Daily Archives: பிப்ரவரி 18th, 2011

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்: சொல்கிறார்கள் பிரிட்டன் விஞ்ஞானிகள்

பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலுக்கு மாற்றாக, செயற்கை பெட்ரோலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

 

இதுகுறித்து, விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஸ்டீபன் பெனிங்டன் கூறியதாவது: இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெயைக் கொண்டு பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் ஹைட்ரஜனை மையமாகக் கொண்டு செயற்கை பெட்ரோலை உருவாக்கி வருகிறோம். இது இயற்கையான பெட்ரோலை விட மூன்று மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும். மேலும், இதனால், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாது. எங்களின் செயற்கை பெட்ரோலை பயன்படுத்தி, இருசக்கர வாகனங்கள், கார், பஸ் மற்றும் விமானங்களையும் இயக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருக்கும் இந்த பெட்ரோல் 14 ரூபாய்க்கே கிடைக்கும். அடுத்த ஆண்டு இந்த பெட்ரோலை பயன்படுத்தி வாகனங்களை சோதனை அடிப்படையில் இயக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த பெட்ரோல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும். இவ்வாறு ஸ்டீபன் பெனிங்டன் கூறினார்.

பின் தூங்கி முன் எழுபவரா நீங்கள்?மாரடைப்பு வருமாம் ஜாக்கிரதை: அதிகமாக தூங்கினாலும் ஆபத்து தான்

இரவில் தாமதமாக உறங்கி, காலையில் விரைவாக கண் விழிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும்’என, லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் மாரடைப்பு வருமாம்.பிரிட்டனின் வார்விக் மருத்துவ பள்ளி பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:தற்போது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை, வேகமாக மாறி வருகிறது. உணவு பழக்கம், நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் குறைவான நேரமே தூங்குகின்றனர். குறிப்பாக, இளைஞர்களின் தூக்க நேரம் குறைந்து விட்டது. இரவில் மிகவும் தாமதமாக தூங்கி, அதிகாலையில் கண் விழித்து விடுகின்றனர். இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.இவ்வாறு குறைவான நேரம் தூங்கும் வழக்கம் உடையவர்களுக்கு, உணவு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. இதனால், அவர்களுக்கு கடுமையான பசி ஏற்படும். மேலும், மேலும், அதிகமாக சாப்பிடுவர். இதன்காரணமாக, அவர்களின் உடல் குண்டடித்து விடும். ரத்த அழுத்தம் அதிகமாகி, இருதய நோய்க்கு வழி வகுத்து விடும். இறுதியில், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோயின் பாதிப்புக்கு இவர்கள் எளிதில் ஆளாகி விடுவர்.

 

நாங்கள் நடத்திய ஆய்வில், தினமும் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவோரில், 50 சதவீதம் பேர் இருதய நோயின் பாதிப்பிற்கும், 15 சதவீதம் பேர், பக்கவாத பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.அதற்காக, எப்போது பார்த்தாலும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும், தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குவோருக்கும், இருதய நோய் பாதிப்பு ஏற்படும். அதிக நேரம் தூங்குவோருக்கு, சில நேரங்களில் அதிகம் களைப்பாக இருப்பது போல் தோன்றும். இது தான் அவர்களுக்கான எச்சரிக்கை. இதற்கு பின்னும், அவர்கள் சுதாரித்துக் கொண்டு, தூங்கும் நேரத்தை குறைக்காவிட்டால், இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ-பேட் டேப்ளட் பிசி – வினாக்களும் விளக்கங்களும்

ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தன் ஐ-பேட் சாதனத்தை, இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வெளியிட்டது. இதனை வாங்கிப் பயன்படுத்த விரும்பும் பலருக்கும் இது குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. மேலும் பல வினாக்களும் தோன்றுகின்றன. வாசகர்களின் கடிதங்கள் இவற்றைப் பிரதிபலிக் கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. ஐபேட் ஏன் இந்தியாவில் இவ்வளவு தாமதமாக அறிமுகப்படுத்தப்படுகிறது?
டிஜிட்டல் சாதனச் சந்தையில் இயங்கும் பலரும் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் மேல் கோபமாக இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை அவ்வளவாகக் கண்டு கொள்வதாக இல்லை. ஐபேட், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கூட சென்ற ஜுலை 2010ல் (அமெரிக்காவில் ஏப்ரல் 2010)அதிகாரபூர்வ விற்பனைக்கு வந்தது. ஆனால் இந்தியாவில் ஆறு மாதங்கள் கழித்தே வந்துள்ளது. ஐபேட் பதிப்பு 2 வர இருப்பதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில், ஆப்பிள் இருப்பில் இருக்கும் தன் ஐபேட் சாதனங்களை இங்கு கொண்டு வந்து கொட்டுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஐபோன் விஷயத்திலும் இதே கதைதான் ஏற்பட்டது.
2. ஐ-பேட் வாங்கினால், நான் மட்டுமே முதலில் வாங்கிய ஆளாக இருப்பேனா?
நிச்சயமாக இல்லை. கிரே மார்க்கெட் என்னும் அதிகாரப் பூர்வமற்ற சந்தையில் நிறைய ஐ-பேட்கள் விற்பனை செய்யப்பட்டன. பலரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏறத்தாழ 50 ஆயிரம் ஐ-பேட் சாதனங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது. எனவே நீங்கள் வாங்கிப் பயன்படுத்தினால், துணைக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களுக் குத் தெரியுமா? அமெரிக்காவில் இதனை அறிமுகம் செய்த போது, பலர் இரவோடு இரவாக விற்பனை செய்திடும் கடைகள் முன்பாக நின்று வாங்கிச் சென்றனர்.
3. நான் ஐபேட் 2 வரும் வரை காத்திருந்து வாங்கலாமா?
இன்டர்நெட்டில் ஐபேட் 2 குறித்து தகவல் திரட்டிய போது, அதில் இரண்டு கேமராக்கள் (வீடியோ அழைப்பில் பயன்படுத்த ஒன்று) , அதிவேக ப்ராசசர், நல்ல காட்சித் திரை ஆகியன இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்ததைப் பார்க்க நேர்ந்தது. சாம்சங், மோட்டாரோலா, ஆர்.ஐ.எம். போன்ற நிறுவனங்களும், இந்த சந்தையில் போட்டியில் இறங்கி இருப்பதால், ஐ-பேட் அளவு கூட சற்று சிறியதாக, பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லும் அளவில் இருக்கலாம். இவை வேண்டும் என்றால் காத்திருக்கலாம்.
4. கடைகளில் சென்று இப்போது ஐ-பேட் வாங்கிட முடியுமா?
ஆப்பிள் நிறுவனப் பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே சில மையங்கள் இயங்குகின்றன. அங்கு இவை கிடைக்கின்றன. வழக்கம்போல, மற்ற கடைகளில் கிரே மார்க்கெட்டிலும் கிடைக்கின்றன. சென்னையில் ஒரு கடையில் சென்ற மாதம் ரூ.5,000 முன்பணமாகப் பெற்று பதிவு செய்தனர்.
5. எத்தனை மாடல்கள் வெளியாகி யுள்ளன? விலை எவ்வளவு?
ஆறு மாடல்கள் கிடைக்கின்றன. வை-பி நெட்வொர்க் இணைப்புடன் 16ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி மெமரியுடன் மூன்று மாடல்கள். வை-பி யுடன் 3ஜி இணைந்த மூன்று மாடல்கள் இதே மெமரியுடன் கிடைக்கின்றன. முதல் வகை வை- பி மட்டும் கொண்ட ஐபேட் விலை முறையே ரூ. 27,900, ரூ. 32,900, ரூ.37,900. இவற்றில் 3ஜி இணைந்த மாடல்கள் விலை ரூ. 34,900, ரூ. 39,900 மற்றும் ரூ. 44,900.
6. ஐ-பேட் சாதனத்தில் என்ன செயல்பாடு களை மேற்கொள்ள முடியும்?
ஐ-பேட் ஒரு டச்ஸ்கிரீன் கம்ப்யூட்டர். டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரைப் போல அதிகத் திறனுடன் இருக்காது. ஆனால் தொலை தொடர்பு மற்றும் பொழுதுபோக்கிற்கு அருமையான சாதனம். பொதுவாக, உலக அளவில், ஐ-பேட் சாதனம் இன்டர்நெட் பார்க்க, இமெயில் அனுப்ப, நண்பர்களுடன் இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்ப, பெற, (ஆன் ஸ்கிரீன் கீ போர்டு மூலம்), புகைப்படங்களை பிரவுஸ் செய்திட, இசையை ரசித்துக் கேட்க, திரைப்படங்கள் பார்க்க, இ-புக் படிக்க, செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் படிக்க மற்றும் சாட்டிலைட் உதவியுடன் வழி காட்டுதலைப் பெற பயன்படுத்தப்படுகிறது.
7. என்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஐ-பேட் சாதனத்தைப் பயன்படுத்தலாமா?
முழுமையாக முடியாது. இது ஒரு துணை சாதனம் தான். சோஷியல் நெட்வொர்க் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தலாம்.
8. தொலைபேசி அழைப்புகளை ஐ-பேடில் ஏற்படுத்த முடியுமா?
முடியாது.
9. ஐ-பேட் எவ்வளவு பெரியது? அதன் அளவு என்ன?
ஏ4 தாள் அளவைக் காட்டிலும் சற்று சிறியதாக இருக்கும். உயரம் 9.56 அங்குலம் . அகலம் 7.47 அங்குலம், தடிமன் 0.5 அங்குலம். மல்ட்டி டச் எல்.இ.டி. திரை 9.7 அங்குலம் குறுக்களவு கொண்டது. வை-பி மாடல் எடை 680 கிராம்; 3ஜி இணைந்தது 730 கிராம்.
10. ஐ-பேட் எப்படி சார்ஜ் செய்யப் படுகிறது?
வழக்கம்போல ஒரு பவர் அடாப்டர் மூலம் சார்ஜ் செய்திடலாம். உங்களுடைய டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தும் சார்ஜ் செய்திடலாம். சாதனம் வாங்கும்போதே பவர் அடாப்டரும் சேர்த்துத் தரப்படுகிறது.
11. இன்டர்நெட் பிரவுசிங்கை, ஐ-பேடில் எப்படி மேற்கொள்ளலாம்?
வை-பி இன்டர்நெட் இணைப்பு மூலம் மேற்கொள்ளலாம். இதற்கு வை-பி சூழ்நிலை உள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும். வெளிநாடுகளில் அனைத்து இடங்களிலும் இந்த வை-பி இணைப்பு கம்பங்கள் இருக்கும். ஆனால் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.
12. டாட்டா போட்டான் அல்லது ரிலையன்ஸ் டேட்டா கார்டினைப் பயன்படுத்தி ஐ-பேடில் இன்டர்நெட் இணைப்பு பெற முடியுமா?
ஐ-பேடில் யு.எஸ்.பி. போர்ட் இல்லை. எனவே இவற்றைப் பயன்படுத்த இயலாது.
13. ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட் சாதனத்தில் பயன்படுத்தத் தரும் அப்ளிகேஷன்களை, இந்தியாவில் டவுண்லோட் செய்து இயக்க முடியுமா?
தாராளமாக. ஐ-பேட் சாதனத்திற்கென, ஆப்பிள் நிறுவனம் பல புரோகிராம்களை, கட்டணம் இன்றியும்,கட்டணத்தின் பேரிலும் தருகிறது. எடுத்துக்காட்டாக, ஆதஞீஞ்ஞுtண் என்ற ஒரு இலவச புரோகிராமினை டவுண்லோட் செய்து இணைப்பு செலவினைக் கட்டுப் படுத்தலாம்.
14. ஐ-பேட் சாதனத்திற்கான டேட்டா பிளான் தரும் நிறுவனங்கள் எவை? கட்டணம் என்ன?
இந்தியாவில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தான், 3ஜி ஐ-பேட் சாதனத்திற்கான டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியது. வரையறை அற்ற பயன்பாட்டிற்கு மாதம் ரூ.999. 6ஜிபி டேட்டா பெற ரூ. 599. பின்னர் பத்து கேபி டேட்டாவிற்கு 1 பைசா. ஒரு நாள் மட்டும் பயன்படுத்தி அளவற்ற டேட்டா பெற ரூ.99. வோடபோன், ஏர்டெல், டாட்டா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகியவை, ஐ-பேட் சாதனத்திற்கான மைக்ரோ சிம் கார்டுகளைத் தயாராய் வைத்துள்ளன. கட்டண விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
15. ஒரே ஒரு நிறுவனத்தின் துணையுடன் தான் ஐ-பேட் சாதனத்தைப் பயன்படுத்த முடியுமா?
இல்லை. ஐ-போன் போல நிறுவனம் ஒன்றுடன் இணைக்கப்பட்டதாக ஐ-பேட் வெளியாகவில்லை. எந்த நிறுவனத்தின் சிம் கார்ட் டேட்டா திட்டத்தினையும் பயன்படுத்தலாம்.
16.இதற்கான மைக்ரோ சிம் கார்டினை எப்படிப் பெறுவது?
இதனை வழங்கும், மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் உள்ள விபரங்களைச் சரி பார்த்த பின்னர் மைக்ரோ சிம் கார்டு தருவார்கள்.
17. வெளியூர்களுக்குப் பயணிக்கையில் ஐ-பேடில் இணைக்கப் படும் சிம் கார்டு இயங்குமா? தொடர்பு சரியாகக் கிடைக்குமா?
பி.எஸ்.என்.எல். நிறுவனம் “panIndia 3G Internet” என்ற ஒரு திட்டத்தினை வழங்குகிறது. மற்ற தனியார் நிறுவனங்கள் இதற்கென மற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் இன்னும் 3ஜி முழுமையாக வரவில்லை. வரும்போது இதனைப் பெறலாம்.
18. ஐ-பேட் போன்று மற்ற நிறுவனங்கள் சாதனங்களை வெளியிட்டுள்ளனவா?
ஆம். சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி டேப், ஆலிவ் டெலிகாம் நிறுவன ஆலிவ் பேட், டெல் ஸ்ட்ரீக் ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். இன்னும் சில நிறுவனங்கள் தங்களின் சாதனங்களைக் கொண்டு வர இருக்கின்றன. இவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விலை குறைக்கப்பட்டும் வருகின்றன. எடுத்துக் காட்டாக, முதலில் ரூ.38,000 விலையிட்ட சாம்சங் சாதனம் தற்போது ரூ.30,000க்குக் கிடைக்கிறது. மொபைல் போன் போலவும் பயன்படுத்தும் ஸ்ட்ரீக் ரூ.33,000க்குக் கிடைக்கிறது.