Daily Archives: பிப்ரவரி 24th, 2011

பெரிய பந்துடன் விளையாடும் குட்டி யானை!

மிருகக் காட்சி சாலை ஒன்றில், பெரிய பந்துடன் விளையாடும் குட்டி யானை ஒன்று, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், நியூ சவுத்வேல்ஸ் நகரில் உள்ளது டரோங்கா மிருகக் காட்சி சாலை. ஆசிய காடுகளில் மட்டும் காணப்படும் யானை வகையைச் சேர்ந்த பார்ன்டிப் என்ற பெரிய யானை ஒன்று, சமீபத்தில் குட்டி ஒன்றை ஈன்றது. அந்த குட்டி யானைக்கு, “லக்சாய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த குட்டி யானைதான் இப்போது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. தாய் பார்ன்டிப்பும், லக்சாயும் பெரிய பந்து ஒன்றை உதைத்து விளையாடி வருகின்றன. தன்னை நோக்கி வரும் பந்தை, அப்படியே அமுக்கி, அதன் மேல் ஏற முயற்சி செய்யும் லக்சாய், பின்னர் பந்தை தன் தாயை நோக்கி காலால் உதைக்கும். இந்த மிருகக் காட்சி சாலைக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அவர்களில் வயதான பெண் ஒருவர் அடிக்கடி வருவார். அவர், இந்த யானை பற்றி கூறியது: ஆஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானை லக்சாய். மிகவும் மகிழ்ச்சியாக கால் பந்தை இந்த யானை உதைத்து விளையாடுவதை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பந்தை, அந்த யானை விரட்டி, விரட்டி செல்வதைப் பார்க்கும் போது, சிறந்த கால்பந்து போட்டியைப் பார்ப்பது போல இருக்கிறது. அந்த இடத்தில் உள்ள சிறிய குளத்திலும், பந்தை வைத்து யானை விளையாடுகிறது! இவ்வாறு அவர் கூறினார். “ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்த முதல் யானையைப் பார்க்க தினமும் ஏராளமானோர் வருகின்றனர். குட்டி யானை, கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல், பந்தைச் சுற்றி சுற்றி வருவது பார்க்க கண் கொள்ளா காட்சியாக உள்ளது… ‘ என்று, மிருகக் காட்சி சாலை ஊழியர்கள் கூறினர். *

ஆசைகளை அழிக்கும் கருவி எது?

மனிதனுடைய மனம், எப்போது அமைதியாக இருக்கிறதோ, அப்போது தான் சுகம் ஏற்படும். இந்த அமைதி எப்படி, எப்போது கிடைக்கும் என்றால், அவனது மனம் கட்டுப்படும் போது தான். மனதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், முதலில் ஆசை, பேராசை இவைகளை கட்டுப்படுத்த வேண்டும். இதை, வைராக்கியத்தால் கட்டுப்படுத்தலாம். மனம் முரட்டுக் குதிரையை போன்றது. அது, எங்கெல்லாமோ ஓடும். அதை ஒரு நிலைப்படுத்தி, சாதுவாக இருக்க செய்ய வேண்டுமானால், அதற்கான வழி, தியானம் தான். அந்த பகவானை குறித்து தியானம் செய்து கொண்டே இருந்தால், மனம் மற்றவைகளிடம் செல்லாது. மனதை ஒரு முகப்படுத்தி, பகவத் தியானத்தில் வைத்தால், மனம் தெளிவு பெறும்; அமைதி ஏற்படும்.
வைராக்கியம் என்பது, அசைக்க முடியாத, மாற்ற முடியாத தீர்மானம். நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரமாவது தனிமையில் அமர்ந்து, தியானத்தில் ஈடுபட வேண்டும். அப்படிச் செய்ய ஆரம்பித்து விட்டால், அந்த அமைதியின் காரணமாக அதே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது விருத்தியாகி, தியானத்தின் நேரம் கூடுதலாகும்.
இப்படி தியானமும், வைராக்கியமும் இருந்தால், அதன் எதிரிகளான காம; குரோதங்கள் அடிபட்டு ஓடிப் போகும். மனிதனின் வாழ்க்கை நாசமாவதற்கு காரணமே, இந்த காம, குரோதங்கள் தான். இப்படியாக, மனம் என்ற முரட்டுக் குதிரையை, வைராக்கியம் என்ற சாதனத்தால் அடக்கி, தியானம் என்பதில் கொண்டு வந்து நிறுத்தினால், பின்னர் அந்த மனம், தியானத்தில் ஈடுபட்டு விடும். ஒரு சிலர், தியானம் செய்வதற்காகவே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதில் ஈடுபட்டு, பின்னர் எழுந்து வருவர். அப்போது, அவரது மனம் தெளிவாகவும், அமைதியாகவும் இருக்கும். இந்த மாதிரியான அமைதி தான் மனிதனுக்கு தேவை.பகவானை குறித்து தியானத்தில் இருந்து, பிறகு எழுந்து வரும் போது, அவரது மனதில் எந்தவித கெட்ட எண்ண அலைகளோ, ஆசைகளின் சீற்றமோ இருக்காது. இது ஏன்? மனதை விட்டு காம, குரோதங்கள் அந்த நேரம் அகன்றிருக்கிறது. இது போன்றே எப்போதும் இருக்குமா என்றால், இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆசைகள் வெட்ட, வெட்ட துளிர் விட்டுக் கொண்டே இருக்கும். அதனால், அதை வேருடன் வெட்ட வேண்டும். அப்படி வெட்டக் கூடிய கத்தி தான் வைராக்கியம். இது எப்படி, எங்கே கிடைக்கும் என்றால், முயற்சி செய்தால் கிடைக்கும். ***