணி நிரான்கள் வேறு பணிக்கு தானாக மாறிவிடும்.

***

இளம் பருவத்தில் மன அழுத்தம், மனத்துயர் மற்றும் வன்முறை நிகழ்வுகள் போன்ற சுற்றுச்சூழல் தீங்குகள் மூளையில் ஏற்படுத்தும் விளைவுகளால் குழந்தைகள் வன்மையானவர்களாக வளரும் சூழல் ஏற்படுகிறது. அதேபோல கர்ப்பிணி தொடர்ந்து மன அழுத்தச் சீர்கேட்டுக்கு ஆளானால் அவளது கருவில் வளரும் குழந்தையின் மூளையில் பதட்டம், தவிப்பு போன்ற மன எழுச்சிப் பண்புகள் உருவாகிவிடுகின்றன. இந்தப் பண்புகளை குழந்தை பிறந்தபின் தாயின் அன்பும், சீரான வளர்ப்பு முறையும் ஓரளவுக்கு மாற்றுகின்றன. தொடர்ந்து மோசமான சூழல் இருந்தால் குழந்தை வன் குணத்துடனே வளரும்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா? ஆபரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது?

டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.
கம்ப்யூட்டரின் உயிர்
நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன?
உலோகங்களாலும், பிளாஸ்டிக்குகளாலும் ஆன உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, “டிவி’ போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவ மைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை (Instruction) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது (Execute) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.
குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.
நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன வேலைகளைச் செய்கிறது?
கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.
1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை
கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக் களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்
எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:
1) ஒரு பயனாளர் – ஒரு பணி (Single User Single task)
2) ஒரு பயனாளர் – பல பணி (Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி (Multy User Multi task)
ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அதுவும் ஒரு பணி யினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும்.
ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர் / பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.