சென்னை விமான நிலையத்தில் ஆற்றின் குறுக்கே பிரமாண்ட, ரன்வே!

அழகான, மிக நீண்ட கடற்கரை, மிகப்பெரிய துறைமுகம், கிளாவர் வடிவ கத்திப்பாரா மேம்பாலம், பாரம்பரிய கட்டடங்கள் என, பல்வேறு பெருமைமிகு அடையாளங்களை கொண்டுள்ள சென்னைக்கு, மிக விரைவில் மற்றொரு பெருமையும் சேரப் போகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாட்டிலேயே முதலாவதாக, ஆற்றின் குறுக்கே ரன்வே கொண்ட ஒரு விமான நிலையம் என்ற சிறப்பை,சென்னை விமான நிலையம் பெற உள்ளது. மும்பையில் மித்தி நதியின் மீது ஒரு ஓடு பாதை கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரன்வே விமானங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, நாட்டிலேயே முதல் முறையாக, ஆற்றின் குறுக்கே ஓடு பாதை கட்டப்படுவது சென்னை விமான நிலையத்தில் தான்.
பல்வேறு வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், சென்னை நகரைச் சுற்றி தொழிற் சாலைகள் துவங்கியுள்ளதாலும், சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித் துள்ளதன் காரணமாக வும், கடந்த சில ஆண்டுகளாக சென்னை நகரின் விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது. பல்வேறு தனியார் விமான நிறுவனங்கள் உள்நாட்டு சேவையை துவக்கியுள்ளன. விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றாற்போல் கூடுதல் ரன்வே தேவைப்படுகிறது. முதற்கட்டமாக, சென்னை விமான நிலையத்தில் உள்ள செகண்டரி ரன்வேயின் நீளத்தை அதிகரிக்கவும், அடுத்ததாக, “பேரலல் ரன்வே’ எனப்படும் இணை ஓடுதளம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. செகண்டரி ரன்வேயின் நீளத்தை அதிகரிப்பதற்காக விமான நிலையத்தின் அருகில் உள்ள அடையாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படுகிறது.
வளர்ந்த நாடுகளால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்ற இந்த பிரமாண்ட திட்டத்தை, உள்நாட்டு பொறியாளர்கள் திறம்பட செயல்பட்டு, அடையாறு ஆற்றின் மீது ரன்வேயை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் புதிய ரன்வே மொத்தம், 1400 மீட்டர் நீளம் கொண்டது. இதில், அடையாறு ஆற்றுப்பகுதியில் மட்டும், 200 மீட்டர் நீளத்திற்கு ரன்வே அமைக்கப்படுகிறது. 430 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதில், பாலப் பணிகளுக்காக 200 கோடி ரூபாயும், மற்ற பணிகளுக்காக, 230 கோடி ரூபாயும் செலவிடப்படுகிறது.
அடையாறு ஆற்றின் மேல் கட்டப்படும் மேம்பாலத்தில், ஒரு வரிசைக்கு 53 தூண்கள் என ஒன்பது வரிசையில், 477 தூண்கள் மீது, 2,440 காங்கிரீட் கர்டர்களை பொருத்தி, அதன் மேல், <200 மீட்டர் நீளமும், 462 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பால ரன்வே கட்டப்படுகிறது. “ஆற்றின் குறுக்கே ரன்வே அமைப்பதால், எந்த ஆபத்தும் ஏற்படாது. கடந்த 10 ஆண்டுகளில், 2005ல் மட்டுமே அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போதைய நீர் மட்டத்தை கருத்தில் கொண்டே தற்போது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, நீர் போக்குவரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், ரன்வே மேம்பாலம் உயர்த்தி கட்டப்படுகிறது…’ என்று, விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பாலத்தை அதிக வேகத்துடன் தண்ணீர் மோதினாலும் தாங்கக்கூடிய தூண்கள், இரும்பு எக்கு கொண்டு தயாரிக்கப்பட்ட உத்திரங்கள், ஆற்றில் வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் இருபுறமும் கான்கிரீட் அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், இந்த ரன்வேயை, உலகின் மிகப் பெரிய விமானமான, “ஏ 380′ விமானங்களும் பயன்படுத்தலாம். இரண்டாவது ரன்வே திட்டத்தில், பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரமாண்ட திட்டம் நிறைவேறும் நேரத்தில், நாட்டிலேயே, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரன்வே கொண்ட முதல் விமான நிலையம் என்ற பெருமையை, சென்னை விமான நிலையம் பெறும்.***

%d bloggers like this: